Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் சேகர்

Commander-Lieutenant-Colonel-Sekar.jpg

சாவுக்குள் உழைத்த வீரம்

‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி’ லெப். கேணல் சேகர்

1998 சுதந்திர நாளுக்குக் கிளிநொச்சியிலிருந்து கண்டி வீதியால் தலதாமாளிகைக்குப் பேரூந்து வருமென சிங்களத்து ஜெனரல் விடுத்த சவாலுக்குச் சாட்டையடியாகக் கிளிநொச்சித்தளம் மீதான பாய்ச்சலுக்குத் தலைவர் கட்டளையிட்டார். அவரின் கட்டளைக்கிணங்க மையத்தளத்தினுள் முன்னேறிய எமது போராளிகளை வீழ்த்தி எமது முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டிருந்தான் எதிரி.

எதிரிக்காக எடுத்த சாட்டையின் அடி எங்கள் முதுகுகளிலேயே விழுந்து விடுமா? எதிரி கொடியேற்றும் நாளில் எங்கள் தேசியக்கொடி அரைக்கம்பத்திற் பறக்குமா? அர்த்தமற்ற உயிரிழப்புக்களுடன் நாம் தளம் திரும்ப நேருமா? தலைவன் இட்ட ஆணையை வீணேபோக விட்டு வெறுங்கையுடன் திரும்பப் போகிறோமா? இவை எதையுமே ஏற்றுக் கொள்ள எங்கள் மனங்கள் மறுத்தன. ஆனாலும் யதார்த்தம் எங்கள் பிடரிமயிரைப் பிடித்துலுப்பியது. வழிதெரியாது, மனம் வெப்பியாரத்தில் உழன்றது. எல்லா அலைவரிசைகளையும் வேகமாய் நோட்டமிட்டபடி அங்குமிங்கும் ஏதோ ஒரு நம்பிக்கைச் செய்திக்காய் தவித்தபடியிருந்தோம்.

மூத்த தளபதிகள் நிலைமையை அவதானித்தவாறு தொலைத் தொடர்புக் கருவியின் ஒலிகளைத் தமது காதுகளுள் வாங்கிக்கொண்டிருந்தனர். எங்கும் அமைதி நிலவியது. ஓர் அலைவரிசையில் கம்பீரமான கட்டளைக்குரல் நிதானாமாய், நேர்த்தியாய், உற்சாகமாய் களத்தைத்தன் கையிற்குள் வைத்திருப்பதை உணர்த்துமாறு ஒலித்துக் கொண்டிருந்தது. எதிரியின் பலம் வாய்ந்த முன்னரண்களையெல்லாம் வீழ்த்தியபடி, முறியடிக்க வந்த எதிரிகளைச் சாவுக்குள் அனுப்பியபடி தனக்குத் தரப்பட்ட பகுதிகளைக் கடந்தும் ஓர் அணி முன்னேறிக்கொண்டிருப்பதை அந்தக் கட்டளைகள் தெளிவாக உணர்த்தின. அந்தக் கட்டளைக்குரல் தந்த உற்சாகத்திலிருந்து விடுபட மனம் மறுத்தது.

“ஆர்…. அந்த இடத்தில நிக்கிறதெண்டு பாருங்கோ” என்று தளபதி ஒருவர் கூற, மூத்த தளபதியொருவர்,

“அந்த ‘மப்’பை எடு, அந்த இடம் எதெண்டு பார்”

“அது சேகரின்ர இடம், சேகர் பிடிச்சுக்கொண்டு போறான் பயப்படத் தேவையில்லை. சேகர் விடமாட்டான்.”

அந்தச் சமரோடு சம்பந்தப்படாவிட்டாலும் அந்தச் சமரை அவதானித்துக் கொண்டிருந்த தளபதிகள் நம்பிக்கையுடன் உற்சாகமடைந்தனர். சேகர் பிடித்த காவலரண் பகுதிகளை மீளக் கைப்பற்ற எதிரி கடுமையாக முயன்றான். ஏனைய பகுதிகளை நாம் இழந்துவிட்டபோதும் சேகர் தனக்குத் தரப்பட்ட பகுதிக்கு அப்பாலும் எதிரிப் பகுதியைக் கைப்பற்றியிருந்தான். கிளிநொச்சி நகரின் மத்திய பகுதிவரை கைப்பற்றப்பட்ட எதிரித்தளத்தைத் தக்கவைக்கவென அணிகளை நிலைப்படுத்திய போது எதிரிக்கும் எமக்குமிடையிலான சண்டை வலுப்பெற்றது. எதிரியின் விடாப்பிடியான, தீர்மானமான சண்டையைப் போர்க்களம் கண்டது. ஒன்பது தடவை சேகரிடம் தோற்றுப்போன எதிரி பத்தாம் முறையும் முன்னேறி மூக்குடைபட்டான். கிளிநொச்சியிலிருந்து பேரூந்து விடச்சவால்விட்ட எதிரிக்கு, எங்கள் நிலத்தில் அவலத்தை விதைத்த எதிரிக்கு, தலைவரின் ஆணையை நிறைவேற்றி, நிலம் மீட்டு மரணப்படுக்கை விரித்தான் தளபதி சேகர். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாகத் தன்னை நியமித்த தலைவரவர்கள் மெச்சும்படியாக தன் ஆளுமையை அவன் வெளிப்படுத்திய முதற்சமர் அதுதான்.

‘ஓயாத அலைகள் – 02’ நடவடிக்கையில் கடுமையானதெனக் கருதப்பட்ட பகுதிக்கான கட்டளைத் தளபதியாகத் தலைவரால் அவன் நியமிக்கப்படுவதற்கு இதுவே காரணமாகியது. அச்சமரில் எதிரியின் வலுமிக்க போரணியை, தளத்தின் மையப்பகுதியின் திறவுகோலாக அமைந்த பகுதியிலேயே எதிர் கொண்டு எதிரியின் தீர்மானமான முறியடிப்பை மோதியுடைத்து வெற்றியை எமதாக்கியவன் சேகர். இப்பகுதியிற் போரிட்டுத் தோற்ற எதிரிப்படைக் கெமாண்டருக்கு எதிரியின் கட்டளைப்பீடம் வீரவிருது கொடுத்துக் கௌரவித்தமை சேகர் எதிர்கொண்ட சண்டையின் காத்திரத்தை அனைவருக்கும் புரிய வைக்கும்.

என்றும் மரணத்துக்குள் வாழ்ந்தவன். மரணத்திற்கு அஞ்சாதவன். ஆனால், மரணத்தை விரும்பாத அவனது மனம் எதையோ சாதிக்கத் துடித்ததை அவனை அறிந்தவரே அறிவர். அதை அறிந்தவர்களால் இலகுவில் அந்தச் சாவைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவனுக்கான சந்தர்ப்பங்கள் நீண்டிருந்தால், மாளும் பகையின் பின்னாலும் மீளும் எம் நிலங்களின் பின்னாலும் அவன் இருந்திருப்பான். தலைவன் சுட்டும் திசையெங்கும் அவன் புலிக்கொடி நாட்டிப் பெருமை சேர்த்திருப்பான்.

பத்து வருடத்தின்முன் மாங்குளம் முகாம் தகர்ப்பின்போது, அப்போதுதான் பயிற்சி முடித்து வந்திருந்த மெல்லிய உருவங்கொண்ட, தலை சாய்த்து இழுத்திருந்த, கறுப்பை அண்டிய பொது நிறமான அந்தப் பதினைந்து வயதுப் பெடியன் அந்தப் போர்க்களத்தின் மத்தியில் நின்று காயப்பட்ட வீரர்களைச் சுமந்து சென்றுகொண்டிருந்தான். இதுதான் போராளி என்ற பெருமைமிக்க வாழ்வில் இந்தச்சின்னப் பெடியன் கண்ட முதற்களம்.

ஒன்பது வருடங்களின் பின், தென்முனையில் எதிரி மீண்டும் மாங்குளம் வரை ஆக்கிரமித்திருந்த போது மாரிப் பிரவாகமென எழுந்தது ‘ஓயாத அலைகள் – 03’ அம்பகாமத்தில் உடைப்பெடுத்து ஒலுமடுத் தளத்தை வீழ்த்தி, கரிப்பட்ட முறிப்பை வெற்றி கொண்டு, கனகராயன்குளம் கட்டளைத் தலைமையகத்தைத் தோற்கடித்து மாங்குளத்தை எமது கைகளுக்கு மீட்டது. இந்தச்சமரில் இதைச் சாதிக்கக் களத்தில் தலைமை தாங்கிக்கொண்டிருந்த தளபதி அன்று மாங்குளம் முகாம் தகர்ப்பிற் காயப்பட்ட போராளிகளைச் சுமந்து சென்றுகொண்டிருந்த அதே சின்னப் பெடியன் சேகர் தான். இந்த உயர்பணியை ஆற்ற இந்த ஒன்பது வருடத்தில் அவன் எத்தனை களங்களைக் கண்டிருப்பான். ஓயாது உடல் வருத்தி அவன் எப்படி உழைத்திருப்பான்.

போர்க்களத்தில் ஆரம்ப காலங்களில் இவன் 50 கலிபர் அணியின் தலைவனாக இருந்தான். பதுங்கித்தாக்குதல்களும் அதிரடித்தாக்குதல்களுமே நடந்த அன்றைய சண்டைக் காலத்தில் அச்சண்டைகளுக்கு 50 கலிபர் அணி தேவையானதாக இருக்கவில்லை. எல்லோரும் சண்டைக்காகப் புறப்படும் போது அவன் வாய்ப்பின்றி இருந்தான். ஆயினும், எவரும் சிந்திக்காத கோணத்திற் சிந்தித்துத் தளபதியிடம் தனது அபிப்பிராயத்தைச் சொல்லி அனுமதி கேட்டு, தானே வேவு பார்த்து, வாய்ப்பான இலக்குகளைத் தெரிவு செய்து தன்னுடன் 50கலிபர் அணியை மட்டுமே வைத்து அன்று எதிரிகளுக்குத் தலைவலியாய் எழுந்தான். சொல்லக்கூடிய பல சண்டைகளை அவன் வெற்றிகரமாகச் செய்தான். இதுவே தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட ‘பசீலன்’ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு அவன் அனுப்பப்படுவதற்கான தகுதியை அவனுக்குக் கொடுத்தது.

பயிற்சி முடித்து வெளியேறியபின் சேகரின் தோள்கள் அதிக பாரத்தைச் சுமக்கத்தொடங்கின. இனத்தின் விடுதலைக்காக எதிரிக்குள் வாழ்ந்து உழைக்கத் தொடங்கினான். அவன் நேசித்த மக்களுக்காக அந்த வீரனின் இனிய இளமைக் காலங்களெல்லாம் எதிரியோடு

மண்டைதீவு, மூன்றாம் கட்ட ஈழப்போர் மூண்டபோது, அந்த உப்புக்கடல் சூழ்ந்த பகை முகாமினுள் தலைவனின் திட்டப்படி எவருக்கும் தெரியாது ஏதோ செய்துகொண்டிருந்தார்கள் சேகரும் அவன் தோழர்களும். அந்த முகாமின் இறங்குதுறையிலிருந்து பிரதான முகாம் வரை கடினமான பகைப்பிரதேசத்தினுள் கடல்நீரிலும் நிலத்திலுமாக, சீரான உணவும் நித்திரையுமின்றி எத்தனை நாட்கள் உழன்றது சேகரின் வாழ்வு. அந்த வாழ்வின் மூலம் ஒரு தாக்குதல் திட்டத்திற்கான பெறுமதியான தகவல்களை அவன் பெற்றுத்தந்தான்.

சிறிய தவறுகள் கூட போராளிகள் பலரின் உயிர்களை அந்தக் கடல் நீரினுள்ளேயே கரைத்துவிடும். அப்படி எதுவும் நடந்துவிடுவதை விரும்பாத தலைவர், தளபதிகள் வகுத்த திட்டத்திற்கு மேலாக சில மாற்றுத்திட்டங்களைப் பரிந்துரைக்க, அதற்கான ஓர் உடனடி வேவைச் செய்துமுடிப்பதற்கு எல்லோரின் கண்களுள்ளும் நிழலாடியவன் நம்பிக்கைக்குரிய சேகர் தான்.

அவசர அவசரமாக அந்த வேவுப் பணிகளைச் செய்துமுடித்து, நம்பிக்கையான தகவல்களைத் திரட்டினான். தலைவரின் திட்டப்படி 15 பேர்கொண்ட அணிக்கு தலைமையேற்று எதிரியுள் இரகசியமாக ஊடுருவி, அந்த இறங்குதுறையைத் திடீர்த்தாக்குதல் மூலம் கைப்பற்றி பிரதான முகாமிற்குள் தாக்குதல் அணிகளை உள்ளெடுக்க வேண்டிய முக்கியமான பணி சேகரிடம் தான் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அந்த இருபது வயதேயான சேகரை நம்பிப் பெரிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. எம் எத்தனை போராளிகளின் உயிர் இருப்பு அவன் கைகளில் இருந்தது. எல்லாவற்றையும் சிந்தித்துப் பொறுப்புணர்வுடன் செயற்படக்கூடியவனென எல்லோரும் அவனில் வைத்த நம்பிக்கையை அந்தச் சண்டையில் தனது செயலின் மூலம் மெய்ப்பித்தான்.

திட்டத்தின்படியே தனது அணியுடன் உள்நுழைந்து, தாக்குதலுக்காகக் காத்திருந்த அந்த சொற்ப நேரத்திற் பிறிதொரு பகுதிக்குரிய அணியொன்று பாதைமாறி வந்து விட, எதிரியின் கண்களுக்குள் மண்ணைத்தூவி அவர்களை அத்தனை விரைவாய் உரிய இடத்திற் சேர்த்து விட்டு, எதிரி உசாரடைந்துவிடக்கூடாது என அந்தத் தடயங்களை அழித்தபடி தன் பணிக்கு வந்து சேர்ந்து, எத்தனை சாதுரியமாய் அந்தக் களத்தில் அவன் சுழன்று பணி முடித்தான். எதிரிக்கு அதிர்ச்சிகரமான அழிவைக்கொடுத்து, ஒரு நாளுக்குள்ளேயே வெற்றிகரமாகப் பூர்த்திசெய்யப்பட்ட அந்தத் தாக்குதலில் நாம் பெரும் இழப்புக்களின்றியே சாதித்த வெற்றிக்கு பின்னால் சேகரின் பலமாதக் கடும் உழைப்பு இருந்தது.

‘சூரியக்கதிர்’ எதிர்ச்சமர் நடவடிக்கை. அந்தக் காலத்தில் எம்மிடம் பீரங்கிகளோ, ஆட்லறிகளோ இருக்கவில்லை. வேவு அணிகளே எமது வலுமிக்க பீரங்கிகள் என்று சொல்ல வேண்டும். அந்தக் களத்திற் சின்னஞ்சிறு வேவு அணிகளுடன் எதிரிப்பிரதேசத்தின் உள்ளே அடிக்கடிப் போய் வரும் சேகர், எதிரியின் செயற்பாடுகளை அவதானித்து அவனது போர் ஏற்பாடுகளை அறிந்து, எமது எதிர் நடவடிக்கைக்கான தகவல்களை அனுப்பிக்கொண்டிருப்பான். அந்தக் காலத்தில் ‘உறங்காத கண்மணியாய்’ உலாவந்துகொண்டிருந்தான் சேகர்.

அந்த நாட்களில் ஒருநாள் பெண் போராளிகளின் பகுதியினூடாகத் தன் வேலைக்காகப் போய்க்கொண்டிருந்தவனிடம் “என்ன சேகர் நெடுகலும் குண்டோடையே திரியிறீர்” என்று அவர்களின் தளபதி கேட்டதற்கு “நான் ஒரு வேவுக்காரன். எனக்குக் குண்டுதான் எல்லாமே. இதை வச்சே எல்லாத்தையும் சமாளிப்பன்” என்று சொல்லிக்கொண்டிருந்தவன், திடீரெனப் பாய்ந்தோடி மதில் ஒன்றைக் கடக்கக் குண்டு ஒன்று வெடித்தது. எல்லோரும் திகைத்துப் போனார்கள். சில வினாடிகளில் நடந்ததைப் பார்த்து வியப்படைந்தனர். அந்த மதிலுக்குப் பின்னால் எதிரிகள் சிலர் சேகர் அடித்த குண்டில் மாண்டு போய்க்கிடந்தார்கள்.

எமது பிரதேசத்தின் உள்ளேயே சாதாரணமாக ஒரு போராளியுடன் உரையாடும் போது கூட அவனது கண்கள் மட்டுமல்ல மனதும் எதிரியைச் சுற்றியே உலாவிக்கொண்டிருக்கும். அந்த அசாதாரண ஆற்றல் அவனுக்கேயுரியது என்று சொல்வதை விட வேறு எப்படிச் சொல்வது. அன்று அவ்விடத்தில் அவன் இல்லையென்றால் ஒருவேளை எதிரியின் திகைப்புத் தாக்குதலில் எங்கள் பெண் தளபதியையும் போராளிகளையும் நாம் இழந்திருக்கக்கூடும்.

புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து பின்வாங்கியதனாற் பெரும் இராணுவ வெற்றி ஒன்றைக் கட்டாயமாக ஈட்டவேண்டிய நிலையிலிருந்தனர். அந்நிலையிலேதான் ஓயாத அலைகள் ஒன்று திட்டமிடப்பட்டது. அத்திட்டத்தின் வெற்றி எடுக்கப்படும் வேவுத்தரவுகளிலேயே பெரிதும் தங்கி நின்றது. மூன்று பகதிகளாகப் பிரிக்கப்பட்ட வேவு நடவடிக்கையில் முக்கியமான ஒரு பகுதியின் வேவுப்பணிகள் சேகரிடம் கொடுக்கப்பட்டன. மீண்டும் சேகர் எதிரிக்குள் வாழத்தொடங்கினான். இறுதியில் எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு, சமருக்கான தாக்குதற் பணிகள் தலைவராற் பிரித்துக்கொடுக்கப்பட்ட போது சேகரின் தோள்களில் விழுந்தது சாதாரண சுமையன்று. அது வெற்றிக்கான ‘சாவியை’க் காவிச் செல்லும் சுமை.

இரவு பகலாக நீந்தித் திரிந்து பெருங்கடலினூடாகத் தெரிந்தெடுத்த நகர்வுப் பாதையின் மூலம் தாக்குதல் அணிகளை உள்நகர்த்தி தளத்தின் கடற்கரைக் காவலரண்களைத் தகர்த்தெறிய வேண்டும். இத்திட்டம் நிறைவு செய்யப்படும் போது, கடற்கரையை அண்டியிருக்கும் எதிரியின் கட்டளைப்பீடம் எமது அச்சுறுத்தலால் நிலை தடுமாற அச்சமருக்கான எமது ஏனைய நடவடிக்கைகள் சுலபமாக்கப்பட்டுவிடும்; வெற்றி நிச்சயப்பட்டுவிடும். அதற்காக லெப். கேணல் தர்சனின் கடற்புலிகள் அணியை அழைத்துச் சென்றவன் அவன்தான்.

சிறிய தவறொன்று நடந்தாலும் பெருங்கடலாற் செல்லும் அணிகளுக்கு மீட்சியே கிடையாது. அத்தனை உயிர்களும் கடலோடு கரைந்து போக வேண்டியது தான். சேகர் திரட்டிய தகவல் மீதும் சேகரது ஆற்றல் மீதும் கொண்ட நம்பிக்கையால் மட்டுமே தீட்டப்பட்ட இத்திட்டம் இறுதியில் வெற்றி கண்டது. தளம் எங்கள் கைகளில் வீழ்ந்தது.

அந்த வெற்றிக்காக உழைத்த எங்கள் சேகர், தோல்வியை மூடிமறைத்துவிட ஆனையிறவுத் தளத்திலிருந்து எதிரி எடுத்த ‘சத்ஜெய’ நடவடிக்கைக்கு எதிராக முன்னணி வேவு அணிகளுடன் செயற்பட்டுக்கொண்டிருந்தான். ‘சத்ஜெய’வின் இரண்டாம் கட்டத்தில் எம்மிடம் செம்மையாக வாங்கிக் கட்டிப் பலநூறு எதிரிகள் மாண்டுபோன அந்த வெற்றிகர முறியடிப்புச்சமரின் பின்னால் அதன் மூலவேர்களில் ஒன்றாகச் சேகரும் இருந்தான். தனது அணியை வைத்து எதிரிக்குள்ளேயே எதிரியின் ‘ராங்கி’யை அழித்த சாதனை அந்தச் சமரில் அவனது பங்கைச் சொல்லும்.

அவனது கால்படாத களங்களே இல்லையென்னும்படி போர்க்களக் கதாநாயகனாக அந்த எளிமையான போராளி உலா வந்தான். ‘ஜயசிக்குறுய்’ களம்தான் எங்கள் வீரனது உச்சளவு உழைப்பை உறிஞ்சியது. அவனை ஒரு தளபதியாகவும் உயர்த்தியது. அந்தக் களத்தில் எத்தனை சவால்களை எதிர்கொண்டபோதும் வெற்றிகொண்ட அவனது மன ஆற்றலின்இ தாங்கு சக்தியின் எல்லை எதுவென யாராலும் அறிந்து கொள்ள முடியவில்லை.

கொடுக்கப்பட்ட சுமைகள் அனைத்தையும் சுமந்தான். இந்தத் தேசத்திற்காக இன்னும் இன்னும் பாரம் சுமந்தான். “சிறு அணிகளை வைத்துக்கொண்டு போர்க்களத்திற் பெரும் பணிகளை ஆற்றக்கூடிய வல்லமையை நான் அவனிடத்திற் கண்டேன். சில சமர்களில் அவனது இந்த ஆற்றல்தான் எமக்குப் பெருவெற்றிகளைத் தந்தது” என்று பெருமையுடன் மனம் நெகிழ்ந்து பாராட்டினார் அவனை வளர்த்த தளபதி கேணல் தீபன்.

‘வெற்றி உறுதி’யென்று எதிரி முன்னேறிக்கொண்டிருந்தான். ஆனால், அவனது பிடரியில் அடிகொடுக்கும் தலைவரின் போர்வியூகத்திற்காகத் தாண்டிக்குளம் ஊடறுப்பிற்குப் புலியணிகள் தயாராகிக்கொண்டிருந்தன. தளபதிகளும் போராளிகளும் அதற்காகச் சென்ற போது புளியங்குளம் பகுதியின் முன்னணிக் காவல் நிலைகளுக்குத் தற்காலிகப் பொறுப்பாளனாகச் சேகர் நியமிக்கப்பட்டான். தளபதியொருவருக்குரிய பணி தலைவராற் சேகருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவனது ஆளுமைக்கு அத்தனை விரைவாகப் பரீட்சை வைத்தான் எதிரி. மட்டுப்படுத்தப்பட்ட அணிகளுடன் நின்ற சேகரின் மேல் எதிரியின் படைவெள்ளம் அணையுடைத்துப் பாய்ந்தது.

சமரை எதிர்கொண்டான் சேகர். தானே முன்னின்று தனது சிறிய அணிகளைக் களமிறக்கிச் சண்டையிட்டான். சமர் உக்கிரம் கண்டது. எவருமே எதிர்பார்த்திராத ஒரு சமரை அன்று அவன் நிகழ்த்தினான். மூன்று ராங்கிகள் அழிக்கப்பட்டுக் கொத்துக் கொத்தாய் எதிரி சாய்ந்து விழப் பகைவன் பனிக்க நீராவியுடனேயே முடங்கிப்போனான்.

புலிகளின் முன்னணிப்படைகளோ கட்டளைத் தளபதிகளோ இல்லாதிருந்துங்கூட அப்படியொரு மரண அடியைத் தாங்கள் பெற்றதை எதிரி நம்பவே மாட்டான். இதைச் சாதித்த சேகர் ஒரு தளபதி என்ற உயர்நிலையில் பெரும் பணிகளைச் சுமக்கத் தொடங்கினான். இக்காலத்தில் இயக்கம் இழந்த அனுபவமிக்க வீரத்தளபதியான லெப். கேணல் தனத்தினுடைய பொறுப்புக்கள் தனம் சுமந்த சுமைகள் எல்லாவற்றையும் சேகரின் தோள்கள் சுமக்கத்தொடங்கின.

அப்போது புளியங்குளம் புலிக்குகையாக மாறியிருந்தது. அதற்குள் நுழைய நினைத்தால் அதற்குள்ளேயே மாள வேண்டியது தான். எதிரி எவ்வளவோ முயன்றும் அந்தக் குகையை அசைக்க முடியவில்லை. அது தலைவர் போர்க்களத்தில் அறிமுகப்படுத்திய புதிய தந்திரமாகும். அதனை நிறைவேற்ற தளபதி தீபனுக்குத் துணையாக நின்றவன் தளபதி சேகர். எதிரி புளியங்குளத்தை நினைக்குந்தோறும் தனது சாவையும் நினைக்க வேண்டிய களச்சூழலை உருவாக்கினான். அதற்காக அவன் சிந்திய வியர்வையையும் கொண்டிருந்த ஓர்மத்தையும் போராளிகள் ஒவ்வொருவரையும் இராணுவத்தினர் பலருக்குச் சமனாக வளர்த்தெடுத்த திறனையும் எழுத்தில் வடிக்கமுடியாது. ஓவ்வொரு அரணிலும் சேகர் ஒருமுறை கதைத்து விட்டுச் சென்றால் அதுவே ஓர் இரும்புக் கோட்டையாக மாறிவிடும். இப்படித்தான் புளியங்குளம் புரட்சிக்குளமாக மாறி எதிரிக்குச் சாவை நோக்கிய பயணத்தைக் கொடுத்தது.

Commander-Lt.-Col-Sekar-04.jpg

இவர் தமிழீழப் போரியல் வரலாற்றில் எழுபதிற்கும் மேற்பட்ட போர்களில் பங்கு பற்றிய ஒரு சண்டை அனுபவமிக்க போராளி என்பதனையும் இங்கு நாம் குறிப்பிட விரும்புகின்றோம்.

1998 பெப்ரவரி மாதம். அந்தக் கிளிநொச்சி ஊடறுப்புச் சமர் சேகரின் போரியல் ஆற்றலுக்குச் சிகரம் வைத்த சமர்.

“நான் சாதித்துவிட்டேன். எனக்குத் தந்த பணிகளையெல்லாம் என் போராளிகள் செய்து விட்டார்கள். எதிரிகளை ஓட ஓட இன்றைய களத்தில் நானும் எனது போராளிகளும் விரட்டினோம். ஆனால், நான் என் போராளிகள் பதின்மூன்று பேரை இழந்திருக்கின்றேன். அந்த உயிரிழப்பு என் மனதைக் குடைகிறது என்று அந்தச் சமர்பற்றிச் சேகர் தனது நாட்குறிப்பில் எழுதியிருந்தான்.

சேகர் தன் போராளிகளை நேசித்தான். அவர்களின் இழப்புக்கள் அவனை வாட்டின. போராளிகளின் துன்பத்தில் அவனும் பங்கெடுத்தான். ஒருநாட் கிளிநொச்சியில் நாம் இராணுவத்திடமிருந்து கைப்பற்றிய பகுதியிற் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போராளியொருவன் கண்ணிவெடியாற் காலிழந்தான். “நான் படையணியைப் பொறுப்பெடுத்த இவ்வளவு காலத்துள் எனது பிழையாற் போராளி ஒருவனின் காலைப் பறிகொடுத்துவிட்டேன் 56 நாட்களாக நாங்கள் பயன்படுத்திய பாதையில் இதுவரை வெடிக்காத கண்ணிவெடி இன்று வெடித்தது ஏன்? எப்படியோ நான்தான் அதற்குக் காரணம். என்னுடைய கவனமின்மையால் எனது படையணியில் ஏற்பட்ட முதல் இழப்பு இதுதான். நான் இப்படி மேலும் வேறு பிழைகள் விட்டு என்னருமைப் போராளிகளின் அனாவசிய இழப்புக்குக் காரணமாக இருந்திருக்கிறேனாவென யோசித்துப்பார்க்கிறேன். நான் அறியக்கூடியதாக இல்லை. இனி இப்படி ஒரு பிழையை விடமாட்டேன் என இந்நாளினில் உறுதியெடுத்துள்ளேன் (27.03.1998) என்று சேகர் தன் நாட்குறிப்பிற் குறிப்பிட்டிருந்தமை அவன் தன் போராளிகள் மீது வைத்திருந்த பற்றுக்குச் சான்றாகும்.

கிளிநொச்சியிற் தான் பிறந்த மண்ணில் தன் இனத்தைக் கொன்று குவித்துத் தாண்டவமாடிய எதிரியைஇ பெப்ரவரிச் சண்டையில் வீரச்சாவடைந்த பெண் போரளிகளின் உடல்களைச் சீரழித்து இழிவுபடுத்தி வெறியாடிய எதிரியை 1998 யூன் 4ஆம் நாள் சண்டையில் தன் படையணி மூலம் கொத்துக் கொத்தாக கொன்றுகுவித்த போதுதான் அவன் மனம் அமைதியடைந்தது.

மன்னாரில் ‘ரணகோச’ என்ற பெயரிற் புறப்பட்டுவந்த எதிரி, எமது போராளிகள் பலரைக்கொன்ற போது துடித்தப்போனவன், ‘ரணகோச-05’ என அதே எதிரிகள் புறப்பட்டு வந்த போது நேரில் நின்று படைநடத்தி நூற்றுக்கணக்கில் எதிரிகளைக் கொன்று பதில் கொடுத்தபின் தான் நிம்மதியடைந்தான். எல்லாவற்றையும் விட அவன் பகுதிப் பொறுப்பாளராக இருந்த போது இரண்டு முறை அடுத்தடுத்து ‘வோட்ட ஷெற்’ என்று புறப்பட்டுவந்த எதிரிகள் எமது பெண் போராளிகள் பலரின் உயிர்களைப் பறித்துவிட்டபோது அவனது நெஞ்சில் நெருப்பெரியத் தொடங்கிற்று.

சில நாள்களுக்குள்ளேயே ஓயாத அலைகள் 03 படை நடவடிக்கையில் கேணல் தீபனின் கட்டளையின் கீழ் பெண் போராளிகள் கொல்லப்பட்ட அதே பகுதியூடாகப் பெண் போராளிகளையும் வழிநடத்தி அம்பகாமம், ஒலுமடு, கரிப்பட்டமுறிப்பு எனப் படைத்தளங்களை வீழ்த்திக் கனகராயன்குளத்தையும் வெற்றிகண்டபோதுதான் ஆறுதலடைந்தான்.

ஆனையிறவிற்கான இறுதிச் சமர்களின் போது முகாமில் ஊடறுப்பு முயற்சியில் ஓர் அணிக்குத் தலைமையேற்றுப் போனவன், எதிரியிடம் அடிவாங்கித் தன்தோழர்களை இழந்து வந்த போது துயரமும் ஆவேசமும் மேலிட, மீண்டும் மிகக் கடுமையாக உழைத்து இறுதியில் ஆனையிறவை வீழ்த்துவதற்கான சண்டையில் ஒரு படைத்தொகுதிக்குத் தலைமைதாங்கி அல்லிப்பளை நீரேரிவரை படைநடத்திப் பெருமளவில் எதிரிகளை வீழ்த்தி வெற்றிகண்டபோது தான் அவன் துயரத்திலிருந்து மீண்டான்.

தென் போர்முனையில் நின்றவனை இந்தக் களத்தின் கடுமை அவனது தேவையை உணர்ந்து அழைத்தது. குடாரப்புவில் தரையிறங்கிய அணிகள் இத்தாவில் கண்டி வீதியில் 30,000 எதிரிகள் நடுவே போரிட்டுக் கொண்டிருந்தன. தாளையடித் தளத்தை நாம் வெற்றி கொள்ளாமல் அந்தப் போராளிகளுக்கான எந்த விநியோகங்களும் சாத்தியம் இல்லை என்ற நிலை இருந்தது. காயப்பட்டவர்களை எடுப்பதிலிருந்து உணவு, வெடிபொருள் வரை அனைத்துமே நெருக்கடிக்குள் இருந்தன.

53ஆவது டிவிசனின் ‘கொமாண்டோ பிரி கேட்’ தளம். எதிரியின் நடவடிக்கை ஒன்றிற்காக ஆயத்தப்படுத்தப்பட்ட நிலையில் நிலை கொண்டிருந்த பலமான கோட்டை அது. முன்னர் எம்மால் வீழ்த்தப்பட்ட கிளிநொச்சித் தளத்தின் பலத்திற்குக் குறையாத வலுமிக்க தளம் அது. குடாரப்புவில் இரவில் தரையிறங்கிய அணிகள்இ விடிந்தபோது தமது கடல் தொடர்பை இழந்து போயின. தாளையடித் தளத்திற்கான சமர் தொடங்கியது. எதிரியைத் தோற்கடித்தவாறு மூர்க்கமாக, எல்லோருக்கும் நம்பிக்கை தரும்படி முன்னேறிக் கொண்டிருந்தன புலியணிகள். ஆனால், அன்று மாலைக்குள்ளேயே நாம் கைப்பற்றிய பகுதிகளிற் கணிசமானவற்றை எதிரி மீண்டும் கைப்பற்றிவிட்டான். இத்தாவிலில் தரையிறங்கி நிலைகொண்டிருந்த அணிகள் கேள்விகளோடு காத்திருந்தன.

மறுநாள் விடிவதற்குள் மாற்று ஏற்பாடுகள் செய்தேயாக வேண்டும். சேகரைக் களமிறக்க ஏற்பாடாகியது. அணித்தலைவர்களெல்லாம் ஒன்று கூட்டித் தளபதி தீபன் கதைத்தார். “இது எங்கட ஆயிரம் போராளிகளின் உயிர்ப் பிரச்சனை. நாங்கள் எல்லோரும் உயிரோட இருந்து கொண்டு ஆனையிறவை வீழ்த்தாமால் அவர்களின் அழிவிற்குக் காரணம் சொல்லேலாது. நாங்கள் வென்றுதான் ஆகவேண்டும். இல்லையென்றால் நாங்கள் இதில் முயன்று அழிந்தால் எங்கட பக்கம் நியாயம் இருக்கும்.”

சேகர் போராளிகளையும் தனது பணியையும் எண்ணியவன், எழுச்சிகொண்டவனாக இரவிரவாய்த் தவண்டு புரண்டு தானே வேவுபார்த்தான். மறுநாள் போரின் ஒரு முனையை வழி நடத்திக் களம் குதித்தான். அந்தத் தளத்தை அடுத்து வந்த நாற்பது மணித்தியாலத்திற்குள் வெற்றி கொள்ளப்பண்ணினான் எங்கள் தளபதி சேகர். அப்போது தலைவரின் அனையிறவிற்கான வியூகம் முழுமை பெற்றது.

1998இல் ‘ஓயாத அலைகள்-02’ இன் வெற்றிச் சாதனையிற் சேகரின் பங்கை அறிந்த அனைவரிடமும் பாராட்டுப்பெற்று மகிழ்ச்சியில் திளைத்திருந்தவன், அடுத்துவந்த சில மாதங்களிற் படையணிச் சிறப்புத் தளபதி என்ற பொறுப்பிலிருந்து தலைவரால் எடுக்கப்பட்டான். எதிரித் தளத்தில் எடுக்கப்பட்ட பொருட்களைத் தனது படையணித் தேவைக்காக அனுமதி பெறாமல் வைத்திருந்தமைக்காகத் தண்டனை பெற்ற சேகர், ஓர் அணியின் தலைவனாக நியமனம் பெற்றுச் சிராட்டிக்குளம் காவலரண் பகுதிக்குச் செல்ல நேர்ந்தது. மெல்லிதயம் படைத்த சேகர் தான்விட்ட தவறுக்காக வருந்தினான். தலைவராற் தண்டிக்கப்படும்படியான தவறிழைத்தேனே எனக் கலங்கினான். சிறந்த போராளியான அவன் மீண்டும் படிநிலை வளர்ச்சியடைந்து தலைவர் அவர்களின் நம்பிக்கை பெற்று கேணல் தீபனுக்குத் துணையான தளபதியாக உருவெடுத்து, 2000ஆம் ஆண்டு 6ஆம் மாதம் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாகத் தலைவரால் மீண்டும் நியமிக்கப்பட்டான். அந்தப் புகழ்பூத்த படையணிக்கு மீண்டும் தலைமை பெற்றவன் தலைவரின் எதிர்பார்ப்புகளிற்கேற்பத் தன் படையணியைப் பெரும் தேவை ஒன்றிற்காகத் தயார்படுத்தியபடியிருந்தான்.

‘ஓயாத அலைகள் 04’ மட்டுப்படுத்தப்பட்ட முதல்நாட் சண்டை ஓரளவு வெற்றிகரமாக முடிந்தது. ஆனால்இ ஒரு பணிக்காகச் சென்ற எமது அணியொன்று எதிரியின் சுற்றிவளைப்பிற்குள் அகப்பட்டிருந்தது. மீட்க எடுத்த முயற்சிகள் தோற்றுப் போயின. சேகர் உழலத் தொடங்கினான். சாப்பாடின்றி, நித்திரையின்றி மீண்டும் மீண்டும் முயன்று தோற்றும், விடாது முயன்று தன் வீரர்களை அதிகாலை மீட்டெடுத்த போது அவன் அடைந்த மகிழ்ச்சியை எழுதி உணர்த்திவிட முடியாது. தன் போராளிகள் மீது அவன் கொண்ட அன்பு சாதாரணமானான்று. அதனால்தான் அவனது பிரிவை மரணகளத்துள் வாழும் போராளிகளாற்கூடத் தாங்கமுடியவில்லை. மக்கள் தம் பிள்ளைகளை, உறவுகளையெல்லாம் போராட விட்டுவிட்டு, இந்த ஊர் உலகத்தில் உள்ள கோவில் குளமெல்லாம் ஏறித்திரிந்து, நேத்தி வைத்து, பசிகிடந்து, தவமிருந்து எங்காவது சண்டை மூண்டால் நித்திரை விழித்து எப்படியெல்லாம் பதைபதைப்பார்களோ அத்தனை அக்கறை தன் போராளிகள் மீது தளபதி சேகருக்கு இருந்தது.

Commander-Lt.-Col-Sekar-05.jpg

“சேகரப்பா” என்று போராளிகள் தமக்குள் கதைக்கும் 25 வயதேயான ‘குழந்தை’த் தளபதி தன் நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்தவை.

“தமிழீழம் கிடைத்தாப் பிறகு என்னோட நிண்டு சண்டை பிடிச்ச எல்லாப் பெடியள் வீட்டையும் போகவேணும். அவங்களின்ர அம்மா, அப்பா, சகோதரங்கள் எல்லோரோடையும் அவையின்ர கவலைதீரக் கதைக்கவேணும் என்பதே என் ஆசை. இனித் தெய்வத்தின் சிந்தனைப் படியே எல்லாம் நடக்கும். அது நடக்கும் என்றே நம்புகின்றேன்” (10.06.1998 ).

‘ஓயாத அலைகள் 04’, மீண்டுமொரு பாய்ச்சலுக்கான ஆயத்தம். எதை இழந்தும் இதைப் பிடித்தே தீருவேன் எனத் தலைவரிடம் சொல்லிவிட்டு வந்ததை தனது அருகிலிருந்த போராளிகளிடம் சொல்லியிருந்தான் சேகர். ஒழுங்குபடுத்தல் எல்லாம் முடிந்தது. காலை விடிந்து விட்டாற் சமர் வெடிக்கப் போகிறது. தளபதி தீபனிடம் வந்தவன், “அண்ணை எல்லாம் சரி. எதுக்கும் ஒருக்கால் இண்டைக்கு இரவுக்குப்போய் பாதையெல்லாத்தையும் வடிவாய்ப் பார்த்து விட்டு வந்தால்தானண்ணை நிம்மதியாய் இருக்கும்” எனக்கேட்டு அனுமதிபெற்று வந்தான்.

வேவுக்காக வெளிக்கிட்டுப் போனவன் சற்று நேரத்திலேயே வெடிவிழுந்து உடல் சல்லடையாகக் காயத்தோடு தூக்கி வரப்பட்டான். எப்படியாவது காத்துவிடவேண்டுமென்ற துடிப்போடு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான். நான்கு நாட்களாக உயிருக்குப் போராடிய அவன் இறுதியில் தன் தாய்நாட்டுக்காகத் தன்னை இழந்தான்.

நினைவுப் பகிர்வு: அ.பார்த்தீபன்.
நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (ஐப்பசி – கார்த்திகை 2001), நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள் நூல்.

 

https://thesakkatru.com/charles-anthony-brigade-special-commander-lieutenant-colonel-sekar/

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் சேகர் வீரத்தின் உச்சம்

 

Commander-Lt.-Col-Sekar-03.jpg

லெப். கேணல் சேகர்: வீரத்தின் உச்சம்

மனித வாழ்வியலில் விடுதலை என்பது உயிரின் தாகமாக உள்ளது. ஆனால் தாயகப் பற்றுகொண்ட விடுதலைப்போராளிக்கோ “விடுதலையே ஆன்ம பசியாகி விடுகிறது” இங்கு தான் ஒரு உண்டையான விடுதலைப் போராளி தன் உயிரை தாய் மண்ணிற்கென்றே ஒப்புவிக்கிறான். தனது தாயகப் பற்றுக்கும் இலட்சியப்பற்றிற்குமான உலகிலேயே உயர்ந்த விலையான உயிர் விலையை கொடுக்க முன்வருகிறான்.

தான் நேசித் தாயக மண்ணிற்காக தனது உயிரை மயிர்கூச்செறியும் படி தந்த மாவீரன் வீரவேங்கை லெப்ரினன் கேணல் சேகர் விடுதலை வரலாற்றில் வித்தியாசமான வரலாற்றை படைத்தான்.

ஓயாத அலைகளென எழுந்த களங்கள் மேலும் ஓர்படி மேலே சென்று ‘ஓயாத அலைகள் 04’ என்று பட்டப்பகலில் எதிரியை துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் அரிய வலுவை புலிகளுக்கு ஏற்படுத்தியது. அந்த களம் சிறப்பாக வெற்றி கொள்ளப்படுவதற்காக மாவீரன் சேனர் தனது களப்பணியை செய்தான். ‘ஓயாத அலைகள் 04’ கிற்கான வேவு நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமிருக்க தன்னையே நம்பி தலைவன் கடமையை ஒப்படைத்துள்ளான். எனவே அதை சீர்பட செய்து முடிக்கவென உறுதி எடுத்தான்.

18.10.2000 அன்று வழமை போலவே வேவு அணிகள் பல எதிரியின் காவலரண் பிரதேசத்திற்கு முன்பாக தமது வேவு நடவடிக்கையை செய்யலாயின, நாகர் கோயில் கடற்கரையை அண்டிய பிருதேசத்திற்கு தமிழ்க்கண்ணனின் வேவும் அணியும் நகர்ந்து விட்டது. மாலை 5 மணிக்கு வேவு அணிதனது கடமைக்கென சென்ற அணி தனது அன்றைய நாளின் கடமையை செய்து விட்டு குறிப்பிட்ட சேரிடம் வந்தது. எல்லாமே சரியாக பார்க்கப்பட்ட வேவு முழு வடிவை தந்தது.

என்றாலும் தனது பணியை சரிவரச் செய்யவேண்டுமென் தனக்கேயுரியதும், தனித்தவமானதுமான கடமையுணர்வுடன் மாவீரன் லெப். கேணல் சேகர் முன்னகர்கிறான். நேரம் இரவு 02 மணியாகி இருந்தது. நாகர் கோயில் கடல் அலைகள் கரையுடன் மோதும் மெலிதான சத்தத்தை தவிர வேறு ஓசையே எழவில்லை.

சேகர் அப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்தான். ஆனால் அவனிடம் எளிமையும், தாயகப்பற்றும் கலங்கமில்லாது இருந்தது. எனவேதான் தானே முன்சென்று அந்த வேவுப்பாதையை உறுதிப்படுத்தச் சென்றான். காரணம் தன்னை நம்பியே ஏராளமான போராளிகள் அந்த பாதையூடாக செல்லவிருந்தனர்.

தளபதி சேகர் இரவு 2 மணிக்கு முன்செல்வதாக அறிவித்தும் அவரோடு கூட இருந்த போராளிகளான நகுலனும், முத்தழகும் செல்லத் தடை விதிக்கின்றனர்.

சேகரண்ணை நாங்கள் சென்று பாதையை உறுதிப்படுத்துகிறோம்.

அந்த சாதரண வேலையை எங்களிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் போய் வருகிறோம் என்றதும் இல்லை இல்லை யாரும் என்னைத் தடுக்க வேண்டாம் நான் தான் போகவேண்டும்; நான் போய் உறுதிப்படுத்தினால் தான் நல்லது.

என்று சொன்னவன் அந்த கருமிருட்டில் தனது சுடுகருவியுடனும், நடைபேசியுடனும் முன்னே செல்கிறான். அங்கு வேவு அணியிலுள்ள ஒரு போராளி முன்வந்து வழிகாட்ட அவனைத் தொடர்ந்து கப்டன் மதியும், சேகரும், முத்தழகனும், நகுலனும் முன் செல்கின்றனர்.

வேவு அணியுடன் சென்று எதிரியின் பிரதேசத்தை அதாவது அணிகள் கவலரணுக்கு 60 அடி தூரத்தில் எதிரியின் நடமாட்டத்தை அவதானித்தவாறே இருக்கின்றனர். தளபதி சேகரும் எதிரியின் குகைவாசலில் எதிரியை மிக அண்மித்து அவதானித்தவாறு இருக்கிறான். பல மணித்தியாலங்க்ள எதிரியின் நடமாட்டத்தை அவதானித்தவன், நேரம் அதிகாலை 4.30 தாண்டியும் எழுந்து வருவதாய் இல்லை. அங்கிருந்த போராளிகளுக்கோ பதற்றமாய் இருந்தது. அவர்கள் தங்களது தளபதியின் பாதுகாப்பை பற்றி யோசித்தனர். ஆனால் தளபதி சேகரோ தாய் நாட்டின் பாதுகாப்பை பற்றி யோசிக்கலானான்.

சேகரண்ணை 5 மணியாகப்போகுது விடிஞ்சுட்டுது. எதிரி கண்டிருவான். வாங்கள் போவோம் என்றனர்.

இன்னும் கொஞ்சநேரம் பார்ப்பம். காரணம் இதுவரை இரவு சண்டைக்கு ஏற்றமாதிரி பார்த்ததேன். அது 100 வீதம் சரி இனி பகல் சண்டைக்கு ஏற்றமாதிரி பார்க்கவேணும் காரணம் பகல் சண்டைக்குதான் சரிவரும் என்று மேலும் சில நிமிடங்கள் அவதானித்த கொண்டே இருந்தவன். போவோமென சொன்னபோதுதான் அது நடந்தேறியது.

நேரம் சரியாக 5.20 நிமிடம் வேவு அணிக்கு வெளியேறும் படி கட்டளை வழங்கிவிட்டு எழுந்தவன். திடீரென எதிரியின் எதிர்த் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. எதிரியின் அணி ஒன்று திடீரென தாக்குதலை தொடுக்க, தளபதி சேகர் காயமடைந்துவிட்டான். அவர்களுக்கு சற்று பக்கவாட்டாக இருந்த எதிரியே தாக்குதலை தொடுத்திருந்தான். அந்த எதிரியின் அணி இரவு முன்னகர்ந்து நித்திரை கொண்டிருக்க வேண்டும் காரணம் விடிந்த பிறகே தாக்குதலை தொடுத்திருந்தான்.

தளபதி சேகர் காயமடைய அவ்விடத்தில் ஓர் பதற்றம் ஏற்பட்டது. திடிரென நிலைமையை சுதாகரித்துக்கொண்ட முத்தழகு சேகரை மீட்கமுயற்சி செய்ய அவ்விடத்திலேயே முத்தழகும் காயப்படுகிறான். நிலைமைக்கேற்ப நகுலன் அதிலிருந்த அணிகளை கொண்டு ஒரு பதில் தாக்குதலை தொடுத்து தளபதி சேகரையும், முத்தழகையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்பே, தளபதி சேகர் தனது உடலை துளைத்த பெரிய காயங்களையும் பெரிதுபடுத்தாது தென்னரசனின் 81 மி.மீ ஏவுகருவி நிலையைத்திற்கு தொடர்பெடுத்து எறிகணை அடிக்கச் சொல்லி அறிவித்தான்.

மச்சான் எங்களுக்கு முன்னால் இருந்து தான் அடிக்கிறான். தொடர்ச்சியாக அதெ இடத்திற்கு அனுப்பு. என்று அறிவித்து விட்டு வேகமாக அடி மச்சான் டெய் தென்னரசன் வேகமாக அடி என்ற கட்டளையை வழங்குகின்றான். தளபதி சேகரின் கட்டளையை, அவனது நடைபேசி உரையாடலை நன்க கேட்ட தென்னரசன் தளபதி சேகருக்கு ஏதோ நடந்துவிட்டது என்று திடமான முடிவை எடுத்து சேகர் சொன்ன இலக்கிற்கு மாறி மாறி எறிகணைகளை ஏவினான். அதே சமநேரத்தில் அந்த இடத்திலிருந்து சேகரும், முத்தழகும் அப்பபுறப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

தனது உடலை பல ரவைகள் துளைத்த போதும், தனது உடலிலிருந்து குருதி பெருக்கெடுத்து ஓடியபோதும் தன்னை காப்பாற்று என சொல்லாதவன், எதிரியை தாக்குவதிலேயே கவனம் செலுத்தினான் என்பதும் வெறும் வரிகளல்ல மாவீரன் சேகரின் உடலில் ஊறிப்போயிருந்த தமிழீழப்பற்றாகும. தனது வாழ்விலும் ஏன் சாவிலும் எதிரியை எதிர் கொண்ட அந்த மாவீரனான லெப். கேணல் சேகர். (மாயண்டி ஜெயக்குமார், கோணவில்) 23.10.2000 அன்று எமது படைய மருத்துவ மனையில் வீரச்சாவடைந்தான்.

இவனது வீரச்சாவு எத்தனை எத்தனையோ வீரவரலாற்றினை எமக்குக் கற்றுத்தந்திருக்கிறது.

1990 ஆம் ஆண்டு தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டவன். மாங்குள முகாம் தகர்ப்பின் போதே காவுங்குழுவில் தனது பணியை சிறப்பாக செய்து பின்னாளில் சிறப்பானதொரு படையணியின் சிறப்புத் தளபதியாகும் நிலைக்கு உயர்ந்திடும் அற்புதமான போராளி என்ற உரிமைக்கு ஆளானான்.

ஒவ்வொருவரினதும் வாழ்விலும் அவர்களின் முன்னனேற்றத்திற்கு அவர்களின் உழைப்பே முன்னிற்கும் தளபதி சேகரின் வரலாற்றிலும் அவ்வாறே சேகரின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் தளபதி தீபன் அவர்களே முதன்மையாக இருந்தார். சிறிய சிறிய விடயத்திலும் சேகரின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் ஊக்கம் கொடுத்து வீரத்தையும் போர்நுணுக் கத்தையும் ஊட்டிவளர்த்து சாதாரண ஜெயக்குமாரை மாவீரன் சேகராக மாற்றிய பெருமை தளபதி தீபன் அவர்களேயே சேரும்.

Commander-Lt.-Col-Sekar-02.jpg

சேகர் அவர்களின் போர் நுணுக்கம், போரியல் அனுபவம் என்பனவற்றிற்கும், எதிரியை சரியாக அளவிட்டதற்குமாக எத்தனையோ உதாரணங்களைச் சொன்னாலும் மாவீரன் சேகரின் நினைவு என்றுமே மறக்க முடியாமல் நெஞ்சில் நிழலாடுகிறது.

ஜெயசிக்குறு களம் விரிந்து கிடக்க தளபதி சேகர் அக்களத்திலே சிறகு நிலைக்கு (சிறகு பொயிசன்) பொறுப்பாளர் தளபதி தீபனால் நியமிக்கப்பட்டிருந்தார். குறித்த நாளொன்றில் சிறகு நிலையை பார்த்துவிட்டு புளியங்குளம் முகாமை நோக்கி வந்தபோது புளியங்குள மாவித்தியாலய மைதானத்தை நெருங்கிய போது எதிரியின் 81 மி.மீ, 60 மி.மீ ஏவுதளங்கள் திடீரென உயிர்பெற்றன. டுப்,டுப்,டுப், டம்,டம் என்றதும் சேகர் நிலைமையை உணர்தவனாய்.

அடிக்கடி போறான் வங்கருக்க பாயுங்கோ என்றதும் சேகரோடு வந்த நாம் பாய்ந்த நிலையெடுக்கவும் எதிரியின் பீ.கே சுடுகருவிகள் 03.04 வேட்டைத்தீர்க்கவும் சரியாக இருந்தது. அதேவேளை எதிரி ஏவிய எறிகணைகள் பரவலாக வெடிக்கத் தொடங்க, சேகர் தன்னோடு கூடவந்தவனிடம் டொங்கதனை வாங்கி எழுந்து நின்று 02 40மி.மீ எறிகணைகளை அடித்தான். சேகர் சடுதியாக தேர்தெடுத்து அடித்த அதே இடத்தில் திடீரென எதிரியின் பீ.கே சூடு நின்றுபோக,

எழும்பி ஓடிவாங்கோ இந்த இடத்த தூளக்கபோறான் என்று ஓடத்தொடங்கியவனை தொடர்ந்து நாமும் ஓடினோம்; எறிகணைகள் விழவிழ புகையிரத வீதியால் ஓடி புகையிரத பால்ததில் காப்பெடுத்தோம். எதிரியின் எல்லாவித எறிகணைகளும் கலவனாக வந்து வீழ்ந்து வெடித்து ஓய்ந்ததும் அவ்விடத்தை பார்த்தோம் . உண்மையில் அந்த இடம் சாம்பராகி இருந்தது. எதிரி எந்த இடத்தில், எதை எப்படி, எந்த வியுகத்தில் செய்வான் என்பதை சேகர் தனது போர்நுணுக்கத்தினால் நன்கு கணிப்பிட்டிருப்பது அவனது சிறப்புத் தேர்ச்சியாகும்.

சேகரின் திறமைக்கு இன்னுமொரு சாட்சி சேகரின் வழிநடத்தலில் ‘ஓயாத அலைகள் 02’ இன் முலம் கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி முன்னரங்க கட்டடப் பகுதியால் நிரப்பப்பட்ட எதிரியின் முதலாம் நிலை கட்டளை மையத்தை கைப்பற்றியதாகும்.

தனது தனித்துவமானதும், இயல்பான வீரத்திலும் எளிமையாக கட்டளையை வழங்கி இலங்கை இராணுவ மேல் நிலை கவ்வியையும் நீண்ட படைய அனுபவத்தையும் கொண்ட கேணல் உபாலி எதிரி சிங்கவை பின்வாங்க வைத்ததன் ஊடாக சேகர் ஓர் போர் அதிகாரி என்பதனை உறுதிப்படுத்தினான். சிறுவயதிலேயே போராளியாக இணைந்தவன் சிறு வயதிலேயே சிறந்தொரு வேவு வீரனாகவும், வீரம்மிக்க சண்டை ஆற்றல் கொண்டவனுமாக வளர்ந்து மாவீரன் லெப். கேணல் அவர்களின் உயர்நிலை படைய கற்கை நெறியிலும் பங்கேற்று புதியதொரு அறிவாற்றலை பெற்றதனால் தொடர்ந்து இயக்கத்தில் நடந்த அனைத்துத் தாக்குதல்களிலும் திறம்பட சண்டை செய்து பல வெற்றிகளை பெற்றுத்தந்து விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்கினான்.

ஆரம்பத்தில் 50 கலிபர் துப்பாக்கி அணியில் ஒருவனாக களமிறங்கியவன் தனது அயராத உழைப்பினால் பல 50 கலிபர் கொண்ட பெரிதொரு சண்டை அணிகளுக்கே பொறுப்பாளனாக உயர்ந்தான். தன்னைப் போலவே போராளிகளையும் நேசித்தவன். ஒவ்வொரு போராளிகளினதும் தனிப்பட்ட குடும்ப நலன்களில் அக்கறை உள்ளவனாகவே இருந்தான் பல போராளிகளை வீரமிகு சண்டைக்காரர்களாகவும், அணித்தலைவர்களாகவும் வளர்த்துவிட்ட பெருமை அவனையே சாரும்.

Commander-Lt.-Col-Sekar-01.jpg

எந்தச்சண்டைக்கும் முன் நின்று உழைத்தவன் கிளிநொச்சி டிப்போசந்தி சண்டைக்கும், ‘ஓயாத அலைகள் 02’ சண்டைக்கும் முன் நின்றே உழைத்ததோடு அதையும் கடந்து தடை அணியோடு முன்னகர்ந்து தடை உடைக்கும் மட்டும் அவ்விடத்திலேயே நின்று தனது கட்டளைப் பீடத்தை செயற்படுத்தியதை இலகுவில் எவராலும் மறக்கமுடியாது. 1998 ஆம் ஆண்டு 2ஆம் மாதச் சண்டைக்கு மீனாட்சிஅம்மன் கோயிலடியில் தடை உடைத்து அணி உள்நுழையும் போது அணிகள் நகர்கின்ற பாதையில் ஒரு பாழடைந்த கிணறு இருந்தது. அதில் போராளிகள் விழுந்து விடாதவாறு அதற்குப் பக்கத்திலேயே இருந்து தம்பி கவனமடா, டேய் கவனமடா, மச்சான் கவனமடா, அண்ணை கவனம் என்று சொல்லி சொல்லி அனுப்பிய அந்தத் தளபதியை போராளிகளால் என்றுமே மறக்க முடியாது. அந்தளவு பாசமும் பற்றும் அவனில் உருவாகி இருந்தது.

சேகர் இந்தத்த தேசத்தை காக்கவென பல சிறிய தாக்குலென ஏராளமான சண்டை செய்து அதில் காயமடைந்தம் வீரச்சாவடையும் வரையும் வீரமுடன் களமாடினான். தன் தாய்நாட்டை, தன் தலைவனை, தனது போராளிகளை, தனது உறவையென எல்லோரையும் நேசித்தான். தமிழீழம் கிடைத்தால் எல்லா மாவீரரின் வீட்டையும் போய் அவர்களின் உறவுகளோடு அவர்களின் வீரத்தை சொல்லவேண்டும்மென தனது நாட்குறிப்பில் எழுதியவன். தன் வீரத்தை உலகிற்கு சொல்லி தமிழனின் வீரத்திருவேட்டில் காவியமாகிவிட்டான்.

நினைவுப்பகிர்வு: க.மிரேசு.
நன்றி – வெள்ளிநாதம் இதழ் (21-27.10.2005).

 

https://thesakkatru.com/the-pinnacle-of-lieutenant-colonel-sekar-heroism/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.