Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

டிசம்பர் மாதம் வானில் தோன்றும் அற்புத நிகழ்வுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
  • இவா ஒண்டிவெரோஸ்
  • பிபிசி உலக சேவை
11 டிசம்பர் 2020
The milky way at Durdle Door, Dorset, UK

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெரும்பாலானவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு பிடித்திருக்காது.

ஆனால் நட்சத்திரங்களைப் பார்க்கும் விஷயத்திலாவது, இந்த ஆண்டு ஆர்வம் தருவதாக இருக்கும். இந்த டிசம்பர் மாதம் வீட்டில் இருந்தே டெலஸ்கோப் அல்லது விலை அதிகமான சாதனங்களின் உதவியில்லாமல் நேரடியாக விண்வெளியில் பார்க்கக் கூடிய அற்புதமான சில காட்சிகள் நிகழ இருக்கின்றன.

இரண்டு கோள்கள் ஒன்றாக சேர்வது, எரிகற்கள் பொழிவது, முழு சூரிய கிரகணம் - இவற்றைக் காண வானம் தெளிவாக இருந்தால் போதும், தேவை இருந்தால் கண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். எப்போது, எந்தப் பக்கம் பார்க்க வேண்டும் என வழிகாட்டுதல்கள் தேவை. இந்த மாதம், வான்வெளி உங்களுக்கு அளிக்கப் போகும் காட்சிகளின் தேதிவாரியான பட்டியல் இதோ:

டிசம்பர் 13 - 14: எரிகற்கள் பொழிவு - உலகம் முழுக்க தெரியும்

எரிகற்கள் பொழிவு - உலகம் முழுக்க தெரியும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மற்ற விண்கற்களை கடந்த சில மாதங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் ``எரிகற்கள் மழையாகப் பொழியும் காட்சியைக் காண'' உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

``வால் நட்சத்திரங்கள் விட்டுச் செல்லும் தூசிமண்டலத்தின் வழியாக பூமி செல்லும் போது எரிகற்கள் பொழியும் நிகழ்ச்சி நடைபெறுகிறது'' என்று பிரிட்டன் ராயல் அப்சர்வேட்டரி கிரீன்விச் மையத்தில் உள்ள வானிலை நிபுணர் பாட்ரிசியா ஸ்கெல்ட்டன் தெரிவித்தார்.

``ஆனால் ஜெமின்டிஸ் எரிநட்சத்திர பொழிவு வித்தியாசமானது - 3200 பேட்டன் என்ற வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மண்டலமாக இது இருக்கிறது'' என்கிறார் பாட்ரிசியா.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் நமது பூமி இந்த கைவிடப்பட்ட குப்பைகளின் வழியே பயணிக்கும்போது, இரவு நேரத்தில் ஒளிமயமான காட்சிகளைக் காண்கிறோம்: டிசம்பர் 1 முதல் 14 தேதி வரை அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்கு 150 எரிநட்சத்திரங்கள் வீழும்.

எரிகற்கள் பொழிவு - உலகம் முழுக்க தெரியும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

``எரிநட்சத்திரங்கள் ஒரு விநாடிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழையும். அதாவது ஒரு மணி நேரத்துக்கு சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கி.மீ. வேகத்தில் வரும்'' என்று பாட்ரிசியா தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது மஞ்சள் நிறத்தைக் காண தயாராக இருங்கள். சில நேரம் இது பச்சை அல்லது நீல நிறமாகவும் இருக்கும். இரவு நேர வானில் பெரிய வெளிச்சக் கீற்று கடந்து போகும். ``எரிநட்சத்திரங்கள் பறந்த நிலையில் எரிந்து விழும்போது எல்லா திசைகளிலும் இந்தக் காட்சி தோன்றும்'' என்று அவர் குறிப்பிட்டார்.

கும்மிருட்டாக இருந்தால், இந்த அழகிய காட்சியை அருமையாகக் காண முடியும் ஆனால் ஒளி மாசு நிறைந்த நகர்ப்புறங்களில் இந்தக் காட்சியை ஓரளவுக்கு தான் காண முடியும்.

இன்னும் கொஞ்சம் நல்ல செய்தியும் இருக்கிறது. கடந்த ஆண்டைப் போல அல்லாமல் (பவுர்ணமியுடன் சேர்ந்து வந்தது), இப்போது அமாவாசையில் வருவதால் காட்சி நன்றாகத் தெரியும்.

டிசம்பர் 14: சிலி, ஆர்ஜென்டினாவில் முழு சூரிய கிரகணம்

எரிகற்கள் பொழிவு - உலகம் முழுக்க தெரியும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிலி மற்றும் அர்ஜென்டினாவில், டிசம்பர் 14-ம் தேதி முழு சூரிய கிரகணம் தோன்றும்.

இருந்தாலும் இன்டர்நெட் மூலமாக லைவ் ஸ்டீரிமிங் செய்வதால் எல்லோரும் பார்க்கலாம்!

பெருந்தொற்று பாதிப்புக்கு முன்பாக இருந்திருந்தால், இந்த மாபெரும் நிகழ்வைக் காண தெற்கு சிலியில் படகோனியா மற்றும் ஆர்ஜென்டினாவில் மக்கள் திரண்டிருப்பார்கள்.

ஆனால் இந்த 2020 ஆம் ஆண்டில் எல்லோரும் ஆன்லைனில்தான் பார்க்க வேண்டும்.

நேரடியாக சூரிய கிரகணத்தைப் பார்க்கும் இடத்தில் நீங்கள் இருந்தால், ஒருபோதும் நேரடியாகப் பார்க்காதீர்கள் - பாதுகாப்பு கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள்.

முக்கியமான அந்த 24 நிமிடங்களில், நிலவு சூரியனைக் கடந்து செல்லும். அப்போது ``2 நிமிடங்கள் 9.6 விநாடிகள் மட்டும்'' முழுமையாக சூரியனை மறைக்கும் என்று ராயல் அப்சர்வேட்டரி கிரீன்விச் வானிலை ஆய்வாளர் டானியா டி சேல்ஸ் மார்க்கஸ் தெரிவித்தார்.

``சூரியனைவிட நிலவு 400 மடங்கு சிறியது. ஆனால் பூமிக்கு அருகில் இருப்பதால், அது பெரியதாக இருப்பதைப் போல நமக்குத் தோன்றும். எனவே சூரியனின் வட்டத்தை அது முழுமையாக நமது பார்வையில் இருந்து மறைத்துவிடும்'' என்று டானியா விளக்கியுள்ளார்.

எரிகற்கள் பொழிவு - உலகம் முழுக்க தெரியும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூரியனுக்கு முன்னால் நிலவின் பயணப் பாதை கும்மிருட்டு திரை போல ஒன்றை உருவாக்கும். இதை தெற்கு அமெரிக்காவின் தெற்கு முனையில் பகலிலேயே காண முடியும்.

படகோனியாவில் வாழும் மாபுச்சே என்ற உள்ளூர் பகுதி மக்கள் இந்த வானியல் மாற்றங்களை மிக நெருக்கமாகக் கவனிக்க முடியும்.

``சூரியன் `ஆண் சக்தியை' குறிப்பிடுகிறது. நிலவு `பெண் சக்தியைக்' குறிப்பிடுகிறது. அவை இரண்டும் கடக்கும் போது ஏற்படும் சூழ்நிலை நமக்கு மிக முக்கியமானதாக இருக்கும்'' என்று அந்த மக்களின் கலாச்சார கல்வியாளர் மார்செலோ ஹியூகுவென்மன் தெரிவித்தார்.

பாரம்பரியமாக, மாபுச்சே மக்கள் சூரிய கிரகணங்களை அச்சத்துடன் பார்த்து வருகிறார்கள். ``சூரியனின் மரணம்'' என்ற வகையில் அவர்கள் அதைக் கருதுகிறார்கள் என்கிறார் மார்செலோ.

``உலகெங்கும் சுமார் 5,000 ஆண்டுகளாக சூரிய கிரகணம் பற்றிய தகவல்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளன'' என்று டானியா தெரிவித்தார்.

``சூரியன் விழுங்கப்படுவது போல தோன்றும் சில நிமிடங்கள் இரவு போல ஆகிவிடுவதால், சூரிய கிரகணத்தை கெட்ட விஷயமாக வரலாற்றின் பெரும்பகுதி காலத்தில் கருதப்பட்டதைப் புரிந்து கொள்ள முடிகிறது'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

``ஒரே ஆண்டில் ஐந்து முறை சூரிய கிரகணங்கள் நிகழக் கூடும். ஆனால் முழு சூரிய கிரகணம் 18 மாதங்களுக்கு ஒரு முறைதான் நிகழும். சூரியனின் ஒளியை முழுவதுமாக மறைப்பதற்கான சரியான பாதையில் நிலவு வரும் போதுதான் அது நிகழும்'' என்று டானியா கூறினார்.

எனவே முன்கூட்டியே நீங்கள் திட்டமிடுவதாக இருந்தால், அடுத்த முழு சூரிய கிரகணங்களை காண்பதற்கான இடமும், காலமும்: அன்டார்டிகா (டிசம்பர் 2021), இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா (ஏப்ரல் 2023), அமெரிக்கா மற்றும் கனடா (ஏப்ரல் 2024), தெற்கு ஐரோப்பா மற்றும் கிரீன்லாந்து (ஆகஸ்ட் 2026) மற்றும் வட ஆப்பிரிகாவின் பெரும்பகுதி மற்றும் மத்திய கிழக்குப் பகுதி (ஆகஸ்ட் 2027).

டிசம்பர் 21: வியாழன், சனி கோள்கள் சேர்க்கை, உலகம் முழுதும் தெரியும்

எரிகற்கள் பொழிவு - உலகம் முழுக்க தெரியும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

``வியாழன் மற்றும் சனி கோள்கள் வானில் அழகாக, வெளிச்சமாகத் தெரிவதால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்'' என்று ராயல் அப்சர்வேட்டரி கிரீன்விச் வானியலாளர் எட் புளூமர் தெரிவித்தார்.

இரு கோள்களும் ஒன்றாக சேருவது போல, இரண்டும் ஒன்றாக ஒளிர்வது போல இந்த சேர்க்கை இருக்கும்.

இதை நாம் டிசம்பர் 21 ஆம் தேதி இரவு பார்க்கலாம். ``வானில் வியாழன் மற்றும் சனி கோள்கள் மிக நெருக்கமாக, ஏறத்தாழ தொட்டுக் கொள்வதைப் போல தெரியும்'' என்று எட் புளூமர் கூறினார்.

வெறும் கண்களால் பார்க்கும்போது இரு கோள்களும் 0.1 டிகிரிக்கும் குறைவான அளவுக்கு நெருக்கமாக இருப்பது போல தெரியும். ஆனால் உண்மையில் அப்படி இருக்காது. வியாழனுக்கும் பூமிக்கும் இடையில் 800 மில்லியன் கி.மீ. தூரம் உள்ளது (சுற்றுப் பாதையில் எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பொருத்து இது மாறும்). வியாழன் மற்றும் சனி கோள்களுக்கு இடையிலும் இதே நிலைதான் இருக்கும். ஆனால், சில மாதங்களாக, இரு பெரும் கோள்களும் இரவு நேர வானில் நெருங்கி வருவது போல தோன்றியது, இப்போது இறுதியில் ``சந்தித்துக் கொள்வது'' போல தோன்றும்.

``இது மாதிரி சேர்க்கைகள் பார்ப்பதற்கு மகிழ்வாக இருக்கும். குறிப்பாக சேர்க்கைக்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் நெருங்கும்போது எப்படி மாற்றம் நிகழ்கிறது என்பதைப் பார்க்க நன்றாக இருக்கும்'' என்று புளூமர் கூறினார்.

உங்களிடம் பைனாகுலர் அல்லது சிறிய டெலஸ்கோப் இருந்தால், வியாழனின் நான்கு பெரிய நிலவுகளையும் நீங்கள் பார்க்க முடியும்.

இவை கலீலியோ நிலவுகள் எனப்படுகின்றன. 1610 ஆம் ஆண்டில் இத்தாலிய வானியலாளர் கலீலியோ கலீலெய் சில மாதங்களுக்கு முன்பு தாம் உருவாக்கிய புதிய டெலஸ்கோப் மூலம் இவற்ரைக் கண்டுபிடித்துக் கூறியதால் அவரது பெயரில் குறிப்பிடப் படுகின்றன.

எரிகற்கள் பொழிவு - உலகம் முழுக்க தெரியும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வியாழன் - சனி கோள்களின் சேர்க்கை 19.6 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நிகழும். ``ஆனால் 17வது நூற்றாண்டுக்குப் பிறகு இப்போது நிகழும் சேர்க்கைதான் மிக நெருக்கமானதாக இருக்கும் என்பதால் இது சிறப்பானதாகக் கருதப்படுகிறது'' என்று புளூமர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு வியாழனும், சனியும் மிக நெருக்கமாக 397 ஆண்டுகளுக்கு முன்பு (1623-ல்) வந்தன

இந்த நிகழ்வு பற்றி வானியலாளர்களும், நட்சத்திர ஆய்வாளர்களும் உற்சாகமாக இருப்பதில் வியப்பு எதுவும் இல்லை. ``வாழ்நாளில் ஒரு முறை மட்டும் கிடைக்கும் வாய்ப்பாக இது இருக்கும்'' என்கிறார் புளூமர்.

``கோள்களின் நகர்வைக் கவனிப்பதன் மூலம், விண்வெளிக்கு நாம் செல்வதற்கு முந்தைய காலத்திலேயே சூரிய மண்டலத்தைப் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது'' என்று அவர் குறிப்பிட்டார்.

``இந்த கோள்களின் நகர்தல், அவை வெளிப்படுத்தும் ஒளி ஆகியவற்றைக் கவனித்தல், விண்வெளி ஆய்வுக்கு கட்டமைப்பு வசதிகளை நிறுவியது ஆகியவை புவியில் ஏராளமான முன்னேற்றங்களைக் காணவும், புதுமை படைப்புகளை உருவாக்கவும் உதவியுள்ளன'' என்றார் அவர்.

வானம் தெளிவாக இருந்தால், பார்ப்பது எளிதாக இருக்கும். ஆனால் சீக்கிரமாக அந்த நிகழ்வைப் பார்த்துவிட வேண்டும். அந்தக் கோள்களின் சேர்க்கை ஒரு மணி நேர இடைவெளிக்குள் நிகழ்ந்துவிடும். பிறகு கீழ்வானில் மறைந்துவிடும்.

முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்கு முந்தைய சில இரவுகளில் வானைப் பார்த்து, அவை எங்கே இருக்கின்றன என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும். அது உங்கள் நேரத்தை அழகாக செலவிடுதலாகவும் இருக்கும். இப்படி செய்வதால், சூரிய மறைவுக்கு அரை மணி நேரம் கழித்து தென்மேற்கு அடிவானில் இதைக் காணலாம். அது உங்கள் பகுதியில் எந்த இடத்தில் வரும் என்பதை முன்கூட்டியே பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

இன்னொரு போனஸ் கூட இருக்கிறது. டிசம்பர் 21 ஆம் தேதி சூரியனின் பயணப் பாதை திரும்பும் நாளாகவும் இருக்கிறது.

சூரிய கிரகணம் முதல் சனி - வியாழன் சேர்க்கை வரை: டிசம்பர் மாதம் வானில் தோன்றும் அற்புத நிகழ்வுகள் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சனியும் வியாழனும் முட்டிக்கொள்ளுமா?

saturn-and-jupiter  
 

வானத்தைப் பார்த்தபடியே ஒருவர் தனது ஆயுளைக் கழித்துவிடலாம். அவ்வளவு அதிசயங்களை அது நமக்கு அள்ளித்தருகிறது. அதன் இன்னொரு அதிசயமாக, வருகின்ற டிசம்பர் 21 மாலை சனிக் கோளும் வியாழன் கோளும் ஒன்றையொன்று கட்டி அணைத்தபடி நெருங்கி இருப்பது போன்ற அரிய வானக் காட்சி தென்படவிருக்கிறது. சூரியன் மறைந்து அந்தி சாயும் வேளையில் தென்மேற்குத் திசையில் சனிக் கோளுக்குக் கைகொடுத்து நட்புடன் சந்திப்பதுபோல வியாழன் கோள் நெருங்கி இரண்டும் ஒரே ஒளிப் புள்ளியாக ஒளிரும். ஜூலை 16, 1623-க்குப் பிறகு, கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகள் கடந்த பின்னர் சனியும் வியாழனும் இவ்வளவு நெருக்கமாக நிலைகொண்டு அற்புத வானக் காட்சியை நமக்குத் தரவுள்ளன.

உண்மையிலேயே இரண்டு கோள்களும் ஒன்றையொன்று முட்டி மோதிக்கொள்ளாது. வியாழன் புவிக்குச் சற்று அருகே உள்ள கோள். அதைவிட சனி தொலைவிலுள்ள கோள். டிசம்பர் 21 அன்று இந்த இரண்டு கோள்களுக்கு இடையே சுமார் 60 கோடி கிமீ தொலைவு இருக்கும். ஆயினும் பூமியிலிருந்து காணும்போது இரண்டும் ஒன்றையொன்று உரசிக்கொண்டு நிற்பது போலக் காட்சி தரும்.

 
 
 

சூரியனைச் சுற்றிக் கோள்கள் வலம்வரும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தற்செயலாகப் பூமியும் வேறு இரண்டு கோள்களும் சற்றேறக்குறைய நேர்க்கோட்டில் அமையும். அந்த நிலையில், பூமியிலிருந்து காணும்போது அந்த இரண்டு கோள்களும் வானத்தில் ஒன்றையொன்று இடித்துக்கொண்டு நெருங்கி நிற்பதுபோலக் காட்சிதரும். இதைத்தான் 'கோள் சந்திப்பு நிகழ்வு' (conjunction) என்கிறார்கள். நிலவுக்கும் சூரியனுக்கும் இடையே நெருக்க நிகழ்வு நடைபெறுவதைத்தான் நாம் 'கிரகணம்' என்கிறோம்.

பாரம்பரிய இந்திய வானவியலில் இரண்டு கோள்கள் ஒன்றையொன்று நெருங்கி வரும் நிகழ்வை 'யுத்தம்' என்றும், நிலவு வேறு கோள்களை நெருங்கிச் செல்வதை 'ஸமாகம்' என்றும், கோள்களைச் சூரியன் மறைப்பதை 'அஸ்தமயம்' என்றும் கூறுவார்கள்.

வானில் சூரியன் ஊர்ந்து செல்வதுபோலக் காட்சி தரும் பாதையைச் சூரிய வீதி என்பார்கள். இந்தச் சம தளத்திலிருந்து வெறும் ஐந்து டிகிரி சாய்வாகப் பூமியைச் சுற்றும் நிலவும் இதே சூரிய வீதியில் பயணிப்பதுபோலத் தென்படும். மேலும், சூரியனைச் சுற்றிக் கோள்கள் வலம் வரும் நீள்வட்டப் பாதைகளும் ஒருசில டிகிரி வித்தியாசத்தில் ஒரே தளத்தில் அமைந்துள்ளன. எனவே, பூமியிலிருந்து காணும்போது வானில் நிலவும் எல்லாக் கோள்களும் சூரிய வீதியில் பவனி வருவதுபோலக் காட்சி தரும். அவ்வாறு பயணம் செய்யும்போது அவ்வப்போது இரண்டு கோள்கள் ஒன்றையொன்று நெருங்கிச் சந்திப்பு நிகழும். சனி சூரியனைச் சுற்றிவர 29.4 ஆண்டுகளும் வியாழன் 11.86 ஆண்டுகளும் எடுக்கும். எனவே, 19.85 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனியும் வியாழனும் வான் கோளத்தில் சூரிய வீதியில் நெருங்கி ஒன்றையொன்று சந்திப்பது போலக் காட்சி ஏற்படும். கடந்த முறை மே 28, 2000-ல் இப்படி நிகழ்ந்தது. ஆனால், அப்போது இரண்டு கோள்களும் சூரியனுக்கு அருகே இருந்ததால் கண்ணுக்குத் தென்படவில்லை. 19.85 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சந்திப்பில் சிறிதளவு இடைவெளி இருக்கும். ஆனால், கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தற்போதைய சந்திப்பில் வெறும் கண்ணுக்கு இடைவெளி புலப்படாது என்பதுதான் இதன் சிறப்பு.

அடுத்து நவம்பர் 5, 2040-லும், ஏப்ரல் 10, 2060-லும் சனிக்கும் வியாழனுக்கும் இடையே கோள் சந்திப்பு நிகழ்வு ஏற்படும் என்றாலும் அப்போதெல்லாம் முறையே 1 014' மற்றும் 1009' டிகிரி கோண இடைவெளி இருக்கும். எனவே, இரண்டு கோள்களும் நெருங்கி இடித்துக்கொள்வது போன்ற அற்புதத் தோற்றம் ஏற்படாது. மறுபடியும் மார்ச் 15, 2080-ல்தான் இப்போதுபோல இரண்டுக்கும் இடையே கோண இடைவெளி வெறும் 0.1 டிகிரி என அமைந்து நெருங்கி மோதுவது போன்ற காட்சி தென்படும்.

சனியும் வியாழனும் மட்டுமல்ல மற்ற கோள்களுக்கு இடையேயும் கோள் சந்திப்பு நிகழ்வு ஏற்படும். வரும் ஜூலை 13, 2021 அன்று வெள்ளிக் கோளுக்கும் செவ்வாய்க் கோளுக்கும் இடையே கோள் நெருக்க நிகழ்வு ஏற்படும். ஏப்ரல் 5, 2022 அன்று சனிக்கும் செவ்வாய்க்கும் இடையேயும், ஏப்ரல் 30, 2022 அன்று வெள்ளிக்கும் வியாழனுக்கும் இடையேயும், மே 29, 2022 அன்று செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையேயும் கோள் நெருக்க நிகழ்வு நிகழும். இன்னும் 5,521 ஆண்டுகள் கடந்த பின்னர் ஜூன் 17, 7541 அன்று வியாழன் கோள் சனிக் கோளுக்கு நேர் எதிரில் நிலைகொண்டு சற்று நேரத்துக்கு சனியை முழுமையாக மறைக்கும் அரிய நிகழ்வும் ஏற்படும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை டிசம்பர் 21 மாலை சுமார் 6.30 மணிக்குச் சூரியன் மறைந்து போதிய இருட்டு பரவிய நிலையில் தென்மேற்கு திசையில் வியாழன் கோளும் சனிக் கோளும் ஒன்றையொன்று முட்டி மோதிக்கொண்டு நிற்பது போன்ற காட்சி தென்படும். இன்று முதலே சூரியன் மறைந்த பின்னர் தென்மேற்கு வானில் இரண்டு கோள்களும் தென்படும். அடுத்தடுத்த நாட்கள் கூர்ந்து கவனித்துவந்தால் இவற்றுக்கிடையே உள்ள தொலைவு குறைந்துவருவதைக் காணலாம். டிசம்பர் 21 அன்று இரண்டும் ஒன்றையொன்று உரசிக்கொண்டு இருப்பதுபோலத் தோற்றம் தரும். அன்று வெறும் கண்களால் காணும்போது இடித்துக்கொண்டு இருப்பது போன்று தோன்றும். இருநோக்கி (பைனாகுலர்) வழியே காணும்போது அவற்றுக்கு இடையே நூலிழை அளவுக்கு இடைவெளி உள்ளதைக் காணலாம். அதன் பின்னர் அடுத்தடுத்த நாட்கள் இரண்டுக்கும் இடையே இடைவெளி அதிகரிப்பதைக் காணலாம். வானம் என்பது நமக்குக் கட்டணமின்றித் திறந்துவிடப்பட்ட அருங்காட்சியகம். அந்த அருங்காட்சியகத்தில் தெரியும் இதுபோன்ற காட்சிகளைப் பொதுமக்கள், மாணவர்கள், சிறுவர்கள் யாரும் தவறவிட வேண்டாம்.

- த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் ‘விஞ்ஞான் பிரச்சார்’ தன்னாட்சி அமைப்பில் முதுநிலை விஞ்ஞானி.

 

https://www.hindutamil.in/news/opinion/columns/611554-saturn-and-jupiter-1.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குரு பெயர்ச்சியும்...
சனி பெயர்ச்சியும்..... 😎

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.