Jump to content

அலறும் வாட்சாப் பயனர்கள்: சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகளுக்கு மாற முடியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

WhatsApp New Privacy Policy update: சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகள் மாற்றாகுமா, சிறப்பம்சங்கள் என்ன?

  • சாய்ராம் ஜெயராமன், பிபிசி தமிழ்
வாட்சாப்

பட மூலாதாரம், GETTY IMAGES

 

வாட்சாப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையால் அச்சமடைந்துள்ள அதன் பயன்பாட்டாளர்கள் அதையொத்த செயலிகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, உலகிலேயே அதிக வாட்சாப் பயனர்கள் உள்ள இந்தியாவில் இந்த புதிய தனியுரிமை கொள்கை எனப்படும் நியூ பிரைவசி பாலிசி குறித்த பேச்சு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.

வாட்சாப்பின் புதிய தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்வதால் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுவது ஒருபுறமிருக்க, இந்தியர்கள் பெரியளவில் பின்தொடர்ந்து வரும் அமெரிக்க தொழிலதிபரான ஈலோன் மஸ்க்கே வாட்சாப்க்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்துங்கள் என்று கூறுவதும், வாட்சாப் குழுக்களில் கூகுள் தேடல் வழியாக யார் வேண்டுமானாலும் உள்நுழைந்துவிட முடியும் என்ற சர்ச்சையும் பயன்பாட்டாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் இதுகுறித்த விவாதம் முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், மக்கள் உண்மையிலேயே வாட்சாப் செயலியிலிருந்து மற்ற செயலிகளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்களா என்று கூகுள் ட்ரெண்ட்ஸ் சேவையை கொண்டு பரிசோதித்து பார்த்தோம்.

அலறும் வாட்சாப் பயனர்கள்: சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகளுக்கு மாற முடியுமா?

பட மூலாதாரம், REUTERS

அதில் வியப்பளிக்கும் வகையிலான பதில்கள் கிடைத்தன. ஆம், கடந்த சில நாட்களுக்கு முன்புவரை வாட்சாப் வெப், வாட்சாப் ஸ்டேட்டஸ், வாட்சாப் கணக்குக்கான புகைப்படங்கள், ஏ.பி.கே கோப்பு பதிவிறக்கம் உள்ளிட்ட பயன்பாட்டு ரீதியிலான தேடல்களை மேற்கொண்டு வந்த பயனர்கள், தற்போது நேரெதிர்மறையாக வாட்சாப்பின் புதிய தனியுரிமை கொள்கை, வாட்சாப் மற்றும் சிக்னல் செயலிகள் குறித்த ஒப்பீடு, சிக்னல் செயலிக்கு மாறுவது எப்படி, வாட்சாப் - சிக்னல் - டெலிகிராம் குறித்த ஒப்பீடு, வாட்சாப் குறித்து ஈலோன் மஸ்க் கூறியது என்ன?, வாட்சாப்க்கு மாற்று என்ன? என்பது உள்ளிட்ட எண்ணற்ற கேள்விகளை கூகுள் தேடல் மூலம் முன்வைத்து வருவது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, மேற்கண்ட தேடலை இந்திய அளவில் பார்க்கும்போது, குஜராத் முதலிடத்திலும், தெலங்கானா, சண்டிகர், ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும், தமிழ்நாடு ஐந்தாவது இடத்திலும் உள்ளதாக கூகுள் கூறுகிறது.

அதுவே தமிழக அளவில் இதுதொடர்பான கூகுள் தேடல் குறித்த தரவை பார்க்கும்போது, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குத்தம்பாக்கம் என்ற பகுதியில் அதிகபட்சமாகவும், சிவகங்கை மாவட்டத்திலுள்ள கழனிவாசல், திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் உள்ளிட்ட ஊர்கள் அடுத்தடுத்த இடங்களிலும் திருச்சி 16ஆவது இடத்திலும், தலைநகர் சென்னை 17ஆவது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தை பொறுத்தவரை, மாவட்ட தலைநகரங்களை விட இரண்டாம் கட்ட மற்றும் ஊரகப் பகுதிகளை சேந்தவர்களே இதுகுறித்து ஆவலோடு தேடி வருவதாக தெரிகிறது.

வாட்சாப்புக்கு மாற்று என்ன?

வாட்சாப்

பட மூலாதாரம், GETTY IMAGES

சுமார் பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வாட்சாப் நிறுவனம் கடும் போட்டிமிக்க செய்தி பரிமாற்ற செயலிகளுக்கான சந்தையில் 200 கோடிக்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்களுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2009ஆம் ஆண்டு வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட வாட்சாப்பின் வளர்ச்சியை கண்ட ஃபேஸ்புக் 2014இல் இதை கையகப்படுத்தியது.

எப்போது ஃபேஸ்புக் கட்டுப்பாட்டுக்கு வாட்சாப் சென்றதோ அப்போதே அது ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்ற செயலிகள் மற்றும் சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்படும் என்ற அச்சத்தை தொழில்நுட்பவியலாளர்கள் முன்வைத்திருந்தனர். அது சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தாமதமாகவே நடந்திருக்கிறதே தவிர, இதில் வியப்படைய ஒன்றுமில்லை என்று துறைசார் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இலவச பயன்பாடு, சீரிய இடைவெளியில் புதிய சிறப்பம்சங்கள், செய்தி பரிமாற்றத்தோடு புகைப்படம், குரல் - காணொளி அழைப்பு தொடங்கி இப்போது பணப்பரிமாற்றம் வரை பல புதிய பரிமாணங்களை கண்டு வந்த வாட்சாப் தற்போது இந்த புதிய தனியுரிமை கொள்கை வெளியீட்டால் திணறி வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

இந்த புதிய கொள்கையால் பயன்பாட்டாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென்று அந்த நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டாலும், வாட்சாப்பிலிருந்து வெளியேறும் எண்ணத்தில் பயன்பாட்டாளர்கள் இருப்பது இணைய தேடல் குறித்த தரவுகள் மூலம் நிரூபணமாகிறது.

இந்த நிலையில், வாட்சாப்புக்கு மாற்றாக சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் சில செயலிகள் குறித்த அறிமுகத்தை இங்கே பார்க்கலாம்.

டெலிகிராம்:

டெலிகிராம்

பட மூலாதாரம், GETTY IMAGES

2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டெலிகிராம் செயலியை 14 மொழிகளில் பயன்படுத்த முடியும். லண்டனை தலைமையிடமாக கொண்டு, துபாயிலிருந்து செயல்படும் இந்த செயலியை உலகம் முழுவதும் 40 கோடி பேர் பயன்படுத்துவதாக ஸ்டட்டிஸ்டா இணையதளத்தின் தரவு கூறுகிறது. மேலும், உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளின் பட்டியலில் இது ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்த செயலியின் சில சிறப்பம்சங்களாக தயாரிப்பாளர் கூறுவன:

  • மற்ற செய்தி பரிமாற்ற செயலிகளுடன் ஒப்பிடுகையில் அதிவேகமானது, பயன்படுத்த எளிமையானது.
  • எவ்வித கட்டணமோ அல்லது விளம்பரமோ இல்லாத இலவச சேவை.
  • மறையீடு எனப்படும் வலுவான என்கிரிப்ஷன் தொழில்நுட்பத்தின் மூலம் பயனர்களின் தரவு பாதுகாக்கப்படுகிறது.
  • பகிரப்படும் செய்தி, கோப்புகள் (படங்கள், காணொளிகள்) உள்ளிட்டவற்றிற்கு எவ்வித உச்ச வரம்போ, கட்டுப்பாடோ இல்லை.
  • அலைபேசி எண் இல்லாமலே டெலிகிராம் குழுக்களின் மூலம் அதிகபட்சம் இரண்டு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முடியும்.
  • விருப்பத்திற்கேற்ப செயலியின் வடிவமைப்பை கட்டமைக்க முடியும்.
  • திறன்பேசியே இல்லாமல் செயலியில் மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்களை மேகக்கணினியக தொழில்நுட்பம் மூலம் மற்ற கருவிகளில் தொடரலாம்.
  • ஆண்ட்ராய்டு மட்டுமின்றி ஐ.ஓ.எஸ், விண்டோஸ், லினக்ஸ், மேக் உள்ளிட்ட இயங்குதளங்களில் பயன்படுத்த இயலும்.

சிக்னல் 

சிக்னல்

பட மூலாதாரம், SIGNAL

வாட்சாப் குறித்த சர்ச்சை தொடங்கிய பிறகு பெரியளவில் பேசப்பட்டு வரும் செயலியாக சிக்னல் இருக்கிறது என்று கூற முடியும். உதாரணமாக, இந்தியாவில் ஆப்பிளின் ஐ.ஓ.எஸ் இயங்குதளத்தில் அதிகம் தேடப்பட்ட செயலிகள் பட்டியலில் வாட்சாப்பை இரண்டாம் இடத்துக்கு தள்ளி சிக்னல் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

மேலும், முன்னதாக குறிப்பிடப்பட்டதை போன்று, சிக்னல் செயலியை பயன்படுத்துமாறு அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழில்நுட்ப தொழில்முனைவோரும் சமீபத்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தவருமான ஈலோன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

2014ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிக்னல் செயலி அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. 

இந்த செயலியின் சில சிறப்பம்சங்களாக அதன் தயாரிப்பாளர் கூறுவன:

  • சிக்னல் ஒரு சுயாதீன, லாபநோக்கமற்ற செய்தி பரிமாற்ற செயலி.
  • எனவே, இதில் கட்டணமோ, விளம்பரமோ அறவே இல்லை. பயனர்கள் தாமாக முன்வந்து அளிக்கும் நிதியின் மூலம் இது இயங்குகிறது.
  • பயனரின் தனியுரிமை என்பது தெரிவல்ல என்றும் தங்களது தனித்துவமான மறையீடு (என்கிரிப்ஷன்) தொழில்நுட்பம் மூலம் தரவுகள் பாதுகாக்கப்படுவதாகவும் சிக்னல் கூறுகிறது.
  • எளிமையான வடிவமைப்பை கொண்ட சிக்னல், குறைந்த இணைய வேகம் இருந்தாலும் திறம்பட செயல்படக் கூடியது.
  • குரல் மற்றும் காணொளி அழைப்புகளும் முற்றிலும் மறையீடு செய்யப்பட்டது.
  • திறந்த மூல (Open source) செயலியான இதில் வாட்சாப் போன்ற மற்ற செயலிகளை போன்று பயனர் குறித்த தரவுகள் அதிகம் சேகரிக்கப்படுவதில்லை.
  • ஆண்ட்ராய்டு மட்டுமின்றி ஐ.ஓ.எஸ், விண்டோஸ், லினக்ஸ், மேக் உள்ளிட்ட இயங்குதளங்களிலும் இதை பயன்படுத்த இயலும்.
  • உங்களுக்கு நீங்களே செய்திகளை பரிமாறிக்கொண்டு சேமித்து வைக்கும் சேவை "Note to Self" என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

'அரட்டை' செயலி வெளிவந்துவிட்டதா?

அரட்டை

பட மூலாதாரம், ZOHO

வாட்சாப்பிற்கு மாற்றாக மற்ற நாடுகளின் செயலிகள் ஒருபுறமிருக்க, தமிழகத்திலேயே சர்வதேச தரத்தினாலான மாற்று செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பலரும் பகிர்வதை கடந்த சில நாட்களாக காண முடிகிறது.

"அரட்டை" என்று தமிழிலேயே பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸோஹோ (Zoho Corporations) என்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்துள்ளது.

எனினும், இந்த செயலியின் முன்னோட்ட பதிப்பு மட்டுமே தற்போது வெளியிடப்பட்டிருப்பதாகவும், அடுத்த சில வாரங்களில் இது முறைப்படி அறிமுகப்படுத்தப்படுமென்றும் அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "எங்களது அரட்டை செயலி அணியினர் இந்த செய்தி பகிர்வு செயலி குறித்து பேச வேண்டாமென கூறியிருந்தனர். ஆனால், இது ஏற்கனவே பேசுபொருளாகி விட்டதால், நானும் பேசலாம் என்று நினைக்கிறேன்" என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்நாள் முழுவதும் விளம்பரமற்ற, இலவச செயலியாக இது தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகம், எளிமை, வேடிக்கை, பயனர்களின் தரவு பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மையாக கொண்டு 'அரட்டை' செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

https://www.bbc.com/tamil/science-55615092

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உந்த ஓவர் புதுப்புது தொழில்நுட்பங்கள் அழிவே தவிர வேறை ஒண்டுமில்லை....எல்லாம் அளவோடை இருந்தால் நல்லது.குடும்ப ரகசியங்கள் தொழில் ரகசியங்கள் எல்லாம் உலகம் முழுக்க தெரிய வெளிக்கிடுது.நாட்டு ரகசியங்கள் கூட கிசுகிசு செய்தி போலை வந்துட்டுது இருக்குது.😁

எண்டைக்கோ ஒரு நாள் கடிதம் தந்தி மணியோடர் எல்லாம் திரும்பி வரப்போகுதுதான் கண்டியளோ..... 
பாதுகாப்பானதும் கூட:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

137359934_3291915570909476_5781927417165

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவை கொள்ளுப்படுவதால் வாட்ஸ் அப் கோல் ஊருக்கு கிளியரா இருக்கு .

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.