Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எய்ட்ஸ், புற்றுநோய்க்கு ஒரே சிகிச்சையில் தீர்வு - அமெரிக்க மருத்துவர்கள் சாதித்தது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எய்ட்ஸ் நோய்க்குத் தீர்வு

பட மூலாதாரம்,CORTESA CITY OF HOPE

 
படக்குறிப்பு,

கலிபோர்னியாவில் சிட்டி ஆஃப் ஹோப் கேன்சர் சென்டரில் எட்மண்ட்ஸ் 2019ம் ஆண்டு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையைப் பெற்றார்.

2 மணி நேரங்களுக்கு முன்னர்

2022 ஜூலையில், எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு அமெரிக்க நோயாளி, நோயிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக அறிவிக்கப்பட்டபோது, எச்.ஐ.வி. வைரஸுக்கு மருந்தைக் கண்டுபிடிப்பதில் ஒரு பெரிய திருப்புமுனையாக உலகம் முழுவதும் இது பார்க்கப்பட்டது.

ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மூலம் எச்.ஐ.வி மற்றும் லுகேமியா முழுமையாக குணமான உலகின் ஐந்து பேரில் இந்த நோயாளியும் ஒருவர்.

66 வயதான இவருக்கு 1988 இல் எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிய வந்தது. அவர் அந்த ஐவரில் மிகவும் வயதானவர். கூடவே நோயுடன் அதிக காலம் வாழும் நபரும் ஆவார்.

அந்த நேரத்தில் அவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை ஆனால் ஒரு வருடம் கழித்து பால் எட்மண்ட்ஸ் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். பிபிசி நியூஸ் பிரேசிலுக்கு தனது முதல் நேர்காணலை அளித்தார்.

 

எட்மண்ட்ஸ் சிறிது காலம் தயக்கத்துடன் இருந்தார். ஆனால் இப்போது அவர் தனது கதையைச் சொல்ல முடிவு செய்துவிட்டார். "எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் ஒரு உத்வேகமாக இருக்க விரும்புகிறேன். இந்த நோயால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.

HIV எனப்படும் Human immuno deficiency virus நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தாக்குகிறது.

கடுமையான நிலையில் இது எய்ட்ஸ் (Acquired Immune Deficiency Syndrome) ஆக மாறுகிறது. இதன் விளைவாக நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலம் செயலிழந்து, ஒன்றன்பின் ஒன்றாக நோய்கள் தாக்குகின்றன.

1980 களில் எச்.ஐ.விக்கு எந்த சிகிச்சையும் இல்லை. பலருக்கு இது நிச்சயமான மரணத்தை குறித்தது.

ஆனால் அவருக்கு எச்.ஐ.வி பற்றித் தெரிந்த நேரத்தில், அவருக்கு ஏற்கனவே எய்ட்ஸ் நோயும் வந்துவிட்டது.

எய்ட்ஸ், புற்றுநோய்க்கு ஒரே சிகிச்சையில் தீர்வு

பட மூலாதாரம்,CORTESIA/CITY OF HOPE

சமீபத்திய தசாப்தங்களில் புதிய சிகிச்சைகள் வெற்றி அடைந்துள்ளன. இன்று மக்கள் இந்த வைரஸுடன் நீண்ட காலம் வாழ முடியும் என்பதையும் எய்ட்ஸ் வராமல் தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.

ஆயினும் இதற்கு முழுமையான சிகிச்சை இல்லை என்பதால் நோயாளி, வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொண்டு வாழ வேண்டியிருந்தது.

2018 ஆம் ஆண்டில் எட்மண்ட்ஸுக்கு மற்றொரு உயிருக்கு ஆபத்தான நோயான லுகேமியா இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோயிலிருந்து பூரணமாக குணமடைந்ததை அவர் அதை 'அதிசயம்' என்று விவரிக்கிறார்.

இது எலும்பு மஜ்ஜை மற்றும் ரத்த அணுக்களை பாதிக்கும் ஒரு வகை புற்றுநோயாகும்.

ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை செய்துகொள்ள டாக்டர்கள் எட்மண்ட்ஸை அறிவுறுத்தினர். இது மிகவும் சிக்கலான செயல்முறையாகும். ஆனால் நோயை குணப்படுத்த இதுதான் ஒரே வழி.

இப்போது அவருக்கு எச்.ஐ.வி வைரஸிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் மரபணு மாற்றம் (CCR5 டெல்டா 32) கொண்ட ஒரு டோனர் தேவைப்பட்டார்.

2019 இல், கலிபோர்னியாவில் உள்ள சிட்டி ஆஃப் ஹோப் கேன்சர் சென்டரில் எட்மண்ட்ஸ் சிகிச்சை பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2021 இல் அவர் எச்.ஐ.வி மருந்துகளிலிருந்து முற்றிலும் விடுபட்டார்.

இன்றுவரை அவருக்குள் எச்.ஐ.வி அல்லது லுகேமியா அறிகுறிகள் எதுவும் இல்லை. அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார்.

இருப்பினும் இத்தகைய மாற்று சிகிச்சை, எச்.ஐ.வி-பாசிட்டிவ் நோயாளிகளுக்கு விதிவிலக்காகும். ஆனால் எட்மண்ட்ஸ் மற்றும் நான்கு நோயாளிகளின் முன்னேற்றம், மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே இந்த நோய்க்கான புதிய சிகிச்சைகளைக் கண்டுபிடிப்பதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

"ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை என்பது ஒரு சிக்கலான செயல்முறையாகும். இது நிறைய பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்,"என்று எட்மண்ட்ஸுக்கு சிகிச்சையளித்த குழுவைச் சேர்ந்த டாக்டர் ஜானா டிக்டர், பிபிசியிடம் கூறினார்.

"பெரும்பாலான எச்.ஐ.வி நோயாளிகளுக்கு இது ஒரு துல்லியமான மாற்று வழி அல்ல. ஆனால் ரத்த புற்றுநோய் இருக்கும் நோயாளிகளுக்கு இது ஒரு நல்ல வழியாகும். அதன் மூலம் அவர்கள் பயனடையலாம்," என்று அவர் கூறுகிறார்.

எய்ட்ஸ், புற்றுநோய்க்கு ஒரே சிகிச்சையில் தீர்வு

பட மூலாதாரம்,CORTESA CITY OF HOPE

 
படக்குறிப்பு,

பால் எட்மண்ட்ஸ் மற்றும் அவரது பார்ட்னர் எர்னி ஹவுஸ் (வலது), 31 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்கின்றனர். அவர்கள் 2014 இல் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.

ஆரம்ப பரிசோதனை, எச்.ஐ.வியுடன் வாழ்தல்

எட்மண்ட்ஸ் ஜார்ஜியாவின் கிராமப்புற பகுதியில் சுமார் 10,000 மக்கள்தொகை கொண்ட டோக்கோவா குடியிருப்புப்பகுதியில் வளர்ந்தார்.

மத நம்பிக்கைகள் மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்ட சமூகத்தில் வாழ்ந்தாலும் அவர் ஓரினச்சேர்க்கையாளராக தனது அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்ட போது அவரது பெற்றோர் அவரை நிராகரிக்கவில்லை.

1976 ஆம் ஆண்டு தனது 21வது வயதில், தன்பாலின இயக்கம் மிகவும் வலுவாக இருந்த கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு அவர் சென்றார்.

"அது ஒரு அற்புதமான நேரம். எல்லா இடங்களிலிருந்தும் தன்பாலினச்சேர்க்கையாளர்கள் சான் பிரான்சிஸ்கோவில் குவிந்தனர்."என்று அந்த நாட்களை நினைவுகூர்ந்த எட்மண்ட்ஸ் தெரிவித்தார்.

ஆனால் 1980 களில் அவர்களில் பெரும்பாலோர் நோய்வாய்ப்பட்டனர், "இது மிகவும் பயத்தை கொடுத்தது. என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. மக்கள் இந்த புதிய நோயை 'ஓரினச்சேர்க்கை புற்றுநோய்' என்று அழைக்கத் தொடங்கினர். மக்கள் மிகவும் பயந்தனர்,"என்றார் அவர்.

பெரும்பாலான எச்.ஐ.வி நோயாளிகள் நோய் கண்டறியப்பட்ட சில காலத்திலேயே இறந்தனர்.

நாளிதழில் தனக்கு தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களின் பெயர்களைப் பார்த்து உணர்ச்சிவசப்படும் அளவுக்கு மரணங்கள் அதிகரித்தன.

வைரஸின் 'கேரியராக' தான் இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்த போதிலும், 1988ல் எச்.ஐ.வி பரிசோதனை செய்ய முடிவு செய்தபோது தனக்கு எந்த அறிகுறியும் இருக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.

எய்ட்ஸ், புற்றுநோய்க்கு ஒரே சிகிச்சையில் தீர்வு

பட மூலாதாரம்,CORTESA PAUL EDMONDS

 
படக்குறிப்பு,

பால் எட்மண்ட்ஸுக்கு 1988 இல் எச்.ஐ.வி இருப்பது தெரியவந்தது.

”க்ளினிக்கில் இன்டர்ன்ஷிப் செய்துகொண்டிருந்த ஒரு பெண் டெஸ்ட் ரிசல்ட் கொடுக்க வந்தார். எப்படி சொல்வது என்று அவளுக்கு புரியவில்லை. அது அவருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர் முகத்தில் அது தெரிந்தது. எனக்கும் இது அதிர்ச்சியாகவே இருந்தது.”

"அது மட்டுமல்ல. எனது T லிம்போசைட் எண்ணிக்கை (CD4) 200 (ஒரு கன மில்லிமீட்டர் ரத்தத்தில்) க்கும் குறைவாக இருந்ததால், எனக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இது அதிகாரப்பூர்வமாக எய்ட்ஸ் எனக் கருதப்படுகிறது." என்று எட்மண்ட்ஸ் குறிப்பிட்டார்.

தனது கதியும் தன் நண்பர்களின் கதியைப் போலவே அமையும் என்று அவர் நினைத்தார். இந்த விரக்தியில், அவர் அதிகமாக மது அருந்தத் தொடங்கினார், ஆனால் இறுதியில் அவர் தன்னைக் சுதாரித்துக் கொண்டு வழக்கமான சிகிச்சையை எடுக்கத் தொடங்கினார்.

"புதிய மருந்து வரும்போதெல்லாம், நான் மாற்ற வேண்டியிருந்தது. அவை பல பக்க விளைவுகளை ஏற்படுத்தியதால் மிகவும் வேதனையாக இருந்தது. அவற்றைத் தவிர்க்க நான் சிகிச்சையில் உபயோகப்படுத்தப்படும் கஞ்சாவைப் பயன்படுத்தினேன்" என்று அவர் கூறினார்.

1992 இல் அவர் தனது பார்ட்னரான அர்னால்ட் ஹவுஸைச் சந்தித்தார். அவரை எச்ஐவி பரிசோதனை செய்துகொள்ளும்படி எட்மண்ட்ஸ் அறிவுறுத்தினார்.

"அவரும் பாஸிடிவ் என்று தெரிந்தது. இது மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால் அவர் தைரியமாக இருந்தார். நாங்கள் வாழ்க்கையில் முன்னேறினோம்."என்கிறார் எட்மண்ட்ஸ்.

எட்மண்ட்ஸ் தனது துணையை 2014-இல் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் 31 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். "ஆரம்பத்தில் நாங்கள் உணர்ந்த ஈர்ப்பு அப்படியே எங்களிடம் தங்கிவிட்டது. நாங்கள் சந்தித்த நாளில் இருந்து இதுவரை பிரியவே இல்லை,"என்கிறார் அவர்.

எய்ட்ஸ், புற்றுநோய்க்கு ஒரே சிகிச்சையில் தீர்வு

பட மூலாதாரம்,CORTESA CITY OF HOPE

 
படக்குறிப்பு,

பால் எட்மண்ட்ஸுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழுவில் உள்ள டாக்டர் ஜானா டிக்டர் (இடது) மற்றும் ஹீமாட்டாலஜிஸ்ட் புற்றுநோயியல் நிபுணர் மான்ஸர் அல் மல்கி (வலது).

மாற்று சிகிச்சை மற்றும் டோனருக்கான தேடல்

காலப்போக்கில், எச்.ஐ.விக்கு சிறந்த சிகிச்சைகள் வந்தன. 2018 ஆம் ஆண்டில், அவருக்கு மைலோடிஸ்பிளாஸ்டிக் சிண்ட்ரோம் (எம்.டி.எஸ்) இருப்பது கண்டறியப்பட்டது. ரத்த புற்றுநோய்க்கு வழிவகுக்கும் நோய்களின் குழு இது என்று சொல்லப்படுகிறது. இது பின்னாளில் மைலோயிட் லுகேமியாவாக மாறியது.

அவருக்கு சோர்வு தவிர எந்த அறிகுறியும் இல்லை. இந்த சிகிச்சையின் மூலம் அவரது புற்றுநோய் குணமாகலாம், ஒருவேளை எச்ஐவி கூட குணமாகக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையில், புற்றுநோயைக் கொண்டிருக்கும் எலும்பு மஜ்ஜை திசுவின் இடத்தில், டோனரின் செல்கள் உடலில் செலுத்தப்படுகின்றன என்று டாக்டர். ஜானா டிக்டர் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, எச்ஐவிக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஒரு டோனரின் தேடல் தொடங்கியது. அத்தகைய மக்கள், மொத்த மக்கள் தொகையில் 1% முதல் 2% மட்டுமே என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எட்மண்ட்ஸின் நிலை சிக்கலானது. புற்றுநோய்க்கு கீமோதெரபி கொடுக்க வேண்டியிருந்தது, இது அவரின் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் குறைக்கும், அதே நேரத்தில் எச்.ஐ.வி காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அவருக்கு ஏற்கனவே குறைவாக இருந்தது.

இறுதியாக, 2019 இல், 63 வயதான டோனர் கண்டுபிடிக்கப்பட்டார். மாற்று சிகிச்சை வெற்றிகரமாக இருந்தது.

எட்மண்ட்ஸ் அதன் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் சிகிச்சையில் கவனம் செலுத்தினார். மேலும் நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்தன.

இந்த நேரத்தில் கோவிட்-19 தொற்றுநோய் வந்தது, அதன் காரணமாக எச்ஐவி சிகிச்சை நிறுத்தப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2021 மார்ச் மாதம் எட்மண்ட்ஸ், ஆன்டிரெட்ரோவியல் சிகிச்சையை (எச்ஐவிக்கான சிகிச்சை) முழுமையாக விட்டுவிட்டார்.

அப்போதிலிருந்து அவர் எச்.ஐ.வி மற்றும் லுகேமியாவிலிருந்து முற்றிலுமாக விடுபட்டுள்ளார். ஆனால் மருத்துவர்கள் அதை 'முழுமையான சிகிச்சை' என்று அழைக்காமல் 'நீண்டகால குணமாகல்' என்று அழைக்கிறார்கள்.

"எச்.ஐ.வி சிகிச்சையில் நோய் முற்றிலும் முடிந்துவிட்டது என்று நாங்கள் சொல்வதில்லை. ஆனால் எட்மண்ட்ஸ் இரண்டு ஆண்டுகளாக மருந்து எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் அவரது உடலில் எச்.ஐ.வி இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை,"என்று ஜானா டிக்டர் கூறுகிறார்.

எட்மண்ட்ஸ் 'முழுமையாக குணமடைந்துவிட்டார்' என்று அதிகாரப்பூர்வமாக அழைக்க இன்னும் அதிக நேரமும் தரவுகளும் தேவை என்று தொற்று நோய் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கு அறிகுறிகள் தோன்றவில்லை என்றால் அது, நோயாளி எச்.ஐ.வி நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டார் என்று நம்பப்படும் ஒரு தரநிலையாகும்.

எய்ட்ஸ், புற்றுநோய்க்கு ஒரே சிகிச்சையில் தீர்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

நம்பிக்கை அளிக்கும் அரிய சிகிச்சை

உலகம் முழுவதும் இதுவரை 15 எச்.ஐ.வி நோயாளிகள் மட்டுமே இப்படி சிகிச்சை பெற்றுள்ளனர். அதில் எட்டு பேர் இறந்துவிட்டனர். எட்மண்ட்ஸ் உட்பட ஐந்து பேர் நீண்ட காலமாக குணமடைந்துள்ளனர். இன்னும் இருவர் எச்ஐவி மருந்தை இப்போதும் எடுத்து வருகின்றனர்,” என்று டாக்டர் ஜானா குறிப்பிட்டார்.

எட்மண்ட்ஸ் 'சிட்டி ஆஃப் ஹோப் பேஷண்ட்' என்று அழைக்கப்படுகிறார். மீதமுள்ள நான்கு நோயாளிகள் பெர்லின், லண்டன், நியூயார்க் மற்றும் டுசெல்டார்ஃப் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள்.

பல எச்.ஐ.வி நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை கிடைப்பதில்லை. ஏனெனில் இது மிகவும் ஆபத்தானது மற்றும் டோனரை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

அதனால்தான் இந்த சிகிச்சை, எச்.ஐ.வியுடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தற்போது வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வெற்றிகரமான சிகிச்சையின் மூலம், இந்த வைரஸ் பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைக்கும் மற்றும் மற்ற நோயாளிகளுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.

எட்மண்ட்ஸ் இன்னும் ஆய்வு செய்யப்படுகிறார், மேலும் அவர் பல சோதனைகளை கடக்க வேண்டும்.

புற்றுநோயுடன் கூடவே எச்.ஐ.வி.யிலிருந்து விடுபடும் மருந்தைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது என்றும் எதிர்கால நோயாளிகளுக்கு திடமான நம்பிக்கையாக இது மாறும் என்றும் டாக்டர் ஜானா டிக்டர் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/articles/c0jp0n2we0po

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி ஏராளன். இந்த வகையான எயிட்ஸ் குணப்படுத்தல் எதிர்கால எயிட்ஸ் மருத்துவத்திற்கு மிகவும் நம்பிக்கையூட்டும் ஒரு விடயம். இது பற்றி சில அவதானிப்புகள்:

1. 90 களில் எயிட்ஸ் அலை அமெரிக்கா, ஐரோப்பாவில் பரவிக் கிலி ஏற்படுத்திய போது,  ஐரோப்பாவின் சில பகுதிகளில் எச்.ஐ.வி வைரஸ் தொற்றிய சிலருக்கு பல வருடங்கள் கழிந்தும் எயிட்ஸ் நோய் வராமலிருந்தது பற்றிய தகவல்கள் வந்தன. பின்னைய ஆய்வுகளில், இத்தகைய எதிர்ப்புச் சக்தி கொண்டோரில் CCR5 delta 32 என்ற ஜீன் பிறழ்வு இருப்பதாகக் கண்டறிந்தார்கள். இந்த CCR5 என்பது எச்.ஐ.வி வைரஸ் கலங்களினுள் நுழையப் பயன்படுத்தும் மூலக்கூறுகளில் ஒன்று.

2. இத்தகைய CCR5 delta 32 ஜீன் பிறழ்வு 16% ஆன ஸ்கண்டினேவியர்களில் இருக்கிறது. ஸ்கண்டினேவியர்கள் வைக்கிங் மக்களின் வழித்தோன்றல்கள், வைக்கிங் கடலோடி மக்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐரோப்பாவின் வடக்கு நாடுகளைச் சூறையாடி வாழ்ந்ததால், வட ஐரோப்பாவிலும் இவர்களது ஜீன் பிறழ்வு பரவியிருக்கிறது. வைக்கிங்குகள் நேரடியாக நுழையாத தெற்கு ஐரோப்பாவில் இந்த ஜீன் பிறழ்வு 4% ஆக இருக்கிறதாம். ஆபிரிக்க, ஆசிய மக்களில் இந்த ஜீன் பிறழ்வு 0% - வைக்கிங்குகள் வராத பிரதேசம் என்பதால்!

3. சில ஆண்டுகள் முன்பு, சீன விஞ்ஞானி ஒருவர் செயற்கை முறையில் ஒரு ஜீன் மாற்றம் செய்து இரு பெண் குழந்தைகளை உருவாக்கினார் என்று செய்தி வந்தது (இதற்காக சிறை சென்று  இப்போது வெளியே வந்திருக்கிறார்). அவர் அந்தக் குழந்தைகளில் செயற்கையாகச் செய்த ஜீன் மாற்றம் இந்த CCR5 delta 32 ஜீன் பிறழ்வு தான். இதனால், அந்த இரு குழந்தைகளும் எச்.ஐ.வி தொற்றிலிருந்து பகுதியளவில் பாதுகாக்கப் படும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரிய தகவல் ஜஸ்டின். நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.