Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல கோடி பேரின் வேலைக்கு உலை வைக்க போகும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
AI

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

எனினும், இந்த தொழில்நுட்பம் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவிக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர், மனிதர்கள் தற்போது பார்த்து வரும் பல்வேறு பணிகளுக்கு இது ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது ஒரு கணினியை கிட்டத்தட்ட ஓர் மனிதனை போலவே செயல்படவும், எதிர்வினை ஆற்றவும் அனுமதிக்கிறது.

மனிதனை போலவே ஓர் விஷயத்தை கணிப்பது மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, இவை தொடர்பான அதிக அளவிலான தகவல்களை கணினிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அளிக்கலாம்.

 

கணினியை கொண்டு ஒரு பணியை முடிப்பதற்காக அவசியம் பின்பற்றப்பட வேண்டிய முறையான விதிமுறைகளின் தொகுப்பையும் (Algoritms), தரவுகளையும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் நம்பியுள்ளது.

அலெக்சா மற்றும் சிரி போன்ற மெய்நிகர் முறையில் செயல்படும் தொழில்நுட்பங்களின் பின்னணியிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளது. இதனை கொண்டு ஸ்பாட்டிஃபை, யூடியூப் மற்றும் பிபிசி ப்ளேயரில் செயல்பாடுகளை வழிநடத்தலாம்.

அத்துடன் பயனாளர்களுக்கு எந்த பதிவைகளை அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கும் இத்தொழில்நுட்பம் உதவலாம்.

வாடிக்கையாளர்களின் வாங்கும் பழக்கத்தை பகுப்பாய்வு செய்ய அமேசான் நிறுவனத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனுமதிக்கிறது. அத்துடன் போலி மதிப்பீடுகளை களையவும் இந்த நவீன தொழில்நுட்பத்தை அமேசான் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

ChatGPT மற்றும் snapchat’s My AI என்றால் என்ன?

ChatGPT மற்றும் snapchat’s My AI இரண்டும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சக்தி வாய்ந்த பயன்பாடுகள் அல்லது செயலிகளாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு செயலிகளும் சமீபகாலமாக மிகுந்த கவனம் பெற்று வருகின்றன.

ChatGPT மற்றும் snapchat’s My AI ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறைக்கு சிறந்த உதாரணங்களாக கூறப்படுகின்றன.

அத்துடன் செயற்கை நுண்ணறிவானது, ‘சாட்பாட்’ எனப்படும் கணினி மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது எழுத்து வடிவ உரையாடல் வழியாக மனிதர்களுடன் தொடர்பு கொள்கிறது.

கேள்விகளுக்கு பதிலளிக்கவும், கதைகள் சொல்லவும், கணினி மென்பொருளை எழுதவும் இந்த செயலிகளை பயன்படுத்தலாம். ஆனால் இவ்விரண்டு செயல்களின் பயன்பாடும் பயனர்களுக்கு சில நேரங்களில் தவறான முடிவுகளை அளிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

செயற்கை நுண்ணறிவு குறித்த அச்சம் ஏன்?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நிர்வகிக்க சில விதிகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால், இத் தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சி ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ‘ஏஐ’ தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சிகள் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்துகின்றனர்.

‘ஏஐ’ தொழில்நுட்பத்தை உருவாக்கியவர்களில் ஒருவராக கருதப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் கூகுள் நிறுவனத்தில் தான் பார்த்து வந்த வேலையில் இருந்து கடந்த மாதம் விலகினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் விரைவில் மனிதனை விட புத்திசாலித்தனமாக மாறக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

 

ஹிண்டனின் பணி விலகலை தொடர்ந்து, அமெரிக்காவில் செயல்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து வரும் மையம் கடந்த மாதம் ஓர் முக்கியமான அறிக்கையை வெளியிட்டது. 25க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆதரவுடன் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை ‘ஏஐ’ தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து அச்சம் தெரிவித்துள்ளது.

சமூகத்தை சீர்குலைக்கும் நோக்கில் தவறான தகவல்களை உருவாக்க இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்று அந்த அறிக்கையில் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அத்துடன், இத்தொழில்நுட்பத்தால் மனிதர்களை விட இயந்திரங்கள் புத்திசாலித்தனமாக மாறக்கூடும் என்றும், அத்தகையதொரு மோசமான நிலை மனித குலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்ள கடுமையான சட்டங்கள் தேவை என்று வலியுறுத்துகிறார் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்நுட்ப தலைவரான மார்கிரேட் வெஸ்டேஜர்.

ஒரு சார்பு நிலை மற்றும் பாகுபாட்டைப் பெருக்கும் ‘ஏஐ’ இன் தொழில்நுட்பத் திறன் மிகவும் கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது என்று பிபிசியிடம் கூறினார் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்நுட்ப தலைவரான மார்கிரேட் வெஸ்டேஜர்.

குறிப்பாக, கடன் விண்ணப்பங்கள் மீது முடிவெடுப்பது போன்ற விஷயங்களில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டால் அது பொதுமக்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் பாதிக்கும் என்று வெஸ்டேஜர் கவலை தெரிவித்தார். அத்துடன் தேர்தல் போன்ற முக்கியமான விஷயங்களில் இத்தொழில்நுட்பம் நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், ‘ஏஐ’ தொழில்நுட்பத்தை நாம் வெறித்தனமாக எதிர்க்க வேண்டியதில்லை என்று கூறும் மார்தா லேன் ஃபாக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள், அதன் திறன்கள் குறித்த நுட்பமான உரையாடல்கள் அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

‘ஏஐ’ தொடர்பாக தற்போதுள்ள விதிமுறைகள் என்ன?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயல்பாட்டை ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக உலக நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு நிலவி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ள ‘ஏஐ’ சட்டத்திற்கு ஆதரவாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் தொடர்பாக கடுமையான பல்வேறு விதிமுறைகளை கொண்டுள்ள இந்த சட்டத்தை நிறுவனங்கள் பின்பற்ற வேண்டி வரும்.

2025 இல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு, குறைவான பாதிப்பு ஏற்படும் நிலைகள் உள்ளிட்டவை குறித்து இந்தச் சட்டத்தில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், இந்தச் சட்டம் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு பொருந்தாது என அந்த நாட்டு அரசு அண்மையில் தெரிவித்திருந்தது. அத்துடன் ‘ஏஐ' தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்த தனது பார்வையை கடந்த மார்ச் மாதம் பிரிட்டன் தெளிவுபடுத்தி உள்ளது.

இத்தொழில்நுட்பம் தொடர்பாக தற்போதுள்ள விதிமுறைகள் குறித்து அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் போதெல்லாம், அதனை பயன்படுத்தும் நிறுவனங்கள் குறித்து பயனாளர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்ற தமது விருப்பத்தை சீனா தெரிவித்துள்ளது.

ஆனால், ஏஐ தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் உலகளாவிய விவகாரமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் வெஸ்டேஜர், குறைந்த பட்சம், இந்த விஷயத்தில் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுக்கு இடையே யாவது ஒருமித்த கருத்து உருவாக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்.

எந்தெந்த வேலைகளுக்கு ஆபத்து?

ஏஐ தொழில்நுட்பம் உலகளாவிய பணி சூழலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படும் நிலையில். இதனால் எந்தெந்த வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் கலந்த கேள்வியும் எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் 300 மில்லியன் நபர்கள் தற்போது முழுநேரமாக செய்துவரும் பணிகளை ‘ஏஐ’ தொழில்நுட்பம் முற்றிலுமாக மாற்றி அமைக்கும் எனவும், இந்தப் பணிகள் அனைத்தும் இயந்திரமயம் ஆக்கப்படும் என்றும் முதலீட்டு வங்கியான Goldman Sachs அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. இந்த எண்ணிக்கை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தற்போது அனைத்து விதமான பணிகளை மேற்கொண்டு வரும் மனிதர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்காகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் சட்டம், கட்டடக் கலை உள்ளிட்ட துறைகள் சார்ந்த பணிகளுக்கு, 'ஏஐ’ தொழில்நுட்பத்தால் பாதிப்பு ஏற்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மருத்துவம் மற்றும் அறிவியல் துறைகளில் ஏற்கனவே ‘ஏஐ’ தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. மார்பக புற்று நோயை அடையாளம் காண தங்களுக்கு உதவும் வகையில் மருத்துவர்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

நுண்ணுயிர்கள் எதிர்ப்புக்கான புதிய மருந்துகளை (ஆன்டிபயாடிக்) கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி பணிகளில் விஞ்ஞானிகள் இத்தொழில்நுட்பத்தை கையாண்டு வருகின்றனர். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம் அதிகரிக்க ‘ஏஐ’ தொழில்நுட்பம் வழிவகுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cjmywdz2nero

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செயற்கை நுண்ணறிவு தாக்கம்: 90% ஊழியர்களை நீக்கிய இந்திய நிறுவனம் - இனி இது தொடர்கதையா?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஸ்டார்ட் அப் நிறுவனமான துக்கான், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு காரணமாக தனது வாடிக்கையாளர் சேவை பணியாளர்களில் 90 சதவீதம் பேரை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான துக்கான், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு காரணமாக தனது வாடிக்கையாளர் சேவை பணியாளர்களில் 90 சதவீதம் பேரை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனமான துக்கான் (Dukaan) இ.காமர்ஸ் துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிறுவனமும் சி.இ.ஒ.வுமான சுமித் ஷா தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட ஒரு செய்தி சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில், “செயற்கை நுண்ணறிவு சாட்போட் காரணமாக எங்களது வாடிக்கையாளர் சேவை குழுவைச் சேர்ந்த 90 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளோம். இது கடினமானதாக இருந்தாலும் அவசியமானதும் கூட.

இதன் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு பதிலளிக்கக் கூடிய நேரம் என்பது 1.44 நிமிடங்கள் என்பதில் இருந்து உடனடியாக மாறியது. அவர்களின் குறைகளை தீர்க்கும் கால அளவு என்பது 2 மணி நேரம் 13 நிமிடங்களில் இருந்து 3 நிமிடங்கள் 12 நொடிகளாக குறைந்துள்ளது. வாடிக்கையாளர் சேவைக்கான செலவின் அளவு 85 சதவீதம் குறைந்துள்ளது. ” என்று குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வாடிக்கையாளர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் இந்த சாட்போட் விரைவாகவும் சரியாகவும் பதிலளிப்பதாகவும் துக்கான் நிறுவனம் கூறுகிறது

பொருளாதாரத்தை வைத்து பார்க்கும்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தங்களை பெருநிறுவனங்களாக வளர்த்துக்கொள்வதை விட லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதைதான் நாங்களும் செய்தோம் என்றும் தனது செயலுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

வாடிக்கையாளர் சேவையை பொறுத்தவரை தங்களது நிறுவனம் நீண்ட காலமாக திணறிவந்ததாகவும் அதனை மேம்படுத்த விரும்பியதாகவும் கூறியுள்ள சுமித் ஷா, இதன் காரணமாகவே செயற்கை நுண்ணறிவுத் தளத்தை உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

வாடிக்கையாளர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் இந்த சாட்போட் விரைவாகவும் சரியாகவும் பதிலளிப்பதாகவும் துக்கான் நிறுவனம் கூறுகிறது.

எனினும், சுமித் ஷாவின் செயலுக்கு சமூக ஊடகங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

சுமித் ஷாவின் இந்த கடினமான முடிவால் ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்னைகள் அதிகரித்து விட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக உள்ளது.

செயற்கை நுண்ணறிவின் அபரிமித வளர்ச்சி

AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக உள்ளது. Chat GPT, Google Bard போன்ற சாட்பாட்(Chatbot) உதவியால் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மனிதனைப் போலவே சிந்தித்து பதில் கூறும் திறன் உடைய இந்த மென்பொருளுக்கு தெரியாதது என்று எதுவுமே இல்லை என பலரும் வியந்து கூறுகின்றனர்.

அதே நேரத்தில் , மனிதனுக்கு உதவி செய்வதற்காக கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் அவர்களின் வேலைக்கே பெரும் அச்சுறுத்தல் இருப்பதான ஒரு அச்சமும் மக்களிடம் நிலவுகிறது. குறிப்பாக சேவைத் துறையில் இருப்பவர்களின் வேலைவாய்ப்பு பெருமளவில் பறிபோக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

வணிக ரீதியாக என்றால் இது சரிதான். ஆனால், இதனை கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.

`உங்களின் ஊழியர்களில் 90 சதவீதம் பேரின் வாழ்க்கையை சீர்குலைத்துள்ளீர்கள்` என்று மற்றொரு பயனர் இதனை விமர்சித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு மூலம் பதிலளிக்கப்படுவது ஒரு வாடிக்கையாளராக தங்களுக்கு பிடிக்கவில்லை என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

90 சதவீதம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த மாதிரியான உதவிகள் வழங்கப்பட்டன என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்து சுமித் ஷா, பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் விபரத்தை லிங்க்ட்-இன் தளத்தில் பதிவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகள் பெருகி மேலும் அணுகக்கூடியதாகிவிட்டன. செலவைக் குறைக்கும் அதே வேளையில் உற்பத்தித்திறனை அதிகரிக்க நிறுவனங்கள் இந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதாக அறிக்கைகள் வந்துள்ளன. இதனால் தொழில் நுட்பத்தால் வேலை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் உள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்தியாவில், பல நிறுவனங்கள் தயாரிப்புகளை உருவாக்க AI இல் முதலீடு செய்கின்றன. இதுவும் வேலை இழப்பு தொடர்பான கவலையை அதிகரித்துள்ளது.

AI-ஐ தான் இனி உலகம்

மார்ச் மாதத்தில், கோல்ட்மேன் சாக்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் 30 கோடி முழு நேர வேலையில் ஈடுபடுபவர்கள் செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், பல நிறுவனங்கள் தயாரிப்புகளை உருவாக்க AI இல் முதலீடு செய்கின்றன. இதுவும் வேலை இழப்பு தொடர்பான கவலையை அதிகரித்துள்ளது.

அண்மையில், ஒடிசாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் லிசா என்ற செய்தி வாசிப்பாளரை தொலைக்காட்சி ஒன்று அறிமுகப்படுத்தியது. அச்சு அசல் பெண் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த ரோபோ செய்திகளையும் பிழையின்றி வாசிக்கிறது.

இவ்வாறு, செயற்கை நுண்ணறிவுகள் ஒவ்வொரு துறையில் அறிமுகப்படுத்தப்படுவது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூகுள் ஆப் ஸ்கேல் அகாடமியில் பயிற்சி பெற்றவரும் கணினி வல்லுநருமான செல்வ முரளியிடம் கேட்டோம்.

அவர், “எந்த தளத்துக்கு சென்றாலும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் போன்ற விசயங்கள் உள்ளன. அதேபோல், அதிகம் கேட்கப்படும் கேள்விகள் (FAQ) என்பதும் உள்ளது. இவை இரண்டையும் சாட்பாட் போன்ற இயந்திரங்கள் கற்றுக்கொள்ள தொடங்கிவிட்டால் , 100க்கு 40 சதவீதம் சந்தேகங்களை அவை தீர்த்துவைத்து விடும். ஒருவேளை அவற்றால் தீர்வு காண முடியவில்லை என்றால், குழுவினர் தொடர்புகொள்வார்கள் என்று பதிலளித்துவிடலாம். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் மேற்கொள்ளும்போது வாடிக்கையாளர் சேவை இனி எளிதாகும்” என்று குறிப்பிட்டார்.

இனி செயற்கை தொழில்நுட்பம்தான் உலகம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவற்றை இணைந்து வேலை செய்வதற்கு யார்யாரெல்லாம் தயராக இருக்கிறார்களோ அவர்களுக்கு பிரச்னை இல்லை என்றும் செல்வ முரளி நம்மிடம் தெரிவித்தார்.

“ சாட் ஜிபிடி, பாட், போன்றவை எல்லாம் தனிப்பட்ட உதவியாளர்கள் என்ன வேலையை செய்வார்களோ அந்த வேலையை செய்கின்றன. அப்படியிருக்கும்போது, தனி உதவியாளர்களுக்கான(பி.ஏ) தேவை இல்லாமல் போகிறது. இதேபோல், ஒரு வாக்கியத்தை தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்க வேண்டும் என்றால் ஆங்கிலம் தெரிந்த ஆளை நாம் வேலைக்கு வைத்திருப்போம். இப்போது, அந்த வேலையை செயற்கை நுண்ணறிவு குறைந்த நேரத்தில் தரமாக செய்து முடிக்கின்றன. கூகுளின் செயற்கை நுண்ணறிவான பார்டு (Google Bard), தற்போது 40 மொழிகளில் உரையாடும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

சேவை துறையில் இருப்பவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு காரணமாக நிச்சயம் பாதிப்பு ஏற்படும். குறைந்த அளவில் வேலைவாய்ப்பு பறிபோக வாய்ப்பு உள்ளது. எனவே, சேவைத்துறையில் உள்ளவர்கள் செயற்கை நுண்ணறிவு குறித்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

AI-யின் செயலுக்கு யார் பொறுப்பேற்பது என்ற சட்ட ரீதியிலான சிக்கல்களும் இருப்பதாக கார்த்திகேயன் கூறுகிறார்.

'AI-ஐ முழுவதும் சார்ந்து இருப்பது சாத்தியமில்லாதது'

செயற்கை தொழில்நுட்பம் மூலம் வேலையை திறன்பட செய்ய முடிகிறது என்பது நல்ல விஷயமாக இருந்தாலும் அவற்றால் என்றைக்கும் மனிதர்களுக்கு மாற்றாக இருக்க முடியாது என்று கூறுகிறார் சைபர் குற்றவியல் நிபுணரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “வேலைசார்ந்தது என்ற கூற்று ஒரு புறம் இருக்கட்டும், AI என்பது ரிமோட்டாக எங்கிருந்தும் கட்டுப்படுத்தும் வகையிலான ஒரு கருவிதான். இணையத்துடன் அவை இணைந்துள்ளது. அப்படியிருக்கும்போது, எங்கேயோ உள்ள ஒரு ஹேக்கர் உங்கள் AI-ஐ ஹேக் செய்து உங்களுக்கு எதிராகவே செயல்பட வைக்க முடியும். நிறுவனத்தின் மொத்த தரவுகளும் AI வசம் இருக்கும்போது அவற்றை ஹேக் செய்து உங்களுக்கு போட்டி நிறுவனங்கள் பாதிப்பை ஏற்படுத்த முடியும்,” என்றார்.

இ.காமர்ஸ் போன்ற போட்டிகள் நிறைந்த துறையில் இத்தகைய செயல்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை அவரது கூற்றின் மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

AI-யின் செயலுக்கு யார் பொறுப்பேற்பது என்ற சட்ட ரீதியிலான சிக்கல்களும் இருப்பதாக கார்த்திகேயன் கூறுகிறார். “AI மூலம் இயங்கும் கார்களும் வரப்போவதாக கூறப்படுகிறது. ஓட்டுநர் இல்லாத தானாக இயங்கும் கார்கள் விபத்தில் சிக்கும்போது, அந்த விபத்துக்கு யார் பொறுப்பாக முடியும்? காரின் உரிமையாளரா அல்லது காரை தயாரித்தவர்களா? இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்கும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

முழுதும் செயற்கை நுண்ணறிவை சார்ந்து இருக்காமல், மனிதர்களும் இயந்திரங்களும் சேர்ந்து பணியாற்றும் COBOT முறை சரியானதாக இருக்கும் என்ற வாதத்தையும் கார்த்திகேயன் முன்வைக்கிறார்

அதே நேரத்தில் ஊழியர்களிடம் விசுவாசம் குறைந்துள்ளதும் நிறுவனங்கள் செயற்கை தொழில்நுட்பத்தை அதிகம் நாடுவதற்கு காரணமாக உள்ளன என்று அவர் கூறுகிறார். “ ஒரு நிறுவனம் தனது ஊழியரை 6 மாதம், 1 ஆண்டு என காலமெடுத்து நன்றாக பயிற்சிகளை வழங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்காக நிறைய அவர்கள் செலவழிப்பார்கள். பயிற்சி பெற்றப்பின்னர், அதிக ஊதியம் கிடைக்கிறது என்று அந்த ஊழியர் வேறு நிறுவனத்துக்கு செல்லும்போது முந்தைய நிறுவனத்துக்கு அது இழப்பை ஏற்படுத்துகிறது. இதுவே AI பயன்படுத்தும்போது நமக்கு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பில்லை” என்றார்.

COBOT முறை சரியானதாக இருக்கும்

எனவே, முழுதும் செயற்கை நுண்ணறிவை சார்ந்து இருக்காமல், மனிதர்களும் இயந்திரங்களும் சேர்ந்து பணியாற்றும் COBOT முறை சரியானதாக இருக்கும் என்ற வாதத்தையும் கார்த்திகேயன் முன்வைக்கிறார். “மனிதர்களும் இயந்திரங்களும் சேர்ந்து வேலை செய்வதை collaborative robot அல்லது COBOT என்று அழைக்கிறோம். ஒருசில நிறுவனங்கள் இந்த முறையை பின்பற்றுகின்றன. AI எதாவது தவறு செய்தாலும் உடன் இருக்கும் மனிதர்களால் அதை உடனடியாக சரி செய்ய முடியும். பொதுவான வேலைகள் அனைத்தையும் ரோபோ செய்துவிடும். அதிலேயே திறன் தேவைப்படும் வேலைகளை மனிதர்கள் செய்வார்கள். இது ஆரோக்கியமான சூழலாக இருக்கும்.” என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/ckdn7lg5lkdo

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதுமே மக்கள் தங்களுடைய பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமாக கவனமாக இருப்பார்கள். எதை இழந்தாலும் அந்த இரண்டிற்கும் என்ன விலையும் கொடுக்க முயல்வார்கள். அரசாங்கமும் அவ்வாறே, அரசாங்கம் அவ்வாறு செய்யாவிட்டால் அந்த அரசு வீழ்த்தப்படும்.

 ஆகவே அடுத்த தலைமுறை பிள்ளைகளை இந்த இரண்டு வகையான வேலைகளுக்குள் அனுப்ப பயிற்சி அளிப்பது மிகச் சிறந்தது.

 விஷேட பயிற்சி பெற்ற மருத்துவ சுகாதாரப் உத்தியோகத்தர்கள், high profile security officers, போலீஸ் உத்தியோகத்தர்கள், தீயணைப்பு படை வீரர்கள் போன்ற வேலைகளுக்கு உலகம் போகிற போக்கில் அடுத்த 20- 30 ஆண்டுகளுக்கு நல்ல கேள்வி இருக்கும்.

 இதை விட்டுவிட்டு ஒரு கதிரை அதுக்கு முன்னால் ஒரு கம்ப்யூட்டர், காதிலே ஹெட் போன்  என்று உட்கார்ந்திருக்கும் ஒரு வேலையை நீங்கள் தேடினால் ஒவ்வொரு இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இனி என்ன வேலை தேடுவோம் என்று சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

 சுருங்கச் சொன்னால் எப்பொழுதும் மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள வேலைகள் இன்னும் கொஞ்ச காலத்துக்காவது நீடித்திருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.