Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் - நிலாந்தன்

http://www.nillanthan.com/wp-content/uploads/2021/02/145377100_2924361514555281_3747239739275689807_n.jpg

http://www.nillanthan.com/wp-content/uploads/2021/02/145755501_1772859666229754_422559254108004209_n.jpg

2009 மேக்குப்பின் ஒரு முன்னாள் ஜேவிபி முக்கியஸ்தர் என்னோடு கதைக்கும்போது சொன்னார்…தமிழ் மக்களின் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதோடு தென்னிலங்கையில் இருக்கக்கூடிய எதிர்ப்பு அரசியல் வெளியும் பெருமளவுக்கு தோற்கடிக்கப்பட்டு விட்டது என்று. ஏன் என்று கேட்டேன். அரசாங்கத்தை எதிர்க்கலாம் அரசுக்கு எதிராகப் போராடலாம் என்று துணிச்சலை தமிழ் மக்களின் போராட்டம் முழு இலங்கைக்கும் கொடுத்தது. அது தோற்கடிக்கப்பட்டதோடு இனி அரசாங்கத்தை எதிர்க்க முடியாது என்று ஒரு அவநம்பிக்கையை பயத்தை அது முழு இலங்கைக்கும் கொடுத்திருக்கிறது என்றும் அவர் சொன்னார்.அதோடு யுத்த வெற்றி வாதத்துக்கு முன் வேறு யாரும் வீரம் கதைக்க முடியாது என்பதால் ஜேவிபி போன்ற அமைப்புக்களும் பின்தள்ளபட்டுவிட்டன என்று.

கடந்த பத்தாண்டு கால நடைமுறையை தொகுத்துப் பார்த்தால் அதில் ஓரளவிற்கு உண்மை உண்டு என்று தெரியவரும்.குறிப்பாக கடந்த ஆண்டு ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சி தொடங்கியதிலிருந்து தென்னிலங்கையில் குடிமக்கள் சமூகங்களும் லிபரல்களும் பெருமளவுக்கு ஒடுங்கிப்போயினர்.இது ஒரு உலக யதார்த்தம். அசுரத்தனமான வெற்றியோடு வரும் ஓர் அரசாங்கத்துக்கு முன் குடிமக்கள் சமூகங்களும் லிபரல்களும் இவ்வாறு வாயடங்கிப் போகும் வழமை உண்டு.

இப்படியாக கடந்த ஓராண்டு காலத்தில் பெருமளவுக்கு சுருங்கிப்போயிருந்த எதிர்ப்பு வெளி மறுபடியும் விரியத்தொடங்கியது கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர்தான்.இத்தேர்தலில் மாற்று அணியை சேர்ந்த மூன்று தமிழ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார்கள். குறிப்பாக நாடாளுமன்றத்தின் தொடக்க அமர்வுகளின் போது விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார்,கஜேந்திரனும் ஆகியோர்ஆற்றிய உரைகளும் அதைத்தொடர்ந்து சாணக்கியன்,சுமந்திரன் போன்றோர் ஆற்றிய உரைகளும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பார்கள் என்ற செய்தியை கூர்மையாக வெளிக்கொண்டு வந்தன. ராஜபக்சக்களின் இரண்டாவது வருகைக்குப்பின் சுருங்கிப்போயிருந்த எதிர்ப்பு அரசியல் வெளி மெல்ல விரியத்தொடங்கியது.இப்பொழுது கோவிட்-19இன் பின்னணியில் அது அதன் அடுத்தகட்டத்துக்கு வளரத்தொடங்கி விட்டதா?

சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் வெற்றிமுகமாக ராஜபக்சக்கள் இரண்டாவது முறையும் ஆட்சிக்கு வந்தபொழுது குடிமக்கள் சமூகங்களும் லிபரல்களும் பெருமளவுக்கு வாய்திறக்க அஞ்சினர். 20ஆவது திருத்தத்தின் போது அதைக் காணக்கூடியதாக இருந்தது.குறிப்பாக ஒரு பெரும் தொற்றுநோய்ச் சூழலை முன்வைத்து அரசாங்கம் நாட்டை அதிகம் ராணுவ மயப்படுத்திய பொழுதும் சிவில் வெளி மேலும் ஒடுங்கியது. ஒரு பெரும் தொற்றுநோயை ஒடுக்குவதற்கு படையினரின் உதவி அவசியம் என்ற ஒரு கருத்து பெருமளவுக்கு தென்னிலங்கையிலும் சிறிதளவுக்கு தமிழ் பகுதிகளிலும் நிலவியது.தமக்கு எதிரான அதிருப்தி அலைகள் அனைத்தையும் அரசாங்கம் பெரும் தொற்று நோய்ச் சூழலை முன்வைத்து இலகுவாக ஒடுக்கக் கூடியதாக இருந்தது. அனர்த்த காலத்தை முன்வைத்து சிவில் எதிர்ப்பு வெளியை அவர்கள் பெருமளவுக்கு தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள்

ஆனால் கடந்த வாரம் நாடு முடக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதும் தமிழ் எதிர்ப்பு மறுபடியும் மேலெழத் தொடங்கிவிட்டது.வைரஸ் தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்ட பொழுதும் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை பரவலாகவும் சிறிய அளவிலும் ஆனால் கூர்மையாக வெளிக் காட்டி வந்திருக்கிறார்கள். இந்த போக்கின் தொடர்ச்சியாக முடக்கம் நீக்கப்பட்டதும் அதாவது நாடு முழு அளவுக்கு திறக்கப்பட்டதும் தமிழ் எதிர்ப்பு மறுபடியும் துலக்கமான விதங்களில் தலைதூக்கியிருக்கிறது. நில ஆக்கிரமிப்பு மரபுரிமை ஆக்கிரமிப்பு முதலாக கடந்த ஓராண்டு காலம் முழுவதிலும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் எதிரான முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளின் பின்னணியிலேயே இந்த எதிர்ப்பு தலைதூக்கியிருக்கிறது.

குறிப்பாக முஸ்லிம் மக்கள் ஜனாசா எரிப்புக்கு எதிராக தொடக்கத்தில் மௌனமாக இருந்தார்கள். அரசாங்கத்தை அனுசரித்துப் போய் அல்லது அரசாங்கத்தோடு சுதாகரித்துக் கொள்வதன் மூலம் தங்களுடைய பண்பாட்டு உரிமைகளை வென்றெடுக்கலாம் என்றும் நம்பினார்கள். ஆனால் அந்த நம்பிக்கைகள் தோற்கடிக்கப்பட்ட பொழுது அவர்கள் கபன் துணிகளைக் கட்டித் தமது எதிர்ப்பைக் காட்டத் தொடங்கினார்கள்.கபன் துணிப் போராட்டம் எனப்படுவது ஒரு பெரும் நோய்த் தொற்றுச்சூழலில் உலகில் ஒரு சிறிய மக்கள் கூட்டம் காட்டிய படைப்புத்திறன் மிக்க ஒரு சிவில் எதிர்ப்பு வடிவமாகும். ஆனால் அது ஒரு பெருந்திரள் போராட்ட வடிவமாக வளரவில்லை. முஸ்லிம் தரப்பு முழு அளவிலான ஓர் எதிர்ப்பு அரசியலுக்குப் போகத் தயாராகவும் இல்லை.

இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் தமிழ் மக்கள் ஆங்காங்கே தெட்டம் தெட்டமாக காட்டிய எதிர்ப்புகளில் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களோடு இணையத் தொடங்கினார்கள். நினைவு கூர்தலுக்கான வெளியில் தொடங்கி இப்பொழுது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான எதிர்ப்பில் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களோடு தமது சகோதரத்துவத்தை வெளிப்படுத்த தொடங்கிவிட்டார்கள். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான நடைபயணம் எனப்படுவது தமிழ் எதிர்ப்பின் ஆகப்பிந்திய உதாரணமா?

அண்மைக்காலங்களில் இப்படி ஏதாவது ஒரு விதத்தில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் ஏனைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும் என்று தமிழ்த் தரப்பு பல்வேறு கூட்டங்களை கூட்டி சிந்தித்திருக்கிறது. குறிப்பாக கடந்த சில கிழமைகளுக்கு முன் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மன்றத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. சிவாஜிலிங்கம் சந்திப்பை ஒழுங்குபடுத்தினார். அதில் கலந்துகொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு சிவில் சமூக பிரதிநிதிதான் இப்பொழுது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டத்தின் முன்னணியிலும் காணப்படுகிறார். இவர் கடந்த மாதம் மூன்று தமிழ் கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் இணைந்து ஜெனிவாவுக்கு அனுப்பிய பொதுக் கோரிக்கையிலும் கையெழுத்திட்டவர். அதனால் இவருக்கு அச்சுறுத்தல்களும் ஏற்பட்டன. அவற்றின் பின்னணியில் சில வாரங்களுக்கு முன் இளங்கலைஞர் மன்றத்தில் நடந்த சந்திப்பிலும் அவர் பங்குபற்றியிருந்தார். அச்சந்திப்பில் தமிழ் மக்கள் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்ப்பை காட்ட வேண்டும் என்பதில் அனைவரும் ஒன்றுபட்டு நின்றார்கள். ஆனால் எப்படிப்பட்ட எதிர்ப்பு வடிவம் என்பதில் ஒரு பொதுக் கருத்தை எட்ட முடியவில்லை.வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர்   ஒரு ஆலோசனையை முன்வைத்தார். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி போன்றவற்றுக்குப் பதிலாக கச்சேரியை முடக்கினால் என்ன என்று கேட்டார். அதே சமயம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்கள் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிக்கலாம் என்று ஆலோசனை கூறினார்கள். எனினும் அக்கூட்டத்தில் ஒருபொது முடிவு எட்டப்படவில்லை. அடுத்த தடவை  சந்தித்து ஒரு போராட்ட வழிமுறை குறித்து சிந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த இடையூட்டுக்குள் மட்டக்களப்பை மையமாகக் கொண்டு இம்மாதம் இருபத்திநாலாம் திகதி முதலில் கிழக்கு சிவில் சமூகம் என்ற ஓர் அமைப்பு வாட்ஸப்பில் உருவாக்கப்பட்டது. அதன்பின் இருபத்தியேழாம் திகதி இவ்வமைப்பு வடக்கு கிழக்கு சிவில் சமூகம் என்று பெயரை மாற்றிக் கொண்டது. இவ்வமைப்பே உருவாக்கப்பட்ட சில நாட்களுக்குள் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலுமான இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியுள்ளது. இது தொடர்பில் கேள்விகள் உண்டு. அவற்றைத் தனியே பார்க்கலாம்.

 

 

http://www.nillanthan.com/wp-content/uploads/2021/02/147361284_2132761923523271_1767890132966961711_n.jpg

 

எனினும், இப்பேரணிக்கு பின்வரும் முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவது இது கிழக்கு மையத்திலிருந்து தொடங்கப்பட்டது என்பது. பொதுவாக தமிழ் பரப்பில் எதிர்ப்பு நடவடிக்கைகள் வடக்கில் தொடங்கி பின்னர் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். ஆனால் இம்முறை ஒரு நோய் தொற்று சூழலில் நாடு முடக்கத்திலிருந்து நீக்கப்பட்ட உடனேயே துலக்கமான ஓர் எதிர்ப்பு கிழக்கிலிருந்து தொடங்கியிருக்கிறது. வடக்கு கிழக்கை ஊடறுத்து முன்னெடுக்கப்பட்ட இப்பேரணியானது செயல் பூர்வமாக வடக்கையும் கிழக்கையும் இணைத்திருக்கிறது. வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிரான சக்திகள் பலமடைந்து வரும் இராணுவ அரசியல் உளவியல் சூழலில் வடக்கு கிழக்கை இணைத்து இப்படி ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை அதுவும் கிழக்கிலிருந்து தொடங்கப்பட்டமை ஒரு  திருப்பகரமான பெயர்ச்சி.

வடக்கில் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்பு நடவடிக்கைகளில் நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் கிழக்கில் மேய்ச்சல் தரை  விவகாரம் எனப்படுவது அதிக முக்கியத்துவம் மிக்கது. ஏனெனில் அது கிழக்கு விவசாயியின் முதுகெலும்பை முறிக்கக்கூடியது. இப்படிப் பார்த்தால் வடக்கில் நிகழும் ஆக்கிரமிப்புக்களோடு ஒப்பிடுகையில் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு என்பது பாரதூரமானது. இது போன்ற காரணங்களை முன்வைத்து கிழக்கிலிருந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயமிருக்கிறது.

தொடக்கத்தில் பேரணியில் மிகக் குறைந்த தொகையினரே காணப்பட்டார்கள். ஒருபுறம் மழை இன்னொருபுறம் நீதிமன்ற தடை. இரண்டுக்கும் மத்தியில் நனைந்து நனைந்து மிகச்சிறு தொகையினரே வேகமாக நடந்து வந்தார்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களோடு இணைந்ததால் அவர்களுக்கு ஒருவிதத்தில் பாதுகாப்பு கிடைத்தது எனலாமா? போலீசாரின் எதிர்ப்பை முறியடிப்பதற்கு அது உதவியது எனலாமா? இதுகுறித்து ஏற்கனவே யாழ்ப்பாணச் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. கடந்த வாரம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இப்பேரணி தொடர்பாக நடந்த சந்திப்பில் ஒருவர் அதைச் சுட்டிக் காட்டினார். மணலாறு பிரதேசத்தை இப்பேரணி கடக்கும் பொழுது ஏதும் அசம்பாவிதங்கள் நடக்கக்கூடிய ஆபத்துண்டு என்று அவர் சுட்டிக்காட்டினார். அப்படி ஒரு நிலைமை வரும் பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காவலாக வரும் போலீசார் பேரணிக்கு மறைமுகமாக பாதுகாப்பாக இருக்கமுடியும் என்பதால அந்த வழியில் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சாணக்கியன் பேரணியில் பங்குபற்றிய பொழுது ஒரு போலீஸ்காரர் அவருக்கு குடை பிடிக்கிறார் அதேசமயம் வேறு ஒரு போலீஸ்காரர் அதாவது பேரணியை தடுக்க வந்தவர் சாணக்கியனை நகர விடாமல் தடுக்க முற்படுகிறார் என்பதை ஒருவர் முகநூலில் சுட்டிக்காட்டியிருந்தார்,

கிழக்கில் பேரணி தொடங்கியதும் போலீசாரின் எதிர்ப்பு கடுமையாக இருந்தது எனினும் அதையும் மீறி பேரணி வளர்ந்து சென்றது. ஒருகட்டத்தில் எதிர்ப்பு காட்டிய போலீசார் நீதிமன்ற தடை உத்தரவை ஒலிபெருக்கியில் வாசித்துக் கொண்டிருக்க பேரணி தன்பாட்டில் போய்க்கொண்டே இருந்தது. பேரணி வளரவளர போலீசார் எதிர்ப்பதை நிறுத்திவிட்டு வீதி ஒழுங்கை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கி விட்டார்கள்.

அடுத்த முக்கியத்துவம்- இப்போராட்டத்தில் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டமை. முஸ்லிம்களின் பிரதேசத்தில் அதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. சில முஸ்லிம் கிராமங்களில் பேரணியில் பங்குபற்றியோர் எண்ணிக்கை நாலாயிரத்துக்கும் குறையாத அளவுக்கு வளர்ந்து சென்றது. சில முஸ்லிம் கிராமங்களில் முஸ்லிம் பெண்கள்  வீதியின் இரு மருங்கிலும் வரிசையாக நிற்க பேரணி வீதி வழியே சென்றது ஒரு புதிய அனுபவமாக இருந்தது என்று அதில் பங்குபற்றிய ஒருவர் கூறினார். முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் பேரணிக்கு ஆதரவாக அறிக்கைகளை விட்டிருந்தார்கள்.முஸ்லிம் அரசியல்வாதிகள் பேரணியில் பங்குபற்றினார்கள். தமிழ்-முஸ்லிம் பிரதிநிதிகள் பேரணியில் கைகுலுக்கிக் கொண்டார்கள். ஜனாசா ஏரிப்புக்கு எதிரான முஸ்லிம்களின் உணர்வுகளை பேரணியை ஒழுங்குபடுத்தியவர்கள் பொருத்தமான விதத்தில் ஒருங்கிணைத்திருக்கிறார்கள்.இது ஒரு திருப்பகரமான மாற்றம்.அரசாங்கத்தின் கடந்த ஓராண்டு கால ஆட்சியானது பிளவுண்டிருந்த தமிழ் முஸ்லிம் சமூகங்களை  ஒற்றுமைப்படுத்தியிருக்கிறதா?

மூன்றாவது முக்கியத்துவம்.இப்பேரணியில் சுமந்திரன் அணி பங்குபற்றியமை. கடந்த ஐந்தாண்டுகளாக நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட அரசாங்கத்தில் ஒரு பங்காளி போல தோன்றிய சுமந்திரன் சுதந்திர தின விழாக்களில் பெருமளவுக்கு நேரடியான அல்லது மறைமுகமான காணப்பட்டார்.ஆனால் இம்முறை அவர் கிழக்கில் பேரணியில் தனது அணிகளோடு பங்குபற்றியிருக்கிறார். இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நடந்த சந்திப்புகளின் போதும் அவருடைய அணியினர் பிரசன்னமாகியிருந்தனர். சுமந்திரனுக்கு இதில் உள்நோக்கங்கள் உண்டு.கட்சிக்குள் தனது தலைமைத்துவத்தை பாதுகாப்பது;கடந்த தேர்தலில் இழந்த தமது வாக்கு வங்கியை மீளப்பெறுவது; பலப்படுத்துவது போன்ற உள் நோக்கங்களோடு அவர் இப்போராட்டங்களில் இறங்கியிருக்கலாம்.தேர்தல் முடிவுகள் தந்த பாடத்திலிருந்து கூட்டமைப்பு கற்றுக் கொண்டிருக்கிறது என்பதை இது காட்டுகிறது.ஜெனிவாவை நோக்கி ஒரு பொது கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்ற போதும் சுமந்திரன் அதிகபட்சம் விட்டுக்கொடுப்புடன் காணப்பட்டார்.கடந்த சில மாதங்களாக எதிர்ப்பு அரசியல் தடத்தில் அவர் அதிகம் முகம் காட்டுகிறார். இந்த மாற்றத்தின் உள்நோக்கங்கள் குறித்து தனியாக ஆராயலாம். ஆனால் எதிர்ப்பு அரசியலை ஏற்றுக் கொள்ளாத தமிழ் அரசியல்வாதிகள் இப்போது அந்த தடத்துக்கு வந்திருக்கிறார்கள். நடந்து முடிந்த தேர்தல் கற்றுகொடுத்த பாடம் இது?

எனவே மேற்கண்டவற்றை தொகுத்துப் பார்த்தால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான இந்த பேரணி என்பது பெருந்தொற்று நோய்க்குரிய முடக்கத்தின் பின்னரான நாட்டின் அரசியல் பரப்பில் தமிழ் மக்கள் எப்படியும் தம் எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்பதை நிரூபித்திருக்கிறது.தமிழ் மக்களின் எதிர்ப்பை ஒடுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற சட்டங்களை பயன்படுத்திய அரசாங்கம் கடந்த ஆண்டு முழுவதும் கோவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களையும் பயன்படுத்தியது. இப்பேரணியைத்  தடுப்பதற்கு பொலிசார் பயன்படுத்திய உத்திகளில் அதுவும் ஒன்று. ஆனால் தனிமைப்படுத்தல் சட்டங்களையும் மீறி பொலிஸ் மற்றும் படைத்தரப்பின் அச்சுறுத்தல்களையும் மீறி மக்கள் கிழக்கில் இருந்து வடக்கு வரை தெருவில் இறங்கியிருக்கிறார்கள்.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல தமிழ் மக்களுக்கு எதிர்ப்புவெளி இல்லையென்றால் அது முஸ்லிம் மக்களுக்கும் இல்லை; சிங்கள மக்களுக்கும் இல்லை. தமிழ் மக்கள் அந்த எதிர்ப்பை கூர்மையான விதங்களில் வெளிப்படுத்தும் பொழுது அது முஸ்லிம் மக்களுக்கும் உரியதாகிறது; சிங்கள மக்களுக்கும் உரியதாகிறது.அதாவது தெளிவாகச் சொன்னால் தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் இல்லையென்றால் முஸ்லிம் மக்களுக்கும் கிடையாது ;சிங்கள மக்களுக்கும் கிடையாது.

 

http://www.nillanthan.com/4856/

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் வாசிச்சன் ...நீண்ட நாட்களுக்கு பிறகு நல்லதொரு கட்டுரை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.