Jump to content

இலக்கை நோக்கி - T. கோபிசங்கர்


Recommended Posts

இலக்கை நோக்கி 

பெலரூஸ் December 2022

மைக்கின்டை சுருட்டை பாதி வாங்கிப் பத்தின அன்ரனோவ் கண்ணை telescope இல இருந்து எடுக்காம சுத்திப் பாத்துக்கொண்டிருந்தான். அதை வாயில் வைக்க முதல் காட்டுப்பக்கம் வந்த சலசலப்பு என்ன எண்டு பாக்க பெரிய focus light ஐத் திருப்ப , “உது கரடி தான்” எண்டு மைக் சொல்ல , “இல்லை இந்த நேரம் கரடி திரியாது , அதோட இது மரத்தின்டையோ , கிளையின்டயோ சலசலப்பு இல்லை நிலத்தோட வாறது” எண்டு சொல்லித் திருப்பியிம் பாத்திட்டு ஒண்டையும் காணேல்லை எண்டு போட்டு கடைசியா ரெண்டு தரம் நல்லா உள்ள இழுத்து நெஞ்சு முட்ட நிறைச்சு வைச்சு மூச்சைக் கொஞ்சம் கொஞ்சமா வெளீல மூக்கால விட்டிட்டு, கடைசிக் காத்தோட காறி எச்சிலைத் துப்பீட்டு ஒரு chewing gum ஐ வாயில போட்டான். 

Al jazeera news ஆரோ ஒருத்தர் “அமெரிக்காவின் நாடகம் இந்த Ukraine war” எண்டு போட்டதை பாக்காம அடுத்த நியூஸைப் பாத்துச் சிரிக்கத் தொடங்கினான் ; இந்தமுறை இங்கிலாந்தில் வெள்ளை கிறிஸ்மஸ் வர வாயப்பு எண்ட நியூசைப் பாத்து, இனியும் அடக்கேலாது இல்லாட்டி வெடிச்சிடும் எண்டதால அன்ரனோவ் கண்காணிப்புக் கோபுரத்தில இருந்து இறங்கி வந்து குதிச்சால் மூண்டடிக்கு பனி மூடி இருந்திச்சுது. 

பக்கத்தில இருந்த mobile கக்கூசுக்க போய் கடமையை முடிச்சிட்டு திருப்பியும் ஏறத் தொடங்கினான். இப்பிடி எல்லையில நிக்கிறதுக்கு பேசாம நேர சண்டைக்குப் போய் செத்தாலும் பரவாயில்லை எண்டு யோசிச்சுக் கொண்டே ஏற எங்கயோ ஒரு ஓநாய் ஊளையிட்டது. Drone attack எண்டு ஒரு பக்கம் வளந்தாலும் இந்த எல்லைப் பாதுகாப்புக்கு ரெண்டாம் உலக யுத்தம் மாதிரி முள்ளுக்கம்பி வேலி, காவல் கோபுரம் , focus light தான் . ஆனால் நல்ல night vision goggles, M 82 sniper, focusing lunar lights இருந்தும் ஒவ்வொரு தரமும் மூத்திரத்துக்கு ஏறி இறங்க வேண்டி இருக்கு இந்தக் குளிருக்க எண்டு புறுபுறுத்த படி திருப்பியும் focus light ஐ auto rotation இல விட்டிட்டு அடுத்த சுருட்டைத் தேடினான். 

முல்லைத்தீவு ஜூன் 2022

“இந்த முடிவு தற்கொலை மாதிரி, யோசிச்சு செய்யுங்கோ” எண்டு ஆரோ சொன்னதையும் தாண்டி எதிர்காலம் மனிசி பிள்ளையெல்லாம் கண்ணைவிட்டுப் போகாம இருக்கேக்க எடுத்த முடிவு தான் இது . “எப்பிடியாவது செய்யோணும் எவ்வளவு காலம் தான் இப்பிடி இருக்கிறது எங்களுக்கு ஒரு விடிவு காலம் வர வேண்டும் எண்டால் இந்த முடிவை நான் எடுக்கவேண்டும்” எண்டு தீர்மானிச்சுத் தான் போக சம்மதிச்சனான் என்றான் கரன். 

“ அண்ணை பிளான் எல்லாம் ரெடி,சொன்னபடி செய்யுங்கோ ஒண்டுக்கும் பயப்பிட வேண்டாம் , மற்ற ஆக்களை கொழும்பில் சந்திக்கலாம்” எண்டான் வந்தவன். பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆர் மற்ற ஆக்கள் எண்டு சொல்லேல்லை. “கொழும்பில உங்களை ஒரு வீட்டில தங்க வைப்பம் என்டை வேலை இது மட்டும் தான் அங்க வேற ஒராள் சந்திப்பார்” எண்டு சொல்லீட்டு தேவையான பேப்பரை எல்லாம் குடுத்திட்டுப் போனார். 

பெலரூஸ் December 2022

ஒரு ஓநாய் எண்டு பாத்தால் ரெண்டு மூண்டு சத்தம் போட , “ இண்டைக்கு இதுகளுக்கு குளுமாடு ஒண்டு மாட்டீட்டுப் போல” எண்டு மைக் சொன்னதை கவனிக்காம சினைப்பரை load பண்ணி light ஐ ஒரே பக்கமாத் திருப்பி நிப்பாட்டி ஏதோ நடக்கப் போகுது எண்டு உள்ளுணர்வு சொன்னதுக்கு மதிப்புக் குடுத்து உத்துப் பாத்தபடி நிண்டான் அன்ரனோவ் . அண்மைக்காலமாக ஊடுருவல் இந்தப் பக்கமாத்தான் நடக்குது எண்ட தகவல் பெலரூஸ் முப்படையின் மேலிடத்துக்கு வர , இதுக்கு best sniper ஆள் தேவை எண்டு தான் அன்ரனோவ் இங்கு இடம் மாறி அனுப்பப்பட்டவன். 

விடிய நாலு மணி ,நாயும் பேயும் கூட நித்திரையா இருக்கேக்க , telescope இல இருந்து எடுக்காத கண்ணை கூர்மையாக்கினான் அன்ரனோவ். ஊர்ந்து வாற ஒரு உருவத்தைப் பாத்து . உடனே மைக்கை எழுப்ப அவன் அரைத் தூக்கத்தில சுட வெளிக்கிட வேண்டாம் எண்ட அன்ரனோவ், எவனையாவது பலிக்கடாவா முன்னுக்கு அனுப்பி சூடு விழுந்தா direction ஐ மாத்தி மற்றவங்கள் தப்பீடுவாங்கள் எண்ட படியால் சுடாமல் கிட்ட வரவிட்டு இறங்கிப் போய் பிடிப்பம் எண்டு முடிவு பண்ணீட்டு இறங்கி மூண்டடி பனிக்குள்ளால இழுத்து இழுத்து நடந்து போனான். அசைஞ்ச உருவம் அப்பிடியே நிக்க லோட்பண்ணின பிஸ்டலோட கிட்டப் போய் பாத்தவன் shock ஆகினான்.

முல்லைத்தீவு November 2022

இரகசியாமாப் போங்கோ எண்டு சொன்ன படியால் இரவு மனிசி பிள்ளைகளோட ஒண்டாப் படுத்திட்டு , விடியப் பிள்ளைகள் எழும்ப முதல் அழத் தொடங்கின மனிசீன்டை முகத்தைப் பாக்காமல் ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம் எண்டு இறுக்கிச் சொல்லீட்டு ரெண்டு உடுப்போட ஒரு பையைக் கொண்டு போனான். கொழும்பு பஸ்ஸில ஏறி ஜா-எல வில இறங்கி வீடு தேடிப் போனா ஏற்கனவே மிச்ச ஆறு பேரும் வந்திருந்திச்சினம் . அறிமுகத்தோட கொஞ்சமாக் கதைச்சிட்டு எப்ப வெளிக்கிடிறது எண்டு பாத்துக்கொண்டிருந்தம். 

ரெண்டு நாளா நேரத்துக்கு நேரம் சாப்பாடு வந்திச்சுது வெளீல ஒருத்தரும் போகேல்லை. என்ன செய்யப் போறம் எண்டு தெரிஞ்சாலும் எப்பிடி எண்ட பிளான் தெளிவா இல்லை . இருந்த ஆறில ரெண்டு வாடல் 18 வயது தான் இருக்கும் எண்டாலும் எங்களோடு சேர்ந்திருந்திச்சுது. இண்டைக்கு இரவு எண்டு சொன்னவன்டை கதையை நம்பி மூண்டு இரவு இருந்து பாத்தம் . வந்த வாடல் ஒண்டு “எனக்குப் பயமா இருக்கு நான் அம்மாட்டைப் போப்போறன்” எண்டு ஓடீட்டுது . 

வெளீல ஆக்கள் இருக்கிற மாதிரி காட்ட வேண்டாம் எண்டு சொன்னதால சமைச்சுக்கூட சாப்பிடிறேல்லை. ரெண்டு கிழமையால வந்தவன் தேவையான உடுப்பு , போற map , location காட்ட GPS phone எல்லாம் கொண்டு வந்து தர இரவுப் பயணம் உறுதியானது. இனி சாப்பாடு எப்பிடியோ தெரியாது எண்டு போட்டு கொத்து வாங்கிச்சாப்பிட்டிட்டு வெளிக்கிட்டம். நீங்கள் எல்லாரும் ஒண்டாப் போகாதேங்கோ ரெண்டு குறூப்பாய் போய் அங்கால திருப்பி ஒண்டாச் சேந்து போங்கோ எண்டு சொல்ல, சூசையப்பரையும் வைரவரையும் துணைக்கு கூப்பிட்டிட்டு வெளிக்கிட்டம். 

Belarus 2022

மைக் தலைமையகத்துக்கு பிரச்சினையை அறிவிக்க அந்த இடம் திடீரெண்டு busy ஆகிச்சுது. ராணுவம் மட்டும் வந்து சேந்து நிலமையைப் பாத்து அம்புலன்ஸ் ஒண்டைக் கூப்பிட்டது. தன்னைக் கண்டு பிடிச்ச அன்ரனோவை கண்டதும் கண்மட்டும் ஒளிக்க தன்டை உடம்பில உயிர் மட்டும் எப்பிடி ஒட்டி இருக்குது எண்டு விளங்காமல் அவன் மயக்கமானான். . “அம்மா , ஈழம் , தமிழ்” எண்டு அவன் கதைக்கிற பாசை விளங்காமல் அன்ரனோவ் முழிச்சான். அப்பிடியே மயக்காமனவனை அம்புலன்ஸ் கொண்டு போக , தான் சுடாமல் விட்டது நல்லதே எண்ட நெச்ச அன்ரனோவ் வேலை முடிஞ்சு வெளிக்கிட்டான் பிறகொருக்கா அவனைப் போய் ஆஸ்பத்திரீல பாக்கோணும் எண்ட நினைப்போட. 

யாழப்பாணம் May 2023

வழமை போல இந்த மாதமும் சுண்டுக்குளி ஜெய்ப்பூர் நிறுவனத்தில செயற்கை கை கால் தேவைப்படிற நோயாளிகளைப் பாக்கப் போன எனக்கு , “சேர் ஒரு special patient, இவருக்கு என்னவும் செய்ய ஏலாதா” எண்ட ஏக்கத்தோட வேலை செய்யிறாக்கள் கொண்டந்து காட்டிச்சினம். வந்து பாத்தா , “ பெலாரூஸ் , அன்ரனோவ் , பிரான்ஸ், வேலை” எண்டு அடிக்கடி சொன்னபடி படுத்திருந்தான் கரன். 

ஊரெல்லாம் கடன் வாங்கி, இருந்த ஒரே பட்டறையையும் ஈடு வைச்சுப் பிரான்சுக்கு போகிற ஆசையில வெளிக்கிட்டு இப்ப ரெண்டு கையும் இல்லாமல் காலும் இல்லாமல் திரும்பின கரனின் கதையைக் கேட்டு ஏற்பட்ட பரிதாபம் அவன் மேலயா இல்லை அவனை மாதிரி இன்னும் போக இருக்கிற ஆக்கள் மேலயா எண்டு தெரியேல்லை.

“பெலரூஸ் நகரில் பனியில் உறைந்து ஐந்து தமிழர் மரணம் , ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் ” எண்ட செய்தி போட்டிருந்த பேப்பரை ஒருத்தரும் பாத்ததாத் தெரியேல்லை. ஏனெண்டால் அடுத்த கிழமை பிரான்ஸ் போக அடகு வைக்க நகையைச் சுத்திக் கொண்டு போன இன்னொரு கரனின் கையில் இந்தச் செய்தியுடன் இருந்த அந்தப் பேப்பர் அடகு கடை குப்பைக்குள் எறியப்பட்டிருந்தது.  

Dr. T. கோபிசங்கர்

யாழப்பாணம்

  • Like 1
  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அண்ணை பிளான் எல்லாம் ரெடி,சொன்னபடி செய்யுங்கோ ஒண்டுக்கும் பயப்பிட வேண்டாம் , மற்ற ஆக்களை கொழும்பில் சந்திக்கலாம்

கதை வேற மாதிரி என்று நினைத்தால்… ம் இதுவும் ஒரு போராட்டம்தான். Dr. கோபிசங்கருக்கு வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடி வெளிநாடு போகலாம் எனத் தவிப்போடு பலர்!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.