Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

சம்மந்தனின் மறைவும் தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலமும்

சம்மந்தனின் மறைவும் தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலமும்

– கருணாகரன் —

“சம்மந்தனின் மறைவுக்குப் பிறகு, தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம் எப்படி இருக்கும்?” – இந்தக் கேள்வி, சம்மந்தனின் மறைவுக்கு முன்னரே எழுப்பப்பட்டிருந்த ஒன்றுதான்.  ஆனாலும் அவர் மறைந்திருக்கும் இந்தச் சூழலிலும் இதற்குத் தெளிவான பதில் இல்லை என்பதே தமிழ்த்தேசியவாத அரசியலின் பரிதாபகரமான நிலையாகும். என்பதால் சம்மந்தன் இருந்தபோது ஏற்பட்டிருந்த குழப்பங்கள், இழுபறிகளையும் விட இனி வரும் நாட்களில் தமிழ்த்தேசிய அரசியற் பரப்பில் மேலும் பல குழப்பங்களும் பலத்த இழுபறிகளும் நிகழவுள்ளன.

பல்வேறு குறைபாடுகள், கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்த்தேசிய அரசியலில் அதாவது ஈழத் தமிழரின் அரசியல் அரங்கில், செல்வாக்கைச் செலுத்திக் கொண்டிருந்தவர் சம்மந்தன். அவரை மிஞ்சி நிற்கக் கூடிய வேறு ஆளுமைகள் இருக்கவில்லை. இப்போதுள்ள தமிழ் அரசியற் தலைவர்களில் சம்மந்தனுக்கே சர்வதேச மட்டத்திலும் இலங்கையின் பிற சமூகத்தினரிடத்திலும் கூடுதலான மதிப்பிருந்தது. சுருங்கச்சொன்னால் தமிழ்ப்பரப்பில் கிடைத்த மதிப்பை விட, அதற்கு வெளியேதான் சம்மந்தனுக்கு மதிப்புண்டு. 

தன்னுடைய அரசியற்செயற்பாட்டினாலும் அரசியற்திறனாலும் தலைமைத்துவப் பண்பாலும் இந்தச் செல்வாக்கை அல்லது இவ்வாறான தாக்கத்தை – சம்மந்தன் உருவாக்கவில்லை. அவருடைய அரசியல் நிலைப்பாடு மட்டுமே இந்த மதிப்பை  சம்மந்தனுக்குப் பெற்றுக் கொடுத்தது. 

சம்மந்தனுடைய அரசியல் நிலைப்பாடென்பது வழமையான தீவிரத் தமிழ்த்தேசியவாதத்திலிருந்து விலகியது; வேறுபட்டது. மென்போக்கையுடையது. பிற இன, மத, மொழியினரையும் ஏற்று இணங்கிச் செயற்பட விரும்புவது. முடியுமான அளவுக்குப் பல்லினத் தன்மையை உள்ளீர்த்துக் கொண்டது. சர்வதேச நிலைப்பாட்டை உள்ளடக்கியது. அரசுடன் – ஆட்சியாளருடன் தீவிர நிலையில் முரண்படுவதைத் தவிர்ப்பது. குறிப்பாகப் புலிகளுடைய அடையாளத்துக்கு வெளியே நிற்க முற்பட்டது. ஆக, தன்னுடைய நிலைப்பாட்டுக்கு அமைவாகப் புறச் சூழலை உருவாக்க ஓரளவுக்குச் சம்மந்தன் முற்பட்டிருந்தார் எனலாம்.

இதற்குச் சில உதாரணங்களைச் சொல்லலாம்.

1.      விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியாகவோ அதன் மறுவடிவமாகவோ  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அதனுடைய அரசியலும் இல்லை என்பதை நிறுவ முற்பட்டது. இதை அவர் வெளிப்படையாகவே பல தடவை சொல்லியுமிருக்கிறார். அப்படிச் செய்வதன் மூலமே சர்வதேச சமூகத்திடமும் சிங்களத்தரப்பிலும் முஸ்லிம்களிடத்திலும் தன்னுடைய அரசியலை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்று சம்மந்தன் கருதினார்.

2.      இதற்கு அமைவாகவும் ஆதரமாகவுமே யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் அன்றைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தேசியக் கொடியை ஏந்தினார். அதாவது புலிக் கொடியை நிராகரித்துச் சிங்கக் கொடியை ஏந்துகிறேன் என. 

3.      நல்லாட்சிக் காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் ஆளுங்கட்சிக்கு நெருக்கடிகளைக் கொடுக்காமல் நல்லெண்ணத்தை வளர்ப்பதாக இணக்க நிலையில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினார். 

4.      ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளதைப்போல எல்லாவற்றையும் கடுந்தொனியில் எதிர்க்கும் தீவிரத் தமிழ்த்தேசியத்துக்குப் பதிலாக மென்னிலையிலான தமிழ்த்தேசியத்தைப் பின்பற்றியது. 

இதனால்தான் அவர் ஐக்கிய இலங்கைக்குள் நியாயமான (சமஸ்டி) தீர்வு என்று துணிவோடு சொல்ல முடிந்தது. என்றபடியாலேயே சம்மந்தனை சிங்களத் தரப்பும் முஸ்லிம்களும் மதிப்புடன் அணுகின. 

இதற்குக் காரணம், 2009 க்குப் பிறகான சூழலைச் சம்மந்தன் ஓரளவுக்குப் புரிந்து கொண்டிருந்தார் எனலாம். அதாவது, புலிகளுக்குப் பிறகான அரசியல் என்பது, பிரிவினைக்குப் பதிலாக ஐக்கிய இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வைக் காண்பதாக அமைய வேண்டும். அது புரிந்துணர்வின் அடிப்படையில் குறைவில்லாத  சமநிலைக்குச் செல்வது, சமரசம் காண்பது என்பதாகும். எனவே இதில் தீவிரத்தன்மைக்கு இடமில்லை. ஆகவே, இணக்கத்துக்கும் உடன்பாட்டுக்கும் சமரசத்துக்கும் ஜனநாயக அடிப்படைகளுக்கும் உட்பட்டிருக்க வேண்டும். அதையே சர்வதேச சமூகமும் ஆதரிக்கும். இலங்கையிலும் சாத்தியப்படுத்தலாம் என்பதைச் சம்மந்தன் தன்னுடைய புரிதலாகவும் அரசியல் நிலைப்பாடாகவும் கொண்டிருந்தார்.  

அப்படி விளங்கிக் கொண்டதற்கமையவே அவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்த தீவிரநிலைப்பாட்டைக் கொண்ட கஜேந்திரகுமார், கஜேந்திரன், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா போன்றோரைத் தள்ளி வைத்தார். அடுத்ததாக சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் விலகிச் செல்வதற்கும் இடமளித்தார். பதிலாகத்  தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் நிற்கக் கூடிய தமிழரசுக் கட்சியை மட்டுமே பலப்படுத்த விளைந்தார். மறுவளமாகப் பார்த்தால் சம்மந்தனுடைய இத்தகைய நிலைப்பாடு விடுதலைப்புலிகளை ஆதரிப்போருக்கும் குறைந்த பட்சம் செயற்களத்தில் அரசியலை முன்னெடுத்துச் செல்ல முயற்சித்தோருக்கும் உடன்பாடாக இருக்கவில்லை. அதனால் அவர்கள் வெளியேறிச் சென்றனர்.

பதிலாகத் தன்னுடைய மென்போக்கிற்கு உடன்படக்கூடியவர்கள் எனக் கருதப்பட்ட சுமந்திரன், விக்கினேஸ்வரன், சி.வி.கே. சிவஞானம், சத்தியலிங்கம், ஆர்னோல்ட், குகதாசன்  போன்றோரை உள்ளீர்த்து, அவர்களை முன்னிலைப்படுத்தினார் சம்மந்தன். பின்னாளில் விக்கினேஸ்வரன் உள்ளிட்ட சிலர் இதற்கு மாறாக மாறிச் சம்மந்தனுக்கே நெருக்கடியைக் கொடுத்தனர். என்றாலும் இதையெல்லாம் கடந்தே சம்மந்தன் நின்றார்.

சம்மந்தனுடைய இந்த நிலைப்பாட்டைத் தமிழ்த்தேசியத்தின் இன்னொரு போக்கான தீவிர நிலைப்பாடுடையோர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கடுமையாகச் சாடினர், எதிர்த்தனர், விமர்சித்தனர். அவர்களுடைய குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் மறுத்துரைக்கக் கூடிய அளவுக்கு, மறுதலித்து நிற்கக் கூடியவாறு  சம்மந்தன் தன்னைப் பலப்படுத்தியிருக்க வேண்டும். அப்படி அவர் தன்னைப் பலப்படுத்தியிருக்க வேண்டுமானால், தன்னுடைய நிலைப்பாட்டுக்கு வலுச் சேர்த்திருக்க வேண்டும். அதற்காக வேலை செய்திருக்க வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி, அவற்றைச் செயற்படுத்தியிருக்க வேண்டும். அவற்றின் பயன்களை மக்கள் பெறக் கூடியதாக மாற்றியிருப்பது அவசியம். 

அதுவே அவருடைய தலைமைத்துவத்தின் சிறப்பாகவும் பொறுப்பு நிறைவேற்றுதலாகவும் இருந்திருக்கும். அதற்கான வாய்ப்புகளும் அவருக்குக் கிடைத்திருந்தன. 

2009 க்குப் பிறகான 15 ஆண்டுகளில் தமிழரின் அரசியலில் ஏக தலைவராகச் சம்மந்தனே இருந்திருக்கிறார். தமிழரசுக் கட்சியின் தலைவராக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக, தொடர்ச்சியாகப் 15 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பிராக, நல்லாட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக எனப் பல நிலைகளில் அவருக்கான தகுதிநிலைகளும் வாய்ப்புகளும் கிடைத்திருந்தன. இதைப் பயன்படுத்தி அவர் பல காரியங்களை – அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதானால் பல கருமங்களையும் ஆற்றியிருக்க வேண்டும். அப்படி நிகழ்ந்திருந்தால் அது  மக்களிடத்திலே அவர் மீதான நம்பிக்கையை உருவாக்கியிருக்கும். 

இவற்றைச் செய்வதற்குப் பதிலாக அவர் கொழும்பு மைய அரசியலை மட்டுமே மேற்கொண்டிருந்தார். அது கொழும்புத் தலைமைகள், சர்வதேசத் தரப்புகளிடம் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் தமிழ் மக்களிடத்திலே பெரிதாக எடுபடவில்லை. இதற்கும் சில காரணங்கள் உண்டு. 

1.      கட்சிக்குள்ளும் கூட்டமைப்பிற்குள்ளும் அவர் ஜனநாயகத்தை மறுதலித்தது. 

2.      விமர்சனங்களையும் அபிப்பிராயங்களையும் அவர் செவிமடுக்கத் தவறியது.

3.      மக்களின் நலன்கள், தேவைகளைக் குறித்துச் சிந்திப்பதில் பின்னின்றது. பதிலாக தன்னுடைய தனிப்பட்ட தேவைகள், நலன்களில் குறியாக இருந்தது. 

4.      காலமும் சூழலும் அளித்த தலைமைத்துவ, அரசியல் அதிகார வாய்ப்பைப் பயன்படுத்தி, தீர்வுக்கும் தமிழ் மக்களுடைய நலனுக்குமாகச் செயற்படும் நிலையைத் தீவிரமாக்காமல் விட்டது.

5.      மக்களுடனான நேரடி உறவாடலைத் தவிர்த்தது.

6.      அரசியல் கைதிகள் விவகாரத்தைப் பற்றிச் சம்மந்தப்பட்டவர்கள் பேச முற்பட்டபோது, சிறைச்சாலைச் சாவி தன்னுடைய கையிலா உள்ளது? என்று கேட்டதைப்போல, மீள்குடியேற்றம், நில ஆக்கிரமிப்பு, காணாமலாக்கப்பட்டோரின் விவகாரம் எனப் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்தோரின் நிலையறிந்து செயற்படத் தவறியது.

7.      போரினால் பாதிக்கப்பட்டோரிடத்திலே இறங்கிச் செய்திருக்க வேண்டிய பல்வேறு விதமான அவசியப்பணிகளை ஆற்றுவதற்குப் பின்னின்றது. இப்படிப் பலவுண்டு. 

இதனால் ஒரு கட்டத்தில் அவரைத் தலைவராக அங்கீகரித்த மக்களாலும் கட்சிகளாலும் அவர் கடுந்தொனியில் விமர்சிக்கப்படவும் கேலிக்குட்படுத்தப்படவும் கூடிய சூழல் உருவானது. இதைச் சமாளித்துக் கொள்வதற்காக அவர் இதோ தீர்வு வருகிறது என்று பல அறிவிப்புகளைச் செய்தார். ஆனாலும் அதெல்லாம் மேலும் மேலும் நெருக்கடிகளையே சம்மந்தனுக்குக் கொடுத்தன. இறுதியில் அவர் தலைமை வகித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தவிர்க்க முடியாமல் உடைந்து சிதறியது. இப்பொழுது அவருடைய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியும் உடையும் கட்டத்திற்கு வந்துள்ளது. உள்முரண்பாடுகள் வலுத்து, கட்சி நீதிமன்றத்தில் நிற்கிறது. 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சிதைவுக்கும் தமிழ்த்தேசிய அரசியலின் பின்னடைவுக்கும் பொறுப்பேற்க வேண்டிய வரலாற்றுச் சுமை சம்மந்தனுக்குண்டு. அதிலிருந்து அவர் தப்பவே முடியாது. இவ்வளவுக்கும் அவர் இனப்பரம்பல் பிரச்சினையை எதிர்கொண்டு நிற்கும் கிழக்கின் திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர். குறைந்த பட்சம் திருகோணமலையின் நிலைமையில் கூட இடையீடுகளைச் செய்திருக்க வேண்டும். அதைக் கூடச் செய்யவில்லை. பதிலாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கிழக்கில் வகித்திருக்க வேண்டிய மாகாணசபையின் ஆட்சிக்கான வாய்ப்பைக்கூட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து, விமர்சனத்தை வாங்கினார்.

இதேவேளை சம்மந்தன் அரசியலில்  செயற்படத் தொடங்கிய காலம் மிகக் கடினமான சூழலையுடையது என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். ஜனநாயக வழிப்போராட்ட அரசியல் செல்வாக்கிழந்து, ஆயுதப்போராட்ட அரசியலும் அதன்வழியான போரும் பலமடைந்திருந்த காலச் சூழல் அது. சம்மந்தன் அந்தத் தீவிரப் பாதையை – அந்த அரசியலை – ஏற்றுக் கொண்டவரல்ல. அதனால் அவருக்குப் பல நெருக்கடிகளும் ஆபத்துகளுமிருந்தன. அவருடைய கட்சியான தமிழரசுக் கட்சியும் அது அங்கம் வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் செயற்பட முடியாத நிலைக்குள்ளானது. அமிர்தலிங்கம், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம், யோகேஸ்வரன் என அவருடைய தலைவர்கள் பலிகொள்ளப்பட்டனர். 

இருந்தாலும் 70 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏறக்குறைய 30 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டிருக்கிறார் சம்மந்தன். தமிழரசுக் கட்சியின் தலைவராக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக எனப் பல பதவிகளை வகித்திருக்கிறார். தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியைத் தவிர, ஏனையவை காலச் சூழலினால் அவருக்குக் கிடைத்தவை அல்லது வாய்த்தவையாகும். அப்படிக் கிடைத்த வாய்ப்பைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எவராலும் மறுக்கமுடியாதது. 

இப்போதைக்கு அப்படியொரு வாய்ப்பு எவருக்கும் கிடைக்கப்போவதுமில்லை. என்பதால் சம்மந்தனின் மீதான கண்டனம் மேலும் அதிகரிக்குமே தவிரக் குறையாது. 

இப்பொழுது முதிய வயதில் (91) மரணத்துள்ள மூத்த அரசியற் தலைவர் என்ற மதிப்போடு அவருடைய விடைபெறுதல் நிகழ்ந்துள்ளது. மரணத்துக்குப் பிறகு சம்மந்தன் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மதிப்பை அவதானிக்கும்போது தமிழ்த்தேசிய அரசியலில் பின்பற்றப் பட்டுவரும் துரோகி – தியாகி என்ற அடையாளப்படுத்தலின் விசித்திரம் குறித்துச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. முன்னர் துரோகிகளாகச் சித்திரிக்கப்பட்டு, எதிர்நிலையில் நிறுத்தப்பட்டவர்கள் பின்னர் ஏற்பு நிலைக்கு உயர்த்தப்படும் விநோத நிகழ்வு நிகழ்வதுண்டு. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் மு. சிவசிதம்பரம், ஊடகவியலாளர் தராகி சிவராம் போல. அவ்வாறான ஒருவராகச்  சம்மந்தன் அவர்கள் இன்று பெருந்தலைவராகப் போற்றப்படுகிறார்.  ஊடகங்களும் தமிழ் அரசியற் கட்சிகளும் அப்படித்தான் விழிக்கின்றன. 

இதொரு பக்கமிருக்க, சம்மந்தன் மேற்கொண்டு வந்த மென்னிலைத் தமிழ்த்தேசியவாதத்தை அடுத்த கட்டத்துக்குத் தலைமை தாங்கி, முன்னெடுத்துச் செல்வது யார்? அந்த அரசியல் எப்படியாக இருக்கும்? 

இப்பொழுது அதற்கான அடையாளத்தை – முன்னெடுப்பைச் செய்து கொண்டிருப்பது சுமந்திரன், சாணக்கியன், சி.வி.கே. சிவஞானம், சத்தியலிங்கம் போன்றோரே. இவர்களுடைய அணுகுமுறையும் அதற்கான அங்கீகாரமும் எப்படி இருக்கப்போகின்றன என்பதை அடுத்து வரும் சில மாதங்களிலேயே காணக்கூடியதாக இருக்கும். அடுத்தடுத்து வரவுள்ள தேர்தல்களும் அதற்கு முன்னும் பின்னுமாகச் செயற்படுத்தப்பட வேண்டிய அரசியல் வேலைகளுமே அதைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் ஒன்று, நிச்சயமாக அது சம்மந்தன் மேற்கொண்ட கொழும்பு மைய அரசியலாக அது இருக்க முடியாது. கொழும்பைக் கையாளக் கூடிய தமிழ்பேசும் மக்களின் அரசியலாக அது விரிவடைய வேண்டும். 

மறுபக்கத்தில் தீவிரத் தமிழ்த்தேசியவாதத்துக்குத் தலைமை தாங்குவோரில் முதன்மையானவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெறுவதாக தகவல். ஏற்கனவே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, மணிவண்ணன் உள்ளிட்ட அதனுடைய இளநிலைத் தலைவர்களை இழந்துநிற்கிறது. எனவே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை உச்சவிசையில் இயக்கக் கூடிய தலைமைத்துவம் அதற்குள் இல்லாத நிலையே காணப்படுகிறது. கஜேந்திரன் தன்னுடைய நோக்கு நிலையில் களம் நோக்கிச் செல்லக் கூடியவராக இருந்தாலும் தலைமைத்துவத்துக்குரிய தகுதி நிலையைக் கொண்டவரல்ல. 

இந்த இரு நிலையிலும் தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம் எப்படி அமையும்? அதற்கு அடுத்ததாக எந்தத் தரப்பு உள்ளது? என்ற கேள்வி எழுகிறது. 

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அந்த வெற்றிடத்தை நிரப்புமா? அதற்கான திறனும் பலமும் அதனிடத்தில் உண்டா? எனில், அது புதிய தளமொன்றை நிர்மாணிக்கக் கூடிய அடையாளத்தை இதுவரையில் பிரதிபலிக்கவில்லை. கூட்டமைப்பிலிருந்து விலகிய பிறகு அல்லது ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளத்துக்குள் அது நுளைந்த பிறகு, தன்னைத் தனித்துவமாக வெளிப்படுத்தக் கூடிய எந்த நடவடிக்கைகளையும் அது மேற்கொள்ளவில்லை. இப்பொழுது தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற விடயத்தில் அது தன்னைக் குவித்துள்ளது. இத்தகைய போக்கு அதனுடைய அரசியல் எதிர்காலத்தையும் அது தமிழரின் அரசியலில் உருவாக்க முயற்சிக்கும் விளைவுகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது. ஆம், சிலவேளை சம்மந்தனே பரவாயில்லை என்ற நிலையத்தான் வரலாறு உருவாக்கப்போகிறதோ என்னவோ!

 

https://arangamnews.com/?p=10959

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.