இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள் (பகுதி I)
9 Jan 2026, 7:14 AM
ஆறு மைல்கற்களும் அவற்றால் எழும் சவால்களும்
ருக்மிணி எஸ்
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருப்பதால், இந்தியாவின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் உலகை ஆழமாகப் பாதிக்கின்றன. ஆயினும், இந்த முக்கியமான மாற்றங்கள் இந்தியாவுக்குள்ளும் உலக அளவிலும் போதுமான அளவு ஆவணப்படுத்தப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை.
‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data For India) என்னும் தளத்தில் உயர்தரமான இந்திய, உலகளாவிய தரவு மூலங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றங்களை நாங்கள் நெருக்கமாகக் கண்காணிக்கிறோம்: உலகளாவிய தரவுகளுக்கு உலக மக்கள்தொகையின் சாத்தியப்பாடுகள் குறித்த ஐக்கிய நாடுகளின் 2024ஆம் ஆண்டின் அறிக்கை (திருத்தப்பட்டது) (United Nations World Population Prospects, 2024 Revision), இந்தியத் தரவுகளுக்கு 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, மாதிரிப் பதிவு அமைப்பு (Sample Registration System), தேசியக் குடும்ப நல ஆய்வின் (National Family Health Survey) மக்கள்தொகை மதிப்பீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். மூன்று பகுதிகள் கொண்ட இந்தத் தொடரின் மூலம், மக்கள்தொகை மாற்றங்கள் குறித்த இன்றியமையாத இந்தியத் தரவுகளைத் தொகுத்து, இந்தியாவில் நடைபெறும் இதர சமூக-பொருளாதார மாற்றங்களின் பின்னணியில் வைத்து, உலகளாவிய சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிக்கிறோம். இதன் மூலம், புதிய ஆராய்ச்சிக்கான பகுதிகளையும், கொள்கை, விவாதங்களுக்கான திசைகளையும் அடையாளம் காண்கிறோம்.
பகுதி Iஇல், தற்போதுள்ள நிலைமையையும், கவனிக்கப்படாமல்போனதாக நாங்கள் கருதும் முக்கியமான அண்மைக்காலத் தரவுகளையும் விவரிக்கத் தேவையான தரவுகளை வழங்குகிறோம். பகுதி IIஇல், குறைந்துவரும் பிறப்பு விகிதங்கள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்வதுடன், இந்தியா ஒருபுறம் தனித்துவமானதாகவும் மற்றொரு புறம் உலகளாவிய போக்கின் அங்கமாகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டும் ஆராய்ச்சிகளைப் பகிர்ந்துகொள்கிறோம். பகுதி IIIஇல், இந்திய மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்தொகை வேறுபாடுகள், அவை தற்போதைய சமூக-பொருளாதார, அரசியல் பதற்றங்களுக்கு வழிவகுக்கும் விதங்கள் ஆகியவை பற்றிய தரவுகளை ஆராய்கிறோம்.
மக்கள் தொகை விஷயத்தில் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முக்கியமான ஆறு திருப்புமுனைகளைக் கண்டுள்ளது. இவை உலகளாவிய மக்கள்தொகையியல், மேம்பாடு, வளர்ச்சி ஆகியவற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தருணங்கள்.
1. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறுதல்
2020களின் தொடக்கத்தில், இந்தியா சீனாவை விஞ்சி 1.4 பில்லியன் மக்களுடன் உலகிலேயே மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக ஆனது.
இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதில் ஐயம் இல்லை. மேலும் பல தசாப்தங்களுக்கு அது அவ்வாறே தொடரும். 2060களின் தொடக்கத்தில் உச்சத்தை அடையும்போது இந்தியாவின் மக்கள்தொகை 1.7 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எதிர்கால மக்கள்தொகை தொடர்பான கணிப்புகள் அதிகபட்சமாக 2100வரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தக் கட்டத்தைத் தாண்டியும் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மக்கள்தொகையின் அளவு மற்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளுகிறது. ஆனால் நைஜீரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட இதர பெரிய நாடுகளும் வளர்ந்துவருகின்றன. உலக மக்கள்தொகையில் இந்தியாவின் பங்கு 2030க்குள் உச்சத்தை அடைந்து, அதன் பிறகு குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தியாவின் மக்கள்தொகை தொடர்ந்து வளர்ந்தாலும், இந்த வளர்ச்சியின் வேகம் ஏற்கெனவே கணிசமாகக் குறைந்துவிட்டது. நம்பகமான, ஒப்பிடக்கூடிய தரவு கிடைத்த ஆரம்ப ஆண்டுகளில், அதாவது இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகும் 1950களின் தொடக்கத்திலும் இந்தியாவின் மக்கள்தொகை ஆண்டுக்கு 2 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்துவந்தது. அதே காலகட்டத்தில் உலகின் மொத்த மக்கள்தொகை ஆண்டுக்கு சுமார் 1.75 சதவீதம் வளர்ந்துவந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய மூன்று தசாப்தங்களில், இந்தியாவின் மக்கள்தொகை இருமடங்காக அதிகரித்தது.
1980களிலிருந்து இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி குறையத் தொடங்கியது. 2020க்குள், இந்தியாவின் வருடாந்தர மக்கள்தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1 சதவீதத்திற்குக் கீழே குறைந்தது. அடுத்த சில ஆண்டுகளில் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்திற்குக் கீழே இது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மேலும் குறையும்போது இந்த இடைவெளி தொடர்ந்து அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புத்தாயிரத்தின் தொடக்கத்தில் இந்தியா தனது மக்கள்தொகையில் ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் மக்களைச் சேர்த்துவந்தது. பிறகு இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 2024ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா ஆண்டுக்கு 13 மில்லியனுக்கும் குறைவான மக்களையே சேர்த்தது. இந்தப் போக்கு தொடரும் நிலையில், இந்தியா மக்கள்தொகையைக் கூட்டுவதை 2060க்குள் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அதன் மொத்த மக்கள்தொகை குறையத் தொடங்கும்.
மக்கள்தொகை வளர்ச்சியில் ஏற்படும் குறைவு நாடு முழுவதும் நிகழ்கிறது. இருப்பினும், இப்படிக் குறைவதில் இரண்டு வேறுபட்ட வேகங்கள் உள்ளன.
வரலாற்று ரீதியாக, இந்தியாவின் தெற்கு, மேற்கு மாநிலங்கள் வளமானவையாக இருந்துவருகின்றன. பெண்களின் கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்டவற்றில் சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளன. இதன் விளைவாகத் தெற்கு, மேற்கு மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சிக்கும், ஏழ்மையான, குறைந்த வளர்ச்சியடைந்த கிழக்கு, வடக்கு மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சிக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது.
இந்திய மாநிலங்கள் முழுவதும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்கள் 1970கள்வரை ஒரே மாதிரியாகவே இருந்தன. 1980களிலிருந்து இந்தியாவின் தெற்கு மாநிலங்களின் மக்கள்தொகை மத்திய, வடக்கு, கிழக்கு மாநிலங்களைவிட மிக மெதுவாக வளர்ந்துவருகிறது. உதாரணமாக, இந்தியாவின் தெற்கில் அமைந்துள்ள மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலமான கேரளத்தில் வருடாந்தர மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1970களில் இரண்டு சதவீதத்திற்குக் கீழே குறைந்தது.
இந்தியாவின் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றான, கிழக்கில் உள்ள கங்கைச் சமவெளியில் அமைந்துள்ள பிகாரில், வருடாந்தர மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2010களின் பிற்பகுதியில்தான் இரண்டு சதவீதத்திற்குக் கீழே குறையத் தொடங்கியது. கேரளத்தில் மக்கள்தொகை இரண்டு சதவீதத்திற்குக் கீழே குறைந்த நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிகாரில் அவ்வாறு நிகழ்ந்திருக்கிறது.
மக்கள்தொகை வளர்ச்சி ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் மாநிலங்கள் எதிர்காலத்தில் இந்தியாவின் மக்கள்தொகையில் அதிக பங்கைக் கொண்டிருக்கும் என்பதே இதன் பொருள். 2011முதல் 2036வரையிலான இந்தியாவின் மொத்த மக்கள்தொகை அதிகரிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே நிகழ்ந்திருக்கும். இதே காலகட்டத்தில் இந்திய மக்கள்தொகையில் அனைத்துத் தென்னிந்திய மாநிலங்களின் பங்கு குறைந்திருக்கும். (இந்தத் தொடரின் பகுதி III இந்தப் பிளவை இன்னும் விரிவாக விவாதிக்கிறது.)
2. கருவுறும் எண்ணிக்கை மக்கள்தொகையைப் ‘பதிலீடு செய்யும் விகிதத்திற்குக்’ கீழே குறைதல்
பிறப்பு விகிதங்களில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சிதான் மக்கள்தொகை வளர்ச்சியில் ஏற்படும் இந்த வேகக் குறைவுக்குக் காரணம்.
மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate – TFR) என்பது ஒரு பெண் தனது வாழ்நாளில் பெற்றெடுக்க வாய்ப்புள்ள குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையைக் குறிக்கிறது. நாடுகள் வளரும்போதும் பெண்களுக்குச் சிறந்த சுகாதாரமும் கல்வியும் கிடைக்கும்போது கருவுறுதல் விகிதங்கள் குறையத் தொடங்குகின்றன. இது உலகம் முழுவதும் காணப்படும் போக்கு.
ஒரு நாட்டின் TFR 2.1 ஆகக் குறையும்போது, அதாவது பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்றால், அந்த நாடு “மக்கள் தொகையைப் பதிலீடு செய்யும் அளவுக்குக் கருவுறுதல்” (replacement fertility) என்னும் நிலையை அடைந்துவிட்டது என்று மக்கள்தொகையியலாளர்கள் கூறுகின்றனர். இரண்டு பெரியவர்கள் தங்கள் வாழ்நாளில் 2.1 குழந்தைகளைப் பெற்றெடுக்கும்போது, குழந்தைப் பருவம் அல்லது இளமைப் பருவத்தில் இறப்பதற்கான சில வாய்ப்புகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், அந்தத் தம்பதியினர் இரண்டு பெரியவர்களை உருவாக்குவார்கள். இதனால் மக்கள்தொகையின் அளவு மாறாமல் இருக்கும் என்பதே பதிலீடு செய்யும் அளவுக்குக் கருவுறுதல் என்பதன் பொருள். இது ஒரு நாட்டின் மக்கள்தொகைப் பயணத்தில் முக்கியமான மைல்கல். பதிலீடுசெய்யும் நிலைக்குக் கீழே கருவுறுதல் குறைந்தால், மக்கள்தொகையின் மொத்த எண்ணிக்கை குறையத் தொடங்கும்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்ப தசாப்தங்களில் அதிகமாக இருந்த இந்தியாவின் TFR பிறகு வேகமாகக் குறைந்து, சமீபத்திய அதிகாரப்பூர்வ இந்தியத் தரவுகளின்படி, இப்போது பதிலீட்டு விகிதத்திற்குக் கீழே 1.9 ஆகக் குறைந்துள்ளது. நகர்ப்புற இந்தியாவைவிடக் கிராமப்புற இந்தியாவில் கருவுறுதல் விகிதம் அதிகமாக உள்ளது; கிராமப்புற இந்தியாவிலும், கருவுறுதல் இப்போது பதிலீட்டு விகிதத்தை நெருங்கிவிட்டது.
கருவுறுதல் எல்லா இடங்களிலும் குறைந்தாலும், இந்தியாவிற்குள் மாநிலங்களுக்கிடையே இதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. தெற்கு, மேற்கு மாநிலங்களில் TFR பதிலீட்டு விகிதத்திற்குக் கீழே உள்ளது. இந்த மாநிலங்களில், கருவுறுதல் நிலைகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளதைப் போலவே குறைவாக உள்ளன. உதாரணமாக, மும்பையைத் தலைநகராகக் கொண்ட மேற்கு மாநிலமான மகாராஷ்டிரத்தின் கருவுறுதல் விகிதம் நார்வேயைவிடக் குறைவாக உள்ளது. (இந்தத் தொடரின் பகுதி II கருவுறுதல் விவாதத்தை இன்னும் விரிவாக ஆராய்கிறது.)
வரலாற்று ரீதியாக அதிகக் கருவுறுதலைக் கொண்டிருந்த வடக்கு, கிழக்கு மாநிலங்களிலும் கருவுறுதல் குறைந்துள்ளது. கருவுறுதலில் இந்தியாவின் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் மாநிலமான பிகாரிலும்கூட TFR இப்போது ஒரு பெண்ணுக்கு 3.0 குழந்தைகளுக்கும் குறைவாகவே உள்ளது.
எனினும், வடக்கு, தெற்கு மாநிலங்களின் கருவுறுதல் விகிதங்களில் உள்ள இந்தத் தொடர்ச்சியான இடைவெளி இந்திய அரசியலில் முக்கியமானதொரு வேறுபாடாகும். கிராமப்புற பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் TFR இப்போதும் ஒரு பெண்ணுக்கு 2.5 குழந்தைகளுக்கும் அதிகமாக உள்ளது. அதேசமயம் கூடுதலாக வளர்ச்சியடைந்த மாநிலங்களின் கிராமப்புறங்களில்கூட TFR இப்போது பதிலீட்டு விகிதத்திற்குக் கீழே உள்ளது.
3. குழந்தைகளின் எண்ணிக்கை குறைதல்
பிறப்பு விகிதங்கள் இவ்வளவு தீவிரமாகக் குறைந்ததன் விளைவாக, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2000களின் முற்பகுதியிலிருந்து குறையத் தொடங்கியது. புத்தாயிரத்தின் தொடக்கத்தில் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 29 மில்லியன் குழந்தைகள் என்னும் உச்சநிலையை அடைந்து, அதன் பிறகு குறையத் தொடங்கியது. இந்தியாவின் குழந்தைகளின் எண்ணிக்கை ஒட்டுமொத்த அளவிலும் ஒப்பீட்டளவிலும் கணிசமாகக் குறைந்துள்ளது என்பதே இதன் பொருள்.
1960களின் முற்பகுதியில், இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள். 2025க்குள் இந்த எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது. இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள குழந்தைகளைவிட 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இந்திய மாநிலங்களின் சமூக-பொருளாதார, மக்கள்தொகை நிலவரங்களில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், குழந்தைகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் குறைந்துவருகிறது.
இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் கருவுறுதல் விகிதங்கள் தாமதமாகக் குறைந்ததன் காரணமாக, ஒட்டுமொத்த எண்ணிக்கையிலும், மொத்த மக்கள்தொகையில் அவற்றின் பங்கிலும், குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. இந்தியாவில் உள்ள 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூவரில் ஒருவர் பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே வாழ்கிறார்கள். எனினும், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலுமே குழந்தைகளின் எண்ணிக்கை சீராகக் குறைந்துவருகிறது.
4. மக்கள் தொகையின் சாளரத்தை மூடுதல்
பொருளாதார நிபுணரும் மக்கள்தொகையியலாளருமான டேவிட் இ. ப்ளூமும் அவரது இணை ஆசிரியர்களும் 2003ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில், “மக்கள்தொகையின் பலன்” (demographic dividend) என்ற சொல்லாடலை உருவாக்கினார்கள். ஆய்வுத் துறையில் பெரும் செல்வாக்கு செலுத்திய கட்டுரை இது. சரியான கொள்கைகள் அமலில் இருக்கும் பட்சத்தில், ஒரு நாட்டின் மக்கள்தொகையில் உழைக்கும் வயதினரின் பங்கு அதிகம் இருப்பதால் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியின் ஊக்கத்தை இந்தச் சொல்லாடல் குறிக்கிறது.
இந்தச் சொல்லாடல் இந்தியாவின் இளைஞர் மக்கள்தொகை தொடர்பில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிப் பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள். இது ஐரோப்பிய, வட அமெரிக்க, கிழக்காசிய நாடுகளைவிட இந்தியாவை மிகவும் இளைய நாடாக ஆக்குகிறது.எடுத்துக்காட்டாக, சராசரி அமெரிக்கர் அல்லது சீனரைவிடச் சராசரி இந்தியர் பத்தாண்டுகளுக்கும் மேல் இளையவராக இருக்கிறார்.
இருப்பினும், மக்கள்தொகையின் இந்தச் சாளரம் இந்தியாவில் இப்போது மூடப்பட்டுவருகிறது. மக்கள்தொகை மற்றும் தொழிலாளர்கள் தொடர்பான புள்ளிவிவரங்களின்படி “உழைக்கும் வயதுடையவர்கள்” என்று வரையறுக்கப்படும் 15-64 வயதுக்குட்பட்ட இந்தியர்களின் பங்கு, ஐ.நா.வின் மக்கள்தொகைக் கணிப்புகளின்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் உச்சத்தை அடையவிருக்கிறது.
இது மிக ஆழமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக, கடந்த காலத்தை ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது: தனது உழைக்கும் வயதுடைய மக்கள்தொகைக் குழுமத்திலிருந்து திட்டமிடப்பட்ட “பலனை” இந்தியாவால் பெற்றெடுக்க முடிந்ததா?
அடுத்து, எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.
சார்ந்திருப்போரின் விகிதம் என்பது மக்கள்தொகையியலாளர்களும் பொருளாதார நிபுணர்களும் கூர்ந்து கவனித்துவரும் முக்கியக் காரணி. உழைக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கும் (குழந்தைகள் அல்லது முதியவர்கள்) உழைக்கும் வயதுடைய மக்கள்தொகைக்கும் இடையேயான விகிதம்தான் சார்ந்திருப்போரின் விகிதம். இந்த விகிதம் அதிகமாக உள்ள மாநிலங்கள் அல்லது நாடுகளில் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகையின் மீது அதிக நிதிச்சுமை இருக்கும். சார்ந்திருப்போருக்கு நலத்திட்டங்களை வழங்க வேண்டியிருப்பதால் அரசின் நிதிச்சுமையும் கூடுதலாக இருக்கும்.
இந்தியாவின் பெரிய எண்ணிக்கையிலான உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை, சுருங்கிவரும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டும் இணைந்ததன் விளைவாக, நாட்டின் சார்ந்திருப்போரின் விகிதம் குறைந்துள்ளது. 2026க்குள், இந்தியாவின் சார்ந்திருப்போரின் விகிதம் 543ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, உழைக்கும் வயதுடைய ஒவ்வொரு 1,000 பேருக்கும் 543 குழந்தைகளும் முதியவர்களும் இருப்பார்கள்.
இந்திய மக்களின் வயது தொடர்ந்து அதிகமாகும்போது, சார்ந்திருப்போரின் விகிதம் மீண்டும் உயரத் தொடங்கும். இந்த முறை வளர்ந்துவரும் முதியோர் மக்கள்தொகையால் இது நிகழும். ஆனால் இது சீரற்ற முறையில் பரவும். வடக்கு, கிழக்கு மாநிலங்களில் இப்போதுதான் பிறப்பு விகிதங்கள் குறைவதால், அவற்றின் சார்ந்திருப்போரின் விகிதங்கள் குறையும். ஏனெனில் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை வளர்ந்து, சார்ந்திருப்போரை ஆதரிப்பதற்கான கூடுதல் திறன் உருவாகியிருக்கும். தெற்கு, மேற்கு மாநிலங்களில், அவற்றின் மக்களுக்கு வயதாகி, அவற்றின் பணியாளர்கள் சுருங்கும்போது, சார்ந்திருப்போரின் விகிதங்களும் அதற்கேற்ப உயரும்.
5. தொற்றுநோயியல் மாற்றம்
உலகம் முழுவதும், காலப்போக்கில், வளர்ச்சியும் மேம்பாடும் மக்கள் எதனால் நோய்வாய்ப்படுகிறார்கள் மற்றும் இறக்கிறார்கள் என்பதை மாற்றியமைக்கின்றன.
உலக சுகாதார நிறுவனம் (WHO) இறப்புக்கான காரணங்களை மூன்று பரந்த வகைகளாகப் பிரிக்கிறது:
(i) தொற்று நோய்கள், பேறுகாலப் பிரச்சினைகள், பிறப்புக்குப் பிந்தைய சிக்கல்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு – மலேரியா போன்ற கிருமிகளால் பரவும் நோய்கள், கர்ப்பம், பிரசவம், பிறந்த்தும் ஏற்படும் சிக்கல்களால் ஏற்படும் இறப்புகள் ஆகியவை அடங்கும்.
(ii) தொற்றா நோய்கள் – இருதய நோய்கள், புற்றுநோய்கள் ஆகியவையும், நேரடித் தொடர்பு, காற்று அல்லது நோய்க்கிருமிகள் மூலம் பரவாத பிற நோய்கள் ஆகியவை இதில் அடங்கும்.
(iii) காயங்கள் – இதில் கொலைகள், தற்கொலைகள் மற்றும் சாலை விபத்துகள் ஆகியவை அடங்கும்.
ஒரு குழுவினர் புவியியல் ரீதியாகவோ சமூக ரீதியாகவோ குறைந்த வருமானம், மோசமான ஊட்டச்சத்து, சுத்தமான சுற்றுச்சூழல் இன்மை, சுகாதாரம் பேணுவதற்கான வாய்ப்பு குறைவாக இருத்தல் ஆகிய சூழ்நிலைகளில் இருக்கும்போது, தொற்று நோய்களும் பிரசவத்தை ஒட்டி நடக்கும் அசம்பாவிதங்களுமே பெரும்பாலான இறப்புகளுக்குக் காரணமாக அமைகின்றன. இந்தக் குழுக்கள் பணக்காரர்களாகி வயதாகும்போது, இந்த காரணங்களால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க முடியும்; அவை குறைந்துவிடுகின்றன. இதன் விளைவாக, இதய நோய், புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்களால் ஏற்படும் இறப்புகளின் பங்கு ஒப்பீட்டளவில் உயரத் தொடங்குகிறது.
இந்தியா இந்த மாற்றத்தின் நடுவில் உள்ளது. இது பொது சுகாதாரத்தில் தொற்றுநோயியல் மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சூழலில், பிரதான இறப்புக்கான காரணங்கள் தொற்று நோய்கள், பிரசவம் தொடர்பான நிலைமைகள் ஆகியவற்றிலிருந்து தொற்றாத நோய்களுக்கு மாறுகின்றன. பேறுகால வசதிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், மலேரியா போன்ற தொற்று நோய்களிலிருந்து ஏற்படும் இறப்புகள் பெருமளவு குறைதல் ஆகியவற்றில் இது பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் வளமான மாநிலங்கள் இந்தத் தொற்றுநோயியல் மாற்றத்தில் மேலும் முன்னேறியுள்ளன; அங்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே பெரும்பாலான இறப்புகளுக்குத் தொற்றாத நோய்கள் காரணமாகிவிட்டன. ஏழ்மையான மாநிலங்களிலோ மிக அண்மைக் காலத்தில்தான் தொற்றுநோயியல் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகளுக்கு இன்றும் தொற்று நோய்களே காரணமாக இருக்கின்றன. இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் 20 சதவீதத்திற்கும் குறைவான இறப்புகளுக்கு மட்டுமே தொற்று நோய்கள் காரணமாக உள்ளன. தொற்றாத நோய்கள் இப்போது இந்தியாவின் குறைந்த, அதிக வளர்ச்சியடைந்த மாநிலங்கள் இரண்டிலுமே மொத்த இறப்புகளில் பாதிக்கும் மேலாகக் காரணமாகின்றன. ஆனால் தொற்றாத நோய்களால் ஏற்படும் இறப்பின் அளவு பணக்கார மாநிலங்களில் கணிசமாக அதிகமாக உள்ளது.
6. உயரும் இறப்பு விகிதம்
1950கள் முதல் 2000களின் முற்பகுதிவரை இந்தியா தனது இறப்பு விகிதத்தில் (மக்கள் தொகைக்கு விகிதாசாரமாக ஆண்டுதோறும் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை) சீரான வீழ்ச்சியைக் கண்டது. இந்தியாவில் ஆயுட்காலம் காலப்போக்கில் சீராக வளர்ந்துள்ளது. 1970இல் ஆயுட்காலம் 50 வயதுக்குக் குறைவாக இருந்தது. இன்று 70க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஒப்பிடக்கூடிய தரவு கிடைத்த 1970களில், இந்திய ஆண்களின் ஆயுட்காலம் பெண்களைவிட அதிகமாக இருந்தது. 1980களின் முற்பகுதியில் இந்த நிலை தலைகீழாக மாறியது. 2010களின் பிற்பகுதியில் பிறந்த ஒரு பெண் குழந்தை, அதே ஆண்டில் பிறந்த ஒரு ஆண் குழந்தையைவிடக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அதிக காலம் வாழும் என்று எதிர்பார்க்கலாம்.
குழந்தைகளின் உயிருக்கான ஆபத்துகள் பெரிதும் முறையில் குறைக்கப்பட்டதே இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவதற்கு முக்கியக் காரணம். 2025இல் இந்தியாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இறந்தன. ஆனால் கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் கைக்குழந்தைகளும் குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்தில் இருக்கும் குழந்தைகளும் இறக்கும் அபாயம் பெருமளவு குறைந்துள்ளது. 1950களில், இந்தியாவில் இறந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள்; ஒவ்வொரு ஆண்டும் இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள். இப்போது ஆரம்பகாலக் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் இறப்புகள் இந்தியாவில் ஏற்படும் பத்து இறப்புகளில் ஒன்றுக்கும் குறைவாகவே உள்ளன.
குழந்தை இறப்பு விகிதத்தில் ஏற்பட்ட இந்தப் பெரிய முன்னேற்றங்களின் விளைவாக, இந்தியாவில் இறப்பின் அபாயம் ஒப்பீட்டளவில் முதியோர் குழுக்களுக்கு மாறிவருகிறது. இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் குழந்தை இறப்பு அபாயம் முதிய வயதில் இறக்கும் அபாயத்தைவிட அதிகமாக உள்ளது. பணக்கார மாநிலங்களில், இறப்புக்கான அபாயம் குழந்தைகளைக் காட்டிலும் முதியோரிடத்தில் அதிகமாகியிருக்கிறது.
உதாரணமாக, கேரளத்தில், குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate – IMR) இப்போது ஐந்தாகக் குறைந்துள்ளது. (அதாவது, ஓராண்டில் உயிருடன் பிறக்கும் ஒவ்வொரு 1,000 குழந்தைகளில் ஐந்து குழந்தைகள் இறந்துபோகின்றன.) இது வடக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்கது. கேரளம்தான் இப்போது இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கான இறப்பு அபாயத்தைக் காட்டிலும் ஒரு குழந்தைக்கான இறப்பு அபாயம் குறைவாக இருக்கும் முதல் மாநிலமாகும். பெரும்பாலான வளரும் நாடுகளில் குழந்தைப் பருவத்தினருக்கு இருக்கும் தீவிர அபாயத்தைக் கேரளம் நீக்கிவிட்டது.
ஆனால் நாடு முழுவதும் வயதானவர்கள் எண்ணிக்கை உயரும் நிலையில், ஒட்டுமொத்த மக்கள்தொகையின் இறப்பு விகிதங்கள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன. 1950களிலிருந்து சீராகக் குறைந்துவந்த இந்தியாவின் மொத்த இறப்பு விகிதம் (Crude Death Rate – CDR) – மக்கள்தொகையோடு ஒப்பிடுகையில் ஆண்டுதோறும் மதிப்பிடப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை – கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக 2020, 2021ஆம் ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்தது. 2023க்குள் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு CDR திரும்பியது. ஆனால் 2024இலிலிருந்து, இந்தியாவின் CDR உயரும் என்றும், எதிர்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. விகிதாச்சார அளவில் அல்லாமல் முழுமையான எண்ணிக்கையிலும், இந்தியாவில் ஆண்டுதோறும் இறப்புகளின் எண்ணிக்கை 2010களிலிருந்து அதிகரித்துவருகிறது.
முடிவும் தரவு எச்சரிக்கைகளும்
இந்த ஆறு போக்குகளையும் ஒன்றாகப் பார்க்கும்போது நாடு ஒரு சிக்கலான தருணத்தில் இருப்பது தெரிகிறது. இந்திய மக்கள்தொகை முழுமையான எண்ணிக்கையில் இன்னும் வளர்ந்துகொண்டிருந்தாலும், உலக மக்கள்தொகையில் இந்தியாவின் பங்கு விரைவில் குறையத் தொடங்கும். உலகம் உணர்ந்துகொண்டிருப்பதைவிட வேகமாகக் கருவுறுதல் குறைந்துவருகிறது. இந்தியாவிற்குள்ளும் இந்த மாற்றத்தின் அளவை ஒரு சிலரே புரிந்துகொண்டிருக்கிறார்கள். குழந்தை மக்கள்தொகை வீழ்ச்சியடைந்துவருகிறது. மக்கள்தொகையால் கிடைக்கும் பலனுக்கான சாளரம் (உழைக்கும் வயதிலுள்ள மக்கள்தொகையால் கிடைக்கும் பலன்) மூடிக்கொண்டிருக்கிறது. இந்தியர்கள் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆனால் மக்களுக்கு வயதாகும்போது இறப்பு விகிதங்கள் உயரும். இந்தப் போக்குகள் அனைத்தும் இந்தியாவின் பணக்கார, ஏழை மாநிலங்களின் மாறுபட்ட யதார்த்தங்களால் மேலும் நுணுக்கமான விளைவுகளைக் கொண்டிருக்கின்றன.
ஆயினும், இந்தியக் கல்வித்துறை, ஊடகங்கள் அல்லது அரசியல் ஆகிய களங்களில் நடக்கும் பொது விவாதம் மாறியுள்ள இந்த யதார்த்தங்களுடன் இணைந்து பயணிக்கவில்லை. பிறப்பு விகிதங்கள் குறைவது முக்கியமான விவாதமாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும், “மக்கள்தொகை வெடிப்பு” தொடர்பான விவாதமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. தெற்கு மாநிலங்கள் பலவற்றைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது: மத்திய அரசாங்கத்தின் முன்னுரிமைகளிலிருந்து மிகவும் மாறுபட்ட பொது சுகாதார முன்னுரிமைகள், வயதான மக்கள்தொகை அதிகரிப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசு, சந்தை சார்ந்த தீர்வுகளின் தேவை, உழைக்கும் வயதுள்ள மக்கள்தொகை குறைவதைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் இடம்பெயர்வு குறித்து முன்பே நடந்திருக்க வேண்டிய விவாதம் ஆகியவை முக்கியமானவை. இவை தவிர, பெரும்பாலான மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்தொகை விவாதங்களில் ஆதிக்கம் செலுத்தும் தேர்தல் பிரதிநிதித்துவம் பற்றிய விவாதம் தனி.
இந்தத் தொடர் மூலம் நாங்கள் முதலில் தரவுகளைப் பொது வெளிக்குக் கொண்டுவர முயற்சிக்கிறோம். இந்தியாவிற்கான மக்கள்தொகைத் தரவுகள் சில கடுமையான குறைபாடுகளைக் கொண்டுள்ளன. இந்தியா 2011க்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தாததால், 2011க்குப் பிந்தைய தரவுகள் இந்தியாவின் பதிவாளர் ஜெனரலால் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப்பட்ட கணிப்புகளிலிருந்து வருகின்றன. இந்த மதிப்பீடுகள் அடிப்படை ஆண்டிலிருந்து விலகிச் செல்லச் செல்ல, அவற்றின் நம்பகத்தன்மை குறைந்துபோவதை எங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது.
நேரடியான தரவுகள் இல்லாததால் இறப்பு பற்றிய தரவுகளும் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு இறப்பும் பதிவுசெய்யப்பட்டு, அதன் காரணத்தை ஒரு சுகாதார நிபுணர் உறுதிப்படுத்துவதே இறப்பைக் கணக்கிடுவதற்கு மிகவும் நேரடியான வழி. இந்தியாவைப் போன்ற குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் எல்லா இடங்களிலும் சீரான முறையில் இதைச் செய்வது சாத்தியமில்லை. அனைத்து இறப்புகளும் சிவில் அதிகாரிகளிடம் பதிவு செய்யப்படுவதில்லை. ஏழ்மையான மாநிலங்களில் இறப்புப் பதிவு விகிதங்கள் இன்னும் குறைவாகவே உள்ளன.
இந்த இடைவெளிகளை நிரப்ப, இந்தியாவில் மாதிரிப் பதிவு அமைப்பு (Sample Registration System – SRS) உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான பிரதிநிதித்துவம் கொண்ட பெரிய அளவிலான மாதிரிக் கணக்கெடுப்பை நடத்துகிறது. இதில் கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்குச் சென்று, முந்தைய ஆண்டில் அந்த வீட்டில் நடந்த இறப்புகள் குறித்து விசாரித்து, தேசிய இறப்பு குறித்த மதிப்பீடுகளை உருவாக்குகிறார்கள். எங்கள் பெரும்பாலான ஆய்வுகள் இந்தத் தரவை நம்பியே உள்ளன. இருப்பினும், இதிலிருந்து கிடைக்கும் இறப்புத் தரவுகளில் அமைப்புரீதியான சிக்கல்களும் உள்ளன.
தரவு மூலங்களையும் மூலத் தரவுகளையும் தீவிரமாக அலசி, அதை எங்கள் பகுப்பாய்வில் இணைத்துக்கொண்டு இந்தியாவின் மக்கள்தொகைச் சிக்கல்கள் பற்றிய உரையாடலைக் கணிசமாக முன்னோக்கிக் கொண்டுசெல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
கட்டுரையாளர்:
ருக்மிணி எஸ். ‘தரவு இந்தியா’ (Data for India) நிறுவனத்தின் நிறுவனர். CASIஇன் தொலைதூர ஆய்வாளர். மக்கள்தொகையியல், சுகாதாரம், வீட்டுக் குடும்பப் பொருளாதாரம் ஆகியவை இவர் முக்கியமாகக் கவனம் செலுத்தும் பகுதிகள். இதற்கு முன்பு இந்தியச் செய்தி ஊடகங்களில் தரவுசார் இதழியல் பிரிவுக்குத் தலைமை தாங்கியுள்ளார் Whole Numbers Half Truths: What Data Can and Cannot Tell Us About Modern India (Westland, 2021) என்ற புத்தகத்தின் ஆசிரியர்.
தமிழில்: டி.ஐ. அரவிந்தன்
நன்றி: பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இணையதளம்
https://minnambalam.com/indias-population-problems-part-1/
By
கிருபன் ·