Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இந்த ஆனந்தரங்கப்பிள்ளை..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த ஆனந்தரங்கப்பிள்ளை..?

anandaranga-pillai-ch01.jpg

வரலாற்றை ஆவணப்படுத்தும் வழக்கம் கொண்டவர்கள் தமிழர்கள். பழங்கால இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவை இத்தகைய ஆவணங்கள்தாம். இதன் தொடர்ச்சிதான் 18ஆம் நூற்றாண்டில் காகிதங்களில் எழுதப்பட்டு மிகப்பெரிய ஆவணங்களாக எழுந்து நின்ற, ‘ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்புகள்’.

ஆனந்தரங்கப்பிள்ளை

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் திருவேங்கடம் பிள்ளை. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்குத் தலைமகனாக 30 மார்ச் 1709 அன்று பிறந்தவர்தான் ஆனந்தரங்கம் பிள்ளை. இவரது தம்பி திருவேங்கடம் பிள்ளை (தந்தையின் பெயரே இவருக்கு வைக்கப்பட்டிருக்கிறது).

பெரம்பூரில் வணிகம் செய்துவந்த திருவேங்கடம் பிள்ளை, பிரெஞ்சு வாணிபக் கழகத்தில் தலைமைத் தரகராக இருந்த தமது உறவினர் நைனியப்பப் பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க 1700களின் தொடக்கத்தில் புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்தார்.

அங்கு ஆனந்தரங்கப்பிள்ளைக்குச் சிறப்பான கல்வி கிடைத்தது. தமிழ், தெலுங்கு, பிரெஞ்சு மொழிகளைக் கற்றார். மேலும் குஜராத்தி, மராத்தி, மலையாளம், பார்சி, போர்ச்சுகல் ஆகிய மொழிகளும் இவர் வசமானது.

ஆனந்தரங்கப்பிள்ளைக்குப் பதினேழு வயது இருக்கும்போது, பரங்கிப்பேட்டையில் இருந்த வியாபாரக் கிடங்கின் தலைமைப் பொறுப்பில் அவர் அமர்த்தப்பட்டார். பின்னர் புதுச்சேரி திரும்பிய இவர், தலைமைத் துபாஷியாக இருந்த கனகராய முதலியாருக்குக் கீழ் உதவித் தரகராக – துணை துபாஷியாகப் (மொழிபெயர்ப்பாளராக) பணியாற்றத் தொடங்கினார். கனகராய முதலியாரின் மறைவுக்குப் பிறகு இவர் தலைமைத் துபாஷியாகப் பதவியேற்றார்.

ஆனந்தரங்கப்பிள்ளை துபாஷியாக மட்டும் இல்லாமல் ஜவுளி, அரிசி, சாராயம், சுண்ணாம்பு, குதிரை, பவழம் தொடர்புடைய வணிகங்களையும் மேற்கொண்டிருந்தார். விழுப்புரம், அச்சரப்பாக்கம், வந்தவாசி, செங்கழுநீர்ப்பட்டு (செங்கற்பட்டு) உள்ளிட்ட கிராமங்களின் வரி வசூலிக்கும் உரிமையும் இவருக்கு இருந்தது. ‘ஆனந்தரப் புரவி’ எனும் கப்பலுக்கும் இவர் சொந்தக்காரராக இருந்தார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்குள் ஆனந்தரங்கப்பிள்ளை எப்போது வேண்டுமானாலும் வரலாம், போகலாம். பல்லக்கில் மேளதாள வாத்தியத்துடன், தங்கப் பிடி போட்ட கைத்தடி, செருப்பு அணிந்து செல்வது போன்ற தனி உரிமைகளைப் பெற்றிருந்தார் ஆனந்தரங்கப்பிள்ளை.

பிரெஞ்சு அரசாங்கத்தால் திவான் பட்டமும், ஆற்காடு நவாபு முசாபர்ஜங் என்பவரால் மன்சுபேதார் பட்டமும், செங்கல்பட்டு முழுமைக்குமான ஜாகிர்தார் பட்டத்தையும் பெற்றிருந்தார். ‘புதுச்சேரியின் பிரதம மந்திரி என்னும்படியான நிலையில் ஆனந்தரங்கப்பிள்ளை எல்லா நிழ்ச்சிகளையும் நடத்தி வந்ததாக’க் குறிப்பிடுகிறார் அவரது வரலாற்றுச் சுருக்கத்தை எழுதிய ரா.தேசிகன்.

ஆனந்தரங்கப்பிள்ளையின் மனைவி மங்கத்தாய். இவர்களுக்கு நான்கு மகன்கள். மூன்று மகள்கள். இவரது தம்பி திருவேங்கடம்பிள்ளை, சென்னையில் பிரெஞ்சு கப்பல் தளபதி லபோர்தெனேவிடம் சிறிதுகாலம் துபாஷி உத்தியோகம் பார்த்தார்.

p2.jpg

1700 களில் கட்டபட்ட ஆனந்தரங்கபிள்ளை வீடு

 

பெரும் வணிகராக, தமிழராக, தமிழர்களுக்குக் குரல் கொடுப்பவராக, ஆளுமைமிக்க நிர்வாகியாக, பல்லக்கில் பவனிவந்த ஆனந்தரங்கப்பிள்ளை தனது இறுதிக் காலத்தில் பெரும் சரிவைச் சந்தித்தார். ஆட்சிமாற்றம், பொருளாதார நெருக்கடிகள், போர்ச் சூழல்கள் அவரைப் பெரிதும் நிலைகுலைய வைத்தன. தனது 52வது வயதில் 12 ஜனவரி 1761இல் காலமானார். இவர் காலமான நான்காவது நாள் புதுச்சேரி ஆங்கிலேயர் வசமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்தரங்கப்பிள்ளையால் தியாகராயப் புலவர், மதுரகவிராயர், ஜவ்வாதுப் புலவர் உள்ளிட்ட புலவர்கள் ஆதரிக்கப்பட்டனர். இவர் பெயரில் இலக்கண விளக்கப் பரம்பரை சதாசிவ தேசிகர் ‘ஆனந்தரங்கக் கோவை’ எனும் நூலையும், கஸ்தூரி ரங்கய்யர் எனும் ஆந்திரப் புலவர் ‘ஆனந்தராட்சந்தமு’ எனும் தெலுங்கு யாப்பு நூலையும், சீனிவாச கவி என்பவர் ‘ஆனந்தரங்க விஜயம்’ எனும் நூலையும் படைத்திருக்கிறார். தன்னைப்பற்றிப் பாடிய புலவர் ஒருவருக்குத் தட்டு நிறைய தங்கக் காசு கொடுத்திருக்கிறாராம் ஆனந்தரங்கப்பிள்ளை.

du.jpg

அப்போதைய கவர்னர் ரூப்லக்ஸ்

 

நாட்குறிப்புகள்

ஆனந்தரங்கப்பிள்ளை இன்றளவும் பேசப்படுவதற்குக் காரணம் அவர் எழுதி வைத்த நாட்குறிப்புகள்தான். ஓராண்டோ ஈராண்டோ அல்ல, தொடர்ந்து 25 ஆண்டுகள் இடைவிடாது எழுதி வந்திருக்கிறார். இவற்றில் சொந்த சமாசாரங்களை அல்ல, நாட்டில் அன்றன்று நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்து வந்திருக்கிறார்.

இந்தக் குறிப்புகள் தமிழில்தான் எழுதப்பட்டுள்ளன. ஆனால் பிரெஞ்சு, போர்த்துக்கீசியம், உருது, மராத்தி, தெலுங்குச் சொற்களின் கூட்டுக்கலவையாக இருக்கின்றன. அக்காலத்திய பேச்சு நடையில் எழுதப்பட்டிருக்கின்றன. ‘எல்லோர்க்கும் புரியும் வண்ணம் அது பச்சைத் தமிழிலே கொச்சைத் தமிழிலே எழுதப்பட்டிருப்பதாக’ ரா.தேசிகம்பிள்ளை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்தரங்கரின் டைரிக் குறிப்புகள் குறித்து பாரதியாரின் கருத்து வருமாறு:

‘துய்ப்ளேக்ஸ் என்பவனிடம் துபாஷ் உத்தியோகம் பார்த்த ஆனந்தரங்கம்பிள்ளை, பிரெஞ்சு – இந்திய சரித்திரத்தின் மகோன்னத பருவத்திலே அதன் மகோன்னத புருஷனுக்கு விளக்குப் போலவும் ஊன்றுகோல் போலவும் சதா நாள் தவறாமல் ஒவ்வொரு கார்யத்துக்கும் பக்க உதவியாக நின்றது மட்டுமேயன்றி அந்தக் காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் முக்கியமானது முக்கியமில்லாதது என்றுகூட கவனிக்காமல் ஒன்று தவறாமல் சித்ரகுப்தன் எழுதிவரும் பதிவைப்போல நல்ல பாஷையில் உண்மையான யோக்கியமான சரித்திர நூல் இஃதொன்றுதான் இருக்கிறது. இந்த மாதிரியாக இந்த வழியில் எழுதப்பட்ட சரித்திர நூல் உலக முழுவதிலும் வேறெந்த பாஷையிலும் இல்லை.’

ஆனந்தரங்கப்பிள்ளையின் தினசரியைப் பற்றி பாலபாரதியில் வ.வே. ஸுப்ரமண்ய ஐயர் எழுதிய அபிப்ராயம்:

‘இந்நூல் ஒரு அபூர்வமான நூலாகும். நமது தேச சரித்திரத்தின் மிகவும் இருளடைந்திருக்கிற ஒரு பாகத்தை இது நன்கு துலக்கித் தருகிறது.… பிரஞ்சு ராஜதந்திரிகளோடு நெருங்கிப் பழகும் வசதி பெற்றுள்ள ஆனந்தரங்கப்பிள்ளை என்பார் அப்போதைக்கப்போது சவகாசம் ஏற்படுத்திக்கொண்டு தான் நேரில் கண்டும் கேட்டும் உள்ள விஷயங்களைச் சித்திரகுப்தனைப் போல ஒன்றுவிடாமல் குறித்து வைத்த புஸ்தகமே இப்பிரஸ்தாப தினசரியாகும்.

தினசரியை சித்தரகுப்தனது கணக்குக்கு ஒப்பிட்டோம். அந்தப் பயங்கரமான கணக்கில் நாம் முக்கியம் என நினைக்கும் விஷயங்கள் மிகவும் லேசாகவே பதியப்பட்டிருக்கலாம். நாம் அலக்ஷியமாக தள்ளிவிடும் காரியங்களும் எண்ணங்களும் வெகு விஸ்தாரமாக எழுதப்பட்டிருத்தல் கூடும். அதே மாதிரி ஆனந்தரங்கப்பிள்ளையும் பெரும்பாலோர் பிரதானம் என்று கருதும் சம்பங்களைப்பற்றிச் சில ஓரிரண்டு வார்த்தைகளே எழுதி வைத்திருக்கிறார். ஒன்றுமில்லாத விஷயம் என்று நினைக்கக் கூடியவற்றைப் பற்றி விமரிசையாக எழுதி வைத்திருக்கிறார். அவர் எந்தக் கருத்துக் கொண்டு இவ்வாறு எழுதினார் என்று கண்டுபிடித்தல் நமக்குச் சாத்தியமில்லை. ஆனால், தமிழ்நாட்டை நாம் சலனப்படக் காட்சியில் (ஸினிமாவில்) பார்ப்பது போன்ற உணர்ச்சி நமக்கு உண்டாகிறது.

அத்தினசரியாகிய புகைப்படச் சுருள் அவிழ அவிழ எத்தனை விதமான உருவங்கள் தோன்றி மறைகின்றன. ஒவ்வொரு உருவமும் உயிரோடிப்பதைப் போலத் தோன்றுகிறது. ஊசிபோல் குத்தினால் அவ்வுருவங்களினின்று ரத்தம் வருமென்று நமக்குத் தோன்றும். கிசுகிசு மூட்டினால் சிரித்துவிடுவார்கள் என்று நினைப்போம். அவ்வளவுக்கு அவை உயிருள்ள மனிதன் என்கிற உணர்ச்சி நமக்கு உண்டாகிறது.’

ஆனந்தரங்கர் தனது நாட்குறிப்பை ‘தினசரி தஸ்திரம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்புகள் ‘பிரத்தியேகமான ஆனந்தரங்கப் பிள்ளையவர்களின் சொஸ்த லிகித தினப்படி சேதி குறிப்பு’ எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. உலகப் புகழ்பெற்ற சாமுவேல் பெப்பீஸ் எழுதிய டைரிக் குறிப்புகளுடன் ஒப்பிடப்படுகிறது.

ஆனந்தரங்கரின் டைரியை ஆங்கில மொழிபெயர்ப்பில் மூன்று பாகங்களைத் தொகுத்தளித்த வரலாற்றாசிரியர் ஸர் பிரடெரிக், ‘ஆனந்தரங்கரின் டைரிக் குறிப்புகளானது அவரது பேராற்றலும் சமநோக்கும் நிதான புத்தியும்கொண்ட கீழ்த்திசையாளர் ஒருவரின் ஆழ்ந்த சிந்தனைகளையும், தன்னைப் பற்றியும் தனது தலைவர்களைப் பற்றியும் அவரது அச்சமற்ற நேர்மையான விமரிசனங்களையும் கொண்ட தனிச்சிறப்பு வாய்ந்த கருத்துக் கருவூலமாகும். இக்குறிப்புகள் முக்கியமான நிகழ்ச்சிகளும் இணைந்து காணக்கிடைக்கும் ஒரு புதுமையான கலவையாகும். இவரை இந்திய பெப்பீஸ் என்று அழைக்கலாம்’ என்கிறார்.

‘ஆனந்தரங்கப் பிள்ளை தினசரி, சிறுகதைகள் கொத்து அல்ல. சரித்திர நூலுமல்ல. அன்றாடம் பார்த்ததையும் கேட்டதையும் குறைக்காமலும் மிகைப்படுத்தாமலும் கற்பனா சக்தியை உபயோகிக்காமல் உள்ளதை உள்ளபடி அவர் அதில் குறிப்பிட்டு இருப்பதாகப்’ புகழ்கிறார் ஆனந்தரங்கரின் தினசரியைப் பதிப்பித்து வெளியிட்ட ஞானு தியாகு.

ஆனந்தரங்கரின் டைரிக் குறிப்புகள் ‘விலை மதிக்க முடியாத சரித்திரப் பொக்கிஷம்’ என்று சொல்லும் ரா.தேசிகன், ‘பிள்ளை அவர்கள் கண்டும், கேட்டும் குறித்ததே அந்நாட்குறிப்பு. அது, துய்ப்ளேக்ஸ் கால இந்தியாவைப் படம்பிடித்துக் காட்டுகிறது…. எல்லோருக்கும் புரியும் வண்ணம் அக்கருத்துக் கொண்டே அது பச்சைத் தமிழிலே, கொச்சைத் தமிழிலே எழுதப்பட்டிருப்பதாகவும்’ சிலாகித்துள்ளார்.

p1.jpg

‘விஜய ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பு (1736-61) ஒரு அசாதாரணமான படைப்பு. கர்னாடகமும் வங்காளமும் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்ட காலத்திய அரசியல் நிகழ்வுகளை விவரிக்கும் அரியதொரு நூல். அது, பதினெட்டாம் நூற்றாண்டின் தமிழ்ச் சமுதாயத்தினை அறிந்துகொள்ளப் பெரிதும் துணைநிற்கிறது. இவ்வாறு அது அரசியல் வரலாறு மட்டுமல்ல சமுதாய வரலாற்று நூலாகவும் ஓங்கி உயர்ந்து நிற்கிறது…. இன்று உலாவரும் நூல்களில் பிள்ளையின் நாட்குறிப்பே காகிதத்தில் முதன்முதலாக எழுதப்பட்ட நூலாக இருந்திருக்க வேண்டும்’ என்பார் வரலாற்று ஆசிரியர் இர.ஆலாலசுந்தரம். இதன் காரணமாகவே தமிழ்நாட்குறிப்பின் தந்தை, நாட்குறிப்பு நாயகர், நாட்குறிப்பு வேந்தர் என்றெல்லாம் புகழப்படுகிறார் ஆனந்தரங்கப்பிள்ளை.

ஆனந்தரங்கப்பிள்ளையின் டைரிக் குறிப்புகளின் மூலம் குறிப்பிட்ட காலத்தின் அரசியல், வரலாறு, பண்பாடு மற்றும் சமூகப் பொருளாதார நிலவரங்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இதில் எத்தனையோ நாடு நகரங்கள், காடு மேடுகள், கோட்டை கொத்தளங்கள், அதிசயங்கள் வந்து போகின்றன. நாடு பிடிக்கும் போர்கள், பேராசைக்காரர்கள், எதிரிகள், துரோகிகள், நியாயவான்கள், அறிவாளிகள், தரகர்கள் எனச் சகலரும் நமக்கு எதிரில் நடமாடுகிறார்கள். மாடுகள், குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள், கரடிகள் ஏன், மலாக்காவின் மனிதக் குரங்கும் வந்து போகின்றன. சாயம் ஏற்றப்பட்ட துணிகள் நம் கண்முன்னே விரிகின்றன. மேளதாள வாத்தியங்கள் நம் காதுகளைக் கிழிக்கின்றன.

மரக்கலன்கள் கடலில் மிதப்பதைப் பார்க்க முடிகிறது. மாடுகள் பொன் வெள்ளிக் கட்டிகளைச் சுமந்து வருகின்றன. பீரங்கிகளில் இருந்து சீறிப்பாயும் தீக்குடுக்கைகள் நம்மை உரசிச் செல்கின்றன. வெட்டப்பட்ட மனிதத் தலைகளில் இருந்து ரத்த வாடை வீசுகிறது. பகலில் நட்சத்திரம் மின்னுவது, பூசணியளவு நட்சத்திரம் மண்ணில் விழுவது போன்ற அதிசயங்களை நம்மால் பார்க்க முடிகிறது. புதுவையில் அடித்தப் பெருங்காற்று நமக்கு அச்சமூட்டுகிறது. விருந்தினர்களுக்கு மடித்துக் கொடுக்கப்பட்ட வெற்றிலைப் பாக்குகள் பன்னீருடன் கலந்து நமக்கு வாசமூட்டுகின்றன.

கலியாணம், கருமாதி உள்ளிட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள், கோயில் திருவிழாக்கள், ஆளுகிறவர்கள் பரிமாறிக்கொண்ட பரிசுப் பொருள்கள், பொதுமக்களிடம் இருந்து அடித்துப் பிடுங்கப்பட்ட சொத்துகள் என அத்தனையும் விவரித்துப் பட்டியலிடப்பட்டுள்ளன.

வ.வே.சு. ஐயர் குறிப்பிடுவதுபோல், ‘இவை அத்தனையும் சலனப்படக் காட்சிகளாக’ நம் கண்முன்னே விரிகின்றன.

இனி நாம் அந்த சலனப்படத்திற்குள் பயணிப்போம்.

(தொடரும்)

senguttuvan-100x100.jpg

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். ‘சமணர் கழுவேற்றம்’, ‘கூவம் – அடையாறு – பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.com

https://kizhakkutoday.in/anandaranga-pillai-01/

....

https://kizhakkutoday.in/anandaranga-pillai-45/

டிஸ்கி :  

புதுவை அரசால் பாதுகாக்கபடும் உண்மை பிரதி அக்கால 
எழுத்தின் முறையால் படிக்க இயலாது..

p3.jpg

ஒரளவு அதை படித்து பொருள் கொண்டு தற்கால நடைமுறைக்கு
ஏற்ப எழுதிவருபவர் தொடரின் அசிரியர் இதுவரை 45
தினசரி செய்தி குறிப்புகளை தந்துள்ளார் ..

1700 களில் தமிழ்நாடு , புதுவை எப்படி இருந்தது ..? 
ஆர்வலர்கள் தொடர்ந்து பயணிக்குக..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி தோழர். 👍🏼

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.