Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எது வரலாறு ? - கருணாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எது வரலாறு ?

எது வரலாறு ?

  —- கருணாகரன் —-

“வரலாறு என்பது என்ன? அது எப்படியானது?” வெடிகுண்டையும் விட ஆபத்தானதா? அவ்வளவு பயங்கரமானதா? அப்படியென்றால் வரலாறு ஏன்? எதற்காக? யாருக்காக? என்ற கேள்விகள் இன்று இலங்கைக் குடிமக்கள் ஒவ்வொருவருடைய மனதிலும் அச்சத்தோடு எழுந்து கொண்டிருக்கின்றன. (இந்த வரலாற்றுக் கதையாடல்களை இனிமையாக ருசித்துக் கொண்டிருப்போர் விலக்கு).

அந்தளவுக்கு வரலாற்றுக் கதைகள் (வரலாற்றுப் புரட்டுகள்) அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களாலும் ஊடக அதிகாரத்தில் இருப்போரினாலும்  திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இனவன்முறைகளைத் தூண்டும் இந்த வரலாற்றுக் கதைகள், உண்மையில் வெடி குண்டையும் விட அபாயகரமானவை. வெடிகுண்டுகள் வெடிக்கும் கணத்தில் மட்டும்தான் பாதிப்பை உண்டாக்கும். இவை அப்படியல்ல. மனதில் ஆழமாக ஊடுருவி தலைமுறைகளுக்கு வியாதியாகத் தொடரக் கூடியவை. தலைக்குள் ஊடுருவி விட்டால் இதயத்தையே கல்லாக்கி, இரும்பாக்கி பரம்பரைகளை நாசமாக்கி விடுபவை. அதனால்தான் இவை மிகப் பயங்கரமான வெடிகுண்டுகள் – நச்சு விதைகள் என்கிறோம்.

இந்த வரலாற்றுக் கதைகளினால் எழுகின்ற மேற்குறித்த கேள்விகளை எழுப்புவோர் நியாயமான வரலாற்றாசிரியர்களோ வரலாற்று அறிஞர்களோ இல்லை. (அதென்ன, நியாயமான வரலாற்று ஆசிரியர்களும் நியாயமான வரலாற்று அறிஞர்களும் என்று நீங்கள் கேட்கலாம். வரலாற்றை அறிவார்ந்த கண் கொண்டு, சமூகப்பொறுப்பு என்ற மனம் கொண்டு பார்க்கின்றவர்களே நியாயமான வரலாற்று ஆசிரியர்களும் அறிஞர்களுமாவர்) வரலாற்றாசிரியர்களும் அறிஞர்களும் கேள்வி எழுப்பினால், அதில் அறிவின் சாரமிருக்கும். ஓரளவுக்கேனும் அதில் நியாயமிருக்கும்.

வரலாறு பற்றி இப்பொழுது அதிகமாகப் பேசுவதும் மக்களை அந்தப்பக்கமாக இழுத்துத் திருப்பி விடுவதும் இனவாதிகளே! தங்களுடைய அரசியல் பெரிய லாபத்துக்காக குறுகிய வழியில் இனவாதத்தைத் தூண்டுகிறார்கள். அதற்காக வரலாற்றை ஒரு கருவியாக எடுத்தாள்கிறார்கள். தமக்கேற்ற விதமாக வரலாற்றுப் புனைவை உருவாக்குகிறார்கள். இவர்களுடைய வரலாற்றுக் (கட்டுக்) கதைகள் – இவர்கள் சொல்லும் வரலாறு பற்றிய புனைகதைகள் – அத்தனையும் அறிவுக்கும் உண்மைக்கும் அப்பாலானது. நகைப்புக்குரியது. முட்டாள்தனமானது. அதனால்தான் இது ஆபத்தானதாக உள்ளது. சாத்தான் வேதம் ஓதுகிறது என்பார்களே! அதுதான் இது. தேவ கட்டளையை மீறியொலிக்கும் சாத்தான்களின் குரல்.

நாடோ பொருளாதாரத்திலும் இன நெருக்கடியிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் பிச்சையெடுப்பதைப்போலக் கெஞ்சிக் கெஞ்சி கடன்பட்டும் உதவி கேட்டுக்கொண்டுமிருக்கிறது அரசாங்கம். “நாட்டைக்கொள்ளை அடித்தால் இப்படித்தான் உலகத்திடம் பிச்சையெடுக்க வேண்டி வரும்” என்று யாரும் எளிதாகச் சொல்லிக் கடந்து விடலாம். ஊழலும் மோசடியும் பொறுப்பின்மையும் ஆட்சி அதிகாரத்தில் இருப்போரிடம் மட்டும்தான் இருக்கிறது என்றில்லை. நாட்டில் பொறுப்பான இடங்களில் பதவி வகிக்கின்ற அத்தனை பேரிடத்திலும் செழித்துள்ளது. 

ஆளுந்தரப்புக்கு நிகராக அதற்கு வெளியே உள்ள எதிர்க்கட்சிகளிடத்திலும் ஊழலும் பொறுப்பின்மையும் வளர்ந்து நிற்கிறது. அரச நிர்வாக, அரச சார்பற்ற நிறுவனங்களிலும் இவை தாராளம். ஊர்கள், கிராமங்களில் உள்ள மக்கள் அமைப்புகளிடம் இது பரவியுள்ளது. அங்குள்ள மக்களில் சிலரிடமும் இவை ஊடுவி வளர்ந்து கொண்டிருக்கின்றன.

இதனால்தான் முழுதாகவே கவிழ்ந்த நிலையில் நாடு இருக்க வேண்டிய நிலை வந்தது.

நாட்டைக் காப்பாற்றுவதற்கு எந்தப் புதல்வரும் புதல்வியரும் இல்லை என்றாகி விட்டது.

 இந்தச் சூழ்நிலையில்தான் பஞ்சம் தலைவிரித்தாடப்போகிறது என்ற அச்சத்தில், முன்னெச்சரிக்கையுடன் ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டுப் பிழைப்புத் தேடி, பொருளாதாரப் பாதுகாப்புத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். படித்தவர்கள், உயர் பொறுப்புகளிலும் பதவிகளிலும் இருப்போர் தொடக்கம் எல்லோரும் ஓடுகிறார்கள்.

இந்த ஓட்டம் சாதாரணமானதல்ல. மிக மிக ஆபத்தானது.

இது நீடித்தால் சில மாதங்களில் ஆஸ்பத்திரிகளில் மருத்துவர்களே இருக்க மாட்டார்கள். நாட்டிலே மருந்துக்கும் மருத்துவர்களைக் காண முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடும்.

பாடசாலைகளில் ஆசிரியர்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவும். இப்பொழுதே பல பாடசாலைகளில் பொருத்தமான – போதிய ஆசிரிய வளமின்றி மட்டுப்பாடுகளுடன் கல்வியை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.

இதுபோலத்தான் ஒவ்வொரு துறையிலும் பெரிய வெற்றிடங்கள் உருவாகப் போகின்றன. உத்தியோகத்தர்கள் மட்டும்தான் நாட்டை விட்டுப் போகிறார்கள் என்றில்லை. படித்துக் கொண்டிருப்போர், தொழில்துறை அனுபவமுடையவர்கள் என்று எல்லோரும்தான் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் பல திணைக்களங்களிலும் ஆட்பற்றாக்குறை ஏற்படும். நிர்வாகம் முடங்கி நாடே படுத்து விடும்.

இந்த வெளியேற்றம் சாதாரணமானதல்ல.

ஒரு நாட்டின் வளம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. சாதாரண வளமல்ல. மனித ஆற்றலின் வளம். மனித ஆற்றலின் வளமே மிகச் சிறந்தது.

பிறந்து, வளர்ந்து, படித்து, அறிவாளிகளாகவும் தொழில் வல்லுனர்களாகவும் உருவாகுவதற்கு அல்லது உருவாக்கப்படுவதற்கு சராசரியாக முப்பது ஆண்டுகள் செல்லும். பலருக்கு அதற்கு மேலும் செல்லும். இதற்கான செலவைச் செய்தது நமது நாடேயாகும்.

இப்படி நாட்டின் செலவில் வளர்ந்து, ஆளுமைகளாக உருவாகியோர்தான் நாட்டின் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்குமாக உழைத்துக் கொடுக்க வேண்டியவர்கள். நாட்டைக் கட்டியெழுப்பவும் அதைப் பாதுகாக்கவும் வேண்டியவர்கள். நாட்டுக்கு நெருக்கடி வரும்போது அதில் நின்று தாக்குப் பிடித்து அதை மீட்க வேண்டியவர்கள். ஆனால், இவர்கள் நெருக்கடி வந்து விட்டதென்று ஓடுகிறார்கள் என்றால்…?

அதிகம் ஏன்? நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, படிப்பித்து ஆளாக்கிய பிறகு அவர்கள் உங்களைக் கைவிட்டு விட்டு ஓடிப்போனால்…? பிறத்தியாருக்கு உழைத்துக் கொடுப்பவர்களாக மாறினால்…? அப்பொழுது  உங்கள் நிலை என்னவாகும்? உங்கள் மனதும் உங்கள் வாழ்வும் எப்படியிருக்கும்?

அப்படித்தான் இன்று நாட்டை விட்டு வெளியேறுவோரின் நிலையும் நாட்டின் நிலையும் உள்ளது.

இதேவேளை இப்படிச் செல்வோரைப் பிற நாடுகள் வரவேற்கின்றன. இவர்களை அழைக்கும் செலவு கூட இல்லாமல், தங்களுக்குத் தேவையான ஆற்றலர்களையும் தொழிலாளர்களையும் இந்த நாடுகள் பெற்றுக் கொள்கின்றன. தனியே அதற்கான கூலியை மட்டும் கொடுத்தால் போதும் என்ற நிலையில் வைத்திருக்கின்றன. அதுவும் தொடக்கத்தில் மிகக் குறைவான ஊதியமும் வாழ்க்கை வசதிகளுமே வழங்கப்படுகின்றன. அந்தளவுக்கு நம்முடைய மக்களை வைத்து அவை தம்மை வளர்த்துக் கொள்கின்றன. ஆனால், நமது நாடோ!?

இதெல்லாம் இந்த வரலாற்றுப் பிரியர்களான இனவாதிகளுக்கு புரியவே புரியாது. அவர்களுடைய தலைக்குள் இருப்பது மண்கூட இல்லை. அதையும் விடக் கழிவான பொருளே உண்டு. அதனால்தான் அவர்களை நாம் தயங்காமல் முட்டாள்கள், மூடர்கள் என்கிறோம்.

நாடு எதிர்கொண்டிருக்கும் இந்தத் திக்கு முக்காடல் போதாதென்று இந்த இனவாதிகள் வரலாற்றுப் புனைவுகளைக் கட்டவிழ்த்து மேலும் தொண்டைக்குழியை இறுக்குவதென்றால்….?

இதிலே துயரமும் வெட்கக் கேடும் என்னவென்றால், அப்படியானவர்களை நமது மக்கள்தான் பாராளுமன்றத்துக்கே தங்கள் பிரதிநிதிகளாக அனுப்பி வைத்துள்ளார்கள்.

சரத் வீரசேகரா அண்மைக்காலத்தில் முளைத்த ஒரு அரசியல்வாதி. சிங்களத் தரப்பில் அவருக்குப் பெரிய ஆதரவுத்தளமொன்றுமில்லை. ஆனால், தன்னுடைய இனவெறிப் பேச்சுகளால் தமிழ் அரசியல், ஊடகப் பரப்பைத் தன்வசப்படுத்தியிருக்கும் கெட்டிக்காரர்.

இன்னொரு முட்டாள் உதய கம்மன்பில. கொழும்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை முற்றுகையிடுகிறார். இதுவா இப்பொழுது தேவையானது?

ஏற்கனவே இணக்கத்தீர்வுக்கு எதிர்ப்புள்ளியில் இயங்குபவர் கஜேந்திரகுமார். அப்படியானவரை முற்றுகையிடுவதென்பது, தமிழ்ப்பரப்பில் அவருக்கான ஆதரவு அலையை மேலும் பெருக்குவதாகவே அமையும். அதாவது மேலும் தீவிரநிலையை ஊக்கப்படுத்துவதாக இருக்கும். அப்படி அமையும்போது இலங்கையில் மேலும் நெருக்கடியும் இனவாதமுமே வளரும். பிரச்சினைகள் தீராது.

சிங்கள அதிகாரத் தரப்பின் உள் நோக்கமும் அதுதான். கஜேந்திரகுமாரை வளர்த்து விடுவது. அவர் வளர்ந்தால்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமலே காலத்தை இலகுவாக ஓட்ட முடியும்.

எனவே பிரச்சினைகளை வளர்த்து அதில் அரசியல் ஆதாயம் தேடுவதே இவர்களின் நோக்கம்.

இப்படித்தான் விமல் வீரவன்சவும்.

எந்த நிலையில் எதைப் பேச வேண்டும்? எதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும்? என்று சிந்திக்காதவர்கள். நாடிருக்கும் நிலையைப் பற்றிச் சிந்திக்காதவர்கள்.

வெளிச்சக்திகளுக்கு நாடு அடமானமாகிக் கொண்டிருப்பதைப்பற்றிய சிந்தனையே இல்லாதவர்கள்.

இப்படியானவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்களால் தீமையே அதிகம்.

சரத் வீரசேகரா, உதயன்கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றவர்கள் அரை மூடர்கள் என்றால் இவர்களையும் இவர்கள் சொல்வதையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு இவர்களுக்குப் பதிலளிக்க முற்படுவோர் முழு மூடத்தனத்தில் இயங்குவோராகும். சிறிதரன், கஜேந்திரன், விக்னேஸ்வரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் போன்றவர்கள் இந்த வகையானோரே!

செல்வாக்கற்ற ஒற்றை மனிதர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர் உளறுவதையெல்லாம் பெரிசாக்கிப் பொது மக்களுக்கு செய்தி அளிக்கும் ஊடகங்களும் முழு முட்டாள்தனத்தில் இயங்குகின்றவையாகும்.

அப்படியென்றால், இவர்கள் சொல்லும் வரலாற்றுப் புரட்டுகளை எல்லாம் நாம் கேட்டுக் கொண்டு சும்மா இருப்பதா? பதிலடி கொடுக்க வேண்டாமா? என்று சிலர் கேட்கக் கூடும்.

சரத் வீரசேக, விமல்வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சில இனவாதப் பிக்குமார், இனவாத ஊடகங்கள் வெளிப்படுத்தும் கருத்துகள் நம்மைச் சீண்டும்தான். அதுதான் இந்தத் தரப்பின் நோக்கமுமாகும். நம்மையும் இனவாதச் சகதிக்குள் தள்ளி விடுவது.

ஆனால், இவர்கள் விரிக்கின்ற இந்த வலைக்குள் நாம் விழக் கூடாது. அதுதான் நமது அரசியலாக இருக்க வேண்டும். அறிவினால் இந்தச் சதி வலையில் சிக்காமல் இதைக் கடந்து செல்ல வேண்டும். மாற்று உத்திகளைக் கையாண்டு இவர்களை முறியடிக்க வேண்டும். இவர்களை மட்டுமல்ல, இவர்களை வைத்து அரசியல் ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் அரசாங்கத்தையும் அதிகார அரசியல் மையங்களையும் வெற்றி கொள்ள வேண்டும். அதற்குரிய நிதானமும் அறிவுக் கூர்மையும் அரசியற் தெளிவும் நமக்கு வேண்டும். அதை நாம் உருவாக்கிக் கொள்வது அவசியம்.

ஆகவே இந்த வரலாற்றுக் கோமாளிகளை நாம் ஒரு போதும் பொருட்படுத்தவே வேண்டியதில்லை. நான்கு நாட்களுக்கு இவர்களைப் பொருட்படுத்தவில்லை என்றால் இவர்கள் கத்திக் களைத்து விடுவார்கள். தங்களை யாரும் பொருட்படுத்தவில்லை என்று சோர்ந்து போவார்கள்.

ஆனால், எதிர்ப்புள்ளியில் இருக்கும் இனவாதிகள் அப்படிச் செய்ய மாட்டார்கள். அவர்களும் இதைத் திட்டமிட்டுச் செய்கிறார்கள். பிறகெப்படி இதைப் புறக்கணிப்பார்கள்? ஆகவேதான் இதற்கு மறுத்தான் கொடுக்கிறோம் என்று நமது “தமிழ் வீரர்களும்” கத்துகிறார்கள்.

இதற்காக ஒவ்வொரு கட்சியும் ஒரு சமூகமும் தமக்குள் தீவிர நிலைச் சக்திகளை வைத்துப் பராமரிக்கின்றன. இலகுவான வழியில் அரசியல் ஆதாயத்தைப் பெறுவதற்கான வழியாக அவை இந்தத் தீவிரவாதிகளை ஊக்குவிக்கின்றன. என்பதால்தான் இதைக் கண்டித்துக் கட்டுப்படுத்தாது விட்டு விடுகின்றன.

ஊடகங்களுக்கும் இனவாதிகளுக்கும் எப்போதும் எதிர்த்துக் களமாடுவதற்கு சில “வாய்கள்” வேண்டும். அவை அதைப் பிடித்துத் தொங்கிக் கொள்ளும். அதில்தானே அவற்றுக்கும் லாபம் கிடைக்கும்.

என்பதால்தான் இவர்கள் (இருதரப்பும்) அவிழ்த்து விடும் வரலாறு பற்றிய கதையாடல்களையும் கட்டுக்கதைகளையும் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும் என்கிறோம்.

ஏனென்றால் இவர்களின் ஆபத்தான இந்தச் செயற்பாடுகளை நாம் எளிதில் கடந்து செல்ல முடியாது. இவர்கள் விதைக்கின்ற விசம் மிகப் பயங்கரமானது. ஆயிரமாயிரம் வெடிகுண்டுகளுக்குச் சமம். இவர்கள் தூண்டுகின்ற இனவாதத்துக்கு பலியாகுவது மக்களாகிய நாமே!

இதேவேளை இந்தச் சூழலில் எந்த வரலாற்று அறிஞரும் வரலாற்று ஆசிரியர்களும் தமிழ் – சிங்களத்  தரப்புகளுக்கு இடையில் நிகழும் வரலாற்றுப் புளுகுப் போர்களைப் பற்றி எதுவுமே பேசாதிருக்கின்றனர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்களுடைய அறிவுபூர்வமான  சொல்லை – அறிவுரைகளை – ஆய்வு முடிவுகளை இந்த இனவாதிகள் பொருட்படுத்த மாட்டார்கள். அவற்றுக்கு மதிப்பளிக்கவும் மாட்டார்கள்.

என்பதால்தான் வரலாறு பற்றிய அச்சம் இன்று நாட்டில் உள்ள அனைவருக்கும் எழுந்துள்ளது. இந்த அச்சத்தை மக்களாகிய நாம்தான் முறியடிக்க முடியும்.

வரலாற்றுப் புனைவுகளுக்குள் சிக்குண்டு அள்ளுப்படாமல், வரலாற்று ஆய்வுகளின் ஊடாகப் பயணிப்போம். வரலாறு நம்மை மீட்கட்டும். நம்மை யார் என்று நமக்கும் பிறருக்கும் உணர்த்தட்டும். வரலாறு நமக்கு வழியை மூடிச் சிதைப்பதற்குப் பதிலாக வழிகளைத் திறந்து காட்டட்டும். வரலாறு நம்மை உலக அரங்கில் நிறுத்தட்டும்.

அந்த வரலாற்றை எழுதுவோம்.

 

https://arangamnews.com/?p=9907

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.