Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு இடமளியுங்கள் " கஜேந்திரகுமார் கொண்டுவந்த விசேட கூற்றை சபாநாயகர் நிராகரித்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு இடமளிக்க வேண்டும் என்ற காரணிகளை உள்ளடக்கி அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொண்டுவந்த நிலையியற் கட்டளை 27/2இன் கீழான விசேட கூற்றை சபாநாயகர் சபையில் நிராகரித்ததால் சபையில் கடும் சர்ச்சை எழுந்தது. 

சபாநாயகரின் தீர்ப்பே இறுதியானது என ஆளும் கட்சியினர் வாதம் நடத்த, சபாநாயகர் சபையை தவறாக வழிநடத்தி சர்வாதிகாரியாக நடந்துகொள்கின்றார் என எதிர்க்கட்சிகள் சபையில் சீறிப்பாய்ந்தனர்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் முடிந்த பின்னர் கட்சி தலைவர் கொண்டுவரும் 27/2 இன் கீழான விசேட கூற்றை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்தார். 

அதனை தொடர்ந்து சபாநாயகர் விசேட அறிவிப்பொன்றை சபையில் முன்வைத்தார். இதில் " கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சி தலைவர் என்ற ரீதியில் சபையில் முன்வைத்துள்ள நிலையியல் கட்டளை 27/2 கீழ் விசேட கூற்றை என்னால் அனுமதிக்க முடியாது என்பதை அறிவிக்கிறேன். ஏனென்றால் இதில் மூன்றாம் பந்தியில் சில வாக்கியங்கள் நீதிமன்ற வழக்குடன்  தொடர்புபட்ட காரணிகள் என்பதனால் நிலையியல் கட்டளை 36 (எப்)இற்கு அமைய என்னால் இதனை சபையில் வாசிக்க அனுமதிக்க முடியாது. 

அதுமட்டுமல்ல பாராளுமன்ற நடைமுறை நாட்களில் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சகல கட்சி தலைவர்களும்   நிலையியல் கட்டளை 27/2 இற்கு அமைய  ஒரு நாளில் ஒரேயொரு சமூக, அவசரகால அல்லது முக்கியத்துவம் என கருதும் கேள்வியை மாத்திரமே கொண்டுவர முடியும் என்ற வரையறையும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்ற அறிவிப்பை அறியத்தருகின்றேன்" என்ற அறிவித்தலை விடுத்தார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய தேசிய மக்கள் சக்தி ( ஜே.வி.பி) யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க நீங்கள் விடுத்த அறிவிப்பு தொடர்பில் எமக்கு உடன்பாடுகள் இல்லை. நாம் நீண்ட காலமாக பாராளுமன்ற பிரதிநிதயாக கடமையாற்றியுள்ளோம். கட்சி தலைவர் ஒருவருக்கு விசேட கேள்விகளை எழுப்பும் வாய்ப்பு இதுவரை காலமாக நடைமுறையில் இருந்துள்ளது. சபையில் இருக்கும் பிரதமரும் இதனை ஏற்றுக்கொள்வார். குறிப்பாக நிலையியற்கட்டளைக்கு அமைய இந்த உரிமை கட்சி தலைவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் எமக்குள்ள இந்த உரிமையை எம்முடன் எந்தவித கலந்துரையாடலும் இல்லாது, குறைந்த பட்சம் கட்சி தலைவர்களுடன் கூட பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எந்தவொரு செயற்படும் இல்லாது தன்னிச்சையாக தீர்மானம் எடுத்துள்ளதை அடுத்து எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம். ஆளும் கட்சியினர் வலது பக்கம் அமர்ந்துள்ளனர், எதிர்க்கட்சியினர் இடதுபக்கம் அமர்கின்றனர். சபாநாயகர் ஆசனம் இரண்டு தரப்பிற்கும் நடுவில் உள்ளது. ஆனால் சபாநாயகர் நீங்களோ வலது பக்கம் சாய்ந்தே அமர்ந்துள்ளீர்கள். இந்த கலாசாரத்தை நீங்கள் நிறுத்துங்கள். கட்சி தலைவர் ஒருவருக்கு உள்ள உரிமையை நீங்கள் தட்டிப்பறிக்க வேண்டாம். ஒன்பதாவது பாராளுமன்றம் கூடி மூன்று அமர்வுகள் முடிந்துள்ளது, இதுவரையில் நான் 27/2 இன் கீழ் கேள்விகள் எதனையும் எழுப்பவில்லை. அவ்வாறு கேள்வி எழுப்பவில்லை என்பதற்காக எனக்கு அந்த உரிமை இல்லை என்று அர்த்தப்படாது. நாம் கேட்காது இருப்பது என்பதும் எமக்குள்ள உரிமை என்பதும் வெவ்வேறு காரணிகள். எனவே கட்சி தலைவர்களிடம் இது குறித்து தெரிவிக்காது சர்வாதிகாரமாக செயற்பட வேண்டாம். நாளை கட்சி தலைவர் கூட்டத்தில் இது குறித்து பேசலாம் என கூறினார்.

https://www.virakesari.lk/article/90674

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலி செலுத்துவதை தடுப்பது கொடுமையிலும் கொடுமை- நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்

எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை பின்வருமாறு,

நிதி ஆணைக்குழுவின் அறிக்கை பரிசீலிக்கப்படும் போது மாகாண சபைக்கு உரியதான சில விடயங்கள் உங்கள் யாவரதும் கவனத்தில் நிலை நிறுத்தப்பட வேண்டியுள்ளது.

அரசியல் யாப்பின் உறுப்புரை 154 R(3)ன் கீழ் மாகாணங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிதி ஆணைக்குழுவின் சிபார்சின் பேரில் நிதி மாகாணத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அது நடப்பதில்லை. நான் வடமாகாண முதலமைச்சராக இருந்த போது எமது கணிப்பின் அடிப்படையில் 12000 மில்லியன் நிதி 2014ம் ஆண்டு மாகாண செலவுகளுக்காக வேண்டியிருந்தது.

எவ்வெவற்றிற்காக அந்தப் பணம் தேவையாக இருந்தது என்பது பற்றி நாம் விலாவாரியாகக் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் எமக்குக் கிடைத்ததோ கிட்டத்தட்ட 1650 மில்லியன் மட்டுமே.

அந்தத் தொகையை மிகக் கவனமாக நாம் ஒரு சதமேனும் வீணாக்காது செலவு செய்தோம். ஆனால் அதே பாதீட்டின் மூலம் அரசாங்கம் சுமார் பத்தாயிரம் மில்லியன் பணத்தை வெவ்வேறு மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கியிருந்தது. அவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டு பலவித தடைகளைத் தாண்டி வடமாகாண அரசாங்க அதிபருக்கு அந்த நிதி வந்த போது வருடத்தின் பாதிக் காலத்திற்கு மேல் முடிந்திருந்தது.

அரசாங்க அதிபர்கள் அதாவது மாவட்ட செயலாளர்கள் அந்தப் பணத்தை மக்கள் சார்பாக நேரம்மின்மையால் பாவிக்க முடியாததின் காரணமாக பெரும்பான்மைப் பணம் திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் எமக்குத் தரப்பட்ட 1650 மில்லியன் பணமோ உரியவாறு ஒரு சதம் மிச்சமில்லாமல் செலவு செய்யப்பட்டது.

அவ்வாறு சிறந்த முறையில் நிதி நிர்வாகம் நடந்ததால்த் தான் 2016ம் ஆண்டில் நாட்டின் 850க்கும் மேலான அமைச்சுக்கள், திணைக்களங்கள் அனைத்தினுள்ளும் முதலாவதாக எமது வடமாகாண முதலமைச்சரின் அமைச்சு பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆகவே பணத்தைத் திருப்பி அனுப்பியவர்கள் மாவட்ட செயலர்களேயன்றி நாமல்ல.

ஆனால் அரசாங்கம் சொல்லித் திரிந்தது என்ன? வடக்கு மாகாணசபை பணத்தைத் திருப்பி அனுப்பி விட்டது என்று வாய் கூசாமல் பொய் கூறினார்கள். வடக்கு மாகாணசபை வேறு வடக்கு மாகாணம் வேறு. அவை வெவ்வேறு நிர்வாகத் தலைமைத்துவங்களின் கீழ் கடமையாற்றுகின்றார்கள் என்பதைத் தெரிந்தும் தமது அமைச்சர்களினதும் தமதும் குற்றங்களை மறைக்க எம்மீது பழி சுமத்தினார்கள்.

நான் என்ன கூறவருகின்றேன் என்றால் உறுப்புரை 154 R(3) ஆனது மாகாண தேவைகளைப் பூர்த்தி செய்ய பணத்தை மாகாணங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறுகின்றது. அதை விட்டு மத்திய அமைச்சர்களுக்குப் பெருவாரியான பணத்தைப் பெற்றுக்கொடுப்பது எதற்காக? பின்னர் நீங்கள் மாகாணசபைகள் எதுவுமே செய்யவில்லை, பணத்தைத்திருப்பி அனுப்பி விட்டார்கள் என்று அப்பட்டமான பொய் கூறி ஒப்பாரி வைப்பதன் காரணம் என்ன?

உண்மையில் சட்டப்படி மத்திய அமைச்சர்களுக்கு மாகாணம் சார்பாக கொடுக்கும் பணம் அனைத்தும் மாகாண சபைகளுக்கே கையளிக்கப்பட வேண்டும். மாகாணங்களை நிர்வகிக்க வேண்டியது மாகாணத்தவரே அன்றி மத்திய அரசாங்கத்தினர் அல்ல.

வலுக்குறைந்த 13வது திருத்தச் சட்டத்தை மேலும் வலுவற்றதாகச் சித்தரிக்கவே இவ்வாறு தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்கள் நடந்து கொண்டு வந்திருக்கின்றன என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நிதி ஆணைக்குழு இதுபற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எதிர்காலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்.

அடுத்து அண்மையகால சில விடயங்கள் பற்றி இங்கு பேச வேண்டியுள்ளது.

முதலாவது எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும். சென்ற அரசாங்கம் இவ்வாறான அஞ்சலிகளைக் கண்டும் காணாதது போல் இருந்ததால்த்தான் இம்முறை மத்தியில் இருக்கும் ஒரு தேசியக் கட்சிக்கு மக்களின் வாக்குகள் கிடைத்தன. அடுத்த முறை மத்திய தேசியக் கட்சிகளை மக்கள் வெறுத்தொதுக்குவதற்காகத்தான் இவ்வாறு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றதோ நான் அறியேன். அடுத்த முறை கையூட்டுகள் இரட்டிப்பாகக் கிடைத்தாலும் மக்கள் மத்திய தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

(இப் பந்தி வரையில் தான் விக்னேஸ்வரன் அவர்களால் பாராளுமன்றத்தில் உரையாற்ற முடிந்தது. நேரம் போதாமையால் மிகுதியை ஹன்சாட்டில் உள்ளவாங்குவதற்கு அனுமதி பெறப்பட்டது)

எமது மக்களின் நியாயமான உரிமைகளை வலியுறுத்தியே தியாகி திலீபன் 30 ஆண்டுகளுக்கு முன்னர் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் இருந்து மடிந்த ஒருவரைக் கூட நினைத்து அஞ்சலி செலுத்தக் கூடாது என்று அரசாங்கம் தடை விதித்திருக்கின்றது என்றால் ஆயுதமேந்தி மடிந்தவர்களை நினைத்து அஞ்சலி செலுத்தலாம் என்று நினைக்கின்றதா? இரண்டுமே வேண்டாமென்றால் அரசாங்கம் கூறவருவது எதனை? அஹிம்சை முறையிலேயோ ஹிம்சை முறையிலேயோ தமிழ் மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது என்பதைத் தானே? மக்கள் தமது நியாயமான உரிமைகளைப் பெற எத்தனிக்கக் கூடாது என்பதைத் தானே அரசாங்கம் சொல்ல வருகின்றது? இப்பொழுதே இப்படி என்றால் 20வது திருத்தச் சட்டம் நிறைவேறினால் என்ன நடக்கப் போகின்றது என்பதை இலங்கை மக்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அடுத்து திலீபனின் அன்றைய நியாயமான கோரிக்கைகள் இன்று வரையில் நிறைவேற்றப்படவில்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். வடக்குக் கிழக்கில் திட்டமிட்ட அரச குடியேற்றங்கள் இன்றும் நடைபெற்று வருகின்றன.

தமிழ் அரசியற் கைதிகளுக்கு இன்றும் விமோசனம் கிடைக்காதிருக்கின்றது. பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. தமிழர் பிரதேசங்களில் புதிய பொலிஸ் நிலையங்களைத் திறந்து அங்கு தமிழ் பேசாதவர்களைப் பதவியில் இருத்துவது இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது.

அன்று அவர் எதற்காக ஒரு துளி நீர் கூட அருந்தாமல் 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து மடிந்தாரோ அதே கோரிக்கைகள் 30 வருடங்கள் கடந்த நிலையிலும் இன்றும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அரசாங்கம் தொடர்ந்தும் எம் மக்களைப் பயங்கரவாதிகளாகவே சித்திரிக்கப்பார்க்கின்றார்கள். ஆனால் நாம் செய்யும் அனைத்துச் செயல்களும் உலக அரசாங்கங்களினாலும் ஐ.நா. சபையாலும் கவனமாக உற்று நோக்கப்பட்டே வருகின்றன என்பதை அரசாங்கம் மறக்கக் கூடாது.

கலாநிதி பச்சலட் அவர்களின் அண்மைய கூற்று இதனை வெளிப்படுத்துகின்றது. அடக்கு முறைகளின் மூலம் எமது மக்களின் உணர்வுகளை அடக்குவது இந்த நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்குக் குந்தகமாகவே அமையும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆகவே தயவு செய்து எதிர்வரும் 26ந் திகதி எமது மக்கள் தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஏற்படுத்தியுள்ள தடைகள் அனைத்தையும் நீக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

மூன்றாவதாக திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அவர்கள் கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நினைக்கின்றேன். முன்னர் எப்போதும் இல்லாத வகையில் தமிழ் மக்களின் போராட்டமும் வரலாறும் தமிழ் மக்களினாலேயே கொச்சபை;படுத்தப்படும் புதிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சர் தேவானந்தா பாவிக்கப்படுகின்றார் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

எதற்காக திலீபன் சம்பந்தமாக கௌரவ அமைச்சர் தேவானந்தா அவர்கள் முறையற்ற விமர்சனங்களில் ஈடுபட்டு வருகின்றார் என்பது எமக்குப் புரியவில்லை. சூளை மேட்டுக் கொலை பற்றியோ ஊர்காவற்றுறை, நெடுந்தீவு போன்ற தீவுப்பகுதிகளில் அவரின் கட்சி இயற்றிய அட்டகாசச் செயற்பாடுகள் பற்றியோ, மகேஸ்வரன் கொலை பற்றியோ, அற்புதன், நிமலராஜன் போன்ற பத்திரிகையாளர்கள் கொலை பற்றியோ எவரும் கூறாதிருக்க ஏன் திலீபன் பற்றியும் என்னைப் பற்றியும் மிகுந்த கரிசனை காட்டுகின்றார் அவர் என்பது புரியவில்லை.

அத்துடன் மாகாணசபையின் அதிகாரங்கள் தொடர்பில் பொருத்தம் அற்றதும் விளக்கமற்றதுமான கருத்துக்களைக் கூறுவதையும் அமைச்சர் டக்ளஸ் அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு எமது மக்களுக்கான உரிமைகள் பற்றியோ, தேவையான அதிகாரங்கள் பற்றியோ என்ன விளங்கப் போகின்றது? கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்று கேட்டு எனது பேச்சை இத்துடன் நிறைவு செய்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

http://www.ilakku.org/அஞ்சலி-செலுத்துவதை-தடை-ச/

 

 

Edited by உடையார்
பிழையான இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத்தில் திலீபன் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளை அனுஷ்டிப்பதற்கு அரசாங்கம் பொலீசார் ஊடாக தடைசெய்துள்ளமையானது, ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் நினைவு கூறும் உரிமையை மறுக்கும் செயல் என்பதனை சுட்டிக்காட்டி, குறித்த நினைவேந்தலை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தும்  கோரிக்கை ஒன்றை இன்று நாடாளுமன்றில் வாசிக்கப்படுவதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் நேற்றய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற நிலையியல், கட்டளைச்சட்டம் 27 (2) இன் கீழ் அவசர முக்கியத்துவம் மிக்க பொது விடயங்கள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் உரையாற்ற முடியும். அந்த வகையில் தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவு கூர அனுமதி மறுத்திருப்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் உணர்வுகளை புண்படுத்தும் செயலும் உரிமைகளை முற்றாக மீறும் செயலும் என்ற அடிப்படையில் மேற்படி கட்டளையின் பிரகாரம் உரையாற்றுவதற்கு முன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனுமதி கோரியிருந்தார்.

ஆனால் அவர் சமர்ப்பித்திருந்த கோரிக்கையை உண்மைக்குப் புறம்பான காரணம் என்றும் குறித்த விடயமானது நீதி மன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விடயம் எனவும் கூறி அவர் உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

 

http://www.ilakku.org/நாடாளுமன்றத்தில்-திலீபன/

  • கருத்துக்கள உறவுகள்

 

அனைத்துத் தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல்; சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் உரை

தியாகதீபம் திலீபன் அவர்களை நினைவுவதனை அரசாங்கம் பொலீசார் ஊடாக தடைசெய்துள்ளமையானது ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல் என்பதனையும் சுட்டிக்காட்டி குறித்த நினைவேந்தலை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தும் பிரேரணை ஒன்று பாராளுமன்றில் உரையாற்றுவதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் நேற்றய தினம் பாராளுமன்ற சபாநாயகரின் அனுமதிக்காக அவரது அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

பாராளுமன்ற நிலையியல் கட்டளைச்சட்டம் 27 (2) ,ன் கீழ் அவசர முக்கியத்துவம் மிக்க பொது விடயங்கள் தொடர்பில் கட்சித்தலைவர்கள் உரையாற்ற முடியும். ஆந்த வகையில் தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவு கூர அனுமதி மறுத்திருப்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் உணர்வுகளை புண்படுத்தும் செயலும் உரிமைகளை முற்றாக மீறும் செயலும் என்ற அடிப்படையில் குறித்த மேற்படி நிலையியல் கட்டளையின் பிரகாரம் உரையாற்றுவதற்கு முன் அனுமதி கோரி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சமர்ப்பித்திருந்த கோரிக்கையை நீதி மன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விடயம் என்று கூறி உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் தியாகி திலீபன் தொடர்பாக உரையாற்றுவதற்காக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை முழுவிபரம் வருமாறு.

//செப்ரெம்பர் 26ம் திகதி தியாக தீபம் திலீபன் என அழைக்கப்படும் திரு. இராசையா பார்த்திபன் அவர்களது 33வது ஆண்டு நினைவேந்தல் தினமாகும்.

அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான அரசியற் பொறுப்பாளராக இருந்தவர். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களைக் கையளித்து நிராயுதபாணிகளாக இருந்தசமயம் அவர் உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கினார். இந்திய அரசாங்கம் தனது நல்லெண்ண முயற்சிகளை உபயோகித்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம்கொடுத்து தமிழ்மக்கள் எதிர்நோக்கம் அன்றாடப்பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுகொடுக்கவேண்டுமென ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டார்.

செப்ரெம்பர் 15ம் திகதி ஆரம்பித்த அவரது உண்ணாநிலைப் போராட்டம் 26ம் திகதி அவரது வீரச்சாவுடன் நிறைவுக்கு வந்தது. அவரது போராட்டமானது அமைதி வழியிலான அதியுச்சமான தியாகமாக உலகத் தமிழர்களால் போற்றப்படுகிறது.

கடந்த 32 வருடங்களாக இலங்கையில் வாழும் தமிழர்களும் அவரது தியாகத்தை நினைவுகூர்ந்து வருகிறார்கள். போர் நடைபெற்றுவந்த காலத்திலும், 2015ம் ஆண்டுக்குப்பின்னரும் , இந்நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சிறிலங்காப் படையினர் அவ்வப்போது இந்நிகழ்வினைக் குழப்புவதற்கு எத்தனித்தபோதிலும், மக்கள் தாமாக முன்வந்து இந்நிகழ்வினை முன்னெடுத்து வருகிறார்கள். இருப்பினும் முன்னர் நீதிமன்றம் மூலமாக தடையுத்தரவினைப் பெறும் முயற்சியில் காவற்துறையினர் ஈடுபட்டதில்லை.

ஆனால் இம்முறை நீதிமன்ற தடையுத்தரவை பெறுமாறு தமக்கு அரசாங்கத்தின் அதி உயர்பீடத்திலிருந்தே உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, இத்தடையுத்தரவை என்னிடம் கையளிப்பதற்கு வந்த யாழ்ப்பாண பொலிஸ் அதியட்சகர் குறிப்பிட்டிருந்தார்.

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலின் இறுதி நாள் செப்டம்பர் 26 ம் திகதி வருகின்றது. இந்த இறுதி நேரத்திலாவது, அடிப்படை மனிதவுரிமைகளின் அடிப்படையில் நினைவு கூருவதற்கான தமிழ்மக்களின் அடிப்படை உரிமையை வழங்குமாறு கோருவதற்கு இவ்விடயத்தை நான் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.

தியாகதீபம் திலீபன் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்தவர் என்ற வகையில் அவரை நினைவுகொள்ளும் நிகழ்வு நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எனக்கூறி இத்தடையுத்தரவு நியாயப்படுத்தப்படுகிறது.

நினைவுகூரும் நிகழ்வுகள் சமாதானத்தை முன்னெடுத்துச் செல்ல உதவுமே தவிர ஒருபோதும் சமாதானத்துக்கு குந்தகமாக அமையப்போவதில்லை என்பதனை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

1994ம் ஆண்டு சன்னா பீரிசுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கில் நீதியரசர் அமரசிங்க மேற்காட்டிய அவதானத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

“வரையறைகளுக்கு உட்படாத கருத்துப் பரிமாற்றம், அவை எந்த அடிப்படைகளுக்கு முரணாகவோ, குழப்பம் விளைவிக்கக்கூடியதாவோ அல்லது மக்களில் ஒருசாராருக்கு உடன்பாடில்லாதாக இருந்தாலும், உண்மை வெளிக்கொணரப்படுமாயின் அவை அனுமதிக்கப்பட வேண்டும். பேச்சுரிமை என்பது பொதுவில் ஏற்றுக்கொளள்ளப்பட்ட கருத்துகளை தெரிவிப்பது என மட்டுப்படுத்த முடியாது.”

இவ்விடயத்தில் இலங்கையின் மனிதவுரிமை ஆணைக்குழு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு 2017ம் ஆண்டு ஜுன் 7ம் திகதி எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“30வருட போருக்குப்பின்னர் தற்போது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மீளக்கட்டியெழுப்பும் வகையில் இலங்கை செயற்பட்டுவருகிறது. இம்முயற்சியில் இழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு அனைத்துச் சமூகங்களுக்கும் இடமளிக்கவேண்டும். ஆதலால் நினைவுகூருவது நல்லிணக்க முயற்சிகளில் முக்கிய பங்களிப்பினை வகிக்கின்றது. இலங்கையில் போரில் உயிரிழந்த படையினரை நினைவுகூருவதற்காக நாங்கள் பல நினைவுச்சின்னங்களை அமைத்துள்ளோம். அதுபோன்று தமது குடும்ப உறுப்பினர்களையும், அவர்களது அன்புக்குரியவர்களயும் நினைவுகூருவதற்கு நினைவுச்சின்னங்களை அமைப்பதற்கு எல்லாச் சமூகங்களுக்கும் உரிமையுள்ளது.

இறந்தவர் விடுதலைப்புலிகள் இயக்த்தைச் சேர்ந்தவர் எனக்காரணங்காட்டி அவரை நினைவுகூர்வதற்கு அவரது குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்க முடியாது. அவர்களது அரசியல்நிலைப்பாடு எதுவாயிருப்பினும் இறந்த உறவுகளை நினைவுகூருவதற்கு அவர்களது குடும்பத்தினருக்கு உரிமையுள்ளது. ஆணைக்குழுவின் பார்வையில், தங்களது உறவுகளை நினைவுகூர அனுமதிப்பதன் மூலம் இலங்கைத்தீவின் மக்களாக தமது உரிமையை நிலைநாட்டமுடிகிறது உணர்வினை அவர்களுக்கு வழங்கும் எனக் கருதுகிறது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சியில் இது ஒரு பகுதியாக அமைகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தை மறுப்பது இனங்களுக்கிடையிலான பிளவினை மேலும் அதிகரிக்கவும் நல்லிணக்க முயற்சிகளைக் குழப்புவதாகவுமே அமையும்.”

கடந்தகாலத்தில் இவ்விடயம் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு உள்ளாக்கியிருந்தனர். 1971ம் ஆண்டு நடைபெற்ற ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சியை நினைவுகூரும்விதமாக “ஏப்பிரல் வீரர்கள்’ எனவும், 1989ம் நடைபெற்ற ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சியை நினைவுகூரும்விதமாக ‘நொவெம்பர் வீரர்கள்” எனவும் அவர்களது தலைவர் ரோகண விஜேவீரவினதும் மற்றைய சகாக்களினதும் இறப்பை நினைவுகூருகிறார்கள்.

எல்லாவற்றிற்கும்மேலாக உண்மை, நீதி மற்றும் மீளநடவாமையை உறுப்படுத்துதல் போன்ற விடயங்களிற்கான ஐ.நா. சபையின் சிறப்பு ஆணையாளர் அவரது A/HRC/45/45 என இலக்கமிடப்பட்ட அறிக்கையில் நிலைமாறுகால நீதியை அடையும் முயற்சியில், நினைவுகொள்வது என்பது ஐந்தாவது தூணாக அமைகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளதாவது:

“பாரிய மனதவுரிமை மீறல்களுக்கு உள்ளான, பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுத்த சமூகங்கள் நினைவுகொள்வதற்கான உரிமை என்பது சர்வதேச மனிவுரிமைச் சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை பொருணமிய விடங்களைக் காட்டியோ அரசியல் மற்று நடைமுறைகளைக்காட்டியோ, அல்லது நிலைமாறு கால நீதிவிடயத்தில் இதர செயன்முறைகளைக்காட்டியோ சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் விலக்கிவிட முடியாது.”

அவ்வறிக்கையில் 100வது பந்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்து. “நினைவுகொள்வதனை தவிர்த்துவிட்டு, உண்மை, நீதியை கண்டறிதல், இழப்பீடு வழங்குதல் போன்றவற்றை முழுமைப்படுத்த முடியாது. மீளநடவாமையையும் உறுதிப்படுத்த முடியாது.”

110வது பந்தியில், “போருக்குப் பின்னரான காலத்தில், நினைவுகூருதலினால் ஏற்படும் பயன் தங்களது வன்முறை நிறைந்து கடந்தகாலத்தினை உணரந்துகொள்வதற்கு மற்றவர்கள் மீது பழிவாங்கும் உணர்வினைத் தவிர்ப்பதாகவும், முன்னைய பிளவுகளை சரிசெயவ்வதற்கும் உதவும்.

தமிழ் மக்களின் நினைவேந்தல்கள் காலாகாலமாக அமைதியாகவும் உணர்வுபூர்வமாகவும் ஏனைய மக்களின் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் கூட மதிப்புகொடுத்து அவற்றிற்கு எந்தவிதத்திலும் குந்தகம் விளைவிக்காமலும் நடாத்தப்படுகின்றவை .

சிங்கள தேசத்தின் 80 %மான ஆதரவைப்பெற்று அவர்களின் பெரும் செல்வாக்குடன் வந்திருக்கின்ற இந்த ஒரு அரசாங்கம், தமிழ்

மக்களின் உரிமைகள் என வரும்போது எதற்காக ஒரு பாதுகாப்பின்மையை பயத்தை உணர்ந்து இந்த நினைவேந்தல்களை தடைசெய்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை.

இந்த வகையில் இன்னும் மீதம் இருக்கும் மூன்று நாட்களாவது தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்வதற்கு அனுமதிக்க சிறிலங்கா காவல்துறைக்கு பணிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்ளுமாறு இந்த அவையில் இருக்கும் பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

http://thinakkural.lk/article/71869

கஜேந்திரகுமாருக்கு ஆதரவாக ஜே.வி.பி தலைவர் கருத்து – சபாநாயகரின் நடவடிக்கைக்கு கண்டனம்

சபாநாயகரின் நடவடிக்கைள் அரசாங்கத்துக்கு சார்பானவையாக காணப்படுகின்றன என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
நிலையியற்கட்டளை சட்டத்தின் கீழ் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம தனது அறிக்கையை வெளியிடுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தமை குறித்தே ஜே.வி.பியின் தலைவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


கட்சி தலைவருக்கு விசேட அறிக்கையை வெளியிடுவதற்கும் கேள்விகளை எழுப்புவதற்கும் உரிமையுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகர் எடுத்த முடிவு குறித்து நான் கவலையடைகின்றேன் என தெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க சபாநாயகர் இந்த விடயத்தை ஏனைய கட்சி தலைவர்களுடன் ஆராய்ந்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாளைய கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இது குறித்து ஆராயவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/71863

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.