Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆளுநர் உரை புறக்கணிப்பு - திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநர் உரை புறக்கணிப்பு - திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
  • பதவி,பிபிசி தமிழ்
  • 9 ஜனவரி 2023, 02:54 GMT
    புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர்
ஆளுநர்

பட மூலாதாரம்,TWITTER/TNDIPR

தமிழ்நாடு சட்டசபையில் 2023ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இதற்காக சட்டபேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்கும் போது, சமீபத்தில் ஆளுநர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் முழக்கம் எழுப்பின.

தமிழ்நாடு மக்களுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநரை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற முழக்கமிட்டவாறே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. மேலும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் பாமகவும் ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

புத்தாண்டில் ஆளுநர் உரை

ஆண்டுதோறும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கும். 2023ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 9ஆம் தேதியான இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது ஆளுநரின் உரையில் அரசின் நிதிநிலை, புதிய திட்டங்கள், அரசின் கொள்கைகள் குறித்த அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. கடந்த ஆண்டு அரசு கொண்டு வந்த முக்கிய திட்டங்கள் குறித்தும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்திருந்தார். ஆளுநர் தனது உரையில் ஆங்கிலத்தில் வாசித்த பிறகு, அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டபேரவையில் வாசித்தார். ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவை கூட்டம், ஆளுநர் உரையுடன் தொடங்குவது வாடிக்கை தான் என்றாலும், இந்த ஆண்டு ஆளுநர் உரையை முன்னிட்டு தமிழ்நாட்டின் அரசியல் களம் சற்று பரப்பரப்பாக இருக்கிறது. இது மட்டுமின்றி, தமிழ்நாடு அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா உட்பட 19 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், இது தொடர்பான விவாதமும் ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் எழுந்தது. ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளியேறிய திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆளுநரின் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து வெளியேறின.

ஆளுநரும் சர்ச்சை உரைகளும்

ஆளுநர்

பட மூலாதாரம்,TWITTER/RAJBHAVAN_TN

தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவியேற்றத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவிக்கும் கருத்துகள் பல நேரங்களில் சர்ச்சையாகி வருகின்றன.

 

ஆளுநரின் சனாதானத்திற்கு ஆதரவான கருத்துகள் தொடங்கி, இந்தி மொழி, வர்ணாசிரமம், ரிஷிகள் வரை ஆளுநர் தெரிவித்த கருத்துகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான எதிர்கட்சிகள் பல்வேறு தருணங்களில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தன. அண்மையில் கூட ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு நிகழ்ச்சியில், "தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்" என்று பேசியது சர்ச்சையானது. இது தொடர்பாக தமிழ்நாட்டில் பாஜகவை தவிர ஏனைய கட்சிகள் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனத்தை பதிவு செய்திருந்தன.

ஆளுநர் உரையில் என்ன இருக்கும்?

ஆளுநர்

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தற்போது ஆளுநருக்கு எதிரான மனநிலை இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து திமுக தவிர்த்து அதன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், இன்று ஆளுநர் உரைக்கு எதிராக திமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என பிபிசி தமிழ், மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயனிடம் கருத்து கேட்டது. இது தொடர்பாக பதிலளித்த அவர், "ஆளுநரின் உரைக்கு எதிராக ஆளுங்கட்சியான திமுக செயல்படாது," எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய போது, ஆளுநர் உரை என்பது அரசின் ஒரு கொள்கை விளக்கக் குறிப்பு. இதில் அரசின் அம்சங்களே பெரும்பாலும் இடம்பெற்று இருக்கும்.

இந்த உரையைப் படிக்கும் பொறுப்பு மட்டுமே ஆளுநருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அதனால் ஆளுநர் உரையில் அரசுக்கு சாதகமான அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் நிலையில், ஆளுநரின் உரைக்கு எதிராக திமுக எதிர்வினையாற்ற வாய்ப்பிலை எனத் தான் கருதுவதாகத் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் ஆளுநரின் உரையில், தமிழ்நாட்டின் சிறப்புகள் குறித்தும், சமூகநீதி, திராவிடம் குறித்த அம்சங்களைக் குறிப்பிட்டும் ஆளுநரையே வாசிக்க வைக்கவும் வாய்ப்பு இருப்பதாக, கார்த்திகேயன் தெரிவித்தார். அதேபோல், இன்றைய உரையில் திராவிட மாடல் போன்ற விஷயங்கள் இருந்தும் ஆளுநர் அதைத் தவிர்த்துவிட்டுப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞரின் மரபு

அப்பாவு

ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் செயல்படக்கூடாது என தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்தில் ஒரு மரபு இருந்துள்ளது. அதைப் பின்பற்றி கடந்த கூட்டத்தொடரில் கூட ஆளுநருக்கு எதிராக உறுப்பினர்கள் பேசிய போது, கருணாநிதியின் மரபு குறித்து சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டுள்ளதாக, பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் பத்திரிகையாளர் கார்த்திகேயன்.

கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு

இந்திய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட 'தமிழ்நாடு' என்ற பெயரைப் பயன்படுத்துவது தவறு என ஆளுநர் பேசியது தவறு என்றும், இது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் அதனால் ஆளுநரின் இந்தப் போக்கை எதிர்த்து தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிளையும் ஜனநாயக அமைப்புகளையும் ஒன்று திரட்டி ஒரே குரலாக ஆளுநருக்கு எதிராக போராட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாலர் கே.பாலகிருஷ்ணன் பேட்டியில் தெரிவித்டருந்தார். இந்நிலையில், ஆளுநருக்கு உரைக்கு எதிராக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ போன்ற கட்சிகளுடன் அதிமுகவையும் இணைத்து போராட திட்டமிட்டு இருந்ததாக, தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். ஆனால் இன்றைய வெளிநடப்பின் போது, ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணியில் இடம்பெற்றருக்கும் கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமகவும் வெளிநடப்பு செய்தன. அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வன் தரப்பில் இருந்து யாரும் வெளிநடப்பு செய்யவில்லை. ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியே வந்த காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை வளாகத்தில் முழக்கமிட்டனர். மேலும் தமிழ்நாடு அரசு வழங்கியிருந்த உரையில் இடம்பெற்றிருந்த, திராவிட மாடல், தமிழ்நாடு போன்ற பெயர்களை திட்டமிட்டே அளுநர் புறக்கணித்து அவரது உரையை வாசித்தாக குற்றச்சாட்டை முன்வைத்து அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

stalin

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த ஆளுநர் உரை

கடந்த ஆண்டு கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆளுநர் உரையின் போது, "தமிழ்நாடு சட்டசபையில் முதல்முறையாக பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசு கொரொனா தொற்றை சிறப்பாக கையாண்டுள்ளது." "திராவிட கலாச்சாரம் என்பது சமூக நீதி மீது கவனம் செலுத்தக் கூடியது. மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் கொள்கையுடன் அரசு செயல்படுறது. முக்கியமாக பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர், ஆதி திராவிடர்களை முன்னேற்றுவதில் திராவிட அரசியல் கொள்கை பெரிய பங்கு வகிக்கிறது," என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/cd1vdy4518eo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் - சமூக வலைதளங்களில் டிரெண்டான ஹேஷ்டேக்

ஆளுநர்

பட மூலாதாரம்,TNDIPR

6 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் நிகழ்த்திய உரையை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் உடனடியாக வெளியேறிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை என்ற பொருளில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி திமுக விமர்சித்துள்ளது.

டிரெண்டாகும் ஹேஸ்டேக்

டிரெண்டாகும் ஹேஸ்டேக்

பட மூலாதாரம்,TWITTER

சட்டப்பேரவையில் இருந்து தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனுடன் #GetOutRavi, #MKStalin போன்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதள பயனர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நண்பகல் 2 மணி வரை #GetOutRavi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி 18 ஆயிரம் டிவீட்கள் வரை பதிவிடப்பட்டு இருந்தன.

ஆளுநரை விமர்சித்த திமுக

திமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை என்ற பொருளில், #GetOutRavi என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

திமுக சார்பாக பதிவிடப்பட்டு இருந்த மற்றொரு பதிவில் ஆளுநரின் உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை படிக்கும் காணொளியுடன் ஒரு திருக்குறளும் மேற்கோள் காட்டப்பட்டு இருந்தது.

 
Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

அரசியல் கட்சிகள் விமர்சனம்

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளரான பிரசாத் சிரிவெல்லா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆளுநரை விமர்சித்து பதிவிட்டு இருந்தார். அவரது பதிவில், "அமைச்சரவைக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் என்றும், ஆளுநர் தனது உரையில் அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணாவின் பெயர்களை புறக்கணித்திருப்பது ஆளுநரின் வெறுப்புணர்வையும், அர்ப்பத்தனத்தையும் காட்டுகிறது," என குறிப்பிட்டு இருந்தார்.

Facebook பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Facebook பதிவின் முடிவு

ஆளுநர் விவகாரம் தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன், "தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாக ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்துள்ளார். ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி, விசிக சார்பாக போராட்டம் நடத்தப்படும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் உரையை தயாரித்து, திமுக அரசு தனது அதிகாரத்தை ஆளுநருக்கு முன்பாக காட்ட முயற்சி செய்வதாக அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் பதிவிட்டுள்ளனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

'ஆளுநர் உரையும் அரங்கேற்றப்பட்ட நாடகமும்' என டிவிட்டரில் தனது விமர்சனத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், "ஆளுநர் பேசிய பின்னர் மரபை மீறி முதல்வர் குறிக்கிட்டு பேசியது தவறானது," என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 5
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 5

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், அந்த கட்சியின் சட்டமன்ற குழுவின் தலைவருமான செல்வபெருந்தகை தனது டிவிட்டர் பதிவில், "பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளுநரை வைத்து போட்டி அரசாங்கம் நடத்தும் சர்வாதிகார போக்கை தமிழ்நாடு உடைத்து இருக்கிறது, இனி வரும் காலங்களில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர் அடக்கி வாசிக்க வேண்டும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 6
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 6

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தனது டிவிட்டர் பதிவில், "ஆளுநர் பதவி தேவையில்லை என்பது தான் எங்கள் நிலைப்பாடு. ஆனால் திமுக அரசுக்கும், ஆளுநருக்கு இடையே இருக்கும் மோதல் போக்கு, ஜனநாயகத்தை பலவீனப்படும்," என பதிவிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 7
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 7

பட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்றைய ஆளுநர் விவகாரம் தொடர்பாக தனது கருத்தை டிவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு அரசால் தயாரித்து வழங்கப்பட்ட உரை ஆளுநர் மாற்றிப் படிப்பது மரபை மீறிய செயல் என்றும், அதே நேரத்தில் நாணயத்தின் இருபக்கமாக ஆளுநரும், அரசு செயல்பட வேண்டும்," என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 8
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 8

தொடர்ந்து ஆளுநர் குறித்தான கருத்துக்களை பலரும் சமுக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cjmvzlxz318o

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநரை திரும்பப் பெறும் வரை போராட்டம்: திருமாவளவன்

KalaiJan 09, 2023 17:59PM
Protest till withdrawal of Governor

தமிழ்நாட்டில் திட்டமிட்ட அரசியல் சதியை ஏற்படுத்த ஆளுநர் ஆர்என் ரவி முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழக அரசின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணாக உள்ளன. அண்மைக்காலமாக அவர் பங்கேற்கிற பொது நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசி வருகிறார். 

குறிப்பாக தமிழகம், தமிழ்நாடு என்பதை விவாதத்திற்கு உட்படுத்தியிருக்கிறார். இந்தநிலையில் சட்டப்பேரவையில் அவர் நடந்து கொண்டவிதம் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. 

ஆளுநரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டே ஆளுநர் உரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அவை மரபுகளுக்கு மாறாக, அரசியல் சட்டப்பூர்வமான கடமைகளுக்கு மாறாக சிலவற்றை தவிர்த்தும் சிலவற்றை சேர்த்தும் வாசித்திருக்கிறார். 

குறிப்பாக திராவிட மாடல் என்ற சொல்லை பயன்படுத்த அவர் விரும்பவில்லை. பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் போன்றவர்களின் பெயர்களை உச்சரிக்காமல் தவிர்த்திருக்கிறார். 

தமிழ்நாடு அமைதிப் பூங்கா, சமூக நீதி, சமத்துவம், மகளிர் மேம்பாடு போன்ற சொற்களை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார். இது ஒரு தவறான முன்னுதாரணம். 

இதற்கு முன் இப்படி நிகழ்ந்ததில்லை. மாநில அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் ஒரு இடைவெளியை ஏற்படுத்த ஆளுநர் முயற்சிக்கிறார். 

இதன்மூலம் திட்டமிட்ட அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ஆளுநர் முயற்சிக்கிறார். இது திட்டமிட்ட அரசியல் சதி என்றே விடுதலை சிறுத்தைகள் கருதுகிறது.

Protest till withdrawal of Governor

முதல்வர் தன் எதிர்ப்பை பதிவு செய்தது அவை மரபுக்கு மாறானது என்றாலும் கூட, தேசியகீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் எழுந்து சென்றது எந்தவகையிலும் நியாயப்படுத்த இயலாது. 

தேசிய அடையாளங்கள் எவையாக இருந்தாலும் அதை மதிக்கவேண்டியது அவரது கடமை. திமுக அரசுக்கு எதிராக மட்டுமில்லை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு எதிராக காய் நகர்த்துகிறார்கள். 

சமூக நீதி அரசியலுக்கான அடிமடியில் கை வைக்கிறார். இனி ஒரு நொடியும் அவர் ஆளுநராக நீடிக்கக்கூடாது. அப்படி நீடித்தால் தமிழக அரசு சுயமாக முடிவு எடுக்க முடியாது. 

எனவே ஒன்றிய அரசு அவரைத் திரும்ப பெற வலியுறுத்தி விசிக சார்பில் ஜனவரி 13 ஆம் தேதி மாலை சைதைப் பகுதியில் இருந்து ஆளுநர் மாளிகை வரை பேரணியாகச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். 

எனவே ஜனநாயக சக்திகள் இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறோம்” என்றார். 

ஆளுநர் தமிழ்நாடு என்றுதானே குறிப்பிட்டு இருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “இது வரவேற்கத்தக்க ஒன்று என்றாலும், மக்களை கவர்வதற்காக அந்த மாநில மொழியில் பேசுவது ஆர்எஸ்எஸ்காரர்களின் சூழ்ச்சிகளில் ஒன்று. 

இது அரசியல் செயல் திட்டமாகத்தான் பார்க்க முடியுமே தவிர மக்கள் உணர்வுக்கு மதிப்பளிப்பதாக கருத முடியாது” என்றார். 

ஆளுநரிடம் முறையாக ஒப்புதல் வாங்காமல் உரை தயாரிக்கப்பட்டதாக வானதி சீனிவாசன் கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். 

அதற்கு, “இது ஆளுநரையே கொச்சைப்படுத்தும்விதமாக இருக்கிறது. ஒப்புதல் இல்லாமல் எப்படி அவர் சட்டசபைக்கு வந்து உரையை வாசித்தார். 

திராவிட மாடல், 10 சதவீத இட ஒதுக்கீடு போன்றவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்கள். இவர் தமிழ்நாட்டு ஆளுநரா, ஆர்எஸ்எஸ் தலைவரா?. மாநில அரசின் நிலைப்பாட்டை தவிர்த்துவிட்டு பேசுவதற்கு ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. 

அம்பேத்கர், பெரியார் பெயரை தவிர்த்துவிட்டு படிப்பதில் அவருக்கு என்ன கூச்சம்? மக்களால் போற்றப்பட்ட தலைவர்களை பின்பற்றும் அரசை தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். 

அந்த தலைவர்களின் பெயரையே சொல்லத் தயங்கும் ஆளுநரால் இந்த அரசோடு எப்படி இணக்கமாக செயல்படமுடியும்” என்றார்.

அவை மரபை முதல்வரும் மீறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறதே என்ற கேள்விக்கு, ஆளுநர் நடந்து கொண்ட போக்கின் எதிர்வினைதான் முதல்வர் நடந்துகொண்டது என்று திருமாவளவன் பதிலளித்தார். 

கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு திமுக வேடிக்கை பார்ப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்து பேசிய திருமாவளவன், “விளம்பரத்திற்காக அவர் எதையாவது பேசுவார். கூட்டணிக் கட்சிகளை தூண்டிவிட்டு பேசும் அளவுக்கு யாரும் உணர்ச்சி இல்லாதவர்களா? என்ன” என்று கேள்வி எழுப்பினார். 

முதலமைச்சர் மரபை மீறி செயல்படுவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளதே என்று கேள்வி எழுப்பியபோது, அதிமுக நாளுக்கு நாள் தேய்மானத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மக்களின் நன்மதிப்பை இழந்து வருகிறார்கள். 

அவர்கள் ஆர்எஸ்எஸ்சின் பி டீமைப் போல நடந்து கொள்கிறார்கள் என்று கூறினார். மேலும் ஆளுநரை திரும்பப் பெறும் வரை ஜனநாயக சக்திகளின் போராட்டம் தொடரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

https://minnambalam.com/political-news/protest-till-withdrawal-of-governor-thirumavalavan/

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் ஆளுனராக வருவதில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ஏன் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் ஆளுனராக வருவதில்லை?

தமிழ் நாட்டிற்கு ஆளுனர்களாக வர வேண்டிய இரு தமிழர்களை தெலுங்கானாவும், மணிப்பூரும் எடுத்துக் கொண்டதால் இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

ஏன் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் ஆளுனராக வருவதில்லை?

தியரிப்படி, ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுனர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்.

பொதுவாக அதே மாநிலத்தை சேர்ந்தவர் ஆளுனராக இருந்தால், அவர் அங்கே அரசியல் செய்ய அல்லது செய்வதாக தோற்றப்பாடு ஏற்படும் என்பதால், தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கு சமாந்திரமாக இன்னொரு உள்ளூர் ஆள் இருக்க கூடாது என்பதாலும் வேற்று மாநிலத்தவரை போடுவார்கள்.

 

ஆனால் நடைமுறையில் எதிர்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஆளுனர்கள் குட்டி தாதாக்கள் போல் நடப்பதுதான் வழமை.

சிலர் இதில் வெற்றி பெறுவர். பலர் மூக்குடைவர்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் சட்ட மரபுக்கு மாறாக அரசு கொடுத்த உரைக்கு ஒப்புதல் அளித்து, அது அச்சிடப்பட்ட பின், வாசிக்கும் போது சிலதை சேர்த்தும், பலதை தவிர்த்தும் குரங்கு சேட்டை விட்டார் ஆளுனர். 

உடனடியாக ஸ்டாலின் ஆளுனர் வாசித்த உரையை அவைகுறிப்பில் இருந்து நீக்கி, அச்சிட்ட உரையை அவை குறிப்பில் சேர்க்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

விடயம் விளங்கியதும், டென்சனாகிய ஆளுனர் தேசிய கீதம் இசைக்க முன் வெளியேறிய காட்சி. 

நடந்தது என்ன? விகடன் சட்டசபை நிருபரின் விபரிப்பு.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் - மரபுகளை மீறியது யார்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் ராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

பட மூலாதாரம்,TNDIPR

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றைய நிகழ்வுகளால் மரபு மீறல் என்ற வார்த்தைகளே மாநில அரசியலில் ஓங்கி ஒலிக்கிறது. மரபுகளை கண்டிப்பாக பின்பற்றியே தீர வேண்டுமா? மரபுகள் இதுவரை மீறப்பட்டதே இல்லையா? 1995-ம் ஆண்டு அப்போதைய ஆளுநர் சென்னாரெட்டி - முதல்வர் ஜெயலலிதா மோதலின் போது நடந்தது என்ன?

உலகெங்கும் ஜனநாயக நாடுகளில் அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் சில நடைமுறைகள் மரபுகளாக வழுவாமல் கடைபிடிக்கப்படுகின்றன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

தேசிய அளவில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்த பிரதமர் மோடி தலைமையிலான வலுவான வலதுசாரி அரசு, முந்தைய அரசுகள் கடைபிடித்த நடைமுறைகளை மாற்ற முயலும் போதெல்லாம், மரபு மீறல் என்ற குற்றச்சாட்டுகள் எழுவது வாடிக்கை. அந்த வரிசையில், தமிழ்நாட்டிலும் மரபு மீறல் என்ற புகார்கள் அண்மைக்காலமாக அதிகமாகி வருகின்றன.

குறிப்பாக, தமிழ்நாட்டில் திமுக ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றிய சிறிது காலத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பிறகு மரபு மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுகின்றன. ஆளுநர் அரசியல் பேசுகிறார், அரசியல் சாசன பதவியில் இருந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்.காரராகவே செயல்படுகிறார் என்பன போன்ற புகார்களை எதிர்க்கட்சிகள் அவ்வப்போது எழுப்பி வருகின்றன.

 

இந்த நிலையில்தான், ஆண்டின் தொடக்கத்தில் கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு தயாரித்து அளித்த உரையில் சில குறிப்பிட்ட பகுதிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்திருப்பது சலசலப்புக்கு வித்திட்டிருக்கிறது. ஆளுநநரின் செயல் மரபு மீறல் என்று ஆளும் தரப்பும், அவையில் ஆளுநர் இருக்கும் போதே அவருக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மரபுகளை மீறிவிட்டதாக அதிமுகவும் குற்றம்சாட்டுகின்றன. இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் எத்தகைய மரபுகள் கடைபிடிக்கப்படுகின்றன? மரபுகள் இதுகாறும் மீறப்பட்டதே இல்லையா? மரபு மீறல்கள் மிகப்பெரிய ஆபத்துக்கு வித்திடுமா? என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.

'குடியரசுத் தலைவர் மரபு மீறினால் 130 கோடி மக்களின் நிலை என்னவாகும்?'

மரபு மீறல் குறித்த புகார்கள் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசுகையில், "அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சாசனத்தில் ஆளுநருக்கென சில அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. அதன்படி, மாநில அரசின் கொள்கைகளை மட்டுமே ஆளுநர் பிரதிபலிக்க வேண்டும். ஆளுநரின் இந்த முடிவுக்கு என்ன காரணம்? அவர் இன்னும் ஆளுநராக நீடிப்பது நியாயமா?" என்று கேள்வி எழுப்பினார்.

ஆர்.எஸ்.பாரதி

பட மூலாதாரம்,DMK OFFICIAL FACEBOOK PAGE

அவர் மேலும் கூறுகையில், "ஆளுநரைப் போலவே குடியரசுத் தலைவரும் விபரீத முடிவை எடுத்தால், மத்திய அரசின் கொள்கைகளுக்கு மாறாக செயல்பட்டால் 130 கோடி மக்களின் எதிர்காலம் என்னவாகும்? இதனை கருத்தில் கொண்டு குடியரசுத தலைவரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆளுநர் ஆர்.என்.ரவி விஷயத்தில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

'மரபை சரியாக பின்பற்றவில்லை என்பது முறையாகாது'

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகரும், இன்றைய சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமனிடம் கேட்ட போது, மரபுகளை மீறுவது சரியல்ல என்றார். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் மரபுகளை மீறியதாக அவர் குற்றம்சாட்டினார்.

"பல ஆண்டுகளாக வழிவழியாக பின்பற்றப்படுவதுதான் மரபு. அதை சரியாக செய்யவில்லை என்பது முறையாகாது. அரசு எழுதி கொடுத்ததை அப்படியே படிக்க ஆளுநர் ஒன்றும் பள்ளி மாணவர் இல்லையே. சட்டமன்ற உரையை பொறுத்தவரை ஓரளவுக்கு ஆளுநரின் முடிவே இறுதியானது. மற்றபடி இவர்கள் கொடுத்ததில் எதை படிக்க ஒப்புக் கொண்டார், எதை ஒப்புக்கொள்ளவில்லை என்பது நமக்கு தெரியாது. 90% சரியாக இருந்தால் 10% விஷயங்களை பொருட்படுத்த மாட்டார்கள்" என்று அவர் கூறினார்.

'இது மரபு மீறல் அல்ல; விதிமீறல்'

மரபு மீறல் குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்டேசனிடம் கேள்விகளை முன்வைத்த போது, "மரபு மீறல் என்பது பொதுவான வார்த்தை, உண்மையில் இது விதிமீறல்," என்றார். "ஆளுநரின் செயல்பாடு விதிமீறல், நேரடியாக சட்ட மீறல். ஆளுநர் ஆர்.என்.ரவி தனி நபராக சொந்தக் கருத்துகளை பேசலாம். ஆனால், ஓர் ஆளுநராக அதனை செய்யக் கூடாது. தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகள் கூடியுள்ள சட்டப்பேரவையில் அரசின் குரலாகவே அவர் ஒலிக்க வேண்டும். அவரது சொந்த கருத்துகளை தெரியப்படுத்தும் இடம் அதுவல்ல" என்றார் அவர் காட்டமாக.

"தி.மு.க.வின் சித்தாந்தத்தை பேசுமாறு ஆளுநரை நிர்பந்திப்பதா?"

வானதி சீனிவாசன்

இதற்கு மாறாக, பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசனோ, "ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் பிரதிநிதி," என்கிறார்.

"தமிழக சட்டப்பேரவையில் மரபுப்படி ஆளுநர் உரையாற்றியுள்ளார். அரசியல் சாசனம் அவருக்கு அளித்த கடமைகளின்படியே செயல்பட்டு வருகிறார். ஆளுநர் பதவியை பா.ஜ.க அரசு புதிதாக உருவாக்கவில்லை. முன்கூட்டியே திட்டமிட்டு, கூட்டணி கட்சிகளை ஏவி விட்டு, ஆளுநரை அவமதித்துள்ளனர்," என்று குற்றம்சாட்டியுள்ளார்.

'வாஜ்பாய் அரசு நியமித்த கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்துக'

ரவிக்குமார்
 
படக்குறிப்பு,

ரவிக்குமார்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான ரவிக்குமாரிடம் மரபு மீறல் சர்ச்சை குறித்து கருத்து கேட்டோம். "கோயிலுக்குள் செருப்பு அணிந்து செல்லக் கூடாது என்பது காலம் காலமாக நாம் கடைபிடிக்கும் பழக்கம். மரபுகளில் ஒன்று. அதற்காக, கோயிலுக்குள் செருப்பு அணிந்து செல்லும் ஒருவரை நாம் தண்டிக்க முடியாது, கண்டிக்க மட்டுமே முடியும்" என்றார் அவர்.

"1970-களில் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சர்க்காரிய கமிஷன், ஆளுநரை தேர்வு செய்யவும், தகுதிகளை நிர்ணயிக்கவும் குழு ஒன்றை அமைப்பதோடு, மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்யவும் பரிந்துரை செய்திருந்தது. அதற்கும் மேலாக, வாஜ்பாய் அரசு அமைத்த வெங்கடாச்சலையா கமிஷனோ, ஆளுநருக்கு மசோதாவை அனுப்பும் நடைமுறையையே ரத்து செய்ய பரிந்துரைத்தது." என்று ரவிக்குமார் சுட்டிக்காட்டினார்.

"ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோத செயல். ஆளுநர்களின் செயல்பாடு குறித்து விவாதிக்க பா.ஜ.க. அல்லாத மாநில முதலமைச்சர்களின் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்ய வேண்டும். மாநில சுயாட்சியை எப்போதும் ஓங்கி ஒலிக்கும் திமுகவே, அதற்கான முன்னெடுப்புகளை முன்னின்று செய்ய வேண்டும்," என்று அவர் உறுதியுடன்.

சென்னாரெட்டி-ஜெயலலிதா மோதல்

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்

"ஆளுநர் உரையில் சில பகுதிகள் விடுபடுவது இதுவே முதல் முறையல்ல" என்று கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷியாம், அதற்கு சான்றாக சில வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டுகிறார்.

"ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், 1994-ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த அப்போதைய ஆளுநர் சென்னாரெட்டி அழைக்கப்படவே இல்லை. அடுத்த ஆண்டில், அதாவது 1995-ம் ஆண்டில் தனது உரையில் சில பகுதிகளை ஆளுநர் சென்னாரெட்டி தவிர்க்க, சபாநாயகர் காளிமுத்துவோ, ஆளுநர் சில இடங்களை விட்டுவிட்டாலும் அவர் முழுமையாக வாசித்து விட்டதாகவே பொருள் என்று கூறிவிட்டார்" என்பதை ஷியாம் நினைவூட்டினார்.

"அரசு தயாரித்து அளித்த உரைக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்ததும், அதன் பிரதி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே தரப்பட்டுவிடும். அதன் பிறகு அதில் எந்த மாற்றத்தையும் யாராலும் தன்னிச்சையாக செய்ய முடியாது. மாற்றம் தேவையென்றால், சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியே செய்ய முடியும்." என்று குறிப்பிட்ட அவர், ஆளுநரின் உரை மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் திருத்தத் தீர்மானம், கண்டனத் தீர்மானம் போன்றவற்றை சுட்டிக்காட்டினார்.

"ஆளுநர் உரை என்பது வெறும் உரையுடன் முடிந்து விடுவது அல்ல. ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறவில்லை என்றால் ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவே பொருள்படும். அரசுக்கு தர்மசங்கடம் தரும் வகையில் ஆளுநரின் உரை இருக்கும் பட்சத்தில், ஆளும் தரப்பினரின் அதிருப்தி எழுவது இயல்பு என்பதால் தீர்மானம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்படும். ஆகவே, ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தது அவசியமே தவிர, மரபு மீறலாக கொள்ள முடியாது" என்பது மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாமின் கருத்து.

https://www.bbc.com/tamil/articles/cx0lnq314dko

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநர் - முதலமைச்சர் மோதல் தொடர்ந்தால் அடுத்து என்ன நடக்கும்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 10 ஜனவரி 2023, 03:33 GMT
    புதுப்பிக்கப்பட்டது 10 ஜனவரி 2023, 04:23 GMT
ஆளுநர்

பட மூலாதாரம்,TNDIPR

தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையிலான மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியிருக்கின்றன. இனி என்ன நடக்கக்கூடும்?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து ஆளும் தரப்புடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்துவரும் நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் திங்கட்கிழமையன்று நடந்த நிகழ்வுகள், இந்த மோதலின் உச்சகட்டமாக அமைந்துள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றதிலிருந்தே, அவருக்கும் ஆளும் தி.மு.க. அரசுக்கும் இடையிலான உறவு சீராக இருக்கவில்லை. அவர் ஆளுநராக இருக்கும் இந்த ஒன்றேகால் ஆண்டிற்குள் இரண்டு முறை அவரை மாற்ற வேண்டுமென தி.மு.க. கோரிக்கை விடுக்கும் அளவுக்கு உறவு சீர்கெட்டிருக்கிறது.

ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்ற வேண்டுமென ஒரு முறை மக்களவையிலேயே தி.மு.கவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு பேசினார். பிறகு, கடந்த நவம்பர் மாதத்தில்  குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்குச் சென்ற தி.மு.க. எம்.பிக்கள், ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்றவேண்டுமென மனு ஒன்றை அளித்தனர்.

 

இந்தியாவில் ஆளுநர் என்ற பதவி எப்போதுமே சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் மூலம் மத்திய அரசு நெருக்கடி கொடுப்பது இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே நடந்துவருகிறது. ஆனால்,  2014க்குப் பிறகு இந்த மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியிருக்கின்றன.

மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையிலான மோதல்கள் தினசரி நடக்கின்றன.  ஆளுநர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பது அல்லது சட்ட மசோதாக்களை நிறுத்திவைப்பது, ஆய்வுகளுக்குச் செல்வது, மாநில அரசுகளின் நியமனங்களை நிறுத்திவைப்பது என இந்த மோதல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைப் பொறுத்தவரை, தி.மு.க. அரசின் திராவிட மாடல் என்ற பெருமிதம், இரு மொழிக் கொள்கை, இந்தி எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு போன்றவை உவப்பிற்குரியதாக இல்லை. ஆகவே, கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அரசை விமர்சிக்க ஆளுநர் தவறுவதில்லை.

கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோயம்புத்தூரில் கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்த சம்பவம் குறித்த விசாரணையை மாநில அரசு 26ஆம் தேதி தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றியது. இருந்தபோதும் அக்டோபர் 28ஆம் தேதி ஒரு விழாவில் பேசிய ஆளுநர், அந்த வழக்கை என்ஐஏவுக்கு மாற்றுவதை மாநில அரசு தாமதம் செய்ததாக குறிப்பிட்டார்.

இது ஒரு உதாரணம்தான். பதவியேற்றதிலிருந்தே மாநில அரசின் பல்வேறு செயல்பாடுகளோடு தொடர்ந்து முரண்பட்டு வருகிறார் ஆளுநர்.  குறிப்பாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள்  ஆளுநரின் ஒப்புதலைப் பெறக் காத்திருக்கின்றன. நீட் விலக்கு மசோதா, பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் இருப்பதை நீக்கிவிட்டு, மாநில முதல்வரையே வேந்தர்களாக இருக்கச் செய்வது பற்றிய மசோதாக்கள் இவற்றில் முக்கியமானவை.

பல முக்கிய விவகாரங்களில் மாநில அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடுகளுக்கு மாறாக, ஆளுநர் நிலைப்பாடு எடுப்பதும் அதனை வெளிப்படையாக தெரிவிப்பதும் ஆளும்கட்சியை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை விவகாரம் இதற்கு ஒரு நல்ல உதாரணம். புதிய கல்விக் கொள்கையை தற்போதைய தி.மு.க. அரசு மட்டுமல்லாமல், முந்தைய அ.தி.மு.க. அரசுமே நிராகரித்தது. ஆனால், அவ்வப்போது பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களின் கூட்டத்தை நடத்தும் ஆளுநர் ஆர்.என். ரவி, புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்தும்படி கூறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

மாநில அரசின் நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், அதனை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறது தமிழ்நாடு சட்டப்பேரவை. அது இப்போது மீண்டும் ஆளுநரின் பரிசீலனையில் இருக்கிறது.

ஆளுநர் ரவி

பட மூலாதாரம்,TNDIPR

அதேபோல, பா.ஜ.கவின் பார்வையிலான வரலாற்றை பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசுவதும் பல முறை சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. கடந்த ஜூலை மாதம் வேலூர் சிப்பாய் புரட்சி தினத்தன்று பேசிய ஆளுநர், "ஆரியம், திராவிடம் என்பது இனம் சார்ந்தது அல்ல. அது இடம் சார்ந்தது மட்டும்தான். விந்திய மலைக்கு வடக்கில் உள்ளோரை ஆரியர்கள் என்றும், தெற்கில் உள்ளவர்களை திராவிடர்கள் என்றும் அப்போது பிரித்தனர். அதுவும் ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டதே" என்று பேசினார்.

இதன் உச்சகட்டமாகத்தான். கடந்த புதன்கிழமையன்று ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில்  பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, "தமிழகத்தில் துரதிர்ஷ்டவசமாக பின்னோக்கி இழுக்கும் அரசியல் நடைபெறுகிறது. அது நாம் திராவிடர்கள் என்று பிரபலப்படுத்துகிறது.   இந்த தேசம் முழுமைக்குமான எதை முன்னெடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிக்கும். இது வாடிக்கையாகிவிட்டது.  இவற்றை உடைக்க வேண்டும். சொல்லப்போனால் தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்" என்று பேசினார். இது மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.

இந்த நிலையில்தான், சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் சில பகுதிகளை வாசிப்பதைத் தவிர்த்து, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் ஆளுநர். பா.ஜ.கவினரைப் பொறுத்தவரை, ஆளுநர், சில பகுதிகளை வாசிப்பதைத் தவிர்த்தது தவறில்லை, மாறாக, முதலமைச்சர் அந்தப் பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டுமென தீர்மானம் கொண்டுவந்தது தவறு என்கிறார்கள்.

"ஆளுநர் அவர்களின் கருத்துக்களை சட்டசபைக் குறிப்பிலிருந்து நீக்கவோ, சேர்க்கவோ,  தமிழக சட்டசபை சபாநாயகருக்கு அதிகார வரம்பு உள்ளதா?  கவர்னர் அவர்கள் பேசிய பின்னர், மரபிற்கு புறம்பாக முதல்வர் குறுக்கிட்டுப் பேசியதும், ஆளுநர் உரையை சட்டசபைக் குறிப்பில், எப்படி இடம்பெறவேண்டும் என்று வலியுறுத்துவதும் முற்றுலும் தவறானது.

ஆளுநர் ரவி

பட மூலாதாரம்,TNDIPR

ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தில், ஆளுநர் உரையை படித்த பிறகு முதல்வர் பேசுவது மரபல்ல, ஆனால் ஆளுநர் அவையில் இருக்கும் போதே, ஆளுநர் மாண்புக்கு மரியாதை செலுத்தாமல், ஒலிபெருக்கி வழங்கப்படாத போதும் முதல்வர் பேசுவது தவறான முன்னுதாரணம், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கண்ணியத்துக்கு மாறாக முதல்வரே நடந்துகொண்டதால், ஆளுநரே அவையைவிட்டு வெளியேற நேரிட்டது." எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசிய தி இந்து குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம், ஆளுநர் உடனடியாகத் திரும்பப்பெறப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

"இவர் ஏதேதோ பேசுகிறார். தமிழ்நாடு என்பது அரசியல் சாஸனப்படியான பெயர். ஆனால், தமிழ்நாடு என இருக்கக்கூடாது என்கிறார். இன்று மிக மோசமாக நடந்துகொண்டிருக்கிறார். அவர் கவர்னராக இருக்க லாயக்கில்லாதவர். அவர் உடனடியாகத் திரும்பப்பெறப்பட வேண்டும். அவர் ஆளுநர் உரையில், சில விஷயங்களைப் படித்துவிட்டு, சில விஷயங்களை விட்டுவிட முடியாது. அவருக்கு தமிழ்நாட்டின் கலாச்சாரம், மொழி, சூழல், அரசியல் ஏதும் புரியவில்லை. தில்லியிலிருந்தே அவருக்கு உத்தரவு வருகிறதா, இல்லை இவரே பேசுகிறாரா என்பது தெரியவில்லை. எப்படியிருந்தாலும் அவர் திரும்பப்பெறப்பட வேண்டும்" என்கிறார் என். ராம்.

ஆளுநரின் அதிகாரம் என்பது மிகக் குறுகியது. அது பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்கிறார் அவர்.

என் ராம்

பட மூலாதாரம்,N RAM

ஆளுநர் - முதல்வர்களின் அதிகாரங்கள் குறித்த கவலைகள், மோதல்கள்

இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பே, ஆளுநர்களின் அதிகாரம் குறித்த கவலைகள் தமிழ்நாட்டில் முதலமைச்சர்களாகப் பதவியேற்றவர்களுக்கு இருந்திருக்கின்றன. 1935ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டப்படி சென்னை மாகாணத்தில் தேர்தல் நடந்து முடிந்ததும் புதிய முதல்வராக சி.ஆர். ராஜகோபாலாச்சாரியார் பதவி வகிப்பார் என காங்கிரஸ் முடிவுசெய்தது. 

அப்போது சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த எர்ஸ்கின் பிரபு எந்த அளவுக்கு அரசுக்கு ஒத்துழைப்பார் என்ற கவலை ராஜகோபாலாச்சாரியாருக்கு இருந்தது. "வைஸ்ராயோ அல்லது அயல் விவகார மந்திரியோ உத்தரவிட்டாலொழிய கவர்னரின் விசேஷ அதிகாரங்கள் பிரயோகிக்கப்படமாட்டாது என்று எழுத்து மூலம் உறுதியளிக்க முடியுமா?" என்று பதவி ஏற்கும் முன்பே ஆளுநர் எர்ஸ்கினிடம் கேட்டார் ராஜகோபாலாச்சாரியார். இது தொடர்பாக, வைஸ்ராய் லின்லித்கோவிடம் ஆலோசனை கேட்டபோது, அம்மாதிரி வாக்குறுதியை அளிக்க முடியாது எனக் கூறினார்.

அதற்குப் பிறகு, லிபரல் கட்சித் தலைவர் ஸ்ரீநிவாஸ சாஸ்திரியிடம் ஒரு காபந்து அரசையாவது அமைக்க முடியுமா எனக் கேட்டார் எர்ஸ்கின். அவர் அதனை ஏற்கவில்லை. அதற்குப் பிறகு கே.வி. ரெட்டி தலைமையில் அமைந்த அமைச்சரவை நீண்டகாலம் நீடிக்கவில்லை.

இந்த நிலையில், அயல் விவகார மந்திரி ஸெட் லாண்ட் ஒரு அறிவிப்பை செய்தார். அதன்படி, "கவர்னர் தனக்கு விசேஷமாக வழங்கப்பட்டுள்ள குறுகிய அளவு பொறுப்புகளை மீறி ஒரு ராஜதானியின் அன்றாட நிர்வாகத்தில் தலையிட அதிகாரம் பெற்றுள்ளார் என்றோ, அவருக்கு அந்த உரிமை உண்டு என்றோ அல்லது சுதந்திரம் இருக்கிறது என்றோ கூறப்படுவதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது" என்று அந்த அறிவிப்பு கூறியது. இதனையடுத்தே, நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவைகள் பதவியேற்றன. 

ஆளுநர்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள் இருக்கும் என்ற பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே, அன்றாட அலுவல்களில் ஆளுநர்கள் தலையிடக்கூடாது என்ற உறுதியைப் பெற்ற பிறகே, மாநில அரசுகள் பதவியேற்ற நிகழ்வை இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில், ஆளுநர்களுக்கும் முதலமைச்சர்களுக்கும் இடையில் மிக மோசமான மோதல் நடந்த காலகட்டம்தான் முதலமைச்சர் ஜெயலலிதாவும் ஆளுநர் சென்னா ரெட்டியும் மோதிக்கொண்ட காலகட்டம்.  

ஜெயலலிதா

பட மூலாதாரம்,GETTY IMAGES

1991 - 96 காலகட்டத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அப்போதைய ஆளுநராக இருந்த டாக்டர் மாரி சென்னா ரெட்டி இதுபோல எப்படிச் செயல்படுவதெனக் காட்டியிருக்கிறார்.

பல தருணங்களில் தமிழ்நாடு அரசின் செயலர்களை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து நிர்வாகம் குறித்து கேட்டறிந்திருக்கிறார். தலைமைச் செயலர் ஹரி பாஸ்கரின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான கோப்பை மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியபோது, அதில் கையெழுத்திட மறுத்தார் சென்னா ரெட்டி. 

ஜெயலலிதா அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துவந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரை பல முறை சந்தித்தார். அரசு நிர்வாகம் தொடர்பான தகவல்கள் தனக்குத் தெரிவிக்கப்படுவதில்லை என வெளிப்படையாக குற்றம்சாட்டினார். ஆளுநர் - முதல்வர்கள் இடையிலான மோதலின் கறுப்புப் பக்கங்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த மோதல்கள் நீண்டன. 

அதேபோல, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழ்நாடு ஆளுநராகப் பதவிவகித்த பன்வாரிலால் புரோகித், மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல நடவடிக்கைளில் இறங்கினார். பல மாவட்டங்களுக்கு அவரே நேரடியாக சென்று ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். அந்தத் தருணத்தில் இருந்த தமிழ்நாடு அரசுக்கு இவை தர்மசங்கடத்தை ஏற்படுத்தினாலும், ஜெயலலிதாவுக்குப் பிந்தைய அரசு நீடிக்க வேண்டும் என்ற கவலை இருந்ததால் அது மோதலாக உருப்பெறவில்லை.

அவருக்குப் பிறகு, ஆளுநரான ஆர்.என். ரவியும் மாநிலத்தின் நிர்வாகத்தில் தானும் முடிவெடுக்க முடியுமெனக் காட்ட விரும்புகிறார். தமிழ்நாட்டின் சூழல் ஆர்.என். ரவிக்குப் புரியவில்லை என பலர் கருதினாலும், அதைத் புரிந்துகொள்ளும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர்களை அவர் தொடர்ந்து சந்தித்து, மாநில அரசியல் குறித்து அவர்களுடைய கருத்துக்களை பெற்றுவருகிறார். 

இருந்தாலும் சமூகவலைதளங்கள் தீவிரமாக இயங்கும் இந்தக் காலகட்டத்தில் அவரால் எந்த அளவுக்கு மாநில அரசுக்கு எதிராகச் செயல்பட முடியும் என்பது சந்தேகம்தான். அப்படி நடக்கும் பட்சத்தில் தி.மு.க. தனது கூட்டணிக் கட்சிகளை வைத்து, ஆளுநருக்கு எதிரான பொதுக் கருத்தை உருவாக்க முயலும். தமிழ்நாடு சட்டப்பேரவையில், திங்கக்கிழமையன்று தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளே அதற்கு உதாரணம்.

இது தவிர, ஆளுநருடைய நடவடிக்கைகள் எந்த அளவுக்கு மாநில பா.ஜ.கவுக்கு பலனளிக்கும் என்பதும் கேள்விக்குறிதான். "ஆர்.என். ரவியின் நடவடிக்கைகள் ஒருபோதும் மாநில பா.ஜ.கவுக்கு பலனளிக்காது. மக்களிடம் வெறுப்பைத்தான் ஏற்படுத்தும்" என்கிறார் என். ராம்.  இந்தக் கருத்தை ஏற்பதாக இருந்தால், தி.மு.க. அரசுக்கு நிர்வாக ரீதியான நெருக்கடி தருவதைத் தவிர, வேறு எதையும் சாதிக்காது.

https://www.bbc.com/tamil/articles/c034kkl983jo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.