Jump to content

தமிழர்களால் ஒரு பலமாக திரட்சிபெற முடியுமா -யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களால் ஒரு பலமாக திரட்சிபெற முடியுமா -யதீந்திரா
 

தமிழ் தேசிய அரசியல் தொடர்ந்தும் தோல்வியின் பாதையிலேயே செல்கின்றது. இது தொடர்பில் பல்வேறு சந்தர்பங்களில் விவாதித்திருக்கின்றேன். தமிழர்களின் அரசில் பயணத்தை எடுத்து நோக்கினால், அதனை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம். ஒன்று, செல்வாநாயகம் காலகட்டம். இரண்டாவது, பிரபாகரன் காலகட்டம், மூன்றாவது, 2009இற்கு பின்னரான சம்பந்தன் காலகட்டம். இந்த மூன்று கட்டங்களும் தோல்வியில் முடிந்தமை தொடர்பில் நான் முன்னைய கட்டுரை ஒன்றில் விரிவாக எழுதியிருக்கின்றேன். நாம் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பல்வேறு சந்தர்பங்களில் எழுதியிருக்கின்றேன். ஆனால் முன்னேற்றங்களைத்தான் காணவில்லை. எனினும் சலிக்காமல் வேதாளத்திற்கு கதை சொல்லும் விக்கிரமாதித்தியன் போன்று, என்னைப் போன்றவர்கள் எழுதியும் பேசியும் வருகின்றனர். எப்போதாவது மாற்றங்களை காண மாட்டோமா என்னும் ஏக்கமே, என்னை போன்றவர்களை வழிநடத்துகின்றது.

நாம் தோல்வியடைந்திருந்தாலும் கூட, இலங்கைத் தீவில் ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக கவனத்தில் கொள்ளப்படுவதற்கான தகுதிநிலைகளை இழந்துவிடவில்லை. இப்போதும் அதற்கான வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் போய்விடவில்லை. ஆனால் ஒரு சமூகம் தன்னை ஒரு அதிகார மையமாக கட்டியெழுப்ப வேண்டுமாயின், அதற்கு அந்த சமூகம் தன்னை சதா தயார் செய்து கொண்டிருக்க வேண்டும். வீழும் ஒவ்வொரு சந்தர்பங்களையும், பலமாக எழுவதற்கான ஊன்றுகோலாகக் கொள்வது எவ்வாறென்று சிந்திக்க வேண்டும். அதனடிப்படையில் விடாது செயலாற்ற வேண்டும். இதன் மூலம் மற்றவர்களால் இலகுவில் புறம்தள்ளக் முடியாத நிலைமையை ஏற்படுத்த வேண்டும். எப்போது நாம் மற்றவர்களால் இலகுவில் புறம்தள்ள முடியாதவர்களாக இருக்கின்றோமோ, அப்போது அனைவரும் நம்மை திருப்பிப்பார்க்க வேண்டிய நிர்பந்தம் உருவாகும். இந்த நிர்பந்தத்தை உருவாக்கும் வல்லமையை ஒரு சமூகம்தான் நிரூபிக்க முடியும்.

ஒரு சமூகம் தன்னை ஒரு அதிகார மையமாக கட்டியெழுப்ப வேண்டுமாயின், முதலில் அதன் தற்போதைய நிலைமையை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். வாய்ப்புக்களை அறிய வேண்டும். முன்னோக்கி பயணிப்பதிலுள்ள சவால்களை அறிய வேண்டும். இலங்கைத்தீவு யுத்தத்திலிருந்து வெளியில் வந்துவிட்டது. ஆனால் யுத்தத்தின் விளைவுகளிலிருந்து வெளியில் வரவில்லை. இலங்கையின் மீது தொடரும் மென்மையான அழுத்தங்களே இதற்கான எடுத்துக்காட்டாகும். அது நமது எதிர்பார்ப்பை ஈடுசெய்யவில்லையாயினும் கூட, இந்த அழுத்தங்கள், பிரச்சினையை தொடர்ந்தும் நூர்ந்து போகாமல் பாதுகாத்துவருகின்றது.

இந்த பின்புலத்தில் நோக்கினால் அது தமிழர்களுக்கு சாதகமான ஒன்றுதான். இரண்டாவது வாய்ப்பு நல்லிணக்க முயற்சியில் இதுவரையில் அரசாங்கத்தினால் முன்நோக்கி பயணிக்க முடியவில்லை. இந்த நிலையில் மீளவும் தென்னாபிரிக்காவை முன்மாதிரியாகக் கொண்டு, விடயங்களை மேற்கொள்ளப் போவதாக, அரசாங்கம் கூறுகின்றது. இந்த இடத்தில் ஒரு விடயம் தமிழ் மக்களுக்கு சாதமானது. அதாவது, இலங்கைத் தீவில் நல்லிணக்க முயற்சியில் வெற்றிபெற்றுவிட்டதான தோற்றமொன்றை ஏற்படுத்த வேண்டிய இக்கட்டு நிலையில் அரசாங்கம் இருக்கின்றது ஆனால் இந்த முயற்சியில் அரசாங்கம் வெற்றிபெற வேண்டுமாயின், தமிழர்களின் ஆதரவு இன்றியமையாதது.

தமிழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்படும் விடயங்களை நல்லிணக்கத்தின் வெற்றியாக காண்பிக்க முடியாது. இதிலுள்ள அரசியல் யதார்தத்தை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, தமிழர்களுக்கு எதிராக யுத்த வெற்றிவாதத்தை முன்வைத்தவர்கள் நல்லிணக்கத்தை வெற்றிகொள்ள வேண்டுமாயின் இப்போது, தோற்கடிக்கப்பட்ட தமிழர்களின் ஆதரவு கட்டாயம் தேவை. இதுதான் இந்த அரசியலுள்ள எதிர்மறையான விடயம். ஏனெனில் யுத்த வெற்றிவாதத்தை முன்வைத்து, சிங்களவர்களிடமிருந்து வாக்குகளை வேண்டுமானால் பெறலாம் ஆனால், நல்லிணக்கத்தை வெற்றிகொள்ள முடியாது. நல்லிணக்கத்தை வெற்றிகொள்ள வேண்டுமாயின் பாதிக்கப்பட்ட மக்கள் அதனை வெற்றிபெற்றச் செய்ய வேண்டி இடத்திலிருக்கின்றனர். இந்த விடயம் தமிழர்களுக்கு சாதகமானது.

spacer.png

ஏனெனில் இந்த இடத்தில் தமிழர்களை புறக்கணிக்கவும் முடியாது அதே வேளை நல்லிணக்கத்தை வெற்றிகொள்ள வேண்டுமென்றும் அரசாங்கம் முயற்சிக்கின்றது. உதாரணமாக ஒரு புதிய அரசியல் யாப்பை கொண்டுவர வேண்டுமாயின், தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், முன்னரைப் போன்று, சிங்களவர்களின் ஆதரவுடன் கொண்டுவர முடியும் ஆனால் தமிழ் மக்களின் ஆதரவில்லாத புதிய அரசியல் யாப்பின் மூலம் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியிட முடியாது. அவ்வாறானதொரு அரசியல் யாப்பு வருவதற்கான எந்தவொரு வாய்ப்பும் நாட்டிலில்லை. ஒரு உதாரணத்திற்காகவே இதனை குறிப்பிட்டேன். நல்லிணக்கத்திற்கு தமிழர்களின் ஆதரவு இன்றியமையாதது என்னும் நிலைமை, தமிழர்களுக்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

மேற்குலக நாடுகளில், தமிழர்களின் பிரச்சினை பேசிக்கொண்டிருக்கும் வல்லமையுடன் புலம்பெயர் சமூகமொன்று இருப்பது இன்னொரு வாய்ப்பு. மேற்குலகின் அரசியல் சூழல் ஆசிய அரசியல் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மேற்குலகில், அரசியலை, அரசியல் சமூகம் மட்டும் தீர்மானிப்பதில்லை. அங்கு அரசியலானது, அரசியல் சமூகமாகவும் சிவில் சமூகமாகவும் பிரிந்திருக்கின்றது. இந்த இரண்டு தளங்களையும் கையாளக் கூடிய வாய்ப்பு புலம்பெயர் சமூகத்திற்குண்டு. இலங்கை அரசாங்கம் எவ்வாறான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டாலும் கூட, மேற்குலகில் புலம்பெயர் சமூகத்தின் இயங்குநிலையை தடுத்துவிட முடியாது. இது தமிழர்களுக்குள்ள ஒரு சாதகமான வாய்ப்பாகும்.

அடுத்த வாய்ப்பு சர்வதேசளவில், தமிழர் பிரச்சினை, ஒரு மனித உரிமைவிவகாரமாகவே நோக்கப்படுகின்றது. அரசியல் விடயமாக நோக்கப்படவில்லை. இது மேற்குலகின் அரசியல் அணுகுமுறையோடு தொடர்பானது. அதே வேளை அமெரிக்காவின் உளகளாவிய அணுமுறையில், மனித உரிமை விவகாரம் பிரதான இடத்தை பெறுகின்றது. நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடும் அமெரிக்க அணுகுமுறையில், மனித உரிமை மற்றும் ஜனநாய ஆட்சியே பிரதான கருவிகளாக இருக்கின்றன. மேற்குலகம் தமிழரின் பிரச்சினையை ஒரு அரசியல் விவகாரமாக நோக்காமல் இருப்பதானது, ஒரு வகையில் நமக்கு பின்னடைவென்றாலும் கூட, இன்னொரு வகையில் இலங்கைத் தீவின் பிரச்சினை, தொடர்ந்தும் மேற்குலக மயப்படுத்துவதற்கான வாய்ப்பையும் இது தருகின்றது. புலம்பெயர் சமூகம் செயற்படுவதற்கான வாய்ப்பு இந்த இடத்திலிருந்துதான் உருவாகின்றது. ஏனெனில், மனித உரிமையின் மீதான மேற்குலகின் கரிசனையின் மீது புலம்பெயர் சமூகம் தொடர்ந்தும் கேள்வியெழுப்பலாம்.

தமிழர்கள், இவ்வாறான சாதகமான விடயங்களைக் கொண்டு, எவ்வாறு ஒரு பலமாக திட்சிபெறலாம்? ஒரு சமூகம் தனக்குள்ள சாதகமான வாய்ப்புக்களை கொண்டு, முன்னோக்கி அடியெடுத்து வைக்க வேண்டுமாயின், முதலில் தனக்குள் சிதறாமல் இருக்க வேண்டும். ஒரு ஜக்கிய முன்னணியாக தன்னை கட்டியெழுப்ப வேண்டும். ஆனால் போருக்கு பின்னரான கடந்த 14 ஆண்டுகளில் அவ்வாறானதொரு ஜக்கிய முன்னணியாக திரட்சிபெறுவதில், தமிழ் தேசிய தரப்புக்களால் சிறிய முன்னேற்றத்தைக் கூட காண்பிக்க முடியவில்லை. இப்போதும் நான்கு அணிகளாகவே நிற்கின்றனர். எத்தனை கட்சிகளும் இருக்கலாம் ஆனால் அந்தக் கட்சிகளை, அரசியல்ரீதியாக பிரித்தாள முடியாதளவிற்கு, கட்டுறுதியாக இருப்பதே ஜக்கிய முன்னணி தந்திரோபாயமாகும். இவ்வாறானதொரு தந்திரோபாயம் தொடர்பில் கடந்த பத்து வருடங்களாக இந்தக் கட்டுரையாளர் மட்டுமல்ல இன்னும் பலரும் தொடர்சியாக பேசிவந்திருக்கின்றோம். ஆனால் இதுவரையில் முன்னேற்றமில்லை.

2009இற்கு பின்னர் தமிழ் தேசிய தரப்புக்கள் செய்திருக்க வேண்டிய முதலாவது நகர்வாக இதுவே இருந்திருக்க வேண்டும். ஆனால் முதலாவது நகர்விலேயே தமிழர்கள் 14 வருடங்களாக சறுக்கிவீழ்ந்து கொண்டேயிருக்கின்றனர். இந்த நிலையில் எவ்வாறு வாய்புக்களை கையாள முடியும்? இன்று இந்தியாவாக இருக்கலாம் அல்லது அமெரிக்கா தலைமையிலான மேற்குலகாக இருக்கலாம், தமிழ் மக்களின் பிரச்சினையை, இலங்கைத் தீவின் சிறுபாண்மையின பிரச்சினையாகவே பார்க்கின்றனர். இந்த அடிப்படையிலேயே தமிழ் கட்சிகளை அவர்கள் கையாளுகின்றனர். ரணில் விக்கிரமசிங்கவோடு பேசுங்கள், அவர் அனுபவமுள்ளவர் என்றவாறு மேற்குலக ராஜதந்திரிகள் கூறுகின்றனர். இந்திய-இலங்கை ஒப்பந்த அடிப்படையில், இந்தியா பேசுகின்றது ஆனால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்ற காலத்தில், தமிழ் மக்களை இந்தியா ஒரு தனியான அரசியல் சக்தியாகவே கையாண்டது. அந்த அடிப்படையில்தான் இலங்கைத் தீவின் அரசியலில் நேரடியாகவும் தலையீடு செய்தது.

தமிழ் மக்களை சிறுபாண்மையாக அணுகுவதற்காக அவர்களுடன் முரண்பாடுவதாலோ அல்லது, அவர்களை விமர்சிப்பதாலோ எவ்வித பயனுமில்லை. ஏனெனில் இது அவர்களின் பிரச்சினையில்லை. இலங்கைத் தீவில் இரண்டு அசியல் சக்திகள் இருக்கின்றன ஒன்று, சிங்கள அரசியல் சமூகம் மற்றையது ஈழத் தமிழ் அரசியல் சமூகமென்னும் வகையில், விடயங்களை கையாளும் நிலைமையை தமிழர்களே ஏற்படுத்த வேண்டும். அவ்வாறானதொரு சூழலை, தமிழர்கள் நிரூபிக்காத வரையில், அவர்களது அணுகுமுறையும் மாறப்போவதில்லை.

இன்றைய உலக அரசியல் ஒழுங்கில் ஜனநாகயம்தான் அரசியலை முன்கொண்டு செல்வதற்கான ஒரேயொரு கருவியாகும். ஆனால் அதே ஜனநாயக தளம்தான் மறுபுறம் அரசுகளுக்கும் சாதகமாக இருக்கின்றது. இதனை புரிந்துகொண்டுதான் நாம் செயற்பட வேண்டும். ஜனநாயக தளத்தில், அரசுகளின் தந்திரங்களை எதிர்கொள்வதற்கிருக்கும் ஒரேயொரு வழி, பாதிக்கப்பட்ட தரப்புக்கள் தங்களுக்குள் சிதறிச் செல்லாமல், தங்களுக்குள் ஒன்றுசேரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஜக்கிய முன்னணி உபாயத்தின் மூலம் அரசின் அணுகுமுறைகளை எதிர்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஜக்கிய முன்னணிச் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் நிச்சயம் மக்களுக்கு எதிரானவர்களாவர். அவ்வாறானவர்களை மக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் தோற்கடிக்க வேண்டும். வெறும் வீரவசனங்களால் இன்றைய அரசியல் சூழலை கையாள முடியாது. அதற்கான அரசியல் சூழல் எப்போதோ காலமாகிவிட்டது. இன்று, தமிழ் மக்கள் மத்தியில் எவரெல்லாம் மற்றவர்களை துரோகிகளென்றும், இந்திய முகவர்களென்றும், கைக் கூலிகளென்றும் கூறுகின்றனரோ, அவர்கள் அனைவருமே, தமிழ் மக்கள் ஒரு ஜனநாயக பலமாக எழுச்சியுறுவதை தடுப்பவர்களாவர். இவர்கள் அடிப்படையிலேயே மக்களுக்கு எதிரான தீய சக்திகளாவர். தீய சக்திகள் எப்போதுமே மற்றவர்களை குற்றம்சாட்டுவதன் ஊடாக, தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் நயவஞ்சகத்தையே புரிவார்கள். நயவஞ்சகம்தான் அவர்களின் அரசியலாகும். இதனை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் காணப்படும் அறியாமைதான், இவர்களின் ஒரேயொரு பலமாகும். நல்ல மனிதர்கள் மற்றவர்களின் அறியாமையை ஒருபோதுமே, தங்களின் சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டவாறு, தமிழ் மக்களுக்கு இப்போதும் சாதகமான வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை கையாளுவற்கான அரசியல் பொறிமுறை தமிழ் மக்களிடம் இல்லை. இதுதான் தமிழர் அரசியலின் பிரதான பிரச்சினையாகும். அனைத்து கட்சிகளும், உள்நாட்டிலும் புலம்பெயர் சமூகத்தின் மத்தியிலும் துரோகி, கைக்கூலி, புலிகளின் ஆதரவாளர் மற்றும் எதிர்ப்பாளர், வசைச் சொற்கள், இவ்வாறான அனைத்துவிதமான உளறல்களையும் புறம்தள்ளி, நாம் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களாவர், நாம், நமக்குள் ஒரணியாக வேண்டுமென்னும் சிந்தனை உருவாகினால் மட்டுமே, தமிழர்கள் ஒரு பலமாக திரட்சிபெற முடியும். இலங்கைத் தீவின் தவிர்க்க முடியாத தரப்பாக எழுச்சியுற முடியும். அவ்வாறானதொரு சூழல் உருவாகாத வரையில், எவருக்குமே தமிழர்கள் தேவைப்படப் போவதில்லை. நாம் மற்றவர்களுக்கு தேவைப்படாத போது, நம்மீதிருப்பது, பாவமென்னும் பரிவுணர்வு மட்டுமேயாகும். இப்போது நடப்பது அதுதான்.
 

http://www.samakalam.com/தமிழர்களால்-ஒரு-பலமாக-தி/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் செல்வநாயகம் காலம் முதல் தோல்வியடைய முழு முதற்க் காரணம் இந்தியாவின் காலை நக்கிப் பிழைப்பது தான்.

பிரபாகரன் மட்டுமே இதில் ஓரளவுக்கு வேறுபட்டவர். அவரும் ஆனையிறவை கைப்பற்றி நாவற்குழி வரைக்கும் வந்து விட்டு பலாலியை இந்தியாவைப் பகைக்க கூடாது என்பதற்காக அடிக்காமல் விட்டது வரலாற்றின் பெரும் பிழை. வாஜிபாய் அரசின் சொல்லைக் கேட்காமல் இருந்து இருக்க வேண்டும்.

இன்றைய முக்கிய தேவை இல்லாத வாய்ப்பை உருவாக்குவது தான். அது சீனா சார்பு தமிழ்க் கட்சி ஒன்றை தொடங்குவதன் மூலம் செய்ய முடியும். அப்படி நடந்தால் மேற்கும் இந்தியாவும் எங்களை கொஞ்சம்  மதிக்க வைக்கவாவது செய்ய முடியும். இந்தியத் தூதர் உடன் 30 நிமிட appointment க்கு ஒரு வருடம் தவம் கிடக்க வேண்டிய தேவை இல்லை 

இதை செய்ய எங்கள் மக்கள் தலைவர்களுக்கு மதம் கடந்த பார்வை முக்கியம்.

 

Edited by பகிடி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பகிடி said:

தமிழர்கள் செல்வநாயகம் காலம் முதல் தோல்வியடைய முழு முதற்க் காரணம் இந்தியாவின் காலை நக்கிப் பிழைப்பது தான்.

பிரபாகரன் மட்டுமே இதில் ஓரளவுக்கு வேறுபட்டவர். அவரும் ஆனையிறவை கைப்பற்றி நாவற்குழி வரைக்கும் வந்து விட்டு பலாலியை இந்தியாவைப் பகைக்க கூடாது என்பதற்காக அடிக்காமல் விட்டது வரலாற்றின் பெரும் பிழை. வாஜிபாய் அரசின் சொல்லைக் கேட்காமல் இருந்து இருக்க வேண்டும்.

இன்றைய முக்கிய தேவை இல்லாத வாய்ப்பை உருவாக்குவது தான். அது சீனா சார்பு தமிழ்க் கட்சி ஒன்றை தொடங்குவதன் மூலம் செய்ய முடியும். அப்படி நடந்தால் மேற்கும் இந்தியாவும் எங்களை கொஞ்சம்  மதிக்க வைக்கவாவது செய்ய முடியும். இந்தியத் தூதர் உடன் 30 நிமிட appointment க்கு ஒரு வருடம் தவம் கிடக்க வேண்டிய தேவை இல்லை 

இதை செய்ய எங்கள் மக்கள் தலைவர்களுக்கு மதம் கடந்த பார்வை முக்கியம்.

 

இராசதந்திரமா ? கிலோ என்ன விலை 🤨

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.