Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிஸோக்களுடன் சில நாள்கள்…

ராமச்சந்திர குஹா

spacer.png

மிஸோரம் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் சில நாள்கள் இருந்தேன். அந்த மாநிலத்தின் அரசியல் வரலாறு ஓரளவுக்குத் தெரியும். அந்த மாநிலத்தைச் சேர்ந்த பலரைச் சந்தித்திருக்கிறேன், ஆனால் ஒருமுறைகூட அங்கு நேரில் சென்றதில்லை. அந்த வாய்ப்பும் கிடைத்தது. 

முதலில் விமானம் மூலம் அசாம் தலைநகரம் குவாஹாட்டியை அடைந்தேன். அங்கு பழைய நண்பர்கள் சிலரைச் சந்தித்தேன். பிரமிக்க வைக்கும், பிரம்மபுத்திரா நதியின் அழகை ரசித்தேன். அங்குள்ள பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்களிடையே மகாத்மா காந்திஜியின் போதனைகள் குறித்துப் பேசினேன். அடுத்து அய்ஜால் செல்லும் விமானத்தில் ஏறியதும் ஓர இருக்கையை விரும்பிக் கேட்டு வாங்கி அமர்ந்தேன். 

விமானம் உயரக் கிளம்பியதும் மெல்லிய பஞ்சுப் பொதிகளாய் உடன் வந்த வெண் மேகங்களையும், மலைச் சிகரங்களை உரசிவிடுவதைப் போல சென்ற விமானியின் சாகசத்தையும் ரசித்தபடியே அய்ஜாலில் இறங்கினேன். விமான நிலையத்தில் ‘உள் எல்லை அனுமதி’ படிவத்தைப் பூர்த்திசெய்தேன், பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசின் தொன்மையான இந்த வழக்கம், இந்தியக் குடிமக்களிடம் இன்றும் பின்பற்றப்படுகிறது.

போக்குவரத்து ஒழுங்கு

கிராமங்களையும் வயல்வெளிகளையும் பார்த்து ரசிக்க ரயில் பயணம்தான் விமானப் பயணத்தைவிட சிறந்தது. ஆனால், காரில் செல்வது அதைவிடச் சிறந்தது. லெங்புய் விமான நிலையத்திலிருந்து மாநிலத் தலைநகர் அய்ஜால் செல்ல ஒன்றரை மணி நேரம் பிடித்தது; மாநிலத்தின் நிலப்பரப்பைக் கண்டு ரசிக்கவும் மக்களுடைய வாழ்க்கை நிலையை ஓரளவு ஊகிக்கவும் அது போதுமானது. மலைக் குன்றுகளின் அமைப்பு, ஒரு காலத்தில் நாங்கள் வசித்த உத்தர பிரதேச மலை மாவட்டத்தை (இப்போது உத்தராகண்டில் இருக்கிறது) நினைவுபடுத்தியது.

அங்குதான் நான் பிறந்து வளர்ந்தேன். அகலம் குறைவான சாலைகளும் வளைந்து வளைந்து செல்லும் அவற்றின் பாங்கும், அருகிலேயே வேகமாகப் பாயும் நீரோடைகளும் சிறுவயதுக் காட்சிகளை நினைவுபடுத்தின. இங்கு மரம்-செடி-கொடிகள் தோற்றத்தில் வேறு மாதிரியானவை. ஏராளமாக மூங்கில் வளர்ந்திருந்தது, கணிசமான அளவில் இலையுதிர் காட்டு மரங்கள் வளர்ந்திருந்தன. உத்தராகண்டில் ஊசியிலைக் காட்டு மரங்கள்தான் அதிகம். மக்கள்தொகையும் இங்கு அடர்த்தியாக இல்லை, மக்கள் வசிக்குமிடங்களும் அங்குமிங்குமாகச் சிதறிக் கிடந்தன.

கடைசியாகச் சொன்னது தோற்ற மயக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. தலைநகர் அய்ஜாலில் குன்றின் ஒவ்வொரு அடுக்கிலும் அடுத்தடுத்து வீடுகளைக் கட்டியிருந்தார்கள்; அது உடனே நைனிதால், முசௌரி நகரங்களை நினைவூட்டியது. வாகனப் போக்குவரத்து மிக ஒழுங்குடன், வட இந்திய மாநிலங்களைப் போல அல்லாமல் இருந்தது.

வாகன ஓட்டிகள் அவரவருக்குரிய சாலை தடத்திலேயே இருந்தனர், நெரிசல் நீங்கி வாகனங்கள் நகரும்வரை பொறுமையாகக் காத்திருந்தனர். வலப்புறமாக எட்டிப் பார்த்து கிடைக்கும் இடைவெளியில் நுழைந்து மற்ற வாகனங்களும் மேற்கொண்டு நகர முடியாமல் பாதையை அடைக்கவில்லை.

மகளிர் மேம்பாடு

அய்ஜாலில் பச்சுங்கா பல்கலைக்கழக கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்கச் சென்றிருந்தேன். மாநிலத்திலேயே மிகவும் பழையதான அந்தக் கல்லூரி 1958இல் தொடங்கப்பட்டது. கல்லூரி மாணவர்கள் ஆண்-பெண் பேதமின்றி கலந்தே உட்கார்ந்திருந்தார்கள். உத்தர பிரதேசத்தின் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஊர்களிலும், கேரளத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாவட்டங்களிலும் இப்படிக் காண முடியாது. அந்தப் பகுதிகளிலும் கல்லூரிகளில் பேசியிருக்கிறேன். அங்கெல்லாம் பொறியியல் கல்லூரிகளில்கூட ஆண் – பெண் சேர்ந்து உட்காருவதை ஊக்குவிப்பதில்லை.

அந்த வகையில், பச்சுங்கா பல்கலைக்கழக கல்லூரியானது மிஸோரம் மாநிலத்தின் பண்பாட்டை அப்படியே பிரதிபலித்தது. பெண்கள் இங்கு வீதிகளில் நடக்கும்போதும், கடைகளில் பொருள்களை வாங்கும்போதும், கடைகளில் காபி குடிக்கும்போதும் உடன் பயிலும், அல்லது வேலை செய்யும் ஆடவர்களுடன் சர்வ சாதாரணமாக கலந்தே செல்கின்றனர். மாநிலத்தில் மகளிர் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கின்றனர் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

இதை மாநிலம் தொடர்பான புள்ளி விவரங்களும் உறுதிப்படுத்துகின்றன. பெண்கள் எழுத்தறிவில் அனைத்திந்திய அளவில் மிஸோரம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 60% மகளிர், வீடுகளில் அடைந்துவிடாமல் வேலைக்குச் செல்கின்றனர். இது அனைத்திந்திய சராசரியான 30% என்ற அளவைப் போல இரண்டு மடங்கு.

பிற மாநிலங்களைவிட அதிக ஊதியம் - அதிக பொறுப்பு மிக்க பணிகளில் மிஜோரம் மகளிர் இருப்பது கூடுதல் சிறப்பு. சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசு அதிகாரிகள், மேலாளர்கள் ஆகிய பொறுப்புகளில் மிஸோரம் மாநிலப் பெண்கள் 70.9% என்று பிடிஐ செய்தி தெரிவிக்கிறது. சிக்கிம் 48.2%, மணிப்பூர் 45.1% அடுத்துவருகின்றன.

மென்மையாக ஒரு முன்னேற்றம்

புவியியல்ரீதியில் ஒதுக்கப்பட்ட மாநிலமாக இருந்தாலும், மிஸோக்களின் சமூக முன்னேற்றம் பெரும் வேறுபாட்டைக் காட்டுகிறது. அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த பல்லாண்டு ஆயுத மோதல்களின் சுவடே தெரியாதபடி வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்திய விமானப் படை மூலம் வானத்திலிருந்து தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டு கலவரத்தை ஒரு காலத்தில் ஒடுக்கிய மாநிலமா இது என்று வியக்க வைக்கும் அளவுக்கு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.

மிஸோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) என்ற தீவிரவாத அமைப்பு இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக ஆயுதம் கொண்டு 1966இல் போரிட்டது. அந்தப் போராட்டத்துக்கு லால்டெங்கா தலைமை தாங்கினார். 1966க்கும் சில ஆண்டுகளுக்கு முன்னால் மிஸோ மலைப் பிரதேசம் முழுவதும் உணவு தானிய விளைச்சல் இல்லாமல் உணவுப் பற்றாக்குறையில் சிக்கியது. அதனால் மக்கள் பட்டினி கிடந்து செத்தனர். அன்றைக்கு தில்லியை ஆண்ட ஆட்சியாளர்கள் இதைப் போக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவில்லை.

இனி இந்தியாவுடன் சேர்ந்திருப்பதால் பயனில்லை என்று முடிவெடுத்த லால்டெங்கா, அன்றைய கிழக்கு பாகிஸ்தான் ராணுவ அரசுடன் கைகோத்து, இந்திய அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார். கிழக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்களையும் தளவாடங்களையும் அளித்தது. கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) எல்லைக்குள் மிஸோ இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி முகாம்கள் தொடங்கப்பட்டன. நவீன ஆயுதங்களைக் கையாள பயிற்சி தரப்பட்டது.

இதில் 1966 பிப்ரவரியில் எம்என்எஃப் தீவிரவாதிகள், அரசு அலுவலகங்களைத் தாக்கியதுடன் தகவல் தொடர்பையும் துண்டித்தனர். சுதந்திரமான மிஸோ குடியரசை நிறுவிவிட்டதாக அறிவித்தனர். லுங்லெ என்ற சிறு நகரைக்கூட கைப்பற்றிவிட்டனர். அடுத்து அய்ஜாலை நோக்கி முன்னேறத் தொடங்கினர். உடனே இந்திய அரசு தரைப்படைப் பிரிவுகளை அங்கு அனுப்பியதுடன் விமானப் படையையும் கலவரத்தை ஒடுக்குவதற்கு ஈடுபடுத்தியது.

இப்படித்தான் மிஸோரம் மீது, விமானத் தாக்குதலை நடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு சுமார் இருபதாண்டுக் காலம் தீவிரவாதிகளும் அரசுப் படைகளும் மோதிக்கொண்டிருந்தன. அதற்குப் பிறகு ஏற்பட்ட சுமுக உடன்பாட்டுக்குப் பிறகு லால்டெங்கா, சுதந்திர மிஸோ குடியரசின் அதிபராகவோ, பிரதமராகவோ ஆவதற்குப் பதிலாக - மாநில முதல்வரானார்.

மிஸோக்களின் சமூக ஒற்றுமை

அய்ஜாலில் என்னுடைய பேச்சைக் கேட்க வந்த இளைஞர்களின் தாத்தா - பாட்டிகள் அல்லது அப்பா அம்மாக்கள் கடுமையான அந்தக் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள்; மிஸோ தேசியத் தீவிரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையிலான சண்டையில் சிக்கித் தவித்திருப்பார்கள், அல்லது உயிரைக் காத்துக்கொள்ள காடுகளில் தஞ்சம் புகுந்திருப்பார்கள், நிம்மதியற்ற வாழ்க்கையை நிச்சயம் வாழ்ந்திருப்பார்கள். சமாதானம் ஏற்பட்ட பிறகு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குக் திரும்பியதுடன் மாநிலத்தின் அமைதி, வளர்ச்சிக்குப் பாடுபட்டது குறிப்பிடத்தக்கது. அது அவர்களுடைய துணிவையும் அறிவுக்கூர்மையையும் காட்டுகிறது.

அரசுப் படைகளின் அடக்குமுறைகளுக்கு ஆளானவர்கள் பழிவாங்கும் உணர்வை வளர்த்துக்கொள்வார்கள். இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது தனிப்பட்ட முறையில் இழப்புகளையும் சோதனைகளையும் அனுபவித்தவர்களில் பலரும் ஜெர்மானியர்களின் இன ஒழிப்புக் கொள்கையால் பாதிக்கப்பட்டவர்களும் இப்படிப் பழிக்குப் பழி வாங்கத் துடித்தது வரலாறு. ஆனால், மிஸோக்கள் துயரப்படும் பிற மக்கள் மீது இரக்கப்பட்டார்கள்.

அதனாலேயே மியான்மரிலிருந்தும் வங்கதேசத்திலிருந்தும் அகதிகளாக வந்தவர்களுக்கு உணவு, உடை தந்து உபசரிக்கிறார்கள். மிஸோக்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள், பௌத்தர்களும் உண்டு. மணிப்பூர் கலவரத்துக்குப் பிறகு உயிரைக் காத்துக்கொள்ள தப்பி ஓடிய குகிக்களுக்கும் மிஸோரம் மக்கள் புகலிடம் தந்து காத்தனர், இந்த வகையில் ஒன்றிய அரசு செய்திருக்க வேண்டிய கடமையை அவர்கள் நிறைவேற்றினார்கள்.

மிஸோ மக்களுடைய இந்த சமூக ஒற்றுமை உணர்வுக்கு முக்கிய காரணம் அவர்கள் விவசாயம் செய்வதற்கான விளைநிலங்களைப் பெற கையாளும் ‘ஜூம்’ என்ற பாரம்பரிய சமூக முறைதான் என்று ‘கிராஸ்ரூட்ஸ் ஆப்ஷன்ஸ்’ என்ற பருவ இதழ் கட்டுரை தெரிவிக்கிறது. ‘ஜூம்’ என்பது வேறொன்றுமில்லை மலைப் பிரதேசங்களில் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடிக்கு, ஏற்கெனவே வளர்ந்திருக்கும் செடி-கொடிகளை எரித்து, அந்தச் சாம்பலையே அந்த மண்ணுக்கு எருவாக்கி, பிறகு அதில் சாகுபடி செய்வது.

காலப்போக்கில் அந்த மண்ணில் விளைச்சல் குறைந்தால் வேறிடத்துக்குச் சென்று அங்கு தாவரங்களை எரித்து அதை விளைநிலம் ஆக்குவார்கள். இப்படிச் செய்யும்போது அவர்களுக்குள் சமூக ஒற்றுமை வலுப்படும். அது அப்படியே மரபில் ஊறிவிட்டது. அதுவே மிஸோக்களின் சமூகப் பண்பாடாகிவிட்டது. ‘லாமங்கைய்னா’ என்று மிஸோ மொழியில் அதைச் சொல்கிறார்கள். ‘அடக்கமான சேவை’ என்பது அதன் பொருள். ஏழைகளுக்கு, நோயாளிகளுக்கு, குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் பெண்களுக்கு, ஊனமுற்றவர்களுக்கு உதவுவது சமுதாயக் கடமை என்று மிஸோக்கள் கருதுகின்றனர்.

மிஸோக்களிடம் நாம் கற்க வேண்டும்!


வட கிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவம் நுழைவதற்கு முன்னாலேயே மிஸோக்களிடம் இந்தச் சமுதாயப் பண்பு நிலவியது. கிறிஸ்தவ தேவாலயங்கள் இந்த உணர்வை அப்படியே ஆதரித்து ஊக்குவித்தன. இப்படி சுயநலம் பாராமல் உதவுவதும்கூட மிதமிஞ்சிய ‘தூய்மைவாத’மாக உருவெடுத்தது. மிஸோரம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் பழங்குடி மக்கள் உள்ளூரில் கிடைக்கும் நாட்டு மது வகைகளைக் குடிப்பது வழக்கம்.

தூய்மைவாதம் காரணமாகவும் கிறிஸ்தவ தேவாலயங்கள் தங்களை மெச்சிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அரசால் அந்த மாநிலங்களில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இது பழங்குடிகளின் கோபத்தைக் கிளறிவிட்டது. அவர்கள் சட்டத்தை மீறி, நாட்டு மதுவகைகளைத் தொடர்ந்து குடித்தனர். இதனால் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதும் கடத்தி விற்பதும் அதிகரித்தது. மக்கள் உள்ளூர் சரக்கைச் சாப்பிட்டாலும் எவருக்கும் தொல்லை தராமல் அமைதியாகப் போய்விடுவதே வழக்கமாக இருந்தது.

மதுவிலக்கை அமல்படுத்தியதுடன் காவல் துறையை விட்டு மிரட்டுவது, வீடுகளில் நுழைந்து சோதிப்பது என்பது போன்ற செயல்கள் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தின. மதுவிலக்கு அமல் காரணமாக மாநில அரசுகளுக்கு மதுபானங்கள் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரி வருவாய் வெகுவாகக் குறைந்தது. அந்த வரி வருவாயைக் கொண்டு மாநிலத்தின் சேதமுற்ற சாலைகளைப் புதிதாகப் போட்டிருக்கலாம்.

மிஸோரத்தை அதன் வரலாற்றுப் புத்தகங்கள் வாயிலாகவும் வெளிநாடு வாழ் மிஸோக்களைச் சந்தித்தன் மூலமாகவும் அறிந்திருந்த எனக்கு, நேரில் பார்த்தது அம்மாநிலம் மீதான மதிப்பைப் பல மடங்கு கூட்டிவிட்டது. ஆனால், தில்லியில் ஆள்வோரிடம் - பிற வட கிழக்கு மாநிலங்களைப் போலவே மிஸோரமும், அதிக கவனம் பெறவில்லை. வட கிழக்கில் அதிக மக்களவைத் தொகுதிகள் கிடையாது என்பதால் ஒன்றிய அரசை ஆள்வோர் அந்த மாநிலங்களின் தேவைகளைப் புறக்கணிப்பதுடன், ஏதோ தங்கள் அருளால்தான் அந்த மாநிலங்கள் பிழைப்பதைப் போல நடந்துகொள்கின்றனர்.

இருந்தாலும் பிரதான நிலப்பகுதியில் வாழ்வோர் மிஸோரம் மக்களிடமிருந்து பல படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் ஒரு சமுதாயமாக சேர்ந்து வாழ்வது எப்படி, தோல்வியிலிருந்தும் மனச் சோர்விலிருந்தும் மீள்வது எப்படி, சாதி பேதமில்லாமல் சமமாக அனைவரையும் நடத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். மிஸோக்களைப் போல பெண்களைச் சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்; இசையையும் வாழ்க்கையையும் ரசனையோடு அனுபவிக்க வேண்டும்.

 

https://www.arunchol.com/ramachandra-guha-article-on-a-spirit-that-shines

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தேசம் ஒவ்வொரு மாநிலம் + மக்கள் ஒவ்வொருவர்களிடமும் வெவ்வேறு வித்தியாசமான வாழ்க்கை முறைகள் ......... இவர்களின் வாழ்க்கை முறை மிகவும் நன்றாகவே உள்ளது.......!  😁

இணைப்புக்கு நன்றி கிருபன்........!

  • கருத்துக்கள உறவுகள்

👍....

இந்தக் கட்டுரையில் எங்கள் நாட்டில் முன்னர் இருந்த 'சேனைப் பயிர்ச்செய்கை' என்ற விவசாய முறையையே மிஸோரம் மக்கள் இன்றும் தொடர்கின்றனர் என்ற விபரம் ஆச்சரியம் தந்தது. அது போலவே அவர்களின் தேசியத்திற்கான போராட்டமும், அதன் முடிவும், பெண்களுக்கு அவர்களின் சமூகத்தில் இருக்கும் சம உரிமையும் ஆச்சரியமான விடயங்கள். எளிமையான மனிதர்கள்......👍   

Edited by ரசோதரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.