Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரிப்டோகரன்சி முறைகேடுகள்: இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது?ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிரிப்டோகரன்சி முறைகேடுகள்: இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது?ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
17 நவம்பர் 2021, 03:15 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்
பிட்காயின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிரிப்டோ கரன்சி குறித்த முறைகேடுகள், புகார்கள் இந்தியாவிலும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், அதனை ஒழுங்குபடுத்துவதற்கான கட்டுப்பாடுகள், விதிகள், சட்டங்கள் குறித்த விவாதம் எழுந்திருக்கிறது. கிரிப்டோ கரன்சிகளைக் கட்டுப்படுத்த முடியுமா? அதுவரை முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

2020ஆம் ஆண்டு நவம்பரில் ஸ்ரீ கிருஷ்ண ரமேஷ் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீகி என்ற நபரை பெங்களூர் நகர குற்றப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கைது செய்து விசாரித்தபோது, அதிர்ந்துபோனார்கள். பிட்காயின்களுக்கான நிழல் வலையமைப்பைப் (DarkNet) பயன்படுத்தி போதைப் பொருளை வாங்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில்தான் ரமேஷ் கைதுசெய்யப்பட்டார்.

ஆனால், காவல்துறை விசாரணையில் அவர் கூரிய தகவல்கள் தலையைச் சுற்றவைத்தன. பல்வேறு நபர்களின் க்ரிப்டோ அக்கவுன்ட்களில் நுழைந்து பிட்காயின்களை எடுத்ததாகவும் தற்போது தன்னிடம் 31 பிட்காயின்கள் இருப்பதாகவும் அந்த நபர் கூறினார்.

இன்றைய தேதியில் ஒரு பிட் காயினின் மதிப்பு சுமார் 44 லட்சத்து 83 மூன்றாயிரம் ரூபாய் என்ற நிலையில், மிகப் பெரிய ஹாக்கர் தங்கள் வசம் சிக்கிவிட்டதாக காவல்துறை கருதியது. மேலும் நடந்த விசாரணையில் பிட்ஃபைனெக்ஸ் என்ற பிட்காயின் எக்சேஞ்சை தான் இரண்டு முறை ஹாக் செய்ததாகத் தெரிவித்தார் ஸ்ரீகி.

அதில் கிடைத்த பணத்தை வைத்து ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கி குடித்ததில் என ஒரு நாளைக்கு 3 லட்ச ரூபாய் வரை செலவழித்ததாகவும் ரமேஷ் தெரிவித்தார்.

இதுதவிர, 2019ல் கர்நாடக அரசின் இணைய தளங்களை ஹாக் செய்து பணம் பரிவர்த்தனை செய்ததாகவும் அவர் கூறியபோது, காவல்துறையினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதையடுத்து இந்த ஆண்டு ஏப்ரல் 28ல் சிபிஐக்கும் இன்டர்போலுக்கும் தகவல் கொடுத்தது. ஆனால், இதற்குப் பிறகுதான் உண்மையான அதிர்ச்சி காத்திருந்தது.

காவல்துறையினர் ரமேஷிடம் உன்னுடைய பிட்காயின் அக்கவுண்டை காண்பி என்றதும் ஏதோ ஒரு பிட்காயின் கணக்கை தன்னுடையதெனக் காண்பித்தார் ஸ்ரீரமேஷ். அந்த கணக்கில் 31.8 பிட்காயின்கள் இருந்தன. இதையடுத்து காவல்துறை விறுவிறுப்பாக தனக்கென ஒரு பிட்காயின் அக்கவுண்டைத் துவங்கியது. காரணம், ரமேஷின் பிட் காயின்களைக் கையகப்படுத்தினால், அதனை பரிமாற்றம்செய்ய ஒரு கணக்கு வேண்டுமென்பதற்காக இந்தக் கணக்குத் துவங்கப்பட்டது.

அதன் பிறகு நீதிமன்றத்தின் ஆணையைப் பெற்று, மீண்டும் ரமேஷின் பிட்காயின் கணக்கைப் போய்ப் பார்த்தால் அதில் 31.8 பிட்காயினுக்குப் பதிலாக 186.811 பிட் காயின்கள் இருந்தன. காவல்துறை குழம்பிப்போனது. பிறகு, சைபர் கிரைம் நிபுணர்களை வைத்து ஆராய்ந்தபோது, தன்னுடைய கணக்கு என ரமேஷ் சொன்னது உண்மையில், ஒரு பிட்காயின் எக்சேஞ்ச் என்பதும் அதற்கான தனிப்பட்ட திறவுகோல் ரமேஷிடம் இல்லை என்பதும் காவல்துறைக்குப் புரிந்தது.

மேலும் தொடர்ந்து நடத்திய தொழில்நுட்ப சோதனைகளில், ரமேஷ் சொன்னவற்றில் பல hacking சம்பவங்கள் பொய் எனத் தெரியவந்தது.

ஆனால், இதற்குள் எதிர்க்கட்சிகள் ஆளும் பா.ஜ.கவை வறுத்துஎடுத்துவிட்டன. பிட் காயின் முறைகேட்டில், பா.ஜ.க. தலைவர்களுக்கும் தொடர்பிருப்பதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார்.

இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் புரிந்தது என்னவென்றால், இந்தியாவில் கிரிப்டோ கரன்சி முதலீடுகள் மட்டுமல்ல, முறைகேடுகள் நடந்தால்கூட அவற்றை விசாரிப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்பதுதான். இந்த நிகழ்வுக்குப் பிறகு இந்திய அரசு, கிரிப்டோகரென்சி முதலீடுகளை ஒழுங்குபடுத்துவது குறித்து விரைவிலேயே முடிவுசெய்ய வேண்டுமென்பதை உணர்ந்திருக்கிறது.

கிரிப்டோகரென்சி என்றால் என்ன?

பிட்காயின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் வடிவிலான எக்சேஞ்ச். இங்கு கிரிப்டோ காயின்களை வைத்திருப்பவர்களின் விவரம் பாதுகாக்கப்படும். இந்த க்ரிப்டோ காயின்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். புதிதாக காயின்களை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது. இவற்றை ஒருவகையில் fiat currency என்றும் அழைக்க முடியும். அதாவது, இந்த காயின்கள் தங்கம், டாலர்கள் போன்ற எதையும் அடிப்படையாகக் கொண்டவையல்ல.

2009ல் சடோஷி நகமோடோ (புனைப்பெயர்தான்) என்பவர் பிட்காயின் என்ற க்ரிப்டோ கரன்சியை உருவாக்கினார். இந்த பிட்காயினுக்குப் பிறகு பல கிரிப்டோகரென்சிகள் உருவாகி விட்டன. ஆனால், உலக நாடுகள் இந்த கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையை ஏற்பதில்லை.

இந்த பிட்காயின்களுக்கு மையப்படுத்தப்பட்ட அதிகாரம் என்று எதுவும் கிடையாது. புதிய பிட்காயின்கள் ஒரு ஒருங்கிணைந்த முடிவின்படியே உருவாக்கப்படும்.

பிறகு முதன் முதலாக இந்த ஆண்டு ஜூன் மாதம் எல்சல்வடார் பிட்காயினை சட்டரீதியான பணமாக ஏற்றுக்கொண்டது. அதற்குப் பிறகு ஆகஸ்ட்டில் க்யூபா இதனை ஏற்றது. ஆனால், பிட்காயின் பரிவர்த்தனை பெரிய அளவில் நடைபெறும் சீனா, செப்டம்பர் மாதத்தில் அனைத்து பிட்காயின் பரிவர்த்தனைகளையும் தடைசெய்தது.

கிரிப்டோகரன்சிகள் குறித்த அச்சம்

பிட்காயின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

செலாவணி என்பது எப்போதுமே அரசுக்கு உரிமையானது. இறையாண்மை பெற்ற அரசின் மையப் புள்ளியே அதுதான். ஆனால், க்ரிப்டோகரன்சிகளின் வருகை இந்த இறையாண்மையைக் கேள்விக்குட்படுத்துகிறது. உலகம் முழுவதும் உள்ள செலாவணிகளின் மதிப்பு (அதாவது டாலர்கள், ரூபாய் நோட்டுகள், பவுண்டுகள் எல்லாம் சேர்த்து) 80 ட்ரில்லியன் டாலர். ஆனால், அறிமுகமாகி 12 ஆண்டுகளில் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு 3 ட்ரில்லியன் டாலராக உள்ளது.

ஆகவேதான் உலகம் முழுவதும் உள்ள அரசுகளிடம் இந்த கிரிப்டோகரன்சிகளை எதிர்கொள்வது குறித்த அச்சம் தொடர்ந்து நீடித்து வருகிறது. யாருடைய கட்டுப்பாட்டிலும் இயங்காத இந்த செலாவணியை ஏற்பது குறித்து எல்லா நாடுகளுமே தயக்கம் காட்டுகின்றன.

தவிர, இந்த க்ரிப்டோகரன்சிகளில் இதுவரை நடந்த மோசடிகள், திருட்டுகள் ஆகியவையும் இதன் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. 2014ஆம் ஆண்டில், உலகின் மிகப் பெரிய பிட்காயின் எக்சேஞ்சான மெட்காக்ஸ் (Mt. Gox) திவாலானதாக அறிவித்தது.

காரணம், அதன் வசம் இருந்த 473 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயின்களை யாரோ திருடிவிட்டார்கள். இவையனைத்தும் வாடிக்கையாளர்களுக்குச் சொந்தமானவை. அப்போது இருந்த மொத்த பிட்காயின்களில் 7 சதவீதம் அந்தத் திருட்டில் பறிபோயிருந்தது.

வேறு சில தருணங்களில், பணத்தை முறைகேடாகப் பெற பலர் இந்த பிட்காயின்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். வேறு சிலர் இந்த கிரிப்டோகரன்சிகளை பொன்சி திட்டம், பிரமிட் திட்டம், எம்எல்எம் போன்ற மோசடித் திட்டங்களுடன் ஒப்பிடுகின்றனர்.

இந்தியாவில் கிரிப்டோகரன்சியின் நிலை என்ன?

பிட்காயின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவைப் பொருத்தவரை கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளோ அதில் செய்யப்படும் முதலீடுகளோ அரசால் அங்கீகரிக்கப்பட்டவையல்ல. அரசின் எந்த கண்காணிப்பும் அமைப்பும் அதனைக் கண்காணிக்கவில்லை. இதில் முதலீடு செய்பவர்கள் தங்கள் சொந்த ரிஸ்க்கிலேயே முதலீடுகளைச் செய்துவருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே இந்தியாவின் முன்னணி நாளிதழ்களில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யச்சொல்லிக் கோரும் விளம்பரங்கள் முழுப் பக்க வண்ண விளம்பரங்களாக தொடர்ந்து வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

பிரதானமான கிரிப்டோகரன்சியான பிட்காயினின் விலை மிக அதிகமாக இருப்பதால், அதனை பகுதி பகுதியாக பிரித்து முதலீடுகளைச் செய்யும்வகையில் இந்த விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. குறைந்தது நூறு ரூபாயிலிருந்து இந்த கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்யலாம் என இந்த விளம்பரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான் கிரிப்டோகரன்சியை ஒழுங்குபடுத்துவதன் அவசியம் குறித்து இந்திய அரசு உணர ஆரம்பித்திருக்கிறது. நவம்பர் 15ஆம் தேதி திங்கட்கிழமையன்று நிதிக்கான நிலைக்குழு க்ரிப்டோகரென்சி குறித்த முதல் கூட்டத்தை நடத்தியது. இன்டர்நெட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, லட்சுமி காயின் போன்ற க்ரிப்டோ நிறுவனங்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன.

இந்தக் கூட்டத்தில் க்ரிப்டோ சந்தையை ஒழுங்குபடுத்தலாமே தவிர, தடைசெய்யக்கூடாது என இந்த நிறுவனங்கள் கூறியதாகத் தெரிகிறது. ஆனால், நிலைக்குழுவின் உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு அடிப்படையான கேள்விகளுக்கு முழுமையான பதிலளிக்க கிரிப்டோ நிறுவனங்களின் பிரதிநிதிகளால் இயலவில்லையெனக் கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது விரைவிலேயே கிரிப்டோகரன்சி குறித்த முடிவை இந்திய அரசு அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், க்ரிப்டோகரன்சியை ஒழுங்குபடுத்துவது என்பது இயலாத காரியம் என்கிறார் காங்கிரசைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

"இந்த கிரிப்டோகரன்சியே Greater fool கோட்பாட்டின் அடிப்படையில்தான் இயங்குகிறது. கூடுதல் விலை கொடுத்து வாங்கும் ஆட்கள் இருக்கும்வரை இது தொடர்ந்து நடக்கும். பிறகு விலை விழ ஆரம்பிக்கும். இதனை ஒழுங்குபடுத்துவது குறித்து பேசுகிறார்கள். எப்படி இதனை ஒழுங்குபடுத்துவார்கள்? யார் இதனை இயக்குகிறார்கள் என்று தெரியாதபோது யாரை இவர்கள் ஒழுங்குபடுத்துவார்கள்? அது நடக்காத காரியம்" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

தவிர, பிட்காயின் மட்டும்தான் கிரிப்டோகரன்சி என பலரும் கருதுகிறார்கள். அதுபோல நூற்றுக்கணக்கான காயின்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் யார் இயக்குகிறார்கள், கட்டுப்படுத்துகிறார்கள் என்பதே உலகில் யாருக்கும் தெரியாது. ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட ஒரு கிரிப்டோகரென்சியில் முதலீடு செய்து, அது வீழ்ந்துவிட்டால் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும் என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

உதாரணமாக, சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஸ்க்விட் கேமை மையமாக வைத்து, ஸ்க்விட் காயின் என்ற பெயரில் ஒரு க்ரிப்டோகரன்சி வெளியானதையடுத்து நடந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டுகிறார் அவர். அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி துவக்கத்தில் ஒரு சென்டிற்கு விற்பனையானது. பிறகு கிடுகிடுவென விலை உயர்ந்து ஒரு காயினின் விலை 2,861 டாலருக்கு விற்பனையானது.

ஆனால், அன்றைய தினம் அந்த க்ரிப்டோவை உருவாக்கியவர்கள் அனைத்து காயின்களையும் விற்று, பணமாக மாற்றிக்கொண்டு வெளியேறிவிட ஸ்க்விட் காயினின் மதிப்பு ஒன்றுமே இல்லாமல் போனது.

ஆனந்த் ஸ்ரீநிவாஸன்

"இந்தியாவில் எத்தனை லட்சம் கோடி ரூபாய் இந்த கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறதென்பது யாருக்கும் தெரியாது. சிலர் ஆறு லட்சம் கோடி என்கிறார்கள். சிலர் 3 லட்சம் கோடி என்கிறார்கள். அரசு நினைத்தால், வங்கிகளில் இருந்து ஒரு அளவுக்கு மேல் க்ரிப்டோ முதலீடுகளுக்குச் செல்வதை கட்டுப்படுத்தலாம். அவ்வளவுதான் செய்ய முடியும்." என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

இதுதவிர, கிரிப்டோகரன்சிகளின் விலை ஏற்றம் இறக்கம் எல்லாம் மிக வேகமாக நிகழும். அதன் பின்னணிகளைச் சாதாரண முதலீட்டாளர் புரிந்துகொள்ளவே முடியாது என்பது இதனை மேலும் சிக்கலாக்குகிறது. உதாரணமாக, 2017ஆம் ஆண்டு ஒரு பிட்காயினின் விலை சுமார் 20,000 டாலராக இருந்தபோது, ஒரே நாளில் திடீரென மூன்றில் ஒரு பங்கு விலை குறைந்தது. 2018ல் இதன் விலை வெறும் 3,122 டாலர் அளவுக்கு வந்தது. கிரிப்டோசந்தையில் இருந்த பல லட்சம் கோடி ரூபாய் காணாமல் போனது.

ஆகவே, ஒரு முதலீட்டாளரைப் பொறுத்தவரை, எந்த அளவுக்கு பணத்தை இழக்கத் தயாராக இருக்கிறாரோ அந்த அளவுக்கு மட்டுமே அதில் முதலீடுசெய்ய வேண்டும் என ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

ஆனால், கிரிப்டோகரன்சிகளின் ஆதரவாளர்களைப் பொறுத்தவரை, குறைந்த காலகட்டத்தில் லாபம் சம்பாதிக்க சிறந்த வழி க்ரிப்டோகரன்சிதான் என்கிறார்கள். தவிர, எதிர்காலத்தில் பணவீக்கத்தை இதனால் கட்டுப்படுத்தவும் முடியும் என்கிறார்கள்.

ஆனால், முதலீட்டாளர்கள் கவனம் கொள்ள வேண்டியது, கிரிப்டோகரன்சி விளம்பரங்களின் கீழே சிறிய எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எச்சரிக்கை வாசகத்தைத்தான். "க்ரிப்டோகரன்சிகள் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத டிஜிட்டல் சொத்துகள். சட்டபூர்வமாக எங்கும் பரிவர்ததனை செய்யத்தக்கதல்ல. கடந்தகால செயல்திறன் வருங்கால பலன்களுக்கு உத்தரவாதம் ஆகாது. முதலீடு செய்வதற்கு முன் கவனமாக இருங்கள்" என்கிறது அவ்வாசகம்.

https://www.bbc.com/tamil/business-59310181

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையின் கருது உருவாக்கம் சரியாக படவில்லை.


கிரிப்டோ ரெகுலேஷன் ஐ  ஒரு நாட்டல் செய்யமுடியாது.

ரெகுலேஷன் ஐ பற்றி எழுத வேண்டும் என்று நான் எண்ணிக்கொண்டு இருக்கும் போது, இந்த கட்டுரை வந்தது நல்லது. 

இது வங்கித்துறை Basel ரெகுலேஷன் போல, நாடுகள் ஒன்றிணைந்து செய்யப்பட வேண்டியது.

நேரம் இருக்கும் என்றால்,விரிவாக எழுதலாம்.

அனால், நேற்று, இந்த crypto இன் ஓர் பகுதிககி ரெகுலேஷன் ஐ  infrastructure bill உடன் இணைத்து US பிரகடப்படுத்தியது.

அதுவும், ஓர் காரணம் கிரிப்டோ மார்க்கெட் 7 - 10 % இழப்புக்கு இடையில்  நேற்று ஊஞ்சல் ஆடியதற்கு. 

உண்மையான பிரச்சனைகளும், கரிசனைகளும் இருக்கிறது, ரெகுலேஷன் செயப்படுவதத்திற்கு.

அந்த கரிசனசயை காட்டிக் கொண்டு, அரசாங்கங்களும், மத்திய வங்கிகளும், crypto ஐ ஏதோ ஓர் வழியில் மூடி விட வேண்டும் என்று கங்கணம் கடிக்க கொண்டு நிற்கின்றன.

அதற்கண, உந்துதலை பங்கு வர்த்தக திரியில் பதியப்பட்டு உள்ளது, cyrpto இன் அடிப்படை பொருளாதார நியாயப்பாடுகளை மேலோட்டமாக பார்த்த பொது.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிட்காயின் பற்றி உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக லிங்க்டு இன்னில் அலெக்ஸ் லீ சங்க் மெங்க் என்பவரால் எழுதப்பட்டது இது. Thanks Alex Liew Chung Mung

கொஞ்ச காலத்துக்கு முன்பு ஒரு வியாபாரி ஒரு ஊருக்கு அருகே நிறைய குரங்குகள் இருப்பதைப் பார்த்தான். அவன் அந்த ஊருக்கு வந்தான். 

அங்குள்ள மக்களிடம் எனக்கு குரங்குகள் வேண்டும். ஒரு குரங்குக்கு 100 ரூபாய் தருகிறேன் என்றான். 

இவன் பைத்தியக்காரன் போல. 100 ரூபாய் கொடுத்து குரங்குகளை வாங்குகிறான் என்று பேசிக் கொண்டார்கள்.

கிராமத்தில் ஒரு சிலர் குரங்குகளைப் பிடித்து அந்த வியாபாரியிடம் விற்பனை செய்தனர். இந்தச்செய்தி கிராமம் எங்கும் காட்டுதீ போல பரவின. கிராமத்தார் பலரும் குரங்குகளைத் தேடிக் கண்டுபிடித்து வியாபாரியிடம் விற்பனை செய்தனர். இப்படியே பெரும்பான்மையான குரங்களை பிடித்து விற்று விட்டனர்.

சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்த வியாபாரி அந்தக் கிராமத்துக்கு வந்தான். எனக்கு மேலும் குரங்குகள் தேவை, இனி ஒரு குரங்கிற்கு 200 ரூபாய் கொடுக்கிறேன் என்று அறிவித்தான்.

இந்தச் செய்தி மீண்டும் காட்டுத் தீ போல பரவியது. மிச்சம் மீதி இருக்கும் குரங்குகளை மக்கள் தேடிப் பிடித்து அவனிடம் விற்றனர்.

சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்த வியாபாரி கிராமத்திற்கு வந்தான். 

அவனுக்கு மேலும் குரங்குகள் தேவை இருப்பதால் இப்போது ஒரு குரங்குக்கு 500 ரூபாய் தருவதாகச் சொன்னான்.

மக்களுக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான். பிடிபடாமல் இருந்த ஒரு சில குரங்குகளையும் பிடித்து அவனிடம் விற்று விற்றனர்.

சில நாட்களுக்குப் பிறகு அந்த வியாபாரி மீண்டும் அக்கிராமத்திற்கு வந்தான்.

கிராமத்தாரிடம் நான் வெளியூர் செல்லப் போகின்றேன் எனவும், நான் திரும்ப வரும் போது எனக்கு குரங்குகள் வேண்டுமென்றும், அக்குரங்குகளுக்கு 1000 ரூபாய் தருவதாகவும் சொன்னான். 

இங்கே எனக்குப் பதிலாக எனது வேலையாளை நியமித்திருப்பதாகவும், எனக்குப் பதிலாக நீங்கள் இவனிடம் தொடர்பு கொள்ளலாம் எனவும், நான் வந்ததும் 1000 ரூபாய் கொடுத்து குரங்குகளை வாங்கிக் கொள்கிறேன் எனவும் அறிவித்து விட்டுச் சென்று விட்டான்.

மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லாக் குரங்குகளையும் பிடித்து இவனிடம் விற்று விட்டோம். இனி குரங்குகளுக்கு எங்கே போவது? சுளையாக 1000 ரூபாய் கிடைக்குமே? என்ன செய்வது என்று புரியாமல் தத்தளித்தனர். இந்தச் செய்தியும் எங்கும் காட்டுத்தீ போல பரவியது.

அந்த நேரத்தில் வியாபாரியின் ஆள், ”என்னிடம் குரங்குகள் உள்ளன. அக்குரங்குகளை நான் உங்களுக்கு 700 ரூபாய்க்குத் தருகிறேன். வியாபாரி வந்தவுடன் நீங்கள் அதே குரங்குகளை 1000 ரூபாய்க்கு விற்றுக் கொள்ளலாம்” என்றுச் சொன்னான்.

ஆஹா, 300 ரூபாய் கிடைக்குமே என்ற ஆசையில் பணக்காரர்கள் நிறைய குரங்குகளை வாங்கினர். ஏழைகள் தங்களிடம் இருக்கும் பணத்துக்கு தக்கவாறு அவனிடம் இருந்து குரங்குகளை வாங்கி பாதுகாத்து வந்தனர்.

சிறிது நாட்கள் சென்றன. வியாபாரியின் வேலையாளைப் பார்க்கச் சென்றார்கள். அங்கு ஒருவரும் இல்லை. பின்னர் அந்த வியாபாரியும் வரவில்லை.

இந்தக் கதையில் குற்றவாளி யார்? யோசித்துப் பாருங்கள். இதற்கு ஒரு பெயர் உண்டு. இதைத்தான் An analogy in  Leyman's Terms என்பார்கள். நெட்டில் தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.

கதையைப் படித்து விட்டீர்களா? 

பிட்காயின் வியாபாரம் என்ன என்பதை விளக்கமாக இக்கதை உங்களுக்குச் சொல்லி இருக்கும்.

பிட்காயின் லாபகரமானது, பிளாக் செயின் டெக்னாலஜி மிகவும் பாதுகாப்பானது என்றெல்லாம் யூடியூப்பில் பலரும் பலவாறு தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். 

பிளாக்செயின் டெக்னாலஜி என்றால் ஏதோ பெரிய டெக் போல என பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை. 

டேட்டாபேஸ் தரவுகளை பகிர்ந்து கொள்ளும் தரவுகளின் பரவலாக்கம் ஒரே இடத்தில் இல்லாமல் பல இடத்திலும் பலராலும் மெயிண்டெயின் செய்வதை தான் பிளாக்செயின் டெக்னாலஜி நாளை உலகை ஆளப்போகிறது என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பல நாடுகளிலும் பிளாக்செயின் டெக்னாலஜியை டிஜிட்டல் டிரான்சாக்ஸனுக்குப் பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான். ஒரு நாட்டின் கரன்சியை பிளாக்செயின் மூலம் காயினாக மாற்றுவதெல்லாம் தனக்குத் தானே தூக்கு மாட்டிக் கொள்வது போல. எந்த டெக்னாலஜி கான்செப்டாக இருந்தாலும் அது உடைக்கக் கூடியதே என்பதை எவரும் மறந்து விடாதீர்கள்.

பிட்காயின் முதலீடு மொத்தமாக உங்களிடம் இருக்கும் துட்டைத் துடைத்து எடுத்துக் கொண்டு சென்று விடும்.

https://thangavelmanickadevar.blogspot.com/2021/11/blog-post_23.html

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

பிட்காயின் பற்றி உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக லிங்க்டு இன்னில் அலெக்ஸ் லீ சங்க் மெங்க் என்பவரால் எழுதப்பட்டது இது. Thanks Alex Liew Chung Mung

கொஞ்ச காலத்துக்கு முன்பு ஒரு வியாபாரி ஒரு ஊருக்கு அருகே நிறைய குரங்குகள் இருப்பதைப் பார்த்தான். அவன் அந்த ஊருக்கு வந்தான். 

 

ஏற்கவே, பங்கு திரியில் சொல்லப்பட்டு உள்ளது, சிறிது மாற்றத்துடன்.

 

எல்லாமே எதிர்மறையாக இருந்தும் கூட, கிரிப்டோ சந்தை முரட்டுக் காளை தனமாக திமிறுகிறது.

 

7 hours ago, ஏராளன் said:

பிட்காயின் வியாபாரம் என்ன என்பதை விளக்கமாக இக்கதை உங்களுக்குச் சொல்லி இருக்கும்.

பிட்காயின் லாபகரமானது, பிளாக் செயின் டெக்னாலஜி மிகவும் பாதுகாப்பானது என்றெல்லாம் யூடியூப்பில் பலரும் பலவாறு தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். 

எந்த பொருளாயினும்,  வாங்க, விற்க உகந்த வேளை, தருணம் அறிந்து செய்தலால் தான் இலாபம்.

இது சாதாரண பெடிக் கடைக்கும் பொருந்தும், பலதேசியக் கம்பனிக்கு பொருந்தும். 

ஏனையவற்றை விளக்க என்னிடம் நேரம் இல்லை. அனால், பங்கு   திரியில் சிறிது விபரமாக உள்ளது.

அனால், இணைய இணைப்பையும் பார்க்கவும்.

https://ripple.com/customer-case-study/santander/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.