Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனையிறவில் ஆடும் சிவன் - நிலாந்தன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனையிறவில் ஆடும் சிவன் - நிலாந்தன் 

spacer.png

 

யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் ஆனையிறவுக்கு அருகே,கண்டி வீதியில் தட்டுவன்கொட்டிச் சந்தியில் ஒரு நடராஜர் சிலை நிறு வப்பட்டிருக்கிறது. கரைசிப்பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு 27 அடி உயரமான அந்தச் சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இலங்கைத்தீவில் உள்ள மிக உயரமான நடராஜர் சிலை அதுவென்று கூறலாம்.

2009க்கு பின் ஆனையிறவுப்  பிரதேசம் யுத்த வெற்றிவாதத்தின் உல்லாசத் தலங்களில் ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் பண்பாட்டு தலைநகரமாகிய கவர்ச்சிமிகு யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் எவரும் முதலில் ஆனையிறவில் அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு யுத்த வெற்றி வளாகங்களைக் கடந்துதான் உள்ளேவர வேண்டும். அதாவது யுத்த வெற்றி உங்களை வரவேற்கிறது என்று பொருள். இது எங்களால் வெற்றி கொள்ளப்பட்ட நிலம் என்று பொருள்.

யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் பொழுது குடாநாட்டின் கழுத்துப் பகுதியில் முதலில் தென்படுவது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தோல்வியுற்ற படை நடவடிக்கை ஒன்றின்போது பயன்படுத்தப்பட்ட உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரு கவச வாகனம். அதற்கருகில் அந்தக் கவச வாகனத்தை தடுத்து நிறுத்திய படை வீரர் ஒருவரின் நினைவுச் சின்னம். அதோடு சேர்த்து ஒரு விருந்தகம். அதைச் சற்றுத் தாண்டிச் சென்றால் வலது பக்கத்தில் கடலேரியின் பின்னணியில் பிரம்மாண்டமான ஒரு யுத்த வெற்றிச்சின்னம் உண்டு. இலங்கைத்தீவை இரண்டு கைகள் ஏந்தியிருப்பது போன்ற அந்த யுத்த வெற்றிச் சின்னந்தான் யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் வெளியாட்களை வரவேற்கின்றது. அதாவது யுத்த வெற்றி உங்களை வரவேற்கிறது என்று பொருள்.

spacer.png

இவ்வாறு கடலேரியின் உப்புக் காற்றில் எப்பொழுதும் யுத்த வெற்றி வாடை வீசும் ஒரு பிரதேசத்தில்,தமிழ் மக்களின் வழிபாட்டுருக்களில் ஒன்றாகிய நடராஜர் சிலையை நிறுவியமை என்பது அரசியல் அர்த்தத்தில் கவனிக்கப்பட வேண்டியது.

அச்சிலையின் அழகியல் அம்சங்களைக் குறித்தும் அது பார்த்த உடனேயே கையெடுத்துக் கும்பிடக்கூடிய ஒரு சிலையாக இருக்கிறதா இல்லையா என்பதைக் குறித்தும் பின்னர் தனியாக ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறேன். இன்று இக்கட்டுரையில் நான் கூறவருவது அச் சிலைக்குப் பின்னால் இருக்கும் பிரதேச,பிராந்திய மற்றும் கட்சி அரசியலைப் பற்றி.

நாவற்குழிச் சந்தியை போலவே ஆனையிறவிலும் அதாவது யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் தமிழ் மக்களை அடையாளப்படுத்தும் கட்டுமானங்கள் அவசியம். அரசாங்கம் அதைத் திட்டமிட்டு யுத்தவெற்றி வாசலாகக் கட்டியெழுப்பி வைத்திருக்கிறது. தமிழ்மக்கள் அதனை ஒரு மரபுரிமை வாசலாக மாற்ற வேண்டும். அந்த அடிப்படையில் சிந்தித்து கரைச்சி பிரதேச சபை முடிவெடுத்திருந்திருந்தால் அது வரவேற்கத்தக்கதே.

நாவற்குழியில் ஒரு புத்த விகாரை கட்டியெழுப்பப்பட்டுவரும் ஒரு நிலக்காட்சியில்,சிவபூமி அறக்கட்டளையின் அருங்காட்சியகமும் திருவாசக அரண்மனையும் கட்டப்பட்டிருப்பதுபோல, ஆனையிறவிலும் யுத்தவெற்றி வாசலை எதிர்நோக்கி ஒரு மரபுரிமை வாசலை சிருஷ்டிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு.


spacer.png

 

ஆனால் அந்த மரபுரிமைக் கட்டமைப்பானது எப்படி அமைய வேண்டும்? அது சிங்கள பௌத்த சின்னங்களுக்கு எதிராக சைவச் சின்னங்களை முன் நிறுத்தும் ஒன்றாக அமைய வேண்டுமா? அல்லது தமிழ்த் தேசியத்தின் மதப்பல்வகைமையை பிரதிபலிக்கும் ஒன்றாக அமைய வேண்டுமா?

சிவபூமி அறக்கட்டளை ஒரு சமய நிறுவனம். அது தான் போற்றும் ஒரு சமயத்தை முன்னிறுத்தும். ஆனால் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அப்படிச் சிந்திக்கத் தேவையில்லை. மேலும் பொதுவெளிச் சிற்பம் வேறு, மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் விக்கிரகம் வேறு. இரண்டையும் ஒன்றாகக் கண்டு மயங்கும் பொதுப்புத்தியை அரசியல்வாதிகள் இலகுவாகக் கையாள்வார்கள்.

பிரயோக தேசியவாதமும் நடைமுறையில்  பொதுப்புத்தியின் மீதே கட்டியெழுப்பப்படுகிறது. ஆனால்,தேசியவாதத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்று மேற்கத்திய அறிஞர்கள் கூறுவார்கள். அதாவது ஜனநாயக அடிச்சட்டத்தின் மீதுதான் ஒரு மக்களைத் திரளாகக்  கூட்டிக் கட்டவேண்டும். இதை இன்னும் ஆழமாக சொன்னால், ஒருவர் மற்றவருக்கு சமம் என்ற அடிப்படையில் மக்களைத் திரட்டவேண்டும். இதை இன்னும் நடைமுறை வார்த்தைகளில் சொன்னால், ஒரு மதம் இன்னொரு மதத்திற்கு சமம்; ஒரு பிரதேசம் இன்னொரு பிரதேசத்துக்கு சமம்; யாரும் பிரதேச ரீதியாகவோ சாதி ரீதியாகவோ மத ரீதியாகவோ ஒருவர் மற்றவருக்கு மேலானவரும் அல்ல; கீழானவரும் அல்ல என்ற அடித்தளத்தின் மீதுதான் ஒரு மக்களைத் திரளாகக் கூட்டிக்கட்ட வேண்டும். எனவே தேசியவாதம் எனப்படுவது மதப்பல்வகைமையின் மீதே கட்டியெழுப்பப்பட வேண்டும். மத மேலாண்மையின் மீது அல்ல. இந்த அடிப்படையில் சிந்தித்து தமிழ்மக்கள் தமது மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்கவும் முன்நிறுத்தவும் வேண்டும்.

spacer.png

ஒவ்வொரு மதப்பிரிவும் அதனதன் மதச்சின்னங்களை முன்னிறுத்துவதில் தவறில்லை. அது அந்த மதத்தின் கூட்டுரிமை. ஆனால் ஒரு மதம் இன்னொரு மதத்தை அவமதிக்கும்போது அல்லது அந்த மதச் சின்னங்களை அழிக்கும்போது அல்லது ஒரு மதத்தின் மேலாண்மையை நிறுவ முற்படும் போதுதான் பிரச்சினை வருகிறது. அதாவது மதப்பல்வகைமை வேறு ;மத மேலாண்மை வேறு.

அண்மை ஆண்டுகளாக தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பிலும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இந்திய மத்திய அரசை அணுகுவதற்கு மதத்தை ஒரு வாகனமாக பயன்படுத்த முயற்சிப்பது தெரிகிறது. இதில் சில தமிழ் அரசியல்வாதிகளும் அடங்குவர். இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மதசார்பு நிலைப்பாட்டைப் பின்பற்றி அதன்மூலம் இந்திய மத்திய அரசாங்கத்தை அணுக முடியுமா என்று மேற்படி தரப்புக்கள் சிந்திக்கின்றன. பாரதிய ஜனதா அரசாங்கமானது இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று. எனவே ஈழத் தமிழர்கள் அந்த அரசாங்கத்தைத்தான் அணுக வேண்டும். ஆனால் அதன் பொருள் இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் பாரதிய ஜனதா பின்பற்றும் அதே நிகழ்ச்சி நிரலை ஈழத் தமிழர்களும் பின்பற்ற வேண்டும் என்றில்லை.

இப்பிராந்தியம் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துட் காணப்படுகிறது. இந்தியாவை மீறி எந்த ஒரு வெளிச்சக்தியும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வைத் தரமுடியாது. இப்பிராந்திய யதார்த்தத்துக்கூடாக சிந்திக்கும்போது ஈழத்தமிழர்கள் பாரதிய ஜனதா அரசாங்கத்தைத்தான் அணுகவேண்டும். ஆனால் அதன் பொருள் தமிழ் தேசியத்தின் மதப்பல்வமையை பலியிட வேண்டும் என்பதல்ல.

ஈழத்தமிழர்களின் நவீன அரசியல் எனப்படுவது மதப்பல்வகமையின் மீதே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. பெருமளவு இந்துக்களைக் கொண்ட ஈழத் தமிழ்ச் சமூகத்தில் முதலில் தோன்றிய இளையோர் அமைப்பாகிய யாழ்ப்பாண வாலிபர் முன்னணியை உருவாக்கியது(1924) ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவராகிய கன்டி பேரின்பநாயகந்தான்.

தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டபோது, அதன் கால்கோல் விழா 1949ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி மாவட்டபுரம் கந்தசாமி கோவில் முன்றலில் சீலஸ்ரீ துரைசாமிக் குருக்களின் ஆசியுடன் இடம் பெற்றது. இதுதொடர்பான தகவல்களை தமிழரசுக் கட்சியின் வெள்ளி விழா மலரில் காணலாம். அக்கட்சியின் தலைவராகிய செல்வநாயகம் ஒரு புரட்டஸ்தாந்துக் கிறிஸ்தவர். செல்வநாயகத்தை ஈழத்தமிழர்கள் தந்தை என்றும் ஈழத்துக் காந்தி என்றும் அழைத்தார்கள். தந்தை செல்வா இறந்தபோது அவருடைய உடல் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை. இந்து முறைப்படி வேட்டி அணிவிக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. தன்னைத் தலைவராக தெரிந்தெடுத்து,தந்தை என்று அழைத்த பெரும்பான்மை இந்து வாக்காளர்களை கௌரவிப்பதற்காக செல்வநாயகம் அவ்வாறு கேட்டுக் கொண்டதாக கருதப்படுகிறது.

spacer.png

எனவே ஈழத்தமிழர்களின் நவீன அரசியலானது மதப் பல்வகமையின் மீதுதான் கட்டியெழுப்பப்பட்டது. அதை இப்பொழுது ஒரு மதத்துக்கு மட்டும் உரியதாக குறுக்கக் கூடாது. குறிப்பாக நவீன யாழ்ப்பாணம் எனப்படுவது திருச்சபைகளுக்கும் ஆறுமுகநாவலர் போன்ற மதப் பெரியார்கள் மற்றும் இந்துபோர்ட் போன்ற இந்து அறக்கட்டளைகளுக்கும் இடையிலான போட்டியின் திரண்ட விளைவுதான். ஆனால் அந்தப் போட்டியானது மத விரோதமாக,மோதலாக மாறவில்லை.

ஆனால்,2009க்குப் பின் எந்த ஒரு மதத் தலைவரும் துணிந்து கதையாத ஒரு வெற்றிடத்தில், ஒற்றைக் குரலாக ஒலித்த, முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களுடைய அதே மறை மாவட்டத்தில் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையிலான முரண்பாடு தூக்கலாகத் தெரிவது தமிழ்த் தேசியத் திரட்சிக்குப் பாதகமானது. தமிழ்த் தேசியத்தை மதப்பல்வகைமையின் மீது கட்டியெழுப்ப விரும்பும் எல்லாச்  சக்திகளும் அந்த முரண்பாட்டைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.

அவ்வாறு  அகமுரண்பாடுகளைத்  தீர்க்கும் சக்திமிக்க சிவில் அமைப்புகளோ கட்சிகளோ இல்லாத அரசியல் மற்றும் ஆன்மீக வெற்றிடத்தில், இன்னொருபுறம், சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் “எல்லைக் கற்களாக” புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருமோர் ராணுவஅரசியற் சூழலில், தமிழ் மக்கள் மத்தியிலும் இரவோடிரவாகச் சிலைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. இவ்வாறான சிலை அரசியலின் பின்னணியில்,ஆனையிறவில் நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

சிவ நடனத்துக்கு  ஆன்மீக வியாக்கியானம் மட்டுமல்ல,பௌதீகவியல் வியாக்கியானமும் உண்டு. அது ஒரு பிரபஞ்ச நடனம் என்று வர்ணிக்கப்படுகிறது(cosmic dance). ஆனையிறவுச் சிவனுக்கு மேலதிகமாக ஓர் அரசியல் பரிமாணமும் உண்டு. உப்புக் காற்றில் யுத்த வெற்றிச் சின்னங்களின் மத்தியில்,சிவனார் யாருடைய பஜனைக்கு ஆடப்போகிறார்?

http://www.nillanthan.com/5941/

  • கருத்துக்கள உறவுகள்

 

பாவம் நிலாந்தன்.  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.