Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகதிகளுக்கான பைபிளை எழுதுகிறேன் - ஷோபாசக்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகளுக்கான பைபிளை எழுதுகிறேன் - ஷோபாசக்தி

நேர்காணல்

 

இருபது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தும் எழுத்தில் இயங்கி வரும் நீங்கள்; தற்காலஇலக்கியப் போக்குகளால் சலிப்படைகிறீர்களா?

சலிப்பு என்பதற்கு என் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் இடமே கிடையாது. சலிப்பையோ, விரக்தியையோ, உளச் சோம்பலையோ ஒருபோதுமே நான் உணர்ந்ததில்லை. கற்பனைத் திறன் உள்ளவனுடைய வாழ்க்கை வேறு. உலகம் வேறு. அவனுக்கான ஒழுங்குகளும் பழக்கவழக்கங்களும் ஒழுக்கமும் வேறு. நான் அங்கேயேதான் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறேன். பலரால் மகிழ்ச்சியை அடையத்தான் முடியும். எனக்கு அதை உருவாக்கவே தெரியும். மகிழ்ச்சி என் சுண்டுவிரல் அசைவுக்காகக் காத்திருக்கும் நாய்க்குட்டி. எனவே வாழ்வின் எந்தக் கட்டத்திலும் என்னை எதிர்மறை எண்ணங்கள் நெருங்கியதேயில்லை. எதிர்காலத்தில் முதுமையோ, நோயோ என்னை விரக்தியில் வீழ்த்திவிட வாயைப் பிளந்துகொண்டு காத்திருக்கின்றன என்றுதான் நினைக்கிறேன். அப்போதும் என் கற்பனை வழியாக நான் தப்பித்துக்கொண்டேயிருப்பேன்.

இலக்கியம் ஒருபோதும் சலிப்பை  உண்டு பண்ணாது. அது உங்களைப் பண்பட்ட உயிரியாகப் பக்குவப்படுத்தும். இலக்கியம் உங்கள் மனதைச் சமநிலையில் வைத்து உங்களை நிதானப்படுத்தும். பொறுமையையும், அன்பையும், காதலையும் இருதயத்தில் கசிய விட்டவாறேயிருக்கும். வெறுப்பையும் பகையுணர்சியையும் கழுவித் துடைக்கும். என்னுடைய நண்பர்கள் வாழ்க்கையைக் குறித்துப் புகார் சொல்லும் போதெல்லாம், நான் அவர்களுக்கு இலக்கிய வாசிப்பையே பரிந்துரைக்கிறேன். உங்களது நெற்றிக்கு நேரே துப்பாக்கி பிடிக்கப்பட்டிருக்கும் போது, கடவுளை நினைக்காதீர்கள்! மனைவி பிள்ளைகளை நினைக்காதீர்கள்! பாரதியுடையதோ அன்னா அக்மதோவாவுடையதோ கவிதை வரிகைளை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு கவுரவமாகவும் அமைதியாகவும் செத்துப்போங்கள்.

தற்கால இலக்கியப் போக்குகளால் சலிப்படைகிறீர்களா? எனக் கேட்டிருந்தீர்கள். பொதுவாக நல்ல இலக்கியத்தையும் போலி எழுத்துகளையும் நூலின் ஒன்றிரண்டு பக்கங்களை வாசிக்கும்போதே அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். இப்போதெல்லாம் அந்தச்  சிரமம் கூடக் கிடையாது. புத்தகத்தின் பின்னட்டையில் பதிப்பகத்தால் எழுதப்பட்டிருக்கும் குறிப்பைப் படித்தாலே நூலின் யோக்கியதை பெரும்பாலும் புரிந்துவிடுகிறது. தண்ணீரிலிருந்து பாலைப் பிரிக்கும் நுட்பமறித்த பறவைக்குச் சலிப்பு ஏற்படாது. மாறாக, பாலின் மீதான வேட்கை அதிகரித்துக்கொண்டே செல்லும்.

அண்மைக் காலமாக உங்களது ‘இச்சா’ நாவல் மீது பல வெரைட்டியான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதே; தேர்ந்த வாசகன் என்ற அடிப்படையில் எப்படி பார்க்கிறீர்கள்?

ஓர் எழுத்தாளனுக்கு விமர்சனத்தைத் தவிர மகிழ்ச்சியைக் கொடுப்பது வேறெதுவாக இருக்கும்!  நல்வாய்ப்பாக என்னுடைய முதற் கதையிலிருந்தே நான் தொடர்ந்து வாசிக்கப்படுகிறேன், அதனாலேயே எப்போதுமே விமர்சிக்கப்படுறேன் என்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சியே. என் கதைகள் மீதான விமர்சனங்கள் எப்போது நிறுத்தப்படுகின்றனவோ, அப்போது நான் மூளை செத்தவனாகிவிட்டேன் என்பதே பொருளாகும். விமர்சனங்கள் என்பதற்குள் நீங்கள் பச்சையான அவதூறுகளைச் சேர்த்திருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன். ஓர் இலக்கிய இதழின் வேலை அவதூறுகளைப் பொருட்படுத்தி விவாதிப்பதும், சமார்த்தியமாகக் கோள்மூட்டி விடுவதுமல்ல என்பது உங்களுக்குத் தெரியும்.

ஒருவர் எழுதிய புத்தகத்துக்கு, நீங்கள் அறிமுகமோ வாழ்த்தோ  சில சொற்களில் சொல்லிச் சென்றுவிடலாம். அதில் தவறில்லை. ஆனால், நீங்கள் அந்த நூலை விமர்சனம் செய்யப் பொறுப்பு எடுத்துக்கொண்டால், அந்த விமர்சனம் முழுமையாக அமைய வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். இடப் பக்கத்து வாயில் கடலை வடையைக் கடித்துக்கொண்டே, வலப் பக்க வாயில் நூலைக் கடித்துக் குதறுவதெல்லாம் அநீதி. ஒரு நூலை எழுதுவதற்காகப் படைப்பாளி கொட்டிய உழைப்பையும் நேரத்தையும் நீங்கள் மதித்தே ஆக வேண்டும். அந்த மதிப்புடன் உங்களது விமர்சனங்கள் அமைய வேண்டும். விமர்சனத்துக்கே அந்த நூல் தகுதியற்றது என நீங்கள் கருதினால் விட்டுவிடுங்கள். விமர்சிக்கும் வேலையை நீங்கள் வருத்தப்பட்டு ஸூமில் சுமக்கக் கூடாது.

இத்தகைய பொறுப்பற்ற விமர்சனப் போக்குகளால் எந்தப் படைப்பாளியும் நிச்சயம் வேதனையுறவே செய்வார். ஒரு படைப்பாளியை வேதனையுறச் செய்வதில் கிளர்ச்சியடைவது அருவருப்பானது. இப்போது ஒரு ட்ரெண்ட் ஓடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். என்னைப் பற்றிக் கூட அப்படிச் சிலர் சொல்கிறார்கள். அதாவது இந்திய வாசகர்களுக்காக நான் எழுதுகிறேனாம். இலக்கிய வாசகர்களில் ஈழமாவது இந்தியாவாவது மலேசியாவாவது மயிராவது! எல்லோரும் தமிழ் இலக்கியம் என்ற தொன்மையான நீண்ட பரப்புக்குள்  இயங்கிக்கொண்டிருக்கிறோம். முடிந்தால் சர்வதேச இலக்கியப் பரப்புக்குள் போகவும் எத்தனிக்கிறோம். இலக்கியம் என்ன இறால் சொதியா ஈழத்துக்கு மட்டும் தனித்துவமாகப் படைப்பதற்கு?

நான் தெரியாமல்தான் கேட்கிறேன்…என்னுடைய கதைகளை ஈழத்தவர்கள் படிப்பதில்லையா என்ன! ஈழத்து வாசகர்களிடமோ, புலம் பெயர்ந்த வாசகர்களிடமோ நீங்கள் தேடிப் படிக்கும் எழுத்தாளர் யாரென்று கேட்டால் அவர்கள் என் பெயரையும் சொல்வார்கள்தானே. இல்லையென்று மறுக்க யாருக்கும் தைரியமிருக்காது என்றே நம்புகிறேன். பிறகென்ன தமிழக வாசகர்களை மட்டுமே இலக்கு வைத்து எழுதுகிறேன் எனக் குற்றச்சாட்டும் குதர்க்கமும்!

இந்த நொட்டை விமர்சகர்களுக்கு முகநூலைத் தெரிந்தளவுக்கு,  தீவிர  இலக்கிய வாசகர்களைப் பற்றித் தெரியாது. இலக்கியத்தின் மீதான அவர்களது கூர்மையான வாசிப்பை இவர்கள் அறிந்து கொள்ளமாட்டார்கள். போலி இலக்கியமெல்லாம் தமிழகத்தில் மட்டுமல்ல எங்கேயுமே செல்லுபடியாகாது. தகுதியே இல்லாமல் தீவிர இலக்கியத்திலோ, சிறுபத்திரிகை உலகிலோ கவனம் பெற்ற ஒரேயொரு படைப்பாளியைக் காட்டிவிடுங்கள் பார்க்கலாம். கிடையவே கிடையாது. நீங்கள் நூலுக்காக எத்தனை விளம்பரம் செய்தும், நடிகர்களைக் கூப்பிட்டு நூல் வெளியீடு செய்தும், முகநூலில் லைவ் போட்டும் உங்களுடைய தகுதியற்ற நூலை இலக்கியமென ஒருபோதும் தூக்கி நிறுத்தவே முடியாது. அப்படிச் செய்துவிட முடியுமென்றால் என்னுடைய அருமை நண்பர் அராத்து  தான் தமிழின் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளியாக அடையாளம் பெற்றிருப்பார். அப்படி ஏதாவது எதிர்கால வரலாற்றில் நிகழ்ந்தால் நான் உயிரோடேயே இருக்கமாட்டேன் என உங்களிடம்  சத்தியமே செய்து தருகிறேன். இலக்கியத்தைப் பொறுத்தவரை நானெல்லாம் அசுணப் பட்சி போல. அந்தப் பறவை கெட்ட சங்கீதத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே உயிர் துறந்துவிடுமாம்.

கண்டி வீரனுக்கு பிறகு சிறுகதை ஓட்டத்தில் உங்களை காண முடிவதில்லை. ரம்ழான் போன்றபுதுரக வாசிப்பு சிறுகதை மனத்தினை விட்டு ஒதுங்கிக் கொண்டதன் சூழல் எத்தகையது?

பார்த்தீர்களா பேசிக்கொண்டிருக்கும் போதே பொசுக்கென்று ஒரு விமர்சனத்தை போகிற போக்கில் வீசிவிட்டீர்கள். உண்மையிலேயே உங்கள் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை நான் எழுதப்போகும் அடுத்த  கதை உங்களுக்குப் பதிலளிக்கலாம். அது என்ன பதில் எனத் தெரிந்துகொள்ள நானும் உங்களைப் போலவே ஆர்வமாகயிருக்கிறேன்.

இலங்கையின் கதை மாந்தர்களையும், இங்கிருக்கும் நிலப்பரப்பினையும் வைத்து ஷோபாசக்தி படைப்பரசியல் செய்கிறார் எனும் விமர்சனம் பரவலாக உள்ளதே; இதற்கான மாற்றுகருத்தியலை எப்படி முன் வைக்கிறீர்கள்?

மாற்றுக் கருத்தெல்லாம் கிடையவே கிடையாது. மாறாக, இந்த விமர்சனத்துக்கு மன மகிழ்வோடு நன்றி தெரிவிக்கிறேன். என்னுடைய மாந்தர்களையும் நிலத்தையும் அதனுடைய பண்பாட்டையும் அரசியலையும் நான் எழுதாமல் அருந்ததி ராய் வந்தா எழுதுவார்!

ஈழத்தில் அலையும் உங்களது ஆத்மாவிற்கு ஓய்வேயில்லையா?

எனக்கு இந்த வகையான கேள்விகள் புரிவதேயில்லை. புகலிட தேசங்களின் கதைகளை, வாழ்க்கையை புலம் பெயர்ந்து சென்ற எழுத்தாளர்கள் எழுத வேண்டும் என்ற ஒரு மொக்கைக் கருத்தை, ஒரு தீவிர இலக்கிய விமர்சனம் போன்ற பாவனையில் சிலர் முன்வைக்கிறார்கள். உலகம் சுற்றும் வாலிபன் கதைகளை எழுதுவதற்குத்தானே அ.முத்துலிங்கம் அண்ணரை நேர்ந்துவிட்டிருக்கிறோம். அது போதாதா உங்களுக்கு?

இருபது வயதிலேயே பிரிந்து வந்த ஈழத்தையும், நான் கண்ணாலேயே பார்த்திராத வன்னியையும் அம்பாறையையும்; இல்லவே இல்லாத இலுப்பங்கேணியையும் பெரிய பள்ளன் குளத்தையும்  என்னால் தனி நாவல்களாகவே எழுத முடிகிறதென்றால், நான் முப்பது வருடங்களாக வாழ்ந்துவரும் பாரிஸ் குறித்து எனக்கு எழுத முடியாதா என்ன!

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாகப் புலம்பெயர்ந்த காலித் ஹுசைனிக்கு கிட்டத்தட்ட என்னுடைய வயதுதான். அவர் படித்தது கிடித்தது எல்லாம் அமெரிக்காவில்தான். ஆனால், ஏன் அவர் திரும்பத் திரும்ப ஆப்கானிஸ்தானையும் போரையும் பற்றியே எழுதுகிறார் என்றா கேட்பீர்கள்? அல்லது Three Daughters of China-வை எழுதிய யங் சாங்கிடம் ஏன் சீனாவைக் குறித்தும் கலாசாரப் புரட்சிக் காலத்தைக் குறித்தும் எழுதுகிறாய் என்றா கேட்பீர்கள்?

எங்களில் எந்த நிகழ்வுகளும் சம்பவங்களும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனவோ அவை குறித்துத்தான் நாங்கள்  எழுத விரும்புவோம். என்னுடைய புகலிட வாழ்க்கையில் அவ்வாறான பாதிப்புகளும் சம்பவங்களும் இல்லையா எனக் கேட்டீர்களானால், எவ்வளவுக்கு இருக்கிறதோ அவ்வளவுக்கு எழுதியிருக்கிறேன் என்பதே என் பதில்.

யுத்தம் முடிந்த பிறகும் எழுத்துகளில் ஊசலாடும் யுத்தம் முடியாமலிருக்கிறதே? இதனை வைத்துஅரசியல் செய்கிறீர்கள் என எடுத்துக் கொள்ளளலாமா?

பஞ்சம் போகும் பஞ்சத்தால் பட்ட வடு போகாது என்றொரு பழமொழி உள்ளது. பஞ்சத்தின் வடுவே அப்படியென்றால் கொடிய யுத்தத்தின் வடுவைப் பற்றி நினைத்துப்பாருங்கள். நாஸிகளால் யூதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்து, அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தைக் குறித்து,  இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தைக் குறித்தெல்லாம் இப்போதுவரை இலக்கியத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதுபோலவே இலங்கையில் நடந்த யுத்தத்தைக் குறித்தும் இன்னும் நூறாண்டுகளுக்கும் என் சந்ததிகள் எழுதத்தான் போகிறார்கள். தமிழில் மட்டுமல்லாமல் உலகின் பல மொழிகளிலும் அதை வருங்காலத் தலைமுறையினர் எழுதுவார்கள்.

இலங்கையின் குடிகள் எல்லோருமே யுத்தத்தால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள்தான். ஆனால்,  அவற்றிலும் அளவு வித்தியாசங்களுள்ளன.  அந்த வித்தியாசங்களுக்கு ஏற்பத்தான் யுத்தம் குறித்த அவர்களது பார்வைகளும், ஞாபகங்களும், மனப்பதிவுகளும், உணர்வெழுச்சியும் இருக்கும்.

நான் யுத்தத்தின் பார்வையாளனாக இருக்கவில்லை. இந்த யுத்தத்தைச்  செய்தவர்களில் ஒருவனாக இருந்தேன். என் நண்பர்களை இயக்கத்திற்கு அழைத்துப் போய், அவர்களைச் சாகக் கொடுத்திருக்கிறேன். யுத்தத்தில் நூற்றுக்கணக்கான எனது உறவுகளையும் நண்பர்களையும் பலிகொடுத்துள்ளேன். இலங்கை அரசின் சிறையில் இருந்திருக்கிறேன். சித்திரவதைகளை எதிர்கொண்டிருக்கிறேன். புலம் பெயர்ந்து வந்த பின்பும் யுத்தம் என்னைத்  தொடர்ந்தே வந்திருக்கிறது. யுத்தத்தின் விளைவுகளை நாங்கள் பாரிஸிலும் சந்தித்தோம். சனநாயகத்தைப் பேசிய எங்கள் மீது, புலிகளால் இரகசிய யுத்தமொன்று நிகழ்த்தப்பட்டது. இங்கே கொலைகளும் தாக்குதல்களும் நடந்தேறின.  யுத்தம் எனக்குக் கதை எழுதுவதற்கான கச்சாப் பொருள் அல்லவே அல்ல. நான் யுத்தத்தாலும் யுத்த நினைவுகளாலும் வடிவமைக்கப்பட்ட உயிரி. யுத்தத்தைப் பற்றி நான் எழுதுவது என்னையே எழுதுவதுதான். யுத்தத்தைக் குறித்து நான் இதுவரை எழுதியது கால்வாசி கூட இல்லை. மிகுதியை இனிமேற்தான் எழுத வேண்டும்.

யுத்தத்தை எழுதி அரசியல் செய்கிறீர்களா எனக் கேட்டீர்கள். ஆம்! நிச்சயமாகவே அதைத்தான் செய்கிறேன். நடந்து முடிந்த யுத்தத்தை மட்டுமல்ல, தற்போது சிறுபான்மை இனங்கள் மீது இந்த அரசு நிகழ்த்திக்கொண்டிருக்கும் மறைமுக யுத்தத்தையும் நான் பல்வேறு கோணங்களில் துல்லியமாகத் திரும்பத் திரும்ப இலக்கியத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த நாட்டில் தேசிய கீதத்தைத் தாய்த் தமிழ் மொழியில் பாடும் அற்ப உரிமை கூட உங்களுக்கும் எனக்கும் மறுக்கப்பட்டிருக்கிறது. ‘அரசியல் கைதிகளே எங்களிடம் இல்லை’ என்கிறார் இலங்கையின் நீதி அமைச்சர். கவிதை எழுதிய சிறுவன் பயங்கரவாதி எனக் கைது செய்யப்படுகிறான். ஒரு சிறுகதை எழுதியவர் சிறையில் கிடக்கிறார். காணாமற்போன பல்லாயிரக்கணக்கானவர்களைக் குறித்துப் பொறுப்புச் சொல்ல அரசு மறுக்கிறது. பத்திரிகைச் சுதந்திரம் கிழிந்துபோய்க் கிடக்கிறது.

ஒரு படைப்பாளி தன்னுடைய நாவலில் அரசை விமர்சித்தால், அரசின் ஆதரவாளர்களுக்குச் சுள்ளென்கிறது. புலிகளையோ இன்னொரு இயக்கத்தையோ விமர்சித்தால், அவர்களுடைய ஆதரவாளர்களுக்குச் சுடுகிறது. மதத்தை விமர்சித்தால் மதவாதிகள் கடுப்பாகிறார்கள். சாதிய ஒடுக்குமுறையை எழுதினால் சாதி வெறியர்கள் கொந்தளிக்கிறார்கள். இது மிகவும் அடிப்படையான உண்மை. இந்த உண்மையை நன்றாகத் தெரிந்துகொண்டே எழுதுகிறோம். இலக்கியத்துக்குச் சம்மந்தமே இல்லாத இத்தகைய அதிருப்தியாளர்கள் நம்மை நேரடியாகத் தாக்குவார்கள். நாயே பேயே என்றெல்லாம் முகநூலில் எழுதுவார்கள்.

ஆனால், அரசினதும் அல்லது இயக்கங்களினதும் அல்லது மதத்தினதும் சாதியினதும் ஆதரவாக இருக்கும் அதேவேளையில், இலக்கியத்திலும் ஓரஞ்சாரமாக இயங்குபவர்கள் நம்மை நேரடியாகத் தாக்க மாட்டார்கள். இலக்கியப் போர்வை போர்த்தியபடியே உள்ளடி வேலைகளைச் செய்வார்கள். ‘யுத்தத்தை தொடர்ந்து வாசிக்கச் சலிப்பாகயிருக்கிறது’, ‘யுத்தத்தை தமிழக வாசகர்களுக்கு விற்பனைப் பண்டமாக்குகிறார்கள்’  என்றெல்லாம் சுற்றிவளைத்துச் சுண்ணாம்படித்து தமது அதிருப்தியைத் தெரிவிப்பார்கள். நடந்தவற்றை மறந்துவிடுமாறு நமக்குப் புத்திமதி சொல்வார்கள்.

ஓர் இனப்படுகொலை என்பது அவ்வளவு சுலபத்தில் மறக்கக்கூடிய விசயமா என்ன! எனக்கு அப்படி இல்லை! நான் என் எழுத்துகளை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று, நிகழ்ந்த இனப்படுகொலையை வெவ்வேறு மொழிகளில் பதிவாக்கி வைக்கவும் முயற்சிகளைச்  செய்கிறேன். அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றிருக்கிறேன்.

இலக்கியத்தில் சமகால அரசியலைப் பேசக் கூடாது, அரசியல் முழக்கங்களைப் பொதிந்துவைக்கக் கூடாது என்றெல்லாம் சொல்லப்படும் விமர்சனங்கள் எனக்கானவை அல்ல. நான் எழுத வரும்போதே ‘என்னுடைய கதைகள் அளவில் பெரிதான அரசியல் துண்டுப் பிரசுரங்கள்’ எனச் சொல்லிக்கொண்டே வந்தவன். இலக்கியம் என்று வரும்போது அழகியல், ரசனை, போக்குவரத்து எல்லாம் தேவைதான். ஆனால், அவற்றை உருவாக்குவது எழுத்தாளரின் தனித்திறன் என்றுதான் நான் நினைக்கிறேன். அரசியல் முழக்கத்தை உருவாக்குபவனிடம் அது இல்லையென்று நீங்களாக நினைத்தால் எப்படி?

இலக்கிய அழகியலைக் குறித்து எழுதப்படும் கோட்பாடுகள் குறித்தோ, நடத்தப்படும் பயிற்சி முகாம்கள் குறித்தோ, விவாதங்களைக் குறித்தோ எனக்கு அதிக ஆர்வமில்லை. பாலியல் உறுப்புகளின் செயற்பாடுகளைக் குறித்து நீங்கள் புத்தகங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், நிறைவான கலவி செய்வது எப்படியென்று நீங்களாகத்தான் கண்டுபிடிக்க வேண்டும். அதுகூட சோடிக்குச் சோடி, ஆளுக்கு ஆள், நாளுக்கு நாள் மாறுபடும். இலக்கிய அழகியல் என்பது படைப்பாளியின் கூருணர்வை மட்டுமல்லாமல், வாசிப்பவரின் கூருணர்வையும் பொறுத்தது. சமகால அரசியலும், அரசியல் முழக்கங்களும்  இலக்கியத்திற்கு அடுக்காதவை எனச் சொல்பவர்கள் முதலில் பாரதியையும் கார்க்கியையும் தான் நிராகரிக்க வேண்டியிருக்கும். நான் நிராகரிப்பதாகயில்லை.

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் வடமாகாணத்திலிருந்து  விரட்டப்பட்ட முஸ்லிம்களின் கையறுநிலை குறித்து உங்களது படைப்புக்கள்  பேசவில்லை என்பதை மறுப்பதற்கான சாத்தியங்கள் ஏதும் உள்ளதா?

மறுக்கமாட்டேன். புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களைக் கொள்ளையிட்டு விரட்டியதையும்,  புலிகள் முஸ்லிம்களைக் கூட்டுப் படுகொலைகள் செய்ததையும், இனச் சுத்திகரிப்பையும் கட்டுரைகளிலும் நேர்காணல்களிலும் கருத்தரங்குகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மட்டுமே நான் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன்.

கொரில்லா, மிக உள்ளக விசாரணை, மூமின் போன்ற சில பிரதிகளில் முஸ்லிம்களை நான் கதாபாத்திரமாக்கியுள்ளது உடனடியாக ஞாபகம் வருகிறது.  ஆனால், அந்தப் பிரதிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் துரத்தப்பட்டதைப் பற்றி எழுதப்பட்டவை அல்ல.  யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் துரத்தப்பட்டதைப் பற்றி வாசு முருகவேல் ‘யப்னா பேக்கரி’ என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். படித்திருக்கிறீர்களா? நான்  அதற்கு ‘நாஸி பேக்கரி’ என்றொரு விமர்சனம் எழுதியிருக்கிறேன்.

புலி எதிர்ப்பாளர் எனும் நிலைப்பாட்டில் உங்களை அணுகுவதாக பலரும் எழுதுகின்றனர். புலிஎதிர்ப்பு என்பதையும், தமிழ்த் தேசிய எதிர்ப்பு அல்லது ஆதரவு என்பதையும் உங்களது நிலைப்பாட்டில் எப்படி அணுக நினைக்கிறீர்கள்?

இல்லாத புலியை எதிர்க்க எனக்கு மூளை சுகமில்லையா என்ன! அதையெல்லாம் கைவிட்டு ஏழெட்டு  வருடங்களாகின்றன. இப்போதும் யாராவது புலிக் கருத்தியலைச் சுமந்து வரும் போது, கிண்டல் செய்து கடந்துவிடுகிறேனே தவிர சீரியஸாக எதிர்கொள்வதில்லை. இந்த சீமானை ஹாண்டில் பண்ணும் அதே டெக்னிக்தான். கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் புலிகள் அமைப்பு மிகத் தீவிரமான இயக்கம். அதன் உறுப்பினர்கள் அர்ப்பணிப்பின் உச்சம். எனவே புலிகளையும் இந்தக் கோமாளிகளையும் ஒப்பிடவே முடியாது.

எந்த ஈழத் தமிழ் அரசியல் சிந்தனையாளரும் புலிகளின் அரசியலைப் பின்பற்றி போரையோ, தமிழீழத்தையோ இப்போது கோருவதில்லை. அதிகபட்சமாக ‘புலிகளின் காலம் பொற்காலம்’ என்று வாய் வார்த்தையாகச் சொல்வார்கள். அவர்களின் பொற்காலம்  மற்றவர்களுக்கு கற்காலம் எனச் சொல்லிவிட்டு போகவேண்டியதுதான். எனக்கும் புலிகளுக்கும் ஒன்றும் பரம்பரைப் பகையில்லை. அவர்கள் செயற்பட்டபோது அவர்களைக் கடுமையாக விமர்சித்தேன். அவர்கள் இல்லாதபோது அதற்குத் தேவையற்றுப் போகிறது. ஆனால், எங்களது வரலாற்றில் புலிகளின் காலம் ஓர் இருண்டகாலம். அதை யாருமே மறக்க முடியாதளவிற்குத்தான் புலிகள் பலமாகப் பொறித்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியத்தைப் பற்றிக் கேட்டீர்கள். சிங்களப் பேரினவாதம் ஒற்றைத் தேசியம் என்ற பெயரில் சிறுபான்மைத் தேசிய இனங்களை நசுக்கும்வரை, சிறுபான்மை இனங்கள் தங்களைப் பாதுகாக்க  தேசிய இன அடையாளத்தின் வழியே திரள்வார்கள். இந்தத் திரட்சி இல்லாவிட்டால் பெருந்தேசிய இனம், சிறுபான்மை இனங்களைச் சிறிது சிறிதாகத் தன்னுள் கரைத்துவிடும். அதற்கான முயற்சிகள்தானே இப்போது நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றன.

இப்போது மட்டுமல்ல எப்போதுமே சிங்களத் தேசியவாதமே நாட்டின் முதன்மையான ஆபத்தாகயிருக்கிறது. சிங்களப் பெருந் தேசிய இனவெறி இருக்கும் வரை, ஒடுக்கப்பட்ட இனங்கள் அரசியலில் தேசிய இன அடையாளத்துடன் அணிகுவிக்கப்படுவதை நான் எதிர்க்கமாட்டேன். தமிழ்த் தேசியம் மட்டுமல்ல, முஸ்லீம் தேசியமும் அவசியமே. சிங்களப் பேரினவாதத்தை ஏற்றுக்கொண்டு மற்றைய சிறுபான்மை இனங்கள் அதன் கீழே அமைதியாக வாழ வேண்டும் எனச் சொல்வது சிங்கள ஒற்றைத் தேசிய இனவாதக் கருத்தியல். அதைத் தமிழரே சொன்னாலும் அப்படித்தான்.

தேசியவாதம் என்ற கூர்மையான கத்தி மிக ஆபத்தானதே. இன்னொரு தேசிய இனத்தின் மீதான வெறுப்பாக அது மாறிவிடும்போது அதைக் கடுமையாக நாம் நிராகரிக்க வேண்டும். ஆனால், இப்போது இலங்கையில் தமிழர்களோ முஸ்லீம்களோ அதைத் தற்பாதுகாப்புக்கான கருவியாகவே உயர்த்துகிறார்கள். பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நிகழ்ந்த நடைபயணத்தை நான் அப்படித்தான் பார்க்கிறேன். அதனாலேயே அதைப் பலமாக ஆதரித்தேன்.

ஷோபாவின் அடுத்த கலை முயற்சிகள் என்ன?

தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான ‘ஓநாய் குலச்சின்னம்’ மற்றும் உம்பர்தோ ஈகோவின் ‘Name of the rose’ நாவல்களைத் திரைப்படமாக்கிய Jean Jacques Annaud எழுதி இயக்கும் ‘Notre-Dame brûle’ என்ற புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறேன். மார்ச் மாதத்தில் படப்பிடிப்புத் தொடங்கயிருக்கிறது. அடுத்த நாவலையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு ‘அந்தர விலாசம்’ என நாவலுக்குத் தலைப்பு வைத்துள்ளேன். நாவல் அகதிகள் குறித்ததுதான். எத்தனையோ பேர்கள் சிறிதும் பெரிதுமாக ஏற்கனவே எழுதிச் சென்ற சித்திரங்கள்தான். கடந்து வந்த பயணம்தான். ஏராளமான திரைப்படங்கள் வேறு இருக்கின்றன. ஆனால், நான் பயணங்களின் கதையையோ இரக்கத்துக்குரிய அநாதைகளைக் குறித்தோ எழுதப் போவதில்லை.  நான் அகதிகளின் அந்தர உலகத்தில் தலைகீழாக வாழ்ந்தவன். எனவே, அந்த உலகத்தைக் குறித்த என் பார்வையும் தலைகீழாகவேயிருக்கும். நான் அகதிகளுக்கான பைபிளை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறேன்.

நேர்காணல் செய்தவர்கள்:-
சாஜித் அஹமட்
ஷாதிர் யாசீன்

https://vanemmagazine.com/அகதிகளுக்கான-பைபிளை-எழுத/

 

  • கருத்துக்கள உறவுகள்
யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் வடமாகாணத்திலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களின் கையறுநிலை குறித்து உங்களது படைப்புக்கள் பேசவில்லை என்பதை மறுப்பதற்கான சாத்தியங்கள் ஏதும் உள்ளதா?
மறுக்கமாட்டேன். புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களைக் கொள்ளையிட்டு விரட்டியதையும், புலிகள் முஸ்லிம்களைக் கூட்டுப் படுகொலைகள் செய்ததையும், இனச் சுத்திகரிப்பையும் கட்டுரைகளிலும் நேர்காணல்களிலும் கருத்தரங்குகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மட்டுமே நான் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன்.
கொரில்லா, மிக உள்ளக விசாரணை, மூமின் போன்ற சில பிரதிகளில் முஸ்லிம்களை நான் கதாபாத்திரமாக்கியுள்ளது உடனடியாக ஞாபகம் வருகிறது. ஆனால், அந்தப் பிரதிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் துரத்தப்பட்டதைப் பற்றி எழுதப்பட்டவை அல்ல. யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் துரத்தப்பட்டதைப் பற்றி வாசு முருகவேல் ‘யப்னா பேக்கரி’ என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். படித்திருக்கிறீர்களா? நான் அதற்கு ‘நாஸி பேக்கரி’ என்றொரு விமர்சனம் எழுதியிருக்கிறேன்.
- ஷோபா சக்தி
(வனம் - இதழ் 02)
-
நன்றி - எழுத்தாளர் ஷோபா சக்தி. இதுவரை நீங்கள் மட்டுமல்ல, குறிப்பிடத்தக்க யாரும் "யாழ் இஸ்லாமிய வெளியேற்றம்" குறித்து கவனப்படுத்தி எழுதவில்லை. அதை தங்களின் புலி எதிர்ப்பு அரசியலுக்கு பயன்படுத்தி கொண்டதோடு நிறுத்திக் கொண்டவர்கள்தான் அதிகம். அது யாருக்கெல்லாம் லாபகரமான அரசியலாக இருந்தது என்பது தாங்கள் அறியாததல்ல!.
அந்த நீதியற்ற செயலைச் செய்த விடுதலைப் புலிகள் அமைப்பு, அந்தச் செயலுக்கு வருந்தி இஸ்லாமிய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டது பற்றியோ அல்லது ஹக்கீம் அவர்களுடன் உத்தியோக பூர்வமான பேச்சுக்களை நடத்தி மீள் குடியேற்றம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டதையோ பற்றியோ கூட யாரும் பெரிதாக பேசுவதில்லை. வே.பிரபாகரனை சந்தித்து விட்டு ஹக்கீம் பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய உணர்வு பூர்வமான பேட்டியை யாரும் மறந்திருக்க முடியாது.
என்னுடைய நாவலான "ஜெப்னா பேக்கரி" அந்த துயரமான நிகழ்வின் சாட்சியம் என்பதை அனைவரும் உணரத்தொடங்கி விட்டார்கள். அந்த நாவல் தமிழ் - இஸ்லாமிய சமூகத்தை மனந்திறந்த ஒரு உரையாடலுக்குள் கொண்டு வந்திருக்கிறது. இன்னும் ஆழமாக அது நிகழும் நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு. அத்தனை தூற்றல்களையும், அரசியல் காழ்ப்பு வார்த்தைகளையும், கண்டன கையெழுத்து நடவடிக்கைகளையும் தாண்டி, தமிழ் வாசகர்களின் ஆதரவால் "ஜெப்னா பேக்கரி" (திருத்தப்பட்ட புதிய பதிப்பாக )மீண்டும் வெளிவந்திருக்கிறது. அது அந்த நாவல் பேசிய அறத்தின் வெற்றி என்றே கருதுகிறேன். உங்களுடைய வார்த்தைகளைக் கூட அப்படியே விமர்சனக் குறிப்பாக பின் அட்டையில் நான் பதிவு செய்திருப்பதில் இருந்து என்னையும் நன்றாக விளங்கிக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். உண்மையை மறைக்கும் சக்தி என்று ஒன்று இல்லை. அப்படியான மாயத்தோற்றங்கள் ஏற்படலாம். ஆனால் அவை நிலைத்து நிற்பதில்லை. இறுதி வெற்றி என்பது எப்போதும் உண்மைக்கானதே!.
வாசு முருகவேல்
20/02/2021
May be an image of 1 person and text that says 'முருகவேலின் எழுத்துத் தனித்துவம் மிக்கது 'ஜெப்னா மாத்திரமல்ல; அதற்குள் குறைந்த பக்கங்கள் ? JkO அவ்வாறு படைக்கத் தமிழ்த்தேசியத்தின் வழிநின்று நாவல்: இஸ்லாமியரை ட்டுக் மனமுமாக முருக -எழுத்தாளர் தமிழ நாளி பேக்கரி- எங்கள் நியாயங்களையும் ணர்வுகளையும் செப்படுத்தும் புனைகதையாளர்கள் ஜெபனா பேக்கரியை கண்டு அஞ்சுவதே, இந்நாவல் நீதியிற்பாற்பட்டு எழுதப்பட்டது என்பதற்கு சான்று தீபச்செல்வன் யாழ் ஆதரிக்கிற நாவலில் முருகவேல் ஆனால், புலிகள் செய்வதற்கு நியாயம் இருக்கிறது நியாயத்தையும் தீர்ப்பெழுதுங்கள் என்கிறார் கல்யாணராமன் 150/- www.befbooks.com ஜெப்னா பேக்கரி வாசு முருகவேல்'
 
 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.