Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
31 MAR, 2024 | 10:51 AM
image

ஏப்ரல்,  மே மாதங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை  எதிர்பார்க்கப்படுவதாகவும்,  வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அடுத்த மாதம் முதல் கோடை காலம் தொடங்கும் நிலையில்,  தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே உள்ளது.  இதனால் நீர் நிலைகளில் நீரின் அளவு குறைந்து வருகிறது.  வெயிலின் தாக்கத்தால் அருவிகளும் வறண்டே காணப்படுகின்றன. மேலும், பகல் நேரத்தில் அதிகரித்துள்ள வெயிலின் தாக்கம் இரவு நேரங்களிலும் எதிரொலிக்கிறது. இதனால், மின்சாரத்தின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,  ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும்,  வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி நரேஷ் குமார், சில நாட்களில் டெல்லியில் மிக லேசான மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

கோடை காலம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நரேஷ் குமார்,  “அதனை இப்போதே கூறுவது கடினம். ஆனால், வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்ப அலை வீசக்கூடும். ஏப்ரல் மாதத்தில், இயல்பை விட அதிகமான வெப்பநிலையை எதிர்கொள்ளும் சூழல் . ஏப்ரல் மாதத்தில், நாட்டின் மத்திய பகுதியில் வெப்ப அலை வீசக்கூடும். அந்த வெப்ப அலை அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு நாட்டின் மையப் பகுதியில் நீடிக்கலாம்” என தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களுக்கான வானிலை குறித்து நரேஷ் குமார் கூறியதாவது, “ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்யக்கூடும், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஆழங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்லி-என்சிஆர் பகுதியில் லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்தியப் பிரதேசத்தில் வெப்ப அலைகள் இருக்கும். குறிப்பாக மத்திய இந்தியாவில் வறண்ட வானிலை நிலவும். கர்நாடகாவின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் வெப்ப அலைகள் நிலவும்” என அவர் தெரிவித்தார்.

மேலும் அடுத்த நான்கைந்து நாட்களில் கேரளா, தமிழ்நாடு, கடலோர ஒடிசா மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காணப்படும் என நரேஷ் குமார் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/180050

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை - தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு?

இந்தியாவில் வெப்ப அலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில், இந்தியா முழுவதுமே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியா முழுவதுமே வெப்ப நிலை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் ஒன்றாம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் கோடை காலம் நிலவும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரித்திருக்கிறது. இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் சில இடங்களில் மட்டும் வெப்பம் குறைவாக இருக்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது.

இந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவின் தென் பகுதி, மத்திய இந்தியா, கிழக்கிந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமான வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த காலகட்டத்தில் பெய்யும் மழையைப் பொறுத்தவரை, இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சராசரியை ஒட்டியே இருக்கும் என்றாலும்  கிழக்கு, மேற்கு கடற்கரையோரப் பகுதிகளிலும் வட கிழக்கின் சில பகுதிகளிலும் வழக்கத்தைவிட மழை குறைவாக இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் இந்த வெப்ப அலையின் விளைவுகள் என்னவாக இருக்கும்?

இந்தியாவில் வெப்ப அலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெப்பநிலை அதிகரிக்க காரணம் என்ன?

பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் உருவான வானிலை போக்கான 'எல் நினோ' இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து பலவீனமடைய ஆரம்பித்துவிட்டாலும் மிதமான அளவில் எல் நினோ இன்னமும் அந்தப் பகுதியில் நிலவுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தப் பகுதியில் கடலின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும் என்றும் எல் நினோ போக்கு தொடர்ந்து பலவீனமடைந்து, பிறகு இல்லாமல் போகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இந்த ஆண்டின் பருவமழை காலகட்டத்தில் லா நினா போக்கு உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

"எப்போதுமே எல் நினோ முடியப்போகும் வருடத்தில் கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாகவே இருக்கும். 2015ல் எல் நினோ முடிவுக்கு வந்தபோது, 2016ல் வெப்பம் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக, எல் நினோ மறைய ஆரம்பிக்கும் வருடங்களில் தீபகற்ப இந்தியாவில் வெப்பம் அதிகமாக இருக்கும்" என்கிறார் தனியார் வானிலை ஆர்வலரான ஸ்ரீகாந்த்.

அதேபோல இந்த கோடை காலத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழை குறைவாக இருக்கும் என்றும், இது வெப்பத்தின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்கிறார் அவர். ஆனால், மே மாதத்திற்குப் பிறகு மழை அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்.

எல் நினோ - லா நினோ போக்குகளை சுமார் 20 ஆண்டுகளாகத்தான் நெருக்கமாக கவனிக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டும் வானிலை தன்னார்வலரான ராஜேஷ், இதுபோன்ற ஆண்டுகளில் மழையின் அளவும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்.

அதேவேளை, ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மட்டுமல்ல, ஜூலை, ஆகஸ்டிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்கிறார் ராஜேஷ்.

 
இந்தியாவில் வெப்ப அலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெப்ப நிலை அதிகரிப்பு என்பது எவ்வளவு?

வெப்பநிலை அதிகரிப்பு அல்லது வெப்ப அலை என்பது, ஒரு மாநிலத்தில் இரு மாவட்டங்களிலாவது வெப்ப நிலை 45 டிகிரிக்கு மேல் பதிவாக வேண்டும் அல்லது வெப்ப நிலை 40 டிகிரிக்கு மேல் பதிவாகி, இரு நகரங்களில் வழக்கத்தைவிட  4.5 டிகிரி வெப்பம் அதிகமாக இருந்தால் அது வெப்ப அலை என அழைக்கப்படுகிறது என்கிறார் ஸ்ரீகாந்த்.

எல் நினோ இருக்கிறதோ இல்லையோ, வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

"எல் நினோ காலகட்டத்தில் இருந்த வெப்பம், தற்போது லா நினோ காலகட்டத்திலும் நீடிக்கிறது. எல் நினோவின் தாக்கத்தை காலநிலை மாற்றம் அதிகரிக்கிறது. எல் நினோ போக்கு இல்லாத வருடத்திலேயே வெப்பமானது ஒரு டிகிரி முதல் இரண்டு டிகிரி வரை அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இதுதான் வரலாற்றிலேயே வெப்பமான வருடம், வெப்பமான மாதம் என சொல்ல ஆரம்பித்துவிட்டோம்" என்கிறார் அவர்.

வெப்பநிலை அதிகமாக நிலவும் காலகட்டங்களில் வயதானவர்கள், குழந்தைகள், பிற உடல்நலக் குறைபாடுகளைக் கொண்டவர்கள் பாதிக்கப்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

அதீத வெப்பநிலை நிலவுவதால் மின்சாரத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்றும், இதனால் மின்வழித் தடங்களில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, இந்தியா முழுவதும் விவசாயத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c2q776lk452o

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல்  இரண்டா ஆகி விட்டது லண்டன் இன்னும் குளிர் போகவில்லை .

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெப்ப அலை: கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

வெப்ப அலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழகம் முழுவதும் கோடை காலம் துவங்கி கடும் வெப்ப அலை வீசுவதால் மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். வெப்ப அலையில் இருந்து காத்துக்கொள்ள, வயது அடிப்படையில் மக்களை ஐந்து வகையாக பிரித்து மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்ப அலை அதிகரிக்கும் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது அறிக்கையில், ஏப்ரல், மே மற்றும் ஜூன் வரையிலான கோடை காலத்தில், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்ப அலை வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், வேலூர், சென்னை, கடலூர், சேலம், தருமபுரி, கோவை என பரவலாக பல மாவட்டங்களில் கடும் வெயில் நிலவுவதை பார்க்க முடிகிறது.

வழக்கமாக மே மாதம் கத்தரி வெயில் அல்லது அக்னி நட்சத்திர காலத்தில் தான் அதிக வெப்பம் இருக்கும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு கத்தரி வெயில் துவங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்கிறது.

வெப்ப அலையும் வீசுவதால் மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். வெயிலின் தாக்கத்தை முறையாக கண்டுகொள்ளாமல் விட்டால் மரணம் நேரிடும் வாய்ப்பு கூட உள்ளதென எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். வெப்ப அலை வீசும் கோடையில் நாம் என்னென்ன செய்யக்கூடாது என, வயதுக்கேற்ப பிரித்து அறிவுரையை கூறுகின்றனர் மருத்துவர்கள்.

 

குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும்?

வெப்ப அலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிபிசி தமிழிடம் பேசிய, கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் உதவி சித்த மருத்துவ அலுவலர் வித்யாதேவி, ‘‘ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வியர்வையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பருத்தி துணிகள் மட்டுமே அணிவிக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு இருமுறை லேசான சூட்டிலுள்ள நீரில் குளிக்க வைப்பதுடன், தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் கொண்டு கை கால்களுக்கு மசாஜ் செய்யும் போது, வியர்வை சுரப்பிகள் அடைத்துக்கொள்ளும். எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தவுடன் சில நிமிடங்கள் கழித்து சூடான நீரில் கழுவிவிட வேண்டும்,’’ என்கிறார்.

வெப்ப அலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

குழந்தைகள் பாதுகாப்பு

3 – 12 வயதுள்ள குழந்தைகளை, குறிப்பாக காலை 11:00 – மாலை 4:00 மணி வரையில் வெளியில் விளையாட அனுமதிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ்களை கொடுப்பதற்கு பதிலாக, தயிர் சேர்த்த கம்மங்கூழ், பழச்சாறு, இளநீர், நுங்கு கொடுக்க வேண்டும். வியர்வையால் நம் உடலில் இருந்து தாது உப்புகள் வெளியேறி பற்றாக்குறை ஏற்படும்.

இதை தடுக்க எலுமிச்சை ஜூஸ் தயாரித்து அதில் சர்க்கரை மட்டுமின்றி உப்பு சேர்த்து கொடுக்க வேண்டும். வேர்க்குரு அல்லது அம்மை போன்ற பாதிப்புகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

"வெயில் என்று கூறி விளையாட அனுமதிக்காமல் விட்டால் செல்போனுக்கு அடிமையாகிவிடுவார்கள், கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இரவு, 6 – 9 மணி வரையில் வேண்டுமானாலும் விளையாட அனுமதிக்கலாம்", என்கிறார் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா.

 

கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு அதிகம்

வெப்ப அலை

வெப்ப அலையால் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால், கூடுதல் கவனத்துடன் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

‘‘கர்ப்ப காலத்தில் சாதாரணமாகவே நீர் குடித்தால் வாந்தி வரும் என்பதால், பல பெண்கள் நீர் குடிப்பதை தவிர்ப்பார்கள். இதனால், பிரசவிப்பதே பெரும் சிக்கலுக்கு உள்ளாகி, குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். பனிக்குடத்தில் குழந்தைக்கு தேவையான நீர் இருக்க வேண்டுமென்பதால், கர்ப்பிணிகள் சிரமப்பட்டாவது அடிக்கடி போதிய நீர் குடிக்க வேண்டும்,’’ என்கிறார் மருத்துவர் வித்யாதேவி.

கர்ப்பிணிகள், மற்றவர்களைப் போலவே இளநீர், பழச்சாறு போன்றவற்றை குடிக்கலாம்.

அதிக நீர் குடித்து சிறுநீர் கழிக்க வேண்டும்; போதிய அளவு சிறுநீர் போகாமல் விட்டாலும் அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

"வெயிலால் திடீர் மயக்கம் ஏற்படும் என்பதால், வெளியில் சென்றால் தனியாக செல்லக்கூடாது. வெயிலால் வாந்தி, குமட்டல், மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்", என்று பிபிசி தமிழிடம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா கூறினார்.

‘முதியவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்’

வெப்ப அலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா, ‘‘தேர்தல் வருவதால் முதியவர்கள் முடிந்த வரையில், பகல் நேரங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். முதியவர்களின் தோல் மிகவும் வறண்டு இருப்பதால், வெப்ப அலையினால் சரும பாதிப்புகள் ஏற்படும். இதை தடுக்க வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், பருத்தி மூலம் தயாரிக்கப்பட்ட வெளிர் நிற துணிகளை உடுத்த வேண்டும்,’’ என்கிறார்.

முதியவர்களுக்கான அறிவுரைகளை முன்வைக்கும் சித்த மருத்துவர் வித்யாதேவி, ‘‘சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையில் கோடை காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது வழக்கம். இதை தவிர்க்க நார்ச்சத்து அதிகம் உள்ள உணகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் பொட்டாசியம் குறையும் என்பதால் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.,’’ என்கிறார் வித்யாதேவி.

 

நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?

வெப்ப அலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சில அறிவுரைகளை முன்வைக்கிறார் வித்யாதேவி.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் பழம் சாப்பிட்டு உடலில் சர்க்கரை அளவை உயர்த்திக்கொள்ள கூடாது. இதற்கு மாற்றாக அதிகம் நீர் மோர் மற்றும் இளநீர் (தேங்காய் மிகக்குறைவாக நீர் அதிகமுள்ள இளநீர்) பருக வேண்டும். நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கோடை காலத்தில் மது அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். உரிய நேரத்தில் சாப்பிட்டு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்,’’ என்கிறார் மருத்துவர் வித்யாதேவி.

வெளியில் செல்லும் போது அனைவரும் கட்டாயம் கையில் குடையும் குடிநீர் பாட்டிலும் எடுத்துச்செல்வதுடன், வாகனங்களை வெயிலில் நிறுத்திவிட்டு அதில் உடனடியாக பயணிக்கக் கூடாது. மதியம் 12:00 – 4:00 மணி வெயிலை தவிர்ப்பது சிறந்தது என, சில பொதுவான அறிவுரைகளையும் தெரிவிக்கிறார் கோவை மருத்துவக்கல்லூரி முதல்வர் நிர்மலா.

‘கவனக்குறைவு கூடாது உயிருக்கே ஆபத்தாகும்’

கோடையின் வெப்ப அலை வீசும் காலத்தில், சிலவற்றில் நாம் கவனக்குறைவாக இருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்கிறார், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் (டீன்) நிர்மலா.

அதை விளக்கிய நிர்மலா, ‘‘வெயிலின் தாக்கத்தால் ஹீட் ஸ்டிரோக் (வெப்ப பக்கவாதம்) மட்டுமின்றி, இதயம் பலவீனமாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தேர்தல் பணியோ அல்லது சாதாரண பணியோ எதுவாக இருந்தாலும், மதிய நேர வெயிலில் சுற்றுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

வெயிலின் தாக்கத்தால் திடீரென தற்காலிகமாக சில நிமிடங்களுக்கு ஞாபகம் இழப்பது, நெஞ்சு எரிச்சல், மயக்கம், திடீரென வியர்ப்பது போன்றவை ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. இது ஹீட் ஸ்டிரோக் (வெப்ப பக்கவாதம்) அல்லது மாரடைப்புக்கான அறிகுறிகளாக இருக்கலாம். இது போன்றவை ஏற்பட்டால், சாதாரணமாக நினைத்து கவனக்குறைவாக இருந்தால் உயிருக்கே ஆபத்தாகும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்,’’ என்கிறார் அவர்.

சுகாதாரத் துறை அறிவுரைகள்

வெப்ப அலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை வெப்ப அலை பாதிப்பு குறித்து பொதுவான அறிவுரைகளையும் வெளியிட்டுள்ளது.

  • பயணத்தின் போது கட்டாயம் குடிநீர் எடுத்துச் செல்லவும். உடலில் நீர் பற்றாக்குறையை போக்க போதிய நீர் குடிக்க வேண்டும்.
  • நீர் பற்றாக்குறையை போக்க ஓ.ஆர்.எஸ் (Oral Rehydration Solution) கரைசல், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும்.
  • வெளியில் செல்லும் போது பருத்தி ஆடை, காலணிகளை அணிய வேண்டும். வெறும் காலில் வெயிலில் செல்வதை தவிர்க்கவும்.
  • செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • வெயிலில் பாதித்தவர்கள் ஆடையின் மேல் குளிர்ந்த நீரை ஊற்றவும்.
  • குழப்பமான மனநிலையில், சோர்வாக உள்ளவர்களிடம் அவர்களின் நலன் குறித்து விசாரிக்க வேண்டும்.
  • அதிக உடல் வெப்பநிலையில் மயக்கம் அடைந்தால், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை சிகிச்சையில் சேர்க்கவும்.
  • மிகவும் சோர்வாக இருந்தால் அருகில் உள்ள துணை சுகாதார நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனை சென்று ஓ.ஆர்.எஸ் வாங்கி குடித்து, மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

https://www.bbc.com/tamil/articles/cv26l6ewg5eo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.