Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமன்னன் Review: துணிந்து அரசியல் பேசிய படைப்பின் திரைமொழி எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1030457.jpg  
 

அதிகாரத்தின் ருசியை பரம்பரையாக ருசிக்கத் துடிப்பவனுக்கும், அதிகாரம் தனக்கான உரிமை என்பதை மறந்தவனுக்கும் (மழுங்கடிக்கப்பட்டு) இடையேயான போராட்டமே 'மாமன்னன்'.

சேலம் மாவட்டத்தில் ஆளும் கட்சியின் சார்பில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருக்கிறார் மாமன்னன் (வடிவேலு). அவரின் மகன் வீரன் அலைஸ் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்). அடிமுறை ஆசானாக இருக்கும் வீரன், சிறுவயதில் தான் சந்தித்த சாதிய அடக்குமுறையில் தந்தையின் செயல் பிடித்துப் போகாமல் அவருடன் பேசாமல் இருக்கிறார். மாமன்னன் இருக்கும் அதே கட்சியின் மாவட்டச் செயலாளராக தந்தையின் வழித்தோன்றலில் ரத்னவேல் (ஃபஹத் ஃபாசில்) செயல்படுகிறார். கம்யூனிஸ்ட் தோழர் லீலா (கீர்த்தி சுரேஷ்) அதிவீரன் இடத்தில் நடத்தும் இலவச கோச்சிங் சென்டரை ரத்னவேலின் அண்ணன் அடித்துநொறுக்க பிரச்சினை அரசியலாகிறது. அந்த அரசியலில் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி எளியவர்களின் உரிமைகளை அடக்கத் துடிக்கிறார்கள் என்பதை தற்போதைய சாதிய அரசியலை மையப்படுத்தி சொல்லப்பட்டிருப்பதே ‘மாமன்னன்’ படத்தின் திரைக்கதை.

'எப்போதும் நின்று கொண்டு பேசாதீங்க... உட்கார்ந்து பேச பழகுங்க...' என்று சமநிலை எண்ணம் கொண்ட மாமன்னன் வடிவேலுதான் படத்தின் கதாநாயகன். மாமன்னன், பேருக்கு ஏற்ப நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். தன் மகனுக்கு நடந்த கொடுமைக்கு நீதியை பெற்றுத்தர முடியவில்லை என்ற விரக்தியில் அமைதியாக ஒரு பாறை மேல் நின்று கொண்டு ஏமாற்றத்துடனும், வலியுடனும் அவர் அழும் காட்சி படத்தின் ஆரம்பத்திலேயே மாமன்னனை நம்முள் கடத்திவிடுகிறது. அதேநேரம், அடக்குமுறையின் விரக்தியில் கையில் கத்தி எடுக்கும் தருவாய் வடிவேலுவுக்கான மாஸ். தமிழ் சினிமா இதுவரையில் இப்படியான வடிவேலுவை பார்த்ததில்லை என்பது படம் பார்க்கும் ரசிகர்களுக்கான ட்ரீட்.

நாயை இரக்கமின்றி அடித்துக்கொள்ளும் வில்லத்தனத்துடன் அறிமுகமாகும் ஃபஹத் ஃபாசிலின், அவரின் மிரட்டல் நடிப்பால் மொத்த திரையிலும் அவரையே தேட வைக்கிறது. தனக்கு மேல் உள்ளவர்களிடமும், தனக்கு சமமாக உள்ளவர்களிடமும் தோற்றுப் போனாலும் பரவாயில்லை; ஆனால், தனக்கு கீழ் உள்ளவர்களிடம் தோற்றுப்போய் அவமானப்பட கூடாது என்ற தந்தையின் கூற்றை வேத வாக்காக கொண்டு, அதிகாரத்தின் மூலம் அடுத்தவர்களை அடக்கி ஆளத் துடிக்கும் ஆதிக்கக் குணம் மாவட்டச் செயலாளராக பக்காவாக பொருந்திப் போயிருக்கிறார் ஃபஹத். கண் அசைவில் இவ்வளவு வில்லத்தனம்.

அதிவீரன் உதயநிதி... அப்பாவுக்கான உரிமையை பெறத் துடிக்கும் மகனாக, வலிகள் கொண்ட இளைஞனாக, ஆக்ரோஷமும், இறுக்கமும் கலந்த நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார். ஃபஹத், வடிவேலு என்ற இரு நடிப்பு அசுரர்கள் மத்தியில் கிடைத்த ஸ்பேஸை பயன்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்று இல்லாமல் மாரி செல்வராஜின் புதிய கதாநாயகி லீலா. இடதுசாரி போராளியாக சில காட்சிகளே வந்தாலும், இதுவரை பார்த்திராத கீர்த்தி சுரேஷ் பாத்திரமாக வெளிப்பட்டுள்ளார். விஜயகுமார், அழகம் பெருமாள், கீதா கைலாசம், ரவீனா ரவி போன்ற எண்ணற்ற பாத்திரங்கள் இருந்தாலும், லால் மட்டுமே ஓரளவுக்கு ஸ்கோர் செய்கிறார். விஜயகுமாருக்கு ஒரு வசனம் கூட இல்லை.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, மாரி செல்வராஜ் காட்ட நினைத்த, களத்தை பார்வையாளனின் கண்முன் கச்சிதமாக கொண்டுசேர்த்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ராசாக்கண்ணு உள்ளிட்ட ஹிட் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் என்றாலும், படத்துக்கு அவர் கொடுத்திருக்கும் பின்னணி இசை பேசப்பட வேண்டிய ஒன்று. காட்சிகளுக்கு வசனங்களே தேவையில்லை என்னும் அளவுக்கு பின்னணி இசை மூலம் காட்சியையும் காட்சியும் வலியையும் கடத்தியிருக்கிறார் ரஹ்மான்.

துணிந்து சொல்ல வேண்டிய கதைக்கரு, அதற்கு தகுந்த பலமான திரைக்கதை என மாரி செல்வராஜின் படைப்பு (அரசியல்) என்பதை நிரூபித்துள்ளது. பலரும் சொல்ல துணியாத மேற்கு மாவட்ட அரசியல் மட்டுமல்ல, தற்போதைய சூழலும்கூட மாமன்னன் பேசும் அரசியல். ஒடுக்குமுறைக்குள்ளாகும் சமூகத்தின் பெயரை வெளிப்படையாக சொல்லி, அவர்கள் எப்படி ஆதிக்க வர்க்கத்தினர் அதிகாரத்தை கைப்பற்ற தேர்தல் அரசியலில் பகடைக் காயாக பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாக பேசிய விதத்தில் இயக்குநர் மாரியை வெகுவாகப் பாராட்டலாம்.

இங்கு அடையாளத்துக்காகவும், அரசியலுக்காக மட்டுமே சமூக நீதி பேசப்படுகிறது. அதிகாரமே வந்தாலும் சாதியம் ஒடுக்கப்பட்டவர்களை அடிமையாகவே நடத்த துடிக்கும் என்பதை மாரியின் திரைக்கதை விரிவாக அலசியுள்ளது. நாட்டார் தெய்வம், நாய், பன்றி என வழக்கமான மாரியின் பல குறியீடுகளுக்கு மத்தியில் 'யார் ஜெயிச்சங்கிறது முக்கியம் இல்ல, யார் பயந்தாங்கிறதுதான் முக்கியம்', 'நாலு பேரோட கொலை வெறி எப்படி 400 பேரோட மான பிரச்சினை ஆகும்', 'நாம கேள்வி கேட்கவே ஒரு பதவிக்கு, ஒரு இடத்துக்கு வரவேண்டியிருக்கு', 'ஏழைகள் கோவப்படவே இங்க தகுதி தேவைப்படுது', 'யுத்தம்னு வந்துட்டா பகை இருக்கக் கூடாது' போன்ற கூர்மையான அரசியல்மிகு வசனங்கள் கூடுதல் பலமாக உள்ளது.

இன்டெர்வெல் காட்சி இன்டென்ஸ் மிகுந்ததாக சொல்லப்பட்டாலும், இரண்டாம் பாதியில் வணிகத்துக்காக சில சமரசங்கள் செய்யப்பட்டுள்ளன. இடைவேளைக்குப் பிறகு தேர்தல் களம், ஃபஹத் - உதயநிதி இருவரிடையேயான போட்டியில் யூகிக்கக் கூடிய காட்சிகள் போன்றவை படத்தை தொய்வாக்குகிறது. எனினும், க்ளைமாக்ஸ் காட்சியும், துணிந்து பேச வேண்டிய அரசியலும் மாமன்னனை எந்தவித சமரசமும் இல்லாமல் அரியணை ஏற்றுகிறது எனலாம். மொத்தத்தில், ‘மாமன்னன்’ பேச வந்த அரசியலும், பேசிய விதமும் கவனத்துக்குரியது.

மாமன்னன் Review: துணிந்து அரசியல் பேசிய படைப்பின் திரைமொழி எப்படி? | maamannan movie review - hindutamil.in

 

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனம்: மாமன்னன்

KaviJun 29, 2023 18:18PM
ஷேர் செய்ய : 
101251453.jpg

உதய் பாடகலிங்கம்

‘சீரியஸ்’ வடிவேலு; ‘ஆக்‌ஷன்’ உதயநிதி!

வடிவேலு சீரியசான வேடத்தில் நடிக்கிறாரா? இந்த கேள்விதான் ‘மாமன்னன்’ படத்தை நோக்கி ஒரு சாதாரண ரசிகனைத் திரும்ப வைக்கும் முக்கிய அம்சம். அவரோடு உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்படப் பலர் நடித்திருக்கிறார்களா என்பது அடுத்தபடியாகத்தான் கவனிப்பைப் பெறும்.

மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், கர்ணன் பார்த்துச் சிலாகித்தவர்களுக்கு, அவரது மூன்றாவது படமா இது என்ற வகையில் மனதுக்குள் ஒரு எதிர்பார்ப்பு கூடி நிற்கும். அனைத்துக்கும் மேலாக, இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் எனும்போதே நம்முள் பல கேள்விக்குமிழ்கள் முட்டையிட்டன.

அத்தனை எதிர்பார்ப்புகளும் படம் பார்த்து முடித்தபிறகு நிறைவானதா என்பதே பெருங்கேள்வியாக உருவெடுத்து நிற்கிறது. எப்படி இருக்கிறது ‘மாமன்னன்’?

ஒரு தனித்தொகுதியின் கதை!

காசிபுரம் என்ற தனித்தொகுதி. ஆளும்கட்சியான சமத்துவ சமூகநீதி மக்கள் கழகத்தின் சார்பில், அத்தொகுதியில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாமன்னன் (வடிவேலு). அவரது மகன் அதிவீரன் (உதயநிதி). தந்தைக்கும் மகனுக்கும் இடையே பல ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை.

காரணம், சிறு வயதில் அதிவீரனின் நண்பர்கள் மூவர் ஆதிக்க வெறிக்குப் பலியான கொடூரம். தான் சார்ந்த கட்சிக்காகவும், அதன் வழியே மக்கள் தொண்டு ஆற்றலாம் எனும் எண்ணத்திற்காகவும், அச்சம்பவத்தைக் குழி தோண்டிப் புதைக்கத் துணை நிற்கிறார் மாமன்னன். ஆனால், தனித்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற அடையாளமே, கட்சியில் மாவட்ட அளவில் அவருக்கான அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது.

அதிவீரனுக்குச் சொந்தமான தற்காப்புக்கலை பயிற்சி மையத்தில், அவரது நண்பர்கள் ஒரு டியூஷன் சென்டரை நடத்துகின்றனர். அது சிலரை எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது. அவர்கள் அதிவீரனின் இடத்தைச் சூறையாட, பதிலுக்கு அவர்களது அலுவலகத்தைச் சுக்குநூறாக்குகின்றனர் அதிவீரனும் அவரது நண்பர்களும். அந்த இடம் ச.ச.ம.க.வின் மாவட்டச் செயலாளர் ரத்தினவேல் (பகத் பாசில்) சகோதரருக்குச் (சுனில்) சொந்தமானது. நடந்த விஷயத்தை அறியும் ரத்தினவேல், மாமன்னனையும் அதிவீரனையும் நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினால் தனது அரசியல் வாழ்வில் களங்கம் படியாது என்று எண்ணுகிறார். ஆனால், நடப்பதோ எதிர்த்திசையில் அமைகிறது.

Maamannan-FL-1.jpg

ரத்தினவேல் வீட்டில் மாமன்னன் கைகட்டி நிற்க, மற்றனைவரும் உட்கார்ந்திருக்கின்றனர். அக்காட்சியைக் காணும் அதிவீரன் கொதிக்கிறார். அதனைக் கண்டுகொள்ளாமல், அதிவீரனை அமரச் சொல்கிறார் ரத்தினவேல். பதிலுக்கு, தந்தையை நாற்காலியில் அமரச் சொல்கிறார் அதிவீரன். அதற்கு, ‘அவர் உட்காரமாட்டார். எத்தனை பேரு சொல்லியிருக்காங்க’ என்கிறார் ரத்தினவேல்.

‘இதுவரை நீங்க உட்காரச் சொல்லியிருக்கிறீங்களா’ என்று எதிர்க்கேள்வி கேட்டுவிட்டு, தந்தையை அமர்த்த முற்படுகிறார் அதிவீரன். மாமன்னன் தயங்கி நிற்க, தந்தை உட்கார்ந்தே ஆக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் மகன். மாமன்னன் அமர முற்படுகையில், அவரை மிரட்டும் தொனியில் பேசத் தொடங்குகிறார் ரத்தினவேல்.

’உங்க அப்பாவை இது நாள்வரை நிக்க வச்சதுதான் என்னோட அடையாளம்; உன்னை உட்காரச் சொன்னது என்னோட அரசியல்’ என்கிறார். அவரது வார்த்தைகளை உடைத்தெறியும் விதமாக, மாமன்னனை நாற்காலியில் அதிவீரன் அமரச் செய்கிறார்.

அப்போது, அங்கு ஒரு களேபரமே நிகழ்கிறது. மாமன்னனையும் அதிவீரனையும் கொல்லும் மனநிலைக்குச் செல்கிறார் ரத்தினவேல். விஷயம் முதலமைச்சர் காதுக்குச் செல்கிறது.

அதன்பிறகு ரத்தினவேல், மாமன்னன் தரப்பின் அரசியல் செல்வாக்கு என்னவானது என்று நீள்கிறது ‘மாமன்னன்’.

ஒரு தனித்தொகுதியில் எம்.எல்.ஏ ஆக இருப்பவரை அவரது கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் எப்படி நடத்துகின்றனர்? சாதீயம் சார்ந்த அவர்களது பார்வை அதில் எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதைப் பேசுகிறது இப்படம்.

தனக்கென்று தனித்துவமான அரசியல் பின்னணி இருந்தும், இப்படியொரு கதையில் நடிக்கச் சம்மதித்த உதயநிதியின் தைரியத்தைப் பாராட்டியாக வேண்டும். இது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதையா என்ற கேள்விக்கு, படம் பார்த்தபிறகு நீங்களாகவே பதிலைப் பெறலாம்.

பன்றியும் வேட்டை நாயும்!

இரண்டு டம்ளர்களுக்கு நடுவே உதிர்ந்து கிடக்கும் பூக்களைக் காட்டி ‘பரியேறும் பெருமாள்’ கிளைமேக்ஸில் நெகிழ்ச்சியூட்டியவர் மாரி செல்வராஜ். ‘கர்ணன்’ படத்தின் இடைவேளைக் காட்சியில், கழுதையின் கால்கட்டுகளை அவிழ்த்துவிட்டு அதனைச் சுதந்திரமாக ஓடவிட்டிருப்பார். அகாலமாக மரணமடைந்த சிறுமி, அந்தக் குடும்பத்தின் காவல் தேவதையாக மாறியதாக உருவகப்படுத்தியிருப்பார்.

‘மாமன்னன்’ படத்தில் அப்படித்தான் பன்றிக்குட்டியும் வேட்டை நாய்களும் குதிரையும் காட்டப்படுகின்றன. கதாபாத்திரங்கள் வாழும் சூழலையும் எண்ணவோட்டத்தையும் பகிரங்கப்படுத்துவதோடு, சாதிரீதியிலான வேறுபாட்டை உணர்த்தவும் அவ்விலங்குகளைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

101059831.jpg

அவ்வளவு ஏன், மாமன்னன் என்ற பெயரையே சிலர் ‘மண்ணு’ என்று சுருக்கி அழைப்பதைக் கூட ஒரு குறியீடாக மாற்றியிருக்கிறார். அது போன்ற அம்சங்கள் அவரது படைப்பாற்றலைக் கொண்டாடச் செய்கின்றன.

சமூகத்தில் நிலவும் ஆதிக்க மனப்பான்மையை திரைக்கதை விமர்சித்தாலும், அதன் மையச்சரடாக அரசியல் அதிகாரமே உள்ளது. அதனால், இதுவொரு அரசியல் படமே. இந்தக் கதையில் திடுக்கிட வைக்கும் திருப்பங்களோ, நாடகத்தனமான பாத்திரப் படைப்போ இல்லை. அதனாலேயே, படம் மெதுவாக நகரும் உணர்வு எழலாம். அதையும் தாண்டி, அடுத்தது என்ன என்று கேட்கும் விதமாக முன்பாதி நகர்கிறது. பின்பாதியில் அந்த சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது.

கதையில் இரு வேறு கட்சிகள் காட்டப்படும்போது, ‘இது இந்தக் கட்சி’ என்று ஒரு ரசிகரால் எளிதாக அடையாளம் கண்டுவிட முடியும். அதையும் மீறி கதைக்களம், கட்சிப் பெயர்கள், சின்னங்கள் என்று பல விஷயங்கள் திரையில் அணிவகுக்கின்றன.

அதனால், உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவு என்ற எண்ணத்தையே படம் ஏற்படுத்துகிறது. ஹீரோ, வில்லன் என்று மாறி மாறிக் காட்டிய இயக்குனர், காவல் துறைக்கான இடத்தைத் திரைக்கதையில் தவிர்த்திருக்கிறார்.

போலவே, அரசியல் பின்னணி கொண்ட நாயகனின் வீட்டில் குடும்ப உறுப்பினர்களைத் தவிர காவலுக்கு வேறு எவருமே இல்லை எனும்விதமாகக் கதை சொல்லியிருக்கிறார். அது போன்ற சிற்சில விஷயங்கள் நெருடலாக உள்ளன.

ஒரு படமாக நோக்கினால், மாரி செல்வராஜ் தந்திருக்கும் பிரமாண்டமான படைப்பு இது என்று ஒப்புக்கொண்டாக வேண்டும். அதற்கு முக்கியக் காரணம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. படத்தில் ஏழு பாடல்கள். ‘கொடி பறக்குற காலம்’, ‘நெஞ்சமே நெஞ்சமே’ தவிர்த்து மற்றனைத்துமே திரைக்கதையின் வேகத்தை அதிகப்படுத்தும் நோக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

Ie7Zk0fm-Screenshot-2023-06-13-202727.jp

அது போதாதென்று பின்னணி இசை வழியே நம் மனதுக்குள் ஒரு எழுச்சியையே உண்டுபண்ணியிருக்கிறார். ரஹ்மானின் சிறப்பான பின்னணி இசை இடம்பெற்ற படங்களில் ஒன்றாக நிச்சயம் ‘மாமன்னன்’ இடம்பெறும்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, குமார் கங்கப்பனின் கலை வடிவமைப்பில் பன்றிகள் இருப்பிடம், வேட்டை நாய்களுக்கான ஓட்டப்பந்தயம், வாக்கு எண்ணுமிடம், தற்காப்புக்கலை மையம், டியூஷன் சென்டர், வீடுகள் என்று பல்வேறு இடங்கள் திரையில் தடம் பதிக்கின்றன. நேரில் பார்க்கும் உணர்வை மீறி, அப்பதிவுகள் அழகியலோடு வார்க்கப்பட்டிருப்பது காட்சியாக்கத்தின் பிரமாண்டத்திற்குத் துணை புரியலாம். ஆனால், கொஞ்சம் கூட திரையில் யதார்த்தம் மிளிர உதவவில்லை. திரைக்கதை பார்வையாளர்கள் மனதில் முழுமையாகத் தாக்கம் செலுத்துவதை அது தடுத்து நிறுத்துகிறது.

செல்வா ஆர்.கேவின் படத்தொகுப்பு, திரையில் கதை தெளிவாகச் சொல்லப்பட உதவுகிறது. ஒரு காட்சியில் நாயகன் குறித்த கடந்த கால உண்மையொன்றை நாயகியிடம் பகிரும் அவரது தாய், ‘அது எனக்கும் எங்க சாமி பொட்டி பகடையப்பனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்’ என்று சொல்கிறார். அது, திரைக்கதையில் வேறேதேனும் காட்சி விடுபட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

தொழில்நுட்பரீதியில் கடுமையான உழைப்பு கொட்டப்பட்டுள்ளதற்கு ஈடாக, திரையில் அனைவரும் செம்மையாக நடித்திருக்கின்றனர். அதில் முதலிடம் பெறுவது மாமன்னனாக நடித்துள்ள வடிவேலு. இவரால் எப்படி நம்மைச் சிரிக்க வைக்காமல் இருக்க முடிகிறது என்பதற்கு ஒவ்வொரு காட்சியிலும் தனது திறமையை வெளிக்காட்டி பதிலளித்திருக்கிறார். இதே பாணியில், ஒப்பனைப்பூச்சு சிறிதுமின்றி அவர் கதையின் நாயகனாகத் தொடர்ந்து தோன்ற வேண்டுமென்பதே நமது விருப்பம்.

பகத் பாசில் ஏற்ற ரத்தினவேல் பாத்திரம் தமிழ் திரைக்குப் புதிதல்ல. ஆனால், அவர் அப்பாத்திரத்தோடு பொருந்தியிருக்கும் விதம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. கீர்த்தி சுரேஷுக்கு இதில் பெரிய பாத்திரம் இல்லை. அதேநேரத்தில், அவரது இருப்பு வலிந்து திணிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

’மாமன்னன்’ தரும் இன்னொரு ஆச்சர்யம், உதயநிதி திரையில் தோன்றியிருக்கும் விதம். மொத்த உடலிலும் ஆக்ரோஷம் நிறைந்து நிற்பது போன்று ஒவ்வொரு பிரேமிலும் வலம் வருவது,  ‘ஆக்‌ஷன் ஹீரோ’ அந்தஸ்தை எளிதாகப் பெற்றுத் தருகிறது.

அதனாலேயே, இடைவேளையில் வரும் சண்டைக்காட்சியோடு நாம் வெகு இயல்பாக ஒன்றிப் போகிறோம். நிச்சயமாக, இப்படம் அவரை ரசிகர்கள் நினைவில் இருத்தும் ஒரு படைப்பு.

மலையாள நடிகர் லால், அழகம்பெருமாள், கதிர், ரவீனா ரவி, விஜயகுமார் என்று இன்னும் பலர் இதில் நடித்துள்ளனர். உதயநிதியின் நண்பர்கள் குழாமில் ராமகிருஷ்ணா உட்படச் சிலர் தோன்றியுள்ளனர். படத்தில் அடிமுறை ஆசான் என்றொரு பாத்திரம் இடம்பெறுவது சில ஷாட்கள் தான் என்றாலும், திரைக்கதையில் அதற்கும் முக்கியத்துவம் உண்டு.

நிச்சயம் சிற்றிலக்கிய இதழ்களில் அது விவாதிக்கப் பெறும். அரசியல் கட்சியினர், அடியாட்கள் என்று சில நூறு பேர்களாவது திரையில் அவ்வப்போது தென்படுகின்றனர். இவர்களுக்கு நடுவே, உதயநிதியின் தாயாக வரும் கீதா கைலாசம், ‘யார் இது’ என்று நம்மை உற்றுநோக்க வைக்கிறார். அவருக்கென்று தனிப்பட்ட காட்சிகள் இல்லாதது மைனஸ்.  

சமூகநீதியின் அவசியம்!

முதலமைச்சரின் அறைக்குள் அத்துமீறி உதயநிதி உட்புகுவதாக ஒரு காட்சி உண்டு; அது ‘க்ளிஷே’ என்றபோதும், கொதிக்கும் மனதுக்கு மருந்திடும் ரகமாக இருக்கும். தொடக்கக் காட்சிகளில் நான்கைந்து முறை தன்னைச் சந்திக்க வருபவர்களை நாற்காலியில் வடிவேலு அமர வற்புறுத்துவதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

அதற்கான காரணம், ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களின் முன்பாக அவர் காலம்காலமாக நின்று கொண்டிருப்பதுதான் என்பது பின்னர் வெளிப்படுத்தப்படும்.

Maamannan-1.webp

ஒடுங்கிப்போவதன் வலியை உணர்ந்த காரணத்தால் சில இனக்குழுக்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே அதிகார வேறுபாடு அதிகம் இராது. பகத் பாசில் – ரவீனா ரவி மற்றும் வடிவேலு – கீதா சம்பந்தப்பட்ட காட்சிகளில் அந்த வேறுபாட்டைக் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ். தானும் மகனும் அவமானப்படுத்தப்பட்டதை மனைவியிடம் பகிரும் காட்சியில், நாற்காலியில் அமர்ந்திருக்கும் கீதாவின் கால்மாட்டில் அமர்ந்திருப்பார் வடிவேலு. அக்காட்சியாக்கம் நமக்குள் ஆயிரம் விஷயங்களை உணர்த்தும்.

படத்தின் பின்பாதியில் லால் உடன் உதயநிதி கைகொடுப்பதும், வடிவேலுவிடம் பகத் பாசில் கைகொடுப்பதும் நமக்கு இரு வேறு அர்த்தங்களை உணர்த்துவதாக உள்ளன. இறுதிக்காட்சியில் வடிவேலு திரையில் தோன்றும்போது கைத்தட்டல்கள் தியேட்டரை நிறைக்கின்றன. சமூகநீதியின் அவசியம் அப்போது பிடிபடும்.

’மாமன்னன்’ படத்தின் முன்பாதிக்கு ஈடாகப் பின்பாதியில் அதிரவைக்கும் அம்சங்கள் இல்லை. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியும் கூட ‘எதற்கு’ என்ற கேள்வியை எழுப்பும்விதமாகவே உள்ளது. அதேநேரத்தில், ‘கர்ணன்’ படம் தந்த அரைகுறை திருப்தியை மீறி நல்லதொரு ஆக்கம் இதில் மிளிர்கிறது.

உதயநிதி இதனைக் கடைசி படம் என்று குறிப்பிட்டாலும், வடிவேலுவின் திரை வாழ்வில் முக்கியமானதொரு படமாக மாறியிருக்கிறது ‘மாமன்னன்’. அதேநேரத்தில், அரசியல் கட்சிகள் சார்ந்த விமர்சனங்களைத் தாண்டி இப்படம் பேசும் அரசியல் மிக முக்கியானதொன்றாகவும் இருக்கிறது. அதற்காகவே, ‘மாமன்னன்’ படம் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறும்.
 

 

https://minnambalam.com/cinema/mamannan-movie-review-minnambalam-cinema-news/

  • கருத்துக்கள உறவுகள்

சமீபகாலப் படங்களில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வந்தும், சொல்ல முடியாமல் போன அரசியல்!

சாவித்திரி கண்ணன்

 

5478567.jpg

சமூகநீதிக்கான கட்சியிலேயே ஏற்றத் தாழ்வுகள் கோலோச்சுவதை பேச முயற்சிக்கிறது மாமன்னன். நோக்கம் மிகவும் உன்னதமானது. ஆனால், படம் பல இடங்களில் தடுமாறுகிறது! இன்னும் கொஞ்சம் களயதார்த்தை பேசி இருந்தால் கூட, ‘இது திமுகவிற்கு எதிரான படமாகக் கூட பார்க்கப்படலாம்..’ என்ற பதட்டத்துடனே படம் எடுக்கப்பட்டுள்ளதோ..?

ரிசர்வ் தொகுதியில் எம்.எல்.ஏவாக வாய்ப்பு பெற்ற மாமன்னன் அதே தொகுதியில் உள்ள மேல்சாதியினர் முன்பு சமமாக உட்கார்ந்து பேச முடியாதவராக இருக்கிறார். இதைக் கண்டு வெகுண்டு எழும் மகன் கதாபாத்திரமாக உதயநிதி நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் உண்மையான கதாநாயகன் வடிவேலு. ஒரு நிதானமுள்ள  அரசியல்வாதியாகவும், பொறுப்புள்ள அப்பாவாகவும் வடிவேலு மிகச் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்! அவரும், அவர் மனைவியும் தங்கள் வீட்டிற்கு வருபவர்களிடம் எப்படி அன்புடனும், மரியாதை தந்தும் நடந்து கொள்கின்றனர் என்பதெல்லாம் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் மக்கள் பிரதிநிதியான வடிவேலுவின் அரசியல் பங்களிப்பும், அதன் வழி மக்களிடம் அவர் பெற்ற செல்வாக்கும் சொல்லப்பட்டிருந்தால் அந்த கதாபாத்திரம் இன்னும் சரியான வடிவம் பெற்று இருப்பதோடு, ஒரு முழுமையான அரசியல் படமாகி இருக்கும்.

சாதி ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரமாக பகத்பாஸில் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். ஆனால், ஒருவரை சாதிவெறியர் எனக் காண்பிப்பதற்காக அவர் நாயை அடித்துக் கொல்வது போன்ற கொடூரக் காட்சிகளை வைக்க வேண்டுமா..என்ன?

FyvtOp0X0AI52AD.jpg

அரசியல் கட்சிகளில் இன்றும் கூட பட்டியலின எம்.எல்.ஏக்களோ, கவுன்சிலர்களோ களத்தில் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டு வரும் அவலத்தை சொல்ல வருகிற திரைக்கதையில் அனாவசியமாக இத்தனை வன்முறை காட்சிகள் நுழைக்கப்படுவானேன்?

ஒரு சமூக அவலத்தை பொறுப்புடன் சொல்ல வரும் படத்தில் செயற்கையான சினிமாத் தனங்கள், தேவைக்கும் அதிகமான அடிதடிக் காட்சிகள், ரத்தக்களரிகள்..உள்ளன! படத்தின் நல்ல அம்சமாக சொல்ல வேண்டும் என்றால், அனாவசியமான காதல் பாடல் காட்சிகளோ, விரசமான பாலியல் காட்சிகளோ, வசனங்களோ இல்லை. படத்தில் வரும் பெண் கதாபாத்திரம் கூட, காதலில் உருகாமல் ஒரு புரட்சிகரமான பெண்ணாக வடிவமைக்கப்பட்டுள்ளதை நிச்சயம் பாராட்டலாம்.

udhaykeerthy-1685247261.jpg

வசனங்கள் பல இடங்களில் ‘நச்’சென உள்ளது!

குறிப்பாக வடிவேலு பேசுகிற வசனங்கள்;

”இங்க பாதிக்கப்பட்டாலும் கூட ஆதங்கப்படுறதுக்குக்கூட ஒரு தகுதி வேணும் போல”

”நான் இத்தனை வருஷமா எனக்கு கிடைச்சது எனக்கான உரிமைன்னு நினைக்காம, எனக்கு அவங்க போட்ட பிச்சைன்னு நினைச்சது தான் ரொம்ப தப்பு…”

இதே போல சாதி ஆணவத்தை காட்டும் அரசியல்வாதியாக பகத்பாஸில் பேசும் வசனம் மறக்க முடியாதது.

“இவர இங்க நிக்க வச்சு இருக்குறது என்னோட அடையாளம். உன்ன உட்கார சொல்றது என்னோட அரசியல்”

உதயநிதி சண்டை பயிற்சி சொல்லித் தரும் இடத்தில் ஒரு மாணவன் தன் மீது மற்றொரு மாணவன் ஸ்பரிசம் பட்ட காரணத்தால், அவன் ‘சாரி’ சொல்லியும் அடித்து நொறுக்கியுள்ளான். அந்த இடத்தில் ஆசிரியரிடம் மாணவன் புகார் சொல்லும் போது, ”ஓ அவ்வளவு பெரிய ஆளாயிட்டானா அவன்?” என உதயநிதி கேட்பது பொருத்தமில்லாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட மாணவனைக் கூப்பிட்டு கடுமையாக கண்டிப்பதைவிடுத்து, அடிபட்டவனை உசுப்பிவிட்டு, மேலும் அடிவாங்க வைத்து, அரசியல் வசனம் பேசுகிறார்;

23-64a3d63b25995.jpg

“ஒருத்தனால திருப்பி அடிக்க முடியாதுன்னு தெரிஞ்சு, அவன திரும்ப திரும்ப நீ அடிக்கறேன்னா அது அயோக்கியத்தனம். உன்னால ஒருத்தன திருப்பி அடிக்க முடிஞ்சும் நீ அவன்கிட்ட திரும்ப திரும்ப அடி வாங்குனா அது கோழைத்தனம்.”

பேசும் வசனம் சிறப்பாக இருக்கலாம். ஆனால், அந்த இடத்திற்கு தேவையில்லாதது.

வடிவேலு வீட்டில் இருக்கும் புத்தர் சிலை. அம்பேத்கர் படம், கட்சித் தலைவர் அலுவலத்தில் இருக்கும் பெரியார் சிலை போன்ற குறியீடுகள் படம் சமகால அரசியலை பேச வந்ததன் சாட்சி என்றால், அரசியல் என்றாலே ரவுடித்தனம், வெட்டு, குத்து அடியாட்கள் புடை சூழ வரும் வில்லத்தனம் போன்ற படிமங்கள் இயக்குனரின் அரசியல் குறித்தான சிறுபிள்ளைத்தனமான புரிதலையே காட்டுகின்றன. இந்தப் படத்தில் இன்னும் காத்திரமாக காட்டவும், சொல்லவும் எவ்வளவோ நிறைய விசயங்கள் இருக்கும் போது, படத்தின் அதிக நேரத்தை இந்த வன்முறை காட்சிகளே எடுத்துக் கொள்கின்றன.

தன் சொந்த ஜாதியில் உள்ள முக்கியமான சாதி சங்கத் தலைவரையே பகிரங்கமாக ரத்தம் வர அடித்து கொல்கிறான் வில்லன். அந்தக் கொலையை மறைக்க அவன் எதையும் செய்ததாகவும் தெரியவில்லை. அது சொந்த சாதியில் கொந்தளிப்பை உருவாக்கவில்லை. சட்ட நடவடிக்கைக்கும் உள்ளாகவில்லை. இதை எப்படி புரிந்து கொள்வது?

அடுத்ததாக தேர்தல் களத்தை காட்டும் விதமும் படு அபத்தம். ஒரே ஒரு வீடியோ. அதுவும் சுமாரான உரை. அதுவே வடிவேலுவுக்கு வெற்றியை பெற்றுத் தந்துவிடுகிறதாம். சமூக வலைத் தளங்களாண பேஸ்புக், வாட்ஸ் அப், இண்ஸ்டாகிராம் போன்றவற்றை இன்றைய இளைஞர்கள் எப்படி அரசியலில் வைரலாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதைக் கூட அறியாதவரா மாரி செல்வராஜ்?

fcce5ad2f7ea641c675f845f3a4f985c-Copy.jp

ஒரு நிகழ்கால அரசியலை பேச முயற்சிக்கிறார் மாரி செல்வராஜ். ஆனால், அதை சுதந்திரமாகவோ, காத்திரமாகவோ சொல்ல முடியாமல், பல இடங்களில் திசைமாறுகிறார், தடுமாறுகிறார். இதற்கு முக்கிய காரணம், ‘உதயநிதியை கதாநாயகனாக நடிக்க வைத்ததும், அவர் தயாரிப்பில் இந்தப் படத்தை எடுக்க நேர்ந்ததும் தான்’ எனத் தோன்றுகிறது. ‘நிகழ்கால அரசியலில் ஆளும் கட்சியின் அமைச்சராக உள்ள ஒருவரின் படமாக இது பார்க்கப்படும்’ என்பதாலேயே பல இடங்களில் மாரி செல்வராஜ் அடக்கி வாசித்துள்ளார். வடிவேலுவுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டதற்கும், ‘உதயநிதியை விட வடிவேலு அதிகமாக பேசப்பட்டுவிடக் கூடாது’ என்ற எச்சரிக்கை உணர்வாலும் கூட இருக்கலாம்.

நிகழ்கால அரசியலை பேசும் போது, அது இன்றைய ஆளும் கட்சியின் இயலாமைகளான வேங்கை வயல் சம்பவம், கள்ளக் குறிச்சி சம்பவம் ஆகியவற்றை மக்களுக்கு நினைவுபடுத்திவிடக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளுடன் இயங்க வேண்டிய கட்டாயமெல்லாம் வந்து விடுகிறதல்லவா? கைகளைக் கட்டிக் கொண்டு, ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டவனைப் போல செயல்பட்டிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். எனினும், ‘சமூக ஏற்றத் தாழ்வுகளை கேள்விக்கு உள்ளாக்கும் படம்’ என்ற விதத்தில் இது போன்ற படங்களை வரவேற்பது நமது கடமையாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

https://aramonline.in/14127/mamannan-mari-selvaraj/

 

  • கருத்துக்கள உறவுகள்

மாமன்னன் பேசும் அரசியல் என்ன? மாரி செல்வராஜ் அதை சரியாக காட்டியுள்ளாரா?

மாரி செல்வராஜ்

பட மூலாதாரம்,FACEBOOK/MARI SELVARAJ

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் ஃபாசில் நடித்து வெளியான மாமன்னன் திரைப்படம் தமிழகத்தில் சினிமா என்ற வகையிலும் அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு என்ன காரணம்?

மாமன்னன் திரைப்படம் ஜூன் 29ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. மாரி செல்வராஜ் இதற்கு முன்பாக இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் வெகுவாகக் கவனிக்கப்பட்ட நிலையில், இந்தப் படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் படத்தின் நாயகனான உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராகப் பதவியேற்றிருப்பதால், மாமன்னன் படமே தனது கடைசித் திரைப்படமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்தப் படம் தொடர்பான முதல் அறிவிப்பு வெளியானபோதே வடிவேலுவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், படம் தொடர்பான ஆர்வம் இன்னமும் அதிகரித்தது.

   

ஒரு கட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில் ஆகியோரைவிட வடிவேலுவுக்குத்தான் முக்கியமான பாத்திரம் என வெளியான தகவல், இன்னமும் எதிர்பார்ப்பை அதிகரித்தது.

ஆனால், இவை எல்லாவற்றையும்விட இந்தப் படம் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகம் இருந்ததற்கு முக்கியமான காரணம், மாரி செல்வராஜின் முந்தைய படங்கள்தான்.

மாரி செல்வராஜின் கதைக்களங்கள்

அவரது முதல் படமான பரியேறும் பெருமாள் வெளியானபோது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தென்மாவட்டங்களில் வெளிப்படையாகவே நிலவும் சாதிவெறி, அந்த சாதிவெறியின் கொடுங்கரங்கள் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் நீண்டிருப்பது, ஒடுக்கப்பட்டவர்களின் மீது மிக நுணுக்கமாகவும் வெளிப்படையாகவும் எல்லா இடங்களிலும் நடத்தப்படும் வன்முறை, அந்த வன்முறையை ஒடுக்கப்பட்டவர்கள் நிராதரவாக எதிர்கொள்ளும் விதம் என சமகாலத்தின் ஒரு சரித்திர சாட்சியமாக அந்தப் படம் அமைந்திருந்தது.

அதற்கடுத்த படமான கர்ணன், கொடியங்குளத்தில் நிகழ்த்தப்பட்ட காவல்துறையின் அத்துமீறலைப் பின்னணியாகக் கொண்டிருந்தது.

பரியேறும் பெருமாள் படத்தில் சாத ரீதியாக ஒடுக்கப்படும் நாயகன், அத்தனை ஒடுக்குமுறைகளுக்குப் பிறகும் அதிலிருந்து விலகிச் செல்வதாகவும் பணிந்து செல்வதாகவுமே காட்டப்பட்ட நிலையில், கர்ணன் படத்தின் நாயகன் இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வாளை ஏந்தியிருப்பது போலக் காட்டியிருந்தார் மாரி செல்வராஜ்.

மாமன்னன், முந்தைய இரண்டு படங்களில் இருந்தும் முழுமையாக மாறுபட்டு அமைந்திருந்தது.

மாமன்னன்

பட மூலாதாரம்,RED GIANT MOVIES

 
படக்குறிப்பு,

மாரி செல்வராஜின் முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது மாமன்னன்.

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டம் ஒன்றில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர், அரசியலுக்கு வந்து கீழ் மட்டத்திலிருந்து வளர்ந்து எம்.எல்.ஏ.வாக ஆன பிறகும் இடைநிலை ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்படுவதும், ஒரு கட்டத்தில் மகனுடன் சேர்ந்த அவர்களை எதிர்ப்பதும்தான் இந்தப் படத்தின் கதையாக அமைந்திருந்தது.

இந்தக் கதையின் ஊடாக, தமிழ்நாட்டின் சில அரசியல் நிகழ்வுகளையும் கோடிட்டுக் காட்டியிருந்தார் மாரி செல்வராஜ்.

இந்தப் படத்தில் கதாநாயகனின் சாதி என்பது வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை என்றாலும் மேற்கு மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட சாதியினரான அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவராகவே நாயகன் காட்டப்படுகிறார்.

சினிமாவில் அருந்ததியர்கள்

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பாக வெகு சில படங்களில் மட்டுமே அருந்ததியர் கதாநாயகன், கதாநாயகியாக காட்டப்பட்டிருக்கிறார்கள். அதில் முக்கியமான படம் எம்.ஜி.ஆர். நடித்த மதுரைவீரன்.

அதற்குப் பிறகு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஆத்தா உன் கோயிலிலே திரைப்படத்தில் கதாநாயகன் அருந்ததியராகக் காட்டப்பட்டார். இந்தப் படம், காதலில் சாதி ஏற்படுத்தும் பிரச்னையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

 

ஆனால், மாமன்னன் படத்தின் முக்கியத்துவம் என்பது சாதி என்பது அரசியலில் எப்படிச் செயல்படுகிறது என்பதை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்ததுதான்.

தமிழ்நாட்டின் அரசியலில் சாதிக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கிறது. ஒவ்வோர் அரசியல் கட்சிக்குள்ளும் ஒடுக்கப்பட்டவர்கள் நடத்தப்படும் விதம் குறித்துப் பல விமர்சனங்கள் இருக்கின்றன. அந்த விமர்சனங்களில் முன்வைக்கப்படும் ஒரு விஷயத்தை இந்தப் படம் விரிவாக விவாதித்திருக்கிறது.

கட்சிக்குள் உள்ள ஒடுக்கப்பட்டவர்களை, இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவர்கள் எப்படி நடத்துகிறார்கள், அது எப்படி ஒரு சாதாரண விஷயமாகக் கடந்து செல்லப்படுகிறது என்பதை விமர்சனப்பூர்வமாக காட்டியிருந்தது மாமன்னன்.

கலைத்தன்மையில் பின்னடைவு

"படமாக்கப்பட்ட விதம், திரைக்கதை ஆகியவற்றில் சில பிரச்னைகள் இருந்தாலும் ஒரு சமகால அரசியல் பிரச்னையை கையாண்ட விதத்தில் மாமன்னன் மிக முக்கியமான படம்," என்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.

ஆனால், வேறு சில விமர்சகர்கள் மாரி செல்வராஜ் தன் முந்தைய படங்களில் எட்டியிருந்த கலைத் தன்மையிலிருந்து சரிந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார்கள்.

"இந்தப் படம், மாரி செல்வராஜின் படங்களில் வர்த்தகரீதியில் மிக முக்கியமான படமாக இருக்கலாம். ஆனால், அவரது முந்தைய இரண்டு படங்களோடு ஒப்பிட்டால், சற்று பின்னால்தான் இருக்கிறது," என்கிறார் அமெரிக்கன் கல்லூரியின் பேராசிரியரான பிரபாகரன்.

ஒரு படம் ஒடுக்கப்பட்டோரின் பிரச்னைகளைப் பேசுவதாலேயே அதைச் சிறந்த படமாகச் சொல்லிவிட முடியாது; மிகப் பெரிய இயக்குநராக வந்திருக்க வேண்டிய மாரி செல்வராஜ் இந்தப் படத்தில் ஒரு சரிவைச் சந்தித்துள்ளார் என்று குறிப்பிடுகிறார் பிரபாகரன்.

மாமன்னன்

பட மூலாதாரம்,RED GIANT MOVIES

 
படக்குறிப்பு,

சில விமர்சகர்கள் மாரி செல்வராஜ் தன் முந்தைய படங்களில் எட்டியிருந்த கலைத் தன்மையிலிருந்து சரிந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார்கள்.

"இந்தப் படத்தில் இரண்டு உண்மையான விஷயங்களை மாரி செல்வராஜ் இணைத்திருக்கிறார். ஒன்று, தனபால் சபாநாயகராக ஆக்கப்பட்டது.

மற்றொன்று ஆதிக்க சாதியினருக்குச் சொந்தமான கிணற்றில் குளிக்கும் மாணவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள். ஆனால், அது ஒரு கலை வடிவமாக மாறவில்லை.

ஒரு மிக முக்கியமான பிரச்னையை நேரடியாக அணுகாமல், வர்த்தக ரீதியாக அணுகியிருக்கிறார். தவிர, ஓர் இயல்பான திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் இதுபோல இருக்கவே முடியாது.

ஒரு கமெர்ஷியல் நடிகரின் படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், சாதி வன்முறையைப் பேசும் படத்தில் அப்படி இருக்க முடியாது. ஓர் உண்மையான கலைஞன் பின்னடைவைச் சந்தித்திருப்பது வருத்தமளிக்கிறது," என்கிறார் பிரபாகரன்.

இந்தப் படத்தில் நாயையும் பன்றியையும் முரணாக நிறுத்தியிருப்பதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

"மாரி செல்வராஜ் தனது படங்களில் தொடர்ந்து சூழலில் தென்படும் விலங்குகளைக் காட்டுகிறார். முந்தைய படங்களிலும் நாய், கழுதை, குதிரை, பன்றி போன்றவை காட்டப்படும். இந்தப் படத்திலும் அவற்றைக் காட்டுகிறார். அது ஒரு மிக முக்கியமான அம்சம்," என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

''இந்த முறை சர்ச்சை இல்லை''

மாரி செல்வராஜ்

பட மூலாதாரம்,RED GIANT MOVIES

மாரி செல்வராஜின் முந்தைய படமான கர்ணன் வெளியானபோது, அந்தப் படம் தென் மாவட்டத்தை மையமாகக் கொண்டிருந்த படமாக இருந்தாலும், மேற்கு மாவட்டங்களில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்தப் படம் அம்மாதிரி ஒரு சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்கிறார் அவினாசியைச் சேர்ந்த எழுத்தாளரான கே.என். செந்தில்.

"இந்தப் படம் ஏன் சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்பது புரியவில்லை. படத்தைப் பொருத்தவரை முதல் பாதி, தாங்கள் தேர்ந்தெடுத்த களத்திற்கு நியாயம் செய்திருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி ஒரு வழக்கமான சினிமாகவே கடந்து போய்விட்டது. கடைசியில் தேர்தல் போட்டிதான் படம் என்பதுபோல ஆகிவிட்டது," என்கிறார் கே.என். செந்தில்.

இருந்தபோதும், அரசியலில் ஒடுக்கப்பட்ட சாதியினர் மீதான அதிகாரத்தை எவ்வளவு நுட்பமாக இடைநிலை சாதியினர் கையாளுகின்றனர் என்பதைப் படத்தின் துவக்கத்திலிருந்து இறுதிவரை நுணுக்கமாக காட்டிக்கொண்டே வருவது பரவலான பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.

மாரி செல்வராஜை பொறுத்தவரை, இந்தப் படம் கலைரீதியாக அவரை முன்னகர்த்தியிருக்கிறதா என்ற கேள்விக்கு வெவ்வேறு பதில்கள் இருக்கலாம். ஆனால், 'மாரி செல்வராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' ஒன்றை உருவாக்கினால், இந்தப் படத்திற்கு அதில் முக்கியமான இடம் இருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/cy974nn489zo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.