Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

'துயிலும் இல்லப்பாடல்' என பொதுவாக அழைக்கப்படும் 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' பாடல் ஈழப்போராட்ட காலத்தே எழுந்த பாடல்களுள் நின்று நிலைக்கும் ஒரு பாடலாகும். 

எப்பாடலை தவிர்த்துப் போனாலும் இப்பாடலை தவிர்க்கமுடியாத அளவிற்கு இது முக்கியத்துவம் பெற்றுவிட்டது. காரணம் ஆண்டுதோறும் நினைவுகொள்ளப்படும் மாவீரர் நாள் அப்பாடலை ஒலிக்கச் செய்கிறது அல்லது நினைக்க வைக்கிறது. 

ஈழப்போராட்ட காலத்தில் எழுந்த பாடல்களில் துயிலுமில்லப் பாடல் கொண்டுள்ள சில முக்கியத்துவ நோக்குகளை இவ்விடத்தே நோக்கலாம். 

துயிலும் இல்லப்பாடல் இரண்டு சந்தர்ப்பங்களில் முக்கியமாக ஒலிக்க விடப்பட்டது, ஒலிக்கவிடப்படுகிறது. 

  1. ஒன்று போர்க்காலத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் ஒருவரின் வித்துடலினை புதைகுழியில் இடுவதற்கு முன்பாக வித்துடற் பீடத்திலே இடம்பெறும் உறுதியுரையினைத் தொடர்ந்து, துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் மூன்று ஒலித்த பின்னே இப்பாடல் ஒலிக்கும். அத்துடன் உடல் கிடைக்கப்பெறாத மாவீரர்களுக்கான நினைவுக்கல் திரைநீக்கத்தின் போதும் துயிலுமில்லத்தில் இப்பாடல் ஒலிக்கும். மலரிடுதல், மண் போடுதல் என்பனவற்றிற்கு வேறு பாடல்களை புலிகள் கொண்டிருந்தனர். 
  2. இரண்டாவது  மாவீரர் நாளின்போது சுடர்கள் ஏற்றப்பட்ட பின்னர் இப்பாடல் ஒலிக்கவிடப்படும். இவையிரண்டுமே பிரதானமானவை. 

●துயிலும் இல்லப்பாடல் மாற்றத்துக்குள்ளாகி மீளவும் ஒலிப்பதிவாக்கப்பட்டது ஏன்? 

தமிழீழ விடுதலைப் புலிகளினால் அறிமுகம் செய்யப்பட்ட  பாவனையிலுள்ள துயிலும் இல்லப் பாடலானது தொகையறா, பல்லவி, அனுபல்லவி,  இரு சரணங்களைக் கொண்டது. 'மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை' எனத்தொடங்கும் தொகையறாவும், 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' எனத்தொடங்கும் பல்லவியும் உண்டு. 'எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்'  என்பது அனுபல்லவி.

முதலாவது சரணம் ஆரம்பத்தில் இப்படி அமைந்திருந்தது. 
நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமுமை வணங்குகின்றோம். உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்.
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது. 
(எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்) 

இப்படி அமையப்பெற்றதே சரணம். காரணம் 1989 முதலாக ஆரம்பத்தில் குறிப்பிட்டளவு ஆண்டுகள் மாவீரர் நாளானது நவம்பர் 27ஆம் திகதி நள்ளிரவு வேளையில்தான் அனுட்டிக்கப்பட்டது. பின்னைய நாட்களில் மாலைப்பொழுதில் இடம்பெற்ற அத்தனை அம்சங்களும் முன்பு நள்ளிரவில்தான் நடந்தேறின. நள்ளிரவிலேயே அன்றைய நாட்களில் மக்கள் துயிலும் இல்லத்தில் சேர்ந்தனர். மக்கள் விழித்திருந்தே சுடர் ஏற்றினர். புலிகளின் தலைமையின் உரையும் நள்ளிரவில்தான் ஒலிபரப்பானது. காரணம் முதல் மாவீரன் சங்கர் அவர்கள் 1982இல் நள்ளிரா வேளையில் மரணித்ததான ஒருபதிவே தென்பட்டமை ஆகும். ஆயினும் மிகச்சிறந்த ஆவணவாதியும், புலிகளின் கல்விக்கழகக் பொறுப்பாளருமான வெ.இளங்குமரன் என்கிற பேபி அவர்கள் 1982இன் ஓர் ஆவணத்தை கண்டெடுத்துவிட்டார். அது புலிகளின் தலைமையின் பதிவு. மாவீரர் சங்கர் அவர்களுக்கானது. அதில் மாலை 06.05மணி என்பதே முதல் மாவீரரின் மரணிப்பு என்பதே பதிவாக காணப்பட்டது. உடனடியாகவே புலிகள் மாவீரர் நாளின் நேரத்தை மாற்றினர். நள்ளிரா தீபமேற்றல் மாலை 06.05 மணியானது. 1995இன் பின்னரே இம்மாற்றம் இடம்பெற்றதாக அறியமுடிகிறது.

இது மட்டுமா? துயிலும் இல்லப் பாடலில் நள்ளிரா வேளை விளக்கேற்றுவதான வரிகள் உள்ளதே. அந்த நாட்களில் புலிகளால் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாவீரர் படங்களில் துயிலும் இல்லப்பாடலும் இடம்பெற்றிருக்கும். உடனடியாகவே பாடலின் சரணத்தினையும் புலிகள் மாற்றத்திற்குள்ளாக்கினர். கவிஞர் புதுவை இரத்தினதுரையே இப்பாடலை எழுதியவர்.

மேலே சொல்லிய முதற்சரணத்தில் உள்ள 'நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகிறோம்' எனும் வரியானது கீழ்வருமாறு மாறுதலானது. 

வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் 
வந்துமே வணங்குகின்றோம். 

என்பதே அவ்வரி. இதுவே இப்போது பாவனையில் உள்ளது. ஏனைய வரிகள் மாற்றம் பெறவில்லை. 
இவ்விடத்தே துயிலும் இல்லப் பாடலில் உள்ள இன்னுமொரு விடயத்தைச் சொல்ல வேண்டும். 
துயிலும் இல்லப் பாடலில் எந்த இடத்திலும் புலிகளின் தலைவரின் பெயர் இடம்பெறவில்லை. 'தலைவன்' என பொதுமைப்பட ஈரிடங்களில் வந்துள்ளதே தவிர அவரது பெயர் பாடலில் இடம்பெறவில்லை. 

உலகில் உருவாகிய தமிழ்ப்பாடல்களில் உலகெலாம் ஒரே திகதியில் ஒரே நேரத்தில் ஆண்டில்  ஒரே ஒரு தடவை ஒலிக்கும் பாடல் எனும் பதிவும் புலிகளின் துயிலும் இல்லப்பாடலுக்கு உண்டு. 

இப்பாடலினை கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுத, இசைவாணர் கண்ணன் அவர்களின் இசையில் மாவீரர் சிட்டு, மணிமொழி, அபிராமி, வர்ணராமேஷ்வரன் ஆகியோர் பாடியிருந்தனர்.

--> புரட்சி

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • Thanks 3
  • நன்னிச் சோழன் changed the title to நள்ளிரவு வேளையில் துயிலுமில்லத்தில் கூடிய பல்லாயிரம் மக்கள், துயிலுமில்லப்பாடல் மாற்றப்பட்டது ஏன்?
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைப்பை பார்த்து விட்டு கொஞ்சம் குழம்பி விட்டேன்..காரணம் அண்மைய காலத்தில் புதுசு, புதுசா பாட்டுகள் வருகிறது தானே.... அவர்களில் யாரோ கொப்பி அடித்து விட்டார்கள் என்ற நினைப்பு..🤭

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, யாயினி said:

தலைப்பை பார்த்து விட்டு கொஞ்சம் குழம்பி விட்டேன்..காரணம் அண்மைய காலத்தில் புதுசு, புதுசா பாட்டுகள் வருகிறது தானே.... அவர்களில் யாரோ கொப்பி அடித்து விட்டார்கள் என்ற நினைப்பு..🤭

நானும் தான் கொஞ்சம் குழம்பிவிட்டேன்.

  • Haha 2


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.