Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ்காந்தி கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் காஞ்சிமடத்திலிருந்து எச்சரிக்கை வெளியானது - சுயசரிதை புத்தகத்தில் டி.என்.சேஷன் அதிர்ச்சி தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

11 JUN, 2023 | 12:07 PM
image
 

ராஜீவ் காந்தி கொலை குறித்த அதிர்ச்சி தகவல்களை டி.என்.சேஷன் எழுதிய சுயசரிதை நூலான ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் கடந்த 2019-ம் ஆண்டு மறைந்த நிலையில் கடந்த வாரம் அவரின் சுயசரிதை நூலான ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ புத்தகம் வெளியானது. அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு ஒருவாரம் முன்பு ராஜீவ் காந்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என காஞ்சி சங்கர மடத்திலிருந்து எச்சரிக்கப்பட்டதாக சேஷன் குறிப்பிட்டுள்ளார்.

Through-the-Broken-Glass-front-scaled.jp

புத்தகத்தில் இது குறித்து டி.என்.சேஷன் குறிப்பிட்டுள்ளதாவது ”1991-ம் ஆண்டு மே 10-ம் தேதி ராஜீவ் காந்தியை தொடர்புகொண்டு தனிப்பட்ட முறையில் எச்சரித்தேன். திறந்தவெளியில் பிரசாரம் செய்வதை மறுபரிசீலனை செய்யுமாறு நான் மீண்டும் அவரைக் கேட்டுக் கொண்டேன். ஆனால் அதற்கு நான் இரு முறை இறக்கமாட்டேன் என சிரித்துக்கொண்டே அவர் பதிலளித்தார்.

4 நாட்கள் கழித்து மே 14-ம் தேதி ராஜீவ் காந்தியை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி காஞ்சி சங்கர மடத்திலிருந்து அழைப்பு வந்தது. நான் எச்சரித்தும் அவர் பிரசாரம் செய்கிறார் என பதிலளித்தேன். இது குறித்து உடனடியாக அவருக்கு தந்தி அனுப்பினேன். அது மே 17-ம் தேதி அவரின் மேசைக்குச் சென்றது. ஆனால் அதை படிப்பதற்கு முன்பே மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். நான் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்தேன். அவரின் இறுதி சடங்கில் பங்கேற்காமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தேன்” இவ்வாறு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1988-89ம் ஆண்டில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டி.என்.சேஷன் சிறப்பு பாதுகாப்பு குழு சட்ட முன்வரைவை தயார் செய்து தாக்கல் செய்தார். இந்த சட்டத்தின்படி பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும் முன்னாள் பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் ராஜீவ் காந்தி இந்த சட்டத்துக்கு மறுப்பு தெரிவித்தார்.

இதுகுறித்து சேஷன் தனது புத்தகத்தில் ”மக்கள் சுயநலத்துடன் இந்த சட்டத்தை நிறைவேற்றியதாக கருதுவார்கள் என நினைத்த ராஜீவ் காந்தி பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்துக்கு மட்டும் பொருந்தும் வகையில் இச்சட்டத்தை இயற்றுமாறு அறிவுறுத்தினார். முன்னாள் பிரதமர் மற்றும் குடும்பத்துக்கு தேவையில்லை” என கூறியதாக டி.என்.சேஷன் சுயசரிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/157441

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகச் சொன்னால், ராஜீவ் இறப்பதற்கு சரியாக 3 வருடங்கள், பத்து மாதங்களுக்கு முன்னரே அவரது இறப்புக் குறித்து செய்தி வந்திருந்தது. அதாவது 1987 ஆம் ஆண்டு ஆடி 29 ஆம் திகதி, இலங்கைத் தமிழரின் அவலங்களைச் சாட்டாக வைத்து இந்தியாவின் நலன்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, உப்புச் சப்பில்லாத மாகாணசபை முறையினை தமிழர்கள் மேல் திணித்தபோதே தனது முடிவுரையினை ராஜீவ் எழுதிவிட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அடிப்படையில் காஞ்சிமடம் ராஜீவுக்கு திடீர் என்று அவரின் இறப்புக்கு முன்பாக பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்தது? ராஜீவின் உயிர் பிரியபோகிறது, அவரின் ஆயுள் கெட்டி இல்லை, இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என்பதும் முன்கூட்டியே காஞ்சி மடத்துக்கு தெரிந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். வெறும் சாத்திரம் ஜோதிடக் கணிப்பு என்பனவற்றை மட்டும் நம்பி நாட்டின் பிரதமருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது என்றால் இந்திய தேசிய பாதுகாப்பு மற்றும் வி.ஐ.பி காவல் சேவைகள் பிரிவில் காஞ்சி மடத்திலிருந்தும் ஆட்களை இணைத்துக்கொண்டால் சிறப்பாக செயற்படலாம். ராஜீவ் கொலை வழக்கில் ரி.என். சேசனையும் காஞ்சி மடத்து பெரியவர்களையும்  அழைத்து விசாரித்திருந்தால் எல்லா  உண்மைகளும் தெரிந்திருக்கும்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

தவறுகளில் இருந்து பாடம் கற்காதவரை எந்த இனமும் விடுதலைக்குத் தகுதியடையப்போவதில்லை. 

😏

2 hours ago, vanangaamudi said:

எந்த அடிப்படையில் காஞ்சிமடம் ராஜீவுக்கு திடீர் என்று அவரின் இறப்புக்கு முன்பாக பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்தது?

ராஜீவின் உயிர் பிரியபோகிறது, அவரின் ஆயுள் கெட்டி இல்லை, இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என்பதும் முன்கூட்டியே காஞ்சி மடத்துக்கு தெரிந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். வெறும் சாத்திரம் ஜோதிடக் கணிப்பு என்பனவற்றை மட்டும் நம்பி நாட்டின் பிரதமருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது....

கொலைத் திட்டம் தீட்டப்பட்டதே சந்திராசுவாமி போன்றவர்களின் அனுசரணையுடனேயே என்றுதான் நம்பப்படுகிறது. அவர்களிடையே அனுசரணை இருப்பது புதியதா இல்லையே. 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டி.என். சேஷன்: இந்திய தேர்தல் ஆணையத்தின் நாயகனாக பார்க்கப்படுவது ஏன்?

டி.என்.சேஷன் - இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரெஹான் ஃபசல்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

“எத்தனையோ பேர் தலைமை தேர்தல் ஆணையராக இருந்துள்ளனர். ஆனால், சேஷன் போன்றோர் தலைமை தேர்தல் ஆணையராக இருப்பது எப்போதோ ஒருமுறைதான் நிகழும்."

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான மனு ஒன்றை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம் கூறிய வார்த்தைகள் இவை.

இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரியாக 1990 முதல் 1996 வரை பதவியில் இருந்த டி.என்.சேஷன் தேர்தல் ஆணையத்தில் அப்படி என்ன புரட்சியைச் செய்தார்?

கடந்த 1972-ல் அணுசக்தி ஆணையத் தலைவராக இருந்த ஹோமி சேத்னா, தனது துறையில் துணைச் செயலாளராகப் பணியாற்றிய டி.என்.சேஷன் குறித்து ஒரு ரகசிய அறிக்கையைக் கெடுத்தார்.

 

இதற்குப் பதிலளித்த சேஷன், அமைச்சரவைச் செயலர் டி.சுவாமிநாதனுக்கு 10-பக்க கடிதம் ஒன்றை எழுதி, தனக்கு எதிரான கருத்துக்களை அந்த ரகசிய அறிக்கையில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இது நடந்து மூன்று மாதங்களுக்கு பின்னர், பிரதமர் இந்திரா காந்தியின் அலுவலகத்தில் இருந்து சேஷனுக்கு அழைப்பு வந்தது. 'பிரதமர் உங்களை பார்க்க விரும்புகிறார்' என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்திரா காந்தியை சந்திப்பதற்காக சேஷன் சென்றபோது அவர் கோப்புகளில் எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட 'உடைந்த கண்ணாடி வழியாக (Through the Broken Glass)' என்ற சுயசரிதையில் இந்த சந்திப்பு குறித்து டி.என்.சேஷன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இந்திரா காந்தி கோப்பிலிருந்து தலையை உயர்த்தி என்னிடம் நீங்கள்தான் சேஷனா? ஏன் இப்படி தவறாக நடந்து கொள்கிறீர்கள்? சேத்னா ஏன் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்," என்றார்.

 

“மேடம், நான் இன்றுவரை இந்த விஷயத்தை யாரிடமும் சொன்னதில்லை. விக்ரம் சாராபாய் மற்றும் ஹோமி சேத்னா இடையே கடுமையான வேறுபாடுகள் உள்ளன. நான் விக்ரமுடன் வேலை செய்து கொண்டிருந்ததால் சேத்னா எனக்கு எதிராக செயல்படுகிறார்,' என்று நான் பொறுமையாக பதிலளித்தேன்.

"நீங்கள் மூர்க்கமானவரா என்று இந்திரா கேட்டதற்கு, 'என்னிடம் எதாவது பணியை ஒப்படைத்தால் அதனை நான் மூர்க்கமாக செய்து முடிப்பேன்' என்றேன். நீங்கள் ஏன் மக்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறீர்கள்? என்று அடுத்த கேள்வியை இந்திரா எழுப்பினார். அதற்கு நான், 'குறிப்பிட்ட நேரத்திற்குள் சில வேலைகளைச் செய்யாவிட்டால், என் நடத்தை மோசமாக இருக்கும்,' என்று சொன்னேன்.

"நீங்கள் பிறரை அச்சுறுத்துகிறீர்களா? என்று இந்திரா மீண்டும் கேட்டார். நான் அப்படிப்பட்ட ஆளில்லை என்று பதிலளித்தேன். உடனடியாக, இந்திரா தனது உதவியாளரை அழைத்து, 'அவரைக் கூப்பிடுங்கள்' என்றார். அப்போதுதான் ஹோமி சேத்னா உள்ளே வந்தார். அவரிடம் இந்திரா காந்தி நேரடியாகவே, 'இந்த இளைஞரைப் பற்றி ரகசிய அறிக்கையில் ஏன் இப்படியெல்லாம் எழுதுனீர்கள்?' என்று கேட்டார்.

"பின்னர், 'இன்னும் இங்கே என்ன செய்கிறாய்?' என்று கேட்பது போல் இந்திரா காந்தி என்னை பார்த்தார். இந்திரா காந்தியும் என் மீது கோபமாக இருக்கிறார் என்று நான் நினைத்தேன். ஆனால், பத்து நாட்கள் கழித்து, ரகசிய அறிக்கையில் எனக்கு எதிரான அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்திடம் இருந்து எனக்கு கடிதம் வந்தது," என்று குறிப்பிடுகிறார்.

டி.என்.சேஷன் - இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

பட மூலாதாரம்,PHOTO DIVISION

 
படக்குறிப்பு,

ஹோமி சேத்னா

சட்ட அமைச்சருடன் ஏற்பட்ட பிணக்கு

டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றதும், சட்ட அமைச்சர் விஜய பாஸ்கர் ரெட்டி, நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று கேட்கத் தொடங்கினார்.

இதற்கு சேஷன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தேர்தல் ஆணையம் என்பது அரசின் துறை அல்ல என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அப்போதைய பிரதமர் நரசிம்மராவிடம் இந்தப் பிரச்னையை எடுத்துச் சென்றார் விஜய பாஸ்கர்.

" 'நீங்கள் ஒத்துழைக்க மறுக்கிறீர்கள்,' என்று விஜயபாஸ்கர் பிரதமர் முன்னிலையில் என்னிடம் கூறினார். அதற்கு நான், 'நான் ஒன்றும் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்தவன் அல்ல. தேர்தல் ஆணையத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்,' என்று பதிலளித்தேன்.

"இதைக் கேட்ட பிரதமர் அதிர்ச்சியடைந்தார். பிறகு நான் பிரதமரிடம் திரும்பி, 'மிஸ்டர் பிரைம் மினிஸ்டர், உங்கள் அமைச்சருக்கு இதே மனப்பான்மை இருந்தால், அவருடன் என்னால் பணியாற்ற முடியாது' என்றேன்," என டி.என்.சேஷன் தனது சுயசரிதையில் விவரித்துள்ளார்.

அதேபோல, ஒருமுறை சட்டச் செயலாளர் ரமாதேவி தேர்தல் ஆணையத்துக்குப் போன் செய்து, எட்டாவா இடைத்தேர்தலை இப்போது நடத்தக் கூடாது என்று சட்டத்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் விரும்புவதாகக் கூறினார்.

இந்த விவகாரத்தை தான் கையாண்ட விதத்தை தனது புத்தகத்தில் சேஷன் எழுதியிருக்கிறார்.

டி.என்.சேஷன் - இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

பட மூலாதாரம்,PHOTO DIVISION

 
படக்குறிப்பு,

விஜய பாஸ்கர் ரெட்டி

"நான் பிரதமரை நேரடியாக அழைத்து, 'நான் குதிரை என்றும் என் மீது சவாரி செய்யலாம் என்றும் தவறான எண்ணத்தை அரசாங்கம் கொண்டிருக்கக்கூடும். இதை நான் ஏற்க மாட்டேன்,' என்றேன்.

"ஒரு முடிவைச் செயல்படுத்த உங்களுக்கு நல்ல காரணம் இருந்தால், எனக்குத் தெரியப்படுத்துங்கள். அதில் எனது கருத்தை நான் கூறுவேன். ஆனால் நான் ஒரு உத்தரவைப் பின்பற்ற மாட்டேன். என்றேன்

"நான் பேசுவதைக் கேட்டதும், ரங்கராஜனுடன் பேசி உங்கள் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று பிரதமர் என்னிடம் கூறினார். அதற்கு நான், 'இந்த விஷயத்தில் உங்களுடன் தீர்வு காண்பேன், அவருடன் அல்ல,' என்றேன்.

“தேர்தல் ஆணையத்தின் முடிவில் செல்வாக்கு செலுத்த முயன்றதற்காக ரங்கராஜன் என்னிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். வறட்சி, வெள்ளம், கொள்ளைநோய் போன்றவற்றைப் பற்றி எங்களுக்குத் தெரியாவிட்டால், அப்போது சொல்லுங்கள் எங்களால் தேர்தலை நடத்த முடியாது என்று.

"ஆனால், இதைச் செய்யாதே, இதைச் செய் என்று நீங்கள் என்னிடம் சொல்ல முடியாது. அன்றைக்கே ரங்கராஜன் என்னை அழைத்து தமிழில் பேசினார். என்ன விஷயம் என்று கேட்டார். நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன்.

“அதே நாளில், 12 மணியளவில், சட்ட அமைச்சகத்தின் இணைச் செயலர் ஒருவர், சட்டச் செயலாளரின் கடிதத்துடன் தேர்தல் இல்லத்துக்கு வந்தார். அந்தக் கடிதத்தில், 'நான் பேசியதற்கும் எழுதியதற்கும் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,' என்று எழுதப்பட்டிருந்தது."

டி.என்.சேஷன் - இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

பட மூலாதாரம்,RUPA

அனைத்து தேர்தல்களுக்கும் தடை விதித்து உத்தரவு

ஆகஸ்ட் 2, 1993 அன்று, தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை அரசாங்கம் அங்கீகரிக்கும் வரை நாட்டில் எந்தத் தேர்தலும் நடத்தப்படாது என்று 17-பக்க ஆணை ஒன்றை வெளியிட்டார் சேஷன்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தல், அறிவிக்கப்பட்டுள்ள மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் உட்பட, தன் கட்டுப்பாட்டில் நடக்கும் அனைத்து தேர்தல்களையும் மறு உத்தரவு வரும் வரை ஒத்தி வைக்க, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக, சேஷன் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தின் ராஜ்யசபா தொகுதிக்கான தேர்தலை சேஷன் அனுமதிக்கவில்லை, இதன் காரணமாக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

இதனால் கோபமடைந்த மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, சேஷனை ‘பைத்தியக்கார நாய்’ என்று விமர்சித்தார்.

சொல்லப்போனால், சேஷன் மீது அதிருப்தியில் இருந்தவர்கள் அவரை முதுகிற்கு பின்னால், 'அல்சேஷன்' என்று அழைக்கத் தொடங்கினர்.

டி.என்.சேஷன் - இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஜோதி பாசு

கூடுதலாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம்

அக்டோபர் 1, 1993 அன்று, சேஷன் புனேவில் இருந்தபோது, புதிய தேர்தல் ஆணையர்களாக ஜி.வி.ஜி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.எஸ்.கில் ஆகியோரை மத்திய அரசு நியமித்தது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விட்டல்ராவ் காட்கில் இது தொடர்பாக கிண்டலாக, “சேஷனின் பணிக்கு கைகொடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

இதைப்பற்றி எழுதும் சேஷன், "எனது பணிச்சுமை என்பது காலையில் 10 நிமிடங்களும் மாலையில் 3 நிமிடங்களும் இருக்கும். மீதி நாள் முழுவதும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் உள்ள குறுக்கெழுத்து புதிர்களைத் தீர்ப்பதில் எனது நேரத்தை செலவழித்தேன். என் வாழ்க்கையில் முதல்முறையாக, என்னால் என் அலுவலக நாற்காலியில் உட்கார முடிந்தது. ஆனால் உட்கார்ந்திருக்கும்போதே நான் தூங்கிவிட்டேன். அது எந்த நோயினாலோ அல்லது முதுமையினாலோ அல்ல, சலிப்பின் காரணமாக," என்கிறார்.

"நான் மிகவும் பரபரப்பாக இருக்கிறேன் என்று கூறப்படுவதன் உண்மைநிலை இதுதான். யாரோ ஒருவர் என் பரபரப்பை மேலும் குறைக்க முயற்சிக்கிறார் என்பதுதான் அதில் இருந்தது," என்று தனது சுயசரிதையில் சேஷன் எழுதியிருக்கிறார்.

இந்த இரண்டு தேர்தல் ஆணையர்களின் சம்பளமும் டிஎன் சேஷனுக்கு இணையாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த அவசரச் சட்டத்தை முதலில் நாடாளுமன்றத்தில் விவாதித்திருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.ஆர்.கன்னா விமர்சித்திருந்தார்.

பிரபல நீதிபதி ஃபாலி நாரிமன், "இவை அனைத்தும் தலைமைத் தேர்தல் ஆணையரின் அதிகாரத்தைக் குறைக்கவே செய்யப்பட்டுள்ளன. இது அவரது சுயாட்சியை நிச்சயம் பாதிக்கும்," என்று கூறியிருந்தார்.

டி.என்.சேஷன் - இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

பட மூலாதாரம்,RUPA

 
படக்குறிப்பு,

கில், சேஷன், கிருஷ்ணமூர்த்தி

முதல் கூட்டத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்

மூன்று தேர்தல் ஆணையர்களின் முதல் கூட்டம் சரியாக நடக்கவில்லை.

இது குறித்து சேஷன் சொல்லும்போது, "கிருஷ்ணமூர்த்தி என் அறைக்கு வந்து மூலையில் கிடந்த சோபாவில் அமர்ந்து என்னை சோபாவில் உட்காரச் சொன்னார். நான் எங்கு உட்கார்ந்திருக்கிறேனோ அங்கே நன்றாகதான் இருக்கிறேன் என்று நான் கூறினேன்."

அதற்கு கிருஷ்ணமூர்த்தி, "உங்கள் மேஜையின் முன் கிடக்கும் நாற்காலிகளில் உட்காருவதைத் தவிர்த்தேன். இவை அனைத்தும் உங்கள் பியூன்களுக்கானது என்றார். பின்னர் கில் அறைக்குள் நுழைந்தார். அப்போது கில்லிடம் கிருஷ்ணமூர்த்தி, 'கில், அவருக்கு முன்னால் உள்ள நாற்காலியில் உட்கார வேண்டாம். அவரை இங்கே வந்து சோபாவில் உட்காரச் சொல்லுங்கள்,' என்றார்.

"சோபாவில் வந்து அமர்வதில் உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை உண்டா என்று கில் என்னிடம் கேட்டார். 'வேறொரு நாளில் நான் சோபாவில் உட்காருவேன் அல்லது தரையில் கூட உட்கார முடியும், ஆனால் இன்று முடியாது,' என்று நான் பதிலளித்தேன். அப்போது கிருஷ்ணமூர்த்தி என்னை பரிகாசம் செய்ய தொடங்கினார். கில் நின்றுகொண்டிருந்தார். சோபாவில் கிருஷ்ணமூர்த்தியின் பக்கத்தில் உட்கார வேண்டுமா அல்லது எனக்கு எதிரே உள்ள நாற்காலியில் உட்கார வேண்டுமா என்று அவருக்குப் புரியவில்லை.

"இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி தனது இடது காலை உயர்த்தி மேசையில் வைத்தார். பின்னர் அவர் என்னிடம் வந்து கை குலுக்க விரும்புகிறீர்களா என்று கேட்டார். நான் அமைதியாக இருந்தேன். அதன் பிறகு இருவரும் அறையை விட்டு வெளியேறினர். மறுநாள் நாளிதழ்களில் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டது. கிருஷ்ணமூர்த்தி மற்றும் கில் என் அலுவலகத்தை விட்டு வெளியேறினர்," என்று எழுதியிருக்கிறார்.

டி.என்.சேஷன் - இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

எம்.எஸ்.கில்

துணை தேர்தல் ஆணையருக்கு பொறுப்பை ஒதுக்கிய சேஷன்

கிருஷ்ணமூர்த்தி, கில் ஆகியோருக்கு டி.என்.சேஷன் ஒத்துழைக்கவில்லை.

அவர் அமெரிக்கா சென்றபோது இந்த இருவருக்கு பதிலாக துணை தேர்தல் ஆணையர் டி.எஸ்.பக்காவிடம் தனது பொறுப்பை ஒப்படைத்தார்.

சேஷனின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது சேஷன் இல்லாத பட்சத்தில் எம்.எஸ்.கில் தலைமை தேர்தல் ஆணையராக செயல்படுவார் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசியல்வாதிகளில் சேஷனை விரும்பிய ஒரே நபர் ராஜீவ் காந்தி மட்டுமே.

வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளராக சேஷன் இருந்தபோது, விடுமுறையில் கூட அலுவலகம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அக்டோபர் 2, 1986 அன்று, அவர் தனது அலுவலகத்தில் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கிரிக்கெட் வர்ணனை வருவதை நிறுத்திவிட்டு, ராஜ்காட்டில் ஒருவர் ராஜீவ் காந்தியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக ஒரு செய்தி பளிச்சிட்டது.

மறுநாள், ராஜீவ் காந்தி சேஷனை அழைத்தார்.

டி.என்.சேஷன் - இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

பட மூலாதாரம்,RUPA

 
படக்குறிப்பு,

ராஜீவ் காந்தியுடன் சேஷன்

"நான் அவரது வீட்டை அடைந்தபோது, சுற்றியும் காவலர்கள் இருந்தனர். ராஜீவ் காந்தி என்னிடம், 'சேஷன், நேற்று நடந்த சம்பவத்தை நீங்கள் விசாரித்து என்னிடம் அறிக்கையை ஒப்படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்,' என்றார். அதற்கு நான், 'இதுவரை இதுபோன்ற வேலையை செய்ததில்லை. என்னை விட வேறு யாராலும் இந்த வேலையை சிறப்பாக செய்ய முடியும்,' என்றேன்.

"நீங்கள் பயமின்றி பேசுகிறீர்கள். நீங்கள் யாருக்கும் பயப்பட மாட்டீர்கள். அதனால்தான் இந்த பொறுப்பை உங்களிடம் தருகிறேன் என்று ராஜீவ் காந்தி கூறினார். இந்த அறிக்கையை சமர்ப்பிக்க எனக்கு 4 வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

"பாதுகாப்பு அமைப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து 150-பக்க அறிக்கையை ராஜீவ் காந்தியிடம் சமர்ப்பித்தேன், மேலும் பிரதமரின் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தேன்," என்று இந்த சம்பவம் குறித்து தனது புத்தகத்தில் சேஷன் குறிப்பிட்டுள்ளார்.

டி.என்.சேஷன் - இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

பட மூலாதாரம்,KONARK PUBLICATION

கூடுதல் சுமையாக பிரதமரின் பாதுகாப்பையும் ஏற்க வேண்டிய சூழல்

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 15 அன்று, பாலம் விமான நிலையத்தில் ராஜீவ் காந்தியைச் சந்திக்கும்படி சேஷனுக்குப் பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது.

ராஜீவ் காந்தியை ஏற்றிச் செல்வதற்காக சிவப்பு நிற குண்டு துளைக்காத ஜீப் ஒன்று விமான நிலையத்திற்கு வந்தது. ராஜீவ் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தார். அவருக்கு அருகில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் அமர்ந்தார். சேஷன் பின் இருக்கையில் அமர்ந்தார்.

இது தொடர்பாக புத்தகத்தில் அவர், " 'பிரதமரின் பாதுகாப்புக்கு நீங்கள் கொடுத்த ஆலோசனைகளை நீங்கள் செயல்படுத்த வேண்டும்,' என்று ராஜீவ் கூறினார். 'இதற்கு நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?' என்று அவரிடம் கேட்டேன். 'பாதுகாப்பை உங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதன் மூலம்,' என்று ராஜீவ் பதிலளித்தார்."

"என் அருகில் அமர்ந்திருந்த சிதம்பரம், 'இது நல்ல யோசனை,' என்றார். 'சேஷனுக்கு பதிலாக மற்றொரு வன மற்றும் சுற்றுச்சூழல் செயலாளரைக் கண்டுபிடிப்போம்,' என்றும் கூறினார். ஆனால் ராஜீவ் அதை விரும்பவில்லை. சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு துறைகள் இரண்டையும் நான் கவனிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,” என்று எழுதியிருக்கிறார்.

டி.என்.சேஷன் - இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

பட மூலாதாரம்,KONARK PUBLICATION

 
படக்குறிப்பு,

மனைவியுடன் சேஷன்

முன்னாள் பிரதமரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு

ராஜீவின் பாதுகாப்பைக் கண்காணிக்க, சேஷன் அடிக்கடி ராஜீவின் வீட்டிற்குச் செல்லத் தொடங்கினார். மெதுவாக ராஜீவிற்கு நெருக்கமானார்.

ஆனால் ராஜீவ் தனது பாதுகாப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் கொழும்பு செல்வதை சேஷன் கடுமையாக எதிர்த்தார். ஆனால் ராஜீவ் அவர் பேச்சைக் கேட்கவில்லை.

அதன் விளைவு, அங்கு இலங்கை கடற்படை வீரர் ஒருவர் ராஜீவை துப்பாக்கியால் தாக்கினார்.

ராஜீவின் வாயிலிருந்து சேஷன் பிஸ்கட்டை எடுத்த சந்தர்ப்பங்களும் உண்டு. பரிசோதிக்கப்படாத எதையும் பிரதமர் சாப்பிடக் கூடாது என்பது சேஷனின் வாதமாக இருந்தது.

பிரதமருக்கான சிறப்பு பாதுகாப்பு குழு சட்டம் (Special Protection Group Act - SPG Act) இயற்றப்பட்டபோது, அதில் பிரதமரைத் தவிர, அவரது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்கும் இச்சட்டம் பொறுப்பேற்க வேண்டும் என்ற விதி இருந்தது.

முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் இதில் சேர்க்க வேண்டும் என்று ராஜீவிடம் முன்மொழிந்தார் சேஷன்.

"இன்று நீங்கள் பிரதமர். நாளை நீங்கள் இந்த பதவியில் இருந்து விலகலாம். ஆனால் அப்போதும் உங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கும். அமெரிக்க அதிபர் பதவிக் காலம் முடிந்த பிறகும் அவருக்காகவும் அவரது மரணத்திற்கு பின்னர் அவரது குடும்பத்தினருக்காகவும் எஃப்.பி.ஐ வேலை செய்வதை நான் ராஜீவுக்கு உதாரணம் காட்டினேன்."

"ஆனால் ராஜீவ் இதற்கு சம்மதிக்கவில்லை. தனது தனிப்பட்ட நலனுக்காக இதை செய்கிறார் என்று மக்கள் நினைப்பார்கள் என்று அவர் எண்ணினார். நான் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தேன் ஆனால் வெற்றிபெறவில்லை."

டி.என்.சேஷன் - இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வி.பி.சிங் (இடது), சந்திரசேகர்

அமைச்சரவை செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட சேஷன்

வி.பி.சிங் பிரதமரான அடுத்த நாளே, ராஜீவ் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு SPG பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா என்று பரிசீலிக்க ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.

ராஜீவ் காந்திக்கு பிரதமராக கிடைக்கும் அதே பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கேபினட் செயலாளர் என்ற முறையில் சேஷன் அறிவுறுத்தினார்.

ஆனால் இதற்கு வி.பி.சிங் அரசு சம்மதிக்கவில்லை.

டிசம்பர் 22, 1989 அன்று இரவு 11:30 மணியளவில், சேஷனிடம் கொடுப்பதற்காக ஒரு உறையுடன் மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார்.

கேபினட் செயலாளருக்கு பதிலாக திட்டக் கமிஷனில் சேஷன் உறுப்பினராக்கப்படுவதாக ஒரு உத்தரவு அந்த உறையில் இருந்தது.

இந்த முடிவை எடுப்பதற்கு முன், தனக்கு தகவல் தெரிவிக்கும் மரியாதையை கூட, பிரதமர் காட்டாதது, சேஷனை கலங்க வைத்தது.

பிரதமரின் முதன்மைச் செயலாளரான பி.டி.தேஷ்முக் கூட இது குறித்து சேஷனுக்கு எந்தக் குறிப்பையும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்திருந்தார்.

டி.என்.சேஷன் - இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடரமனன் உடன் சேஷன்

மறுநாள், கேபினட் செயலக அதிகாரியை அழைத்து, தனக்குப் பதிலாக கேபினட் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வினோத் பாண்டே எப்போது பொறுப்பேற்க விரும்புகிறார் என்று சேஷன் கேட்டார்.

வினோத் பாண்டே 11:05 என்ற நேரத்தை தேர்வு செய்தார். பொறுப்பை ஒப்படைப்பதற்கு இரண்டு நிமிடம் முன்னதாக அலுவலகத்தை அடைந்தார் சேஷன்.

காஞ்சி சங்கராச்சாரியாரின் ஆலோசனையின் பேரில் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்பு

வி.பி. சிங்கின் ஆட்சி கவிழ்ந்து சந்திரசேகர் பிரதமரானபோது, சேஷனை மீண்டும் அமைச்சரவை செயலாளராக ஆக்க முன்வந்தார், ஆனால் தான் விரைவில் ஓய்வு பெறப் போவதாக சேஷன் கூறினார்.

அப்போது சந்திரசேகர், சுப்பிரமணியம் சுவாமி மூலம், சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராக வேண்டும் என்று யோசனை அனுப்பினார்.

இது தொடர்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன் ஆகியோரிடம் சேஷன் ஆலோசனை நடத்தினார். 'வேறு எந்த சலுகையும் வரவில்லை என்றால் மட்டுமே இந்த சலுகையை ஏற்றுக்கொள்,' என்று இருவரும் கூறினர்.

இதற்குப் பிறகு காஞ்சிபுரம் சங்கராச்சாரியாரின் ஆலோசனையைப் பெற்றார் சேஷன்.

'இது மரியாதைக்குரிய பொறுப்பு. சேஷன் அதனை ஏற்க வேண்டும்,' என்று சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.

ஒன்பதாவது தலைமைத் தேர்தல் ஆணையராக சேஷனை நியமித்து டிசம்பர் 10, 1990 அன்று உத்தரவு வெளியிடப்பட்டது.

அதன் பின்னர் நிகழ்ந்த அனைத்தும் வரலாறு.

https://www.bbc.com/tamil/articles/cz9grgmy9q7o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.