Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அலாரம் - T. கோபிசங்கர்

Featured Replies

அலாரம்.

“ டாண் “ எண்டு நல்லூரில அடிச்ச மணி நாலு கிலோ மீற்றருக்கு இங்கால படுத்திருந்த சாந்தக்காவை ஏழுப்பிச்சுது . “டேய் சின்னவா எழும்பு நாளைக்கு சோதினை எண்டு சொன்னியெல்லோ , கொண்ணன் பிந்தித்தான் படுத்தவன் நீ எழும்பு” எண்டு திருப்பித் திருப்பி சொல்லவும் அந்தச் சண்டையில பெரியவன் எழும்பினான். அரைநித்திரையில கட்டில்ல இருந்து எழும்பின சின்னவன் பெட்சீட்டால போத்த படி வந்து மேசையில திருப்பியும் படுத்தான் . பத்து நிமிசத்துக்கு ஒருக்கா “சின்னவா பெரியவா” எண்டு மாறி மாறிக் கூப்பிட்டு கடைசீல என்ன சத்தமில்லை எண்டு வந்து பாத்திட்டு “பார் ஐஞ்சு மணி பெருமாள் கோயில் மணி கேக்குது” எண்டு மனிசி நித்திரை கொண்டவனுக்கு மேல செம்பில இருந்து தண்ணியைத் தெளிச்சு எழுப்பி படிக்க விட்டுது. 

வீட்டை செல் விழுந்ததால நிண்டு போன வைண்ட் பண்ணினா ஓடிற மணிக்கூடு  , பற்றிரி ஊரில இல்லாத படியால் ஓடாத மற்ற மணிக்கூடு , அடுத்த மாதம் வாங்கித்தருவினம்  எண்டு இப்போதைக்கு கனவில மட்டும் கட்டிற கசியோ கைமணிக்கூடு  எண்ட நிலைமையில் வீடு இருந்தாலும் , பாக்காத மணிக்கூட்டுப்படி நேரம் பிசகாம வேலை செய்வா சாந்தக்கா. 

பத்துச் சகோதரத்துக்கு ஒரே பொம்பிளைப்பிள்ளை; ஊரில ராசாவ இருந்தவரோட கலியாணம் , கண்ணை மூடித்திறக்க ஒரு பொம்பிளைப்பிள்ளை எண்டு சடுசடு எண்டு சந்தோசம் மட்டுமான வாழ்க்கை உயர்ந்து கொண்டு போக ஒற்றைச் சரிவு ஒரே நாளில ஆளைக் கவித்திச்சுது. மத்தியானச் சாப்பாட்டுக்கு வாறன் எண்டு போன மனிசனைக் காணேல்லை எண்டு தேட , அப்பா வந்தா வெளியில விளையாடலாம் எண்டு பிள்ளை வாசல் பாக்க கறுத்தக்காரில சுத்தித்தான் கொண்டந்தாங்கள். எப்பிடி அழுறது எண்டு கூடத் தெரியாத சாந்தக்கா இப்பவும் அவரைப் பாத்த படியே நிண்டா. மூக்குத்தியை கழற்றி மூத்த தம்பீட்டை குடுத்து “ அடகு வேண்டாம் இப்போதைக்கு மீட்க ஏலாது வித்துக் கொண்டா“ எண்டு சொன்னவ பிள்ளையைக் கொண்டே தன்டை தாய் தேப்பனிட்டைக் குடுத்திட்டு வேலை எல்லாம் சரியா நடக்குதா எண்டு பாத்தபடி வேப்பமிலையால அவரின்டை முகத்தை விசிறிக் கொண்டிருந்தா. கிரியை நடக்க கழுத்துத் தாலியைக் கழற்றி நெஞ்சில வைச்சிட்டு அதை திருப்பி எடுத்துப் பிள்ளைக்கெண்டு கவனமா வைச்சிட்டு மிச்சக் கடமைகளை முடிச்சா. 

ஒரு மாதம் ஊரே வந்து வந்து செத்தவரைப் பற்றிக் கதைக்க இவ மட்டும் வாழப் போறதை எப்பிடி வழி சமைக்கிறது எண்டு யோசிக்கத் தொடங்கினா. செத்து அந்திரட்டிக்குப் பிறகும் வீட்டுக்கு தூரமாகேல்லை எண்டு பாத்திட்டு அப்ப அவர் தான் வரப்போறார் எண்டு சிலர் நம்ப, “ என்டை நிலமையில ஒண்டையே கரை சேக்கிறது எப்பிடி எண்டு தெரியேல்லை இதோட என்ன செய்யிறது எல்லாத்திக்கும் காட்டுத்துறையானே நீ தான் விட்ட வழி“ எண்டு கைவிட்ட கடவுளை இன்னும் இறுக்கமா நம்பினா சாந்தக்கா. செத்தாள் தான் திரும்பி வந்திருக்கு எண்டு சனம் நம்பினது உண்மை எண்ட மாதிரி இந்தப் பூவும் அவசரமாய் உதிர்ந்திச்சுது உதரத்துக்குள்ளயே. 

பேரனை எழுப்பி விட்டிட்டு ,அடுப்புச் சாம்பலை வழிச்சு தும்பையும் தூக்கிக் கொண்டு வந்த கிணத்தடீல வைச்சு இயத்தை மினுக்கீட்டு அடுப்பை மூட்ட பிள்ளையார் மணி கேட்டுச்சுது. குளிச்சுப்போட்டு கிணத்தடீல கிழக்கை பாத்துச் சூரியனைக்   கும்பிட்டவ மேற்கை திரும்பி “ காட்டுத்துறையானே இதுகளுக்கு ஒரு வழிகாட்டும் “ எண்டு வேண்டுகோளை விடவும் , பக்கத்து ஒழுங்கேக்க அடிச்ச மணிச்சத்தம் பால்காரன்டை எண்டதை தெரிஞ்சு பால்ச்செம்பைக் கொண்டு gate அடிக்குப் போனா. “இந்தா தேத்தண்ணி உனக்கெல்லே வகுப்பு எண்டு சொன்னனீ , நேரம் சரி வெளிக்கிடு” எண்டு பெரியவனை ஆறு மணி வகுப்புக்கு அவசரப்படுத்தீட்டு கூட்டின விளக்குமாத்தை முத்தத்தைக் கூட்டி முடியாமலே பின்வளவுக்குப் போனா அவன் வெளீல போப்போறான் எண்டு. 

பிள்ளைகளோட மல்லுக்கட்டி மிச்ச ரெண்டையும் எழுப்பி பிரட்டின புட்டுக்கு ஒரு வாழைப்பழத்தையும் , மூண்டவதுக்கு மறக்காம சீனியையும் வைச்சி கட்டிக்குடுத்து பள்ளிக்கூடம் அனுப்பீட்டு மகள் வர “ அவன் எல்லே சைக்கிள் கேட்டவன் “ எண்டு மூண்டாவதுக்கு வக்காளத்து வாங்கீட்டு , “ அம்மம்மா என்டை ஒரு எழுத்துக் கொப்பியை காணேல்லை “ எண்ட இளையவனின்டை கொப்பியைக் கண்டுபிடிச்சு  மேசையை அடுக்கவும் நல்லூரான் பத்து மணி எண்டார் . காணாமல் போட்டுது எண்டால் மனிசி குண்டூசியைக்கூட கண்டு பிடிச்சுக் குடுக்கும் . வெய்யில் உரக்கத்  தொடங்கி முன் மாமர நிழல் சுருங்கி முத்தத்தில விழ ,  பத்தரை ஆகுது எண்டபடி அப்பிடியே வெளிக்கிட்டு பழைய மாட்டுத் தாள் bag ஓட ஒழுங்கை முடக்குக்கு வந்த சாந்தக்கா. பாசையூரில வாங்கி பெட்டீல கட்டிக்கொண்டு போனவனை மடக்கிப் பிடிச்சு குளம்புக்கு சீலா , பொரிக்கத் திரளி , கொஞ்சம் றால் பொரிக்க எண்டு வாங்கி , றால் மூஞ்சையில சொதி, முருங்கையிலை வறை எண்டு சமையலை முடிச்சிட்டு போய்ப் படுத்தா. 

மேற்குப் பக்க ஜன்னலால தலையில வெய்யில் பட “சரி ரெண்டு மணி அவங்கள் வரப்போறாங்கள் சின்னவன் காலமை குளிக்கேல்லை “ எண்டு ஞாபகம் வர ஓடிப்போய் கிணத்தடி வாளீல தண்ணியை நிரப்பி வைச்சிட்டு lifebouy சோப்பையும் எடுத்து வைச்சா. திரும்பு , குனி கையைத்தூக்கு , காலைத்தூக்கு எண்டு ஓடர் போட்டு , தேச்சுக் குளிக்க வாத்து ,  காலமை அரைகுறையா paste ஆல மினுக்கின பல்லை திருப்பி அமத்தி கொஞ்சம் கரி போட்டு மினுக்கி , கொடீல இருந்த துவாயால துடைச்சுவிட்டிட்டு காதுக்க “ உனக்கு றால் பொரிச்சனான்”  எண்டு சொன்னதுதான் சின்னவன் சோட்ஸ் போடாமலே சாப்பிடப் போனான் . 

வீட்டில எல்லாரும் சாப்பிட்டு முடிய , மிச்சத்தை இரவுக்கும்  மிச்சம் வைச்சுட்டு தானும் சாப்பிட்டிட்டு வெத்திலைவாயோட விறாந்தையில சீலைத்தலைப்பை விரிச்சிட்டு கண்ணயர்ந்தவ “ பழைய போத்தில் , பேப்பர் அலுமினியம் இருக்கா “ எண்டு சத்தம் கேக்க எழும்பிப் போய் பின்னால பத்திக்குள்ள கட்டி வைச்ச மூட்டையைத் தூக்கிக் கொண்டு  போய் ஒரு பிளாஸ்டிக் வாளியோட வந்தா. 

சாந்தக்கா கைநீட்டிக் கடன் வாங்காமல் கட்டுப்பாடா  வாழ்ந்து , வளந்து , வளர்த்து கலியாணமும் கட்டிக் கொடுத்தது  எப்பிடி எண்டது ஒருத்தருக்கும் விளங்காத புதிர். Income கூடாமல் expenses கூடேக்கையும் ஒரு நாளும் accounts சமப்படாமல் போகேல்லை. இப்ப பேரப்பிள்ளைகளுக்காக மட்டும் செலவு செய்தாலும் ஒரு சதமும் வீணாப்போகமல் செலவு செய்வா. 
இந்தா கிடாரத்தை தூக்கித்தா , அவிச்சு புழுங்கலைக் கொண்டு போய்  காயப் போடு, ரெண்டு உலக்கை போட்டுட்டுப் போ, கப்பி மட்டும் இடிச்சுத்தா எண்டு எப்பிடியும் ஆக்களிட்டை வேலை வாங்கீடுவா . அதே நேரம் நான் போகோணும் வகுப்பெண்டால் “ நீ போ , நான் பாக்கிறன்“ எண்டு தானே குத்தி , பிடைச்சு , ஊறப்போட்டு,  மாவாக்கி , இரவு புட்டாக்கித் தருவா . 

மரக்காலை விறகு , மரத்தூள் அடுப்பு , மண்ணெண்ணை விளக்கு , பல்லு மினுக்க கரி, பின் வளவு முருங்கை, சீனி இல்லாட்டி பனங்கட்டி , இருக்கேக்க மட்டும் பால் தேத்தண்ணி , எல்லாக் கோயில் விரதம் ( வாழ்வாதாரத்தோட வழிபாடும்), வெள்ளை ரவிக்கை , விதம் விதமான மடிப்போட ரெண்டு சீலை, கால் பிரண்டா கரியும் சோறும் , காலால உழுக்கும் , கன நாள் நோவுக்கு வாதநாராயணி ஒத்தடம்,  எவரும் தேவை இல்லை எண்ட திமிர் , என்னால முடியும் எண்ட ஓர்மம் , கேட்ட விலைக்கு தராட்டி இருக்கிற காசுக்கு மட்டும் எண்ட வியாபாரம், சொன்ன சொல்லுக்கு தலையையும் அடகு வைச்சு காப்பாத்திற திறமை , பச்சாபதாபம் வேண்டாம் பரிவு மட்டும் காணும் எண்ட பிடிவாதம் இது தான் சாந்தக்கா.

சாந்தக்கா; காலமை பேப்பர் பின்னேரம் கதைப்புத்தகம் , கேட்டதும் வாசிச்சதும் பேரப் பிள்ளைகளுக்கு குடுக்கிற சொத்து . மகாபாரதம் , கம்ப ராமாயணம் , அறுபத்து மூண்டு நாயன்மார்  எண்டு கதைவழி கல்வி cards விளையாடேக்க குடுப்பா . Cards எண்டால் காணும் 304 இல தொடங்கி donkey வரை எல்லாம் தெரியும் , எப்பனும் அளாப்ப ஏலாது, கள்ள விளையாட்டை  கண்டு பிடிச்சிடும் , கம்மாரிசு பிந்தினா cards பறக்கும் . 

அக்கம் பக்கம் அலம்பப் போகாட்டியும் அப்பப்ப அளவா advise பண்ணுவா. “ தம்பி மூத்தவள் இன்னும் சின்னப்பிள்ளையில்லை நீர் பாத்து சொந்தத்தில செய்து வையும் , உமக்கும் மூண்டு குமர்  “ எண்டு சொல்ல சண்முகம் உடனயே மகளுக்கு முற்றாக்கினார். 
“ தம்பி உவன் தயாவின்டை சேர்க்கை பிழை”எண்டதை கவனிக்காத நாதன் ஒரு மாதத்தில அவனைக் காணேல்லை இயக்கத்துக்குப் போட்டான் எண்டு ஒப்பாரி வைக்க , போனதை விடும் மிச்சத்தை கவனமாப் பாரும் கிருபா கவனம் எண்ட சொன்னது தான் அடுத்த நாளே கிருபா கொழும்புக்கு வேலைக்கு அனுப்பப்பட்டான். 

Mail train யாழ்ப்பாணம் போகேக்க வாற horn சத்தத்தை கேட்டி ஆறரை ஆக்கள் போகுது இன்னும் என்ன விளையாட்டே எண்டு பேரனை படிக்க இருத்தீட்டு வந்து ரேடியோவில ஆகாசவாணி தொடங்க தோசைக்கல் இல்லாட்டி புட்டுக் குழல் அடுப்பில வைப்பா. எட்டு மணிக்குள்ள எல்லாருக்கும் சாப்பாட்டைக் குடுத்திட்டு பத்து மணிக்கு பயமில்லாமால் கேட் பூட்டி படுத்திடுவா சாந்தக்கா . 

எப்பவுமே மணிக்கூடு கட்டவும் இல்லை அதைப் பாக்கிறதும் இல்லை ஆனாலும் நல்லூர் முருகனே இவவைப் பாத்துத் தான் மணிக்கூடு நேரம் adjust பண்ணிறவர் . 

எல்லா வீட்டிலேம் இப்பிடி ஒரு சாந்தக்கா இருப்பா , எங்களுக்கும்  இருந்தவ. 

Dr. T. கோபிசங்கர்
யாழப்பாணம்

  • கருத்துக்கள உறவுகள்

டொக்ரரின் எழுத்தின் வாசகன் நான், நல்ல கதை சொல்லி.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கைம்பெண்ணின் ஒருநாள் பொழுது...........நல்ல சிந்தனைக் கதை........!  👍

நன்றி நிழலி ..........!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.