Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செயற்கை நுண்ணறிவின் 'ஞானத்தந்தை' கூகுளிலிருந்து இராஜினாமா! இத்தொழில்நுட்பத்தின் ஆபத்து குறித்து எச்சரிக்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: SETHU

02 MAY, 2023 | 02:29 PM
image

செயற்கை நுண்ணறிவின் ஞானத்தந்தை (கோட்பாதர்) என வர்ணிக்கப்படும் கணினியியல் விஞ்ஞானி ஒருவர் கூகுள் நிறுவனத்திலிருந்து இராஜினாமா செய்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆபத்து குறித்து பேசுவதற்காக அவர் விலகியுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜெப்ரி ஹின்டன் எனும் இவ்விஞ்ஞானி, செயற்கை  நுண்ணறிவு சாதனங்களுக்கான அடிப்படை தொழில்நுட்பத்தை உருவாக்கியவர். 

நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் அவர் பேசுகையில், இத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சமூகத்துக்கும் மனித குலத்துக்கும் ஆழமான ஆபத்துகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

'5 வருடங்களுக்கு முன்னர் அது எப்படி இருந்தது என்பதையும் தற்போது எப்படி உள்ளது என்பதையும் பாருங்கள். இதை மேலும் பரவலாக்குவது பயங்கரமானது' என்கிறார் அவர்.

'தொழில்நுட்ப பெருநிறுவனங்களுக்கு இடையிலான போட்டியானது, புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஆபத்தான வேகத்தில் வெளியிடுவதற்கு நிறுவனங்களைத் தள்ளுகின்றன. இது தொழில்களை ஆபத்துக்குள்ளாக்குவதுடன், தவறான தகவல்களையும் பரப்புகிறது.

தீய நபர்கள், தீய நடவடிக்கைகளுக்காக இதைப் பயன்படுத்துவதை தடுப்பது எப்படி என்பதை அறிவது கடினம்' எனவும் அவர் கூறியுள்ளார்.

 செயற்கை நுண்ணறிவு மூலம் தவறான தகவல்கள் பரப்பபடும் சாத்தியம் இருப்பதாகவும் ஹிண்டன் எச்சரித்துள்ளார். சராசரி நபர் ஒருவரால், 'எது உண்மை என்பதை இனியும் தெரிந்துகொள்ள முடியாமல்' இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

75 வயதான ஜெப்ரி ஹின்டன், தனது வயதும் இராஜினாமாவுக்கு ஒரு காரணம் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

கூகுளின் செயற்கை நுண்ணறிவுப்பிரிவின் தலைமை விஞ்ஞான ஜெவ் டீன் விடுத்துள்ள அறிக்கையொன்றில், ஜெப்றி ஹின்டனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

செயற்கை நுண்ணறிவு கொள்கைகளை வெளியிட்ட முதல் நிறுவனங்களில் ஒன்று என்ற வகையில், செயற்கை நுண்ணறிவை பொறுப்புணர்வுடன்  அணுகுவதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். துணிவுடன் புத்தாங்களை மேற்கொள்ளும் அதேNளை, வெளிவரும் ஆபத்துக்களை புரிந்துகொள்வதிலும் நாம் தொடர்ச்சியாக கற்றுக்கொள்கிறோம்' எனவும் ஜெப் டீன் தெரிவித்துள்ளார். 

செயற்கை நுண்ணறிவில் இயங்கும் 'சட்பொட்' எனும் அரட்டை இயலி மென்பொருட்கள் கடந்த சில மாதங்களில் வேகமாக பிரசித்தமாகி வருகின்றன.  

ஓபன்ஏஐ எனும் நிறுவனம் சட்ஜிபிடி எனும் சட்பொட்டை கடந்த நவம்பரில் வெளியிட்டது.

கூகுள் நிறுவனம் பார்ட் எனும் தனது சொந்த சட்பொட்டை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதேவேளை,  மேம்படுத்தப்பட்ட ஜிபிடி4 எனும் சட்பொட்டை கடந்த மார்ச் மாதம் ஓபன் ஏஐ நிறுவனம் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இத்தகயை சட்பொட்கள் தற்போது மனிதர்களைவிட புத்திகூர்மை கொண்டவையாக இல்லை. ஆனால், விரைவில் மனிதர்களைவிட புத்திகூர்மை கொண்டவையாகிவிடும் என நான் எண்ணுகிறேன் என்கிறார் ஜெப்றி ஹின்டன்.

(சேது)

https://www.virakesari.lk/article/154300

  • கருத்துக்கள உறவுகள்

"எந்திரங்கள் மனிதர்களைவிட புத்திசாலிகளாகும் காலம் நெருங்கிவிட்டது" - கூகுள் AI தொழில்நுட்ப ஜாம்பவான் அஞ்சுவது ஏன்?

செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

செயற்கை நுண்ணறிவின் தந்தையாகக் கருதப்படும் ஜெஃப்ரி ஹின்டன், கூகுள் நிறுவனத்தில் தாம் வகித்து வந்த பதவியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்படும் முன்னேற்றங்கள் பின்னாளில் பெரும் ஆபத்துகளை விளைவிக்கும் என எச்சரித்துள்ளார்.

75 வயதான ஜெஃப்ரீ ஹின்டன், தி நியூயார்க் டைம்ஸில் பேசும்போது கூகுள் நிறுவனத்தில் இருந்து தாம் விலகிவிட்டதாகத் தெரிவித்ததுடன், தமது பணி குறித்து தற்போது வருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிபிசியிடம் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய 'சாட்பாட்டுகள்' (அரட்டைக்குப் பயன்படுத்தப்படும் மென்பொருள்கள்) மிகுந்த அச்சமூட்டும் வகையில் உள்ளன என்றார்.

தற்போதைய நிலையில் அவை மனிதர்களை விட புத்திசாலிகளாக இல்லாவிட்டாலும், விரைவில் அவை நம்மை விட புத்திசாலிகளாக மாறும் என தாம் யூகிப்பதாக அவர் கூறினார்.

கணினி நரம்பியல் வலை அமைப்புக்கள் குறித்த டாக்டர் ஹின்டனின் ஆழமான ஆராய்ச்சிகள் தான் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ChatGPT போன்ற மென்பொருள்களுக்கான பாதையை ஏற்படுத்தின.

ஆனால், விரைவில் இந்த அரட்டை மென்பொருள்கள் மனிதனை விட அறிவு மிகுந்தவையாக மாறிவிடும் என டாக்டர் ஹின்டன் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் GPT-4 போன்ற மென்பொருள்கள் மனிதனை மிஞ்சும் பொது அறிவுடன் உள்ளன என்றும், இருப்பினும் அவற்றிடம் மனிதர்களுக்கு இருக்குமளவுக்குப் பகுத்தறிவு இல்லாவிட்டாலும் சிறிதளவாவது பகுத்தறிவுடன் அவை செயல்படுவதாகவும் அவர் கூறினார்.

தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் முன்னேற்றம் காரணமாக விரைவில் அந்த மென்பொருள்கள் போதுமான பகுத்தறிவைப் பெற்றுவிடும் என்பதால் அவற்றைப் பற்றி நாம் கவலைப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

நியூயார்க் டைம்ஸில் டாக்டர் ஹின்டன் எழுதியுள்ள கட்டுரையில், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவை யாரும் விரும்ப முடியாது எனத்தெரிவித்துள்ளார்.

இது குறித்து விளக்கமான தகவலை அளிக்குமாறு அவரிடம் பிபிசி கேட்டபொழுது, தற்போதைய நிலை அச்சமூட்டும் விதத்தில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் வரவிருக்கும் அதிபுத்திசாலி மென்பொருள்கள் (ரஷ்ய அதிபர் விளாடிமிர்) புதின் போன்ற மோசமான நபர்களிடம் கிடைத்து விட்டால் அவர்களுடைய இலக்கை அடைவதற்கான ரோபோக்களை உருவாக்கும் ஆபத்து ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிகார போதையில் இருக்கும் ஒருவர், அந்த அதிகாரத்தை அடைவதற்கு இதுபோன்ற மென்பொருள்களை தவறாகப் பயன்படுத்தும் ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

மேலும், மனிதர்களின் புத்திசாலித்தனத்தை விட வேறு வகையான புத்திசாலித்தனத்தை நாம் உருவாக்கி வருகிறோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நாம் உயிருடன் வாழும் மனிதர்களாக இருக்கும் போது, இந்த மென்பொருட்கள் பயன்படுத்தப்படும் இடங்கள் அதே அறிவுடன் கூடிய வெறும் இயந்திரங்களாக இருப்பதே இவற்றிற்கும் நமக்குமான வித்தியாசம் என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்த மென்பொருட்களுடன் கூடிய பல ஆயிரக்கணக்கான இயந்திரங்கள் உருவாக்கப்படும் போது, அவை அனைத்தும் தனித்தனியாக ஏராளமான தகவல்களை உள்வாங்கினாலும், அவை ஒவ்வொன்றும் அனைத்துத் தகவல்களையும் கிரகிக்கும் என்பதால் தான் மனிதர்களை விட புத்திசாலிகளாக அவை மாறிவிடும் ஆபத்து உள்ளது என்றும், இது 10,000 பேர் தனித்தனியாக பல தகவல்களைத் தெரிந்து கொள்ளும் போது, அந்தத் தகவல்கள் அனைத்தையும் அவர்கள் அனைவரும் அறிந்து கொள்வதைப் போன்றது என்றும் டாக்டர் ஹின்டன் கூறினார்.

இதற்கிடையே, கூகுள் நிறுவனப் பதவியிலிருந்து தாம் விலகியதற்கு மேலும் பல காரணங்கள் இருப்பதாகவும் டாக்டர் ஹின்டன் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமக்கு 75 வயதானது ஒரு காரணம் என்றும், கூகுளில் தான் பணியாற்றாவிட்டால் அந்நிறுவனம் அதிக அளவில் நம்பத்தகுந்த நிறுவனமாக இருக்கும் என்றும் தெரிவித்த அவர் கூகுளை அதிகமாக விமர்சிக்க விரும்பவில்லை என்றும், ஆபத்தான செயற்கை நுண்ணறிவை உருவாக்காமல் இருப்பதில் அந்நிறுவனத்துக்கு அதிக பொறுப்புகள் இருப்பதாகவும் அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தார்.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜெஃப் டீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதில் பொறுப்புடன் செயல்பட்டு வருவதாகவும், அதன் மூலம் வரவிருக்கும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கையுடன் செயல்படுவதாகவும், அதேநேரம் புதிய மாற்றங்களை நோக்கி நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

AI தொழில்நுட்பம்: 'எந்திரங்கள் மனிதர்களைவிட புத்திசாலிகளாகும் காலம் நெருங்கிவிட்டது' - கூகுள் விஞ்ஞானி அஞ்சுவது ஏன்? - BBC News தமிழ்

Edited by பிழம்பு

  • 5 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித குலத்தையே பூண்டோடு அழிக்க வல்லதா?

AI வளர்ச்சியால் மனித குலத்திற்கே ஆபத்தா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

செயற்கை நுண்ணறிவு மனித இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என ஓப்பன் ஏஐ (OpenAI), கூகுள் டீப்மைண்ட் (Google Deepmind)-ன் தலைவர்கள் மற்றும் அத்துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையத்தின் (Centre for AI Safety) வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்ட இது போன்ற பதிவுக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் .

"செயற்கை நுண்ணறிவின் காரணமாக மனித குல அழிவிற்கான ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க, கொரோனா, அணு ஆயுதப் போர் உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இது போன்ற அச்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என பலர் விமர்சித்துள்ளனர்.

 

ChatGPTஎன்னும் அரட்டை செயலியை உருவாக்கிய OpenAI இன் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன், கூகுள் டீப்மைண்ட் (Google DeepMind)-ன் தலைமை நிர்வாகி டெமிஸ் ஹஸ்ஸாபிஸ் (Demis Hassabis) மற்றும் Anthropic நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டரியோ அமோடி (Dario Amodei) ஆகியோர் செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையத்தின் இந்த பதிவை ஆதரித்துள்ளனர்.

 

செயற்கை நுண்ணறிவினால் என்ன மாதிரியான பேரிடர்கள் ஏற்படும் என்பது குறித்த சில சூழ்நிலைகளை செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ளது.

• செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பல மென்பொருட்கள் மற்றும் மிண்அணு கருவிகளை பெரும் ஆயுதங்களாக சமூக விரோத கும்பல்கள் மற்றும் சில நாடுகளின் அரசுகள் பயன்படுத்தலாம்.

• செயற்கை நுண்ணறிவின் துணையுடன் உருவாக்கப்படும் தவறான தகவல்கள், சமூகத்தை சீர்குலைத்து "பலர் ஒன்றிணைந்து முடிவெடுப்பதை எதிர்மறையாக பாதிக்கும்."

• செயற்கை நுண்ணறிவின் சக்தி, மிகக்குறைவான கைகளில் அதிக அளவில் குவிந்து, உலக அரசுகள் பொதுமக்களை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கத் தொடங்கலாம். அவர்கள் மீது அடக்குமுறையை ஏவவும் உதவும்.

•Wall-E திரைப்படத்தில் காட்டப்பட்டது போல், மனிதர்கள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவைச் சார்ந்திருக்கும் நிலைமை ஏற்படும்.

அதிபுத்திசாலித்தனமான செயற்கை நுண்ணறிவின் ஆபத்துகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த டாக்டர் ஜாஃப்ரி ஹிண்டன், செயற்கை நுண்ணறிவு பாதுகாப்புக்கான மையத்தின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பேராசிரியரான யோசுவா பெங்கியோவும் இந்த அறிக்கைக்கு ஆதரவளித்துள்ளார்.

டாக்டர் ஜாஃப்ரி ஹிண்டன், பேராசிரியர் யோசுவா பெங்கியோ, மற்றும் நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர் யான் லீகுன் ஆகியோர் செயற்கை நுண்ணறிவுத் துறையில் அவர்களின் அற்புதமான ஆரம்பகட்ட பங்களிப்புக்களுக்காக செயற்கை நுண்ணறிவின் தந்தைகள் என அழைக்கப்படுகின்றனர். அது மட்டுமின்றி அவர்கள் மூவரும் கூட்டாக 2018-ம் ஆண்டின் டூரிங் விருதை வென்றனர். இது கணினி அறிவியலில் ஒருவரின் மிகச் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கிறது.

ஆனால் மெட்டாவில் பணிபுரியும் பேராசிரியர் LeCun, மனித அழிவு குறித்த இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவைகளாகவே இருக்கின்றன என்ற கருத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

செயற்கை நுண்ணறிவினால் ஆபத்து

பட மூலாதாரம்,FUTURE PUBLISHING/GETTY IMAGES

 
படக்குறிப்பு,

லண்டனில் சாம் ஆல்ட்மான் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியின் போது, வெளியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர்

உண்மைகளுக்கு ஊறு விளைவிக்கும் தன்மை

இதே போல் செயற்கை நுண்ணறிவினால் மனிதகுலத்துக்கு ஆபத்து ஏற்படும் என்பதை பல வல்லுநர்கள் முழுமையாக ஏற்கவில்லை. இது போன்ற அச்சம் நம்பக்கத்தகுந்த வகையில் இல்லை என்கின்றனர் அவர்கள். ஏற்கெனவே நாம் எதிர்கொண்டு வரும் சவால்களை முறியடிப்பதற்கான பாதையிலிருந்து இது போன்ற அச்சங்கள் நமது கவனத்தை திசைதிருப்புவதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானியான அரவிந்த் நாராயணன், அறிவியல் புனைகதை போன்ற பேரழிவுக் காட்சிகள் உண்மைக்குப் புறம்பானவை என்று பிபிசியிடம் கூறினார்: "தற்போதைய செயற்கை நுண்ணறிவின் திறன்கள், இது போன்ற ஆபத்துகளை ஏற்படுத்துமளவுக்கு பெரிய அளவில் ஆற்றல் பெற்றவையாக இல்லை என்கிறார் அவர். மேலும், இது போன்ற அதீத அச்ச உணர்வுகள் காரணமாக, செயற்கை நுண்ணறிவினால் ஏற்படப் போகும் சிறிய அளவிலான ஆபத்துக்களைப் பற்றி ஆய்வு செய்பவர்களின் கவனம் திசை திருப்பப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

AI வளர்ச்சியால் மனித குலத்திற்கே ஆபத்தா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆக்ஸ்போர்டின் இன்ஸ்டிடியூட் ஃபார் எதிக்ஸின் மூத்த செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் எலிசபெத் ரெனிரிஸ், செயற்கை நுண்ணறிவினால் நிகழ்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து அதிகம் கவலைப்படுவதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

"செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றங்கள், மென்பொருட்களும், கருவிகளும் தாமாகவே முடிவெடுக்கும் அளவைப் பரவலாக்கும். அது பாரபட்சமானதாக, வெறுப்பை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கலாம். அதே நேரம் நியாயமற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுகள் எடுக்கப்படும் ஆபத்தும் உள்ளது," என்று அவர் கூறினார். அவை, "தவறான தகவல்களின் அளவு மற்றும் பரவலில் மிக மோசமான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். செயற்கை நுண்ணறிவு இதன் மூலம் எதார்த்தத்தை உடைத்து, பொது நம்பிக்கையை சீர்குலைக்கும்."

பல செயற்கை நுண்ணறிவு கருவிகள், மனிதர்களின் எண்ண ஓட்டங்களை அடிப்படையாகக் கொண்டே முடிவுகளை எடுக்கின்றன. அவற்றின் உள்ளடக்கம், உரைகள், கலை மற்றும் இசைக்கான முன்னுரிமைகள் என அனைத்தும், இக்கருவிகளை பயன்படுத்தி வருபவர்களின் தனிப்பட்ட விருப்பங்களை ஒட்டிய அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. அதனால் அவை செயல்படும் விதமும் அதன் அடிப்படையிலேயே இருக்கும்.

இந்த செயற்கை நுண்ணறிவு என்பது பொதுமக்களின் பெரும் அளவிலான செல்வங்களை சொற்ப எண்ணிக்கையிலான தனியார் நிறுவனங்களுக்கு மாற்றும் செயல்களைச் செய்யவும் பயன்படுகிறது.

ஆனால் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மையத்தின் இயக்குனர் டான் ஹென்ட்ரிக்ஸ், தற்காலத்தில் நிலவும் ஆபத்துகள் மற்றும் எதிர்கால அபாயங்களை சம்பந்தமற்ற விஷயங்களாக பாவித்து அணுகக்கூடாது என பிபிசியிடம் பேசிய போது தெரிவித்தார்.

"தற்போதைய சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, பிற்காலத்தில் ஏற்படும் பல ஆபத்துக்களை எதிர்கொள்ளப் பயனுள்ளதாக இருக்கும்," என்று அவர் கூறினார்.

மனிதனை மிஞ்சிய அறிவினால் ஆபத்து

AI வளர்ச்சியால் மனித குலத்திற்கே ஆபத்தா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை உடனடியாகத் தடுத்தது நிறுத்தவேண்டும் என கடந்த மார்ச் மாதம் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் உள்ளிட்ட வல்லுநர்கள் கூட்டாக கையெழுத்திட்டு ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவினால் மனித குலத்துக்கு ஆபத்து என்ற செய்தியின் மீது ஊடகங்கள் அதிக அளவில் தங்கள் கவனத்தைச் செலுத்தத் தொடங்கின.

அந்த கடிதத்தில், "செயற்கையாக உருவாக்கப்படும் மனங்கள் (non human minds)ஒரு கட்டத்தில் மனிதர்களை விட திறமை மிக்கவைகளாக மாறி, அதிக எண்ணிக்கையில் பெருகி, மனித இனத்தையே அழித்துவிடும் அளவுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதற்கு மாறாக, தற்போதைய பிரச்சாரங்கள் தெளிவான வேண்டுகோளை முன்வைக்கின்றன. அவற்றின் படி, உடனடியாக இந்த ஆபத்துகள் குறித்த ஆலோசனையை அனைவரும் தொடங்கவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இந்த அறிக்கை, செயற்கை நுண்ணறிவினால் ஏற்படும் ஆபத்துகளையும், அணு ஆயுதப் போரால் ஏற்படும் அபாயத்துகளையும் ஒப்பிடுகிறது. OpenAI, தனத வலைப்பதிவு ஒன்றில், அணு சக்தியைப் பயன்படுத்துவதைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் சர்வதேச அணு சக்தி நிறுவனம் செயல்படுவதைப் போலவே, செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தவும் உலக அளவில் ஒரு கட்டுப்பட்டு அமைப்பை உருவாக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு பற்றி கூடுதல் கவனம் செலுத்த பிரிட்டன் உறுதி

AI வளர்ச்சியால் மனித குலத்திற்கே ஆபத்தா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாம் ஆல்ட்மேன் மற்றும் கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை இருவரும் அண்மையில் பிரிட்டன் பிரதமருடன் செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறை பற்றி விவாதித்தவர்களில் இடம்பெற்றிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ரிஷி சூனக், செயற்கை நுண்ணறிவினால் சமூகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து விளக்கினார்.

"முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செயல்பட உதவுவது, நோயெதிர்ப்பு சக்தி மருந்து கண்டுபிடிப்பது போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவின் உதவி அளப்பரிய அளவில் இருந்தாலும், அதை பாதுகாப்புடன் பயன்படுத்தும் தேவை இருப்பதை மறுக்கமுடியாது," என்றார் அவர்.

 

"அதனால் தான், கடந்த சில நாட்களுக்கு முன் செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் வல்லுனர்களுடன் நான் ஆலோசனை நடத்தினேன். என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாம் மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்தும், செயற்கை நுண்ணறிவினால் ஏற்படும் ஆபத்துகளைத் தடுக்க புதிதாகத் தேவைப்படும் சட்டங்கள் குறித்தும் அப்போது ஆலோசனை நடத்தப்பட்டது."

"கொரோனா தொற்றுநோய் அல்லது அணு ஆயுதங்களால் விளையும் ஆபத்துகளை செயற்கை நுண்ணறிவும் ஏற்படுத்தும் என்பது உள்ளிட்ட தகவல்கள் பொதுமக்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளன. அதனால், செயற்கை நுண்ணறிவு குறித்த முடிவுகளை மேற்கொள்ளும் போது, அரசு அதில் மிகுந்த கவனம் செலுத்தும் என நான் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்."

அண்மையில் ஜி7 பொருளாதார கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டிலும் இது குறித்துப் பேசி உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்த ரிஷி சூனக், விரைவில் அமெரிக்க அரசிடமும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/ck59jkp4l74o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போலிச் செய்திகளால் இந்த உலகம் நிரம்பிவிடுமா - மக்களை தவறாக வழிநடத்தும் இதற்கு என்னதான் தீர்வு?

வினேஷ் போகாட்

பட மூலாதாரம்,TWITTER

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,வினீத் கரே & ஸ்ருதி மேனன்
  • பதவி,பிபிசி செய்தியாளர்கள்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வந்த மல்யுத்த வீரர்களைக் கடந்த 28ஆம் தேதி டெல்லி காவல்துறை கைது செய்தபோது வினேஷ் போகாட்டின் இரண்டு விதமான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

அந்தப் புகைப்படங்களில் வினேஷ் மற்றும் சங்கீதா போகாட் காவல்துறை வாகனத்தில் இருக்கின்றனர். அவர்களோடு மூன்று காவல்துறை அதிகாரிகளும் மற்ற நான்கு பேரும் இருக்கின்றனர்.

மதியம் 12.30 மணி அளவில் செய்தியாளர் மன்தீப் புனியா பதிவிட்ட புகைப்படத்தில் வினேஷும் சங்கீதாவும் இறுக்கமான முகத்துடன் இருந்தனர்.

அடுத்த ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு ரியல் பாபா பனாரஸ் என்ற பெயர் கொண்ட ஒருவரது ட்விட்டர் பதிவில் இருவரும் சிரித்துக்கொண்டு இருப்பதையும், இருவரின் கன்னத்தில் குழி இருப்பதையும் பார்க்க முடிந்தது.

 
Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

சில ட்விட்டர் பயனர்கள் இருவரும் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராகப் போராடும் மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கருத்து தெரிவித்து வந்தனர்.

ஒரு ட்விட்டர் பயனர், இவர்கள் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான டூல்கிட்டின் ஒரு பகுதியாகிவிட்டார்கள் என்று பதிவிட்டிருந்தார்.

பின்னர் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, இந்தப் புகைப்படம் போலியானது என்றும் ஐடி விங்கை சேர்ந்தவர்கள் போலியான இந்தப் புகைப்படத்தை பரப்புவதாகவும் ட்விட்டரில் விளக்கமளித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

யார் இந்த வேலையைச் செய்தது?

இந்தப் புகைப்படத்தை யார் எடிட் செய்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை.

உண்மையான புகைப்படத்தில் சிரிப்பு சேர்க்கப்பட்டதாக உண்மை சரிபார்க்கும் இணையதளமான பூம் லைவ் தெரிவித்தது.

ஒருவரின் முகபாவனையை மாற்றும் ஃபேஸ்ஆப் செயலி மூலம் இவர்களின் உண்மையான படத்தை நாம் எடிட் செய்தபோது கிடைத்த புகைப்படம், இணையத்தில் வைரலான புகைப்படம் போலவே இருந்தது.

இதுகுறித்து கருத்து பெற வினேஷ் போகாட், சங்கீதா போகாட், பஜ்ரங் புனியாவை தொடர்புகொள்ள நாம் தொடர்ச்சியாக முயன்றும் முடியவில்லை. ஆனால், சங்கீதா போகாட் பிபிசிக்கு அனுப்பிய செய்தியில் மல்யுத்த வீரர்களிடயே காணப்பட்ட பயம் மற்றும் நிச்சயமற்றதன்மை காரணமாக காவல்துறை வாகனத்தில் வைத்து செல்ஃபி எடுத்ததாகக் கூறியிருந்தார்.

’’வினேஷ் மற்றும் சங்கீதா போகாட்டின் உண்மையான புகைப்படம் வெளியாகாமல் இருந்திருந்தால் போலியான படத்தை மக்கள் நம்பியிருப்பார்கள்,’’ என்கிறார் உண்மை சரிபார்ப்பவரான பங்கஜ் ஜெயின்.

'’இது போலிச் செய்தி உலகின் தொடக்கம். இதற்கு முன் சாதாரண மனிதர்களே போலியான படத்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால், தற்போது அது கடினமாக இருக்கும்,’’ என்றும் அவர் கூறுகிறார்.

Information Resilience மையத்தைச் சேர்ந்த புலனாய்வாளர் பெஞ்சமின் ஸ்ட்ரிக், இந்தியாவில் நீண்ட காலமாக போலிச் செய்திகளின் அச்சுறுத்தலைக் கண்காணித்து வருகிறார். மல்யுத்த வீரர்களின் போராட்டத்தைக் கவனித்து வரும் இவர், இந்த இரண்டு புகைப்படங்களையும் பார்த்தார்.

வைரலான புகைப்படத்தில் இருவரின் முகத்திலும் அனைத்து பற்களும் தெரியும் வண்ணம் ஒரே மாதிரியாக சிரிப்பு இருந்தது. இந்தப் புகைப்படத்தைப் போலி எனக் காட்டியதாகக் கூறுகிறார் பெஞ்சமின் ஸ்ட்ரிக்.

 

வினேஷ் மற்றும் சங்கீதாவின் பழைய புகைப்படங்களையும் நாம் பார்த்தோம். அதில் எதிலுமே அவர்கள் கன்னத்தில் குழி இல்லை.

இந்தச் சிறிய விஷயம் எது உண்மையான படம், எது போலி என அடையாளம் காட்டினாலும் சந்தையில் வந்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் இதை மேலும் கடினமாக்கலாம்.

பிரிட்டனின் லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்து ஆய்வு செய்துவரும் உதவிப் பேராசிரியர் சோஃபி நைட்டிங்கேல், சிக்கலான வகையில் எடிட்டிங் செய்யப்பட்டால் எது உண்மை, எது போலி என உறுதியாகக் கூற முடியாது என்கிறார்.

அச்சம்

மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் தரவுகள் மிக மலிவாகக் கிடைக்கின்றன. எனவே மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் போலிச் செய்திகள் சவாலாக மாறியுள்ளன.

இது மாதிரியான சூழல்களில் போலிச் செய்திகள், வீடியோக்களின் நிலைமையை மேலும் சிக்கலாக்குகின்றன.

ஒருவர் கூறாத விஷயத்தைக் கூறியது போல உருவாக்க டீப்ஃபேக் (Deepfake) என்ற நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அது மாதிரியான வீடியோக்களை உருவாக்குவதற்கான மென்பொருள் இலவசமாகவும் மலிவாகவும் கிடைப்பது கவலைக்குரியது.

பல மென்பொருட்கள் இலவசமாக அல்லது மாதம் 5 அல்லது 8 அமெரிக்க டாலர்களுக்கு கிடைக்கின்றன என்று கூறும் பெஞ்சமின் ஸ்ட்ரிக், வருடத்திற்கு 50 அமெரிக்க டாலர் மதிப்பில் கிடைக்கும் மென்பொருட்களைப் பயன்படுத்தி நேர்த்தியான வீடியோக்களையும் புகைப்படங்களையும் உருவாக்க முடியும் என்கிறார்.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் போலியான காணொளிகளைப் பரப்புவது எளிது. போலிச் செய்திகளைப் பரப்புபவர்களைத் தவிர்த்து சம்பந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனங்களையும் அதற்கு பொறுப்பாக்க வேண்டும் என்று தற்போது கூறப்பட்டு வருகிறது.

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்க அரசு சட்டம் கொண்டு வர உள்ளதாகவும், அதற்கான முதல் வரைவு மசோதா ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இது முதல்முறை அல்ல

உலகில் மருத்துவத் துறை போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் வேளையில், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றிய விவாதமும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

"மனிதர்களைக் கட்டுப்படுத்த இயந்திரங்கள் வேண்டாம். அது பேரழிவை ஏற்படுத்தும்," என்கிறார் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் சங்கர் பால்.

செயற்கை நுண்ணறிவு மனித இருப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று ஈலோன் மஸ்க்கும் கூறினார்.

போலிச்செய்திகளைப் பரப்ப வல்ல அபாயகரமான ஒன்றாக செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் கருதப்படுகிறது.

பாஜக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக 2020ஆம் ஆண்டில் டெல்லியில் நிறைய விவாதங்கள் நடந்தன.

குஜராத்தில் அரசியல்வாதிகளுக்கு எதிராக டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் செய்திகளும் வந்தன.

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்

பட மூலாதாரம்,TWITTER

இது தவிர, முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது செய்யப்பட்டதாக சில போலியான புகைப்படங்கள் அமெரிக்காவில் வெளியாகின.

செயற்கை நுண்ணறிவின் நன்மை மற்றும் தீமைகள் குறித்து மேற்கத்திய நாடுகளில் அதிகம் பேசப்படும் நிலையில், இந்தியாவிலும் அத்தகைய விழிப்புணர்வு உள்ளதா?

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை என்கிறார் பெஞ்சமின் ஸ்ட்ரிக்.

"சமூகத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளைப் புரிந்துகொள்ள உதவுவது, எந்தச் செய்தியை நம்ப வேண்டும், எதை நம்பக்கூடாது என்பது குறித்து மக்கள் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் முக்கியமான படி" என்கிறார் உதவிப் பேராசிரியர் சோஃபி நைட்டிங்கேல்.

https://www.bbc.com/tamil/articles/cevj12kxxp5o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.