Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்கான் ஆக்கிரமிப்பும் சோவியத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் - உலகப்போர் 2 - பகுதி 9

Featured Replies

large.4960AC78-4A0B-4379-A40F-3B9329DEBEA3.jpeg.d4fca292695b10f4b24e9bd84224d712.jpegதோல்வி ஹிட்லரை அசைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இதை அவர் ஒரு தோல்வியாகக்கூட எடுத்துக்கொள்ளவில்லை. முந்தய உலகப்போரில் ஜேர்மனி அடைந்ததே அது தோல்வி. பிரிட்டன் அத்தியாயம் என்பது ஒரு சறுக்கல் மட்டும் தான். பெரும் சறுக்கல் கூட இல்லை. சிறு தடுமாற்றம். நடக்கும் போது கால் இடறினால் என்ன செய்வோம்? இடிந்து போயா உட்கார்ந்துவிடுவோம்? என்று பிரிட்டனுடனான போரின் தோல்வியை பெரிதாக எடுத்து கொள்ளாமல் தனது நோக்கங்களில் உறுதியாக இருந்தார் ஹிட்லர்.

ஏப்ரல் 1941 தொடக்கத்தில் ஜேர்மனி பார்டிக் நாடுகள் மீது தாக்குதல் தொடுத்தது. கிறீஸ், யூகோஸ்லாவியா இரண்டும் ஜேர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டன. மே மாத இறுதியில் கிரேக்க தீவான கிறெரே (Crete) ஜேர்மனி வசமானது. எஸ்டோனியா, லாட்வியா, லித்துவேனியா மூன்றையும் பிடித்துவிட்டால் சோவியத்யூனியனைக் கைப்பற்றுவது சுலபமாகிவிடும். பார்டிக் பிரதேசத்தைக் கைக்கொள்ளாமல் சோவியத்தை நெருங்க முடியாது. சோவியத்தின் எல்லையோடு ஒட்டியிருக்கும் இந்த மூன்று நாடுகளிலும் துருப்புக்களை நிற்கவைத்து விட்டால் சோவியத் மீது சுலபமாகத் தாக்குதல் தொடுக்கலாம்.

 

பிரச்சனை என்னவென்றால் இந்த மூன்று நாடுகளும் சோவியத்துடன் ராணுவ ஒப்பந்தம் போட்டுக்கொண்டிருந்தன. சோவித்தின் தளங்களும் இங்கே அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த மூன்று நாடுகளின் தலைவர்களும் சற்றேறக்குறைய நாசி ஆதரவாளர்கள். வருகிறேன் தயாரா இரு என்று தகவல் அனுப்பிவிட்டால் எல்லைக்கு வந்து வரவேற்று கூட்டிச்செல்வார்கள். ஹிட்லர் ஒப்புதலும் அளித்துவிட்டார். படைகளும் நகர ஆரம்பித்துவிட்டன.

ஆனால் செம்படை முந்திக்கொண்டது. ஜுன் 15, 1940 அன்று சத்தம் போடாமல் நுழைந்த செம்படை, மூன்று நாடுகளிலும் தனது பிடியை இறுக்கிக்கொண்டது. நாசி ஆதரவாளர்கள் ஓடிபோனார்கள். இருபத்து நான்கு மணி நேரத்தில் வேலை முடிந்தது.

செப்ரெம்பர் 27, 1940 அன்று ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் மூன்றும் ஓர் ஒப்பந்தம் (Tripartite Pact) போட்டுகொண்டன. அச்சு நாடுகள் (Axis Powers) என்று இவர்கள் அழைக்கபட்டனர். பிரிட்டன் அமெரிக்காவுடன் ஒன்றிணையும், நாமும் நம் பலத்தைக் கூட்டிக்கொள்வதுதானே நியாயம்? நம்மில் யார் தாக்கப்பட்டாலும் மற்ற இருவரும் விரைந்து உதவிக்கு வருவோம். நம் படை வெற்றிப் படையாக இருக்கட்டும். நவம்பர் மாதம் ஹங்கேரி, ரூமேனியா, செக்கோஸ்லவாக்கியா மூன்றும் இந்தக் கூட்டணியில் இணைந்து கொண்டன, யூகோஸ்லாவியாவும் பல்கேரியாவும் மட்டும் விலகியே இருந்தன.

large.1920360330_GermanyinvadesBalkan.jpg.f14865629c39485ca4cdf23c649a04b2.jpg

முதல் உலகப் போர் கூட்டணியை மீண்டும் தொடர்வோம், எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று இத்தாலியை பிரிட்டன் முன்னரே கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. ஹிட்லருடன் இணைவது தான் வெற்றிக்கான வழி என்று முஸோலினி நம்பினார். அவர் நம்பியதைப் போலவே பிரான்ஸ் போன்ற நாடுகள் ஜேர்மனியிடம் சரணடைந்ததால் முஸோலினி மிக அழுத்தமாக தன் கூட்டணியைத் தொடர்ந்தார்.

முஸோலினிக்கும் பல கனவுகள் இருந்தன. ஐரோப்பாவைவிட, ஆபிரிக்காவை அவர் அதிகம் விரும்பினார். ஏற்கனவே கிழக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகள் இத்தாலிக்குச் சொந்தமாக இருந்தன. எதியோப்பியா, இத்தாலிய சோமாலிலாண்ட், எரிட்ரியா ஆகிய நாடுகள் இத்தாலியின் கைப்பிடிக்குள் இருந்தன. கிழக்கு ஆபிரிக்காவில் இருந்த தன் படைகளைப் பயன்படுத்தி பிரிட்டனுக்குக் கட்டுப்பட்டிருந்த சூடான், கென்யா, பிரிட்டிஷ் சோமாலிலாண்ட் ஆகிய நாடுகள் மீது தாக்குதல் தொடுத்தது இத்தாலி. பிரிட்டிஷ் சோமாலிலாண்ட் ஓகஸ்ட் 3, 1940 ல் கைப்பற்றப்பட்டது.

முசோலினி அகமகிழ்ந்து போனார். அட ஹிட்லரால் மட்டும் தான் முடியுமா என்ன? என்னாலும் வெற்றிகளைக் குவிக்கமுடியும். அடுத்து கிரீஸை குறிவைத்தது இத்தாலி. ஒக்ரோபர் 23, 1941 அன்று தாக்குதல் ஆரம்பமானது. தொடக்கத்தில் கிரீஸால் இத்தாலியை எதிர்க்கமுடியவில்லை. ஆஹா வெற்றி நமக்குத்தான் என்று தாக்குதலை தீவிரப்படுத்தினார் முஸோலினி. அதற்குள் கிரீஸ் விழித்துக்கொண்டுவிட்டது. தன் பலத்தை ஒன்று திரட்டி எதிர்த்தாக்குதலை ஆரம்பித்தது. அட உங்களுக்கு எதிர்க்கவும் தெரியுமா? முஸோலினி சிரித்தார்.

விரைவில், அவர் எதிர்பாராத விஷயங்கள் நடக்க ஆரம்பித்தன. கிரீஸ் இத்தாலியை எதிர்த்து போராடியதோடு நின்றுவிடவில்லை. இத்தாலியப்படைகளை அல்பானியாவரை விரட்டிச்சென்றது. அப்போது இத்தாலியின் கைப்பிடிக்குள் இருந்தது அல்பானியா. அதில் ஒரு பகுதியை கிறீஸ் தனதாக்கிக்கொண்டது. வேறு வழி தெரியாமல் ஜேர்மனியை துணைக்கு அழைக்கவேண்டி வந்தது. கிரீஸை ஜேர்மனியிடம் இருந்து பாதுகாக்க பிரிட்டன் தன் படைப்பிரிவுகளை ஆபிரிக்காவில் இருந்து அனுப்பி வைத்தது. இத்தாலியால் சமாளிக்க முடியவில்லை. பல போர்க்கப்பல்களை இத்தாலி பிரிட்டனிடம் பறி கொடுத்தது.

large.102148836_BattleofGreece.jpg.0a324ed9568ad836957d10c7af2ed008.jpg

பிரிட்டனுடனான போர் தோல்வியை தழுவுதற்கு முன்பே ஹிட்லர் வரைபடத்தில் சோவியத்யூனியனைச் சுற்றி ஒரு வட்டம் போட்டு வைத்திருந்தார். ஜுலை 31, 1940 அன்று ராணுவச்சந்திப்பின் போது தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். விருப்பம் அல்ல. அது ஒரு வெறி.

சோவியத்யூனியனை ஹிட்லர் இதயபூர்மாக வெறுத்தார். கம்யூனிஸ்டுகளை வெறுத்தார்.  கம்யூனிச சித்தாந்தத்தை, அதை பரப்புபவர்களை, ஏற்றுக்கொள்ளுபவர்களை அவர் வெறுத்தார். ஜோசப் ஸ்ராலினின் தலைமையில் சோவியத்தில் நடந்துவரும் மாற்றங்களை எவையையும் அவரால் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை. ஸ்லாவ் இன மக்களை அவர் வெறுத்தார். யூதர்களை போல் ஸ்லாவ் இன மக்களும் கீழானவர்கள் தாம். அவர்களால் எந்த பயனும் யாருக்கும் ஏற்படப்போவதில்லை.

மார்ச் 30, 1941 அன்று ஹிட்லர் தன் ஜெனரல்களிடம் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று கண்கள் துடிக்க உதடு சிவக்கக் கத்தினார். பார்த்துக்கொண்டே இருங்கள். சோவியத் யூனியன் என்னும் தேசம் இனி இருக்கப்போவதில்லை. பொடிப்பொடியாக, சில்லு சில்லாக சிதறி வீழ்ந்து மரிக்கப்போகிறது சோவியத். ஜேர்மனி சோவியத்தை வெற்றி கொள்ளும் நாள் மிக அருகில். சோவியத்தை அகற்றிவிட்டு கிழக்கு ஐரோப்பாவை நாம் நம் கட்டுப்பாட்டின் கீழ்  கொண்டுவரப்போகிறோம். ஆம் நிச்சயம் ஃப்யூரர். என்று தலையாட்டினார்கள் ஜெனரல்கள். அப்படி செய்யாவிட்டால், வானத்திற்கும் பூமிக்குமாக எகிறி குதிப்பார், சீறுவார்.

டிசம்பர் 18 ம் திகதி தான் தெளிவான போர்த்திட்டம் ஒன்று உருவானது. ரூமேனியா, ஃபின்லாந்து இரண்டையும் இந்த திட்டத்தில் ஈடுபடுத்தியாகவேண்டும். இந்த இரு நாடுகளின் எல்லையில் ஜேர்மன் படைகளை குவிக்கவேண்டும். மே 15, 1941 இதற்கு மேல் ஒரு நாள் தாமதம் கூட ஏற்றுகொள்ளப்படமாட்டா.

ஹிட்லர் அடுத்து சோவியத்தைத்தான் குறிவைக்கப்போகிறார் என்று ஸ்ராலினுக்கு தெரிந்துவிட்டது. ஏற்கனவே ஃபின்லாந்தில் ஜேர்மனிய படைகள் கூடாரம் அமைத்துவிட்டன. ஜேர்மனி, இத்தாலியோடும் ஜப்பானோடும் ஓரு ஒப்பந்தத்தை வேறு கமுக்கமாக உருவாக்கியிருக்கிறது. மொத்தத்தில், எதிரிகள் அணி திரண்டு விட்டார்கள். எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அதிஅவசியம்.

ஹிட்லரின் மனத்தில் என்ன சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஸ்ராலின் விரும்பினார். அதே சமயம், ஜேர்மனியின் அயலுறவுத்துறை அமைச்சர் ரிப்பன்ட்ராபிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. தனது அமைச்சர் மாலடோவை அழைத்தார் ஸ்ராலின்.

“ஒரு நடை ஜேர்மனிக்கு சென்று ரிப்பன்ட்ராப்பிடம் பேசிவிட்டு வாருங்கள்”

மாலடோ ரிப்பன்ட்ராப்பைச் சந்தித்தார். புன்னகையுடன் வரவேற்ற ரிப்பன்ட்ராப் ஊர்க்கதை, உலகக்கதை என்று மணிக்கணக்கில் அளக்கத் தொடங்கிவிட்டார். சிறிது நேரம் தலையாட்டி கேட்ட மாலடோ, தனது உள்ளக்கிடக்கை வெளிப்படுத்தினார்.

“அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?”

“தெரியவில்லை ஹிட்லரிடம் தான் கேட்கவேண்டும்.”

“ஜேர்மன் படைகளை ஃபின்லாந்தில் என்ன செய்துகொண்டிருக்கின்றன?”

“தெரியவில்லை. ஹிட்லரிடம் தான் கேட்கவேண்டும்?”

இதற்கு மேல் பேசிப் பிரயோசனம் இல்லை என்று தெரிந்ததும் சோவியத் திரும்பி வந்தார் மாலடோ.

மாலடோவிடமிருந்து விஷயத்தை கேட்டுக்கொண்ட ஸ்ராலின் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பிறகு, தீர்க்கமான குரலில் கூறினார்.

‘நாம் தயாராக வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.’

சோவியத்யூனியன் ஜேர்மனிக்கு எதிராக போர் தயாரிப்புகளில் ஈடுபட ஆரம்பித்த அந்த தினம் சரித்திரத்தில் மிக முக்கியமானது. உண்மையில், சோவியத் – ஜேர்மனி யுத்தம் தான் இரண்டாம் உலகப்போரின் போக்கைத் திட்டவட்டமாக தீர்மானித்தது.

 

சோவியத் கம்யூனிச ஆட்சியின் ஆரம்ப வரலாறு

1924 ல் லெனின் இறந்த போது, ரஷ்யாவின் பொருளாதாரம் தள்ளாடிக்கொண்டிருந்தது. போரின் சிரழிவில் இருந்து தேசத்தால் விடுபட முடியவில்லை. இருப்பதை எல்லாம் போரில் ஸார் மன்னர் கொட்டியிருந்ததால், உள்நாட்டுத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டிருந்தன. உணவில்லாமல், நிலமில்லாமல் விவசாயிகளும் தொழிலாளர்களும் திண்டாடிக்கொண்டிருந்தனர். விவசாயத்தையும் தொழிற்சாலைகளையும் மீட்டாக வேண்டிய சூழல். லெனின் தொடங்கி வைத்த சோஷலிசக் கட்டுமானத்தை முன்னெடுத்து செல்லவேண்டும். மக்களின் தேவைகளை ஒவ்வொன்றாக பூர்த்தி செய்யவேண்டும்.

பெரும்பாலான ஆலைகள் முதலாளிகளின் கைப்பிடியில் இருந்தன. விவசாயம் குறு முதலாளிகளிடம் இருந்தன. அவர்கள் குலாக்ஸ் என்று அழைக்கபட்டனர். நிலம் குலாக்ஸ்களிடம் இருந்ததால் விவசாயிகள் ஒப்பந்த முறையில் அவர்களிடம் பணியாற்றினர். உற்பத்தியான பொருட்களின் இருந்து கொஞ்சம் அவர்களுக்கு கொடுத்தது தவிர கூலி என்று பெரிதாக ஒன்றுமில்லை. லெனினுக்கும் இது கவலையளித்தது. இது மிகவும் சவாலான பணி. முதலாளித்துவத்தை அனைத்து பகுதிகளில் இருந்தும்  அகற்றினால் தான் சோஷலிசம் வெற்றி பெறும்.

 1 October 1928. The First Five Year Plan is introduced by Stalin ...சோவியத்தின் ஐந்தாண்டு திட்டம்

சோவியத் மக்கள் லெனினிடிடம் இருந்து அந்தக் கனவை வாங்கிக்கொண்டார்கள். லெனின் பார்வையைப் புரிந்து கொண்டார்கள். லெனின் சொன்னது நிறைவேறும் என்று நம்பினார்கள். சோஷலிச நாடாக சோவியத் உயரும். தொழிலாளர்களின் ஆட்சி அமுலுக்கு வரும். உழுபவர்களுக்கு நிலம் சொந்தமாகும். எஸ்டேட்டுகள் பறிமுதல் செய்யப்படும். பண்ணையடிமை உள்ளிட்ட அனைத்து அடிமை முறைகளும் முற்றிலுமாக ஒழிக்கப்படும். தன்னிறைவு பெற்ற நாடாக சோவியத் உயரும் . உலகளவில் முக்கியமான சக்தியாக மாறும்.

ஓகஸ்ட் 1924 ல் ஸ்ராலின் அறிவித்தார். எந்தவித வெளி உதவியும் இல்லாமல் சோவியத்தில் சோஷலிசம் நிர்மாணிக்கப்படும். முதல் காரியமாக, கட்சியை, அதிகாரத்தைப் பலப்படுத்த ஆரம்பித்தார். பொலிட் ப்யூரோவின் ஆதரவை உறுதி செய்து கொண்டார். கட்சி விவகாரங்களில் சிறிதும் தயவு தாட்சண்யம் காட்டவில்லை ஸ்ராலின். எனக்கு தேவை ஒழுங்கு, விசுவாசம். கட்சியோடு சேர்ந்து உயிரைக் கொடுத்து போராடுவதற்கான தீரம். சந்தேகப்படாதே. முடியுமா என்று யோசிக்காதே. எதிர்த்து பேசாதே. புரளி பேசாதே. அத்தியாவசியமானவர் என்று கட்சியில் யாரும் அல்ல. யார் இல்லாவிட்டாலும் கட்சி இயங்கும். எல்லோரும் இல்லாவிட்டாலும் கட்சி இயங்கும்.

முதலாளித்துவ ஐரோப்பிய நாடுகள் அடைந்திருப்பதை காட்டிலும் மேலான நிலையை நாம் அடையவேண்டும். முதலாளிகள் மென்மேலும் கொழுத்துக்கொண்டு போவதையும், தொழிலாளர்கள் படுகுழிக்குப் பத்தடிக்குக் கீழே தள்ளப்படுவதையும் இனி நம்மால் சகித்துக் கொள்ள முடியாது. முதலாளித்துவத்தை எதிர்த்து போராடுவோம். விவசாயிகளை தொழிலாளர்களை ஒன்றிணைப்போம். அதற்கு உங்கள் அத்தனை பேரின் விசுவாசமான ஒத்துழைப்பு தேவை.

கூட்டுப்பண்ணைகள் உருவாக்கபட்டன. விவசாயிகளுக்குத் தேவையான அத்தனை சலுகைகளையும் சோவியத் அரசு வழங்கியது. தேவைப்படும் நிலம், விதைகள் அளிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. விவசாயிகளின் கடமை உற்பத்தியைப் பல மடங்கு பெருக்குவது தேவைக்கும் மிகுதியாக விளைந்தவற்றை அரசாங்கமே கொள்முதல் செய்து கொள்ளும். கொள்முதல் செய்யபட்ட தானியங்கள் ஏழை, எளிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கபடும். இது தான் ஸ்ராலினின் திட்டம்.

பெரிய நகரங்களில் கூட பட்டினி, பஞ்சம் நிறைந்திருந்ததால் இந்த திடீர் ஏற்பாடு. ஆரம்பத்திலிருந்தே உற்சாகத்துடன் தமது விளைச்சலை அரசாங்கத்திடம் ஒப்படைத்தனர். ஆனால், சைபீரியாவின் பல பகுதிகளிலிருந்து சிறிதளவான தானியங்கள் கூட அரசாங்கத்தை சென்றடையவில்லை.

ஸ்ராலின் சைபீரியா சென்றார். பண்ணையாளர்களை அழைத்து வைத்துப் பேசினார். மக்களின் நெருக்கடியை அவர்களுக்கு விளக்கிப் பார்த்தார். அவர்கள் சம்மதிப்பதாக இல்லை. உடனடியாக, ஒரு சட்டம் இயற்றப்பட்டது. உபரியாக விளையும் தானியங்களை ஒப்படைக்க மறுத்தால் குற்றவியல் சட்டம் 107 ன் படி தண்டிக்கபடுவீர்கள். காவல்துறை அதிகாரிகள் இதைக் கண்டிப்பாக மேற்பார்வை செய்யவேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மாற்றபட்டுவார்கள்.

பண்ணையாளர்கள் சீறினார்கள். கலகங்களை உருவாக்கினார்கள். ஸ்ராலின் அவர்களை லாவகமாக எதிர்கொண்டார். துப்பாக்கி தூக்கி சண்டை போட்ட அத்தனை பேரும் ஒடுக்கபட்டனர். தானியங்கள் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்டன.

நாளடைவில் ஸ்ராலின் நடத்துவது சர்வாதிகார ஆட்சி என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஸ்ராலின் அதற்கு பதிலளித்தார். ஆம் நடப்பது சர்வாதிகார ஆட்சி தான். ஆனால், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம். ஓர் ஆட்சியாளர் சர்வாதிகாரமாக இருந்தால் அவர் வைத்தது தான் சட்டம். ஆனால், பாட்டாளிவர்க்கம் சர்வாதிகாரியாக இருக்கும் பட்சத்தில் அங்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டு வந்தவர்.

‘இதெல்லாம் நடக்காத கதை’ என்றார் நிகாலாய் புகாரின். ஸ்ராலின் மீது இவருக்கு மிகுந்த அதிருப்தி இருந்தது. அவருக்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டுவந்தவர்.

ஐந்தாண்டு திட்டத்தை ஸ்ராலின் முதன் முதல் அறிமுகபடுத்தியபோது, சோவியத் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் ஆச்சரியம் அடைந்தது. லெனினைப் பற்றி அறிந்திருந்த அளவுக்கு ஸ்ராலினை பற்றி உலகம் அவ்வளவாக அப்போது அறிந்திருக்கவில்லை. பலருக்கு அவர் ஒரு சர்வாதிகாரி. சோவியத்தைச் சிறிது சிறிதாக பிய்த்து சாப்பிடும் ஒரு பூதம். ஒரு மோசமான கொடுங்கோலன். இன்னும் பிற.

ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்றதை கேள்விப்பட்டவுடன் பல நாட்டு அதிபர்களுக்கு ஜன்னியே வந்துவிட்டது. இதென்ன அக்கிரமம். தொழிலாளர்கள் அரசாங்கத்தை தூக்கி எறிவதா? இந்த கம்யூனிஸ்டுகளே விவகாரமானவர்கள் தான். கலகம், எதிர்க்கலகம், ராணுவப்புரட்சி, எதிர் ராணுவப்புரட்சி, ஆட்சிக்கவிழ்ப்பு. வேறு வேலையே இல்லையா இவர்களுக்கு. லெனின் இல்லாத குறையை தீர்க்க இப்போது ஸ்ராலின். இதென்ன புதிதாக ஐந்தாண்டு திட்டம். ரஷ்யாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது.

ஸ்ராலின் வரைந்தளித்தது ஒரு வரைப்படம். சோவியத்யூனியனின் வரைப்படம். வரைப்படத்தின் நடுவே குட்டிக் குட்டியாக சில புள்ளிகள். விட்டு விட்டு சில கோடுகள். வெவ்வேறு வண்ணங்களில். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பு. புதிய சாலைகள், புதிய ரயில் பாதைகள், புதிய கட்டடங்கள், புதிய தொழிற்சாலைகள் என்று ஒவ்வொரு குறிப்பின் கீழும் ஒரு திகதி.

மொத்தம் ஐந்து ஆண்டுகள். திட்டமிட்டபடி, குறிப்பிட்ட வேலையை செய்து முடிப்போம் என்றார் ஸ்ராலின். ரஷ்யா இப்போது ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி இருக்கிறது. தொழில் வசதி இல்லை. போக்குவரத்து வசதி இல்லை. முன்னேறுவதற்கு தேவையான எந்தவொரு விஷயமும் இல்லை. இப்படியே நீடித்தால், பிறகு உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து எங்களை விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்.

பல்வேறு நாடுகளில் இருந்து வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டார்கள். தனித்தனி குழுக்கள். வேலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. 1928 முதல் ஐந்தாண்டு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முதல் முதலாக, ஸ்ராலினைப் பற்றி அதிகமான தெரிந்து கொள்ள மேற்குலகம் ஆர்வம் காட்டியது அப்போது தான். புரட்சி என்று ஒன்று நடந்து மன்னர் ஆட்சி வீழ்த்தபட்டது என்பதை தவிர ரஷ்யாவைப் பற்றி அவர்களுக்கு அதிகம் தெரியாது. காரணம், தெரிந்து கொள்ளத் தூண்டும்படியாக ரஷ்யாவில் எதுவும் நடக்கவில்லை என்பதே.

ஐந்தாண்டு திட்டம் அமர்க்களமாக வேலை செய்தது. லெனின்கிராட்டில் இருந்து வ்ளாடிவஸ்ரொக் (Viadivastok) செல்லும் வழியில் பல புதிய கட்டங்கள் முளைக்க ஆரம்பித்தன. உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், இயந்திரங்களை பழுது பார்க்கும் நிறுவனங்கள் உருவாக்கபட்டன. சாதாரண விஷயங்கள் தான். ஆனால் ரஷ்யாவிற்கு இவை ஒவ்வொன்றும் புதுசு. ஒவ்வொரு துறையிலும் இது போல் வளர்ச்சி. முன்னேற்றம், நவீனமயம்.

முதல் ஐந்தாண்டு திட்டத்திற்காக முதலீடு செய்யபட்ட தொகை 7.8 மில்லியன் ரூபிள். கடந்த பதினைந்து ஆண்டுகளில் ரஷ்யா செய்திருந்த முதலீடுகளை விட இது இரு மடங்கு அதிகம். 1932 க்கு முன்னதாகவே ஐந்தாண்டு திட்டம் வெற்றியடைந்துவிட்டதாக ஸ்ராலின் அறிவித்தார். அமெரிக்காவும் பிரிட்டனும் பிற உலக நாடுகளும் கம்யூனிச புரட்சியின் பின்னர் ரஷ்யாவின் அபரிமிதமான வளர்சியை சற்று பொறாமை கலந்த கண்ணோட்டதுடன் கவனிக்க ஆரம்பித்தன. ஸ்ராலின் தனது அடுத்த ஐந்தாண்டு திட்டத்தை விலாவாரியாக பட்டியலிடத் தொடங்கினார்.

ராணுவத்துறையிலும் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியிருந்தது சோவியத்யூனியன். மன்னர் ஆட்சிக்காலத்தில் இருந்த போது ஒக்ரானா (Okhrana) என்ற பெரில் ஒரு குழு இயங்கி வந்தது. இந்த குழுவின் வேலை யார் யாரெல்லாம் சட்டத்துக்கு விரோதமாக புரட்சியில் ஈடுபடுகிறார்கள், யாரெல்லாம் ஸார் (Tshar) மன்னருக்கு எதிராக கோசம் போடுகிறார்களோ அவர்களை கண்டு பிடிப்பது. போல்விஷ் அரசு வெற்றி பெற்ற சில வாரங்களில் தொடங்கபட்ட அமைப்பு செகா (Cheka) முழுப்பெயர் All Russian Extraordinary Commission for Combating Counter-Revoluton and Sabotage. அதாவது சோவியத் அரசை எதிர்க்கும் எதிர்புரட்சியாளரோடு போரிடும் அமைப்பு. அதாவது உளவுத்துறை.

1918 ன் இறுதியில் செகாவின் அந்தஸ்து உயர்ந்தது. உள்துறை மட்டுமல்லாது வெளியுறவுத் துறைகளையும் கவனித்துக் கொள்ள ஆரம்பித்தது. போர்த்தகவல் குழு (WIB –  War Information Bureau) என்ற புனைபெயரில் வெளிநாடுகளில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று மூக்கை நீட்டிப்பார்க்கும் வேலைகளில் இறங்கியது.

காலப்போக்கில் செகா, வெவ்வேறு ரூபங்களில் வெவ்வேறு பெயர்களில் பவனி வர ஆரம்பித்தது. ஸ்ராலின் ஆட்சிக்கு வந்த போது, செகாவின் பெயர் OGPU. வெறும் பாதுகாப்பு பிரிவாகவும் உளவு நிறுவனமாகவும் மட்டுமல்லாமல் OGPU வை ஓர் அரசியல் ஆயுதமாகவும் பயன்படுத்த ஆரம்பித்தார் ஸ்ராலின்.

போர் மூளும் பட்சத்தில் சோவியத்தின் நிலைப்பாடு என்ன என்பதில் ஸ்ராலின் தெளிவாகவே இருந்தார். சோவியத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடுகளுக்கு தார்மீக உதவி. ஆதரவு. உழைக்கும் நாடுகளுக்கு நட்புக்கரம்.

ராணுவத்தை பலப்படுத்தும் பணி தொடங்கியது. கிட்டத்தட்ட 30000 இலகு ரக பீரங்கிகள். 52000 சிறுவகை பீரங்கிகள், டாங்கிகள், துப்பாக்கிகள் என்று செஞ்சேனை அசுர வளர்ச்சியடைந்தது. நடுத்தர ரக டி34 டாங்கிகள். நவீன ரக துப்பாக்கிகள், போர்விமானங்கள் என்று வளர ஆரம்பித்தனர்.

ராணுவ வீரர்கள் அத்தனை பேருக்கும் சிறப்பு ராணுவப்பயிற்சி. ராணுவ உயர் அதிகாரிகளை தேர்வு செய்யும் வேலையை ஸ்ராலினே முன்நின்று செய்தார். டிசம்பர் 1940 ல் மாபெரும் ராணுவ அதிகாரிகள் மாநாடு மொஸ்கோவில் நடைபெற்றது. அத்தனை மாவட்டங்களையும் சேர்ந்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். நவீன போர் யுக்திகள், தற்காப்புக் கலைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. ஜேர்மனி திடீரென்று தாக்குதல் தொடுத்தால் என்னென்ன செய்யவேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டது.

ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை இந்த மாநாட்டில் நடத்திக் காட்டினார்கள். ஒரு குழு தனியாக ஒதுங்கி நின்றது. இவர்கள் நாசிகள். அதாவது நாசிகளாக நடிக்கப் போகிறவர்கள். மற்றொரு குழுவில் சோவியத் ராணுவத்தினர் இருப்பார்கள். முதல் குழுவின் வேலை விதவிதமான போர் வியூகங்களை அமைத்து, விதவிதமாக முறையில், புதிய வழிகளில் சோவித் வீரர்கள் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும். ஒப்புக்குத்தான். அதே சமயம் சோவியத் ராணுவத்தினர் இந்த தாக்குதல்களை திறமையாக போராடி சமாளிக்கவேண்டும்.

ஆனால் ஆச்சரியம் இந்த பயிற்சி விளையாட்டின் மூலம் உண்மையாகவே பல புதிய போர் உத்திகளை சோவியத் ராணுவத்தினர் கற்றுக்கொண்டார்கள். அதைவிட ஆச்சரியம் நாசிகள் பின்னர் கடைப்பிடித்த பல போர் யுக்திகள் இந்த விளையாட்டு முறையை ஒத்திருந்தன.

(தொடரும்)

 

நூல்  இரண்டாம் உலகப்போர்

எழுதியவர்  மருதன்

வெளியீடு கிழக்கு பதிப்பகம்  2009 மே

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.