Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜஸ்பிரித் பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சஞ்சய் கிஷோர்
  • பதவி,மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர், பிபிசி ஹிந்தி
  • 11 ஜூன் 2024

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியது. டி20யில் இந்தியா இதுவரை இல்லாத மிகக் குறைந்த ஸ்கோரைப் பெற்ற போதிலும் வெற்றி பெற்றது. அதேசமயம் பாகிஸ்தான் அந்த சிறிய இலக்கை கூட துரத்த முடியாமல் தோல்வியுற்றது.

கடினமான 22 யார்டு ஆடுகளத்தில், 22 வீரர்களுக்கு மத்தியில், இந்த ஆச்சரிய வெற்றிக்கும் எதிரணியின் எதிர்பாராத தோல்விக்கும் ஒருவர் தான் காரணம் : அது `ஜஸ்பிரித் பும்ரா’.

பாகிஸ்தானுக்கு எதிராக பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 3 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பாதை அமைத்து கொடுத்தார்.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். பும்ரா வீசிய 24 பந்துகளில் 15 பந்துகள் `டாட் பால்கள்’ ஆனது.

குறைந்த ஓவர்களை கொண்ட டி20 கிரிக்கெட்டில், இந்த டாட் பால்களின் மதிப்பு விக்கெட் எடுப்பதற்கு சமம் என்றே சொல்ல வேண்டும். இதனை ரவிச்சந்திரன் அஷ்வினை விட வேறு யாராலும் தெளிவாக விளக்க முடியாது.

போட்டிக்குப் பிறகு, ரவிச்சந்திரன் அஷ்வின் எக்ஸ் தளத்தில் ஒரு நீண்ட பதிவை பகிர்ந்தார்: “டி20யில் விக்கெட்டுகளை எடுப்பது ஒரு கொடுங்கனவு போன்றது. இதை நான் சொல்லும் போதெல்லாம் மக்கள் என்னைக் கேலி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். டி20யில் விக்கெட்டுகளை வீழ்த்தலாம். இது பும்ராவை போன்று பந்துவீச்சாளரின் சொந்த திறனைப் பொறுத்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“பொதுவாக பந்துவீச்சாளர்கள் தவறான நேரத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிப்பார்கள். அடுத்த ஓவரில் சக பந்துவீச்சாளர்களால் அழுத்தத்தை உருவாக்க முடியாது. மெதுவாக ஆனால் நிச்சயமாக, போட்டியின் போக்கை சுயநலமற்ற பந்துவீச்சாளர்கள் தீர்மானிக்கிறார்கள்." என்றும் அஷ்வின் பதிவிட்டிருக்கிறார்.

 

"விக்கெட்டுகளை பெறுவது இறுதி இலக்கு அல்ல"

ஜஸ்பிரித் பும்ரா: போட்டிகளை மாற்றியமைக்கும் `ஆபத்தான பந்துவீச்சாளர்’

பட மூலாதாரம்,GETTY IMAGES

போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் ஜஸ்பிரித் பும்ரா பேசிய வார்த்தைகள் அஷ்வினின் கூற்றை எதிரொலித்தது. பும்ராவின் எண்ணங்கள் எவ்வளவு முதிர்ச்சியடைந்தவை என்பதையும் அவர் எவ்வளவு வியூகமாக பந்து வீசுகிறார் என்பதையும் அவரின் பேச்சு பிரதிபலிக்கிறது.

பும்ரா பேசுகையில், "போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை சார்ந்திருக்கும் சூழல் ஏற்படும் போது பந்துவீச்சாளராக நாம் பொறுமை இழந்து விடக்கூடும். பந்து வீசுபவர்கள் முழு பலத்துடன் சிறந்த பந்தை வீச முயற்சிப்பார்கள். ஆனால் நான் அப்படிச் செய்யாமல் இருக்க முயற்சித்தேன். நாங்கள் விளையாடத் தொடங்கியதும், ஸ்விங் மற்றும் சீம் குறைந்துவிட்டது.

அத்தகைய சூழ்நிலையில் நாம் துல்லியமாக வியூகம் வகுக்க வேண்டும். ஏனென்றால், பந்துவீச்சில் மாயம் செய்து விடலாம் என்று நினைத்து அவசரம் காட்டினால், எதிரணிக்கு ரன்களை எடுப்பது எளிதாகிவிடும், மேலும் அவர்கள் இலக்குக்கு ஏற்ப பேட் செய்து வென்றுவிடுவர்.

எனவே, நாம் வேகம் காட்டாமல் நிதானமாக செயல்பட வேண்டும். ஆம், அழுத்தத்தை அதிகரித்து, பெரிய பவுண்டரி லைனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆடுகளத்தில் இருக்கும் சூழலை நம் நன்மைக்காக பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். அதைத்தான் செய்து நாங்கள் செய்தோம். முதலில் அழுத்தத்தை உருவாக்கினோம், அதன்பின்னர் அனைவரும் விக்கெட்டுகளைப் பெற்றோம்.” என்றார்.

கடினமான நியூயார்க் ஆடுகளம்

ஜஸ்பிரித் பும்ரா: போட்டிகளை மாற்றியமைக்கும் `ஆபத்தான பந்துவீச்சாளர்’

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் (Nassau County International Cricket Stadium) எதிர்பாராத விதமாக மிகவும் கடினமாக இருந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு செய்தது. ஆட்டத்துக்கு நடுவே மழை பெய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ஓவர்களில் ஆல் அவுட்டானது. .

ரிஷப் பந்த் 42 ரன்களும், அக்சர் படேல் 20 ரன்களும், ரோஹித் சர்மா 13 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா, ஹாரிஸ் ரஃப் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது ஆமிர் 2 விக்கெட்டும், ஷஹீன் அப்ரிடி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

எதிரணிக்கு குறைந்த இலக்கு என்று கவலைப்படாத பும்ரா

"சிறு வயதில் இருந்தே பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று ஜஸ்பிரித் பும்ரா கூறுகிறார். பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்படும் போது, அவர்களுக்கு உள்ளிருந்து மகிழ்ச்சியான உணர்வு ஏற்படும்.

பாகிஸ்தானுக்கு 120 ரன்கள் மட்டுமே இலக்காக இருந்தது, ஆனால் அது பும்ராவின் நோக்கத்தில் எந்த பதற்றத்தையும் விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று தோன்றியது.

பும்ராவின் பந்துவீச்சில், ஃபைன் லெக்கில் ரிஸ்வானின் கேட்சை ஷிவம் துபே தவறவிட்ட போது பாகிஸ்தான் 17 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரிஸ்வான் 7 ரன்களில் இருந்தார். ஐந்தாவது ஓவரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமை (13) அவுட் செய்து பும்ரா முதல் விக்கெட்டை கைப்பற்றினார். 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் ஆக இருந்தது. 13வது ஓவரில் 73 ரன் எடுத்திருந்த பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.

 

திருப்புமுனையாக அமைந்த ரிஸ்வானின் விக்கெட்

முகமது ரிஸ்வான் உறுதியாக நின்று விளையாடி கொண்டிருந்தார். அவர் 43 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார், போட்டி பாகிஸ்தானுக்குச் சாதகமாகப் போவதாகத் தோன்றியது. அதன் பின்னர் 15வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச வந்தார்.

பும்ராவின் முதல் பந்து நல்ல லென்த்தில் வீசப்பட்டது. பந்து பவுன்ஸாகி மேலெழுந்ததும், ரிஸ்வானை தடுமாற வைத்து விக்கெட்டை வீழ்த்தியது. ரிஸ்வான் அவுட் ஆனவுடன் ஆட்டம் தலைகீழாக மாறியது.

இறுதியில் பாகிஸ்தானுக்கு 18 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது. சிராஜின் ஓவரில் இமாத் மற்றும் இஃப்திகார் 9 ரன்கள் எடுத்தனர், இலக்கு 12 பந்துகளில் 21 ரன்கள், ஆனால் பும்ரா 19வது ஓவரின் கடைசி பந்தில் இஃப்திகாரை (5) அவுட்டாக்கியது மட்டுமல்லாமல், மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால், கடைசி ஓவரில் பாகிஸ்தான் 18 ரன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கின் சமநிலை முக்கியம்

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆச்சரியமான வெற்றிக்குப் பிறகு, வாட்ஸ்அப் குழுவில் எனது சீனியர் ஒருவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது - “நல்லது, நீண்ட நாட்களுக்குப் பிறகு பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையிலான நல்ல போட்டியைப் பார்க்க முடிந்தது. ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதால் போட்டியின் சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

போட்டிக்குப் பிறகு, ஜஸ்பிரித் பும்ரா இதேபோன்ற கருத்தை ட்வீட் செய்தார், “பந்துவீச்சுக்கும் பேட்டிங்கிற்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் போது மட்டுமே எனக்கு போட்டி மீது ஆர்வம் இருக்கும். பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தால், எனக்கு அந்த போட்டியை பார்க்க விருப்பமில்லாமல் நான் டிவியை அணைக்க விரும்புகிறேன். “ என்று பதிவிட்டிருந்தார்.

`வெல் டன்’ என்று சொன்ன முன்னாள் கிரிக்கெட் வீரர்

ஜஸ்பிரித் பும்ரா: போட்டிகளை மாற்றியமைக்கும் `ஆபத்தான பந்துவீச்சாளர்’

பட மூலாதாரம்,GETTY IMAGES

பும்ராவின் சிறப்பான ஆட்டத்திற்கு முன்னாள் வீரர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ட்விட்டரில், “இந்திய ஊடகங்கள் விராட் கோலி போன்றவர்கள் மீது ஆர்வம் காட்டுகின்றன. தொடர்ந்து பேட்ஸ்மேன்களை பாராட்டுகின்றனர். ஜஸ்பிரித் பும்ரா எந்த ஆரவாரமும் இல்லாமல் தனித்து வெற்றி பெற்றார். பும்ரா தற்போது இந்திய அணியின் சிறந்த வீரர்.

முகமது கைஃப் எக்ஸ் தளத்தில் , "ஜஸ்பிரித் பும்ரா ஆகச் சிறந்த ஆட்டத்தின் வெற்றியாளர்- எந்த வடிவத்திலும் எந்த சூழ்நிலையிலும் உலகின் எந்த மூலையில் ஆட்டம் நடந்தாலும் அவர் வெற்றியாளர் தான்”

வீரேந்திர சேவாக் கூறுகையில், "தோல்வியை வெற்றியாக மாற்றக்கூடியவர் பும்ரா. என்ன ஒரு அபாரமான ஆட்டம். இந்த நியூயார்க் வெற்றி சிறப்பு வாய்ந்தது" என்று கூறினார்.

 

விமர்சகர்களுக்கு தகுந்த பதிலடி

ஒரு வருடத்திற்கு முன்பு ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்தபோது தனது எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பிய விமர்சகர்களை அமைதிப்படுத்தினார். முதுகு அறுவை சிகிச்சை காரணமாக, அவர் 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உட்பட பல முக்கியமான போட்டிகளில் விளையாடவில்லை.

அவர் கடந்த ஆண்டு அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாட ஆரம்பித்தார். ஆசிய கோப்பை மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பை 2024 இல் சிறப்பாக விளையாடினார்.

போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய பும்ரா, "ஒரு வருடத்திற்கு முன்பு இதே நபர்கள் தான் நான் மீண்டும் விளையாட முடியாது, என் கேரியர் முடிந்துவிட்டது என்று சொன்னார்கள், இப்போது அவர்களின் கேள்வி மாறிவிட்டது" என்று கூறினார்.

சிறப்பாக விளையாடிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

கேப்டன் ரோஹித் ஷர்மா பும்ராவை பாராட்டினார், "பும்ரா அற்புதமாக விளையாடி வருகிறார், அவரின் திறனை நாங்கள் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம், அதைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்த உலகக்கோப்பை முடியும் வரை அவர் இந்த நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர் பந்து வீச்சில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.

ஜஸ்பிரித் பும்ரா: போட்டிகளை மாற்றியமைக்கும் `ஆபத்தான பந்துவீச்சாளர்’

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறுகிய காலத்தில் பெரிய சாதனைகள்

ஜஸ்பிரித் பும்ரா குறுகிய காலத்தில் பெரிய சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. ஒரு நாள் சர்வதேச (ODI) கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை எட்டிய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் இவர்.

கிரிக்கெட்டின் அனைத்து மூன்று ஃபார்மட்டிலும் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை எட்டிய முதல் பந்து வீச்சாளர் பும்ரா.

பும்ரா 2013 இல் இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸுடன் தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கினார். அணியை ஐந்து முறை சாம்பியனாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். 2019 ஆம் ஆண்டில், அவர் ஐசிசி ஒரு நாள் போட்டியின் ஆண்டின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பும்ரா தனது முதல் ஐபிஎல் போட்டியில் விராட் கோலியையும், தனது முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தையும், முதல் டி20யில் டேவிட் வார்னரையும், முதல் டெஸ்டில் ஏபி டி வில்லியர்ஸையும் வீழ்த்தியுள்ளார்.

 

`ஆபத்தான பந்துவீச்சாளர்’

ஜஸ்பிரித் பும்ரா: போட்டிகளை மாற்றியமைக்கும் `ஆபத்தான பந்துவீச்சாளர்’

பட மூலாதாரம்,GETTY IMAGES

30 வயதான ஜஸ்பிரித் பும்ரா, அவரது வழக்கத்திற்கு மாறான அதிரடி பந்துவீச்சு மற்றும் திறமையால், உலகின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

பந்து அவரின் கையை விட்டு வெளியேறினால், அதன் போக்கை பேட்ஸ்மேன்கள் கணிப்பது கடினம். ஐபிஎல் போட்டியின் போது, லசித் மலிங்கா துல்லியமான யார்க்கர்களை வீசுவதில் திறமை வாய்ந்தவராக பார்க்கப்பட்டார். அவரின் டெத் ஓவர்களை விளையாடுவது எந்த பேட்ஸ்மேனுக்கும் எளிதானது அல்ல.

நிஜத்தில் பந்துவீச்சு அவ்வளவு வேகமாக இல்லாத போதும், பேட்ஸ்மேன்களுக்கு மிக வேகமாக பந்து வீசப்படுவது போன்ற ஒரு மாயையை உருவாக்குவது அவரது தனித்துவமான பாணி.

ஆல்-ரவுண்டர் பென் கட்டிங் ஒரு இணையதளத்தில் அளித்த பேட்டியில், "பந்தின் வேகத்தை மதிப்பிடுவது பேட்டிங்கின் முக்கிய பகுதியாகும். சிறந்த வீரர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துவது அவசரப்படாத அவர்களின் திறமை தான்” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cw44g4ywynjo

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஏராளன் .......!   👍

448134460_894567096036501_47923099605620

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஏராளன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:
ஜஸ்பிரித் பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

👍....

இவருடைய பெயரை மட்டும் சில செய்திகளில் பார்த்தும் மற்றும் நண்பர்கள் சொல்லக் கேட்டும் இருக்கின்றேன். பல வருடங்களாக கிரிக்கெட் பார்ப்பதில்லை. இங்கு களத்தில் நடக்கும் போட்டியால், @வீரப் பையன்26 மற்றும்  @ஈழப்பிரியன் அண்ணையின் உந்துதலால் பார்க்க ஆரம்பித்து, முதல் தடவையாக இவரின் பந்து வீச்சை பார்க்கின்றேன். இந்தியாவிலிருந்து இப்படி ஒரு பந்து வீச்சாளரா என்று நம்ப முடியாமல் இருக்கின்றது. கபில், ஶ்ரீநாத், மனோஜ் பிரபாகர், வெங்கடேஷ் பிரசாத்.....என்று தான் தெரியும், இவர் பும்ரா இன்னொரு பரிமாணம்........ 

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நூறாண்டுகளில் தோன்றாத தலைசிறந்த பந்து வீச்சாளர் - பும்ராவின் மாய வேகம் பேட்டர்களை தடுமாறச் செய்வது எப்படி?

ஜஸ்பிரித் பும்ரா, கிரிக்கெட் , இங்கிலாந்து , டெஸ்ட் தொடர், இந்தியா - இங்கிலாந்து

பட மூலாதாரம்,ALEX DAVIDSON/GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஸ்டீவென் ஃபின்

  • பதவி, பிபிசி கிரிக்கெட் கட்டுரையாளர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா எல்லா காலத்திலும் அதிசிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்ற கூற்றை நிராகரிப்பது என்பது உண்மையிலேயே கடினமாகி வருகிறது.

ஒவ்வொரு முறை ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசும்போதும் அது, அந்தப் போட்டியில் தாக்கம் ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹெடிங்லியில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்டில் நாம் பார்க்கும் அவரது செயல்பாடுகளை விட அவரின் திறமை மிகவும் மேம்பட்டது.

இங்கிலாந்துடனான போட்டியில், முதல் இன்னிங்ஸில் பும்ரா 83 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதோடு அவரது பந்துவீச்சில் மூன்று கேட்சுகளை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். மேலும், பும்ராவின் பந்துவீச்சில் ஹாரி புரூக் அடித்த பந்து கேட்ச் பிடிக்கப்பட்டாலும், அது நோ-பால் ஆகிவிட்டது.

பும்ரா கையில் பந்து கிடைக்கும் போதெல்லாம் அது பாக்ஸ் ஆஃபிஸிலிருந்து திரைப்படம் பார்ப்பது போல தோன்றுகிறது. ஒவ்வொரு பந்திலும் ஏதோ நடப்பது போல் உணர்ந்தேன். மறு அணியில் இருக்கும் பந்து வீச்சாளர்களை அவர்கள் வேறேதோ விளையாட்டை விளையாடுவது போல நினைக்க வைத்துவிடுகிறார் பும்ரா.

உலகின் சிறந்த வீரர்கள் கூட பும்ராவின் பந்துவீச்சில் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். சுழலும் அவரது கைகள், மணிக்கட்டின் ஓர் அசைவு, பும்ராவின் கையில் இருந்து பந்து வெளியேறுவதை பேட்ஸ்மேன் அறியும் முன்பே அது அவரை தாக்கிவிடுகிறது.

ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டம் எனக்கு ஏற்பட்டிருந்தால், அவர் அதிகபட்சம் இரண்டு பந்துகளில் என்னை அவுட் ஆக்கிவிடுவார். அவரால் ஒரே ஓவரில் பெளன்சர், யார்க்கர், ஸ்விங், மெதுவாக என பந்து வீச முடியும். பும்ரா பந்து வீசும்போது பந்தைப் பார்ப்பது என்பதே கடினமானது என்பதால், அவர் நேரடியாக இரண்டாவது விருப்பத்திற்குச் செல்வார் என நம்புகிறேன். என்னைப் போன்ற ஒரு கீழ்வரிசை பேட்ஸ்மேனுக்கு அவர் அபாயகரமானவர் என்றே சொல்வேன்.

ஜஸ்பிரித் பும்ரா, கிரிக்கெட் , இங்கிலாந்து , டெஸ்ட் தொடர், இந்தியா - இங்கிலாந்து

பட மூலாதாரம்,GEORGE WOOD/GETTY IMAGES

வித்தியாசமான செயல்களைக் செய்யும் பந்து வீச்சாளர்களை பேட்ஸ்மேன்கள் "புரிந்துக்கொள்வது கடினம்" என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கலாம். கடைசி விநாடி வரை பந்தை பேட்ஸ்மேனின் பார்வையில் இருந்து மறைக்கும் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகவும் கொடூரமானது.

பும்ராவைப் பொறுத்தவரை, பந்து அவரது தனித்துவமான லோட்-அப் பாயிண்டில் தொடங்குகிறது. ஒரு கடிகாரத்தையும், பும்ராவின் பந்துவீச்சையும் இணைத்து கற்பனை செய்து பாருங்கள். அவரது முழுமையாக நேராக்கப்பட்ட கை, இரண்டாவது எண்ணை சுட்டிக்காட்டுகிறது. பின்னர் அவரது கை, விரைவாக வளைந்து இறங்குகிறது, ஆனால் பந்து வீச வரும்போது, அவரது முழங்கை அதிகமாக நீட்டப்படுகிறது. இங்கிருந்துதான் அவர் தனது வேகத்தை ஓரளவு பெறுகிறார், பந்து அவரது முழங்கைக்குப் பின்னால் மறைந்துவிடும் அந்த சமயத்தில் பந்தை பேட்டரால் பார்க்க முடியாது.

பின்னர் பும்ரா தனது மணிக்கட்டை அசைத்து, எந்தவிதமாகவும் பந்து வீசத் தயாராக இருக்கிறார். இது ஒரு கவண் போன்றது. கடைசி மில்லி விநாடியில், பந்தானது பேட்ஸ்மேனின் பார்வைக்கு வரும்போது, மணிக்கு 90 மைல் வேகத்தில் பறந்துவருகிறது.

பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகவும், பும்ராவுக்கு ஒரு சாதகமாகவும் இருப்பது பந்து வீசும் அவரது ரிலீஸ் பாயிண்ட் தான். வேறு எந்த வேகப்பந்து வீச்சாளரை விடவும் பும்ரா, பேட்ஸ்மேனுக்கு அருகில் இருந்து பந்தை வீசுகிறார்.

ஜஸ்பிரித் பும்ரா, கிரிக்கெட் , இங்கிலாந்து , டெஸ்ட் தொடர், இந்தியா - இங்கிலாந்து

பட மூலாதாரம்,CLIVE MASON/GETTY IMAGES

ஒரு வேகப்பந்து வீச்சாளரை அருகிலிருந்து பார்ப்பதை கற்பனை செய்து பாருங்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் கை, முன் பாதத்திற்கு நேராக மேலே இருக்கும்போது பந்தை விடுவிப்பதை பார்த்திருக்கலாம். பும்ரா எப்படியோ தனது கையை, முன் பாதத்திலிருந்து சுமார் 40 செ.மீ முன்னால் கொண்டு வந்துவிடுகிறார். இதனால் அவருக்கும் பேட்டருக்கும் இடையிலான தூரம் குறைகிறது, இதனால் எதிர்வினையாற்றுவதற்கு பேட்டருக்கு கிடைக்கும் நேரம் குறைகிறது.

வேகமாக பந்து வீசும் ஒருவருக்கு பும்ரா பந்து வீசும் விதம் பொருந்தாது. பும்ரா எடுத்து வைக்கும் காலடிகள் சரளமானதாக இருக்காது, குறுகிய மற்றும் தடுமாறும் அடிகளாக இருக்கும். இதைப் பார்த்தால் அவரது பந்துவீசும் வேகம் புயலைப் போல் துரிதமானதாக இருக்கும் என்பதற்கான எந்தவித அறிகுறியும் இருக்காது.

ஒரு பேட்ஸ்மேன், பும்ராவின் பந்துவீச்சை எத்தனை மணி நேரம் பார்த்து, அவதானித்து, புரிந்துக் கொண்டிருந்தாலும், களத்தில் ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ளும்போது ஆச்சரியப்படுவார். பும்ராவின் பந்து எந்தவிதமானதாக இருக்கும் என்பதை யாரும் கணித்துவிடமுடியாது. கையின் பாதை மாறாது, விரலின் நிலை மாறாது. எந்தவிதமான பந்து என்பதை கணிக்கமுடியாமல், தான் எவ்வித பந்தை எதிர்கொள்ளப்போகிறோம் என்று தெரியாமலேயே பேட்ஸ்மேன் 'பேட்' ஆட தயாராக இருக்க வேண்டும்.

ஒரு பந்து வீச்சாளரை விவரிக்க "beyond the perpendicular" என்ற சொற்றொடர் பயன்படுத்துவதை கேட்டிருக்கலாம். பந்துவீச்சையும் ஒரு கடிகாரத்தையும் வைத்து ஒரு கற்பனை செய்து பார்ப்போம்.

"ஓவர்-தி-டாப் ஆக்‌ஷன்" ரக பந்துவீச்சாளர்கள், தங்களின் தலைக்கு மேல், சரியாக, கடிகாரத்தில் எண் 12 இருக்கும் இடத்திற்கு நேராக கைகளை வைத்து பந்து வீசினால் எப்படி இருக்குமோ அப்படி வீசுவார்கள்.

'ரவுண்ட்-ஆர்ம்' பந்து வீச்சாளர்கள் கடிகாரத்தில் எண் 1 அல்லது 2 இருக்கும் இடத்தில் இருந்து பந்து வீசுவது போல் இருக்கும்.

"beyond the perpendicular" என்ற நிலையில் பந்து வீசினால், அது கடிகாரத்தின் 11 ஆம் எண் இருப்பது போன்ற இடத்திலிருந்து வருகிறது. அதாவது கோணம் வலது கை பந்து வீச்சாளருக்கு வருவது போலவே இருக்கும். இதனால் பேட்ஸ்மேன் தேவையில்லாத பந்துகளில் விளையாட வேண்டியிருக்கும்.

இதற்கு ஒரு உதாரணம், ஜோ ரூட்டுக்கு எதிராக பும்ரா பெற்ற வெற்றியாகும், டெஸ்ட் கிரிக்கெட்டில், ஜோ ரூட்டை 10 முறை பும்ரா அவுட்டாக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் மட்டுமே ஜோ ரூட்டை அதிகமாக அவுட்டாக்கியுள்ளார்.

இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸைப் போலவே, ஜோ ரூட்டுக்கு ஆஃப் ஸ்டம்பிற்கு அப்பால் உள்ள பந்துகளாக பும்ரா போடுகிறார், பந்தை விளையாடத் தேர்வுசெய்தவுடன் கடைசி விநாடியில் அதை மாற்றி விடுகிறார், 2021 இல் அவர்களின் சண்டைகளைப் போலவே பந்துவீச்சும் தொடர்கிறது.

பும்ராவின் பந்துவீச்சில், தொழில்நுட்ப கூறுகளைத் தவிர, இவ்வளவு சீராக போட்டிகளைப் பாதிக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் கிரிக்கெட் வரலாற்றில் இருந்ததில்லை என்றே நான் நினைக்கிறேன்.

ஒரு கணினியைப் போலவே, எந்தவொரு சூழ்நிலையிலும் தேவையானதை தொடர்ந்து கணக்கிட்டு பும்ரா செய்கிறார், அத்துடன் அவர் செய்ய விரும்புவதை ஏறக்குறைய சரியாகவும் செயல்படுத்திவிடுகிறார்.

ஜஸ்பிரித் பும்ராவின் பல்துறைத்திறனுக்கு உதாரணமாக, சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்தது 500 பந்துகளை வீசிய முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில், பும்ராவின் 6.27 என்ற எகானமி ரன்ரேட் சிறந்தது.

அதே நேரத்தில், டெஸ்ட் வரலாற்றில் பும்ரா குறைந்தபட்சம் 200 விக்கெட்டுகளுடன் சிறந்த பந்துவீச்சு சராசரியையும் கொண்டுள்ளார். பும்ரா 19.33 உடன், 20.94 உடன் இரண்டாவது இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் மால்கம் மார்ஷலை விட மைல்கள் முன்னால் உள்ளார்.

வேறுவிதமாக சொல்வதென்றால், பும்ராவை விட குறைந்த சராசரியில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் அனைவரும் முதலாம் உலகப் போருக்கு முன்பு விளையாடியவர்கள் தான்.

ஜஸ்பிரித் பும்ரா, கிரிக்கெட் , இங்கிலாந்து , டெஸ்ட் தொடர், இந்தியா - இங்கிலாந்து

பட மூலாதாரம்,VISIONHAUS/GETTY IMAGES

டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் மேலும் விரிவடைந்து வரும் சூழலில், பந்து வீச்சாளர்களுக்கு மாறுபட்ட திறன்கள் தேவைப்படும் நிலை உருவாகிறது. பும்ரா இரண்டிலும் சிறந்தவர் என்பது அவருக்கு கூடுதல் பலம்.

விளையாட்டைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய பும்ரா, இந்தியாவின் டெஸ்ட் கேப்டனுக்கான விருப்பங்களில் முதல் தேர்வாக இருந்திருப்பார். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடுவதற்கு அவர் சிரமப்பட்டிருப்பார். அணிக்கு அது நியாயமாக இல்லை என்று உணர்ந்ததால், அந்தப் பணியைத் தொடர வேண்டாம் என்று அவரே முடிவு செய்தார்.

சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களின் சகாப்தத்தில் இருப்பது நமது அதிர்ஷ்டம். அண்மையில் சர்வதேச அளவில் ஓய்வு பெற்ற ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன், ககிசோ ரபாடா, கம்மின்ஸ், ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் உட்பட பலரை சொல்லலாம்.

இவர்கள் அனைவரிலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ரா உள்ளார் என்ற பாராட்டுக்கு ஜஸ்பிரித் பும்ரா தகுந்தவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg9rgywy5ko

  • கருத்துக்கள உறவுகள்

நூற்று நூறு / உண்மை

இவ‌ரால் தான் இந்தியா அணி ப‌ல‌ வெற்றிய‌ பெற்ற‌து.............................

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனுபவ பேட்டர்களை கூட குழப்பும் 'கவண்' உத்தி பும்ராவுக்கு வந்தது எப்படி?

அனுபவ பேட்டர்களை கூட குழப்பும் 'கவண்' உத்தி பும்ராவுக்கு வந்தது எப்படி?

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,பிரதீப் கிருஷ்ணா

  • பதவி,பிபிசி தமிழ்

  1. 6 டிசம்பர் 2025, 10:23 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

"அவர் ஓடும் விதம் மற்ற எல்லோரும் ஓடுவதை விடவும் வித்தியாசமானது. அவருடைய கடைசி கட்ட 'ஆக்‌ஷனும்' வித்தியாசமாக இருக்கும். நான் அவரது பந்துவீச்சை போதுமான அளவு எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் அதற்கு ஒத்துப்போக எனக்கு சில பந்துகள் அவகாசம் எடுக்கவே செய்கிறது"

ஆஸ்திரேலிய பேட்டரான ஸ்டீவ் ஸ்மித் கடந்த ஆண்டு சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில், ஜஸ்ப்ரித் பும்ராவையும் அவரது பந்துவீச்சு முறை பற்றியும் இப்படிச் சொல்லியிருந்தார்.

பும்ராவின் வேரியேஷன்கள், அதை சரியான நேரத்தில் பயன்படுத்தும் உத்தி, துல்லியம் மற்றும் சீரான செயல்பாடு அவரை நம்பர் 1 டெஸ்ட் பௌலராக்கியிருக்கிறது. இவற்றையெல்லாம் விட பும்ராவின் 'வித்தியாசமான பௌலிங் ஆக்‌ஷனே' பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் போன்ற முன்னணி பேட்டர்கள் பலரும் கூறியுள்ளனர்.

மெதுவாக ஓடிவந்து, முதுகை முன்னே அதிகமாகவும், பக்கவாட்டில் கொஞ்சமாகவும் வளைத்து, கைகளை முழுமையாக நீட்டி அவர் பந்துவீசும் முறை சற்றே தனித்துவமான ஒன்று. இது அதிகம் காயம் ஏற்படுத்தக்கூடிய முறை என்று ஆரம்பத்தில் பேசப்பட்டிருந்தாலும், வெகுவிரைவிலேயே பும்ராவின் ஆயுதமாக மாறிவிட்டது.

அந்த பந்துவீச்சு முறையை 'டீகோட்' செய்த பல முன்னணி வீரர்களும் வல்லுநர்களுமே, அதுவே அவருக்கு மிகப் பெரிய பலம் என்று கூறியிருக்கிறார்கள்.

விளம்பரம்

பும்ராவின் பிறந்த நாளான இன்று (டிசம்பர் 6), அந்த வித்தியாசமான பந்துவீச்சு முறை எப்படி அவரது பலமாக விளங்குகிறது என்று பார்ப்போம்.

குழப்பம் ஏற்படுத்தும் 'வேகம் இல்லாத சிறிய ரன் அப்'

வழக்கமாக பெரும்பாலான வேகப்பந்துவீச்சாளர்களின் ரன் அப் அதிக தூரம் கொண்டதாக இருக்கும். அவர்கள் ஓடிவரும் வேகத்திலிருந்து அவர்களுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்கிக் கொள்வார்கள். ஆனால், பும்ராவின் ரன் அப் குறுகிய தூரம் கொண்டது. அதேசமயம் மெதுவானதும் கூட. இது பேட்டர்களின் தயார் நிலையை சோதிப்பதோடு, அவர்களுக்கு எதிர்பாராத சவாலைக் கொடுப்பதாகச் சொல்கிறார்கள் இங்கிலாந்தின் இரு முன்னாள் கேப்டன்கள்.

இந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடரின்போது, ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பும்ராவின் பந்துவீச்சு பற்றி அலசியிருந்தார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஜஸ்ப்ரித் பும்ரா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பந்துவீசுவதற்கு முன்பான ரன் அப்பில், மற்ற வேகப்பந்துவீச்சாளர்களைப் போல் பும்ரா அதிக தூரமோ, அதிக வேகமாகவோ ஓடுவதில்லை

அப்போது பேசிய நாசர் ஹுசைன், "நீங்கள் (ஒரு பேட்டராக) எப்போது நகரப் போகிறீர்கள் என்று யோசிக்கும் போது பும்ராவின் 'ஸ்டட்டரிங் ரன் அப்' (நின்று நின்று ஓடுவது போன்ற ரன் அப்) சிக்கலை ஏற்படுத்தும். அவர் ஓடி வருவதைப் பார்த்தால், அந்தப் பந்து ஏதோ காலிங்வுட் வீசும் வேகத்தில் (சற்றே மிதமான வேகத்தில்) வரும் என்று எதிர்பார்த்திருப்பீர்கள். ஏன் சில சமயம் அவர் ஓடிவருவதைப் பாதியில் நிறுத்தப் போகிறாரா என்றுகூட நினைப்பீர்கள். ஆனால், அது அப்படியிருக்கப் போவதில்லை" என்று கூறினார்.

பெரும்பாலான பேட்டர்களுக்குமே 'டிரிகர் மூவ்மெண்ட்' என்பது இருக்கும். அதாவது, அவர்கள் பந்தை எதிர்கொள்வதற்கு முன்னதாக தங்கள் ஸ்டான்ஸில் இருந்து சிறிய அளவு நகர்வார்கள். பந்துவீச்சாளர் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வரும்போது, அவர்கள் இந்த நகர்வைத் தொடங்குவார்கள். பெரும்பாலான பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முறை வழக்கமான பாணியில் இருக்கும் என்பதால் அவர்களுக்குப் பிரச்னை இருக்காது. இந்த இடத்தில்தான், பும்ராவின் வித்தியாசமான ரன் அப், அவர்களைக் குழப்பிவிடும்.

அதனால்தான் ஸ்மித் போன்ற அனுபவ வீரருக்கே, ஒவ்வொரு முறையும் பும்ராவை எதிர்கொள்ளும்போது சில பந்துகள் அவகாசம் தேவைப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், அவர் மெதுவாக ஓடிவருவதைப் பார்த்துவிட்டு, பந்தை வேகமாக எதிர்கொள்வதும் பேட்டர்களுக்கு சவால் கொடுக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள்.

கடந்த ஆண்டு, டெய்லி மெயில் பத்திரிகையில் பும்ரா பற்றி எழுதியிருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான ஸ்டுவர்ட் பிராட், "பும்ரா மிகவும் அமைதியாக, மெதுவாக, 'shuffle' செய்து ஓடும்போது அங்கே ஆற்றல் அதிகம் உண்டாகப்படுவதில்லை. அதனால் அங்கு பில்ட் அப்பே இல்லை. அப்படியிருக்கும் போது திடீரென்று பந்து பெரும் வேகத்தில் உங்களை நோக்கி வரும்போது பெரும் குழப்பம் ஏற்படுத்தும். இதுவே மற்ற சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களைப் பாருங்கள், நல்ல வேகத்தில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கிரீஸை நோக்கி ஓடிவருவார்கள். அப்போது ஒரு பேட்டருக்கு என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று தெரியும். பும்ரா விஷயத்தில் அது நேரெதிராக இருக்கிறது" என்றார்.

இதன்மூலம் உளவியல் ரீதியாக ஒரு பேட்டரை பும்ராவின் ரன் அப் குழப்புகிறது என்கிறார் பிராட்.

பும்ராவின் டெலிவரி ஸ்டிரைட் (Delivery Stride - பந்தை வீசுவதற்கு முன்பான கடைசி அடி) சிறிதாக இருப்பதால் அவரால் சமநிலையைத் தக்கவைக்க முடிகிறது, கட்டுப்பாட்டோடு இருக்க முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜஸ்ப்ரித் பும்ரா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இன்று நம்பர் 1 டெஸ்ட் பௌலராகத் திகழ்கிறார் ஜஸ்ப்ரித் பும்ரா

ஆற்றலை உருவாக்கும் பௌலிங் ஆக்‌ஷன்

அதேசமயம், மெதுவாக ஓடிவரும் ஒருவரால் எப்படி பந்தை வேகமாக வீசமுடியும் என்ற கேள்வி எழுகிறது.

"பெரும்பாலான பௌலர்கள் 60% ஆற்றலை அவர்களின் வேகமான ரன் அப் மூலம் உருவாக்குகிறார்கள். ஆனால், பும்ரா தான் ஓடிவருவதன் மூலம் 30% ஆற்றலையும், தன் பௌலிங் ஆக்‌ஷன் மூலம் 70% ஆற்றலையும் உருவாக்குகிறார்" என்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேமியன் ஃபிளெமிங்.

சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியொன்றில் இப்படிக் கூறியிருந்த ஃபிளெமிங், பும்ரா தன் ரன் அப்-ன் கடைசி சில அடிகளில் வேகத்தை உருவாக்குகிறார் என்றும் குறிப்பிட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, பும்ராவின் பந்துவீச்சு முறை பற்றி 7 ஸ்போர்ட் நிகழ்ச்சியொன்றில் அலசியிருந்த ஃபிளெமிங், அந்த பந்துவீச்சு முறையால் அவர் உடல் கவண் போல் செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.

பும்ரா பந்தை வீசும்போது, அவருடைய முன்காலுடைய (இடது கால்) முழங்கால் வளையாமல் நேராக இருப்பதால், அது உடலின் கீழ்ப் பகுதியுடைய வேகத்தைக் குறைத்து, மேற்பகுதியின் வேகம் அதிகரிக்க உதவுகிறது என்று ஃபிளெமிங் கூறினார். "பும்ராவின் முன்கால் வேகத்தைக் குறைக்கும்போது, உடல் மற்றும் தோள்பட்டை இலக்கை (பேட்டர்) நோக்கி கவண் போல் செலுத்தப்படுகிறது" என்கிறார் அவர்.

ஜஸ்ப்ரித் பும்ரா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பும்ரா பந்தை வீசும்போது, அவருடைய முன்காலுடைய (இடது கால்) முழங்கால் வளையாமல் நேராக இருப்பதால், அது உடலின் கீழ்ப் பகுதியுடைய வேகத்தைக் குறைத்து, மேற்பகுதியின் வேகம் அதிகரிக்க உதவுகிறது என்கிறார் டேமியன் ஃபிளெமிங்.

பும்ரா பந்துவீசும்போது அவரது முழங்கை மடக்கப்படாமல் நீண்டிருக்கும். இந்த நிலையை ஹைப்பர்-எக்ஸ்டென்ஷன் (hyperextension) என்கிறார்கள். இந்த நிலையில் பும்ராவுடைய முழங்கையின் வேகம் குறையும்போது, முன்கையின் வேகம் அதிகரித்து, அது கவண் போல் செயல்பட்டு பந்தை முன்னே செலுத்தத் தொடங்குகிறது என்றார் ஃபிளெமிங்.

மூன்றாவது கட்டமாக அவருடைய மணிக்கட்டும் இதேபோன்ற வேலையைச் செய்வதாக அவர் குறிப்பிடுகிறார்.

ஜஸ்ப்ரித் பும்ரா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மிகையாக நீண்டிருக்கும் பும்ராவின் கையும், வளைந்துகொடுக்கும் அவரது மணிக்கட்டும் கவண் போல் செயல்பட்டு பந்தை இலக்கை நோக்கி செலுத்துகின்றன என்கிறார் டேமியன் ஃபிளெமிங்

"பும்ராவின் மணிக்கட்டு நம்பமுடியாத அளவுக்கு வளைந்துகொடுக்கிறது (flexible). இதை நீங்கள் சர்வதேச பௌலர்களிடம் அதிகம் பார்க்க முடியாது. இங்கே உள்ளங்கையின் வேகம் குறையத் தொடங்கும்போது, மணிக்கட்டின் வேகம் கூடி அது கவண் போல் பந்தைத் தள்ளுகிறது" என்று ஃபிளெமிங் கூறினார்.

இப்படி பும்ராவின் பந்துவீச்சு முறை அவரது உடலின் மூன்று பகுதிகளை கவண் போல் பயன்படுத்துவதால் அவருடைய பந்தில் வேகம் உருவாகிறது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் - பும்ரா பௌலிங் ஆக்‌ஷன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற பெரும்பாலான வேகப்பந்துவீச்சாளர்களின் கைகள் பந்துவீசும்போது மடங்கியே இருக்கும். பும்ரா இந்த இடத்தில் மாறுபடுகிறார்

விரைவாக கீழே இறங்கும் பந்து

பெரும்பாலான பௌலர்களைக் காட்டிலும் பும்ராவின் பந்து சீக்கிரமாக ஆடுகளத்தில் பிட்ச்சாகிவிடும். அதனால் பேட்டர்கள் அதைக் கணிப்பது மிகவும் கடினமாகிறது. இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியலை, 2019ம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் விவரித்திருந்தார் ஐஐடி கான்பூரின் விண்வெளி பொறியியல் பேராசிரியர் சஞ்சய் மிட்டல்.

வேகப்பந்துவீச்சாளர்கள் பந்தை ரிலீஸ் செய்யும்போது, அது பின்னோக்கி சுழன்றுகொண்டே (back spin) செல்கிறது. அப்போது மேக்னஸ் விளைவு (Magnus effect) காரணமாக பந்தில் மேல்நோக்கி விசை ஏற்படுத்தப்படுகிறது.

"பேக் ஸ்பின்னுடன் நகரும் கிரிக்கெட் பந்தில் இருக்கும் மேக்னஸ் விசை, பந்தை காற்றில் அதிக நேரம் மிதக்க வைக்கிறது. இது பேட்டர்கள் பந்தை அடிப்பதை எளிதாக்குகிறது" என்கிறார் சஞ்சய் மிட்டல்.

அதேசமயம், பும்ரா பந்தை அதீதமாக பின்னோக்கி சுழலச் செய்வதால், அவர் தலைகீழ் மேக்னஸ் விளைவை உருவாக்குகிறார் என்றும், அதனால் பந்து விரைவாக பிட்ச் ஆகி பேட்டர்களுக்கு சவால் கொடுக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

ஜஸ்ப்ரித் பும்ரா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சாட்டை சுழற்றப்படுவதுபோல் பும்ராவின் மணிக்கட்டு பந்தை ரிலீஸ் செய்வது, அந்தப் பந்து விரைந்து ஆடுகளத்தில் பிட்ச்சாகக் காரணமாகிறது என்கிறார்கள் வல்லுநர்கள்

"பும்ராவால், 1000 ஆர்பிஎம் சுழற்சி வேகம் மற்றும் மிகவும் நிலையான சீம் பொசிஷனுடன் சுமார் 145 கிமீ வேகத்தில் பந்து வீச முடியும். இது கிரிக்கெட் பந்திற்கு கிட்டத்தட்ட 0.1 சுழல் விகிதத்தை அளிக்கிறது. ஐஐடி கான்பூரின் தேசிய காற்று சுரங்கப்பாதை வசதியில் உள்ள சுழலும் கோளத்தில் (Rotating sphere at the National Wind Tunnel Facility) செய்யப்பட்ட சோதனைகள், இந்த சுழல் விகிதம் பந்தில் தலைகீழ் மேக்னஸ் விளைவை ஏற்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. பும்ராவின் அதீத வேகத்தில் நகரும் ஒரு கிரிக்கெட் பந்தில், கீழ்நோக்கிச் செல்லும் விசை செயல்படும்போது, பந்து கூர்மையாகக் கீழ்நோக்கிச் செல்கிறது. எனவே பேட்ஸ்மேன்கள் அவரது பந்துகளைக் கணிப்பதில் சிரமப்படுகிறார்கள்" என்று சஞ்சய் மிட்டல் எழுதியிருந்தார்.

சாட்டை சுழற்றப்படுவதுபோல் பும்ராவின் மணிக்கட்டு (கவண் போல் என்று ஃபிளெமிங் குறிப்பிட்டது) பந்தை ரிலீஸ் செய்வதுதான் அவரது பந்துகளில் பின்னோக்கிய சுழற்சியை அதிகப்படுத்துகிறது. இது வேகத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பின்னோக்கிய சுழற்சியையும் அதிகப்படுத்துகிறது. அதனால், பந்து விரைவாக பிட்ச் ஆகிறது.

ஆக, பும்ராவின் உடல் கவண் போல் செயல்படுவது, வேகத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பந்தை வேகமாக கீழே இறக்கி அவரது பந்துவீச்சை மேலும் தனித்துவமாக்குகிறது.

ஜஸ்ப்ரித் பும்ரா

பட மூலாதாரம்,Getty Images

குறையும் இடைவெளி, குறையும் நேரம்

பும்ராவின் இந்த பௌலிங் ஆக்‌ஷன் இன்னொரு விதத்திலும் பேட்டர்களுக்கு சவாலாக விளங்குகிறது.

பெரும்பாலான பௌலர்கள் பந்தை விடுவிக்கும்போது அவர்கள் கை பௌலிங் கிரீஸுக்கு நேர் கோட்டிலோ அல்லது சற்று முன்னரோ இருக்கும். ஆனால், பும்ராவின் வித்தியாசமான பந்துவீச்சு முறை மூலம், அவரது பந்துவீச்சு கையான வலதுகை வெகுதூரம் முன்தள்ளி இருக்கிறது.

மிகையாக நீட்டப்பட்ட பும்ராவின் கை (hyperextended arm) காரணமாக, அவர் பௌலிங் கிரீஸிலிருந்து வெகுதூரம் முன்தள்ளி பந்தை விடுவிக்கிறார். இதனால் பந்துக்கும் பேட்டருக்குமான இடைவெளி குறைவதோடு, பேட்டர் எதிர்பார்ப்பதை விட பந்து சீக்கிரமே வந்துவிடுகிறது. அதனால், அவர்கள் அதற்கு வினையாற்றுவதற்கான நேரம் குறைகிறது. அதனால் அவர் வீசும் வேகத்தை விட அதிக வேகத்தில் பந்துவீசுவதாக பேட்டர்கள் உணர்கிறார்கள்.

இதுபற்றிய ஆர்தர்டன் மற்றும் மார்க் வுட் இடையிலான உரையாடலில், ஒரு தருணத்தில் வுட்டை விட 47 செ.மீ முன்தள்ளி பந்தை பும்ரா ரிலீஸ் செய்ததாகக் குறிப்பிட்டார் ஆர்தர்டன். "அந்தப் பந்து நான் பேட்டை கீழே கொண்டுவருவதற்கு 47 நொடிகள் முன்பாகவே என்னை தாக்கும்" என்று நகைச்சுவையாகப் பதிவு செய்திருந்தார் வுட்.

ஜஸ்ப்ரித் பும்ரா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பௌலிங் கிரீஸிலிருந்து வெகுதூரம் முன்தள்ளியே பந்தை ரிலீஸ் செய்கிறார் ஜஸ்ப்ரித் பும்ரா

எந்த பேட்டரும் தங்கள் வாழ்நாள் முழுவதுமே கிரீஸிலிருந்து ரிலீஸ் ஆகும் பந்துக்கே ஆடிப்பழகியிருப்பார்கள். வெகு சில வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே சற்று முன்னர் வருவார்கள். பும்ராவை எதிர்கொள்ளும்போது அவர்கள் முற்றிலும் பழக்கப்படாத ஒரு சூழ்நிலையைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. அவர்களால் வேறொரு வேகத்தில் பந்தை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.

இப்படி பல தனித்துவங்கள் நிறைந்ததால் தான் பும்ராவின் பந்துவீச்சைக் கணிப்பது பலருக்கும் சவாலாக இருக்கிறது.

இதுபற்றிப் பேசிய நாசர் ஹுசைன், "பும்ராவுடைய ரன் அப், அவருடைய ஆக்‌ஷன், மிகையாக நீண்டிருக்கும் கைகள், பந்தை வீசும்போது அவர் இருக்கும் நிலை... இதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் பேட்டர்கள் குழப்பம் அடைவார்கள். அதனால் பும்ராவைப் பார்க்காமல், பந்தை மட்டும் பார்த்து ஆடுவதுதான் பாதுகாப்பானது" என்றும் அறிவுரை வழங்குகிறார்.

இந்த தனித்துவங்கள் போக இன்ஸ்விங், அவுட் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங், ஸ்லோயர் பால்கள் என பல வேரியேஷன்களை வைத்திருக்கும் பும்ரா, அதைத் துல்லியமாகவும் செயல்படுத்துகிறார்.

'இந்த பௌலிங் ஆக்‌ஷன் எப்படி வந்தது என்றே தெரியவில்லை'

இன்று பெரிய அளவு பேசப்படும் இந்த வித்தியாசமான பௌலிங் ஆக்‌ஷன் தனக்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை என்கிறார் பும்ரா.

இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் உடனான ஒரு உரையாடலில் இதுபற்றிப் பேசியிருந்த அவர், "எனக்கு இந்த பௌலிங் ஆக்‌ஷன் எப்படி வந்தது என்று சரியாகத் தெரியவில்லை. சிறு வயதில் எல்லாமே தொலைக்காட்சியைப் பார்த்து கற்றுக்கொண்டதுதான். பயிற்சியாளர்கள் என்று யாரும் இல்லை. அதனால் அப்போது நான் யாரையெல்லாம் பார்க்கிறேனோ, அவர்களைப் போல பந்துவீசிப் பார்ப்பேன். அவை அனைத்தும் சேர்ந்து இப்படியொரு ஆக்‌ஷன் வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்" எனக் கூறினார்.

இந்த முறையால் தன் உடல் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றும், அதனால் தான் அதைத் தொடர்ந்ததாகவும் பும்ரா கூறினார்.

"அப்போது(சிறு வயதில்) பவுண்டரி எல்லைகள் சிறிதாக இருக்கும். அதனால் என்னால் அதிகம் ஓடமுடியாது. அப்போதெல்லாம் நான் இன்றுபோல் நடக்கவில்லை. ஓடிக்கொண்டுதான் இருந்தேன். அதன்பிறகுதான் ஆற்றலை சேமிக்கலாமே என்று கொஞ்சம் நடை, கொஞ்சம் ஓட்டம் என்று மாற்றிக்கொண்டேன். அதனால் வேகம் குறையவில்லை எனும்போது அதையே பின்பற்றத் தொடங்கினேன்" என்றார் பும்ரா.

அப்படி ஆற்றலை சேமித்ததன் மூலம் பெரிய ஸ்பெல்கள் வீசும் ரஞ்சி போன்ற போட்டிகளில் மற்ற பௌலர்களை விட தான் சற்று புத்துணர்வாக இருந்ததாகவும் கூறினார். இந்த முறை அங்கு நன்றாகத் தனக்கு உதவியதால், அதையே சர்வதேச அரங்குக்கும் எடுத்துவர முடிவு செய்ததாகவும் கூறினார் பும்ரா.

அவர் கூறிய இன்னொரு முக்கியமான விஷயம், அந்த பந்துவீச்சு முறையை எந்த பயிற்சியாளரும் பெருமளவு மாற்றவில்லை என்பது.

இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் உடன் கடந்த ஆண்டு நான் கொண்டிருந்த உரையாடலில், அவரும் அதைத்தான் சொல்லியிருந்தார்.

"எந்தவொரு வீரரின் இயற்கையான இயல்பையும் நாம் விருப்பத்துக்கு மாற்றிவிடக்கூடாது. பயிற்சி கொடுப்பதன் முக்கிய சாராம்சம், அவர்களை மேம்படுத்துவதுதான். நாங்கள் பும்ராவிடம் இயற்கையாகவே திறமை இருப்பதை உணர்ந்தோம். அதை எப்படி சரியாகக் கையாள்வது, எப்படி காயங்கள் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்வது, அதற்கு என்ன மாதிரியான முன்னெடுப்புகள் எடுக்கவேண்டும் என்றுதான் திட்டமிட்டோம். பும்ராவின் பௌலிங் ஆக்‌ஷனை மாற்ற நினைத்ததே இல்லை" என்று பரத் அருண் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c075dy3grxyo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.