Jump to content

அடிப்படை கொள்கையை நீக்கி ஆவணங்கள் அனுப்புவது இறுதிதீர்வுக்கு தடைகளாக அமையலாம்! அரியநேத்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படை கொள்கையை நீக்கி ஆவணங்கள் அனுப்புவது இறுதிதீர்வுக்கு தடைகளாக அமையலாம்! அரியநேத்திரன்

January 4, 2022
 

கட்சிகளிடையே முரண்பாடுகள் இல்லாமல் போகுமா

 

இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வு என்பது வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித்தீர்வு என்பதை இலங்கை தமிழரசுகட்சியின் கொள்கையாகவே இன்றுவரை உள்ளது. அடிப்படை கொள்கையை நீக்கி சர்வதேச அரங்கில் ஆவணங்கள் அனுப்புவது எதிர்காலத்தில் எமது இறுதிதீர்வுக்கு தடைகளாக அமையலாம். சமஷ்டி அடிப்படையிலேயே சர்வதேசத்தில் யாருக்காவது எழுத்துமூல ஆவணமாக அனுப்பபடவேண்டுமே தவிர அதனை வெட்டிக்குறைத்து மாற்றம் செய்து அனுப்புவது என்பது எமது நிலைப்பாட்டில் தளம்பல் போக்கையே பிரதிபலிக்கும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் ஊடக செயலாளரும், இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சமர்ப்பிப்பதற்கென தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஆவணத்தை தயாரிக்கும் முயற்சியில் ஏன் இலங்கை தமிழரசு கட்சி பின்னடிக்கிறது என ஊடகவியாளர் கேட்டபோது அது தொடர்பாக மேலும் கருத்துக்கூறியபோது.

இலங்கையில் கடந்த 1956ல் இருந்து 2009, மே மாதம் வரை இலட்சக்கணக்கான உயிர்களை பலிகொடுத்த இனம் தமிழர்கள் மட்டுமே, சிங்களவர்களை பொறுத்தமட்டில் ஆயிரக்கணக்கானவர்களும், முஷ்லிம்களை பொறுத்தவை நூற்றுக்கணக்கானவர்களுமே போராட்டத்தால் மாண்டுள்ளனர் என்பதே உண்மை.

வடக்கு கிழக்குவாழ் தமிழ் மக்களின் உரிமைப்பிரச்சனை என்பதையே இலங்கையின் இனப்பிரச்சனை என கடந்த 73,வருடங்களாக பேசும் பொருளாக இருந்து வருகிறது அதற்கான் அரசியல் தீர்வுக்காக இன்றுவரை மூன்றரை இலட்சம் மக்களை பலிகொடுத்தும் ஐம்பதாயிரம் போராட்ட இளைஞர்களை பலிகொடுத்தும் அதற்கான எந்த ஒரு தீர்வும் இன்றி வாழும் ஒரு இனமாக உள்ளவர்கள் தமிழர்கள் மட்டுமே.

இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அமைய வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே தந்தை செல்வா கடந்த 1949,டிசம்பர்,18,ல் இலங்கைத்தமிழரசு கட்சியை ஆரம்பித்தார்.

அந்த கட்சியின்ஊடாக பல அகிம்சைரீதியிலான போராட்டங்களும் ஓப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவை அனைத்தையும் இலங்கையை மாறி மாறி ஆட்சிசெய்த ஐக்கியதேசிய கட்சி அரசாங்கமும்,ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கமும் ஏமாற்றி தட்டிக்கழித்தமையால்தான் 1976,மே,14,ல் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தமீழீழ அரசை நிறுவும் தீர்மானத்தை தந்தை செல்வா தலைமையில் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டதும் அதன்பின்னர் 36, விடுதலை இயக்கங்கள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலை ஏற்பட்டதும் அதனால் திம்பு பேச்சு வார்த்தை இடம்பெற்று 1987,யூலை,29,ல் இலங்கை இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 13,வது அரசியலமைப்பு தோற்றம் பெற்று மாகாணசபை முறை ஏற்படுத்தப்பட்டது எல்லாமே வரலாறுகள்.

இந்த 13,வது அதிகாரப்பரவலில் தமிழ்மக்களுக்கான நியாயமான அதிகாரங்கள் இல்லை என்று அப்போதய தமிழர் விடுதலைகூட்டணி, தமீழீழ விடுதலை இயக்கம், தமீழீழ விடுதலைப்புலிகள் எல்லாம் முதலாவது வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தலை புறக்கணித்ததும் ஆனால் இந்திய அமைதிப்படையின் தூண்டுதலால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை (ஈபீஆர்எல்எவ்) முன்னணியும், ஈழம் தேசிய ஜனநாயகமுன்னணியும் (ஈஎன்டீஎல்எவ்)மட்டும் தமிழர் தரப்பாகவும் ஏனய தேசிய கட்சிகள்,ஶ்ரீலங்கா முஷ்லிம் ஹாங்கிரஷ் எல்லாம் அந்த தேர்தலில் போட்டியிட்டு இந்தியப்படையால் ஈபீஆர்எல் எவ் வெல்லவைக்கப்பட்டு வரதராஜப்பெருமாளை முதலமைச்சராக்கியதும் அவரும் சரியாக ஒருவருடம் மூன்று மாதங்கள் மட்டுமே முதலமைச்சராக பதவியில் இருந்து பின்னர் தமிழீழ பிரகடணத்தை உதட்டால் உச்சரித்து விட்டு இந்திய அமைதிப்படையின் கப்பலில் ஏறி இந்தியாவில் வாழ்ந்த வரலாறுகள் எல்லாம் தமிழின அரசியலில் உண்டு.

அதன்பின்னர் 1987,யூலை,29, இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னர் 2009,மே,18,வரை தமீழீழ விடுதலைப்புலிகள் மட்டும் ஆயுதப்போராட்டம் மேற்கொண்டு மௌனித்தபின்னர் தற்போது 12,வருடங்களாக ஆட்சியாளர்களுடனும், பாரதப்பிரதமருடனும், சர்வதேச நாடுகளுடனும் பலதரப்பட்ட பேச்சுவார்தைகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனய தமிழ்தேசிய கட்சிகள், புலம்பெயர் உறவுகள் எல்லாம் மேற்கொண்டுவருகின்றனர்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜனநாய ரீதியாக 2009,க்குப்பின்னரும் 2010, 2015,2020, ஆகிய பொதுத்தேர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் எல்லாம் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வையே வலியுறுத்தி வடக்கு கிழக்கு மக்களிடம் வாக்குகளை பெற்ற கட்சியாக வடக்கு கிழக்கில் அதிகூடிய ஆசனங்களை பெற்ற தமிழ்தேசிய கட்சியாக இன்றுவரை உள்ளது.

அந்த கொள்கையுடன் பயணிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சியாக உள்ள இலங்கைத்தமிழரசுக்கட்சி தற்போது பல தமிழ்கட்சிகள் இணைந்து பாரதப்பிரதமர் மோடிக்கு எழுத்துமூல ஆவணம் ஒன்றை வழங்கும்போது அடிப்படை கொள்கையைவிட்டு அதில் யாரையும் திருப்திப்படுவதற்காக முக்கிய விடயங்களை நீக்கிவிட்டு ஆவணங்களை தயாரிப்பது தவறு என்பதே இலங்கை தமிழரசுகட்சியின் நிலைப்பாடு ஆனால் அந்த ஆவணம் தற்காலிகமானதாக இருப்பினும் அதில் நிலந்தர தீர்வையும் குறிப்பிட்டே ஆகவேண்டும் என மேலும் கூறினார்.

https://www.ilakku.org/அடிப்படை-கொள்கையை-நீக்கி/

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.