இரானில் போராட்டம் தீவிரம்: அரசு நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக தகவல்
பட மூலாதாரம்,MAHSA / Middle East Images / AFP via Getty Images
கட்டுரை தகவல்
ஷயன் சர்தாரிசாதே, ரிச்சர்ட் இர்வின்-பிரௌன்
பிபிசி வெரிஃபை
12 ஜனவரி 2026, 03:15 GMT
புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர்
அமெரிக்கா தாக்கினால் பதிலடி கொடுப்போம் என்று இரான் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், தீவிரமடைந்து வரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பிபிசி வட்டாரங்களும் ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
"இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது," என்று டெஹ்ரானில் இருந்து ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
"எங்கள் நண்பர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் துப்பாக்கி குண்டுகளால் சுட்டனர். இது ஒரு போர்க்களம் போல இருக்கிறது, தெருக்கள் முழுவதும் இரத்தம் நிரம்பியுள்ளது. அவர்கள் சடலங்களை லாரிகளில் ஏற்றிச் செல்கிறார்கள்." என்றார் அவர்.
டெஹ்ரானுக்கு அருகிலுள்ள ஒரு சவக்கிடங்கு வீடியோவில் சுமார் 180 சடலப் பைகளை பிபிசி எண்ணியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் செய்தி நிறுவனம், இரான் முழுவதும் 495 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்புப் படையினரின் மரணங்களை உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கும் போராட்டங்கள் எதிரொலியாக மேலும் 10,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்காக இரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. இரான் "சுதந்திரத்தை நோக்கிப் பார்க்கிறது" என்பதால், அமெரிக்கா "உதவத் தயாராக உள்ளது" என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை கூறினார்.
அமெரிக்கா என்ன நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்கிறது என்பது குறித்து டிரம்ப் விரிவாகக் கூறவில்லை. இரான் மீது இராணுவத் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்று பிபிசியின் அமெரிக்க செய்திக் கூட்டாளியான சிபிஎஸ்-ஸிடம் ஒரு அதிகாரி தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிரான இணையவழி ஆதாரங்களை அதிகரிப்பது, இரானிய இராணுவத்திற்கு எதிராக இணைய ஆயுதங்களைப் பயன்படுத்துவது அல்லது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது போன்ற பிற அணுகுமுறைகளும் இதில் அடங்கும் என்று அதிகாரிகள் வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் தெரிவித்தனர்.
அமெரிக்கா தாக்கினால், இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ மற்றும் கப்பல் போக்குவரத்து மையங்கள் இரண்டும் சட்டபூர்வமான இலக்குகளாக மாறும் என்று இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்தார்.
பட மூலாதாரம்,IRIB/Handout/Anadolu via Getty Images
அதிகரித்து வரும் பணவீக்கம் எதிரொலியாக தொடங்கிய இந்தப் போராட்டங்கள், இப்போது இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி-யின் மதகுருமார்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றன.
"போராட்டத்தில் ஈடுபடும் எவரும் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள். இது மரண தண்டனைக்குரிய குற்றம்" என்று இரானின் அட்டர்னி ஜெனரல் கூறினார். அதே நேரத்தில், டிரம்பை "மகிழ்விக்க" முயலும் "ஒரு கும்பல் குண்டர்கள்" என்று ஆர்ப்பாட்டக்காரர்களை காமனெயி வர்ணித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான இரானிய தேசியப் போரில் கொல்லப்பட்ட "தியாகிகளுக்காக" மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதாக இரான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
சமீபத்திய நாட்களில் இறந்த அல்லது காயமடைந்த போராட்டக்காரர்களால் பல மருத்துவமனைகளின் ஊழியர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு ராஷ்ட் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு 70 உடல்கள் கொண்டுவரப்பட்டதை பிபிசி பெர்சியன் சேவை உறுதிப்படுத்தியுள்ளது. அதே சமயம், டெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையின் சுகாதாரப் பணியாளர் ஒருவர் பிபிசியிடம், "சுமார் 38 பேர் இறந்தனர். அவர்களில் பலர் அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளுக்கு வந்த உடனேயே உயிரிழந்தனர். இளைஞர்களின் தலைகளிலும், இதயங்களிலும் நேரடியாகச் சுடப்பட்டிருந்தது. பலர் மருத்துவமனைக்கே வந்து சேரவில்லை," என்று கூறினார்.
பிபிசி மற்றும் பெரும்பாலான பிற சர்வதேச செய்தி நிறுவனங்களால் இரானுக்குள் இருந்து செய்திகளை வெளியிட முடியவில்லை. இரானிய அரசாங்கம் வியாழக்கிழமை முதல் இணைய முடக்கத்தை அமல்படுத்தியுள்ளதால், தகவல்களைப் பெறுவதும் சரிபார்ப்பதும் கடினமாக உள்ளது.
பட மூலாதாரம்,Khoshiran / Middle East Images / AFP via Getty Images
சில காட்சிகள் வெளியாகியுள்ளன, அதில் டெஹ்ரான் மாகாணத்தின் தடயவியல் கண்டறிதல் மற்றும் ஆய்வக மையத்தில் - அதாவது கஹ்ரிசாக்கில் உள்ள ஒரு சவக்கிடங்கில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த சடலப் பைகளைக் காட்டும் காணொளியும் அடங்கும்.
அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு காணொளியில், சுமார் 180 போர்வையால் மூடப்பட்ட அல்லது சுற்றப்பட்ட உடல்கள் காணப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை திறந்தவெளியில் கிடக்கின்றன. தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடுவது போல் தோன்றும் மக்களின் கூக்குரல்களும் அழுகுரல்களும் கேட்கின்றன.
பிபிசி வெரிஃபை மூலம் சமீபத்தியவை என உறுதிப்படுத்தப்பட்ட பல காணொளிகள், இரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷ்ஹத்தில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதல்களைக் காட்டுகின்றன.
முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் குப்பைத் தொட்டிகள் மற்றும் தீக்குவியல்களுக்குப் பின்னால் தஞ்சம் அடைவதைக் காணலாம், தொலைவில் பாதுகாப்புப் படையினர் வரிசையாக நிற்கின்றனர். ஒரு பேருந்து போல் தோன்றும் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது.
பல துப்பாக்கிச் சூடு சத்தங்களும், பாத்திரங்களைத் தட்டும் சத்தம் போன்ற ஒலிகளும் கேட்கின்றன.
அருகிலுள்ள ஒரு நடை மேம்பாலத்தில் நிற்கும் ஒருவர், பல திசைகளில் பலமுறை துப்பாக்கியால் சுடுவதைப் போல் தெரிகிறது, அப்போது ஓரிருவர் ஒரு வேலிக்குப் பின்னால் தஞ்சம் அடைகின்றனர்.
டெஹ்ரானில், சனிக்கிழமை இரவு எடுக்கப்பட்ட ஒரு உறுதிப்படுத்தப்பட்ட காணொளியில், கிஷா மாவட்டத்தில் போராட்டக்காரர்கள் தெருக்களைக் கைப்பற்றுவதும், புனாக் சதுக்கத்தில் பாத்திரங்களைத் தட்டும் சத்தமும், ஹெராவி மாவட்டத்தில் ஒரு கூட்டம் பேரணியாகச் சென்று மதகுருமார்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முழக்கமிடுவதும் காணப்படுகிறது.
அமெரிக்கா, இஸ்ரேலை சாடும் இரான்
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் (கோப்புப் படம்)
இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் இந்த அமைதியின்மைக்கு அமெரிக்காவும், இஸ்ரேலுமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
"அவர்கள் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் சில நபர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளனர், வெளிநாட்டிலிருந்து பயங்கரவாதிகளை கொண்டு வந்துள்ளனர், மசூதிகளுக்குத் தீ வைத்துள்ளனர், ராஷ்டில் உள்ள சந்தைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களைத் தாக்கி, சந்தையை எரித்துள்ளனர்," என்று எந்த ஆதாரத்தையும் வெளியிடாமல் அவர் கூறினார்.
இருப்பினும், பிபிசி பெர்சியன் மற்றும் பிபிசி வெரிஃபை மூலம் உறுதி செய்யப்பட்ட காட்சிகள், இரானின் பாதுகாப்பு அதிகாரிகள் பல பகுதிகளில் போராட்டக்காரர்களின் கூட்டங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை உறுதிப்படுத்துகின்றன. அவற்றில் டெஹ்ரான், மேற்கு கெர்மன்ஷா மாகாணம் மற்றும் தெற்கு புஷேர் பகுதி ஆகியவை அடங்கும்.
கடந்த வார இறுதியில் மேற்கு நகரமான இலாமின் மையத்தில் படமாக்கப்பட்ட பல உறுதிப்படுத்தப்பட்ட காணொளிகள், போராட்டக்காரர்கள் பேரணி நடத்திக் கொண்டிருந்த இமாம் காமனெயி மருத்துவமனையை நோக்கி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதையும் காட்டுகின்றன.
இரானில் இணைய சேவை பெரும்பாலும் உள்நாட்டு இன்ட்ராநெட்டுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, வெளி உலகத்துடனான இணைப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய போராட்டங்களின் போது, அதிகாரிகள் முதல் முறையாக அதையும் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
2022ஆம் ஆண்டில் நடந்த "பெண், வாழ்க்கை, சுதந்திரம்" எழுச்சியின் போது இருந்ததை விட இந்த இணைய முடக்கம் மிகவும் கடுமையானது என்று ஒரு நிபுணர் பிபிசி பெர்சியன் சேவையிடம் தெரிவித்தார்.
இணைய ஆராய்ச்சியாளரான அலிரேசா மனாஃபி, வெளி உலகத்துடன் இணைவதற்கான ஒரே சாத்தியமான வழி ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாகத்தான் என்று கூறினார், ஆனால் இதுபோன்ற இணைப்புகளை அரசாங்கத்தால் கண்டறிய முடியும் என்பதால், பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் எச்சரித்தார்.
'விரைவில் உங்களுடன் இருப்பேன்' - ஷா மன்னரின் மகன்
பட மூலாதாரம்,Norvik Alaverdian/NurPhoto via Getty Images
படக்குறிப்பு,இரானிய அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ரெசா பஹ்லவியின் புகைப்படம்.
இரானில் போராட்டக்காரர்களால் நாடு திரும்ப வேண்டும் என்று விரும்பப்படுபவரும், அமெரிக்காவில் வசிப்பவருமான இரானின் கடைசி ஷா மன்னரின் நாடு கடத்தப்பட்ட மகனான ரெசா பஹ்லவி, ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகப் பதிவு ஒன்றில், டிரம்ப் "உங்கள் விவரிக்க முடியாத வீரத்தை கவனமாகக் கவனித்துள்ளார்" என்று ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்தார்.
"உலகம் முழுவதும் உள்ள இரான் மக்கள் உங்கள் குரலை பெருமையுடன் முழங்குகிறார்கள்," என்று குறிப்பிட்டுள்ள அவர், "நான் விரைவில் உங்கள் பக்கம் இருப்பேன் என்பதை நான் அறிவேன்" என்று தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியக் குடியரசு "கூலிப்படையினரின் கடுமையான பற்றாக்குறையை" எதிர்கொள்வதாகவும், "பல ஆயுத மற்றும் பாதுகாப்புப் படைகள் தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேறியுள்ளன அல்லது மக்களை அடக்குவதற்கான உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டன" என்றும் பஹ்லவி கூறியுள்ளார். அவரது இந்த கூற்றுகளை பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை.
ஞாயிற்றுக்கிழமை மாலை போராட்டங்களைத் தொடருமாறு அவர் மக்களை ஊக்குவித்தார், ஆனால் குழுக்களாக அல்லது கூட்டத்துடன் இருக்குமாறும், "உங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம்" என்றும் கேட்டுக்கொண்டார்.
பிரிட்டனில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லண்டனில் உள்ள இரானிய தூதரகத்தின் பால்கனியில் இருந்து போராட்டக்காரர்கள் இரானியக் கொடியை அகற்றுவது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில் காணப்படுகின்றன.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, டெஹ்ரானில் உள்ள பிரிட்டன் தூதரை இரான் வரவழைத்துள்ளதாக இரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கூடுதல் தகவல்கள்: சௌரூஷ் பக்ஜாத் மற்றும் ரோஜா அசாடி
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c17zrrl1jzwo
By
ஏராளன் ·