Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பௌத்த வினாவல் - ஹென்றி ஸ்டீல் ஆல்காட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த வினாவல் - ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

 பகுதி ஒன்று - புத்தரின் வாழ்க்கை

Abanindranath_Tagore_-_Buddha_as_Mendicant_(colour_litho)_-_(MeisterDrucke-1405155).jpg
புத்தர், பிட்சை கேட்பவராக - ஓவியம் அபனீந்திரநாத் தாகூர்


1. நீங்கள் எந்த மதத்தை(religion)* சேர்ந்தவர்?

பௌத்தம்

2. பௌத்தம் என்றால் என்ன? 

புத்தர் என்ற மாபெரும் ஆளுமையால் வழங்கப்பட்ட போதனைகளை உள்ளடக்கியது.

3. இந்த போதனைகளுக்கு ‘பௌத்தம்’ (Buddhism) என்பது தான் சிறந்த பெயரா?

இல்லை, அது (Buddhism) மேற்கத்திய சொல்வழக்கு, ‘புத்த தர்மம்’ என்பதுதான் அதற்கு சரியான பெயர்.

4. பௌத்தத்தை பின்பற்றும் பெற்றோருக்கு ஒருவர் பிறந்ததால் அவரை பௌத்தர் என்று நீங்கள் அழைப்பீர்களா?

நிச்சயமாக இல்லை. புத்தரை மிக உன்னதமான ஆசிரியர் என்றும், அவர் போதித்த போதனைகளின் மீதும், அர்ஹத்தர்களின் சகோதரத்துவத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையிலும் அவருடைய போதனைகளை பின்பற்றுபவரே பௌத்தர்.

5. ஆண் ‘பௌத்தர்களை’ எவ்வாறு அழைப்பது?

உபாசகர்

6. பெண்களை?

உபாசகி

7. புத்தரின் போதனைகள் முதன்முதலில் எப்போது உரைக்கப்பட்டன?

அந்த நாளை சரியாக குறிப்பிடுவதில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் சிங்கள பௌத்த நூல்களின் படி அது கலியுகத்தின் (தற்போதைய யுகம்) 2513-ஆம் ஆண்டு ஆகும்.

8. புத்தரின் கடைசி பிறவியில் முக்கியமான தினங்களை பற்றி சொல்லுங்கள்.

புத்தர் கலியுகம் 2478-ஆம் ஆண்டு விசாகா நக்ஷத்திரத்தில் வைகாச பௌர்ணமியும் செவ்வாய்கிழமையும் கூடிய நாளில் பிறந்தார். 2506-ஆம் ஆண்டு அரசை துறந்து காடேகினார், 2513-ல் ‘புத்தர்’ ஆனார். பிறகு 2558-ஆம் ஆண்டு தன்னுடைய எண்பதாவது வயதில் பிறவி சுழற்சியிலிருந்து விடுபட்டு பரிநிர்வானத்தில் நுழைந்தார். இந்த ஒவ்வொரு நிகழ்வுமே வைகாசி பௌர்ணமியில் நடந்ததால் பௌத்தர்கள் வைகாச பௌர்ணமியை பெரும் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். 

9. புத்தர் கடவுளா? 

இல்லை, புத்த தர்மம் எந்த ”தெய்வீக” அவதாரத்தையும் போதிப்பதில்லை. 

10. புத்தர் மனிதரா? 

ஆம். ஆனால் ஞானி, மேன்மையானவர், உன்னதமானவர். பிற எந்த உயிர்களை விடவும் எவற்றை விடவும் எண்ணற்ற பிறவிகள் வழியாக தன்னைத்தானே மேம்படுத்திக்கொண்டவர், அவருக்கு முந்தைய புத்தர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

11. கௌதம புத்தருக்கு முன்பு வேறு புத்தர்கள் இருந்தனரா?

ஆம், ஆனால் அதை பிறகு விளக்குகிறேன். 

12.‘புத்தர்’ என்பது தான் இவரின் பெயரா? 

இல்லை, இது ஞானத்தின் உச்சத்தை அடைந்த பிறகு உள்ள நிலை அல்லது அந்த ஞான நிலையின் பெயர்.

13. அப்படி என்றால்?

ஞானம் அடைந்தவர், அல்லது முழுமையான ஞானம் கொண்டவர் என்று பொருள். பாலி மொழியில் ‘சப்பாண்ணு’, எல்லையில்லா அறிவுடையவன் என்று பொருள். சமஸ்கிருதத்தில் ஸர்வக்ஞன்.

14. அப்போது புத்தரின் இயற்பெயர் என்ன?

சித்தார்த்தன் என்பது அவரது இயற்பெயர், கௌதமர் அல்லது கோதமர் என்பது அவரது அரசகுடும்பப் பெயர். அவர் கபிலவஸ்துவின் இளவரசர் சூரிய வம்சத்தைச் சேர்ந்த ஒக்கக்காவின் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்.

15. அவருடைய தாய், தந்தையர்?

தந்தை அரசர் சுத்தோதனர். அன்னை மாயா, மஹாமாயா என்றும் அழைப்பார்கள். 

16. சுத்தோதனர் எந்ந நாட்டின் அரசர்?

அரசர் சுத்தோதனர் க்ஷத்ரிய குலத்தைச் சேர்ந்தவர். சாக்கியர்களின் கபிலவஸ்துவிற்கு அரசராக இருந்தார். 

17. கபிலவஸ்து எங்கிருந்தது?

கபிலவஸ்து இந்தியாவின் நேபாள் பகுதியில் அமைந்திருந்தது. வாரணாசிக்கு வடகிழக்கே நூறு மைல் தொலைவிலும், இமயத்திலிருந்து நாற்பது மைல் தொலைவிலும் இருந்தது. இப்போது கபிலவஸ்துவின் எச்சங்கள் கூட அழிந்துவிட்டன.

18. கபிலவஸ்து எந்த நதிப்படுகையில் அமைந்திருந்தது? 

ரோஹினி நதி, இப்போது அதை கோஹனா என்று அழைக்கிறார்கள். 

19. இளவரசர் சித்தார்த்தர் எப்போது பிறந்தார் என்பதை எனக்கு மீண்டும் ஒருமுறை சொல்லமுடியுமா?

கிருஸ்து பிறப்பதற்கு 633 ஆண்டுகள் முன்பு சித்தார்த்தர் பிறந்தார். 

20. புத்தர் சரியாக எந்த இடத்தில் பிறந்தார் என்று தெரியுமா? 

ஆம், அது இப்போது சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நேபாளத்தின் காட்டில், புத்தரை பின்பற்றிய புகழ்பெற்ற சக்ரவர்த்தி அசோகரின் ஸ்தூபி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதில் புத்தர் பிறந்த இடம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் அந்த இடம் லும்பினி தோட்டம் என்று அழைக்கப்பட்டது.

21. சித்தார்த்தரும் அனைத்து இளவரசர்கள் மாதிரி ஆடம்பரமான ராஜபோக வாழ்க்கையில் தான் இருந்தாரா? 

ஆமாம், அவருக்கு அவர் தந்தையான அரசர் சுத்தோதனர், இந்தியாவின் மூன்று பருவகாலத்திலும் தங்குவதற்கு உகந்த அற்புதமான மூன்று மாளிகைகள் கட்டிக்கொடுத்திருந்தார். குளிர்கால மாளிகை ஒன்பது அடுக்குகளுடனும், வேனிற்கால மாளிகை ஐந்து அடுக்குகளும், மழைகால மாளிகை மூன்று அடுக்குகளும் கொண்டவையாக அவை அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. 

22. அந்த மாளிகைகள் எவ்வாறெல்லாம் அலங்கரிக்கப்பட்டிருந்தது?

ஒவ்வொரு மாளிகைகளிலும் பலவிதங்களில் அழகழகான வண்ணங்கள் நிறைந்த வாசனை பூந்தோட்டங்கள் நீர்வீழ்ச்சியுடன் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு உள்ள மரங்கள் அனைத்திலும் பறவைகள் பாடிக்கொண்டும் மயில்கள் நடனமிட்டுக்கொண்டும் இருந்தன. 

23. அங்கு அவர் தனியாகவா வசித்தார்?

இல்லை இல்லை. சித்தார்த்தர் தனது பதினாறாம் வயதில் அரசர் சுப்ரபுத்தாவின் மகள் யசோதரையை மணந்து அவருடன் வாழ்ந்தார். அதுமட்டுமல்லாமல் நடனத்திலும் இசையிலும் தேர்ச்சிபெற்ற பல அழகிய ஆடல்பெண்கள் அவரை மகிழ்விப்பதற்காவே மாளிகைக்கு வந்துகொண்டும் இருந்தனர்.

24. எவ்வாறு அவர் யசோதரையை மணம்புரிந்தார்?

யசோதரையின் தந்தை சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் பல நாட்டின் இளவரசர்கள் தங்களின் வீரத்தையும் திறமைகளையும் காட்டவந்திருந்தனர். தொன்மையான க்ஷத்ரியமுறைப்படி அவர்களை வென்று சித்தார்த்தன் யசோதரையை மணம்புரிந்தார். 

25. எப்படி, இத்தனை சுகபோகங்களுக்கு நடுவில் இருந்த ஒரு இளவரசன் ஞானியாக முடியும்?

குழந்தைப் பருவத்திலேயே எல்லாக் கலைகளையும் சாஸ்திரங்களையும் விரைவாக புரிந்துகொள்ளும் ஞானம் சித்தார்த்தனுக்கு இயல்பாக அமைந்திருந்தது. மிகச் சிறந்த ஆசிரியர்கள் அவருக்கு அமைந்தார்கள், ஆனாலும் அவரால் எளிதில் புரிந்துகொள்ளமுடியாத ஒன்றை அந்த ஆசிரியர்களால் அவருக்கு கற்றுக்கொடுக்கமுடியவில்லை.

26. அவர் தனது பிரம்மாண்டமான அழகிய மாளிகைகளில் இருந்துகொண்டே புத்த நிலையை அடைந்துவிட்டாரா?

இல்லை. அவர் எல்லாவற்றையும் துறந்து, தனிமையில் காடேகினார்.

27. அவர் ஏன் அவ்வாறு செய்தார்?

நம் துயரங்களின் காரணங்களை கண்டறியவும், அவற்றிலிருந்து விடுதலை அடையவும்.

28. இவ்வாறு அவரை செய்யவைத்தது அவருடைய சுயநலம் அல்லவா?

இல்லை, உயிர்களின்மேல் கொண்ட எல்லையில்லா அன்பினால் அவற்றின் நன்மைக்காக தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக்கொண்டார்.

29. ஆனால் எவ்வாறு அவர் எல்லையில்லா அன்பை உணர்ந்துகொண்டார்?

எண்ணற்ற பிறவிகள் பிறந்தும் பற்பல நூற்றாண்டுகளாகவும் அவர் இந்த அன்பை உணர்ந்து வந்திருக்கிறார், புத்தராகும் ஒரே லட்சியத்தோடு.

30. அவர் எதைத் துறந்து விலகிசென்றார்?

அவருடைய அழகிய மாளிகைகள், செல்வம், ஆடம்பரம், சிற்றின்பம், மென்மெத்தைகள், நல்லாடைகள், உயர்தர உணவு அவரது அரசுரிமை ஆகியவற்றையும். தன்னுடைய காதல் மனைவி யசோதரை, அன்பு மகன் ராகுலாவையும் கூட அவர் விட்டுவிலகி சென்றார்.

31. மனித குலத்தின் நன்மைக்காக வேறெவரேனும் இத்தகைய தியாகம் செய்திருக்கிறார்களா?

இன்றுள்ள காலகட்டத்தில் யாருமில்லை. இதனால்தான் பௌத்தர்கள் அவரை மிகவும் நேசிக்கின்றனர், பௌத்தர்களில் சிறந்தவர்கள் அவரைப் போல வாழ முயற்சிக்கின்றனர்.

32. ஆனால் பலர் இவரை போலவே உலக இன்பங்களையும், ஏன் தங்கள் உயிரையே கூட சக மக்களின் நன்மைக்காக துறந்திருக்கிறார்களே?

உண்மைதான். எனினும் இவர் மனிதர்கள் மேல் கொண்ட சுயநலமற்ற பேரன்பினால் அவர்களுக்காக யுகயுகங்களுக்கு முன்பு தீபங்கர-புத்தரின் காலத்தில் தான் அடையவிருந்த அரிய நிர்வாண முக்தி நிலையை துறந்தார். அப்போது அவர் பிராமண சுமேதராக பிறந்தார். நிர்வாணத்தில் நுழைவதற்கான நிலையை அடைந்திருந்தார். மனிதர்கள் மீது அன்பில்லாமல் தன்னை மட்டுமே கருத்தில் கொண்டிருந்தால் அவர் நிர்வாணத்தில் நுழைந்திருப்பார் அல்லவா. விடுதலைக்கும் உலக அமைதிக்குமான வழியையும் அனைத்து உயிர்களுக்கும் பொதிப்பதற்காக நிர்வாணத்தை துறந்து, இப்பிறவியை எடுத்து, வலுகட்டாயமாக தன்னை உலக துயர்களில் ஆழ்த்திக்கொண்டார், புத்தனாக ஆகும்வரை.

33. அவர் கானகம் புகந்த போது அவருக்கு என்ன வயது?

அப்போது அவருக்கு 29வது வயது.

34. எது அவரை தீர்க்கமாக மனிதர்கள் விரும்பும் அனைத்தையும் துறந்து கானகம் புக வைத்தது?

அவர் தன் பல்லக்கில் வலம் சென்றபோது தேவன் ஒருவன் நான்கு வெவ்வேறு தருணங்களில் நான்கு விதமான ஆழ்ந்த தாக்கம் ஏற்படுத்தும் வடிவங்களில் காட்சி தந்தார்.

35. அந்த வடிவங்கள் என்னென்ன?

மிகவும் வயதாகி தளர்ந்த கிழவராக, நோய்வாய்பட்ட ஒருவராக, அழுகும் ஒரு பிணமாக, எல்லாம் துறந்த துறவியாக.

36. அவர் மட்டுமா அதை பார்த்தார்?

இல்லை, அவர் சேவகன் சன்னாவும் அவைகளை பார்த்தான்.

37. ஏன் சாதாரணமாக எல்லோரும் காணும் காட்சிகள் அவரை மட்டும் கானகம் செல்ல தூண்டியது?

நாம் அடிக்கடி அத்தகைய காட்சிகளை காண்போம், ஆனால் அவர் கண்டதில்லை. ஆகையால் அவை அவர் உள்ளத்தில் ஆழ்ந்த தாக்கம் ஏற்படுத்தின.

38. ஏன் அவர் அவற்றை இதற்கு முன்பு பார்க்கவில்லை?

அவர் பிறந்த போது பிராமண நிமித்திகர்கள் அவர் ஒரு நாள் தன் அரசை துறப்பார் என்றும் பிறகு புத்தனாவார் என்று கணித்து கூறினார்கள். ஆகவே அரசர் அதாவது அவரது தந்தை தன் அரசை வழிநடத்தபோகும் ஒரே வாரிசு மனித துயர்களையும் இறப்புகளையும் காணும் சந்தர்பங்களை மிகவும் கவனத்துடன் தவிர்த்து வந்தார். இளவரசரிடம் அதை பற்றி பேசவும் யாருக்கும் அனுமதியில்லை. அவர் தனது அழகிய பெரிய மாளிகைகளிலும் பூந்தோட்டங்களிலும் ஒரு கைதிபோல வாழ்ந்துவந்தார். அவை பெரும் மதில்களால் சூழப்படிருந்தன, எத்தனை அழகு சாத்தியமோ அத்தனை அழகுடன் அவை அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆகவே இளவரசர் வெளியேயுள்ள துன்பங்களையும் வேதனைகளையும் சென்று பார்க்க விரும்பமாட்டார் என்று அவரது தந்தை நினைத்தார்.

39. அவரின் தந்தை தன் மகன் உலக நன்மைக்காக எல்லாவற்றையும் துறந்து செல்வார் என எண்ணும் அளவிற்கு இளவரசர் அத்தனை அன்பு-உள்ளம் கொண்டவரா?

ஆமாம். அவர் எல்லா உயிர்களிடமும் மிகுந்த அன்பும் கருணையும் கொண்டிருந்தார்.

40. அவர் எங்ஙனம் துயரங்களுக்கான காரணத்தை கானகத்தில் அறியமுடியும் என எண்ணினார்?

அனைத்திலிருந்தும் விலகி தொலைதூரத்திற்கு செல்வதனால் துயரங்களின் காரணத்தின் மீதும் மனித இயல்பு மீதும் ஆழ்ந்த சிந்தனையை செலுத்த இயலும்.

41. எவ்வாறு அவர் மாளிகையிலிருந்து தப்பிசென்றார்?

ஒருநாள் இரவில் அனைவரும் உறங்கியபின் அவர் விழித்துக்கொண்டார். தன் மனைவியையும் சிறு குழந்தையையும் ஒருமுறை பார்த்தார். பிறகு தனது சேவகன் சன்னாவை அழைத்தார். தன்னுடைய விருப்பமான வெள்ளை குதிரையான காந்தகாவில் சேணம் ஏற்றி மாளிகையின் வாயில்கதவருகே சென்றார். வாயில் காப்பாளர்கள் ஆழ்ந்த துயிலும்படி செய்தனர் தேவர்கள். ஆகையால் குதிரையின் குளம்பொலியைக்கூட அவர்கள் கேட்கவில்லை.

Departure+of+Siddhartha+By+Abanindranath+Tagore.jpg
சித்தார்த்தனின் புறப்பாடு - ஓவியம் அபனீந்திரநாத் தாகூர்

42. ஆனால் கதவு பூட்டித்தானே இருந்திருக்கும்?

ஆம், ஆனால் தேவர்கள் சிறு ஒலிகூட எழாமல் கதவை திறக்கச்செய்தனர். பிறகு அவர் குதிரையில் இருட்டில் பாய்ந்து சென்றுவிட்டார்.

43. அவர் எங்கு சென்றார்?

ஆனோமா ஆற்றங்கரைக்கு. கபிலவஸ்துவிலிருந்து நெடுந்தொலைவில் இருப்பது.

44. பிறகு என்ன செய்தார்?

குதிரையிலிருந்து கீழ் குதித்தார். அழகிய தலை முடியை வாளால் மழித்துக்கொண்டார். காவியுடை தரித்துகொண்டார். குதிரையையும் ஆபரணங்களையும் சன்னாவிடம் கொடுத்து தன் தந்தையிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

45. பிறகு?

நடைப்பயணமாக ராஜகிரஹம் சென்றார். அது மகத அரசன் பிம்பிசாராவின் தலைநகரம்.

46. அங்கு அவரை யார் சந்தித்தார்கள்?

அரசன் தன் அமைச்சர்கள் அனைவருடனும் சென்று அவரை சந்தித்தார்.

46a. அங்கிருந்து எங்கே சென்றார்?

உருவெல்லா, தற்போது மஹாபோதி ஆலயமுள்ள புத்த கயாவிற்கு அருகில்.

47. அவர் ஏன் அங்கே சென்றார்?

அங்கிருந்த கானகத்தில் துறவிகளும் ஞானிகளும் இருந்தனர். தன்னுடைய தேடலுக்கான அறிவு கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பில் அவர்களிடம் சீடனாக சேர்ந்துகொண்டார்.

48. அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள்?

இந்து மதம். அங்கிருந்தவர்கள் பிராமணர்கள்.

49. அவர்கள் என்ன கற்றுக்கொடுத்தனர்?

கடுமையான தவத்தின்மூலமும் உடலை வருத்திக்கொள்வதன் மூலமும் மனிதனால் சரியான ஞானத்தை அடையமுடியும் என்று.

50. இளவரசன் இதை சரியென்று உணர்ந்தாரா?

இல்லை, அவர்களின் நியதிகளை கற்றுகொண்டார், கடும் தவங்களை பயிற்சிசெய்தார். ஆனால் அவரால் மனித துயரின் காரணங்களை, முழுமையான விடுதலைக்கான வழியை அறியமுடியவில்லை.

51. பிறகு என்ன செய்தார்?

உருவெல்லா அருகேயுள்ள கானகத்துள் சென்றுவிட்டார். அங்கே அவர் ஆறு ஆண்டுகள் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். அழியக்கூடிய தன் உடலின் மீது தீவிரமான ஒழுக்க விதிகளை ஏற்றிக்கொண்டார்.

52. அவர் தனியாக இருந்தாரா?

இல்லை, ஐந்து பிராமணர்கள் உடனிருந்தனர்.

53. அவர்கள் பெயரென்ன?

கொண்டன்னா, பட்டியா, வப்பா, மஹானாம, அஸாஜி.

54. தனது மனதை திறந்து வைத்து முழு உண்மையை அறிய எந்த விதமான திட்ட விதிகளை அவர் கடைபிடித்தார்?

அவர் ஓரிடத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். வாழ்வின் அதிஉச்ச சிக்கல்களில் மட்டும் தன் மனதை நிலைக்கச்செய்தார். தனது தியானத்தை குலைக்கும் எந்த காட்சிக்கும் ஒலிகளுக்கும் தன் கவனம் செல்லாது அடைத்துக்கொண்டார்.

55. அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டாரா?

ஆமாம், அந்த தியான காலம் முழுவதும் அவர் மேலும் மேலும் மிக சிறு அளவே உணவும் நீரும் உட்கொண்டார். அதன் உச்சமாக தினமும் ஒரு பருக்கை அரிசி அல்லது  எள்ளு மட்டுமே உட்கொண்டார் என்று கூறப்படுகிறது.

56. இந்த கடும் தவம் அவர் தேடிய ஞானத்தை கொடுத்ததா?

இல்லை. அவர் உடலளவில் மெலிந்துகொண்டே சென்றார். பலவீனமடைந்து கொண்டே இருந்தார். அப்போது ஒருநாள், மெல்ல நடந்து தியானம் செய்துகொண்டிருக்கும்போதே அவர் ஜீவ சக்தி சட்டென்று விலகி சுயநினைவிழந்து மண்ணில் விழுந்தார்.

57. இதைப்பற்றி அவருடன் இருந்தவர்கள் என்ன நினைத்தனர்?

அவர் இறந்துவிட்டார் என அவர்கள் நினைத்தனர். ஆனால் சிறிதுநேரம் கழித்து அவர் மீண்டும் விழித்துக்கொண்டார்.

58. பிறகு என்ன ஆயிற்று?

வெறும் உண்ணாவிரதத்தாலோ உடலை வருத்திக்கொள்வதாலோ அறிவு கிடைக்கப்போவதில்லை, திறந்த மனதுடன் இருப்பதாலேயே அது சாத்தியப்படும் என்னும் புரிதலை அடைந்தார். தன்னை வருத்திக்கொண்டதால் நூலிழையில்  மரணம் வரை சென்று உயிர் திரும்பினார். எனினும் ஞானம் பெறவில்லை. ஆகவே ஞானம் அடையும் வரை வாழ்ந்தாக உணவு உட்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தார்.

59. அவருக்கு உணவளித்தவர் யார்?

சுஜாதா எனும் பெண்தான் அவருக்கு உணவளித்தாள். ஊர் தலைவரின் மகளான அவள் ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருந்த அவரை கண்டு உணவளித்தாள். அவர் எழுந்து உணவை பெற்றுக்கொண்ட பிட்சை பாத்திரத்துடன் நெரஞ்சரா ஆற்றங்கரைக்குச் சென்றார். ஆற்றில் குளித்துமுடித்து, உணவு உட்கொண்டு, கானகத்திற்குள் சென்றுவிட்டார்.

60. அங்கு அவர் என்ன செய்தார்?

நடந்த நிகழ்வுகளில் இருந்து உறுதியான முடிவை எடுத்துக்கொண்டு அந்திப்பொழுதில் ஒரு போதி (அஸ்வத்த) மரத்திற்கு சென்று சேர்ந்தார். அது தற்போதய மஹாபோதி ஆலயம் இருக்குமிடம்.

61. அங்கு என்ன செய்தார்?

சரியான ஞானம் கிடைக்கும்வரை அந்த இடத்தைவிட்டு விலகுவதில்லை என உறுதிகொண்டார்.

62. மரத்தின் எந்த திசையில் அவர் அமர்ந்திருந்தார்?

கிழக்குநோக்கி

63. அன்றிரவு அவர் அடைந்தது என்ன?

அவரின் முற்பிறப்புகள், மறுபிறப்பிற்கான காரணங்கள், ஆசைகளை அழிப்பதற்கான வழிகள் ஆகியவற்றைப் பற்றிய ஞானத்தை அடைந்தார். விடியலுக்கு சற்று முன்பு அவரது மனம் முழுதும் மலர்ந்து விரிந்த தாமரை போல முழுமையாக திறந்துகொண்டது. உயர்நிலை அறிவொளி அல்லது நான்கு பெரும் உண்மைகள் அவர்மீது பொழிந்தன. அவர் புத்தரானார். எல்லாம் அறிந்த சர்வஞ்ஞர் ஆனார்.

64. இறுதியாக அவர் மனித துன்பங்களின் காரணங்களை கண்டுகொண்டாரா?

ஆம், இறுதியில் அவர் கண்டுகொண்டார். சூரியனின் காலைஒளி இருளை அகற்றி மரம், நிலம், பாறை, கடல், விலங்குகள், மனிதர்கள் மற்றும் பிற அனைத்தையும் காட்டுவதுபோல, அவர் உள்ளத்தில் உதித்த அறிவின் முழு வெளிச்சத்தால் ஒரே பார்வையில் மனித துன்பங்களுக்கான காரணங்களையும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் கண்டுகொண்டார்.

65. இந்த சரியான ஞானத்தை அடைய அவர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டாரா?

ஆமாம். மிக பிரம்மாண்டமான கடுமையான சிரமங்களை எதிர்கொண்டார். நாம் உண்மையை  நோக்க தடைகளாக இருக்கும் இன்பங்களையும் ஆசைகளையும், உடலில் இயற்கையாக உள்ள குறைகளையும் அவர் தன் உடலால் வெல்லவேண்டியிருந்தது. தன்னைச் சுற்றியிருக்கும் பாவ உலகின் தீய தாக்கங்கள் அனைத்தையும் அவர் கடக்க வேண்டியிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்தின் பல எதிரிகளை எதிர்த்து தீவிரமாக போரிடுவது போல அவர் போராடினார். போரில் வென்ற நாயகன் போல தன் இலக்கை அவர் அடைந்தார், மனித துன்பங்களின் ரகசியத்தை கண்டறிந்தார்.

Abanindranath_Tagore_-_The_Victory_of_Buddha_frontispiece_from_Myths_of_the_Hindus_and_Buddhists_by_Sis_-_(MeisterDrucke-1403167).jpg
புத்தரின் வெற்றி - ஓவியம் அபனீந்திரநாத் தாகூர்

66. இவ்வாறு அடைந்த ஞானத்தை கொண்டு அவர் என்ன செய்தார்?

முதலில் பெரும் மக்கள் திரளுக்கு அந்த ஞானத்தை அளிப்பதில் தயக்கம் கொண்டிருந்தார்.

67. ஏன்?

அதன் அதிமுக்கியத்துவமும் உன்னதமுமே அதற்கு காரணம். மிக சிலரே அதை உணர்ந்துகொள்வர் என அஞ்சினார்.

68. அவரின் இந்த நிலைப்பாடு மாறியதற்கு எது காரணம்?

தான் அறிந்ததை தெளிவாகவும் எளிதாகவும் அனைவருக்கும் கற்றுக்கொடுப்பது தன் கடமை என உணர்ந்துகொண்டார். தனிநபரின் கர்மத்திற்கு ஏற்ப மெய்மையின் தரிசனம் அவர்களுக்கு கிடைக்கக்கூடும் என நம்பினார். விடுதலைக்கான ஒரே வழி இது ஒன்றே. அதை தன்னிடம் கோரும் எல்லா உயிர்களுக்கும் உரிமையுண்டு என்றும் நம்பினார். அகவே அவர் கடும்பயிற்சிகள் எதுவும் உதவாது என்று விரதத்தை நிறுத்திக்கொண்ட போது அவரைவிட்டு விலகிய ஐந்து நண்பர்களிடமிருந்து இந்த ஞானப் பகிர்வை தொடங்கலாம் என தீர்மானித்தார். (பிரம்ம தேவன் புத்தரிடம் அவரின் ஞானத்தை உயிர்கள் அனைத்திற்கும் பகிருமாறு வேண்டிக்கொண்டதாக புராணக்கதைகள் குறிப்பிடுகின்றன).

69. அவர்களை எங்கே கண்டுகொண்டார்?

பனாரஸ் அருகே மான்கள் நிறைந்த இசிபட்டானா என்னும் சோலையில்.

70. அந்த இடத்தை இப்போது கண்டுகொள்ளமுடியுமா?

முடியும். சிறிது சிதிலமடைந்த ஸ்தூபம் அல்லது டகோபா இன்னமும் அங்கே நிற்கிறது.

71. அந்த ஐந்து நண்பர்களும் அவர் சொல்வதைக் கேட்க தயாராக இருந்தார்களா?

இல்லை, முதலில் தயங்கினார்கள். ஆனால் அவரின் வசீகரிக்கும் ஆன்மீக தோற்றமும், மிக இனிமையான உறுதியான போதனையும் அவர்களின் முழு கவனத்தையும் அவருக்கு கொடுக்கசெய்தது.

72. இந்த சொற்பொழிவு எவ்வகையான தாக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்தியது?

வயதில் முதிர்ந்த ’கொண்டன்னா’ என்று அறியப்படுபவர்தான் முதலாவதாக தன் முன்முடிவுகளை விளக்கி புத்தரின் போதனைகளை ஏற்றுகொண்டார். அவரே முதல் சீடனும் ஆகி அர்ஹதரின் வழி சேரும் பாதையில் பயணிக்க முடிவுசெய்தார். மற்ற நால்வரும் விரைவிலேயே அவரை பின்தொடர்ந்தனர்.

73. அடுத்து யார் அவரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டனர்?

இளம் செல்வந்தனாகிய யாசாவும் அவனின் பணக்கார வணிகராகிய தந்தையும். மூன்றாம் மாத இறுதியில் சீடர்களின் எண்ணிக்கை அறுபதாக இருந்தது.

74. முதல் பெண் சீடர்கள் யாவர்?

யாசாவின் தாயும் , துணைவியும்.

75. அச்சமயம் புத்தர் என்ன செய்துகொண்டிருந்தார்?

தன் சீடர்களை ஒன்றாக அழைத்து அவர்களுக்கு வழிமுறைகளை கூறி, தன் கொள்கையை போதிக்க எல்லா திசைகளுக்கும் அவர்களை அனுப்பி வைத்தார்.

76. அந்த கொள்கையின் சாராம்சம் என்ன?

விடுதலைக்கான வழி தூயவாழ்வை வாழ்வதிலும் நெறிகளை பின்பற்றுவதிலும் அடங்கியுள்ளது. அவற்றை பிறகு விளக்குகிறேன். 

77. இவ்வகையான வாழ்க்கை முறைக்கு அவர் என்ன பெயர் சூட்டினார்?

அஷ்டாங்க மார்க்கம் (உன்னத எண்வகை மார்கங்கள்)

78. பாலி மொழியில் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அரியோ அட்தங்கிகோ மக்கோ

79. பிறகு புத்தர் எங்கே சென்றார்?

உருவெல்லா-விற்கு

80. அங்கு என்ன நடந்தது?

ஜதிலர்களின் ஆசிரியரும் கல்விக்கு பெயர் பெற்றவருமான காஷ்யபரை தன் நெறிக்குள் உட்புகுதினார். அக்னியை வழிபடும் பெரும் குலமான ஜதிலர்கள் இதன் பிறகு புத்தரை பின்தொடர துவங்கினர்.

81. இவரால் மாறுதலுக்கு உண்டான அடுத்த பெரும் நபர் யார்?

மகத அரசன் பிம்பிசாரன்.

82. அச்சமயத்தில் புத்தரால் மிகவும் விரும்பப்பட்ட நன்கு கற்ற எந்த இரண்டு சீடர்கள் அவரின் நெறிக்கு மாறினர்?

சாரிபுத்திரர் மற்றும் மொகல்லானா. இதற்குமுன் இவர்கள் துறவி சஞ்சய்யாவின் தலைமை சீடர்களாக இருந்தனர்.

83. எதனால் இவர்கள் இருவரும் மிகவும் அறியப்படுகிறார்கள்?

சாரிபுத்திரர் அவருடைய ஆழ்ந்த கற்றலுக்காகவும் (பிரஜ்னா), மொகல்லான அவருடைய தனித்துவமான ஆன்மீக சித்திக்கும் அறியப்படுகின்றனர்.

84. இத்தகைய அதிசய-சக்திகள் மாயஜாலவித்தைகளா?

இல்லை. அனைவருக்கும் இயல்பாக கிடைக்கக்கூடியவைதான். முறையான பயிற்சியின்மூலம் வளர்த்துக்கொள்ளக்கூடிய ஆற்றல்கள் இவை.

85. புத்தர் தனது குடும்பத்தை விட்டு நீங்கியபின்பு அவர்களிடமிருந்து அழைப்பு வந்ததா?

ஆம். ஏழு வருடம் கழிந்து அவர் ராஜக்ரஹத்தில் வசிக்கும்போது அவரது தந்தை சுத்தோதன மன்னனிடமிருந்து வந்தது. தந்தை தன் மரணத்திற்கு முன் தன் மகனை மீண்டும் ஒருமுறை காணவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

86. புத்தர் சென்றாரா?

ஆம். அவருடைய தந்தை தனது எல்லா சுற்றத்துடனும், அமைச்சர்களுடனும் சென்று மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றார்.

87. மீண்டும் இளவரசராக அவர் சம்மதம் தெரிவித்தாரா?

இல்லை. அவர் மிக இனிமையாக தன் தந்தையிடம் சித்தார்த்தன் என்ற இளவரசன் தற்போது இல்லையென்றும், அவன் 'புத்தனாகி' அந்நிலையில் எல்லா உயிர்களையும் சமமாக அன்பாக பார்க்கிறார் என்றும் விளக்கினார். மண்ணுலக அரசனாக குறிப்பிட்டவொரு மக்களையோ நாட்டையோ ஆள்வதைவிட தன்னுடைய 'தம்மத்தால்' மக்கள் அனைவரின் மனதையும் வென்று அவர்களை தன் வழியே வரச்செய்வதே தன் விருப்பம் என்று கூறினார்.

88. அவர் யசோதரையும் அவரது மகன் ராகுலாவையும் சந்தித்தாரா?

ஆம். அவர் மீது ஆழ்ந்த அன்பு வைத்திருந்த அவரின் மனைவி அவரைகண்டதும் வேதனையில் அழுதாள். மேலும் இளவரசனின் மகன் என்னும் உரிமையில் ராகுலனை அவரிடம் சென்று தன் அரசஉரிமைகளை கேட்க செய்தார்.

89. என்ன நடந்தது?

அனைவருக்கும் தம்மத்தின் வழியே எல்லா துயர்களையும் களைவதற்கான பாதையை போதித்தார். அவரது தந்தை, மகன், மனைவி, ஆனந்தன் (சகோதரன்), தேவதத்தன் என அனைவரும் அவரின் சீடராயினர். இவர்களில் அனுருத்தன் மற்றும் உபாலி ஆகியோர் பின்னாலில் புகழ்பெற்றனர். அனுருத்தன் பெரும் தத்துவவாதி ஆனார். அரண்மனை நாவீதரான உபாலி வினய சாஸ்திரத்தில் பெரும் புலமை பெற்றார். 

90. முதல் பிக்குணி யார்?

மஹாபஜபதி(மஹாபிரஜாபதி) கோதமி. இவர் இளவரசர் சித்தார்த்தரின் அன்னையான மாயாதேவியின் இளைய சகோதரி, சித்தார்த்தரின் வளர்ப்பு அன்னையும் ஆவர். இவருடன் யசோதரை மற்றும் நிறைய பெண்கள் பிக்குணிகளாக ஆனார்கள்.

91. தன் இரண்டு மகன்கள் சித்தார்த்தனும் ஆனந்தனும், சகோதரனின் மகன் தேவதத்தன், மருமகள் யசோதரை, பேரன் ராகுலா என அனைவரும் ஆன்மீக பாதையை தேர்வுசெய்த போது வயோதிக மன்னர் சுத்தோதனரின் மனதில் அவை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது?

இது அவரை மிகவும் வருத்தமடைய செய்தது. புத்தரிடம் புகார் கூறினார். மேலும், பெற்றோர் உயிருடன் இருக்கும்பட்சத்தில் அவர்களின் ஒப்புதலின்றி இனி யாரும் துறவறம் ஏற்கக்கூடாது என்னும் ஆணையும் பிறப்பித்தார்.

92. தேவதத்தனின் விதியை பற்றி கூறமுடியுமா?

அவர் மிகுந்த அறிவுத்திறன் உடையவர். தம்மத்தின் ஞானத்தை மிக விரைவாக அறிந்துகொண்டார். ஆனால் அவரிடம் தீவிரமாக புகழுக்கான வேட்கையும் இருந்தது. அதுவே தேவதத்தனை புத்தரிடம் விரோதம் கொள்ளவும் அவரை வெறுக்கவும் தூண்டியது. கடைசியில் அவரை கொல்லவும் முயற்சிசெய்தார். மேலும், தேவதத்தன் மகத மன்னன் பிம்பிசாரரின் புதல்வன் அஜாதசத்ருவை தன் வசம் ஈர்த்து மன்னனை கொல்லத் தூண்டினார், அவனை தனது சீடனாக ஆக்கினார்.

93. தேவதத்தன் புத்தருக்கு எதாவது காயம் ஏற்படுத்தினாரா?

அது மட்டும் நிகழவில்லை. ஆனால் புத்தருக்கு எதிராக அவர் வகுத்த தீய செயல்கள் இறுதியாக அவரையே சூழ்ந்துகொண்டு துர்மரணம் அடைய செய்தது.

94. எத்தனை ஆண்டுகள் புத்தர் போதனையில் ஈடுபட்டுவந்தார்?

நாற்பது ஆண்டுகள். இச்சமயத்தில் அவர் ஏராளமான பிரசங்கங்களும், வாதங்களும் நிகழ்த்தினார். புத்தரும் அவரது சீடர்களும் ஆண்டின்  மழையில்லாத எட்டு மாதங்கள் முழக்க பயணித்து போதனை செய்வர். மழை காலங்களில் புத்த தர்மத்திற்கு மாறிய மன்னர்கள் மற்றும் செல்வந்தர்கள் அவருக்காக ஏற்படுத்திய பர்ணசாலைகளிலும் விகாரங்களிலும் தங்கிக்கொள்வர்.

95. இவற்றில் புகழ் பெற்ற கட்டிடங்கள் யாவை?

ஜெத்தாவனாரமா, வேலுவனரமா, புப்பரமா, நிக்ரோதரமா, இசிபட்டனரமா.(ஜேதவனமும் புப்பராமாவும் உத்தர பிரதேசத்தின் சிராவஸ்தியில் இருக்கும் புத்த மடங்கள். வேனுவனம் ராஜகிரஹத்தில் இருக்கிறது. இசிபத்தானா என்பது இன்றைய சாரநாத், நிக்ரோதராமா கபிலவஸ்துவில் உள்ளது)

96. எந்த வகையான மக்கள் அவராலும் அவரது சீடர்களாலும் புத்த தர்மத்திற்கு மாற்றப்பட்டனர்?

எல்லா தரப்பினரும், எல்லா தேசத்து மக்களும், செல்வந்தர்கள் ஏழைகள், கூலிகள், மன்னர்கள், வலியவர் எளியவர், கல்லாதவர்கள், கற்றவர்கள் என அனைவரும். அவரது கொள்கை அனைவருக்குமானது

97. புத்தரின் இறப்பை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?

தனது புத்த தன்மையை அடைந்து நாற்பத்தைந்து ஆண்டுகள் கழிந்த வைகாச மாதத்தின் முழு நிலவு நாளன்று தன் இறுதி அணுகுவதை உணர்ந்தார். ஒரு மாலை பொழுதில் வாரனாஸிலிருந்து 120 மைல்கள் தொலைவிலுள்ள குசிநகரம் என்னும் இடத்திற்கு வந்துசேர்ந்தார். அங்கே மல்லர்களின் சால மரதோப்பில் இரண்டு சால மரத்திற்கு இடையே தொல்வழக்கப்படி வடக்கில் தலை வைக்குமாறு படுக்கை அமைக்கப்பட்டிருந்தது. அதில் படுத்துக்கொண்டு முழு அமைதியான மனதுடன் தன் சீடர்களுக்கு கடைசி அறிவுரைகள் வழங்கி, இறுதியாக விடைபெற்றும் கொண்டார்.

98. அவர் தனது இறுதி யாத்திரைகளிலும் மக்களை புத்த தர்மத்திற்குள் புகசெய்தாரா?

ஆம், மிக முக்கியமான நபர் ஒருவர் தர்மத்திற்குள் நுழைந்தார். புகழ்பெற்ற பிராமண பண்டிதர் சுபத்ரா. மேலும் மல்யா இளவரசர்கள் மற்றும் அவர்களை பின்பற்றும் அனைவருக்கும் தம்மத்தை போதித்தார்.

99. வைகறை பொழுதில் என்ன நடந்தது?

அவர் சமாதி நிலையில் உள்ளடங்கி, பின் நிர்வாணத்தை அடைந்தார்.

Abanindranath_Tagore_-_The_Final_Release_(colour_litho)_-_(MeisterDrucke-1409093).jpg
நிர்வாணத்தை அடைதல் - ஓவியம் அபனீந்திரநாத் தாகூர்

100. தன்னுடைய சீடர்களுக்கு அவர் அருளிய இறுதி சொற்கள் என்ன?

“பிக்குகளே! நான் உங்களிடம் அழுத்தமாக கூறுவது இதுதான், மனிதர்களின் அதிகாரத்திற்கான விழைவு களையப்படவேண்டும். உங்கள் மீட்சிக்கான முயற்சியில் பெரும் கவனத்துடன் இருக்கவேண்டும்.” என்று கூறினார்.

101. புத்தர், அதற்குமுன் இளவரசர் சித்தார்த்தன் என வாழ்ந்த இவரின் இருப்புக்கான வரலாற்று ஆதாரம் உள்ளதா?

அவரின் இருப்பு வேறெந்த வரலாற்று மனிதபாத்திரத்தை விடவும் மிக தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

102. சில ஆதாரங்களை கூறுங்கள்?

  1. அவரை நெருக்கமாக அறிந்தவர்களின் எழுத்துபூர்வ ஆதாரங்கள் உள்ளன.
  2. அவரது காலகட்டம் சார்ந்த கதைகளில் குறிப்பிடப்படும் ஊர்கள் மற்றும் எஞ்சிய கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  3. அவரது காலத்திற்கு நெருக்கமாக வாழ்ந்த மன்னர்கள் அவரின் நினைவாக பாறைகளின் செதுக்கிய கல்வெட்டுகள், நிறுவிய ஸ்தம்பங்கள் மற்றும் ஸ்தூபிகள் ஆகியவற்றைக் கொண்டு இவரின் வாழ்க்கை பற்றிய கதையை உறுதிசெய்ய முடிகிறது.
  4. அவர் நிறுவிய சங்கத்தின் அறுபடாத தொடர்ச்சி. மற்றும் அங்கிருந்தவர்கள் அவரது வாழ்க்கை பற்றிய நிஜ தகவல்களை தொடக்கம்முதல் தலைமுறை தலைமுறையாக பேணி வந்துள்ளனர்.
  5. அவர் இறந்த அதே ஆண்டில் பல இடங்களில் சங்கத்தின் மகாசபைகளும் கூடுகைகளும் நிகழ்ந்துள்ளன. அது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவை அதன் நிறுவனரின் உண்மையான போதனைகளை உறுதிசெய்வதற்காக நிகழ்ந்தன. உறுதிசெய்யப்பட்ட போதனைகளை ஆசிரியரிடம் இருந்து மாணவருக்கு கடத்தப்படுகிறது. இது இன்றளவும் நிகழ்ந்து வருகிறது.
  6. அவரின் எரியூட்டத்திற்கு பிறகு எஞ்சிய அவரது உடல் பாகங்கள் எட்டு அரசர்களால் பங்கிடப்பட்டு ஒவ்வொன்றும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் ஸ்தூபங்கள் நிர்மாணிக்கப்பட்டன. அரசன் அஜாத சத்ரு தனக்கு கொடுக்கப்பட பாகத்தை ராஜகீரில் அடக்கம் செய்து அதன்மீது ஸ்தூபம் நிறுவியுள்ளார். இரண்டு நூற்றாண்டுகள் முடிவதற்குள் அப்பாகம் பேரரசர் அசோகரால் மீண்டும் எடுக்கப்பட்டு அவரது ராஜ்ஜியம் முழுதும் பகிரப்பட்டது. தொடக்கம் முதலே அது பாடலிபுத்திர அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆகவே அந்த உடல்பாகம் புத்தருடையதா இல்லையா என அறிந்துகொள்வதற்கான எல்லா வழிகளும் அசோகரிடம் இருந்தது.
  7. புத்தரின் பல சீடர்கள் அர்ஹத்தர்கள் ஆயினர். இதன்வழியாக அவர்கள் தங்கள் உயிர் ஆற்றலை கட்டுக்குள் வைத்திருந்தனர், ஆகவே அவர்கள் நீண்ட வயது வாழ்ந்திருக்க வேண்டும். எனவே புத்தரின் இறப்பிற்கு பிறகு அசோகரின் காலத்தில் புத்தரின் நேரடி சீடர் மரபு இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை மட்டுமே நீண்டிருக்கும். ஆகவே அசோகர் புத்தரின் வாழ்க்கை பற்றிய உண்மைகளை நேரடியாக அந்த சீடர்களிடமிருந்து அறிந்திருக்க முடியும். (இரண்டாம் மகாசபை கூட்டத்தில் ஆனந்தரின் இரு சீடர்கள் இருந்தனர், அவர்களுக்கு நூறுவயது இருந்திருக்கலாம். அசோகரின் சபையில் அவர்களின் மாணவர்கள் இருந்தனர்.)
  8. மஹாவம்சம் சிங்களர்களின் பழம்பெரும் வரலாற்று பதிவு நூல். நன்கு ஏற்கப்பட்ட நூல். இது அரசன் வினயாவின் ஆட்சிகாலம் வரை சிங்கள வரலாற்றை பதிவுசெய்துள்ளது - (பொ.மு 543), இது கிட்டத்தட்ட புத்தரின் காலம். இதில் புத்தரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் பற்றி குறிப்புகள், பேரரசர் அசோகர் பற்றிய குறிப்புகள் மற்றும் பௌத்த வரலாற்றில் அறியப்பட்ட அணைந்து ஆட்சியாளர்களின் குறிப்புகளும் இந்நூலில் அடங்கியுள்ளன.

103. எந்தெந்த பெயர்களில் புத்தர் அழைக்கப்படுகிறார்?

சாக்யமுனி (சாக்கிய முனிவர்), சாக்யசிம்ஹம் (சாக்கிய சிம்மம்), சுகதர் (ஆனந்தமானவர்), சத்த்தர் (ஆசிரியர்), ஜினர் (வென்றவர்), பகவத் (புனிதமானவர்), லோகநாதர் (உலகத்தின் அரசர்), சர்வஞ்யர் (சர்வமும் ஆன ஒருவர்), தர்மராஜர் (தர்மத்தின் அரசர்), ததாகதர் (மகத்தானவார்) போன்று, இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

அடிக்குறிப்பு:

மதம் (religion) என்ற சொல்லை பௌத்தத்திற்கு பொருத்துவது சரியானது அல்ல. ஏனென்றால் அது மதம் அல்ல. அறதத்துவம், இதை நாம் பிறகு பார்க்கவிருக்கிறோம். பொதுவான பயன்பாட்டில், ஒரு குறிப்பிட்ட அற கொள்கையை பின்பற்றும் மக்களைக் கொண்ட குழுக்களுக்கு அச்சொல் பொருத்தப்படும். ஆனால் லத்தீன் வேரைக்கொண்ட ’religion’ என்ற சொல்லை ஐரோப்பியர்கள் எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றி சிங்கள பௌத்தர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். சிங்கள பௌத்தர்களிடம் கிறிஸ்துவத்தில் இருக்கும் ‘பந்தம்’ (binding) போன்ற எந்த கருத்துக்களும் இல்லை. பந்தம் என்றால் ’இறைவனிடத்தில் தான் சரணடைவது’, அல்லது ’இறைவனிடம் சேர்வது’. சிங்கள பௌத்தர்கள் தங்களுக்கும் பௌத்தம் மற்றும் புத்தருக்குமான தங்களது உறவை ’ஆகமா’ என குறிப்பிடுகின்றனர். இது சம்ஸ்க்ருத சொல், ‘அணுகுதல்’ அல்லது ’வருதல்’ என்று பொருள். ’புத்தர்’ என்பதற்கு ஞானம் அடைந்தவர் என்று பொருள். இந்த இரண்டு சொற்களின் கூட்டுச்சொல் புத்தாகமா, இந்த சொல்லால்தான் அவர்கள் பௌத்தத்தைக் குறிப்பிடுகின்றனர். இது ‘ஞானத்தை அணுகுதல்’ அல்லது ‘ஞானத்தை நோக்கி வருதல்’ என்ற அர்த்தத்தை கொண்டிருக்கலாம், அல்லது ‘சாக்கியமுனி’ என்ற கோட்பாட்டில் இருந்து வந்திருக்கலாம். கிறிஸ்துவ சமயப்பரப்பாளர்கள் ஏற்கனவே இருந்த சொல் ‘ஆகமா’-வை ‘religion’ என்ற சொல்லுக்கு இணையான சொல்லாக கையாண்டனர். கிறிஸ்துவத்தை ’கிறிஸ்டியனாகமா’ என எழுதினர். இது கிறிஸ்டியனிபந்தனா என ஆகியது. பந்தனா என்ற சம்ஸ்கிருத சொல் சொற்பிறப்பியலின் (etymology) படி religion என்ற சொல்லுக்கு இணையானது. பௌத்தர்களுக்கு ’விபாஜவாதி’ என்ற பெயருண்டு, இதற்கு பகுத்து-அறிபவன் என்று பொருள். அவர்களுக்கு ’அத்வயவாதி’ என்ற பெயரும் உண்டு. இந்த விளக்கம் பொதுவாசகர்களுக்காக அன்றாடதளத்தில் பயன்படுத்தப்படும் ‘மதம்’ (religion) என்ற சொல்லை பௌத்த தத்துவம் பற்றி பேசும் போதும் பயன்படுத்துவதற்கு எதிராகவே அளிக்கிறேன்.  

ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

H.S._Olcott-portrait-300.jpg
ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

தமிழில் - விஷ்ணுகுமார், தாமரைக்கண்ணன் அவிநாசி

WhatsApp%20Image%202024-04-28%20at%2014.42.40_af0a1703.jpg
விஷ்ணுகுமார்

ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (ஆகஸ்டு 2, 1832 - பிப்ரவரி 17, 1909) எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் பிரம்மஞான சபையின் (Theosophical society) இணை நிறுவனர் ஆவார். பௌத்தை மீட்டுருவாக்கம் செய்தவர்களுள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

ஆல்காட் நியூயாரக் ட்ரைபியூன் (newyork tribune) செய்தித்தாளின் வேளாண்மை ஆசிரியராக 1858 முதல் 60 வரை பணிபுரிந்தார். பின்னர் கர்னல் பதவியுடன் அமெரிக்க போர் மற்றும் கடற்படை துறையில் சிறப்பு ஆணையராக 1863 - 66 வரை பணிபுரிந்தார். வழக்கறிஞராக 1966 முதல் பணிபுரிய தொடங்கினார். ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்க்ஸ்கி (Helena petrovna blavatsky), வில்லியம் ஜட்ஜ் (William q Judge) மற்றும் சிலருடன் இணைந்து 1875-ல் பிரம்மஞான சபை நிறுவி அதன் தலைமை ஏற்றார். 1878-ல் அவரும் பிளாட்வஸ்கியும் இந்தியா வந்தனர். 1879 முதல் இந்தியாவிலேயே வசிக்க முடிவுசெய்தனர். 1882-ல் பிரம்மஞான சபையின் நிரந்தர தலைமையகமாக சென்னை அடையாறில் நிலைப்படுத்தினர். அன்னி பெசன்டுடன் (Annie Besant) இணைந்து வாரணாசியிலுள்ள பெனாரஸில் இந்து கல்லூரி நிறுவ உதவினார். பெசன்டுடன் இணைந்து பிரம்மஞான சபையின் கருதுகோள்களை இந்திய மற்றும் இலங்கையில் நேரில் சென்று விளக்கினார்.  இலங்கை பௌதர்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆல்காட் அவரது முயற்சியால் அங்கே மூன்று கல்லூரிகளும் முப்பதிமூன்று பள்ளிகளும் நிறுவ செய்தார். பௌதர்கள் மத்தியில் அவர் மிகுந்த செல்வாக்கும் வரவேற்பும் பெற்றார். கிழக்கத்திய தத்துவங்களுடன் நெருக்கமாக அறியப்பட்டாலும் இந்து தத்துவ புத்தூக்கத்திற்கும் தன் பங்களிப்பை அளித்துள்ளார். ஆல்காட் தனது 74-வது வயதில் சென்னையில் காலமானார்.

இக்கட்டுரை ஹென்றி ஸ்டீல் ஆல்காட் எழுதிய The Buddhist catechism (1891) என்ற உலக புகழ் பெற்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. வெளிவந்த நாள் முதல் பல  மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

https://www.britannica.com/biography/Henry-Steel-Olcott

https://en.wikipedia.org/wiki/Henry_Steel_Olcott

https://scroll.in/magazine/1047687/how-an-american-helped-revive-buddhism-in-sri-lanka-after-moving-to-india

Catechism என்பது கிறிஸ்துவத்தில் கேள்வி-பதில் வடிவில் மத நம்பிக்கைகளையும்  அதன் கொள்கைகளையும் கற்பிப்பதற்கு  பயன்படுத்தப்படும் நூல் வடிவம். இச்சொல் தமிழில் வினாவல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 
 

https://www.kurugu.in/2024/04/buddhist catechism-tamil.html

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யேசுவின் முதன்மை அடியார்கள் 12 பேரில் (Apostle, பின்னைய பேச்சு மொழியில், the  Twelve) ஒருவராகிய, Thomas the Apostle இல் சமாதி அடைந்ததும் (கி.பி  72) பறங்கி மலை, இப்போதைய தமிழ் நாட்டில் (அப்போது சோழ இராச்சியம் என்று நம்பப்படுகிறது). 

அனால், இவர் தான் இயேசுவின் முதல் முதன்மை அடியார் என்றும் ஒரு நம்பிக்கை இருக்கிறது 

(ஆனால், இந்த 12 அடியார்கள் என்பது New Testament இன் படி).

(வந்தாரை, தன்னை ஆகுதி ஆக்கி, வாழவைக்கும் இனம்.)

(இந்த 12 என்பது முக்கிய  எண்ணாக  இருக்கிறது ஸ்மெடிக் சமயங்களில்  , இஸ்லாமில் அவளவு செல்வாக்கு இல்லை). 

(வந்தாரை, தன்னை ஆகுதி ஆக்கி, வாழவைக்கும் இனம்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது எம்மைப் போன்றவர்களும், ஏன் பிக்குகளும் அவர்களால் ஆசீர்வதிக்கப் படுபவர்களும் கூட புத்தரின் 16 வதில் இருந்து அவர் வாழ்ந்த 29 வயதுக்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்......அதைத் தாண்டி ஒரு வயது கூட எமக்கு ஏறவில்லை அதற்குள் மரணித்தும் விடுகின்றோம்........! 

  • Haha 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.