Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேரளாவில் குண்டு வெடிப்பு- 40 இற்கும் மேற்பட்டோருக்கு காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவில் குண்டு வெடிப்பு- 40 இற்கும் மேற்பட்டோருக்கு காயம்.

இந்தியா கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றினை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 40 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள மூன்று இடங்களை இலக்கு வைத்து குறித்த குண்டு தாக்குதல்; நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் குறித்த தாக்குதலுக்கு இதுவரையி;ல் எந்த அமைப்பும் பொறுப்பு கூறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேரளா பொலிஸார் முன்னெடுத்து;ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1356145

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

bomb blast

கேரளா: கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் பயங்கர குண்டு வெடிப்பு – விசாரணையை தொடங்கிய என்.ஐ.ஏ.

கேரள மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு; இரண்டு முறை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரி பகுதியில் இன்று காலை கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்போது 10 நிமிட இடைவெளியில் இரண்டு முறை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது அங்கிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

bomb blast

இந்நிலையில், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் என்ஐஏ கொச்சி யூனிட் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகிறது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், கேரள அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி மூலம் கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் பேசியுள்ளார்.

களமச்சேரி வெடி விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. காயமடைந்தவர்களில் இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் சென்றுள்ளனர். தீவிரவாத தாக்குதலா என்பது குறித்து விசாரணைகளுக்குப் பிறகே கூறமுடியும் என கேரள முதல்வர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ambulance

இந்த குண்டு வெடிப்பு விபத்தில் 35 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏழு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விடுப்பெடுத்த அனைத்து மருத்துவர்களும் உடனடியாக பணிக்குத் திரும்பி வர உத்தரவிடப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜோர்ஜ் தெரிவித்தார்.

வெடி விபத்து நடந்த இடத்தில் வெடிகுண்டு வெடித்த தடையங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது என கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில தலைவர் எம்வி.கோவிந்தன் செய்தியாளர்களிடம் கூறினார்.

https://www.puthiyathalaimurai.com/india/fact-check-of-viral-video-that-states-kerala-hindu-woman-forced-to-wear-burqa

  • கருத்துக்கள உறவுகள்

மதங்களைக் கடந்த மனிதாபிமான உலகை எமது அடுத்தலைமுறைக்கு அர்பணிக்கத் துணியாதவரை  அமைதியை அடையமுடியாதுபோல் தெரிகிறது. உலகம் இசுலாமிய பயங்கரவாதம் என்கிறது. ஆனால் இந்துத்வா, யூதத்துவா,புத்தத்துவா என மதங்களின் பயங்கரவாதம் கோலோச்சி வருவதே இன்றைய உலகின் துயரங்களின் அடிப்படையாக இருக்கிறது. பாவம் அப்பாவிகள். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

  • கருத்துக்கள உறவுகள்

RSS ன் கைகள் பின்னால் இருக்கும் என்பது வெள்ளிடைமலை. 

  • கருத்துக்கள உறவுகள்

கேரளா, எர்ணாகுளம் அருகே பயங்கர வெடிவிபத்து : ஒருவர் பலி ; 5 பேர் கவலைக்கிடம்

29 OCT, 2023 | 05:33 PM
image

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த வெடி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் இன்று (அக்.29) ஞாயிறு தோறும் நடக்கும் கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இந்த நிலையில் காலை 9 மணியளவில் இந்த கூட்டத்தில் மூன்று இடங்களில் பயங்கர வெடி விபத்துகள் ஏற்பட்டன. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஜெபக்கூட்டத்தில் வெடித்தது சாதாரண வெடிப் பொருட்களா அல்லது வெடிகுண்டுகளா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகளை முடுக்கி விடுமாறு சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். இது தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். அனைத்து உயர் அதிகாரிகளும் எர்ணாகுளத்தில் குவிந்துள்ளனர். சம்பவம் குறித்து டிஜிபியிடம் பேசியிருக்கிறேன். விசாரணைக்குப் பிறகே கூடுதல் விவரங்கள் தெரிய வரும்” என்று தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/168028

  • கருத்துக்கள உறவுகள்

கேரளா கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு - பிடிபட்டவர் யார்? எதற்காக குண்டு வைத்தார்?

கேரளா குண்டுவெடிப்பு
29 அக்டோபர் 2023, 07:18 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கேரள மாநிலத்தில் கிறிஸ்தவர்களின் ஒரு பிரிவான யெகோவா ஜெபக் கூட்டத்தின்போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார், 36 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஒருவர் பிடிபட்டுள்ளார். யார் அவர்? குண்டு வைத்தது ஏன்?

கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு

கொச்சியில் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாடு கடந்த 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று(அக்டோபர் 29) காலையில் இந்த மாநாட்டின் பிரார்த்தனைக் கூட்டம் நடந்துகொண்டிருந்த போது, மாநாட்டிற்குள் சில முறை வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்பு மொத்தம் மூன்று இடங்களில் நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலை பிரார்த்தனை முடிந்த உடனேயே மண்டபத்தில் முதல் வெடிப்பு நிகழ்ந்ததாகவும், அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு முறை என மூன்று முறை குண்டுவெடிப்பு நடந்ததாகவும் ஜெபக் கூடத்தின் உள்ளூர் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகுமார் கூறினார்.

கேரளாவில் ஏற்பட்டது குண்டுவெடிப்பு சம்பவம், அது விபத்து அல்ல என்று காவல் டி.ஜி.பி டாக்டர் ஷைக் தர்வேஷ் சாஹேப் உறுதிப்படுத்தியுள்ளார்.

கேரளாவில் மதக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு

காவல்துறை டி.ஜி.பி. என்ன கூறினார்?

தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்று காலை 9.40 மணிக்கு வெடிப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார். 36 பேர் காயமடைந்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் IED (improvised Explosive Device-கையால் உருவாக்கப்பட்ட சக்தி குறைவான வெடிகுண்டு) பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

நாங்கள் எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். இதற்குப் பின்னால் யார் இருக்கிறார் எனக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டுகிறேன். வெறுப்பைத் தூண்டும் வண்ணம் யாரும் சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம். அப்படிச் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

இன்றைய நிகழ்ச்சிகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கின. 9.40க்கு பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனை முடிந்ததும் சுமார் 2500 பேர் குழுமியிருந்த மண்டபத்தின் மையப் பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது அனைவரும் அரங்கில் நின்று கொண்டிருந்தனர்.

அடுத்தடுத்து மூன்று முறை வெடிப்பு நிகழ்ந்தது. முதல் வெடிப்புக்குப் பிறகு, மண்டபத்தின் இடது மற்றும் வலது பக்கங்களில் வெடிப்பு ஏற்பட்டன.

ஒருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உடனடியாக உயிரிழந்தார். மண்டபத்தில் இருந்த பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 
கேரளாவில் மதக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு

IED என்றால் என்ன?

IED என்பது Improvised Explosive Device என்பதற்கான சுருக்கம். இது பாரம்பரிய ராணுவ தயாரிப்பு முறைகளுக்கு மாறான வழிகளில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் ஒரு வெடிபொருள்.

IEDகள் பல்வேறு பொருட்களால் தயாரிக்கப்படலாம், இதில் ராணுவ வெடிமருந்துகள், வணிக வெடிமருந்துகள் அல்லது வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகள்கூட அடங்கும்.

இவை பல்வேறு வழிகளில் வெடிக்க வைக்கப்படலாம், இதில் தொலைவிலிருந்து, டைமர் மூலம் அல்லது ஸ்விட்ச் மூலம் வெடிக்க வைக்கலாம்.

இவை சாலைகளின் ஓரங்களில், கட்டடங்களில் அல்லது வாகனங்களில் வைக்கப்படலாம். IEDகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்வது மிகவும் கடினம். இவை கணிசமான சேதத்தை ஏற்படுத்தும் மற்றும் உயிழப்புகளை ஏற்படுத்தும்.

இது மிகவும் துர்திருஷ்டவசமான நிகழ்வு- கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் மதக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், “இது மிகவும் துர்திருஷ்டவசமான நிகழ்வு. காவல்துறையினர் இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மாநில காவல்துறை டி.ஜி.பி உட்பட உயர் அதிகாரிகள் கொச்சிக்கு சென்றுள்ளனர். காயமடைந்தவர்களில் இரண்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் இந்த சம்பவம் குறித்து பேசினார் . தேசிய புலனாய்வு முகமை மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார்.

பினராயிடம் பேசிய அமித் ஷா

கேரளாவில் மதக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த சம்பவம் குறித்து செய்தியாளார்களிடம் பேசிய மத்திய அமைச்சர் முரளிதரன், "கிறிஸ்துவ மத மக்களின் பொதுப்பிரார்த்தனை கூட்டத்தில் இப்படி ஒரு வெடிகுண்டு தாக்குதல் நடந்தது அறிந்து மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன். இச்சம்பவம் குறித்து மாநில முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசி வாயிலாக உள்துறை அமைச்சர் அமித்ஷா , தொடர்பு கொண்டு பேசினார். அவரைத்தொடர்ந்து நானும் , முதல்வரை தொடர்பு கொண்டு பேசினேன். இது வெடிகுண்டு தாக்குதல்தான் என டிஜிபி உறுதிப்படுத்தியுள்ளார்" என்றார்.

இப்படிபட்ட தாக்குதல் நடக்கும் என புலனாய்வு துறைகள் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளார்களா என கேட்டதற்கு, விசாரணையின் முடிவிலேயே தெரிய வரும் என்றார்.

“எரிவாயு சிலிண்டர் வெடிப்பு அல்லது அதுபோன்ற எதுவும் இல்லை. இரண்டு தொலைக்காட்சிகள் மட்டுமே அரங்கில் இருந்தன. அதிலிருந்து ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டாலும், அதுபோன்ற வெடிப்பு ஏற்படாது. தற்போது சம்பவம் நடந்த இடத்தை காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்,” என்று ஜெபக் கூடத்தின் உள்ளூர் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகுமார் கூறினார்.

 

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், "களமச்சேரியில் மதக் கூட்டத்தில் நடைபெற்ற வெடிப்பில் ஒருவர் இறந்து, 20 பேர் காயமுற்றது குறித்து அறிந்து அதிர்ச்சி ஆனேன். இறந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கிறேன். காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், “கேரளாவில் யெகோவா ஜெபக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்பதில் அனைத்து மத தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும்,” என்று தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் வி டி சதீசன் இந்த சம்பவம் மர்மமானதாக இருப்பதாகத் தெரிவித்தார். முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தேசிய புலனாய்வு முகமை விசாரணை

தேசிய புலனாய்வு முகமை இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக பி.டி.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உஷார் நிலையில் இருக்க காவல்துறை டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.

கேரளா ஜெபக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு

பொதுக்கூட்டங்கள் மற்றும் அரசியல் கூட்டங்களைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கேரள தீவிரவாத தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்தில் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க தீக்காய சிகிச்சை மருத்துவர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவின்படி கொச்சி சென்றுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு படை குண்டு வெடிப்பு தடுப்பு குழு ஒன்று டெல்லியிலிருந்து கேரளாவுக்கு அனுப்புவதாக ஏ என் ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குண்டு வெடிப்பு குறித்து விசாரிக்கவும், குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை சேகரிக்கவும் இன்று மாலை அந்த குழுவினர் இன்று மாலை கேரளா வருகின்றனர். எட்டு பேர் கொண்ட தேசிய பாதுகாப்பு படையினர் குழு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பாதுகாப்பு படையின் தலைவர் எம் ஏ கணபதியின் உத்தரவின் படி இந்த குழு கேரளா வருவதாக ஏ என் ஐ செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இந்த குழுவினருடன் மோப்ப நாய்கள் மற்றும் வெடி மருந்து குறித்த தகவல் அறிந்த நிபுணர்கள் வருகின்றனர்.

குண்டுவெடிப்பு தொடர்பாக ஒருவர் கைது

கேரளாவில் கலமசேரியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஒருவர் பிடிபட்டுள்ளார்.

அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள ஏடிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) எம்.ஆர்.அஜித் குமார், "இதனை தாமே செய்ததாகக் கூறி திருச்சூர் மாவட்டத்தின் கிராமப்புறமான கொடக்கரா காவல் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார். அவர் பெயர் டொமினிக் மார்ட்டின். அவரும் அந்த சபாவைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார். அதனை நாங்கள் சரிபார்த்து வருகிறோம். இந்த வழக்கின் அனைத்து அம்சங்களையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். மண்டபத்தின் மையப் பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தது." என்று கூறினார்.

குண்டு வைத்தது ஏன்? மார்ட்டின் வீடியோ

கேரளா குண்டுவெடிப்பு

பட மூலாதாரம்,FB/DOMINIC MARTIN

கிறிஸ்தவ ஜெபக்கூட்ட குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள மார்ட்டின், அதற்கு முன்னதாக தான் குண்டுவைத்தது ஏன் என்பது குறித்து விளக்கி பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"என்னோட பெயர் மார்டின்.

இப்போது நடந்த சம்பவம் குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியவந்திருக்கும் என நம்புகிறேன். யெகோவாவின் சாட்சிகள் (Jehovah’s Witnesses) அமைப்பினர் நடத்திய ஒரு கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்று பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது.

என்னவிதமான சேதம் ஏற்பட்டது என்பது எனக்கு முழுமையாக தெரியாவிட்டாலும், சம்பவம் நடைபெற்று பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது என்பது எனக்கு உறுதியாக தெரியும்.

அந்த சம்பவத்தின் முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். அங்கே அந்த குண்டு வெடிப்பை நடத்தியது நான் தான். எதற்காக நான் குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்தினேன் என்பதை உங்களுக்கு விளக்க தான் நான் இந்த விடியோவை வெளியிடுகிறேன்.

16 வருடங்களாக நானும் இந்த அமைப்பில் ஒரு உறுப்பினராக இருந்துள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் இந்த அமைப்பு குறித்து நான் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. விளையாட்டாக தான் எடுத்துக்கொண்டேன்.

ஒருவருக்கு ஒரு நம்பிக்கை இருப்பது தவறல்ல. நாம் பூமியில் பிறக்கின்றோம், வாழ்கின்றோம், இறந்து போகின்றோம் சிலர் சொர்க்கத்துக்கு செல்வதாகவும், சிலர் நரகத்துக்கு போவதாகவும் நம்புகின்றனர். அது அவரவர் நம்பிக்கை சார்ந்தது. அது தவறல்ல.

ஆனால் இந்த அமைப்பினர், பூமியில் வாழ்கின்ற அனைவரும் அழிந்து போவார்கள் ஆனால் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டும் அழிந்து போக மாட்டார்கள் தொடர்ந்து வாழ்வார்கள் என்று போதிக்கின்றனர்.

850 கோடி மக்களின் அழிவை விரும்புகின்ற ஒரு அமைப்பை நாம் என்ன செய்ய வேண்டும். எனக்கு வேறு வழி தெரியவில்லை. இந்த தவறான அமைப்பையும் அவர்களது போதனைகளுக்கு எதிராக எதாவது செய்தே ஆக வேண்டும்.

இது போன்ற போதனைகள். பிரசாரங்கள் இந்த நாட்டில் தேவையில்லாதது என்ற முழு நம்பிக்கையோடுதான் நான் இதை கூறுகிறேன்.

அடுத்ததாக நான் இப்போதே போலீஸ் ஸ்டேசனிற்கு சென்று சரணடைய போகிறேன். என்னை தேட வேண்டிய அவசியமில்லை." என்று அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/crg105plmq6o

  • கருத்துக்கள உறவுகள்

வெடி விபத்து..... 🤣

"ஆனால் இந்த அமைப்பினர், பூமியில் வாழ்கின்ற அனைவரும் அழிந்து போவார்கள் ஆனால் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டும் அழிந்து போக மாட்டார்கள் தொடர்ந்து வாழ்வார்கள் என்று போதிக்கின்றனர்.

850 கோடி மக்களின் அழிவை விரும்புகின்ற ஒரு அமைப்பை நாம் என்ன செய்ய வேண்டும். எனக்கு வேறு வழி தெரியவில்லை. இந்த தவறான அமைப்பையும் அவர்களது போதனைகளுக்கு எதிராக எதாவது செய்தே ஆக வேண்டும்.

இது போன்ற போதனைகள். பிரசாரங்கள் இந்த நாட்டில் தேவையில்லாதது என்ற முழுநம்பிக்கையோடுதான் நான் இதை கூறுகிறேன்."

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

சரியான மொக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

கேரள வெடிவிபத்து சம்பவம் : உயிரிழப்பு 3 ஆக அதிகரிப்பு ; ஒருவர் பொலிஸில் சரண்

Published By: DIGITAL DESK 3    30 OCT, 2023 | 10:26 AM

image

இந்தியாவில் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜெபக்கூட்டத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

2,300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட 'யெகோவாவின் சாட்சிகள்' என்ற கிறிஸ்தவ சபையினரின் ஜெபக்கூட்டத்தில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை 9.45 மணி அளவில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த போது,மையப்பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது.

இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் அடுத்த சில வினாடிகளிலேயே அரங்கின் பக்கவாட்டு பகுதிகளில் மேலும் 2 குண்டுகள் வெடித்தன. 

இந்த குண்டு வெடிப்பில் சிக்கியும், தீயில் சிக்கியும் பலர் படுகாயம் அடைந்தனர். 

குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தவர்களில் ஒரு குழந்தை உள்பட 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் 95 சதவீத தீக்காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியதாக திரிச்சூர் மாவட்ட பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் சரணடைந்துள்ளார். யெகோவாவின் சாட்சிகள் அமைப்பின் செயல்பாடுகள் நாட்டுக்கு ஆபத்தானது மற்றும் இளைய தலைமுறையினர் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் உள்ளதால் இந்த தாக்குதல் நடத்தியதாக அவர் கூறியுள்ளார். 

கைதான நபர் பரபரப்பு வாக்குமூலங்களை கொடுத்துள்ளார். 

ஜெபக் கூட்டத்திற்கு வருவோர் வீட்டிலிருந்து உணவு கொண்டுவருவார்கள் என்பதால், திட்டமிட்டு  உணவு பெட்டி வெடிகுண்டு தயாரித்தேன். அதைத்தான் சோதனை செய்ய மாட்டார்கள். நாள் முழுக்க தங்கி ஜெபம் செய்பவர்கள் உணவு பெட்டி கொண்டு வருவார்கள். அதனால் அதில் குண்டை கொண்டு வந்தேன். பல நேரங்களில் உணவு பெட்டி பல கேட்பாரற்று கிடந்துள்ளன. இதை பயன்படுத்திக்கொண்டேன்.

நான் ஜெபக் கூட்டத்தில் வைத்த உணவு பெட்டி வெடிகுண்டை 2 மணி நேரமாக யாரும் கண்டுகொள்ளவில்லை. சந்தேகப்படவில்லை. அப்போதே எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது இது வெடிக்கும் என்று. வெடிகுண்டை தன்னந்தனியாகத்தான் தயாரித்தேன். எனக்கு யாரும் உதவி செய்யவில்லை. அந்த சபையின் செயல்பாடு பிடிக்கவில்லை என்பதால் 2 வருடமாக திட்டமிட்டு இதை செய்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில் கேரள குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/168041

  • கருத்துக்கள உறவுகள்

கேரளா குண்டு வெடிப்பு: ‘அமைதியான’ஆங்கில ஆசிரியர் குண்டு வைக்கும் அளவுக்குச் சென்றது ஏன்? - பிபிசி கள ஆய்வு

கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கேரளாவின் கொச்சி நகருக்கு அருகில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருக்கிறது. குண்டு வைத்ததாகச் சரணடைந்திருக்கும் நபரின் பின்னணி பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வந்த அவரைத் அறிந்தவர்கள், அவர் யாருடனும் அதிகம் பேசமாட்டர் என்றும், யாருடனும் எந்த சச்சரவும் வைத்துக்கொண்டதில்லை என்றும், தன் மகளின் மீது மிகவும் பாசமாக இருந்தார் எனவும் கூறுகிறார்கள்.

இப்படிப்பட்டவர் குண்டு வைக்கும் அளவுக்குச் சென்றது எப்படி?

அதற்கான காரணமாக அவர் கூறியது என்ன?

 
கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்
படக்குறிப்பு,

யஹோவாவின் சாட்சியங்கள் கூட்டம் நடைபெற்ற களமச்சேரியின் ஜாம்ரா சர்வதேச மாநாட்டு அரங்கு

என்ன நடந்தது?

கேரள மாநிலம் கொச்சி நகருக்கு அருகில் உள்ள களமச்சேரியில் உள்ள ஜாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில், அக்டோபர் 27-ஆம் தேதி முதல் யகோவாவின் சாட்சியம் என்ற மதப் பிரிவினரின் மாநாடு நடந்து வந்தது.

இதற்காக சுமார் 2,500 பேர் அந்த மாநாட்டுக் கூடத்தில் கூடியிருந்த நிலையில், அன்று காலை 9.40 மணியளவில் அகுண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.

இதில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 50 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்

‘என் அம்மா ஆறுதலுக்காகப் போனார், இறந்துவிட்டார்’

இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த 54 வயதுப் பெண்மணியான குமாரி புஷ்பனின் குடும்பத்தினர் நொறுங்கிப் போயிருக்கிறார்கள்.

"முதலில் இவ்வளவு மோசமாக நடந்திருக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. இங்கே வந்தபோது என் அம்மாவின் நிலை சிக்கலாக இருப்பதாகச் சொன்னார்கள். அப்போதும் அவர் இறந்துவிட்டதாகச் சொல்லவில்லை. ஆனால், ‘சிக்கலாக இருப்பதாகச்’ சொன்னதுமே நான் புரிந்து கொண்டுவிட்டேன். கொஞ்ச நேரம் கழித்துத்தான் அம்மாவைக் காட்டினார்கள். அவரது உடல் 90% எரிந்து போயிருந்தது. பிறகு அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டது. சிறுநீரகம் சேதமடைந்துவிட்டது. ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது. தேறமாட்டார் என்பது தெரிந்துவிட்டது," என்று சொல்லிவிட்டு அழுகிறார் அவரது மகன் ஸ்ரீராஜா.

குமாரி புஷ்பன் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்தவர். இவர்களுடையது ஒரு இந்துக் குடும்பம். ஆனால், குமாரி மட்டும் யகோவாவின் சாட்சியத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்.

"எனக்கு எந்த மதத்திலும் பெரிய நம்பிக்கை கிடையாது. என் அம்மாவுக்கு குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருந்தன. அம்மாவுக்கு இங்கே ஆறுதல் கிடைத்தது. சந்தோஷம் கிடைத்தது. இது அம்மாவின் தனிப்பட்ட விஷயம் என விட்டுவிட்டோம்," என்கிறார் ஸ்ரீ ராஜா.

 
கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்
படக்குறிப்பு,

சுமார் 50 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது

இறந்துபோன 12 வயதுச் சிறுமி

இந்த விபத்தில் முதன் முதலில் உயிரிழந்த பெண்மணி யார் என்பது முதலில் அடையாளம் காண முடியாமல் இருந்தது. பிறகு அவர் பெம்பாவூர் இரிங்கோலைச் சேர்ந்த லெயோனா பாலோஸ் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவரது உடலுக்கு டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு உடலை ஒப்படைக்க அரசு முடிவுசெய்திருக்கிறது.

இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சைபெற்றுவந்த 12 வயதுச் சிறுமியான லிபினா என்பவரும் உயிரிழந்திருக்கிறார். அவருடைய தாயும் சகோதரனும் தற்போது ஆபத்தான கட்டத்தில் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

மாற்றுத்திறனாளி கணவருடன் உயிர் தப்பிய பெண்

கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்
படக்குறிப்பு,

தாங்கள் கண் மூடி பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது முதல் குண்டு வெடித்ததாக சொல்கிறார் அப்போது அங்கிருந்த ராணி ரிச்சர்ட்

குண்டுவெடிப்பு நடக்கும்போது பிரார்த்தனைக் கூடத்தின் உள்ளே இருந்து உயிர் தப்பியவர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

குண்டு வெடித்தபோது பிரார்த்தனைக் கூடத்துள் இருந்த ராணி ரிச்சர்ட், அந்த அனுபவத்தை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.

முதலில் வெடிச்சத்தம் கேட்டதாகவும், பிறகு தீப்பற்றி எரிந்தபோது மக்கள் அது மின்சார ஷார்ட்-சர்க்யூட் ஆக இருக்கும் என்று நினைத்ததாகவும் கூறுகிறார்.

 
கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்

"காலை சரியாக 9:38 மணி இருக்கும். நாங்க அங்கே போனோம். உள்ளே அமர்ந்து பக்கத்தில் இருந்தவர்களோடு பேசிக்கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு பிரார்த்தனை ஆரம்பமானது. நாங்கள் கண்களை மூடி பிரார்த்தித்தபோது, ஹாலின் மையத்தில் அந்த வெடிச் சத்தம் கேட்டது. ஒரு பெரிய தீப்பிழம்பு வந்தது. அதைப் பார்த்தவுடன் மின்சார வயரில் ஷார்ட் - சர்க்யூட் என நினைத்தோம்,” என்கிறார் ராணி.

இவரது கணவர் ஒரு மாற்றுத் திறனாளி. அவர்கள் அங்கிருந்து எப்படித் தப்பித்து வந்தனர் என்று கூறுகிறார். “எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பயங்கரமான புகைமூட்டம் ஏற்பட்டது. என் கணவர் ஒரு மாற்றுத் திறனாளி. அதனால் கஷ்டப்பட்டு எல்லோரும் வெளியில் வந்தோம். வெளியில் வந்தவுடன் நான் சுயநினைவை இழந்து விழுந்துவிட்டேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் சுயநினைவு திரும்பினாலும் உடம்பு முழுக்க வலி இருந்தது. இப்போதும் வலி இருக்கிறது," என்கிறார் ராணி ரிச்சர்ட்.

‘சிறிது நேரம் கழித்தே குண்டு வெடிப்பு எனத் தெரிந்தது’

களமச்சேரியைச் சேர்ந்த ஜோசுவாவும் இதே போன்ற அனுபவத்தையே சொல்கிறார்.

"நானும் ஒரு யகோவா விசுவாசிதான். பிரார்த்தனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே குண்டு வெடித்தது. அந்த நேரத்தில் யாருக்கும் ஏதும் புரியவில்லை. நான் வெளியில் வந்த பிறகு மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு நடந்தது. பிரதான வாயில் அருகே வந்ததும் இன்னும் ஒரு குண்டு வெடித்தது. கொஞ்ச நேரம் கழித்துத்தான் இது குண்டு வெடிப்பு எனத் தெரிந்தது," என்கிறார் ஜோசுவா.

இப்போது மெல்ல மெல்ல அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்கும் 'யகோவாவின் சாட்சிய' விசுவாசிகள், அந்த மாநாட்டு அரங்கிலிருந்து வாகனங்களை எடுத்துச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த வழக்கை மாநிலக் காவல்துறையோடு, தேசியப் புலனாய்வு முகமையும் விசாரித்துவருகிறது. எட்டு பேரைக் கொண்ட குழு ஒன்று, குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்கு வந்து, தடயங்களைச் சேகரித்துச் சென்றிருக்கிறது.

கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்
படக்குறிப்பு,

டொமினிக்கின் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது

விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது?

இந்தக் குண்டுவெடிப்பை தானே நிகழ்த்தியதாகக் கொச்சியின் தம்மனம் பகுதியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் சம்பவம் நடந்த ஞாயிற்றுக் கிழமை மதியமே சரணடைந்துவிட்டார்.

இருந்தும், பல சந்தேகங்களைத் தீர்த்த பிறகே, இந்த வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது என்ற முடிவில் இருக்கிறது கேரள காவல்துறை.

டொமினிக் கடந்த இரண்டு ஆண்டுகளாக கேரளாவில் இல்லாத நிலையில், அவர் வெளிநாட்டில் இருந்தபோது யாருடன் தொடர்பில் இருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார் என்பதையெல்லாம் காவல்துறை விசாரித்து வருகிறது.

அவருடைய ஃபேஸ்புக் நடவடிக்கைகள் ஆராயப்படுவதோடு, அவரது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

தங்கள் பகுதியில் சாதாரணமாகச் சுற்றித்திரிந்த நபர் இதுபோல ஒரு செயலில் ஈடுபட்டிருந்தார் என்பதை அந்தப் பகுதியில் வசிப்பவர்களால் நம்ப முடியவில்லை.

 
கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்
படக்குறிப்பு,

தம்மனத்தில் டொமினிக் மார்ட்டின் குடியிருந்த வீடு

‘குண்டு வைத்தவர் ஒரு அமைதியான ஆங்கில ஆசிரியர்’

தம்மனத்தில் குறுகிய தெரு ஒன்றில், ஒரு மாடி வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பத்தினருடன் வசித்துவந்திருக்கிறார் டொமினிக் மார்ட்டின்.

அந்த வீட்டின் உரிமையாளர் பி.ஏ. ஜலீல் அதிர்ந்து போயிருக்கிறார்.

"டொமினிக் ஐந்தரை வருடங்களுக்கு முன்பாக இங்கே குடிவந்தார். ஆங்கிலம் பேச சொல்லிக்கொடுக்க்கும் ஆசிரியராக வேலை பார்த்துவந்தார். கொரோனா காலகட்டத்தில் அவருடைய பணிகள் பாதிக்கப்பட்டபோது, வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றார். திரும்பிவந்து வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. இதுவரை அவரால் எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடனும் எந்த சண்டை சச்சரவும் வந்ததில்லை. அவர் யார் கூடவும் அதிகம் பேச மாட்டார். அவருடைய மனைவிதான் ஏதாவது கேட்பார்," என்கிறார் ஜலீல்.

கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்
படக்குறிப்பு,

டொமினிக் யாரிடமும் அதிகம் பேச மாட்டார் என்கிறார் அவர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் பி ஏ ஜலீல்

‘ஃபேஸ்புக் பார்த்துதான் அவரது மனைவிக்கே தெரியும்’

ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டுக்கு திடீரென காவல்துறை தேடிவரவும் ஜலீலுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

"இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு அவர் ஒரு க்ரில் அடுப்பை வாங்கிவந்தார். அந்த அடுப்பு எதற்கு எனக் கேட்டபோது, மகளுக்கு கிரில் சிக்கன் பிடிக்கும், வீட்டிலேயே செய்வதற்காக வாங்கிவந்தேன் என்று சொன்னார். அவர்கள் தங்கள் மகள் மீது ரொம்வும் பாசமாக இருப்பார்கள். மகளுக்கு சில மாதங்களுக்கு முன்பாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதை ஒட்டித்தான் அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பினார். அவருக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்கலாம் என யாருக்கும் தோன்றவில்லை," என்கிறார் ஜலீல்.

டொமினிக்கிற்கு இரண்டு குழந்தைகள். மகன் பிரிட்டனில் இருக்கிறார். மகள் கொச்சியிலேயே வேலைபார்த்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் தன்னுடைய ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் டொமினிக்.

"அவர் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் என்பதுதான் தெரியும். எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதெல்லாம் தெரியாது. யகோவா பற்றியெல்லாம் என்னிடம் பேசியதில்லை. இதுபோல செய்திருப்பதாக அவர் பேஸ்புக்கில் பகிர்ந்தவுடன்தான் அவருடைய மனைவிக்கே தெரியும்" என்கிறார் ஜலீல்.

 

என்ன காரணம் சொன்னார் டொமினிக்?

டொமினிக், யகோவாவின் சாட்சியங்கள் குழுவில் 16 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்தார். அக்குழுவின் மீது 6 ஆண்டுகளாக அதிருப்தியில் இருந்ததாகவும், அதனால் இதனைச் செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

இப்போது டொமினிக் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், வெடி மருந்துச் சட்டம், கொலை முயற்சி, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

யகோவாவின் சாட்சியம் கூட்டத்தை நடத்தியவர்கள் இந்த விவகாரம் பற்றி ஊடகங்களிடம் பேச மறுக்கிறார்கள். இந்தப் பிரிவை நம்புபவர்களில் எல்லா மதத்தினரும் இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்திற்கு வந்து பிரார்த்திக்க ஆரம்பித்த பிறகு தங்கள் வாழ்வு மேம்பட்டிருப்பதாகக் கருதுகிறார்கள்.

யார் இந்த யகோவாவின் சாட்சியத்தினர்?

கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

யகோவாவின் சாட்சியம் பிரிவினர் கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவினர் என்ற பரவலான நம்பிக்கை இருந்தாலும், பிற கிறிஸ்தவப் பிரிவினருக்கு இவர்களை கிறிஸ்தவர்களாக ஏற்பதில்லை

யகோவாவின் சாட்சியம் என்ற குழுவைக் குறித்து கேரளாவில் பெரிய அளவில் பேசப்பட ஆரம்பித்தது 1985ல்தான்.

இப்பிரிவைச் சேர்ந்த பினுமோல், பிந்து, பிஜோ இமானுவேல் ஆகிய மூன்று குழந்தைகள் தேசிய கீதத்தைப் பாட மறுத்ததற்காக பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தப் பிரிவினரைப் பற்றி பலரும் பரவலாகத் தெரிந்துகொண்டார்கள்.

1987-இல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்தப் பிரிவினர் சீராக வளர ஆரம்பித்தனர்.

யகோவாவின் சாட்சியம் பிரிவினரைப் பொறுத்தவரை, அவர்கள் கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவினர் என்ற பரவலான நம்பிக்கை இருந்தாலும், பிற கிறிஸ்தவப் பிரிவினருக்கு இவர்களை கிறிஸ்தவர்களாக ஏற்பதிலும் இவர்களுக்கு மற்றவர்களைக் கிறிஸ்தவர்களாக ஏற்பதிலும் உடன்பாடு கிடையாது.

இவர்களைப் பொறுத்தவரை யஹோவாவே முழுமுதல் கடவுள். யஹோவா என்பது, பழைய ஏற்பாட்டில் யூத மொழியில் கடவுளைக் குறிக்கும் சொல். யஹோவாவின் சாட்சியத்தினரைப் பொறுத்தவரை, அவர்கள் யஹோவாவைத் தவிர வேறு யாரையும் கடவுளாக ஏற்பதில்லை.

இவர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்கிறார்கள். ஆனால், அவரை இவர்கள் வணங்குவதில்லை. யஹோவாவை மட்டுமே வணங்க வேண்டும் என்பது இவர்களது நிலைப்பாடு.

 
கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கனடாவிலும் அமெரிக்காவிலும் மிகப் பெரிய அளவில் வழக்குகளைத் தொடர்ந்த இவர்கள், வீடு வீடாகச் சென்று தங்கள் புத்தகங்களை விநியோகிக்கும் உரிமையை உறுதிசெய்தனர்

தீவிரமான மத நம்பிக்கைகள்

கிறிஸ்துவத்தின் மிக முக்கியமான அம்சமான அதிபுனித திரித்துவம் (Holy Trinity) எனப்படும் 'பிதா, சுதன், பரிசுத்த ஆவி' என்பதை இவர்கள் ஏற்பதில்லை. சிலுவையை வணங்குவதில்லை. கிறிஸ்துமஸ் நாளைக் கொண்டாடுவதில்லை. கிறிஸ்துவத்தின் பிற பிரிவினர் பைபிளை சரியாகப் படித்து விளங்கிக்கொள்ளவில்லையென்றும் தாங்களே அதனை முழுமையாகப் புரிந்துவைத்திருப்பதாகவும் இவர்கள் கூறிக்கொள்கின்றனர்.

1961-ஆம் ஆண்டு வரை பைபிளின் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பையே இவர்கள் பயன்படுத்தி வந்தனர். அதற்குப் பிறகு, நியு வேர்ல்ட் டிரான்ஸ்லேஷன் என்ற பதிப்பைப் பயன்படுத்துகின்றனர். கிங் ஜேம்ஸ் பதிப்பு, சரியான மொழிபெயர்ப்பில்லை எனக் கூறுகின்றனர்.

இவர்கள் சிலுவையையோ, வேறு உருவங்களையோ வணங்குவதில்லை. இயற்கைகையும் இவர்கள் வணங்கக்கூடாது. பொதுவாக, அலங்கரிக்கப்படாத அரங்குகளில் மொத்தமாகக் கூடி, பைபிளை வாசித்தும் பாடியும் கடவுளை வணங்குகிறார்கள்.

ஜெகோவாவின் சாட்சியம் எப்படி உருவானது?

கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சார்லஸ் டேஸ் ரஸ்ஸல்

1870களில் அமெரிக்காவில் வசித்த சார்லஸ் டேஸ் ரஸ்ஸல் என்பவரைப் பின்பற்றியவர்களால் பைபிள் மாணவர் இயக்கமாக இந்தப் பிரிவு முதலில் துவங்கப்பட்டது.

1881-இல் இங்கிலாந்திற்கு இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் சென்றனர். 1900-இல் லண்டனில் முதல் வெளிநாட்டுப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. பிறகு கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் இதன் பிரிவுகள் துவங்கப்பட்டன.

1916-இல் ரஸ்ஸல் இறந்த பிறகு இந்தப் பிரிவில் பிளவுகள் தோன்றின. இதில் ஜோசப் ரூதர்போர்ட் தலைமையிலான பிரிவு, தலைமையகத்தைக் கைப்பற்றியது. இதற்குப் பிறகு, பல சித்தாந்த மாற்றங்கள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டன. 1931-இல் யஹோவாவின் சாட்சியங்கள் என்ற பெயர் இந்தப் பிரிவுக்கு சூட்டப்பட்டது.

 
கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இப்போது உலகம் முழுவதும் 85,00,000 பேர் இந்தப் பிரிவில் இருப்பதாகக் கருதப்படுகிறது

ஜெகோவாவின் சாட்சியம் சர்ச்சைக்குள்ளாவது ஏன்?

இந்த காலகட்டத்தில்தான், ரத்ததானம் பெறுவது தடைசெய்யப்பட்டது. நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான மிகப் பெரிய யுத்தம் வரவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்தப் பிரிவினர் வேகமாக வளர்ந்துவந்த நிலையில், இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனி, சோவியத் யூனியன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்தப் பிரிவு தடைசெய்யப்பட்டது. இவர்கள் மீது பல தாக்குதல்கள் நடத்ததப்பட்டன.

இதையடுத்து, கனடாவிலும் அமெரிக்காவிலும் மிகப் பெரிய அளவில் வழக்குகளைத் தொடர்ந்த இவர்கள், வீடு வீடாகச் சென்று தங்கள் புத்தகங்களை விநியோகிக்கும் உரிமையை உறுதிசெய்தனர். கொடி வணக்கம் செய்யாமல் இருக்கவும் உரிமைகளைப் பெற்றனர். பல நாடுகளில் இந்தப் பிரிவினருக்கு சில தடைகளை விதிப்பது இன்றும் தொடரவே செய்கிறது.

இப்போது உலகம் முழுவதும் 85,00,000 பேர் இந்தப் பிரிவில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தப் பிரிவினருக்கான தலைமையகம் நியூயார்க்கில் இருக்கிறது.

இந்தப் பிரிவினர் எந்த அரசியல் நிலைப்பாட்டையும் எடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதேபோல, இவர்கள் வாக்களிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cqv9vdxn108o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.