Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டுவார்கள் - நிலாந்தன்

 

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தின் சுவர்களில் ஓர் அனாமதேயச் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதில் “தேசமே பயப்படாதே” என்று வெள்ளை பேப்பரில் சிவப்பு மையால் எழுதப்பட்டிருந்தது. யார் ? யாருக்குப் பயப்படக்கூடாது? என்று யார் கூறுகிறார்கள்?

இந்த சுவரொட்டி ஒட்டப்படுவதற்கு முன்பு, ஜேவிபி ஒரு பெரிய பலவண்ணச் சுவரொட்டியை ஒட்டியது. அதில் “எங்கள் தோழர் அனுர” என்று எழுதப்பட்டிருந்தது. அனுரவின் பெரிய முகம் அதில் பதிக்கப்பட்டிருந்தது. அதற்கும் சில நாட்களுக்கு முன்பு ”நாங்கள் தயார்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு சுவரொட்டி. அதுவும் பலவண்ணச் சுவரொட்டி. அதில் தென்னிலங்கையில் தன்னெழுச்சிப் போராட்டங்களில் ஈடுபட்ட தலைவர்கள் மூவருடைய படங்கள் காணப்பட்டன. அதற்குக் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு சுவரொட்டியில் நற்செய்தி வருகிறது என்ற பொருள்பட எழுதப்பட்டிருந்தது. அது ஒட்டப்பட்ட அடுத்த அடுத்த நாள் ரணில் செய்வார் என்று இன்னொரு சுவரொட்டி வந்தது. பன்னாட்டு நாணய நிதியத்தின் அடுத்த கட்ட கடன் உதவிக்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றிருந்த ஒரு பின்னணியில் ஜனாதிபதி நாட்டுக்கு உரை நிகழ்த்தவிருந்தார். அதை முன்னிட்டு அந்தச் சுவரொட்டிகள் வெளிவந்தன. இக்கட்டுரை எழுதப்படுகையில் ஒரு சுவரொட்டி சில நாட்களுக்கு முன் ஓட்டப்பட்டது. அதில் “ரணிலை விரட்டுவோம்” என்று கறுப்பு வெள்ளையில் எழுதப்பட்டுள்ளது.

நிச்சயமாக மேற்கண்ட சுவரொட்டிகள் யாவும் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி ஒட்டப்பட்டவை. இவ்வாறு யாழ்ப்பாணத்தின் சுவர்களில் வண்ணவண்ணச் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கும் தென்னிலங்கை மையக் கட்சிகள், யாழ்ப்பாணத்து மக்களின் மனங்களில் என்ன ஒட்டப்பட்டு இருக்கிறது என்பதனை அறிந்திருக்கிறார்களா? தென்னிலங்கைக் கட்சிகள் மட்டுமல்ல, அந்தக் கட்சிகளுக்கு தமிழ்மக்களின் வாக்குகளை மடைமாற்ற முயற்சிக்கும் தமிழ் முகவர்கள், தமது சொந்த மக்களின் மனங்களில் எந்தக் கனவு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதனை அறிந்திருக்கிறார்களா?

தமிழ்மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நிர்ணயகரமான தருணங்களில் கொள்கைகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.கொலனித்துவ ஆட்சிக்காலத்தில், இலங்கை பிரஜைகளுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட பின் நடந்த முதலாவது பொதுத் தேர்தலில், 1931ஆம் ஆண்டு தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணித்தார்கள். அப்பொழுது இருந்த யாழ்ப்பாண வாலிபக் காங்கிரஸ் மகாத்மா காந்தியின் செல்வாக்குக்கு உட்பட்டு தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுத்த கோரிக்கையை தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அங்கிருந்து தொடங்கி தமிழ்மக்கள் நிர்ணயகரமான தேர்தல்களில் நிர்ணயகரமாக முடிவெடுத்து வாக்களித்திருக்கிறார்கள்.

மிகப்பலமான உயர்குழாத்தைச் சேர்ந்த சேர்.பொன் ராமநாதன்,பொன்னம்பலம் குடும்பத்தின் வாரிசு ஆகிய மகாதேவாவை ஜி.ஜி.பொன்னம்பலம் 1947ஆம் ஆண்டு “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று கூறித்தோற்கடித்தார். அதே பொன்னம்பலத்தை பின்னர் கொள்கையின் பெயரால் செல்வநாயகம் தோற்கடித்தார். பின்னர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் போதும் தமிழ்மக்கள் கொள்கைக்கு வாக்களித்தார்கள். அதன்பின் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைத் தீவில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ்மக்கள் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்ட ஈரோசுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள்.  இலங்கைத்  தீவின் தேர்தல் வரலாற்றில் ஒரு சுயேச்சை குழு 13 ஆசனங்களை வென்றது அதுதான் முதல்தடவை. அந்த வெற்றி தமிழ்மக்களின் போராட்டத்தின் விளைவு. தமிழ்மக்கள் கொள்கைக்கு வாக்களித்தார்கள்.

அதன் பின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டு உருவாக்கப்பட்ட பின் நடந்த முதலாவது தேர்தலில், தமிழ்மக்கள் திரண்டு வாக்களித்திருக்கிறார்கள். அதாவது போராட்டத்தின் விளைவாக தோன்றிய கூட்டமைப்புக்கு கொள்கை அடிப்படையில் வாக்களித்தார்கள். 22ஆசனங்களை அள்ளிக்கொடுத்தார்கள். ஏன் அதிகம் போவான்?கடந்த 15 ஆண்டுகளிலும் ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ்மக்கள் எப்படி வாக்களித்தார்கள்? தங்களைத் தோற்கடித்த குடும்பத்துக்கு எதிராக பெருமளவுக்கு ஒன்றுபட்டு வாக்களித்தார்கள்.

எனவே தமிழ்மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டு முழுவதிலும் ஆகக்கூடியபட்சம் ஒரு பெருந்திரளாகத் திரண்டு ஒன்றுபட்டு வாக்களித்த பல தருணங்கள் உண்டு. ஒரு பொது நிலைப்பாட்டை எடுத்து வாக்களித்த தருணங்கள் பல உண்டு. ஆனால்,கடந்த 15 ஆண்டுகளிலும் அவர்கள் ஜனாதிபதி தேர்தல் அல்லாத ஏனைய தேர்தல்களில் வாக்காளர்களாக சிதறடிக்கக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அதனால் அவர்களை மீண்டும் ஒரு பெரிய மக்கள் திரளாகக் கூட்டிக்கட்ட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்மக்கள் திரண்டுவந்து வாக்களிக்க மாட்டார்கள் என்று புள்ளி விபரங்களைக் காட்டிப் புலம்புவர்களும் பயமுறுத்துவோர்களும் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும். கட்சி அரசியல் என்பது ஆகக்கூடிய பட்சம் வாக்குகளைத் திரட்டுவதுதான். அதிலும் குறிப்பாக தேசியவாத கட்சி அரசியல் என்றால், மக்களை ஆகப்பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. அதைச் செய்யாத அல்லது செய்ய முடியாத அரசியல்வாதிகள் பொது வேட்பாளருக்கு வாக்குகள் கிடைக்காது என்று பயமுறுத்தப் பார்க்கிறார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலுக்கு மட்டுமல்ல கட்சி அரசியலுக்கே லாயக்கில்லாதவர்கள். தமிழ்மக்களை வாக்காளர்களாகச் சிதறடித்ததில் அவர்களுக்கும் பொறுப்புண்டு.

எனவே தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற நிலைப்பாடு தமிழ்மக்ககளை ஒன்றாக்குவது. தமிழ்ப் பலத்தை ஒன்று திரட்டுவது. தமிழ் அரசியல் சக்தியை ஒரு மையத்தில் குவித்து ஆகக்கூடியபட்சம் ஆக்க சக்தியாக மாற்றுவது.

இந்த அடிப்படையில்தான் கடந்த திங்கட்கிழமை 22ஆம் தேதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்டது. ஏழு தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும், மக்கள் அமைப்பாகிய “தமிழ்மக்கள் பொதுச்சபை”க்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை அது. அந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு இரண்டு முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவது முக்கியத்துவம், கட்சிகளும் மக்கள் அமைப்பொன்றும் அவ்வாறு ஓர் உடன்படிக்கையை எழுதிக்கொள்வது நவீன தமிழ் வரலாற்றில் அதுதான் முதல் தடவை.

2024-07-22-Tamil-candidate-2-1024x576.jp

தமிழ்மக்கள் பொதுச் சபையெனப்படுவது தமிழர் தாயகத்தில் உள்ள குடி மக்கள் சமூகங்கள்; செயற்பாட்டு அமைப்புக்கள்; மக்கள் அமைப்புக்கள் என்பவற்றின் கூட்டிணைவாக உருவாக்கப்பட்ட, ஒப்பீட்டளவில் பெரிய ஒரு மக்கள் கட்டமைப்பாகும். அந்த மக்கள் அமைப்பு, ஏழு தமிழ்த்தேசியக் கட்சிகளோடு எழுதிக்கொண்டு ஒர் உடன்படிக்கை அது.

அந்த நிகழ்வில் உரையாற்றிய விக்னேஸ்வரன் கூறினார், வாக்களித்த மக்களும் அந்த வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்களும் எழுதிய உடன்படிக்கை அதுவென்று. உண்மையில் இரண்டும் இரு வேறு தரப்புகள் அல்ல. இரண்டுமே, ஒன்று மற்றதை இட்டு நிரப்பிகள்தான். ஆனால் அவ்வாறான இட்டு நிரப்பிகள் தங்களுக்கு இடையில் ஓர் உடன்படிக்கை எழுதவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது?  ஏனென்றால் கட்டமைப்பு ரீதியாக இயங்குவது என்று முடிவெடுத்து எழுதப்பட்ட ஒர் உடன்படிக்கை அது. ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தோடு எழுதப்பட்ட உடன்படிக்கை அது.

இரண்டாவது முக்கியத்துவம், தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற விடயம் கட்டமைப்பு ரீதியாக முன்நகரத் தொடங்கியுள்ளது என்று பொருள். கடந்த 15 ஆண்டுகளாக ஒரு கருத்துருவாக்கமாக, சில கட்சிகளின் நடவடிக்கையாக, கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ்மக்கள் பேரவையின் சுயாதீனக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு, இடையில் கைவிடப்பட்ட ஓர் அரசியல் நகர்வாகக் காணப்பட்ட ஒன்று, இப்பொழுது கட்டமைப்பு சார்ந்து அடுத்த கட்டத்திற்கு நகரத் தொடங்கியிருக்கின்றது. இது மிக முக்கியமானது.

தமிழ்மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ்ப் பொது வாழ்வில் கட்டமைப்பு சார்ந்து சிந்திக்கும் பாரம்பரியம் பலவீனமாக உள்ளது. கட்சிகளுக்குள் உரிய பொருத்தமான கட்டமைப்புகள் இல்லாத பின்னணிக்குள்தான் தனிநபர் ஓட்டங்களும் தனிநபர் சுழிப்புக்களும் இடம்பெறுகின்றன. இருக்கின்ற கட்டமைப்புகள் பலவீனமாக இருப்பதினால்தான் நீதிமன்றம் ஏற வேண்டியிருக்கிறது. கட்டமைப்புக்கு பொறுப்புக்கூறும் ஒரு நிலைமையை ஏற்படுத்தினால் முடிவுகள் கூட்டாக எடுக்கப்படும். அதில் ஒரு கூட்டுப் பொறுப்பும் இருக்கும்.

தமிழ் அரசியல் பரப்பில் விடயங்களை கட்டமைப்புக்கூடாக விளங்கிக் கொள்ளும் தன்மையும் குறைவு. அதனால்தான் யார் ஜனாதிபதி வேட்பாளர் ?அவருடைய தேர்தல் விஞ்ஞாபனம் எது? யாரையாவது மனதில் வைத்துக் கொண்டு ஒரு வேட்பாளரைத்  தேடுகிறோம் என்று பொய் சொல்லப்படுகிறதா? போன்ற கேள்விகள் அடிக்கடி வருகின்றன. அதற்கு ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படும்; அந்தக் கட்டமைப்பு கூட்டாக முடிவு எடுக்கும்; அந்த முடிவுகளின் அடிப்படையில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் ;அவருக்குரிய தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஒரு கட்டமைப்பு எழுதும்… என்றெல்லாம் கூறப்பட்ட போதிலும், இதுபோன்ற கேள்விகள் திரும்பத் திரும்ப கேட்கப்படுகின்றன.

இப்பொழுது ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அது கட்சிகளுக்கும் மக்கள் அமைப்புக்கும் இடையிலானது. இரண்டு தரப்பையும் சேர்ந்த ஏழு, ஏழு பேர் அதில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். மொத்தம் 14 பேர். இந்த 14 பேர்களும் உபகுழுக்களை உருவாக்குவார்கள். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்க ஒரு உபகுழு, தேர்தல் விஞ்ஞாபனத்தை எழுத ஒரு உபகுழு, நிதியை முகாமை செய்ய ஒரு உபகுழு… என்று உபகுழுக்கள் உருவாக்கப்படும் என்று அப்பொதுக் கட்டமைப்பு கூறுகின்றது.

நவீன தமிழ் அரசியலில் இது ஒரு புதிய நகர்வு. ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் தமிழ்த்தேசிய அரசியல் போக்கை கூட்டாக தீர்மானிப்பது என்பது. இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கைக்குள் ஏழு கட்சிகள் உண்டு. எதிர்காலத்தில் இணையக்கூடிய கட்சிகளுக்காக அந்த உடன்படிக்கை திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று அந்த நிகழ்வில் கூறப்பட்டது.

அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியமானவற்றில் இருந்துதான் சாத்தியமற்றவற்றை அதாவது அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்யலாம். சாத்தியமானவற்றிலிருந்துதான் அதைத் தொடங்கலாம். வானத்தில் எவ்வளவு உயரக் கோபுரத்தைக் கட்டுவதாக இருந்தாலும் நிலத்தில் கிடைக்கும் நிலப்பரப்பில்தான் அத்திவாரத்தைப் போடவேண்டும். அப்படித்தான் இந்த உடன்படிக்கையும்.சாத்தியமான வற்றுக்கிடையிலான ஒரு உடன்படிக்கை. எதிர்காலத்தில் இது  விரிந்தகன்ற தளத்தில்,பரந்தகன்ற பொருளில் ஒரு தேசத் திரட்சியாகக் கட்டி எழுப்பப்படும் என்று இரண்டு தரப்பும் எதிர்பார்க்கின்றன.

கடந்த 15 ஆண்டுகால தமிழரசியல் எனப்படுவது எதிர்த் தரப்புக்கு அல்லது வெளித் தரப்புக்கு பதில்வினை ஆற்றும் “ரியாக்டிவ் பொலிடிக்ஸ்”ஆகத்தான் இருந்து வந்துள்ளது. ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது, அதை “ப்ரோஆக்டிவாக” மாற்றும். அதாவது செயல்முனைப்புள்ளதாக மாற்றும். தமிழ்த்தரப்பு இப்பொழுது ஒரு புதிய நகர்வை முன்னெடுக்கின்றது. இதற்கு இனி வெளித்தரப்புகளும் தென்னிலங்கைத் தரப்புக்களும் பதில்வினையாற்ற வேண்டிவரும். அதாவது வெளித் தரப்புகள் தமிழ்த்தரப்பை நோக்கி வரவேண்டியிருக்கும்.இவ்வாறு தமிழரசியலை “ப்ரோ ஆக்டிவாக”-செயல்முனைப்புள்ளதாக மாற்றும்பொழுது, தமிழ்மக்கள் தங்களுடைய சுவர்களில் வண்ணச் சுவரொட்டிகளை ஒட்டும் கட்சிகளுக்கு தாங்கள் யார் என்பதைக் காட்டுவார்கள்.
 

https://www.nillanthan.com/6841/

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ்மக்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டுவார்கள்"

தமிழர்கள் வழமைபோல் பிரிந்து நீயா நான என அடிபட்டு தங்களாது "ஒற்றுமையை" நிருபிப்பார்கள்.

இப்பொழுதெல்லாஅம் சியத்த சிங்கள டீ வியில் செய்தியின் ஒரு பகுதியான  "டெலிவிசன் டெலிவெகிய" என்னும் நிகழ்சியே விரும்பிப் பார்க்கின்றேன். இதில் அரச ஊழல்களை அப்பட்டமாக அம்பலபடுத்துவார்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.