Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதீப்சிங்காக மாறிய லொக்கா; திடுக்கிடும் உண்மைகள் – மூவர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதீப்சிங்காக மாறிய லொக்கா; திடுக்கிடும் உண்மைகள் – மூவர் கைது!

95SfYHzH6GZfttLGH3hQ2WBI0ncKkZWl-960x544.jpg?189db0&189db0

 

இந்தியாவில் இறந்து விட்டதாக கூறப்படும் இலங்கை பாதாளக் குழுத் தலைவரான அங்கொட லொக்காவுக்கு போலியான ஆவணங்கள் தயாரித்து உதவிபுரிந்த குற்றச்சாட்டில் இந்தியா – கோயம்புத்தூர் சிட்டி பொலிஸாரால் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லொக்காவுடன் இருந்த கொழும்பைச் சேர்ந்த அமானி தஞ்சி (27-வயது), மதுரைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி (36-வயது), தற்போது திருப்பூரில் வசித்து வரும் ஈரோடைச் சேர்ந்த எஸ்.தனேஸ்வரன் (32-வயது) ஆகியோரை நேற்று (02) பீலமேடு பொலிஸார் கைது செய்தனர்.

லொக்கா தனது பெயரை பிரதீப் சிங் என மாற்றி இந்திய பிரஜையாக ஆதார் அட்டையும் பெற்று தலைமறைவாக இருந்தார் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதன்படி அதற்கு உதவிய குறித்த மூவர் மீதும் குற்றவியல் சதி – ஆவணங்களை மோசடி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக ஐபிசியின் 120 பி, 177, 182, 202, 212, 417, 419, 466, 468 மற்றும் 471 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸாரின் தகவல்படி, “ஜூலை 4ம் திகதி சந்தேக நபர்களில் ஒருவரான சுந்தரி தனது உறவினரான பிரதீப் சிங் மாரடைப்பால் இறந்துவிட்டார் என தெரிவித்து ஆதார் அட்டையின் பிரதியை பீலாமேடு பொலிஸாரிடம் கையளித்துள்ளார்.

விசாரணையின் போது ஆதார் அட்டை போலியானது என்றும், மரணமடைந்தது அமானியுடன் சேர் மா நகரில் தங்கியிருந்த லொக்காவுடையது என்பதையும் கண்டறிந்தனர்” – என்று குறித்த ஊடகத் தகவலில் தெரிவிக்கப்படுகிறது.

“சந்தேக நபரான அமானியின் தகவல்படி, “அமனியால் நெஞ்சு வலி என தெரிவித்து ஜூலை 3ம் திகதி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லொக்கா மரணமடைந்தார் என்றும், கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி வைத்தியசாயைில் மறுநாள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சடலம் கையளிக்கப்பட்டது என்றும், ஜூலை 4ம் திகதி பிரேத பரிசோதனை நடைமுறையை பூர்த்தி செய்ய சுந்தரி பொலிஸாரை அணுகினார். பின்னர் மதுரையில் இறுதிக்கிரியை இடம்பெற்றது எனவும் தெரியவந்தது.” – எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவரின் உள்ளுறுப்பு மாதிரிகளின் ஆய்வக முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று கோயம்புத்தூர் பிரதி பொலிஸ் ஆணையாளர் ஜி.ஸ்டாலின் தெரிவித்தார்.

லொக்காவை அவருடன் இருந்த பெண் ஒருவர் விஷம் வைத்து கொலை செய்தார் என்று அண்மையில் சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டமையும், அதனைத் தொடர்ந்து பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/பிரதீப்சிங்காக-மாறிய-லொக/

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அங்கோடா லொக்கா: கடல் கடந்த போதைக் கழுகின் கதை!

spacer.png

 

கோவையில் கடந்த மாதம் மாரடைப்பால் இறந்துபோன பிரதீப் சிங் என்பவரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் தமிழக போலீஸாருக்கு, அந்த உடலுக்குப் பின்னால் ஒரு கடல் கடந்த கதை இருப்பதும், அந்த கதை குற்றங்கள் நிறைந்த கதை என்பதும் தெரியவந்தது.

அங்கொடோ லொக்கா என்ற இலங்கை போலீஸாரால் தேடப்பட்டு வந்த பிரபல தாதாதான் இங்கே கோவையில் பிரதீப் சிங் என்ற வேறு ஒரு பெயருக்குள் புகுந்து போலி ஆதார் கார்டு வரை எடுத்து வாழ்ந்து வந்திருக்கிறார்.

கடந்த ஜூலை முதல் கோவை விமான நிலையத்தில் இருந்து இரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அமைதியான ஏரியாவான கோயமுத்தூர் பாலாஜி நகர் இப்போது பரபரப்பு நகராகியிருக்கிறது. அங்கோடா லொக்கா அல்லது பிரதீப் சிங் அல்லது மத்துமகே லசந்தா சந்தனா பெரேரா என்ற பெயர்களுக்கு சொந்தமான அந்த நபர் அந்த பகுதியில் உள்ள தோசைக் கடைக்கு அருகேதான் வசித்திருக்கிறார். போலீஸார் அங்கே வந்ததும் ஓர் உடலை கைப்பற்றி எடுத்துச் சென்றதும் செய்திகளாக வர அந்த அமைதியான ஏரியா அதிர்ச்சிக்குள்ளாகியது. காரணம் போலீஸார் உச்சரித்த பெயர் அங்கோடா லொக்கா. காரணம் அப்படிப்பட்ட பெயரை அந்த பகுதி மக்கள் கேள்விப்பட்டதே கிடையாது.

தோசைக் கடை வைத்திருக்கும் நபர் “அவர் வாரத்துல ஒருமுறை இல்ல ரெண்டு முறை சாயந்தர நேரமா என் கடையைத் தாண்டியிருக்கிற குப்பைத் தொட்டிக்கு வரைக்கும் போவார். அங்க குப்பைகளைக் கொட்டிட்டு என் கடைக்கு வந்து தோசை இல்லாட்டி நெய் ரோஸ்ட் பார்சல் வாங்கிட்டுப் போயிடுவார். பெரிசா பேச மாட்டார்” என்று சொல்லியிருக்கிறார்.

spacer.png

இலங்கையைச் சேர்ந்த அங்கோடா லொக்கா சாதாரண ஆள் இல்லை. அங்கே பல வழக்குகளில் தொடர்புடையவர். கொலை, போதை மருந்துக் கடத்தல் உள்ளிட்ட முக்கிய குற்றங்களுக்காக இலங்கை போலீஸால் தேடப்படுபவர் என்ற விவரம் வெளிப்பட்டதும்தான் போலீஸார் இதில் தீவிரமாகினர். மரணம் அடைந்த அங்கோடா லொக்காவை பார்க்க 27 வயது மதிக்கத்தக்க அமானி தஞ்சி என்ற இலங்கை பெண் அடிக்கடி இங்கே வந்ததாக சுற்று வட்டாரம் மூலமாகவே தகவல் கிடைத்திருக்கிறது.

அதே பகுதியில் மளிகைக் கடை வைத்திருக்கும் வேல்முருகன், “அந்த ஆள் இங்கதான் வந்து சிகரெட் வாங்குவாரு. தமிழை உடைச்சுப் போட்டு பேசுற மாதிரி இருக்கும். பெரும்பாலும் சிகரெட் பிராண்ட் பத்திதான் பேசுவாரு. வேற எதுவும் பேச மாட்டாரு” என்று கூறியுள்ளார்.

 

இதே பகுதியில் இருக்கும் ஜிம்முக்கும் லொக்கா அடிக்கடி வந்து சென்றிருக்கிறார். அந்த ஜிம்மின் கோச் பிரபுவும் விசாரிக்கப்பட்டார். ஜிம்மில் உள்ள கண்காணிப்பு கேமராவிலிருந்து லொக்கா பற்றிய தகவல்களை கோவை போலீஸார் திரட்டினார்கள்.

அங்கோடா லொக்கா இலங்கையிலிருந்து இந்தியா வரை

இந்தப் பெயர் இறப்புக்குப் பிறகே தமிழ்நாட்டில் பேசப்படுகிறது. ஆனால் இலங்கையில் அங்கோடா லோக்காவின் பெயர் கடந்த சில ஆண்டுகளில் ஒவ்வொரு முறையும் ஊடகங்களில் வெளிவருகிறது. போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் தொடர்பாக சந்தேக நபர்களை காவல் துறையினர் கைது செய்யும் போதெல்லாம், கைது செய்யப்பட்ட சிலரை ‘பாதாள உலகக் கும்பல் அங்கோடா லொக்காவின் கூட்டாளிகள்’ என்றே இலங்கை ஊடகங்கள் அடையாளம் காட்டும்.

கொழும்பில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நகரப்புறத்தை ஒட்டிய அங்கோடா என்ற சிறு நகரத்தைச் சேர்ந்தவர்தான் லொக்கா. மிரட்டிப் பணம் பறித்தல், சட்ட விரோத மணல் சுரங்கம், நில அபகரிப்பு என்று நகரங்களுக்கே உரிய குற்றங்களைச் செய்து வந்த லொக்கா ஒரு கட்டத்தில் இலங்கையின் முக்கிய சட்ட விரோதத் தொழிலாக கருதப்படுகிற போதை மருந்துக் கடத்தலுக்கும் தாவுகிறார். பிப்ரவரி 2017இல் இலங்கையில் போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் என்று கருதப்படும் சமயன் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது போலீஸ் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சமயன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்தியதே அங்கோடா லொக்காதான் என்றும், அதன்பின் அவர் இலங்கையில் இருந்து தப்பிவிட்டதாகவும் இலங்கை போலீஸார் கூறுகிறார்கள்.

அப்போது இலங்கை போலீஸ் நடத்திய விசாரணையில் 2017 மார்ச் 1 அன்று மன்னாரில் இருந்து கள்ளப் படகு மூலம் லொக்கா இலங்கையிலிருந்து தப்பித்துவிட்டாரென்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் மூத்த போலீஸ் சூப்பிரண்டு ஜலியா சேனரத்ன தெரிவித்தார். மன்னாரில் இருந்து படகில் தப்பித்தார் என்றால் சில நிமிட தொலைவில் இருக்கும் தமிழகத்துக்குதான் லொக்கா சென்றிருப்பார் என்று இலங்கை போலீஸாருக்கு புரிந்தது.

அதேநேரம் அப்போதைய இலங்கை அதிபர் மைத்றிபால சிறிசேனா இலங்கையில் போதை மருந்துக் கடத்தல் கும்பல்களை ஒடுக்குவதற்காக சிறப்பு கவனம் எடுத்து செயல்பட்டதை அடுத்து இலங்கையில் பல வேட்டைகள் நடத்தப்பட்டன. போதை மருந்து கடத்திக் கைது செய்யப்பட்டால் தூக்கு தண்டனை என்று சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்ட அந்த நேரத்தில் லொக்கா... தமிழகத்தில் இருந்து துபாயில் இருக்கும் இலங்கையின் போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் மக்கந்துரே மதுஷ் என்பவரை சந்திக்க துபாய் சென்றுவிட்டார். அதன்பின் மக்கந்துரே கைது செய்யப்பட்டபோதிலும் லொக்காவின் லொக்கேஷன் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

spacer.png

அதன்பின் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையின் சண்டே அப்சர்வர் ஏட்டில் சென்னையில் கைது செய்யப்பட்ட லொக்கா மற்றும் அவரது உதவியாளர் அதுருகிரியா லடியா போதை மருந்து கடத்தல் கூட்டாளிகள் தப்பித்துவிட்டதாக செய்தி வெளியிட்டது. வெளிநாடுகளில் இருந்துகொண்டு இலங்கையின் போதை மருந்து தடுப்பு போலீஸ் அதிகாரிகளை கொன்றுவருவதாகவும் லொக்கா மீது குற்றம் சாட்டப்பட்டது.

லொக்கா வளர்த்த கழுகு

அங்கோடா லொக்காவை இலங்கை போலீஸார் தேடியபோது மேற்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது லொக்காவினுடையது என்று சந்தேகிக்கப்படும் பண்ணை வீட்டில் சோதனை நடத்தியபோது சிலரை கைது செய்ததோடு ஒரு கழுகையும் கைப்பற்றினார்கள். வெள்ளை நிற வயிறு கொண்ட அந்த கடல் கழுகை வளர்த்து வந்திருக்கிறார் லொக்கா. எதற்காக தெரியுமா? கடல் கடந்து போதை மருந்துகளை கடத்துவதற்காகவே அந்த கழுகை வளர்த்திருக்கிறார். படகுகளில், விமானங்களில் போதை மருந்து கடத்துவது கடினமாகிவிட்ட நிலையில்தான், கழுகு மூலமாகவே இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு போதை மருந்து கடத்தல் நடத்திவந்திருக்கிறார்கள் லொக்கா கும்பல்.

 

எப்படி உடைந்தது உண்மை? 

பாலாஜி நகர் தோசைக் கடையில் நெய் ரோஸ்ட் சாப்பிட்டு பக்கத்தில் ஒரு கடையில் சிகரெட் வாங்கி புகைத்துவிட்டு, குப்பைத் தொட்டிகளில் அமைதியாக சென்று குப்பை போட்டுவிட்டு வந்த அந்த பிரதீப் சிங்தான் இத்தனை பின்னணி கொண்ட ஒரு இலங்கை போதை மருந்து கடத்தல்காரன் என்பது அப்பகுதி மக்களுக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதிக்குப் பிறகுதான் தெரியவந்திருக்கிறது. லொக்கா பற்றிய திடுக்கிடும் தகவல்களை அறிந்த க்யூ பிரிவு போலீஸாரின் விசாரணையில் அவர் அக்டோபர் 2018 முதல் கோவையில் பிரதீப் சிங்காக வசித்து வந்தார் என்பது வெளிப்பட்டது. பாலாஜி நகரைத் தவிர, அவர் ஐந்து கி.மீ தூரத்தில் உள்ள சரவணம்பட்டியிலும் வசித்து வந்தார் என்றும் அறிந்து அதிர்ந்தனர்.

கடந்த ஜூலை 3ஆம் தேதி பிரதீப் சிங் மாரடைப்பால் இறந்துபோனதை அடுத்து அவரது உறவுப் பெண் என்று சொல்லி சிவகாமசுந்தரிதான் ஜூலை 5 ஆம் தேதி ஆதார் உள்ளிட்ட ஆவணங்களோடு கோவை போலீஸை அணுகியிருக்கிறார். பிரதீப் சிங் என்ற பெயருக்கான மதுரை முகவரியுடன் கூடிய ஆதார் கார்டை போலீஸிடம் கொடுத்து, ஜூலை 5 ஆம் தேதி பிரேத பரிசோதனை முடிந்ததும், அவர் சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்றார், அங்கு தகனம் செய்யப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.

மதுரையில் நடந்த இறுதி சடங்குகளின் வீடியோ இலங்கையில் இருக்கும் சிலருக்கு காட்டப்பட்டதாக சில இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பிறகுதான்... தமிழக உளவுத்துறை விழித்துக்கொண்டு மதுரையைச் சேர்ந்த ஒருவரின் இறுதிச் சடங்கு ஏன், எதற்காக, எப்படி இலங்கையில் உள்ளவர்களுக்கு காட்டப்படவேண்டும் என்று குடைந்துகொண்டு விசாரிக்க ஆரம்பித்தது. அதன் பிறகுதான் சிவகாமசுந்தரி கொடுத்த பிரதீப் சிங் என்ற ஆதார் போலியானது என்று தெரிந்து, சுமார் ஒரு மாதம் கழித்து ஆகஸ்ட் 2ஆம் தேதி போலீசார் எஃப்.ஐ.ஆரை மாற்றினார்கள். அதன் அடிப்படையில் சிவகாமசுந்தரி, தியானேஸ்வரன் மற்றும் தஞ்சி ஆகியோர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான டி.சிவகாமசுந்தரியின் அவரது சட்டக் கல்லூரி ஜூனியர் எஸ். தியானேஸ்வரன், 32, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர்தான் லொக்காவுக்கு தவறான ஆவணங்களை வழங்கி, அடைக்கலம் கொடுத்து வந்திருக்கிறார். இறந்தவர் மற்றும் அவருடன் வாழ்ந்த இலங்கைப் பெண்ணின் பின்னணியை உள்ளூர் காவல்துறையினர் சோதித்திருந்தால், இறந்த உடனேயே, இந்த விவரங்கள் முன்பே வெளிவந்திருக்கும்" என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.

spacer.png

 

இந்தியாவில் சட்டவிரோதமாக வந்ததற்காக இலங்கை போலீசாரின் தகவல்படி லொக்கா மீது சென்னை காவல்துறையினர் 2017இல் வழக்கு பதிவு செய்தனர். பின் அவர் ஜாமீன் பெற்றிருக்கிறார். லொக்கா இந்தியாவின் பல பகுதிகளிலும் வசித்து வந்திருக்கிறார். பிரதீப் சிங் என்ற பெயரில் எடுக்கப்பட்ட ஆதார் கார்டுகூட மேற்கு வங்காளத்தில் வாங்கப்பட்டது என்றும், அது பின் மதுரை முகவரிக்கு மாற்றப்பட்டது என்றும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஏழு தனிப்படைகள் அமைத்து இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடக்கிறது என்கிறார் சிபிசிஐடி ஐஜி சங்கர்.

லொக்கா கொலையா?

கைதான சிவகாமசுந்தரி, தியானேஸ்வரன் மற்றும் தஞ்சி ஆகியோரின் வாக்குமூலங்கள் இறந்தவரின் அடையாளத்தை லொக்கா என்று நிறுவியிருந்தாலும், அதன் அடிப்படையில் உள்ளூர் காவல்துறையினர் இறந்தவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்று கூறியிருந்தாலும், சிபிசிஐடி இதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க விரும்புகிறது. இதற்காக இலங்கையில் உள்ள லொக்காவின் இரத்த உறவினர்களின் டி.என்.ஏவுடன் அவரது டி.என்.ஏவைப் பொருத்துவதன் மூலம் இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. பாலாஜி நகர் வீட்டில் கிடைத்த கைரேகைகளை 2017இல் சென்னையில் காவல் துறையினர் சேகரித்த லொக்காவின் கைரேகைகளுடன் பொருத்திப் பார்க்கவும் சிபிசிஐடி முயற்சி செய்கிறது. இன்னொரு பக்கம் லொக்கா மாரடைப்பால்தான் இறந்தாரா அல்லது போதை மருந்துக் கடத்தல் போட்டி கும்பலால் கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

ஏனெனில் பிரேத பரிசோதனை செய்த ஒரு மூத்த டாக்டர் "இறந்தவரின் விரல் மற்றும் கால் நகங்கள் நீல நிறத்தில் இருந்தன" என்று கூறியிருக்கிறார். இது பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஒரு நபர் மாரடைப்பு அல்லது கழுத்தை நெரித்து இறக்கும்போது குறைந்த அளவு ஆக்ஸிஜன் போன்ற பல காரணிகளால் ஒரு வகையான நிறமாற்றம் ஏற்படக்கூடும் என்று தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், இறந்த லொக்காவுக்கு வெளிப்புற மற்றும் உள் காயங்கள் எதுவும் இல்லை என்பதால், இது கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் பிரேத பரிசோதனையின்போது சேகரிக்கப்பட்ட உள்ளுறுப்புகள் பின்னர் வேதியியல் பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டது, அதே நேரத்தில் இதயம் பாதுகாக்கப்பட்டு ஹிஸ்டோபோதாலஜிகல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவற்றின் முடிவுகளுக்காக வழக்கு விசாரணை காத்திருக்கிறது. "முடிவுகளை விரைவுபடுத்துமாறு நாங்கள் கோரியுள்ளோம்" என்று தடயவியல் மருத்துவத் துறைத் தலைவர் டி. ஜெயசிங் கூறினார்.

spacer.png

மூக்கை மாற்றிய லொக்கா?

கோயம்புத்தூரில் லோக்காவுக்கான வீடு பிடித்துக் கொடுத்தது தியானேஸ்வரன்தான் என்று காவல் துறையும் வீட்டு உரிமையாளருக்கு நெருக்கமான ஒரு நபரும் தெரிவித்தனர். “இந்த ஆண்டு பிப்ரவரியில் பாலாஜி நகரில் உள்ள வீட்டை தியானேஸ்வரன் வாடகைக்கு எடுத்தார். திருமணம் செய்யப் போகும் ஒரு நண்பர் துபாய்க்குச் செல்வதற்கு முன்பு சிறிது காலம் வீட்டில் தங்குவார் என்று அவர் எங்களிடம் கூறினார்” என்று பக்கத்து வீட்டுப் பெண் கூறினார்.

இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் தஞ்சி மதுரை விமான நிலையத்திற்கு வந்ததாகவும் பின்னர் சிவகாமசுந்தரியின் உதவியுடன் கோவையில் உள்ள லொக்காவின் வீட்டிற்கு சென்றதாகவும் போலீஸார் சொல்கிறார்கள். அதற்குள் கொரோனா ஊரடங்கு அமலானதால் அவர் இலங்கைக்குச் செல்ல முடியவில்லை. தியானேஸ்வரன் மற்றும் சிவகாமசுந்தரி ஆகியோர் லொக்காவுக்கு கோவையில் பல உதவிகள் செய்திருப்பது கண்டறியப்பட்டது. இதில் முக்கியமானது பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தன் மூக்கை மாற்ற முயன்றுள்ளார் லொக்கா. தான் சினிமாவில் நடிப்பதால் மூக்கை சற்றே மாற்ற வேண்டும் என்று பீளமேட்டில் ஒரு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் லொக்கா. ஆனால் இந்த சிகிச்சையால் அவரது தோற்றத்தில் பெரிய மாற்றம் இல்லை என்கிறார்கள் போலீஸார்

லொக்காவின் கூட்டாளிகளின் பின்னணி

அங்கோடா லொக்காவுக்கு தமிழகத்தில் அடைக்கலம் கொடுத்த சிவகாமசுந்தரியின் தந்தை தினகரன் மீது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை காவல் நிலையத்தில் வெடிபொருள் வழக்கு ஒன்று இருக்கிறது. இலங்கைக்கு வெடிபொருள்களைக் கொண்டு செல்வது தொடர்பாக 2006இல் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில், சிவகாமசுந்தரியின் பல வங்கிக் கணக்குகளில் பெருமளவிலான பரிமாற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே இதில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இலங்கை குழுவினருக்கும் தொடர்பு இருக்குமோ என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் லொக்காவின் மரணத்தின் இன்னொரு குழப்பம் அவரது அறையில் டிஜிட்டல் சாதனம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கோயம்புத்தூர் நகர காவல்துறை துணை போலீஸ் கமிஷனர் ஜி. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். லொக்கா ஆன்லைன் ஆர்டர் மூலமாக உணவுகளை வரவழைத்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். அப்படியெனில் அவர் ஒரு மொபைல்போன் வைத்திருக்க வேண்டும். டேப்லெட் அல்லது கணினி தேவைப்பட்டிருக்கும். காவல்துறையினர் தினார் மற்றும் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க டாலர்களை அந்த வீட்டிலிருந்து மீட்டனர். காவல்துறையினர் சேகரித்த அனைத்து பொருட்களும் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் டிஜிட்டல் சாதனங்கள் இல்லை என்பதும் ஒரு கேள்விக்குரியதாக இருக்கிறது.

லொக்கா பற்றிய விசாரணைகள் இந்தியா, இலங்கை இரு நாடுகளிலும் பரவியுள்ள நிலையில்.. விசாரணை முடிவுக்குப் பின்னரே பிரதீப் சிங் அல்லது அங்கோடா லொக்கா அல்லது மத்துமகே லசந்தா சந்தனா பெரேராவின் மரணத்தில் மர்மம் உடையும்!

நன்றி:  வில்சன் தாமஸ், தி ஹிந்து ஆங்கிலம்

 

https://minnambalam.com/public/2020/08/16/29/angoda-lokka-srilnaka-coiambatore-smuggler-story

 

  • கருத்துக்கள உறவுகள்

Untitled.png

 

உலக சாதனை படைத்த கராத்தே வீரர் வசந்த சொய்சாவின்  படுகொலை தொடர்பில் முக்கிய குற்றவாளியாக
காணப்படும் எஸ்.எப். லொக்கா எனப்படும்இரோன்  ரணசிங்க என்பவரின் கொலை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் அவர் தொடர்பான பல விடயங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

 
குறிப்பாக அனுராதபுர நகரில் பாரிய அளவில் ஹெரோயின் வியாபாரத்தை முன்னெடுத்து சென்று உள்ளதுடன் கோடிக்கணக்கில் கப்பம் எடுத்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது.

 அனுராதபுரம் சந்தியில் வைத்து கடந்த 5 ஆம் திகதி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட இவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரின் கொலை தொடர்பாக அனுராதபுர போலீசார் பல கோணங்களில்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளது
 
சுட்டுக்கொல்லப்பட்ட இரோன் ரணசிங்க, SF லொக்கா ,  லொக்கு மல்லி  என்ற பெயரிலும்  பிரதேசத்தில் பிரபலமான ஒருவராக இருந்துள்ளார்.

 மேலும் கடந்த மூன்று வருடங்களாக சிறையில் இருந்த நிலையிலும் வெளியில் இருந்த போதும் பலரிடம் கப்பம் பெற்றுளளார்.
 
 அனுராதபுரம், தலாவ,  தம்புத்தேகம எப்பாவல நொச்சியாகம ஆகிய பிரதேசங்களிலுள்ள வர்த்தகர்களிடம் மற்றும் செல்வந்தர்களிடம் மரண அச்சுறுத்தல் விடுத்து கோடிக்கணக்கில் கப்பம் பெற்றுள்ளார். இவரின் மரண அச்சுறுத்தலுக்கு  பயந்து எவரும் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கவில்லை என்பது மேலதிக தகவல்.
- Madawala News -
 
மேலும் இவர் நிக்கவரட்டிய, கொழும்பு, கேகாலை, சிலாபம் ஆகிய பிரதேசங்களில் உள்ள போதைப்பொருள் வர்த்தகர்ளுடன் தொடர்பு வைத்திருந்ததும், பல வர்த்தகர்களுக்கு போதை பொருள் வியாபாரத்தில்  பண மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது
 
இவற்றைத் தவிர இவருக்கு பெண்களுடன் உள்ள சகவாசம் மிக அதிகமாக காணப்பட்டு உள்ளது.
 
குறைந்தபட்சம் 25 பெண்களுடன் தகாத தொடர்பு இருந்துள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ளது
.
 
அத்துடன் இவருக்கு போதைப் பொருள் விநியோகம் செய்யும் ஒருவரின் மனைவியுடன் விருப்பத்தின் பேரில் அல்லது பலாத்காரமாக தகாத உறவை பேணி  வந்துள்ள நிலையில் அதன்போது இவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டது இந்த பெண் தொடர்பான மோதல் ஒன்றில் என தெரிவிக்கப்படுகிறது.
 
ஜிம் உடற்பயிற்சி மையங்களுக்கு சென்று அவர்களின்  கட்டணத்தை செலுத்தாமல் பலவந்தமாக அங்கு உடற்பயிற்சி செய்வதும், நகரிலுள்ள ஃபார்மசி களில் உடற்பயிற்சி மாத்திரைகள் மற்றும் பால் உட்பட பொருட்களை பலாத்காரமாக பெற்றுக் கொள்வதும் வெளிநாடு சென்றுள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று கப்பம் பெற்றுள்ளதும் மேலும் தெரிய வந்துள்ளது.
 
சென்ற வருடம் எப்பாவல மைதானத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் இவரின் அணிக்கு எதிராக நோபோல் ( NoBall ) கூறிய நடுவரின்  ஜீப் வாகனத்தை  மைதானத்துக்குள் ஓட்டிச்சன்று சேதப்படுத்தியது பொலிஸ் முறைப்பாட்டில் பதிவாகி உள்ளது.
 
கொலை செய்யப்படுவதற்கு முன் அநுராதபுரத்திற்கு 750 கிராம்  ஹெரோயின் போதைப்பொருள்  கொண்டுவர மஜிஸ்திரேட் நீதிமன்ற  சட்டத்தரணி ஒருவரின்  உதவியை  கேட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட சட்டத்தரணி இதனை மறுத்துள்ள சம்பவம் பதிவாகி உள்ளது.
 
சிறையிலிருந்த காலத்திலும் சிறைச்சாலையின் உயர் அதிகாரிகளின் உதவிகளைப் பெற்று மிகப்பெரிய அளவில் ஹெரோயின் வியாபாரத்தையும், கப்பம் பெறுவதையும்  முன்னெடுத்து சென்றுள்ளார்.
 
" உயிரிழந்த நபர் எனது வீட்டிற்கு வந்தார்.  எனது மகன் வெளிநாடு ஒன்றில் முக்கிய பதவி வகிப்பவர்.  வீட்டுக்கு வந்த நபர் நான்தான் கராத்தே வீரரை கொன்ற எஸ்.எப்.  லொக்கா .  எனக்கு ஒரு கோடி கப்பம் வேண்டும்.
ஆனால் என்னை மறுபடியும் வரச் சொல்லவோ ,  தொலைபேசி மூலமாகவோ மீண்டும் அழைக்கவோ  இடம் வைக்க வேண்டாம், அத்துடன்  பொலிசில் முறைப்பாடு செய்தால் வாழ்வது பற்றி நினைத்தும் பார்க்க வேண்டாம் என இவரால் மிரட்டப்பட்ட அனுராதபுர பிரதேச நபர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

 
இவர் கப்பம் கேட்ட வேளையில் கொரோனா பரவல், லாக்டவுன், ஊரடங்கு என்பன  ஏற்பட்டதால் பணம் வழங்கவில்லை எனவும் அவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கின்றார்.
- BY: MAHESH WIJESURYA - ANURADAPURA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.