Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் பாரிய மனித புதைகுழிகள் குறித்து சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் விசாரணை - ஐந்து அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

23 JUN, 2023 | 05:09 PM
image
 

இலங்கையின் உள்நாட்டு மோதல்களின் போதுகாணாமல் போனவர்களின் உடல்கள்  காணப்படலாம் என சந்தேகிக்கப்படும் பாரிய மனித புதைகுழிகள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐந்து மனித  சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள்விடுத்துள்ளன.

கடந்தகால குற்றங்களை கையாள்வது குறித்து இலங்கை அரசாங்கம் உண்மையான தீவிரமான ஆர்வத்தை கொண்டிருந்தால் அனைத்து மனித புதைகுழிகளையும் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையில் இலங்கை அரசாங்கம் தோண்டவேண்டும் என ஐந்து சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

மனிதபுதைகுழிகள் குறித்து  கடந்தகாலங்களில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து முழுமையான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐந்துஅமைப்புகளும் இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளில் எவ்வாறு தலையிட்டன என்பது குறித்து முழுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளன.

கொழும்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தெளிவான பார்வையில்-இலங்கையில் மனித புதைகுழியின் பின்னால் - உண்மையை தேடுதல் என்ற விவரணச்சித்திரமும் வெளியிடப்பட்டது - இந்த விவரணச்சித்திரம் காணாமல்போனவர்களின்  உறவுகள் எவ்வாறு நீண்ட போராட்டத்தை முன்னெடுக்கின்றனர் என்பதை விபரிக்கின்றது 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ச இராணுவத்தில் பணியாற்றியவேளை- மாத்தளை பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போனார்கள் அவ்வேளை அவர் அந்த பகுதியின் இராணுவ அதிகாரியாக காணப்பட்டார் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு அவரது பெயரையும் தனது விசாரணைகளின் போது குறிப்பிட்டிருந்தது என  ஐந்து அமைப்புகளும் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/158447

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை : மனிதப்புதைகுழி அகழ்வின்போது சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்புங்கள் - சர்வதேச நாடுகளிடம் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து

Published By: DIGITAL DESK 3

24 JUN, 2023 | 04:59 PM
image
 

இலங்கையில் மனிதப்புதைகுழிகள் அகழ்வு செய்யப்படும்போது அங்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் அனுப்பிவைக்கப்படவேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு அரசாங்கத்திடமும் ஏனைய சர்வதேச நாடுகளிடமும் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள், காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி நிலையம் ஆகிய 4 அமைப்புக்களும் ஒன்றிணைந்து 'இலங்கையிலுள்ள பாரிய மனிதப்புதைகுழிகளும், வெற்றியடையாத அகழ்வுப்பணிகளும்' என்ற தலைப்பில் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

அவ்வறிக்கையில் செம்மணி, மாத்தளை, மன்னார், சூரியகந்த உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள மனித புதைகுழிகள் குறித்தும் அவற்றை அகழ்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் தடைகள் என்பன பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. குறிப்பாக மாத்தளை மனிதப்புதைகுழி அகழ்வின் போது முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக் ஷவினால் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் அவ்வறிக்கையை மேற்கோள்காட்டி தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கங்களில் செய்திருக்கும் பதிவுகளிலேயே பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல் மூலம் தமது அன்பிற்குரியவர்களை தொலைத்த பல தமிழர்கள் பிரித்தானியாவில் வாழ்வதாக சுட்டிக்காட்டியிருக்கும் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக், "இலங்கையில் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் முறையான ஆதார சேகரிப்பு இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு நாம் சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பிவைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

அதேபோன்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் விரேந்திர ஷர்மாவும் மேற்குறிப்பிட்டவாறான வலியுறுத்தலை செய்திருக்கின்றார்.

"இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடனான எமது ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்துகின்றோம். இலங்கையில் மனிதப்புதைகுழி அகழ்வின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் அங்கு பிரசன்னமாவதை உறுதிப்படுத்துமாறு எமது அரசாங்கத்திடமும், ஏனைய சர்வதேச நாடுகளிடமும் கோருகின்றோம். உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உள்ளது " என்று  அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/158497

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ச குடும்பம் பதவியிலிருந்து இறக்கப்பட்டதும் பல கேள்விகள், விசாரணைகள், அழுத்தங்களை, சந்திக்க நேரிடும், அவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும் சிறை வாழ்க்கையை எதிர் நோக்க வேண்டும் என்பதாலேயே  மக்கள் தங்கள் ஊழல்களை கண்டுபிடித்து வெறுக்க முதல்,  என்ன விலை கொடுத்தும், மக்களை உசுப்பியும் அந்த பதவியை தக்க வைக்க போராடினர், வெற்றியும் கண்டனர். ஆனால் இப்போ காலம் தன் ஆட்டத்தை தொடங்குகிறது போலுள்ளது. இவர்களை தெரிந்தெடுத்த மக்கள் இப்போ இவர்களை கைது செய்வதையே விரும்புகின்றனர், இவர்களுடன் சேர்ந்த கூட்டுக்களவாணிகளும், இனவாதிகளும் சில பிக்குகளும் கூச்சல் போடலாம் அவர்களையும் கவனிப்பதுபோல் கவனித்தால் கழன்று விடுவார்கள். சரத் பொன்சேகா தேர்தலில் நின்ற சமயம், அவரோடு பல அரசியற் தலைவர்கள் கூட்டுச்சேர்ந்தனர், ஆலோசனைகளை மேற்கொண்டனர். எப்ப ஒருக்கா மஹிந்த அவர்மேல் தாக்குதலை ஆரம்பித்தாரோ, அப்போதே பிணத்தை விட்டு கழன்ற உண்ணிகள் போல் எல்லோரும் அவரை கைவிட்டு விலகினர் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக. சரியான நேரத்திற்காக காலம் காத்து கிடக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ராஜபக்ச குடும்பம் பதவியிலிருந்து இறக்கப்பட்டதும் பல கேள்விகள், விசாரணைகள், அழுத்தங்களை, சந்திக்க நேரிடும், அவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும் சிறை வாழ்க்கையை எதிர் நோக்க வேண்டும் என்பதாலேயே  மக்கள் தங்கள் ஊழல்களை கண்டுபிடித்து வெறுக்க முதல்,  என்ன விலை கொடுத்தும், மக்களை உசுப்பியும் அந்த பதவியை தக்க வைக்க போராடினர், வெற்றியும் கண்டனர். ஆனால் இப்போ காலம் தன் ஆட்டத்தை தொடங்குகிறது போலுள்ளது. இவர்களை தெரிந்தெடுத்த மக்கள் இப்போ இவர்களை கைது செய்வதையே விரும்புகின்றனர், இவர்களுடன் சேர்ந்த கூட்டுக்களவாணிகளும், இனவாதிகளும் சில பிக்குகளும் கூச்சல் போடலாம் அவர்களையும் கவனிப்பதுபோல் கவனித்தால் கழன்று விடுவார்கள். சரத் பொன்சேகா தேர்தலில் நின்ற சமயம், அவரோடு பல அரசியற் தலைவர்கள் கூட்டுச்சேர்ந்தனர், ஆலோசனைகளை மேற்கொண்டனர். எப்ப ஒருக்கா மஹிந்த அவர்மேல் தாக்குதலை ஆரம்பித்தாரோ, அப்போதே பிணத்தை விட்டு கழன்ற உண்ணிகள் போல் எல்லோரும் அவரை கைவிட்டு விலகினர் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக. சரியான நேரத்திற்காக காலம் காத்து கிடக்கும்.  

சர்வதேச கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் மட்டுமே இந்த விசாரணை நடை பெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜே .வி. பி காலத்து புதைகுழிகளை முதலில் கிளறி சிங்கள மக்களின் வெறுப்பை கிளறினால் போதும் மற்றவை தானாக நடக்கும். எல்லாம் சரியாக கணித்தே காலம் நகருகிறது. எகத்தாளமாக பதவியேறினவர் தப்பியோடி எங்கும் செல்ல முடியாமல் அலைந்து எங்கிருந்து கிளம்பினாரோ அங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கு விதி, அதன் காரணம் பின்னர் தெரியும்.  கிரிசாந்தி புதைகுழி அகழ்வு வந்தபோது அங்கிருந்த மனித உடல் எச்சங்களை இரவோடிரவாக அகற்றி எரித்து,  இறந்த எலிகளின் உடல்களை புதைத்ததாக செய்தி வந்தது. சிங்களம் எந்தளவுக்கும் இறங்கும் தன்னை காப்பாற்றிக்கொள்ள. ஒருநாள் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 20க்கும் மேற்பட்ட மனிதப் புதைகுழிகள்: முறையாக விசாரணை நடைபெறவில்லை என குற்றச்சாட்டு

மனிதப் புதைக்குழி, இலங்கை, அகழாய்வு
2 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் கடந்த 30வருட காலமாக அடையாளம் காணப்பட்ட சுமார் 20 மனிதப் புதைக்குழிகள் தொடர்பிலான விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் கூட்டாக தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல்வேறு காலப் பகுதிகளில் நடைபெற்ற மோதல்களின் போது, பாரிய மனிதப் புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டிருந்ததாக அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட புதைக்குழிகளில் இன்னும் பல்லாயிரக்கணக்கான சடலங்கள் புதையுண்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

   

இந்த புதைக்குழிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஏராளமான விசாரணை ஆணைக்குழுக்கள், தனது கடமையை சரிவர முன்னெடுக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

''உண்மையை வெளிக்கொண்டு வரும் முயற்சிகள் தடைப்பட்டுள்ளன. நீதிபதிகளும், தடயவியல் நிபுணர்களும் திடீர் இடமாற்றங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதை காவல்துறை தாமதப்படுத்தியுள்ளது.

குடும்பங்களின் வழக்கறிஞர்கள் புதைக்குழிகள் உள்ள இடங்களுக்கு போவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது உயிருடன் உள்ள சாட்சிகளைக் கண்டறிவதற்கு எந்தவொரு தரவுகளும் சேகரிக்கப்படவில்லை.

யாரேனும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருந்த ஒரு சில அரிதான வழக்குகளிலும் அந்த குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது." என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைக்குழி

யாழ்ப்பாணம் பகுதியில் மட்டும் துரையப்பா விளையாட்டு அரங்கம், செம்மணி மனிதப் புதைக்குழி, மிருசுவில் மனிதப் புதைக்குழி என மூன்று மனிதப் புதைக்குழி இடங்கள் காணப்படுகின்றன.

அதேபோல் கணேசபுரம் மனிதப் புதைக்குழி (கிளிநொச்சி), புதுக்குடியிருப்பு மனிதப் புதைக்குழி (முல்லைத் தீவு), திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைக்குழி (மன்னார்) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மனிதப் புதைக்குழிகள் இருக்கின்றன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் பகுதிகள் தவிர., குருநாகல், கம்பஹா, கொழும்பு, மாத்தறை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய இடங்களிலும் இந்த மனிதப் புதைக்குழிகள் காணப்படுகின்றன.

இந்த புதைக்குழிகள் எந்த காலப் பகுதிகளைச் சேர்ந்தது?

மனிதப் புதைக்குழி, இலங்கை, அகழாய்வு

பட மூலாதாரம்,JDS/FOD/CHRD/ITJP

இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தம் மற்றும் வன்முறைகளின் போது பலர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களே இந்த புதைக்குழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றது.

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரின் சடலங்களை கொண்ட பாரிய மனிதப் புதைக்குழிகள் ஆயிரக்கணக்கில் இல்லாவிட்டாலும், நூற்றுக்கணக்கிலாவது இலங்கையில் காணப்படுகின்றது என அந்த அறிக்கையில் கூறப்படுகின்றது.

இவ்வாறான மனிதப் புதைக்குழிகளில் 20 புதைக்குழிகளில் மாத்திரமே அகழ்வுப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன.

1983 - 2009ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதலின் போது, பாதுகாப்பு படையினரால் திட்டமிட்டும், பரந்தளவிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை நாட்டின் வடக்கிலும், கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட மனிதப் புதைக்குழிகளின் அகழ்வுப் பணிகள் வெளிகொண்டு வருகின்றன என அதில் கூறப்படுகின்றது.

அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடியிலுள்ளதை போன்று ஏனைய பாரிய மனிதப் புதைக்குழிகள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட மக்களின் இன்னமும் அகழ்ந்தெடுக்கப்பட வேண்டிய எலும்புக் கூடுகளின் எச்சங்களைக் கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறையால் ஒரு சில மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், காணாமல் போனதற்கு பொறுப்பானவர்களில் சிலர் மாத்திரமே நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

''மனிதப் புதைகுழிகள் தொடர்பில், மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் நடைபெறுவதை பணிக்குழு கருத்தில் கொள்கின்றது.

எனினும், மாத்தளை புதைக்குழி மீதான மீள் விசாரணை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், ஏனைய சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழிகள் அமைந்துள்ள இடங்கள் பற்றி விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டவில்லை என்பது தொடர்பிலும், சில புதைகுழிகள் அமைந்துள்ள இடங்களில் நடைபெற்ற கட்டடப் பணிகளின்போதும், இதர நடவடிக்கைகளின் போதும் கண்டெடுக்கப்பட்ட மிகமுக்கியமான ஆதாரங்கள் பற்றி அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்று வெளிவந்த தகவல்கள் தொடர்பிலும் கவலையடைந்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட சிலரது இருப்பிடங்களை அறிந்து கொள்வதற்கு இவை முக்கியமான திறவுகோலாக இருக்கலாம் என்பதால், புதைகுழிகள் இருப்பதற்குச் சாத்தியமான இடங்களைக் கண்டறிவது பற்றிய முயற்சிகளைத் தீவிரப்படுத்தும்படி இப்பணிக்குழு அழைப்பு விடுக்கின்றது.

இதுவிடயத்தில், சாத்தியமான இதர புதைகுழிகளின் அமைவிடங்கள் பற்றி விசாரணை செய்வதற்கு அது பற்றி திறன்கொண்ட சிறப்பு அணியொன்றை உருவாக்க வேண்டும் என்றும், தடயவியல் திறன்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் தனது பரிந்துரையினை வலியுறுத்துகின்றது." என இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள குறித்த நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கூறியுள்ளன.

கோப்புக்களை அழிக்குமாறு உத்தரவு

''அரசியல் தலையீட்டின் பிரதான உதாரணமாக, (1989 ஜூலை முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை மாவட்டத்தின் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாகவும் இருந்த) அப்போதைய பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்ஸ மாத்தளையில் நடந்த அகழ்வுப் பணிகளில் கொண்டிருந்த தலையீட்டை குறிப்பிடலாம்."

"மாத்தளை மாவட்டம் உள்ளடங்கும் மத்திய மாகாணத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்த, ஐந்து வருடத்திற்கு முந்தைய சகல பதிவுகளையும் கோப்புக்களையும் அழித்து விடும்படி உத்தரவிட்டப்பட்டதாகச் சொல்லப்பட்டுகின்றது." எனவும் அந்த அறிக்கையில் ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணை ஆணைக்குழுகள்

மனிதப் புதைக்குழி, இலங்கை, அகழாய்வு

பட மூலாதாரம்,JDS/FOD/CHRD/ITJP

இந்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்துவதற்காக அரசாங்கங்களினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினால் எந்தவித பயனும் கிடைக்கவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மனித புதைக்குழிகள் அகழப்பட்ட போதிலும், அந்த அகழ்வுகளின் ஊடாக இந்த புதைக்குழிகளுக்கு காரணமானவர்கள் எவரும் நீதிக்கு முன் கொண்டு வரப்படவில்லை என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''மூன்று 'மண்டல' ஆணைக்குழுக்களிலும் 27,526 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், இவற்றில் அவர்களுக்கு கிடைத்த நேரத்தில் ஆய்வுசெய்தவற்றில் 16,742 முறைப்பாடுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதுடன் தொடர்புடையவை என்று தீர்மானித்தன.

85 எஞ்சிய முறைப்பாடுகள் மீது விசாரணைகளை மேற்கொண்ட அகில இலங்கை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு காணாமல் போனதுடன் தொடர்புடைய மேலும் 10,136 முறைப்பாடுகளைப் பதிவுசெய்தது.

86 வேறுவிதத்தில் சொல்வதாக இருந்தால், ஏறத்தாழ 27,000 காணாமல்போதல் சம்பவங்களை 1990களின் இறுதியில் இவ்ஆணைக்குழுக்கள் உறுதிப்படுத்தியிருந்தன.

மேலே கூறியது போன்று, அதற்குப் பின்னர் மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள், அதுவும் குறிப்பாக பாதுகாப்புப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வடக்கிலும் கிழக்கிலும் நடந்த போரில், காணாமல் போயுள்ளனர்." என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

''கணக்காய்வு ஆண்டின் முடிவில் காணாமல் போன ஆட்கள் தொடர்பில் 39,473 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற போதிலும், இன்றுவரை வெறும் 67 இடைக்கால அறிக்கைகளே வெளியிடப்பட்டதை அவதானிக்க முடிகின்றது.

கிடைக்கப்பட்ட இவ்வாறான முறைப்பாடுகளில், 21,171 முறைப்பாடுகள் மட்டுமே கோப்புக்களில் பராமரிக்கப்பட்டு வருவதுடன், 702 குடும்பங்கள் மட்டுமே விசாரணைச் செயற்பாடுகளுக்காக அழைக்கப்பட்டுள்ளன.

இது மொத்தமாகப் பராமரிக்கப்பட்டுவரும் கோப்புக்களில் ஒப்பீட்டளவில் வெறும் 3.32 வீதத்திற்கும் குறைந்த முன்னேற்றத்தையே எட்டியுள்ளது." என கூறப்படுகின்றது.

சடலங்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை

மனிதப் புதைக்குழி, இலங்கை, அகழாய்வு

பட மூலாதாரம்,JDS/FOD/CHRD/ITJP

யாழ்ப்பாணத்தின் மிருசுவில் பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சடலங்களை தவிர, வேறு எந்தவொரு உடலும் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என அந்த ஆய்வுகளை நடத்திய குழுவினர் கூறுகின்றனர்.

யாழ்ப்பாணம் - செம்மணியில் ஆடைகளை வைத்து, அடையாளம் காணப்பட்ட இரண்டு உடல்கள் கூட, அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டு, அடையாளம் காணப்படுகின்ற உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான ஆலோசனைப் பணிக்குழு வலியுறுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறவுகளை தேடும் உறவுகளும் இறக்கின்றார்கள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார், வயது முதிர்வு அல்லது உடல்நலம் குன்றி தொடர்ச்சியாக மரணடைந்து வருவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் மன்னார் மாவட்ட தலைவர் மனுவேல் உதயச்சந்திராவை மேற்கோள்காட்டி அந்த அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று வரை 178 தாய்மார் உயிரிழந்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

''இவ்வாறாக இக்குற்றச் செயல்களில் வாழும் சாட்சிகள் எங்கள் மத்தியிலிருந்து படிப்படியாக மறைந்துகொண்டு வருகின்றன. நாமும் இறந்து போனால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிடும்.

நீதி எப்போது கிடைக்கும் என தெரியாமல், வீதிகளில் இறங்கித் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் நாங்கள் ஈடுபட்டு நீதிக்காக போராடி வருகின்றோம்" என மனுவேல் உதயச்சந்திரா கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சரின் பதில்

மனிதப் புதைக்குழி, இலங்கை, அகழாய்வு

பட மூலாதாரம்,MOD SRI LANKA

நான்கு அமைப்புக்களினால் தயாரிக்கப்பட்ட இந்த கூட்டறிக்கையை தாம் முழுமையாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத், பிபிசி தமிழிடம் இதனைக் குறிப்பிட்டார்.

''நாம் இதனை நிராகரிக்கின்றோம். மிகவும் தெளிவாக கூறுகின்றோம். பாதுகாப்பு அமைச்சு இதனை நிராகரிக்கின்றது" என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் நிராகரிப்பு குறித்து

மனிதப் புதைக்குழி, இலங்கை, அகழாய்வு

பட மூலாதாரம்,BRITO FERNANDO FB

அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள், வழக்குகளின் தரவுகள் உள்ளிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சங்கத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''1994ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகள் மற்றும் தேடிக் கொள்ளக்கூடியதாக இருந்த வழக்கு விசாரணை அறிக்கைகள், சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மற்றும் அந்தந்த பிரதேசங்களில் வாழும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது." என காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சங்கத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இந்த சம்பவங்கள் தொடர்பிலான உண்மையை வெளிகொணர்வதன் ஊடாக, அரசாங்கம் இதிலிருந்து விடுப்பட முடியும் என பிரிட்டோ பெர்ணான்டோ குறிப்பிடுகின்றார்.

ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டதாக ஆணைக்குழு அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ஸவின் காலத்தில் மாத்திரம் சுமார் 700 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த தகவல்களை தாம் கூறவில்லை என தெரிவித்த அவர், இது ஆணைக்குழுக்களின் அறிக்கைகளிலேயே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு பதிலளிப்பதே அரசாங்கத்தின் பொறுப்பு என காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சங்கத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c72vkdky3ezo

  • கருத்துக்கள உறவுகள்

அல்லைப்பிட்டி, ஊர்காவற்றுறை இங்கும் நிறைய மனித எச்சங்கள் உண்டு, தோண்டினா வரும். மலசல கூட கிடங்குகள், பாழடைந்த கிணறுகளை தோண்டுங்கள். தொல்பொருளைவிட மனித எச்சங்களே நாட்டில் நிறைந்துள்ளன. இல்லாத தொல்பொருளுக்கு தோண்டுவதைவிட தேடிக்கொண்டிருக்கும் தமது உறவுகளுக்கான பதிலை தோண்டி கண்டுபிடித்து அறிவியுங்கள். இராணுவம் நிலைகொண்டிருந்தபோது தமது வீடுகளை பார்வையிட சென்றவர்கள் திரும்பி வரவேயில்லை இன்றுவரை .

6 hours ago, ஏராளன் said:

நான்கு அமைப்புக்களினால் தயாரிக்கப்பட்ட இந்த கூட்டறிக்கையை தாம் முழுமையாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

ஆமா.... நீங்கள் எதை ஏற்றிருக்கிறீர்கள் இதுவரை? நிராகரிப்பவர்கள் அதற்கான ஆதாரத்தை கொடுக்க வேண்டும். தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பதிலளிக்க வேண்டியது பாதுகாப்பு அமைச்சின் கடமை, அதிலும் அவர்களை கைது செய்தவர்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என அறிவிக்க வேண்டும். இல்லையேல் பாதுகாப்பு அமைச்சு என அழைப்பதை விடுத்து காணாமற்போகச்செய்யும் அமைச்சு என அறிவியுங்கள் உங்களை.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மனிதப் புதைகுழிகளில் இதுவரை கிடைத்தது என்ன?

இலங்கையில் 20திற்கும் மேற்பட்ட பகுதிகளில் மனித புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது
 
படக்குறிப்பு,

இலங்கையில் 20திற்கும் மேற்பட்ட பகுதிகளில் மனித புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட 'மனித புதைக்குழிகள்' தொடர்பிலான விசாரணைகள் நிறுத்தப்பட்டதாக நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த ஜுன் மாதம் அறிக்கையொன்றின் ஊடாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில், மனித புதைக்குழிகள் தொடர்பிலான பேச்சுக்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ஓரிரு தினங்களிலேயே மற்றுமொரு மனித புதைக்குழி தொடர்பிலான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 29ம் தேதி குழாய் நீர் பொருத்தும் பணிகளுக்காக பிரதான வீதியோரத்தில் நீர்வழங்கல் அமைச்சினால் குழியொன்று தோண்டப்பட்டுள்ளது.

இதன்போது, பெண்களின் உள்ளாடைகள் மற்றும் மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் எச்சங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

இதையடுத்து, போலீஸார் இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு விடயங்களை தெளிவூட்டியதுடன், குறித்த பகுதியில் மனித புதைக்குழி உள்ளதா என்பது தொடர்பிலான பூர்வாங்க அகழ்வு பணி கடந்த 6-ஆம் தேதி இடம்பெற்றது.

இதன்போது, குறித்த இடத்திலிருந்து மனித எச்சங்கள் என அடையாளம் காணப்பட்ட சில எச்சங்களை அதிகாரிகள் அடையாளப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 13-ஆம் தேதி முல்லைத்தீவில் நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் எங்கெங்கு 'மனித புதைக்குழி' அடையாளம் காணப்பட்டுள்ளது?

இலங்கையில் 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் 'மனித புதைக்குழிகள்' அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் மூன்று இடங்களில் மனித புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இலங்கையின் வடப் பகுதியிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியிலேயே கடந்த 29ம் தேதி மூன்றாவது 'மனித புதைக்குழி' அடையாளம் காணப்பட்டது.

ஏனைய இரண்டு புதைக்குழிகளும் முல்லைத்தீவு நகரிலிருந்து இருவேறு இடங்களில் அடையாளம் காணப்பட்டிருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான இறுதி யுத்தம் முடிவடைந்த இடமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.

இலங்கையில் மூன்று தசாப்த காலங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி நிறைவுக்கு கொண்டு வந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும், மே 18ம் தேதி ஆயிரக்கணக்கான தமது உறவுகளை இலங்கை ராணுவம் கொலை செய்ததாக யுத்தத்தில் நேரடி பாதிப்புக்களை எதிர்கொண்ட குடும்பங்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மனித புதைக்குழிகள்: விசாரணை மீண்டும் தொடங்குமா?

'மனிதப் புதைக்குழிகள்' காணப்படும் இடம் எப்படிப்பட்டது?

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே இறுதி கட்ட யுத்தம் இடம்பெற்றது.

இதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட பலர் நந்திக்கடல் பகுதியில் வைத்தே கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதேஇடத்தில் வைத்து, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அவ்வாறு சரணடைந்தவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் தமிழர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை ராணுவம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது.

இறுதிக் கட்ட யுத்தம் முடிவடைந்த நந்திக்கடல் பகுதியிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலேயே கொக்குத்தொடுவாய் பகுதி அமைந்துள்ளது.

கொக்குத்தொடுவாய் பகுதியானது 1984ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையான காலம் வரை முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக அங்குள்ள மக்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மனித புதைக்குழிகள்: விசாரணை மீண்டும் தொடங்குமா?

காணாமல் ஆக்கப்பட்டோர் இங்கு புதைக்கப்பட்டனரா?

இந்த 'மனித புதைக்குழியில்' தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சொந்தமானது என கருதப்படும் சீருடைகள் காணப்பட்டமையினால், இது விடுதலைப் புலி உறுப்பினர்களுடைய எலும்பு எச்சங்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை தமிழர்கள் வெளியிடுகின்றனர்.

யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் சுமார் 27 வருட காலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இடமொன்றில் இவ்வாறு மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டது, காணாமல் ஆக்கப்பட்டவர்களை ராணுவத்தினர் கொலை செய்து புதைத்திருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் முல்லைத்தீவு பிரதேச மக்களினால் வெளியிடப்படும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி தமிழ் இலங்கை ராணுவத்திடம் வினவியது.

''எம்மால் அப்படி கூற முடியாது. ஏனெனில், அதனை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் இல்லை. மக்கள் குற்றஞ்சுமத்துவதில் அர்த்தம் கிடையாது. யுத்தத்தின் போது உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் மாத்திரம் அல்ல, ராணுவத்தினரின் உடல்களும் தற்போதும் கிடைக்கின்றன. சரியான விசாரணைகள் மற்றும் ஆய்வுகளின் பின்னரே இது எந்த காலப் பகுதிக்கு சொந்தமான எச்சங்கள் என்பதை கூற முடியும். அடுத்தது இது மனித எலும்பு எச்சங்களா என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். விசாரணைகளின் பின்னரே சரியான தீர்மானத்திற்கு வர முடியும்." என ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் வேறு எங்கெல்லாம் 'மனிதப் புதைக்குழிகள்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

புதைக்குழிகள் குறித்த விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என தன்னார்வல அமைப்புகள் தெரிவிக்கின்றன
 
படக்குறிப்பு,

புதைக்குழிகள் குறித்த விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என தன்னார்வல அமைப்புகள் தெரிவிக்கின்றன

இலங்கையில் சுமார் 20திற்கு மேற்பட்ட 'மனித புதைக்குழிகள்' அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜே.டீ.எஸ், எப்.ஓ.டீ, சி.எச்.ஆர்.டி மற்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் ஆகிய நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த புதைக்குழிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஏராளமான விசாரணை ஆணைக்குழுக்கள், தனது கடமையை சரிவர முன்னெடுக்கவில்லை என தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

''உண்மையை வெளிக்கொண்டு வரும் முயற்சிகள் தடைப்பட்டுள்ளன. நீதிபதிகளும், தடயவியல் நிபுணர்களும் திடீர் இடமாற்றங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதை காவல்துறை தாமதப்படுத்தியுள்ளது. குடும்பங்களின் சட்டவாளர்கள் புதைக்குழிகள் உள்ள இடங்களுக்கு போவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது உயிருடன் உள்ள சாட்சிகளைக் கண்டறிவதற்கு எந்தவொரு தரவுகளும் சேகரிக்கப்படவில்லை. யாரேனும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருந்த ஒரு சில அரிதான வழக்குகளிலும் அந்த குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது." என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரின் சடலங்களை கொண்ட பாரிய மனிதப் புதைக்குழிகள் ஆயிரக்கணக்கில் இல்லாவிட்டாலும், நூற்றுக்கணக்கிலாவது இலங்கையில் காணப்படுகின்றது என அந்த அறிக்கையில் கூறப்படுகின்றது.

'மனிதப் புதைக்குழியில்' இதுவரை என்ன கிடைத்திருக்கிறது?

இவ்வாறான மனிதப் புதைக்குழிகளில் 20 புதைக்குழிகளில் மாத்திரமே அகழ்வுப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன.

1983 - 2009ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதலின் போது, பாதுகாப்பு படையினரால் திட்டமிட்டும், பரந்தளவிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களின் அப்பட்டமான நினைவுப்படுத்தலாக நாட்டின் வடக்கிலும், கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட இதர மனிதப் புதைக்குழிகளின் அகழ்வுப் பணிகள் காணப்படுவதாக அதில் கூறப்படுகின்றது.

மன்னாரில் அடையாளம் காணப்பட்ட மனித புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களில் மாதிரிகள் ஆய்வுகளுக்காக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வு கூடத்தில் பல வருடங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

எனினும், அந்த மனித எச்சங்கள் ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானவை என அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வு கூட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனித எச்சங்கள்
 
படக்குறிப்பு,

மனித எச்சங்கள்

இந்த மனித எச்சங்கள் 1477 - 1642 ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு இடைப்பட்டவை என அந்த அறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த எச்சங்கள் மாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என அந்த ஆய்வுகளில் இலங்கை சார்பாக கலந்துக்கொண்ட சட்டத்தரணி ஒருவர், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மன்னார் மனித புதைக்குழியிலிருந்து பெற்றுக்கொண்ட மனித எலும்பு எச்சங்களின் மாதிரி தடயங்கள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அது மாற்றப்பட்டுள்ளதாக பின்னரே தெரியவந்தது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, உண்மையாக பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளை மாற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

அதனால், தமிழர்களை கொண்டு இந்த ஆய்வுகள் நடத்தப்படுவது சிறந்ததாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிகின்றார்.

எலும்புகூடுகள்

பட மூலாதாரம்,JDS/FOD/CHRD/ITJP

தமிழ் அமைப்புகளின் கோரிக்கை என்ன?

மனித புதைக்குழியொன்று தோண்டப்படுவது தொடர்பில் காணப்படும் சர்வதேச நியதிகளை மீறி, இந்த புதைக்குழி தோண்டப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

முல்லைத்தீவு அகழ்வு பணிகளின் போது எவ்வாறான சர்வதேச நியதிகள் மீறப்பட்டுள்ளன என்பது குறித்து, பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

''பெக்கோ இயந்திரங்களை பயன்படுத்தி இந்த அகழ்வுகள் முன்னெடுக்கப்படக்கூடாது. வெற்று கைகளில் தடயங்களை எடுக்கக்கூடாது. ஆனால் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விடயங்கள் தொடர்பில் நாம் முல்லைத்தீவு நீதவான் தலைமையில் 13ம் தேதி நடைபெறும் கலந்துரையாடலில் கருத்துக்களை முன்வைக்க எதிர்பார்த்துள்ளோம்," என பிரபல சட்டத்தரணியொருவர், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அடுத்த கட்டமாக என்ன நடக்கும்?

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் அடையாளம் காணப்பட்டு, தற்போது கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வைக்கப்பட்டுள்ள மனித புதைக்குழி தொடர்பில் எதிர்வரும் நாட்களில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்த விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

முல்லைத்தீவில் எதிர்வரும் 13ம் தேதி இந்த கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

நீதிபதி, நீதவான்கள், சட்ட மருத்துவ அதிகாரி, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட விடயம் சார்ந்த அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் எட்டப்படும் முடிவுகளின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

பாதுகாப்பு அமைச்சின் பதில் என்ன?

"பாதுகாப்பு அமைச்சு இதனை நிராகரிக்கின்றது" - பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேணல் நலின் ஹேரத்

பட மூலாதாரம்,MOD SRI LANKA

 
படக்குறிப்பு,

"பாதுகாப்பு அமைச்சு இதனை நிராகரிக்கின்றது" - பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேணல் நலின் ஹேரத்

'மனித புதைக்குழிகள்' தொடர்பில் 4 தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''நாம் இதனை நிராகரிக்கின்றோம். மிகவும் தெளிவாக கூறுகின்றோம். பாதுகாப்பு அமைச்சு இதனை நிராகரிக்கின்றது" என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேணல் நலின் ஹேரத் குறிப்பிட்டார்.

கூட்டறிக்கை தயாரித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுவது என்ன?

அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள், வழக்குகளின் தரவுகள் உள்ளிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கையை தாம் தயாரித்ததாக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சங்கத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

'1994ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகள் மற்றும் தேடிக் கொள்ளக்கூடியதாக இருந்த வழக்கு விசாரணை அறிக்கைகள், சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை எலும்பு எச்சங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும் போது, சட்ட மருத்துவ அதிகாரியின் முத்திரை அதில் இருந்ததா என்பதை யார் அறிவார்கள்? இதனுடன் தொடர்புடைய ஆவணங்களை அவர்களினால் காண்பிக்க முடியும். இந்தந்த இடங்களில் மனிதப் புதைக்குழிகள் இருந்தன என ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் உள்ளது. ஓகந்தர மனிதப் புதைக்குழியில் 24 மனித எலும்புக் கூடுகள் காணப்பட்டன. அந்த வழக்கிற்கு என்ன நடந்தது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மற்றும் அந்தந்த பிரதேசங்களில் வாழும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது." என காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சங்கத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c2eg3z2n4g9o

  • கருத்துக்கள உறவுகள்

ஐ நாவில் இருந்து ஒரு பொறுப்பான பதில் இது வரை கிடைத்ததா?
வேறு நாடுகளில்  ஐ நா  எப்படி துரிதகதியில் செயற்பட்டு தண்டனையும் வழங்குகிறார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.