Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலின் மீள்வருகையும் சதியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் மீள்வருகையும் சதியும்

புருஜோத்தமன் தங்கமயில்

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகி இருக்கிறார். கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக தோற்கடிக்கப்பட்டது. அந்தக் கட்சி பெற்ற உதிரி வாக்குகளால் கிடைத்த ஒரேயொரு தேசிய பட்டியல் மூலமாக, 2021ஆம் ஆண்டு, ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு வந்தார்.

ஐந்து முறை பிரதமர், நீண்ட காலமாக எதிர்க்கட்சித் தலைவர் போன்ற பதவிகளை வகித்த ரணில், தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு மீண்டும் வந்த போது, அதைப் பலரும் பரிதாபத்தோடு பார்த்தார்கள்.

ஆனால், ஒற்றைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியைப் பெற்ற ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பிரதமராக, இன்று அவர் விளங்குகின்றார்.

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, அதுவும் தனி ஒருவராக இருந்து கொண்டு, இலங்கை அரசியலில் என்ன செய்துவிட முடியும் என்று, கடந்த ஆண்டு ரணிலிடம் கேட்கப்பட்ட போது, அவர் தனக்கு அதிர்ஷ்டம் இருப்பதாகக் கூறியிருந்தார். அப்போது, அது குறித்து யாரும் அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால், இன்றைக்கு அவர் நம்பிய அதிர்ஷ்டம் பற்றிப் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். யார் விரும்பினாலும் இல்லையென்றாலும், இன்னும் சில மாதங்களுக்கு ரணில் விக்கிரமசிங்க தான் நாட்டின் பிரதமர்.

ஆனால், பிரதமர் பதவியை ரணில் ஏற்றமை என்பது, ‘ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும்’ போராட்டத்தின் இலக்கை, மழுங்கடிக்கச் செய்யும் செயற்பாடாகும். ஜனநாயகத்தின் அடிப்படை மக்களாவர். அவர்களின் உணர்வுகளையும் உரித்துகளையும் புறந்தள்ளிக் கொண்டு செய்யப்படும் அரசியல், அறம் சார்ந்தது அல்ல.
ரணில் விக்கிரமசிங்க இம்முறை பிரதமர் பதவியை ஏற்றமை, அறத்துக்கு அப்பாலான செயற்பாடு. குறிப்பாக, ராஜபக்‌ஷர்களைக் காக்கும் செயற்பாடு. ராஜபக்‌ஷர்களை முழுமையாக ஆட்சி அதிகார கட்டமைப்பில் இருந்து நீக்குவதன் மூலம், தென் இலங்கை மக்கள், ஆட்சிக் கட்டமைப்புக்குள் ஊழலற்ற, நேர்மையான இயக்கத்தைப் பேண விரும்பினார்கள். ஆனால், அந்த வாசல் திறப்பதற்கு முன்னர், ரணில் தடுப்புக்கட்டையாக வந்திருக்கிறார்.

“..முழுமையாக வீழ்ந்து போயிருக்கிற நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டி அமைப்பதற்காகவே, பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன். மாறாக, ஒரு தனி மனிதரையோ, ஒரு குடும்பத்தையோ காப்பாற்றுவதற்காக அல்ல....” என்று திங்கட்கிழமை (16) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது, ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

image_57b79ef4e2.jpg

 

ஆனால், முதல் நாள் ஆற்றிய உரைக்கு மாறாக, அடுத்த நாள் பாராளுமன்றத்தில் அவர் ராஜபக்‌ஷர்களின் ஏவலாளி மாதிரி, அவர்களைக் காக்க வந்தவர் மாதிரி செயற்பட்டார்.ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டத்தின் இலக்குகளில் ஒன்று, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாகும். அதன் போக்கில், முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிரான குற்றப்பிரேரணையொன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவதன் மூலம், அவரைப் பதவி நீக்குவதற்கான ஏதுகைகளை ஏற்படுத்துவதாகும்.

அதற்காக எதிர்க்கட்சிகளின் பிரேரணையை எம்.ஏ. சுமந்திரன் தயாரித்து, போராட்டக்காரர்களின் ஒப்புதலோடு பாராளுமன்றத்தில் முன்வைத்தார். எதிர்க்கட்சியில் இருக்கும் போது, அந்தப் பிரேரணைக்கு தன்னுடைய ஆலோசனைகளை வழங்கிய ரணில், அந்தப் பிரேரணை பாராளுமன்றத்தில் எடுக்கப்படுவது தொடர்பில் இடம்பெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில், எதிராக வாக்களித்திருக்கிறார்.

அன்றைக்கு அவர் எதிர்க்கட்சி உறுப்பினர். இன்று அவர் ராஜபக்‌ஷர்களின் அரசாங்கத்தின் பிரதமர். அப்படிப்பட்ட நிலையில், அவர் எப்படி கோட்டாவை நீக்குவதற்கான பிரேரணைக்கு ஆதரவளிப்பார் என்கிற கேள்வி இயல்பானதுதான்.

ஆனால், கடந்த காலங்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்புக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் பேசி வந்திருக்கின்ற ரணில், அதற்கான வாய்ப்புக்கான சாத்தியப்பாடுகள் ஏற்பட்டிருக்கின்ற தருணத்தில், அதைத் தவிர்த்திருக்கின்றார். அதற்கு காரணம், பல தடவைகள் முயன்றும் அடைய முடியாமல் போன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியின் மீது, அவருக்கு இருக்கும் தீராத காதல்!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக, மூன்று தசாப்த காலமாக அவர் இருந்த போதிலும், இரண்டு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போதிலும், அவரால் அந்தப் பதவியை அடைய முடியவில்லை. அதுவும், அவரது மாமாவான ஜே.ஆர். ஜெயவர்தன கொண்டுவந்த ஆட்சி முறையில் இருந்து, அதிகார கரங்களை நீட்ட வேண்டும் என்பது அவரது விருப்பம்.

கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி முழுவதுமாகத் தோற்றதோடு, அதற்கான வாய்ப்பு முழுமையாக இல்லாமல் போனது. ஆனால், ராஜபக்‌ஷர்களின் முறையற்ற ஆட்சியும் அவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்குள் ஏற்படுத்திவிட்ட பொருளாதார சீரழிவும், ரணிலுக்கான ஜனாதிபதி கனவை மீண்டும் ஏற்படுத்தி இருக்கின்றது.

இன்னொரு ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றால், அதில் ராஜபக்‌ஷர்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அப்படிப் போட்டியிட்டாலும் அவர்கள் வெற்றிபெறும் வாய்ப்புகள் இல்லை. அப்படியான நிலையில், தனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக, வெற்றியாளராகத் தன்னை முன்னிறுத்தும் வாய்ப்பையும் கருத்தில் கொண்டே, ரணில் பிரதமர் பதவியை ஏற்றிருக்கிறார்.

நாடு சந்தித்துள்ள பாரிய பொருளாதார நெருக்கடியை, சிறிதாக மாற்றினாலே, நாட்டை மீளக்கட்டி அமைப்பதற்கான ஆளுமையாகத் தன்னை தென் இலங்கை மக்கள் நம்புவார்கள் என்று ரணில் நினைக்கிறார்.

நாடு நெருக்கடியில் இருக்கும் போது, ஆட்சிப் பொறுப்பை ஏற்கத் தயங்குபவர்கள், எப்படி ஆளுமைமிக்க தலைவர்களாக இருப்பார்கள் என்கிற கேள்வியை சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டவர்களை நோக்கி எழ வைப்பதற்கான வாய்ப்பாகவும், தான் ஏற்றிருக்கும் பிரதமர் பதவியை ரணில் பார்க்கிறார்.

அப்படியான நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளிக்கும் சஜித், அநுர உள்ளிட்டவர்களை, பிரதமர் பதவியை ஏற்க விடுவதற்கு ரணில் தயாரில்லை. ராஜபக்‌ஷர்களுக்கும் எதிர்க்கட்சிகளின் கைகளில் ஆட்சி செல்வது விருப்பமில்லை.

அப்படியான நிலையில்தான், ரணிலும் ராஜபக்‌ஷர்களும் தங்களுக்கான எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு, இவ்வாறான ஆட்சி அதிகார மாற்றத்துக்கான இணக்கத்துக்கு வந்திருக்கிறார்கள். ரணில் தன்னுடைய பதவி குறித்துத்தான் கவனமாக இருப்பார். அவருக்கு அவரின் கட்சியின் எதிர்கால வளர்ச்சியோ, அடுத்த கட்டத் தலைமைகளை தயார்படுத்துவதோ இலக்கில்லை.

அப்படியான நிலையில், அவரை இப்போது பிரதமர் பதவியில் இருத்துவதுதான் தங்களின் மீள்வருகைக்கான வாய்ப்புகளைத் தக்க வைக்கும் செயல் என்று ராஜபக்‌ஷர்கள் நினைக்கிறார்கள். ஏனெனில், சஜித்தோ அல்லது அநுரவோ ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், அவர்கள் ஆட்சியை மாத்திரமல்ல, கட்சி சார் நடவடிக்கைகளிலும் கவனமாக இயங்குவார்கள். அது, அவர்களை தோற்கடிப்பதற்கான சாத்தியங்களை கடினமாக்கும்.

இப்படி, ராஜபக்‌ஷர்கள் - ரணில் என்ற இரண்டு தரப்புகளும், தங்களின் எதிர்கால ஆட்சி அதிகார வாய்ப்புகளைக் கருதித்தான் இணக்கத்துக்கு வந்துள்ளார்கள். இவ்வாறு ரணில், இந்த ஆள்மாறாட்ட ஆட்சிக்கு வந்தமையால்த்தான், அவர் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ராஜபக்‌ஷர்களைக் காக்கவும் முனைகிறார்.

நாடு பொருளாதார ரீதியில் முழுமையாக முடங்கிவிட்டது. அதுதான், தென் இலங்கை மக்களை எழுச்சி கொள்ளவும் வைத்தது. அந்த எழுச்சி என்பது, பொருளாதார மீட்சி சார்ந்ததுதான். ஆனால், அது, ஆட்சி அதிகார, நிர்வாக கட்டமைப்புக்குள் இருக்கும் ஊழல், மோசடி, செயற்றிறன் இன்மை உள்ளிட்டவற்றுக்குத் எதிரானது.

இவற்றைச் சரி செய்வதற்கான வாய்ப்பு, ஒற்றை மனிதரிடம் முழு அதிகாரத்தையும் சேர்ப்பிக்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்போடு ஆரம்பிக்கலாம். ஆனால், அந்த வாய்ப்பினை ரணில் இல்லாமல் ஆக்கியிருக்கிறார். அது, போராடும் மக்களுக்கு எதிரானது.
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரணிலின்-மீள்வருகையும்-சதியும்/91-296771

 

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் குள்ளநரிக் கூட்டங்கள்.......மக்களால் அவர்களின் ஒரு முடியைக் கூட புடுங்க முடியாது.......!  

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரதமர் ரணில் தன்னை 'க்ருஷா' கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு பேசியது என்ன? சுவாரசிய கதை

  • யூ.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,RANIL WICKREMESINGHE/FB

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மே 17, செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தான் ஏற்றிருக்கும் பொறுப்பு குறித்தும், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றியும் விவரித்திருந்தார்.

அப்போது 'ஹுணு வ(ட்)டயே' எனும் நாடகத்தில் வரும் கதாப்பாத்திரங்களில் ஒன்றான 'க்ருஷா' (Grusha) என்பவர், வேறொருவரின் குழந்தையை சுமந்து கொண்டு, தொங்கு பாலமொன்றை மிகவும் சிரமப்பட்டு கடந்து செல்வதைக் குறிப்பிட்டுக் கூறிய பிரதமர், "அதை விடவும் இது ஆபத்தான சவாலாகும்" என்று, தான் பொறுப்பேற்றுள்ள கடமையின் தன்மையினை உவமைகளுடன் விவரித்தார்.

இதனையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவரின் உரையில் சுட்டிக்காட்டிய 'ஹுணு வ(ட்)டயே' நாடகம் குறித்தும், அதில் வரும் 'க்ருஷா' எனும் பாத்திரம் தொடர்பிலும் அறிந்து கொள்ளும் ஆவல் பலரிடமும் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

இந்த சூழ்நிலையில் கல்வித் திணைக்கள அதிகாரியும், சமூக ஆர்வலரும் சிங்கள மொழிபெயர்ப்பாளருமான ஏ.எம். றிம்சான், தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் குறிப்பிட்ட நாடகம் தொடர்பில் சில குறிப்புகளைப் பகிர்ந்திருந்தார். எனவே, அவை குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளும் அவரைத் தொடர்புகொண்டு பிபிசி தமிழுக்காகப் பேசினோம்.

"ஹுணு வ(ட்)டயே கதாவ' (Hunuwataye Kathawa) என்பது ஒரு சிங்கள நாடகம்" என்கிறார் றிம்சான். 'சுண்ணாம்பு வட்டத்தின் கதை' என இதனை மொழிபெயர்க்க முடியும் எனவும் அவர் கூறுகிறார்.

 

ரணில் விக்ரமசிங்க பேச்சு

 

படக்குறிப்பு,

ஏ.எம். றிம்சான்

"ஜெர்மனியைப் பிறப்பிடமாகக் கொண்ட மார்க்சிய கவிஞரும் நாடக ஆசிரியருமான பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht) எழுதிய 'The Caucasian Chalk Circle' எனும் நாடகத்தை புகழ்பெற்ற சிங்களக் கலைஞர் ஹென்றி ஜயசேன என்பவர் இலங்கை சூழலுக்கு ஏற்ற விதத்தில் மீளுருவாக்கம் செய்து 'ஹுணு வ(ட்)டயே கதாவ' என்ற பெயரில் வெளியிட்டார். இந்த சிங்கள நாடகம் 1967ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது" என அவர் தெரிவிக்கின்றார்.

கதை என்ன?

இதன்போது குறித்த நாடகத்தின் கதை குறித்தும் றிம்சான் விவரித்தார்.

"குருசீனிய சிற்றரசரின் மனைவி நடல்லா ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அவனுக்கு மைக்கேல் என்று பெயரிடப்படுகிறது. நாட்டில் நடக்கும் பலவீனமான ஆட்சி காரணமாக கிளர்ச்சிகள் தலைதூக்குகின்றன. ஒரு சதிப்புரட்சியின் விளைவாக சிற்றரசர் கொல்லப்படுகிறார்".

"செல்வச்செருக்கும் பேராசையும் கொண்ட சிற்றரசரின் மனைவி, அந்த இக்கட்டான வேளையிலும் ஆடை, ஆபரணங்களை மூட்டை கட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாள். இதற்கிடையில் எதிரிகளால் அரண்மனை முற்றுகையிடப்படவே, குழந்தை மைக்கேலை கைவிட்டு அவள் தப்பியோடி விடுகிறாள்.

அவளது பணிப்பெண்ணான க்ருஷா, கைவிடப்பட்ட குழந்தையைக் காப்பாற்றி பல இன்னல்களுக்கு மத்தியில் மலைப் பிரதேசத்திலுள்ள தன் சகோதரனின் வீடு நோக்கிச் செல்கிறாள். குழந்தையைக் கையேற்றதன் பின்னரான காலப்பகுதியில், எதிர்பாராத சூழ்நிலைகள் பலவற்றுக்கு க்ருஷா முகங்கொடுக்க நேர்கிறது.

 

ரணில் விக்ரமசிங்க பேச்சு

பட மூலாதாரம்,HENRY

 

படக்குறிப்பு,

ஹென்றி ஜயசேன

சில ஆண்டுகள் மறைந்து வாழ்ந்து வெளியே வந்த சிற்றரசரின் மனைவி நடல்லா, இழந்த சொத்துகளை மீளப்பெறும் நோக்கில் குழந்தை மைக்கேலுக்கு உரிமை கோரி வழக்குத்தாக்கல் செய்கிறாள். அவளது நோக்கத்தை அறிந்துகொள்ளும் க்ருஷா குழந்தையைத் தர மறுக்கிறாள்.

வழக்கை விசாரிக்கும் நீதிபதி அஸடாக், சுண்ணாம்புக்கல் கொண்டு கீறப்பட்ட ஒரு வட்டத்தினுள் குழந்தையை கிடத்தி, இரு புறங்களிலும் நின்று குழந்தையை இழுக்குமாறு இரண்டு பெண்களுக்கும் கட்டளையிடுகிறார்.

அப்போது குழந்தைக்கு நோவினை செய்யப்படுவதை காணச் சகியாத க்ருஷா, தனது போராட்டத்தைக் கைவிடுகிறாள். இதனையடுத்து, குழந்தை மீது உண்மையான அன்பு கொண்ட க்ருஷாவே குழந்தைக்கு உரிமையானவள் என நீதிபதி அஸடாக் முடிவு செய்கிறார்" எனக் கூறிய றிம்சான், "இதுதான் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறிய "நாடகத்தின் கதைச் சுருக்க"ம் என்றார்.

குறிப்பால் பிரதமர் ஏதாவது சொல்கிறாரா?

நாட்டு மக்களுக்கு செவ்வாய்கிழமை பிரதமர் ஆற்றிய உரையின் இறுதியில் இப்படிக் கூறுகின்றார்.

"ஹுணு வ(ட்)டயே 'க்ருஷா' - வேறொருவரின் பிள்ளையை சுமந்து கொண்டு, தொங்கு பாலத்தைக் கடந்தார். எனது பொறுப்பு அதனை விடவும் அபாயகரமான சவாலானதாகும். கத்தியின் மேல் நடப்பதை விடவும் இது பயங்கரமான சவால்களைக் கொண்டது.

பள்ளத்தாக்கு மிகவும் ஆழமானது. அடி தெரியவில்லை. பாலம் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. கைப்பிடியும் இல்லை. என்னுடைய கால்களில் கழற்ற முடியாத பாதணிகள் போடப்பட்டுள்ளன. அதன் அடியில் கூர்மையான இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தையை பாதுகாப்பாக அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இந்த சவாலை நான் நாட்டுக்காகவே பொறுப்பேற்றேன்.

எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் தனி நபரையோ, ஒரு குடும்பத்தையோ, அல்லது ஒரு கூட்டத்தையோ பாதுகாப்பதல்ல. முழு நாட்டினதும் மக்களை காப்பாற்றுவதேயாகும். இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதே ஆகும்.

உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள்.

நான் எனது கடமையை நாட்டுக்காக செய்து முடிப்பேன். அது நான் உங்களுக்கு அளிக்கும் உறுதியாகும்".

தனது நிலையினையும் தான் ஏற்றுள்ள பொறுப்பையும் ஒப்பிடுவதற்காக 'ஹுணு வ(ட்)டயே' நாடகத்தில் வரும் 'க்ருஷா' எனும் கதாபாத்திரத்தை தனது உரையில் பிரதமர் ரணில் குறிப்பிட்டுக் கூறுவதற்கான காரணம் என்ன? 'க்ருஷா' எனும் கதாபாத்திரத்தை ஒரு குறியீடாக அவர் சொல்கிறாரா? நடல்லாவின் குழந்தை இறுதியில் க்ருஷாவுக்கு சொந்தமாவது போல், பிரதமர் ரணில் இறுதியில் தனக்கு ஒரு வெற்றி காத்திருக்கிறது என்பதை குறிப்பால் சொல்ல முயற்சிக்கிறாரா?

'ஹுணு வ(ட்)டயே' அல்லது பிரெக்டின் 'தி ககாசியன் சாக் சர்க்கிள்' நாடகத்தின் கதை தெரிந்தவர்களிடம் இப்படி ஏராளமான கேள்விகள் உள்ளன.

https://www.bbc.com/tamil/sri-lanka-61504893

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.