Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல்

LTTE-launches-three-pronged-attack-in-Vavuniya-scaled.jpg

 

வவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல் – (சிறிலங்கா இராணுவத்தின் வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான கரும்புலிகள் தாக்குதல்)

வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர்.

வவுனியாவில் நகரின் தென்பகுதியில் வன்னிப் பிராந்திய இராணுவத் தலைமையகம், விமானப்படைத் தளம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருந்த ஜோசெவ் படைத்தளத்தின் மீது புலிகள் நடத்திய மூன்று முனைத் தாக்குதல் படைத் தரப்புக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

கடந்த செவ்வாயன்று (09) அதிகாலை வேளையில் புலிகளின் கரும்புலிக் கொமாண்டோக்கள் வன்னிப் படைத்தலைமையகத்தினுள் புகுந்து நடத்திய தாக்குதல், அதற்குத் துணையாக புலிகளின் வான்படை நடத்திய குண்டுவீச்சு, கிட்டு பீரங்கிப் படையணி நடத்திய அகோர ஆட்டிலறித் தாக்குதல் என்பன வவுனியாவையே கிலிகொள்ள வைத்தது.

திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிலவு மறைந்துவிட இருள் கவ்விக் கொண்டது. அந்த இருளோடு இருளாக கரும்புலிக் கொமாண்டோ அணியொன்று வவுனியா நகருக்குத் தென்புறமாக இருந்த மறைவிடங்களில் இருந்து புறப்படத் தயாரானது.

விமானப்படையின் சீருடை, தலையில் விசேட படைப்பிரிவு கொமாண்டோக்கள் கட்டுவது போன்று கறுப்புத்துணி கட்டிக் கொண்டு இலங்கை விமானப்படையின் ரோந்துக்காவல் அணி போன்று பதுங்கிப் பதுங்கி கரும்புலிக் கொமாண்டோக்கள் நகரத் தொடங்கினர்.

வன்னிப் படைத்தலைமையகமும், விமானப் படைத் தளமும் அருகருகாக ஒரே வேலியால் பிரிக்கப்பட்டு நடுவே ஒரு வீதி மட்டும் இருந்தது. அந்த வீதியும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டிருந்தது. இந்தத் தளத்தின் தென்பகுதி ஈரற்பெரியகுளத்தை அண்டிய காடுகள் சார்ந்த பிரதேசமாகும்.

இந்த தென்புற வேலியைக் கடந்து வன்னிப்படைத் தலைமையகத்தினுன் கரும்புலிக் கொமாண்டோக்கள் இரகசியமாகப் பிரவேசித்தனர். அதிகாலை 3.05 மணியளவில் செய்மதித் தொலைபேசி ஊடாக வன்னியில் இருந்த புலிகளின் விசேட நடவடிக்கைப் பணியகம் ஒன்றிலிருந்து கிடைத்த கட்டளையை அடுத்து கரும்புலிக் கொமாண்டோக்கள் தாக்குதலை ஆரம்பித்தனர்.

வன்னிப் படைத் தலைமையக வளாகத்திலேயே விசேட படைப்பிரிவின் பிரிகேட் தலைமையகமும் அமைந்துள்ளது. அதைக் கடந்து சென்றே விமானப் படைத்தளத்தினுள் நுழைய வேண்டியிருந்தது. விசேட படைப்பிரிவுத் தலைமையகத்துக்கும் விமானப்படைத் தளத் துக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 200 மீற்றர் களேயாகும்.

உள்ளே நுழைந்த புலிகளின் பிரதான இலக்காக இருந்தது வன்னிப் படைத்தலைமையகத்தின் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை கோபுரம், விமானப் படைத்தளத்தில் இருந்த “இந்திரா’ ரகத்தைச் சேர்ந்த இரு பரிமாண ராடர் கண்காணிப்பு நிலையம், தொலைத்தொடர்பு தொழில்நுட்ப ஆய்வு நிலையம், விமான எதிர்ப்பு பீரங்கி நிலைகள் என்பனவேயாகும்.

வவுனியா விமானப்படைத்தளத்தில் இரவில் விமானங்கள் எதுவும் நிறுத்தி வைக்கப்பட்டி ருப்பதில்லை.

அது புலிகளுக்கும் நன்குதெரிந்திருக்கும்.கரும்புலிஅணி விசேட படைப்பிவுத் தலைமையகத்தைக் கடந்தே விமானப்படைத் தளத்தினுள் பிரவேசிக்க வேண்டியிருந்தது. ஆனால் விசேட படைப் பிரிவு கொமாண்டோக்கள் உயர்ந்த பட்ச விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

சண்டையைத் தவிர்த்துக் கொண்டு விமானப் படைத்தளத்தினுள் செல்வது சாத்தியமான விடயமாக இருக்காததால் விசேட படைப்பிரிவு கொமாண்டோக்களுடன் கரும்புலிக் கொமாண்டோக்கள் சண்டைøய தொடக்கினர்.

விமானப்படைத்தளத்தின் எல்லை வேலியை சண்டையிட்டபடியே கரும்புலிகள் நெருங்கினர். அப்போது படையினரின் கவனத்தைத் திசை திருப்பி கரும்புலிகளுக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும் நோக்கில் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியும் தாக்குதலை ஆரம்பித்தது.

ஓமந்தைக்கு அப்பால் உள்ள புளியங்குளம், சேமமடுப் பகுதிகளில் மூன்று வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்பட்ட புலிகளின் 130மி.மீ ஆட்டிலறிகள் சரமாரியாகக் குண்டுகளைப் பொழிய ஆரம்பித்தன. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கரும்புலிகளில் சிலர் விமானப்படைத்தளத்தை நெருங்கிச் சென்றனர்.

கரும்புலிக் கொமாண்டோக்களில் ஒருவர் எம்.பி. எம்.ஜி. ரக இயந்திரத் துப்பாக்கியையும், இருவர் ஆர்.பி.ஜி.களையும், ஒருவர் 40மி.மீ கிரனேட் லோஞ்சரையும், ஆறு பேர் T56 துப்பாக்கிகளையும் வைத்திருந்தனர். அதைவிட கண்ணிவெடிப் பிரதேசத்தைக் கடந்து செல்லவும் தடைகளை உடைக்கவும் பெங்களூர் டொபிடோக்களும் அவர்களிடம் இருந்தன.

விமானப்படைத் தளத்தின் எல்லையை அடைந்த கரும்புலிகளுக்கு அங்கிருந்து மேலும் எதிர்ப்புக் கிளம்பியது.

இதற்கிடையில் எல்லை வேலியில் இருந்தவாறே கரும்புலி ஒருவர் தொலைத்தொடர்பு கோபுரத்தை இலக்கு வைத்து ஆர்.பி.ஜியால் தாக்குதல் நடத்தினார். மற்றொருவர் விமானப்படையின் கட்டுப்பாட்டுக் கோபுரத்தைக் குறிவைத்து தாக்கினார். அதனைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு தொழில்நுட்ப ஆய்வுப் நிலையம், “இந்திரா’ ராடர் கண்காணிப்பு நிலையம் ஆகியவற்றின் மீதும் ஆர்.பி.ஜி, கிரனேட் லோஞ்சர்களால் கரும்புலிகள் தாக்குதலை நடத்தினர். அத்துடன் எம்.பி.எம்.ஜி. துப்பாக்கி முக்கிய இலக்குகளைக் குறிவைத்து அவ்வப்போது தாக்கியதுடன் விசேட படைப்பிரிவு மற்றும் விமானப் படையினரின் எதிர்ப்பையும் சமாளித்துக் கொண்டிருந்தது.

அப்போது வன்னிப் படைத் தலைமையகம் அதியுச்ச விழிப்பு நிலையில் இருந்ததுடன், சிறப்புப் பயிற்சி பெற்ற விசேட படைப்பிரிவு கொமாண்டோக்களே பாதுகாப்புக்காக நிறுத் தப்பட்டிருந்தனர். இந்த சண்டை ஆரம்பித்ததுமே குறைந்த எண்ணிக்கையான கரும்புலிகளை அவர்கள் சுற்றிவளைத்து மடக்க எத்தனித்தனர்.

அதேவேளை கிட்டு பீரங்கிப் படையணி தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருந்த ஆட்டிலறித் தாக்குதல் உச்சமடையத் தொடங்கியது.

படையினரிடமுள்ள ஆட்டிலறிகளின் இருப்பிடத்தைக் கண்டறியும் ராடர்களின் கண்களில் மண்ணைத் தூவும் நோக்கில் புலிகள் தமது ஆட்டிலறிகளை அடிக்கடி இடம்மாற்றிக் கொண்டு தாக்குதலைத் தொடர்ந்தனர்.

இந்தநிலையில் புலிகளின் மூன்றாவது களம் திறக்கப்பட்டது. சரியாக 3.26 மணியளவில் முல்லைத்தீவு வான்பரப்பில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்றின் பறப்பை வவுனியா ராடர் நிலையத்தின் கண்காணிப்புக் கருவி பதிவு செய்தது. அது புலிகளின் விமானம்தான் என்பதை ராடர் நிலைய அதிகாரிகள் உடனடியாகவே புரிந்து கொண்டனர். ஏற்கனவே அனுராதபுர விமானப்படைத் தளம் மீதான தாக்குதலின் போதும் புலிகள் விமானத் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

வவுனியா விமானப் படைத்தளத்தின் நடவடிக்கை பணியகத்தில் அதன் பொறுப்பதிகாரியான ஸ்குவாட் ரன் லீடர் சஞ்சய அதிகாரி கடமையில் இருந்தார். ராடர் நிலையத்தில் இருந்த அதிகாரிகள் புலிகளின் விமானம் பறப்பது பற்றிய தகவலை அவருக்குத் தெரியப்படுத்தினர். அவர் உடனடியாக விமானப்படைத் தலைமையகத்தின் நடவடிக்கைத் தலைமையகத்தில் இருந்த பணிப்பாளர் எயர் மார்ஷல் ஹர்ஷா அபேவிக்கிரமவுக்கு அறிவித்தார்.

இந்தநிலையில் கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தை உசார்படுத்திய விமானப்படை நடவடிக்கை பணியகம், நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள கேந்திர நிலைகளை உசார்படுத்தியது. இந்த நிலையில் அதிகாலை 3.31 மணியளவில் மற்றொரு விமானத்தின் பறப்பும் வவுனியாவில் இருந்த ராடரில் பதிவானது.

அடுத்த 5 நிமிடங்களில் புலிகளின் விமானங்கள் வவுனியா வான்பரப்பைத் தொட்டன.

அப்போது வவுனியா மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் இருந்த இராணுவ, விமானப்படைத் தளங்கள், முகாம்களில் இருந்த அனைத்துப் பீரங்கிகள், துப்பாக்கிகளும் வானை நோக்கி குண்டுகளைக் கக்கின.

படையினரின் குண்டுகள் புலிகளின் விமானங்களைத் தேடி, வானத்தில் கோடு கிழித்துக் கொண்டிருக்க, புலிகளின் விமானங்கள் தாக்க வேண்டிய படைநிலைகளை இனங்கண்டு அடுத்தடுத்து நான்கு குண்டுகளை வீசி விட்டுச் சென்றன.

வீசப்பட்ட குண்டுகளில் ஒன்று வன்னிப் படைத் தலைமையகத்தின், விசேட படைப்பிரிவின் பிரிகேட் தளபதி கேணல் நிர்மல் தர்மரட்ணவின் வசிப்பிடத்தில் விழுந்தது. அப்போது அவர் விடுமுறையில் இருந்தார். அத்துடன் அந்தக் குண்டு ஈரமாகக் கிடந்த நிலத்தில் புதையுண்டு போனதால் வெடிக்கவில்லை.

புலிகள் விமானத்தில் இருந்து வீசிய குண்டுகள் அனைத்தும் வன்னிப்படைத் தலைமையகத்தின் மைய ப்பகுதிகளிலேயே விழுந்தன.

ஒரு குண்டு “இந்திரா’ ராடர் கண்காணிப்பு நிலையத்தை சேதப்படுத்தியது. மற்றொன்று அதிகாரிகள் விடுதியையும் உணவகப் பகுதியையும் சேதப்படுத்தியது. மற்றொன்று வன்னிப்படைத் தலைமையகக் கட்டடத்தில் விழுந்து வெடித்தது புலிகளின் விமானங்கள் 6 நிமிடங்கள் வவுனியா வைக் கலக்கிவிட்டு வேறு வேறு திசைகளில் பிரிந்து சென்றன. ஒன்று இரணைமடுப் பக்கமாகச் சென்றது. மற்றது முல்லைத்தீவுப் பக்கமாகச் சென்றது.

இந்தநிலையில் புலிகளின் வான் தாக்குதலைச் சமாளிக்கும் நோக்கில் 24 மணிநேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இருந்து, புலிகளின் விமானங்களை இடைமறித்துத் தாக்கும் விமானங்களை அனுப்பிவைக்குமாறு விமானப்படையின் நடவடிக்கைப் பணிப்பாளர் எயார் மார்ஷல் ஹர்ஷா அபேவிக்கிரம 5 ஆவது ஸ்குவாட்ரனின் கட்டளை அதிகாரிக்குப் பணித்தார்.

விமானப்படையின் 5ஆவது ஸ்குவாட்ரனில் தான் சீனத்தயாரிப்பு (F-7-G) எவ்.7ஜி ரகத்தைச் சேர்ந்த இடைமறிப்பு போர் விமானங்கள் இருந்தன.

புலிகளின் விமானங்கள் ராடரில் தெரிந்த 8ஆவது நிமிடத்தில் அதிகாலை 3.34 மணியளவில (F-7-G) இடைமறிப்பு போர் விமானங்கள் மின்னல் வேகத்தில் புறப்பட்டுச் சென்றன.

வன்னி வான்பரப்பை எட்டிய F-7 ஜெட் போர் விமானங்கள் சுற்றிச் சுழன்று வட்டமடித்து புலிகளின் விமானங்களைத் தேடின.

அதிகாலை 4 மணியளவில் இந்த விமானங்கள் புதுக்குடியிருப்புப் பகுதிகளிலும் இரணைமடுவிலும் தாக்குல்களை நடத்தின. கூடவே தரைத்தாக்குதலுக்கு 12ஆவது ஸ்குவாட்ரனைச் சேர்ந்த மிக்27  (MiG-27) ஜெட் போர் விமானங்களும் பயன்படுத்தப்பட்டன.

விமானப்படையின் எவ்7 விமானம் ஒன்றின் விமானி முல்லைத்தீவுக்கு மேற்காக முள்ளியவளையை அண்டிய வான்பரப்பில் சென்று கொண்டிருந்த புலிகளின் விமானத்தை அடையாளம் கண்டு, வானில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகணையைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும், அதிகாலை 3.56 மணியளவில் புலிகளின் விமானம் தீப்பிளம்பாக முள்ளியவளைக் காட்டுப்பகுதியில் விழுந்ததை விமானி பார்த்தாகவும் படைத்தரப்பு கூறுகிறது.

அத்துடன் மணலாறு களமுனையில் உள்ள 59ஆவது டிவிசன் துருப்பினரும் சிவப்பும், மஞ்சளுமான தீப்பிளம்பு ஒன்று வானத்தில் இருந்து விழுவதை அவதானித்ததாக படத்தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் புலிகள் தமது விமானங்கள் தாக்குதல் நடத்தி விட்டுப் பாதுகாப்பாகத் தளம் திரும்பி விட்டதாக அறிவித்துள்ளனர். இதற்கிடையே புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தி முடித்த பின்னரும் வன்னிப்படைத் தலைமையகத்தின் மையப் பகுதிகளில் சண்டைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. ஆட்டிலறி ஷெல்கள் தொடர்ச்சியாக வந்து விழுந்து கொண்டிருந்தன. பெரும்பாலான ஷெல்கள் வன்னிப்படைத் தலைமையகப் பிரதேசத்தில் உள்ள கட்டடங்கள், படைநிலைகளில் விழுந்து சேதங்களை ஏற்படுத்தின. விடிகாலை 5.30 மணி வரையிலும் இந்தத் தாக்குதல் நீடித்தது.

புலிகளின் ஆட்டிலறித் தாக்குதலை முறியடிக்க படையினரும் பல்குழல் பீரங்கிகள் மற்றும் 130மி.மீ, 122மி.மீ, 152மி.மீ ஆட்டிலறிகளைப் பயன்படுத்தி ஓமந்தைக்கு வடக்காக உள்ள பிரதேசத்தின் மீது செறிவான தாக்குதல்களை மேற்கொண்டனர்.

ஆறு கரும்புலிகள் படையினருடனான சண்டைகளின் போதும், நால்வர் தமது உடலில் பொருத்தியிருந்த “சார்ஜர்’ எனப்படும் குண்டுகளை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தியும் உயிரிழந்த பின்னரே மோதல்கள் முடிவுக்கு வந்தன.

அத்துடன் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதல்களும் முடிவுக்கு வர, வன்னிப் படைத்தலைமையகப் பிர தேசத்துக்குள் தேடுதல்களை ஆரம்பிக்க வன்னிப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெய சூரிய உத்தரவிட்டார்.

வவுனியா நகரில் எங்கும் பீதி தொற்றிக் கொண்டிருந்தது. பொதுமக்களின் நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு தாக்குதலுக்குச் சென்ற புலிகள் எவரும் தப்பிச் செல்லாத வகையில் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் தேடுதல்களின் போது கரும்புலிகள் 10 பேரின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவர்களின் ஆயுதங்களும் பெரும்பாலும் ரவைகள், குண்டுகள் தீர்ந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டன.

சில புலிகள் தப்பிச் சென்றிருக்கலாம் என்று படைத்தரப்பு சந்தேகிக்கிறது. முன்னர் 11 புலிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகப் படைத்தரப்பால் கூறப்பட்டது. ஆனால் பின்னர் 10 சடலங்களே புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. தாக்குதல்களில் கொல்லப்பட்ட பத்து கரும்புலிகளும் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் அவர்கள் பற்றிய விபரங்களைப் புலிகள் அன்று நண்பகலே வெளியிட்டிருந்தனர்.

லெப். கேணல் மதியழகி தலைமையிலான 5 பெண் கரும்புலிகளும், லெப். கேணல் விநோதன் தலைமையிலான 5 ஆண் கரும்புலிகளும் இந்தத் தாக்குதலில் பங்கேற்றிருந்தனர்.

கரும்புலிகளுக்கு வழிகாட்டிச் சென்ற வேவுப் புலிகள் சிலர் தாக்குதலை அடுத்துத் தப்பியிருக்கும் வாய்ப்புகளை இராணுவத்தரப்பு நிராகரிக்கவில்லை. தாக்குதலின் பின்னர் மீட்கப்பட்ட பொருட்களில் 9 மி.மீ பிஸ்டல் ரவைகளும் அடங்கியிருந்தன. ஆனால் கரும்புலிகள் எவரிடத்தில் இருந்தும் பிஸ்டல் துப்பாக்கிகளோ அல்லது இந்த ரவைகள் பயன்படுத்தக் கூடிய வேறு எந்தத் துப்பாக் கிகளோ கைப்பற்றப்படவில்லை.

தாக்குதலுக்குப் பயன்படுத்தாத எந்த ஆயுதத்துக்கும் புலிகள் ரவைகளைக் கொண்டு வந்திருக்க மாட்டார்கள் என்பதால் சில வேவுப் புலிகள் தப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் விமானப்படையின் ராடர் கண்காணிப்பு நிலையம், தொலைத்தொடர்பு கோபுரம், விமான எதிர்ப்பு ஆயுதம், தொலைத்தொடர்பு தொழில் நுட்ப ஆய்வகம், வெடிபொருள் களஞ்சியங்கள் என்பன அழிக்கப்பட்டதாகவும், 20இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு, பலர் படுகாயமடைந்திருப்ப தாகவும் புலிகள் அறிவித்தனர்.

அதேவேளை ராடர் நிலையம் சிறிய சேதத்துடன் தப்பிவிட்டதாக ஒரு சந்தர்ப்பத்திலும், எந்த சேதமும் அடையவில்லை என்று இன்னொரு சந்தர்ப்பத்திலும் படைத்தரப்பு தகவல்களை வெளியிட்டது.

அதேவேளை புலிகளின் ஆட்டிலறித் தாக்குதலில் தலை மையகக் கட்டடங்கள் பலவும் சேதமுற்றதா கவும் 12 இராணுவத்தினரும், 1 பொலிஸ் கான்ஸ்டபிளும் கொல்லப்பட்டதுடன், 15 படையினரும், 9 பொலிஸாரும், 7 விமானப்படையினரும் காயமடைந்தனர் என்றும் படைத்தலைமை அறிவித்துள்ளது.

புலிகள் இந்தத் தாக்குதலின்போது 80இற்கும் அதிகமான 130மி.மீ ஆட்டிலறி ஷெல்களை ஏவியதாகப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. புலிகள் 130மி.மீ ஆட்டிலறி ஷெல்களை பெருந்தொகையில் ஏவியிருப்பது அவர்களிடம் போதியளவு ஷெல்கள் கையிருப்பில் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.

10 கரும்புலிகளை இழந்து, இந்தத் தாக்குதலின் மூலம் படைத்தரப்புக்கு புலிகள் ஏற்படுத்திய பௌதிக சேதங்களின் அளவு குறித்து குறைத்தே மதிப்பிடப்படுகிறது. இருப்பினும் படைத்தரப்புக்கு ஏற்படுத்தியிருக்கின்ற நெருக்கடி மற்றும் அழுத்தங்களின் அளவு அதிகமானது.

புலிகள் வலுவிழந்து பலமிழந்து போய்விட்டனர். அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறி வந்தவர்களுக்கு மூன்று வழிகளில் புலிகள் நடத்திய தாக்குதல் பல்வேறு நெருக்கடிகளையும் கொடுத்திருக்கிறது.

“கிளிநொச்சியை நெருங்கிவிட்டதாகக் கூறுகிறீர்கள். ஆனால் புலிகள் பீரங்கி மூலமும், தரைவழியாகவும், வான்வழியாகவும் வந்து வவுனியாவில் தாக்கி ராடரை அழித்துள்ளனர்.

படைத்தளத்தை நாசப்படுத்தியுள்ளனர். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று அன்றைய தினமே ஐ.தே.க.வினர் நாடாளுமன்றத் தில் கேள்வி எழுப்பும் அளவுக்குப் புலிகளின் தாக்குதல் தாக்கம் நிறைந்ததாக இருந்தது புலிகள் வவுனியாவுக்குள் வந்து எப்படித் தாக்குதல் நடத்தினர் என்ற விசாரணையும் ராடர் நிலையத்தின் இருப்பிடத்தை எப்படி அறிந்து கொண்டு உள்ளே வந்தனர் என்பது குறித்தும் இப்போது வெவ்வேறு மட்டங்களில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

நெடுங்கேணி வெடிவைத்தகல்லு வழியாக மணலாறின் யக்கவௌ பிரதேசத்துக்குள் ஊடுருவி வவுனியாவின் ஆசிக்குளம், ஈரப்பெரியகுளம், மூன்றுமுறிப்பு, சமளங்குளம் வழியாகப் புலிகள் வந்திருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுந்துள்ளன. என்னதான் படைத்தரப்பு இந்தத் தாக்குதலை முறியடித்து விட்டதாகக் கூறினாலும், புலிகள் படைத்தளத்தினுள் நுழைந்த பின்னரே அது பற்றி அவர்களால் அறிந்து கொள்ள முடிந் திருக்கிறது. இது பாதுகாப்புக் குறைபாடுகளின் உச்சமாகும்.

வன்னியில் இருந்து அனுப்பப்பட்ட கரும்புலிகள் அணி எந்தப் பிரச்சினையும் இன்றி வன்னிப் படைத் தலைமையகத்தினுள் நுழைகின்ற அளவுக்குப் படைத் தரப்பின் பாதுகாப்பு பலவீனமாக இருந்திருக்கிறது எனச் சொல்வதைவிட, புலிகள் மிகவும் துல்லியமான வேவுத்தகவல்களைத் திரட்டி பாதுகாப்பாக ஊடுருவியிருக்கிறார்கள் என்று சொல்வதே பொருத்தம் வன்னிக் கட்டளை மையத் தாக்குதலில் ராடார் நிலையம், ஆயுதக் களஞ்சியம், தொலைத்தொடர்பு கோபுரம் தாக்கியழிப்பு வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பியதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துளளனர்

வவுனியாவில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் வன்னிக் கட்டளை மையத்தில் அமைந்துள்ள ராடார் நிலையம் தமிழீழ விடுதலைப் புலிகளால் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.05 மணியளவில் வவுனியா கட்டளைப் பீடத்தினுள் ஊடுருவிய தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு கரும்புலி அணி ஒன்று ராடர் நிலையத்தை தாக்கிய அழித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கரும்புலி சிறப்பு அணியினர் வவுனியாவில் அமைந்துள்ள வன்னிக் கட்டளை மையம் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளனர். கரும்புலி அணியினருக்கு ஆதரவாக கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரால் செறிவான ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அத்துடன் விடுதலைப் புலிகளின் வான்படையினர் கட்டளை மையம் மீது துல்லியமாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

வன்னிக் கட்டளை மையத்தில் அமைந்துள்ள தொலைத் தொடர்பு கோபுரம், ஆயுதக்களஞ்சியம், தொழில்நுட்ப ஆய்வகம், வானூர்தி எதிர்ப்பு ஆயுதமும் முற்றாக கரும்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டன.

இதன்போது சிறீலங்காப் படையினர் தரப்பில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட வானூர்திகள் பாதுகாப்பாக தளம்திரும்பியதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துளளனர். வன்னிக் கட்டளை மையம் மீது வான் தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்பிய இரு வானூர்திகளும் பத்திரமாக தளம் திரும்பியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

அன்றைய சமகால ஆய்விலிருந்து…
எழுத்துருவாக்கம்:சுபத்ரா.

 

https://thesakkatru.com/ltte-launches-three-pronged-attack-in-vavuniya/

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!  

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலி லெப். கேணல் வினோதன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

spacer.png

கரும்புலி லெப். கேணல் வினோதன், கரும்புலி லெப். கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி கப்டன் எழிலகன், கரும்புலி கப்டன் கனிமதி, கரும்புலி கப்டன் நிமலன், கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ், கரும்புலி கப்டன் அகிலன், கரும்புலி கப்டன் முத்துநகை ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கருவி (விமான ராடர்) மீதும் 09.09.2008 அன்று மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் மும்முனை (கரும்புலித்) தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டகரும்புலி லெப். கேணல் வினோதன், கரும்புலி லெப். கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி கப்டன் எழிலகன், கரும்புலி கப்டன் கனிமதி, கரும்புலி கப்டன் நிமலன், கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ், கரும்புலி கப்டன் அகிலன், கரும்புலி கப்டன் முத்துநகை ஆகிய கரும்புலி மாவீரர்களின் 13 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

v7eZLaN9flBtSmQu1rrW.jpg

 

வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத் தாக்குதலில் சிறப்பாக செயற்பட்ட படையணிப் தளபதிகளும், பொறுப்பாளரும், போராளிகளும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் பாராட்டுப் பெற்று பல விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தேசப்புயல்களின் நினைவில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்”

QlEw6WGF2fW6msf3olI4.jpg

 

 

RguXEjacYSGd25h3aMZb.jpg

 

“வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுடன் புயலாக வீசிய தேசத்தின் புயல்கள்”

 

5oqjY2DqKmcbMrITBULo.jpg

 

 

Wb6wRXLPpwCteCfHQ5AT.jpg

 

 

Wgy3Jkhle6sgfDAes4SB.jpg

 

 

qxBYks6JMBDFU2RzmCmq.jpg

 

 

zkvsEfObCAYWn9mjfaTa.jpg

 

nYYc3mMmwK1pRlLGBSTE.jpg

 

 

efGLmrcUPrTMtMCbLTzb.jpg

 

 

Tlo1ItECxfhNGP6IRMzM.jpg

 

 

K1XF0p6Fit5rc2u21PD3.jpg

 

 

mahtJGFdP4K8enQcOjBd.jpg

https://www.thaarakam.com/news/c29a5345-f250-40f8-a456-beea4b7acfe6

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.