Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்பிமலையைப் பிடித்துப்போட்டினமாம்

Featured Replies

ஜூலை 19 - இல் கிழக்கு வெற்றி விழா: மகிந்த அரசாங்கம்.

கிழக்கு மாகாணத்தை ஆக்கிரமித்ததை விழாவாக எதிர்வரும் 19 ஆம் நாள் சுதந்திர சதுக்கத்தில் மேற்கொள்ளப்போவதாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அறிவித்துள்ளது.

மகிந்தவின் தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் படை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு மகிந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அத்துடன் கிழக்கில் உடனடியாக தேர்தல்களை நடத்தி அங்கு ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தையும் கூறியுள்ளார். இதற்கு அமைச்சரவை ஒருமனதாக அங்கீகாரம் வழங்கியது.

சுதந்திர தின சதுக்கத்தில் நடைபெற உள்ள இந்த வெற்றிக் கொண்டாட்டங்களில் மகிந்த பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, வான்படைத் தளபதி எயார் வைஸ் மார்சல் டொனால்ட் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

சுதந்திர நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் பொதுநிர்வாக உள்நட்டு அலுவல்கள் அமைச்சிடம், கிழக்கு மாகாண ஆக்கிரமிப்பின் வெற்றிக்கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுப் பிரதேசத்தைதானே கைப்பற்றியதாக கூறுவதா?: ரணிலுக்கு அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கண்டனம்

குடும்பிமலை எனும் காட்டுப் பிரதேசத்தைத்தானே மகிந்த அரசாங்கம் கைப்பற்றியிருக்கிறது என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விமர்சனம் செய்திருந்தமைக்கு அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஒரு காட்டுப்பிரதேசத்தைக் கைப்பற்றியதில் நாட்டுக்கு எதுவித நன்மையும் இல்லை என்று குடும்பிமலையை பிடித்துவிட்டது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவித்துள்ளமை குறித்து கவலையடைகிறோம்.

இது குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட அப்பட்டமான செயற்பாடாகும்.

குடும்பிமலை பிரதேசத்தை படையினர் நேற்றுக் காலை தமது முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தமை இராணுவ ரீதியில் அவர்கள் பெற்ற மகத்தான வெற்றியாகும்.

கிழக்கில் புலிகளின் உயிர்நாடியாக இருந்தது இப்பிரதேசமாகும். கடத்திச் செல்லப்படும் சிறுவர்களுக்கான பயிற்சிக்கூடம், மோதல்களில் காயமடைந்த புலிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை, தப்பியோடும் புலிகளுக்கு தண்டனை வழங்கும் சித்திரவதைக்கூடம் உட்பட புலிகளின் மிகவும் முக்கியமான கேந்திர நிலையமாக இது விளங்கியது.

எனவே குடும்பிமலை வீழ்ச்சியின் மூலம் புலிகளின் முதுகெலும்பு முறிந்துவிட்டது. அவர்களின் பிடியில் அடிமைகள் போன்று நடத்தப்பட்ட 1 லட்சத்து 78 ஆயிரம் பொது மக்களுக்கு விடிவு கிடைத்துள்ளது.

நாட்டின் தேசியப் பிரச்சினைத் தீர்வுக்காக சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் எப்போதும் தயாராகவேயுள்ளது. எனினும் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் இன்றுவரை மேற்கொள்ளப்படவிலிலை. புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவிருந்தால் நாம் மிகவும் பலமான நிலையில் இருந்தே பேசுவோம்

குடும்பிமலையில் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்துவிட்டு அப்பகுதி மக்களின் அரசியல் உரிமைகளை வழங்கும் நோக்கில் அப்பிரதேசத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்றார் அனுரா.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பிமலையில் புலிகளின் 30 இராணுவ முகாம்கள் இருந்தன: பிரசாத் சமரசிங்க

[வியாழக்கிழமை, 12 யூலை 2007, 19:54 ஈழம்] [கொழும்பு நிருபர்]

குடும்பிமலை எனும் சிறுகாட்டுப் பிரதேசத்தில் புலிகளின் 30 இராணுவ முகாம்கள் இருந்ததாக சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று வியாழக்கிழமை அவர் கூறியதாவது:

குடும்பிமலை நடவடிக்கையின் போது பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படாத வகையில் இராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

வாகரைப் பிரதேசத்தை படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் பொருட்டு இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டபோது, இராணுவத்தினரின் தாக்குதலால் பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும், வாகரை மருத்துவமனை மீது இராணுவத்தினர் குண்டுகளை வீசியதாகவும் பேசப்பட்டது.

சில உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களும் மற்றும் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் பொய்யான செய்தியினை உலகுக்கு கூறின. ஆனால், வாகரையை இராணுவத்தினர் கைப்பற்றிய பின்னர் அங்கு அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்பதை அரசாங்கம் நிரூபித்தது.

அனைத்து ஊடகவியலாளர்களையும் வாகரைக்கு அழைத்துச் சென்று உண்மை என்ன என்பதை தெளிவுபடுத்தினர். வாகரை மருத்துவமனை மீது சிறு சேதமும் ஏற்பட்டிருக்கவில்லை.

குடும்பிமலை வெற்றி என்பது மிக முக்கியமானது. இப்பகுதியில் 25 தொடக்கம் 30 வரையிலான புலிகளின் முகாம்கள் இருந்தன. அவைகளில் சில ஆட்லறி மற்றும் பயிற்சி முகாம்களாகும். அப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் முகாம்களும் இருந்தன. அவைகளையெல்லாம் தற்போது இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். இந்நடவடிக்கையின்போது சுமார் 200 புலிகள் பலியாகயிருக்கலாம் எனவும் அறிய முடிகிறது.

அப்பகுதியில் புலிகளால் பெருமளவு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவைகளை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் பிரிக்கேடியர் பிரசாத்.

புதினம்.

சீ யார் சொன்னது இப்படி பொய் சொல்லாதயுங்க இணையவன் புலிகள் குடும்பி மலையின் குடும்பியை புடுங்கீட்டு போட்டாங்களாம் தேடினாமாம் ஆகவே 800 புலிகள் அதை காவி சென்ரதை தான் கண்டவராம் ரம்புக்வல

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைத் "தோற்கடித்து" பெற்ற வெற்றி என்கிறார் கோத்தபாய

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளை "தோற்கடித்து" சிறிலங்கா இராணுவத்தினர் பெற்ற வெற்றிகள் இனிமேலும் தொடரும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஐபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள கோத்தபாய குடும்பிமலை ஆக்கிரமிப்பு குறித்து வெளியிட்ட அறிக்கை:

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் இறுதிக்கோட்டையான குடும்பிமலையை மீட்டமை பாதுகாப்புப் படையினருக்கு மட்டுமின்றி அப்பகுதியிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூவின மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

மாவிலாறு அணை மூடப்பட்டதன் பின்னர் அந்த அணையை திறப்பதற்காக இராணுவத்தினரால் தொடங்கப்பட்ட நடவடிக்கை சம்பூர், வாகரை, கொக்கட்டிச்சோலை ஊடாக குடும்பிமலை வரை நீண்டப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. இந்த நடவடிக்ககையில் விடுதலைப் புலிகளை தோற்கடித்து அவர்களின் முக்கிய கோட்டையான குடும்பிமலையை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

தற்போதைய அரச தலைவர் பதவிக்கு வந்ததும் முப்படைத்தளபதிகளும் காவல்துறை மா அதிபரும் பெற்றுக்கொடுத்த சரியான தலைமைத்துவமே இந்த வெற்றிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

குடும்பிமலையை மீட்டமை அரசியல் தலையீடுகள் இன்றி இராணுவத்தினர் பெற்றுக்கொண்ட மாபெரும் வெற்றியாகும். மகிந்தவின் சரியான வழிநடத்தலின் கீழ் தன்னம்பிக்கையின் அடிப்படையில் படையினர் முன்நோக்கிச் செல்வதற்கு வழி நடத்தப்பட்டனர்.

இந்த நடவடிக்கையை மேற்கொண்ட இராணுவத்தினருக்கு நான் தலை வணங்குகிறேன். அரசியல்வாதிகள் இந்த வெற்றி குறித்து விமர்சனங்களை முன்வைத்தாலும் இராணுவத்தினரின் நடவடிக்கை தொடரும்.

நாட்டில் புலிகளை தோற்கடித்து மீண்டும் சமாதானம் மலரும் வரை இத்தகைய பயணங்கள் தொடரும் என்று கோத்தபாய அதில் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் தந்தோராபாய உத்தியாக விடுதலைப் புலிகள் தங்களது படைநிலைகளை குடும்பிமலையிலிருந்து விலக்கிக்கொண்ட நிலையில் "போர்" நடத்தி புலிகளை "தோல்வியடைய"ச் செய்தது போல் கோத்தபாய அறிக்கை வெளியிட்டிருப்பது நகைப்புக்குரியது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் ரீதியான வெற்றியாகத்தான் தொப்பிகலவை கைப்பற்றியது பார்க்கப்படுகிறது என்கிறார் இக்பால் அத்தாஸ்

இலங்கையின் கிழக்கேயுள்ள தொப்பிகலப் பகுதியை இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளது இராணுவ ரீதியாக முக்கியமானது என பத்திரிகையாளரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

சம்பூர் வாகரை போன்ற பகுதிகளிலிருந்து இலங்கை இராணுவத்தால் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் தொப்பிகலப் பகுதிக்கு வந்த பின்னர் அவர்களை அங்கிருந்தும் இராணுவம் வெளியேற்றியது இலங்கை அரசைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றிதான் எனவும் அவர் கூறுகிறார்.

ஆனாலும், கைப்பற்றிய பிரதேசங்களை அரசாங்கம் எவ்வளவு காலம் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பது இனி வரும் வாரங்கள் அல்லது மாதங்களில்தான் தெரியவரும் எனவும் இக்பால் அத்தாஸ் தெரிவிக்கிறார்.

13 வருடங்களுக்கு முன்னரும் இதே போன்ற நிலைமை ஏற்பட்டது எனவும் அப்போது கிழக்குப் பகுதி முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தது என அரசு தெரிவித்த போதிலும், சிறு சிறு தாக்குதல்களை நடத்திய விடுதலைப் புலிகள் தற்போதிருந்த நிலைக்கு கொண்டுவந்தனர் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அரசியல் ரீதியான வெற்றியாக இதைக் காண்பிப்பதற்காகத்தான் இந்தத் இராணுவத் தாக்குதல்கள் இவ்வளவு வேகமாக நடத்தப்பட்டன எனவும் இக்பால் அத்தாஸ் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆனாலும் எதிர்பார்த்த அரசியல் பலனை இது தருமா என்பதற்கு அடுத்த சில வாரங்களில் தெரியவரும் எனவும், விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலமிழக்கும் வரை இது போன்ற இராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் எனக் காட்டுவதாகத்தான் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார்

கிழக்கைப் போன்றே இலங்கையின் வடக்கிலும் இராணுவம் இது போன்ற தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தாம் கருதுவதாக இக்பால் அத்தாஸ் தெரிவிக்கிறார்.

இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகமாகும்போது விடுதலைப் புலிகள் பின்வாங்குவதும், பின்னர் தாக்குதல்களை நடத்துவதும் கடந்த 25 வருடமாக நடைபெற்று வரும் யுத்தத்திலிருந்து தெரிய வருகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் அதே போன்ற நிலையை விடுதலைப் புலிகள் எடுப்பார்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

சந்திரிகா குமாரதுங்க எவ்வாறு யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்ட போது எவ்வாறு ஒரு சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவைத் தேடிக் கொண்டாரோ, அதே போலவே தற்போது கிழக்கில் தொப்பிகலவை பிடித்ததன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ தேடிக் கொள்கிறார் என இலங்கை பகுப்பாய்வாளர் டி பி எஸ். ஜெயராஜ் கூறுகிறார்.

கிழக்கில் நடைபெற்ற போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டி அந்த மக்களின் இதயங்களை வென்றெடுக்காமல் இவ்வாறான வெற்றிக் கொண்டாட்டங்கள் பொருத்தமானதாக இருக்காது எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

-பி.பி.சி தமிழோசை

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பிமலையைத் தக்க வைக்க 20 ஆயிரம் இராணுவத்தினர் எங்கே உள்ளனர்?: மங்கள கேள்வி

குடும்பிமலையைத் தக்க வைக்க தேவைப்படும் 20 ஆயிரம் இராணுவத்தினர் எங்கே உள்ளனர்? கொழும்பு மற்றும் யாழ்.குடாவிலிருந்து இராணுவத்தினரை பயன்படுத்தப் போகிறீர்களா? என்று மகிந்தவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் நேற்று வியாழக்கிழமையன்று மங்கள சமரவீர கூறியதாவது:

சிறிலங்கா இராணுவத்தினரின் நடைவடிக்கை பாராட்டத்தக்கது ஆனால் மகிந்த ராஜபக்ச அரசாங்கமோ திட்டமிட்ட முறையில் இந்தப் போரை நடத்தவில்லை. இராணுவத்தினரின் இழப்புக்களுக்கு ஏற்ப அவர்கள் போரை வடிவமைக்கவில்லை.

குடும்பிமலையை தக்கவைக்க 10,000- 20,000 இராணுவத்தினர் தேவை என்று முன்னாள் வான்படைத் தளபதி ஹரி குணதிலகா தெரிவித்துள்ளார். எனவே அந்த பிரதேசத்தில் இராணுவ பலத்தை தக்கவைப்பதற்கு பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி, பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் என்ன திட்டத்தை கொண்டுள்ளனர்.?

கொழும்பு மற்றும் யாழ்குடா போன்றவற்றில் உள்ள இராணுவத்தினர் இதற்கு பயன்படுத்தப்படுவார்களா? கோத்தபாயா மேன்மையானவர் என்ற வாசகங்கள் கொழும்பில் தற்போது காணப்படுகின்றன.

பாதுகாப்புச் செயலாளரே பாதுகாப்பு அமைச்சின் பிரதம அதிகாரி ஆனால் அவர் ஒருபோதும் தொலைக்காட்சிகளில் நடைபெறும் அரசியல் கலந்துரையாடல்களில் அரசின் சார்பில் முன்னர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் கோத்தபாயா மேன்மையானவர் என தற்போது எழுதப்பட்டுள்ளதானது ஒரு ஆத்திரமூட்டும் நடைவடிக்கையாகும்.

குடும்பிமலையை கைப்பற்றும் நடைவடிக்கைகள் தாமதமடைவது தொடர்பாக இராணுவத் தளபதியை பாதுகாப்புச் செயலாளர் அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில் சாடியிருந்தார். குடும்பிமலை கைப்பற்றப்படுவதற்கு முன்னரே அதனை கொண்டாட மகிந்த நாள் குறித்திருந்தார். எனவே குடும்பிமலையை கைப்பற்றிவிட்டதாக ஜுலை 11 ஆம் நாள் அறிவித்தது திட்டமிட்ட ஒன்றாகும்.

குடும்பிமலை மீதான இராணுவ நடைவடிக்கையை பெரிதான வெற்றியாக்கி தனது அரசியல் வறுமையை அதற்குள் மறைக்க மகிந்த முற்படுகிறார்.

இந்த நடைவடிக்கை அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த வெற்றி இழக்கப்படலாம் என்றார் மங்கள.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பிகல கைப்பற்றப்பட்டதை பாடசாலைகளில் தேசிய விழாவாக கொண்டாடுமாறு பணிப்பு

* பாற்சோறு, தேநீர் வழங்குமாறும் அறிவுறுத்தல்

ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

தொப்பிகலவை (குடும்பிமலை) விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டதை முன்னிட்டு அதனை பாடசாலைகளில் தேசிய விழாவாகக் கொண்டாடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சுற்றுநிருபங்கள் பாடசாலைகளுக்கு நேற்று வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தொப்பிகலவை புலிகளிடமிருந்து இராணுவம் மீட்டதை தேசிய நிகழ்வாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் நடைபெறும் இந்நிகழ்வின் போது யாழ். குடா நாட்டை புலிகளிடமிருந்து இராணுவம் வெற்றி கொண்டதைவிடவும், கடந்த கால இராணுவ வெற்றியை விடவும், தொப்பிகலவெற்றி மேலானதெனவும், போர்நிறுத்த காலத்திலேயே புலிகள் பலம்பெற்றதாக வலியுறுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், புலிகள் இனிமேல் தலைதூக்க இடமில்லை, புலிகளின் இதயம் தகர்க்கப்பட்டது ஆகிய விடயங்களை நிகழ்வின் ஆரம்ப உரையின் போது விளக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வின் போது தேசப்பற்றுள்ள பாடல்களை ஒலிபரப்புமாறும் நிகழ்வை ஒலிபெருக்கிகள் மூலம் பிரதேசம் முழுக்க கேட்குமாறு நடத்துவதுடன் பாற்சோறு மற்றும் தேநீரை பரிமாறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

`தொப்பிகலவை மீட்டோம்' என்ற செய்தியை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிக்கும் போது அமைதியாகவும் சந்தோஷத்தை வெளிப்படுத்துவதுடன், ஜனாதிபதி தலைமையிலான நிகழ்வை பாடசாலைகளில் நேரடியாக ஒளிபரப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய நிகழ்வுக்கு இணையான நிகழ்வுகளை பாடசாலைகளில் ஏற்பாடு செய்வதற்காக 19 கட்டளைகளும் விசேட காரணங்களை பின்பற்றுமாறு 9 அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தொப்பிகலவை மீட்டது தொடர்பான தேசிய நிகழ்வு எப்போது நடத்தப்பட வேண்டுமென பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்படவில்லை.

இதேசமயம் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கும் இக்கட்டளைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் படையினர் வெற்றிவாகை சூடியிருக்கும் வேளையில் வன்னிக்கு நோர்வே தூதர் செல்வதற்கு அரசு அனுமதியளித்ததேன் ?

* விமல் வீரவன்ச கேள்விடிட்டோ குகன்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தொப்பிகலையை கைப்பற்றியதற்காக படையினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரான விமல் வீரவன்ச கிழக்கில் படையினர் வெற்றிவாகை சூடியிருக்கும் தருணத்தில் நோர்வேத் தூதுவர் விடுதலைப் புலிகளை சந்திக்க அனுமதியளித்தமைக்கான காரணத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள நிப்போன் ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற "நீலோற்ப மலர் இயக்கத்தின்" ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும் போதே விமல் வீரவன்ச எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில் பேசிய அவர் இங்கு மேலும் பேசுகையில்;

"கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொப்பிகலையை கைப்பற்றும் நடவடிக்கையை படையினர் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்துள்ளனர். தொப்பிகல மலையில் தேசியக் கொடியை நாட்டியதன் மூலம் கிழக்கை முழுதாக தம்வசப்படுத்தியுள்ள படையினருக்கு எமது கௌரவமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீலோற்ப மலர் இயக்கம் படையினரின் இந்த வெற்றியை மனப் பூர்வமாக ஏற்றுக் கொள்கிறது. கிழக்கில் புலிகளின் பலம் வாய்ந்த இடமாக தொப்பிகல தான் இருந்தது. அந்த வகையில் படையினரின் இந்த வெற்றியானது பாரியதொன்றாகும்.

இதன் மூலம் கிழக்கில் ஜனநாயகம் மறுக்கப்பட்டு வந்த அப்பாவி மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. இந்த வெற்றியை அர்த்தமுள்ளதாக்க வேண்டுமெனில், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை இத்துடன் நிறுத்திவிடாமல் பயங்கரவாதிகளை முற்றாக ஒழிக்கும் வரை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அத்துடன், புலிகள் மீண்டுமொரு முறை கிழக்கில் உட்புகுந்துவிடாமல் செயற்ப வேண்டும்.

எமக்குப் படையினரின் வெற்றி குறித்த இந்த நல்ல செய்தி கிடைத்த அதேநேரம் மறுப்புறம் நோர்வேத் தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸ்கார் கிளிநொச்சி சென்று புலிகளை சந்தித்துப் பேசிய தீமையான செய்தியும் காதுகளுக்கு எட்டியுள்ளது. அவரை கிளிநொச்சிக்கு செல்ல அனுமதித்து அரசாங்கம் ஆடும் நாடகம் என்ன? அரசாங்கம் நோர்வே தூதுவரை கிளிநொச்சி செல்ல அனுமதி வழங்கியதும் தவறு. இது குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடாததும் தவறு. எனவே, இதற்கான காரணத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.

படையினர் உயிரைப் பணயம் வைத்து பெறும் வெற்றிகளை நாசமாக்கும் முயற்சியாகவே நாம் இதை கருதுகிறோம். அரசாங்கம் இந்த நாடகத்தை நிறுத்த வேண்டும். இதற்கு முன்னரும் படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராக வெற்றிகளைப் பெற்ற நேரத்தில் சமாதானப்பேச்சுகள் என்ற போர்வையில் அவை தடுத்து நிறுத்தப்பட்டன. இனிமேலும் இவ்வாறான நடவடிக்கைளுக்கு இடமளிக்க முடியாது.

எனவே, இனிமேலும் அரசாங்கம் புலிகளுடன் பேச்சுகளை நடத்துவதற்கான முயற்சிகளைக் கைவிட்டு படையினரின் இந்த வெற்றி மிக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்று பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்" என்றார்.

இதேவேளை இங்கு பேசிய சிரேஷ்ட சட்டத்தரணியான கோமின் தயாசிறி தெரிவிக்கையில்;

"உயர் நீதிமன்றத்தின் மூலம் வடக்கு - கிழக்கு ஒன்றிணைப்பானது. சட்டவிரோதமானதென தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னர் படையினர் கிழக்கை கைப்பற்றியிருப்பதன் மூலமே இந்த வெற்றி அர்த்தமுள்ளதாக்கியுள்ளது இவையிரண்டில் ஏதாவதொரு வெற்றி கிடைக்காமல் போயிருந்தாலும் மற்றைய வெற்றி பூரணப் பட்டிருக்காது" என்றார்.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில தொப்பிக்கலை வெற்றியைப் பாடசாலை மட்டத்திலும் கொண்டாடச் சொல்லி மகிந்த உத்தரவிட்டிருக்காராம். ரு அரசியல் இலாபத்துக்கான வெற்றி தொடர்ந்து நிலைக்காது. இதே மகிந்தவர் .தே மக்களால காறித் துப்பவும் படுவார்

குடும்பிமலை ஆக்கிரமிப்பை சிறிலங்காவின் "தேசிய விழாவாக" கொண்டாட பாடசாலைகளுக்கு மகிந்த உத்தரவு.

குடும்பிமலையை ஆக்கிரமித்ததை முன்னிட்டு அதனை பாடசாலைகளில் சிறிலங்காவின் தேசிய விழாவாகக் கொண்டாடுமாறு மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இது பற்றிய சுற்று நிருபங்கள் பாடசாலைகளுக்கு நேற்று வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குடும்பிமலையை புலிகளிடமிருந்து இராணுவம் மீட்டதை தேசிய நிகழ்வாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் நடைபெறும் இந்நிகழ்வின் போது யாழ். குடாநாட்டை புலிகளிடமிருந்து இராணுவம் வெற்றி கொண்டதை விடவும் கடந்தகால இராணுவ வெற்றியை விடவும், குடும்பிமலை வெற்றி மேலானதாக நடத்தப்பட வேண்டும்.

போர்நிறுத்த காலத்திலேயே புலிகள் பலம்பெற்றதாக வலியுறுத்த வேண்டும்.

புலிகள் இனிமேல் தலைதூக்க இடமில்லை, புலிகளின் இதயம் தகர்க்கப்பட்டது ஆகிய விடயங்களை நிகழ்வின் தொடக்க உரையின் போது விளக்க வேண்டும்.

பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வின் போது தேசப்பற்றுள்ள பாடல்களை ஒலிபரப்ப வேண்டும்.

நிகழ்வை ஒலிபெருக்கிகள் மூலம் பிரதேசம் முழுக்க கேட்குமாறு நடத்துவதுடன் பாற்சோறு மற்றும் தேநீரை பரிமாறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"குடும்பிமலையை மீட்டோம்' என்ற செய்தியை உத்தியோகபூர்வமாக மகிந்தவிடம் கையளிக்கும் போது அமைதியாகவும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதுடன், மகிந்த தலைமையிலான நிகழ்வை பாடசாலைகளில் நேரடியாக ஒளிபரப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளவும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நிகழ்வுக்கு இணையான நிகழ்வுகளை பாடசாலைகளில் ஏற்பாடு செய்வதற்காக 19 கட்டளைகளும் சிறப்பு காரணங்களை பின்பற்றுமாறு 9 அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளது.

இத்தேசிய நிகழ்வு எப்போது நடத்தப்பட வேண்டுமென பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்படவில்லை. தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கும் இக்கட்டளைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

-Puthinam-

கிழக்கைக் கைப்பற்றியுள்ளமை முற்றிலும் அரசியல் நலன் சார்ந்த ஒன்று: இக்பால் அத்தாஸ்.

கிழக்கு மாகாணத்தை ஸ்ரீலங்கா படைகள் கைப்பற்றியுள்ளமை முற்றிலும் அரசியல் நலன் சார்நத ஒன்றாகவே கருதப்படுவதாகவும் அதில் இராணுவ நலன் சார்நத அம்சங்கள் எவையும் இல்லை என்று இலங்கையின் பாதுகாப்பு விவாரங்கள் தொடர்பான பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்க படைகளால் கைப்பற்றப்பட்டுள்ள பிரதேசங்களை எவ்வளவு காலம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது அடுத்து வரும் நாட்களில் தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

13 வருடங்களுக்கு முன்னரும் ஸ்ரீலங்கா படைகள் கிழக்கு மாகாணத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாக கொண்டு வந்திருந்ததை நினைவு கூர்ந்துள்ள இக்கபால் அத்தாஸ் அதன் பின்னர் விடுதலைப்புலிகள் படிப்படியாக சிறு தாக்குதல்கள் மூலம் கிழக்கின் கட்டுப்பாட்டை தமதாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இராணுவம் தனது முழுமையான பலத்தை முன்னிறுத்தி தாக்குதல்களை நடத்தும் போது விடுதலைப்புலிகள் பின்வாங்குவது வழமையானது என்றும் எனினும் இராணுவம் தனது நடவடிக்கைகளை வேறு பகுதிகளுக்கு திசை திருப்பும் போது தாங்கள் இழந்த பிரதேசங்களை மிக இலகுவான் விடுதலைப் புலிகள் மீளக் கைப்பற்றி வந்துள்ளார்கள் என்றும் இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவின் முன்னாளர் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவும் தனது பதவிக்காலத்தின் முதலாவது பருவத்தில் யாழ் குடாநாட்டை கைப்பற்றி அதன் மூலம் மிகப்பெரும் சாதனையாளராக சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார் என்றும் எனினும் அவருடைய 9 வருட ஆட்சியில் யாழ் குடாநாட்டை கைப்பற்றியதை விட மோசமான பல தோல்விகளை அவர் சந்திக்க நேர்ந்துள்ளதாக சிங்கள ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்திரிக்காவின் பாணியில் இராணுவ வெற்றி ஒன்றை பதிவு செய்து அதன் மூலம் தனது இரண்டாவது பதவிக்காலத்தை உறுதிப்படுத்துவதே மகிந்த ராஜபக்சவின் நோக்கம் என்றும் எனினும் தற்போதைய நிலையில் கிழக்கு மாகாண வெற்றி என்பது யாழ் குடாநாட்டின் வெற்றியுடன் ஒப்பிட முடியாதது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியிருந்த உட்கட்டமைப்புக்கள் அவர்கள் குடாநாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து சிதைவடைந்திருந்தது எனினும் சில வருடங்களில் தமது படைக்கட்டமைப்பை மீளொழுங்கு படுத்தி விடுதலைப்புலிகள் ஆனையிறவு தளம் மீது பாரிய தாக்குதலை நடத்தி அதனை கைப்பற்றியிருந்தனர்.

அதேபோல் தலைநகர் கொழும்பிற்கு அருகில் கட்டுநாயக்கா வானூர்தி மையத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் சில மணி நேரம் வைத்திருக்கும் அளவிற்கு தமது தாக்குதல் வீச்சை அவர்கள் அதிகரித்திருந்தனர் என்றும் அந்த ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

-Pathivu-

குடும்பிமலையில் இராணுவத் தளபதிகள் குழு.

சிறிலங்கா முப்படைத்தளபதி எயார் சீவ் மார்சல் டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவ உயர்நிலைக் குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை குடும்பிமலை பகுதிக்குச் சென்றனர்.

இராணுவக் குழுவினரை வரவேற்ற அதிகாரிகள் அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விளக்கியதுடன் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கும் அவர்களை அழைத்துச் சென்றனர்.

அங்கு உயர்நிலை கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடல்களில் குடும்பிமலையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிகிறது.

-Puthinam-

http://www.pathivu.com/?ucat=nilavaram&file=150707

மட்டு மாவட்ட நீதி நிர்வாக பொறுப்பாளர் திரு ஜோகன்பாதர் அவர்களும்... இராணுவ பேச்சாளர் இளந்திரேயன் அவர்களின் கூற்றின் படி , இராணுவம் கைப்பற்றிய மலையாகிய குடிம்பிமலையில் யில் இருந்து தொப்பிக்கல் மலை ஒன்பது மைல் தூரத்தில் இருக்கிறது என்கிறார்கள்.....

பல மலைகளையும் மலைத்தொடர்களையும் அடங்கிய இந்த பிரதேசத்தில் ஒரு மலையை இராணுவம் கைப்பற்றி இருக்கின்றது... 14 வருடங்களுக்கும் முன்னம் இருந்த பகுதியை மீளவும் கையகப்படுத்தி இருக்கிறது...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.