Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எமது பேனாக்கள் சரிகின்றபோது தூக்கி நிறுத்த அடுத்தவர்கள் வந்து கொண்டுதான் இருப்பார்கள்: வித்தியாதரன்.

Featured Replies

எமது பேனாக்கள் சரிகின்றபோது தூக்கி நிறுத்த அடுத்தவர்கள் வந்து கொண்டுதான் இருப்பார்கள்: வித்தியாதரன்.

ஒரு போராளியின் துப்பாக்கி சரிகின்ற போது அதனை மீண்டும் தூக்க ஒரு புதிய போராளி வருவதைப் போல் உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற எங்களுடைய தமிழ் ஊடகவியலாளர்களின் பேனாக்கள் சரிகின்றபோது அடுத்தவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று கொலை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கும் "உதயன்", "சுடரொளி" நாளிதழ்களின் ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

தனக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் குறித்தும் அதன் பின்னணி மற்றும் எதிர்விளைவுகள் குறித்தும் அவுஸ்திரேலியா, சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் "தமிழ்முழக்கம்" வானொலிக்கு வித்தியாதரன் அளித்த சிறப்பு நேர்காணல்:

இலங்கையில் ஊடக சுதந்திரம் மிக இக்கட்டான நிலைக்குச் சென்றுள்ளது. குறிப்பாகத் தமிழ் ஊடகவியலாளர்கள்- அதுவும் "உதயன்", "சுடரொளி" ஊடகவியலாளர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எங்களுடைய ஊடகப் பணியாளர்கள் ஐந்து பேர் கடந்த ஒரு வருடத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எங்களுடைய களஞ்சியப் பகுதி எரிக்கப்பட்டிருக்கிறது. அலுவலகம் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது. அந்த வரிசையில் இக்கட்டுக்களையும் நெருக்கடிகளையும் நாம் தொடர்ந்து எதிர்நோக்கி வருகிறோம்.

ஆனால் ஒரு விடயத்தை அரசாங்கமும் மற்ற தரப்பினரும் நோக்க வேண்டும். எந்த ஒரு அச்சுறுத்தலுக்காகவும் மசிந்து கொடுத்தோ அதனையொட்டி எமது ஊடகங்களை நாம் வெளியிடாமல் இருக்கவில்லை. தொடர்ந்து தமிழ் மக்களுடைய அபிலாசைகளை எங்களுடைய பத்திரிகைகள் வெளிப்படுத்துவதிலே வீறுகொண்டு செயற்பட்டு வந்திருக்கின்றன. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதன் காரணமாக தொடர்ந்து நெருக்கடிகளை நாம் சந்தித்து வருகிறோம் என நினைக்கிறேன்.

இலங்கையில் கடந்த ஓராண்டு காலத்தில் ஊடகங்களுக்கு எதிரான கொடூரங்களை நாம் பட்டியல்படுத்தினால் 50 வீதத்துக்கு அதிகமாக நெருக்கடிகளைக் கொண்ட தனித்தரப்பாக "உதயன்", "சுடரொளி" பத்திரிகைகள் உள்ளன.

எங்களுடைய யாழ்ப்பாண அலுவலகத்தில் பணியாற்றுகிற பிரதம ஆசிரியர் மற்றும் சிரேஷ்ட செய்தியாளர் குகநாதன் ஆகியோர் ஏறத்தாழ ஒரு வருடமாக உயிர்ப் பாதுகாப்பு கருதி அலுவலகத்தை விட்டு வெளியே வராமல் அலுவலகத்திற்குள்ளேயே இருந்து கொண்டு சிறை வைக்கப்பட்ட நிலையிலேயே பத்திரிகைகளை வெளியிட்டு வருகின்றனர்.

கொழும்பில் எங்களுக்கான நெருக்கடி உச்சத்தை அடைந்துள்ளது. இருப்பினும் பத்திரிகைகளை வெளியிடுவதில் நாம் மிகுந்த ஆர்வத்துடனும் ஊக்கத்துடனே உள்ளோம். நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாம் பத்திரிகைகளை வெளியிடுவோம்.

நேற்று முன்தினம் என்னுடைய இல்லத்துக்கு வெள்ளை வானில் வந்த சிலர் என்னுடைய இருப்பிடத்துக்கு வந்து என்னைப் பற்றியும் என்னுடைய இருப்பிடம் பற்றியும் விசாரித்து என்னுடைய வீட்டுக்குள் வர முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் என்னுடைய வீட்டினுடைய காவலாளி புத்திசாலித்தனமாக நடந்துகொண்டு, நாங்கள் வீட்டை விட்டு இரண்டு நாட்களுக்கு முன்னரே வெளியேறிவிட்டோம் என்று ஒரு தகவலைத் தெரிவித்து அனுப்பியுள்ளார். என்னுடைய புதிய வீட்டின் முகவரியை அறிய முடியாத நிலையில் அவர்கள் திரும்பிச் சென்றிருக்கின்றனர்.

அது தொடர் மாடி கொண்ட கட்டடத் தொகுதி. அதில் 24 வீடுகள் உள்ளன. எங்களுடைய வீட்டை அடையாளம் காண முடியாமல் இருப்பதனை அறிய முடியாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.

இதுபற்றி எங்களுடைய பத்திரிகையில் நேரடியாக செய்தி வெளியிடாமல் அரசாங்கத்துக்குத் தெரிவித்தோம்.

அதற்குக் காரணம் இருக்கிறது. ஏற்கெனவே "உதயன்", "சுடரொளி" பத்திரிகைகள் நெருக்கடிகளுக்கு மத்தியில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இத்தகைய செய்திகளைப் பகிரங்கப்படுத்துவதன் மூலம் எங்களுடைய ஊழியர்களுடைய மன உற்சாகத்தைப் பாதிப்படையச் செய்ய விரும்பவில்லை.

மகிந்தவின் நேரடி உத்தரவின் பேரில் மகிந்தவின் அலரி மாளிகையில் இதுபற்றி கலந்துரையாடிய அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு என்னுடைய இல்லத்துக்கு நேரடியாக சென்று விசாரித்துள்ளது. பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன், வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் இங்கு வந்தனர். அவர்கள் வரும்போது வானொலி, தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒரு பெரிய பட்டாளம் போல் வந்தனர்.

ஒரு பத்திரிகையாளர் மிரட்டப்பட்டார்- உயிருக்கு ஆபத்தான நிலை என்ற செய்தி வெளியே வந்து, அதனால் ஏற்படுகிற மோசமான விளைவுகளை முன்கூட்டியே சமாளிப்பதற்காக தாங்கள் கூடிய கவனமாக இந்த விடயத்தில் இருப்பதனைப் போல் காட்டுவதற்காக முன்னேற்பாடுகளுடன் தான் வந்தார்கள் போல் தெரிகிறது.

கொழும்பில் இருக்கிற சகல ஊடகங்களும் இந்த விடயத்தை முக்கியத்துவம் கொடுத்து முழு அளவில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது என்கிற வகையில் வெளியிட்டுள்ளனர். இதனைப் பார்க்கும்போது உண்மையிலேயே அத்தகைய எண்ணத்தோடுதான் அரசாங்கம் செயற்பட்டிருக்குமேயானால் அது வரவேற்கத்தக்கது. ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. என்னுடைய இல்லத்துக்கோ எங்களுடைய அலுவலகத்துக்கோ ஏதேனும் பாதுகாப்பு கொடுப்பதாக வந்தவர்கள் பேசியதாகவோ முயற்சி எடுத்ததாகவோ இல்லை. வெறுமனே ஊடகங்களில் பகிரங்கப்படுத்துகின்ற நடவடிக்கையாக- தாங்கள் கவனமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் நடவடிக்கையாகத்தான் உள்ளது.

எங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்காத வரை அச்சுறுத்தல்கள் கொடுத்தோர் மீண்டும் கூட அத்தகைய ஒரு முயற்சியில் ஈடுபடலாம். உயிருக்கு உலை வைக்க முயற்சி எடுக்கக்கூடும்.

இதே நிலைதான் எங்களுடைய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரவணபவனுக்கு இருக்கிறது. அவரும் மிகவும் ஆபத்தான நிலையில்தான் உள்ளார்.

எங்களில் ஒருவரை அழிப்பதன் மூலம் "உதயன்", "சுடரொளி"க்கு மூடுவிழா நடத்திவிடலாம் என சிலவேளை தென்னிலங்கை கருதக்கூடும். அதனுடைய வெளிப்பாடாக இதனைப் பார்க்கிறோம்.

கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விடயத்தில் எல்லோருமே மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த வழக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதனைப் பற்றி பலரும் பேசுகின்றனர். ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும்.

மாற்றுக் கொள்கைகளுக்கான மையமானது ஒரு பொதுநலன் வழக்கைத்தான் தாக்கல் செய்திருக்கிறது. உயர்நீதிமன்றமும் அந்த பொதுநலன் வழக்கைத்தான் விசாரித்து சரி- தவறு என மட்டுமே தீர்ப்புக் கொடுக்கும்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படியான ஒன்றை முன்வைத்து வழக்கு தாக்கல் செய்யப்படாதபோது பாதிக்கப்பட்டோரைத் தேடிப்போய் நீதிமன்றம் நிவாரணம் அளிக்காது.

அடுத்து, இத்தகைய விடயத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், காவல்துறை மா அதிபர் மற்றும் காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும். இவர்களுக்கு எதிரான வழக்குகளில் பொதுவாக சட்ட மா அதிபர் நீதிமன்றில் முன்னிலையாகி வாதாடுவார்.

ஆனால் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டது தவறு என்று சிறிலங்கா அரசாங்கம் தனது பிரதமர் மூலம் ஒப்புக்கொண்டுள்ளது.

அப்படியான நிலையில் ஒரு தவறான விடயத்துக்காக சட்ட மா அதிபர், இத்தகைய அதிகாரிகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாக முடியாது. முன்னிலையாக மாட்டார்.

அதனால் எதிர்மனுதாரர்களாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், காவல்துறை மா அதிபர் மற்றும் காவல்நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் குறிப்பிடப்படும்போது அவர்கள் தனித்தனியே சட்டத்தரணிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படும்.

கடந்த 2001 ஆம் ஆண்டு தேர்தலின் போது வவுனியாவிலிருந்தும் மட்டக்களப்பிலிருந்தும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச வாக்காளர்கள், மற்றைய பகுதிக்கு வந்து வாக்களிக்கவிடாமல் பாதையை மூடியது தொடர்பாக 5 பேர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பின் படி அப்போதைய இராணுவத் தளபதி பலகல்ல, அரசாங்கத்தின் பணத்திலிருந்து அல்ல என்பதனைக் கவனிக்க வேண்டும்- தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதேபோல் கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பாக தனித்தனியே வழக்குகள் தொடரப்படும் நிலையில் அடையாளத்துக்காகவாவது பாதிக்கப்பட்டோருக்கு ஒரு சொற்ப தொகையாவது தங்களது பையிலிருந்து வழங்க நேரிடும். ஏனெனில் இந்தச் செயற்பாட்டை தவறு என்று அரசாங்கம் சொல்லியிருக்கிறது. அத்தகைய நிலையில் எதிர்மனுதாரர்கள், தங்களுடைய சட்டத்தரணிகளைக் கொண்டு பிரச்சினைகளை எதிர்கொண்டு நட்ட ஈடு செலுத்தினால்தான் இதுபோன்ற எழுத்துமூலம் இல்லாத- வாய்மூலம் பாதுகாப்புத் தரப்புக் கொடுக்கின்ற அழுத்தங்களுக்கு நாங்கள் கட்டுப்படமாட்டோம் என்ற நிலையை காவல்துறை அதிகாரிகள் எடுக்க முடியும். தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி அனைவரும் இத்தகைய வழக்குகளைத் தாக்கல் செய்ய முன்வர வேண்டும் என்று கூறினோம்.

மேலும், "நாடாளுமன்றத்தில் நின்று கொண்டு சட்டையைக் கிழித்தெறிவது அர்த்தமல்ல- அல்லது லிப்டன் சதுக்கம் முன்பாக நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதனால் இது நின்றுவிடாது. அந்த மக்களைத் திரட்டி வழக்குப் போடுங்கள்" என்றும் அரசியல்வாதிகளுக்குக் கூறினோம். அப்போது அந்த அரசியல்வாதிகளில் சிலர், நாங்கள் ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறோம்- மக்கள் தயாராக இல்லை என்றனர். அப்போது இத்தகைய வழக்குகளைத் தாக்கல் செய்தால் ஏற்படக்கூடிய இலாபங்களை பட்டியலிட்டு செய்தி வெளியிட்டோம்.

ஏற்கெனவே வெளிநாடுகளில் அகதிகளாக இருப்போரை வெளியேற்றும் போது யாழ்ப்பாணத்தில் இருக்க முடியாதுவிட்டால் கொழும்பில் போய் இருக்கலாம் என்று கூறி அகதி அந்தஸ்தை நீக்குகிறார்கள். அதுகூட தவறானது என்பதனைக் காட்ட இந்த வழக்கின் தீர்ப்பு பயனாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினோம். அதுமட்டுமல்லாது இந்த வழக்கு முடியும் வரை பலவந்தமாக இனிமேல் வெளியேற்றப்படும் ஆபத்தை எதிர்கொள்ளமாட்டார்கள். வழக்கு காரணமாக கொழும்பில் தங்கியிருக்க முடியும். அவர்களை கைது செய்யவும் முடியாது என்றும் சுட்டிக்காட்டினோம். இதனையடுத்து தற்போது 40 பேர் வரை வழக்குத் தாக்கல் செய்ய முன்வந்திருக்கின்றனர்.

அதேபோல் வேறு வட்டாரங்களிலும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

இன்றைய நிலையில் மகிந்தவுக்கு விடுதலைப் புலிகளோடு தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய நடுநிலையாளர்களை அவர்களிடமிருந்து வெட்டிவிடக் கூடிய முயற்சியின் ஒரு ஆரம்ப கட்டமாக எங்கள் உயிருக்கு உலை வைக்க முயற்சிகள் மேற்கொண்டிருக்கலாம். எங்களின் மூலமாக விடுதலைப் புலிகளுடன் மகிந்த தொடர்பை தொடங்கக்கூடும் என்று கருதி போர்ச் செயற்பாடுகளிலே தீவிரமாக இருக்கக்கூடிய தென்னிலங்கைச் சக்திகள் எங்கள் உயிருக்கு உலை வைக்க நினைக்கலாம். இச்சம்பவம் நடந்த உடனேயே பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட உள்ள நபரின் இல்லத்துக்கு அமைச்சர்களை அரசாங்கம் விரைந்து அனுப்பியதன் பின்னணியாக அரசாங்கத்தின் மேல்மட்டத்தில் உள்ள முரண்பாடு வெளிப்பட்டதாகவும் இருக்கலாம் எனவும் கருதுகிறோம்.

அதேநேரத்தில் தொடர்ச்சியாக கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை உரிமைக்கான போராட்டத்தை ஒரு துணிச்சலோடு வெளிப்படுத்தி வருகின்ற ஊடகம் என்ற வகையில் அந்த ஊடகத்தின் தொடர் செயற்பாட்டை சிதைப்பதற்காக எங்களின் உயிருக்கு உலை வைக்கக்கூடும்.

ஆக, எது என்ன என்பது அரசாங்கத்தின் விசாரணைகள் மூலம் வெளியே வர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம்.

இது தொடர்பாக காவல்துறைக்கு நாம் உத்தியோகப்பூர்வமாக எதுவித முறைப்பாடும் செய்யவில்லை. எங்களைச் சந்தித்த அமைச்சர்கள் குழு, காவல்துறை மா அதிபருடன் நேரடியாக பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் அது தொடர்பான விவரங்களைத் தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டைச் செய்ய வேண்டியவர் நான் தங்கியிருக்கும் தொடர்மாடி இல்லத்து காவலாளி. ஏற்கெனவே அவர் அச்சத்தில் உள்ளார். காவல் நிலையத்துக்குச் செல்ல அவர் விரும்பவில்லை. என்னுடைய விவகாரத்துக்காக அவரையும் அவரது குடும்பத்தினரையும் இக்கட்டில் மாட்டிவிட நான் விரும்பவில்லை.

இருப்பினும் வெள்ளவத்தையில் உள்ள எனது இல்லத்துக்கு அமைச்சர்கள் குழுவும் பெருந்தொகையான ஊடகவியலாளர்களும் வாகனங்களில் வந்து சென்றதனைத் தொடர்ந்து காவல்நிலைய அதிகாரிகள், எமது குடியிருப்பு காவலாளியிடம் ஏன் அவர்கள் வந்து சென்றனர் எனக் கேட்டுவிட்டுச் சென்றுள்ளனர். ஆனால் பாதுகாப்பு தருவது பற்றியோ அச்சுறுத்தல் பற்றியோ அவர்கள் விசாரிக்கவில்லை.

ஒரு போராளியின் துப்பாக்கி சரிகின்ற போது அதனை மீண்டும் தூக்க ஒரு புதிய போராளி வருவதைப் போல் உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற எங்களுடைய தமிழ் ஊடகவியலாளர்களின் பேனாக்கள் சரிகின்றபோது அடுத்தவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

"உதயன்" நாளிதழின் எத்தனையோ பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் "உதயன்" வெளிவராமல் இருந்தது இல்லை.

கடந்த வருடம் மே 2 ஆம் நாள் ஐந்து ஆயுததாரிகள் உள்நுழைந்து 200-க்கும் அதிகமான துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்து எமது ஊழியர்கள் இருவரை கொலை செய்து- இருவரை காயப்படுத்தி எங்களுடைய கணணிகளை அழித்தனர். கொலை செய்யப்பட்ட ஊழியர்களின் சடலங்கள் மரண விசாரணைகளின் பின்னர் அதிகாலை 5 மணிக்குத்தான் எமது அலுவலகத்திலிருந்து பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அதற்கு முன்னர் அதிகாலை 3 மணிக்கே கொலை செய்யப்பட்ட ஊழியர்களின் படங்களோடு- அந்தக் கொடூர சம்பவத்தைத் தாங்கிய செய்திகளுடன் "உதயன்" வெளியாகியிருந்தது.

"சுடரொளி" அலுவலகத்தின் மீது மாலை 5.45 மணிக்கு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. வாசலில் இருந்த காவலாளி கொல்லப்பட்டார். கொலை செய்யப்பட்ட காவலாளியின் படங்களுடனான விபரங்களுடன் அன்று இரவே ஆனால் திருகோணமலை மட்டக்களப்புக்குரிய "சுடரொளி" பத்திரிகைகள் தொடரூந்தில் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆகவே,

எக்காரணத்தை முன்னிட்டும் ஊடகவியலாளர்கள் தங்களது வரலாற்றுக் கடமையிலிருந்து ஒதுங்கிவிடவும் முடியாது- விலகிவிடவும் முடியாது.

என்னுடைய உயிருக்கு உலை வைக்க முயற்சிப்பவர்கள் ஒன்றைக் கருதவேண்டும். என்னை அழிப்பதன் மூலம்- என்னைக் கொல்வதன் மூலம் தங்களுடைய இலக்கில் அவர்கள் எதனை அடைவார்களோ அதனையும்விட மோசமான விளைவுகளை பத்திரிகையாளர்களை அழிக்கின்ற விவகாரம் அதனைச் செய்யத் தூண்டுபவர்களுக்கு ஏற்படும் என்பதுதான் இன்றைய நிலைமை.

சிவராம் கொல்லப்பட்டபோது இருந்த நிலையைப் பார்க்க இன்று மிகவும் மோசமான நிலைதான் உள்ளது.

தென்னிலங்கையை அனைத்துலகம் உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது.

அவர்கள் இது போன்ற ஒரு தவறை செய்வார்களேயானால்-

நான் இருந்து என்னுடைய சமூகத்துக்கு செய்ததைவிட

நான் மறைந்து என்னுடைய சமூகத்துக்கு செய்யக் கூடியது

போன்ற நிலையைத்தான் ஏற்படுத்தும்.

ஆகவே இதற்காக அஞ்சுவதனைக் காட்டிலும் துணிவாக எதிர்கொள்வதே மேலானது- முறையானது. ஆகையால் இந்த விடயத்தை பொருட்டாகக் கருதவில்லை. தற்போதும் வழமை போல் உந்துருளியில் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்திருக்கிறேன்.

ஐந்து அனைத்துலக ஊடகவியலாளர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் வருகை தந்து இலங்கையில் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் பற்றி தன்னுடைய ஆய்வை முடித்திருக்கிறது.

உலகத்திலேயே மிக மோசமான பத்திரிகை சுதந்திரம் மீறல் உள்ள நாடாக இலங்கையை அவர்கள் அடையாளம் கண்டிருக்கின்றனர்.

அதிலும் உலகிலேயே பத்திரிகைத்துறைக்கு மிக ஆபத்தான இடமான யாழ்ப்பாணத்தை அவர்கள் கண்டிருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்திலே "உதயன்" அலுவலகம் எதிர்கொண்டிருக்கும் மோசமான நிலையை அவர்கள் கரிசனையோடு சுட்டிக்காட்டியிருக்கின்றன

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்,பத்திரிகையாளர்களை அழிப்பதன் மூலமோ அல்லது இணையதளத்தினை அடையமுடியாது தடுத்தல் மூலமோ உண்மையை மறைக்க முயலும் மகிந்தவின் முட்டாள்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை கொலைகள். எத்தனை இடர்கள் . அனைத்தையும் தாங்கி உதயன் மிளிர்கின்றது என்றால் அதை வழிநடத்துபவர்களின் அஞ்சாத் தன்மையும், ஊழியர்களின் தியாக மனப்பான்மையையும் தான் தான் காரணம். உண்மையில் அதற்குத் தலை வணங்குகின்றோம்.

உங்களின் பேனையால் நிறையவே எழுத வேண்டியிருக்கின்றது வித்தியாதரனே!

உங'களஜுன' பாதுகாப்பிலும், அவதானமான நடமாட்டத்திலும் தான் அதைச் சாதிக்க முடியும். இங்கு சொல்பவற்றை நீங்கள் எழுத்து மூலமாக ஐநா, அனைத்து சர்வதேச ஊடகங்களுக்கும் உடனடியாக அனுப்பி வையுங்கள்.

மகிந்த ஆட்களை அனுப்பி வைத்தது கூட உங்களின் உயிர் அச்சுறுத்தலினால் ஏற்படும் விளைவுகளுக்குத் தாங்கள் பொறுப்பில்லை என்று காட்டுவதற்காக இருக்கலாம். எனவே உங்களுக்கு கொலை மிரட்டல் இருப்பது மிகமிக உறுதியானது. முதலில் உங்களைக் காப்பாற்றிக் கொள்வதன் மூலம் தான் உண்மைகளைக் காப்பாற்ற முடியும். அதற்குத் துரித முடிவு எடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியத்திற்காக களத்தில் போராடும் மைந்தர்களுக்கு சமமாக இயங்கிவருவது தான் யாழ் உதயன் பத்திரிகை.

மிகவும் துணிச்சலாக செயல்படும் சகோதரன் வித்தியாதரனின் திறன் வியக்கத்தக்கவை.

நான் ஈழத்திற்கு செல்லும்போது அவர்களைச் சந்திக்கத் தவறுவதேயில்லை. நல்ல தூர நோக்கு சிந்தனையுள்ளவர்.

இவருக்கு தற்செயலாக ஏதாவது தீங்கு நடந்துதோ திலீபன் மறைவுக்கு பின் நாட்டில் இடம்பெற்ற கொந்தளிப்புத்தான் சாத்தியம்.

அவ்வளவுக்கு மக்களின் மனங்களில் இடம்பெற்றுள்ளார். இதை புரிந்து நடப்பவர்கள் புரிந்து நடந்தால் எல்லோருக்கும் நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரும்பு போன்ற வைர வரிகள்.. நம்பிக்கை ஊட்டுகின்ற வரிகள்..

தங்களுடைய துணிச்சலுக்கு பாராட்டுக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

"உதயன்" இது ஒவ்வொரு நாளும் உதிப்பதற்காக எத்தனை தியாகங்கள் எத்தனை உயிர்களை விதைத்தீர்களோ??

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய வித்தியாதரன் அவர்களின் வரிகள் ஆழமானவை! அற்புதமாவை! ஆம் அந்த அற்புதமான மனிதர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் இடர்கள் வரினும் பேனாக்கள் இரும்பாக மாறி நிக்கும் அது உண்மை ஆனால் இதை மனிதகுலம் உள்ள அரசியலுக்கும் அப்படிப்பட்ட மக்களுக்கும் மனிதர்களுக்கும் சொல்லவேண்டும் ஆனால் காட்டில் வாழும் சிங்கத்திற்க்கு அது புரியாது அல்லது விசர் நாய்களுக்கு அது தெரியாது எனவே நன்றி உள்ள நாய்கள் தாங்கள் சொல்வது சரி என்று புரிந்து தன்னை திருத்திக்கொள்ளும் ஆனால் விசர் நாய்கள் வெறி பிடிந்த அடம்பிடித்த சிங்கம் தன்னையும் அழித்து மற்றவனையும் அழித்து விடும் எனவே வித்தியாதரன் அண்ணன் அவர்களுக்கு அன்பு உள்ளம் கொண்ட நாம் வேண்டுவது என்ன வெனில் நாம் இழந்தது போதும் இனியும் இழக்க நாம் விரும்பவில்லை எனவே உங்கள் பாதுகாப்பில் அக்கறையாக இருங்கள் ஆனால் கோளையாக இருக்க மாட்டீர்கள் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்து கிடையாது எனவே உமது பணி எமக்கு இன்னும் வேண்டும் எமது நாட்டுக்கு வேண்டும் எமது வருங்கால சமுதாயத்திற்க்கு வேண்டும்

நன்றியுடன்

நாதன் தோமஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.