Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"கல்லூரிக் காதல்"

யாழ்ப்பாணம், இலங்கை மிக நீண்ட வரலாற்று பாரம்பரியமுள்ள ஒரு பிரதேசமாகும். குறிப்பாக, இப் பிரதேசப் பாரம்பரிய பண்பாட்டம்சங்கள் மிக நீண்ட வரலாற்றை உடையதுடன் தனித்துவமானவையாகவும் காணப்படுகிறது. உதாரணம் மொழி, மதம், சடங்கு சம்பிரதாயங்கள், விவசாயம் தொழில்நுட்ப முறைகள், நாட்டுப்புற இலக்கியங்கள், கட்டிடஅமைப்பு முறை, மடம் , சுமைதாங்கி, ஆவுரஞ்சி, ஆலயங்கள் போன்றற்றை குறிப்பிடலாம். அது மட்டும் அல்ல எதிர்பாராத அன்பின் ஒரு இடமாகவும் கூறலாம். 

அப்படியான இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 2000 களின் நடுப்பகுதியில், உள்நாட்டு உரிமைப் போரின் காயங்கள் இன்னும் பசுமையாக, மறக்கமுடியாமல் வடுக்களுடன் இருந்த அந்த காலத்தில் நகரம் மெதுவாக மீண்டும் தன்னைக் கட்டியெழுப்ப முயன்றுகொண்டு இருந்தது. அப்படி இன்று எதிர்கொள்ளும் பல சவால்களுக்கு மத்தியில், இந்த பழமைவாத சமூகத்தில் உள்ள இளம் இதயங்கள் பெரும்பாலும் அன்பின் சிக்கல்களுடன் போராடுவது பெரும்பாலும் வழமையாகிவிட்டது. 

"யாழ்‌ தேவி ரெயில்‌ ஏறி வருவேனே உனை தேடி 
பெண்ணே உன்‌ முகம்‌ காணவே 
சுன்னாக மின்சாரம்‌ கள்ளுறும்‌ உன்‌ கன்னம்‌ 
அதில்‌ ஊர்வேன்‌ ஏறும்பாகவே 
முல்லை பூக்காரி என்‌ கை சேர வா நீ 
காங்கேசன்துறை பக்கம்‌ போவோமடி அங்க 
பனந்தோப்புக்குள்ள ஒடியல்‌ கூழ்‌ காய்ச்சி 
அத ஒன்றாக ஊத்தி நீ தாடி பிள்ள 
நீ தாவணி சோலை கிளி இந்த மச்சானின்‌ மல்லி கொடி 
காரை நகரில்‌ மாலை வயலில்‌ கண்ணாம்‌ புச்சி விளையாடினோமே 
சாரல்‌ மழையில்‌ வாழை இலையை குடையாய்‌ பிடித்து நனைந்தோமடி 
உன்‌ கூந்தல்‌ துளி போதும்‌ என்‌ வாழ்வின்‌ தாகம்‌ தீரும்‌ 
உன்‌ சேலை நுனி போதும்‌ என்‌ ஜீவன்‌ கரை சேரும்‌ 
கொடிகாமம்‌ மாந்தோட்டம்‌ போவோமடி அங்க தோள்‌ சாய்ந்து புளி மாங்காய்‌ தின்போமடி 
நீ வாய்‌ பேசும்‌ வெள்ளி சிலை உன்‌ அழகிற்கு இல்லை விலை 
வல்லை வெளியில்‌ பிள்ளை வயதில்‌ துள்ளி முயலாய்‌ திரிந்தோமடி 
ஈச்சம்‌ காட்டில்‌ கூச்சம்‌ தொலைத்து லட்சம்‌ முத்தம்‌ பகிர்வோமடி 
உன்‌ ஒற்றை மொழி போதும்‌என்‌ நெஞ்சில்‌ பூக்கள்‌ 
உன்‌ கத்தி விழி போதும்‌என்‌ ஆயுள்‌ ரேகை நீளும்‌ 
உன்‌ காதல்‌ என்ற சிறையில்நான்‌ ஆயுள்‌ கைதி ஆனேன்‌ 
உன்‌ சுவாசம்‌ நீங்கும்‌ வரையில்‌ நான்‌ சுவாசம்‌ கொண்டூ வாழ்வேன்‌ 
நாம்‌ ஊர்விட்டு ஊர்‌ சென்று வாழ்ந்தாலும்‌ யாழ்‌ மண்‌ வாசம்‌ மனம்‌ விட்டு போகாதே 
யாழ்‌ தேவி ரெயில்‌ ஏறுவோம்‌ எங்கள்‌இதயத்தின்‌ மொழி பேசுவோம்‌" 


[-சதீஸ்‌] 

யாழ்.பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு இலக்கிய மாணவியான சாந்தினி, புத்திசாலித்தனத்திற்கும் அழகுக்கும் பெயர் பெற்றவள். அவள் அவளைப் பற்றி ஒரு தீவிரத்தன்மை தன்னகத்தே கொண்டிருந்தாள். அவளுடைய குடும்பம், அந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலானவர்களைப் போலவே, கண்டிப்பான மற்றும் தமிழ் பாரம்பரியமாக இருந்தது. அத்துடன் அவள் படிப்புக்கு முன்னுரிமை கொடுத்து குழந்தைப் பிள்ளையில் இருந்து வளர்க்கப்பட்டாள், காதல் அல்லது காதல் பற்றிய எண்ணங்கள் அவளின் குடும்பத்தில் என்றும் ஊக்குவிக்கப்படவில்லை. தன் வாழ்க்கையில், சாந்தினி இவ்வளவு சீக்கிரமாக  குறிப்பாக தன் கல்வி அழுத்தங்களுக்கு மத்தியில், யாரிடமும் விழுந்துவிடுவாள் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை. ஆனால் அப்படி ஒன்று விரைவில் நடந்தது! 

மறுபுறம் அருள் இரண்டாம் ஆண்டு மருத்துவபீட  மாணவன். அவன் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருந்தான் - வசீகரமாகவும், நகைச்சுவையாகவும், எப்போதும் மற்றவர்களின் கவனத்தின் மையமாகவும் இருந்தான். அவன் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் இருந்து வந்தவன், அவன் வடக்கு கிழக்கு போரின் போது, ஒரு தமிழ் இளைஞனாக பல துன்பங்களைக் கண்டவன், ஆனால் பெண்களைக் பொறுத்தவரையில், அவனிடம் மிகவும் மென்மையாக இருந்ததுடன்  அவனது ஆளுமை மற்றும் கம்பீரமான பேச்சும் மிடுக்கான நடையும் அவர்களுக்கு காந்தமாக இருந்தது, எனவே கொஞ்சம் தூரத்தில் இருந்து பெண்கள் அவனை அடிக்கடி பாராட்டுவது ரசிப்பது ஒன்றும் புதினம் இல்லை. என்றாலும் அருள் அதைப் பெரிதாக என்றும் எடுத்துக் கொள்ளவில்லை. அவன் தன் படிப்பிலும் குடும்பத்திற்கு உதவுவதிலும் மட்டுமே கவனம் செலுத்தினான்.

ஒரு நாள், அவர்களின் விதி தலையிட்டது. இது பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இடைநிலைக் கல்லூரி விழாவிற்கான முதல் நாள் ஏற்பாட்டில் தான் நடந்தது, அனைத்து பீடங்களிலிருந்தும் மாணவர்கள் ஒன்று கூடிய கலகலப்பான நிகழ்வு அது. சாந்தினி தயக்கத்துடன், தன் பாடங்கள் முடிய, அடுத்தநாள் நிகழ்விற்காக ஒழுங்கு செய்யும் ஏற்பாட்டிற்கு உதவ முன்வந்தார், அதே நேரத்தில் அருள் எப்போதும் போல முன்னணியில் கம்பீரமாக ஒழுங்குபடுத்திக் கொண்டு இருந்தான். அவனின் அழகில் மிடுக்கில் கவனம் செலுத்தினவள், ஆனால் படியை பார்க்க மறந்து விட்டாள். தடுமாறி விழுந்தேவிட்டாள். அவன் உடனே கை கொடுத்து தூக்கினான். அந்த நேரம் இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் நோக்கின. இதைத் தான் விதி என்றனரோ?  

“ஓதிமம்  ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையல் ஆகும்
சீதையின் நடையை நூக்கிச்  சிறியதோர் முறுவல் செய்தான் 
மாதவள் தானும் அங்கு  வந்து நீர் உண்டு மீளும் 
போதகம் நடப்ப நோக்கிப்  புதியதோர் முறுவல் செய்தாள் ” 

அன்னத்தின் நடையை சாந்தினியின் ஒய்யார நடையுடன்  ஒப்பிட்டு அருள் சிரிக்க, கம்பீரமாக நடக்கும் யானையின் நடையைத் தன் மனத்தைக் குழப்பிய அருளின் நடையுடன் ஒப்பிட்டு அவளும் மகிழ்ந்தாள். காதல் வாழ்வில் அவனில் அவளும், அவளுள் அவனும் கலந்து கரைகின்ற தன்மை ஒன்றும் புதிதல்ல! அந்தக்கணமே 'செம்புலப் பெயல்நீர் போல அன்புடை  நெஞ்சந் தாங்கலந் தனவே!!'

அன்று மாலை, ஒரு கவியரங்கத்தின் போது, மேடையில் அருளின் வசீகர பேச்சிலும் அவனின் பாணியிலும் சாந்தினி தன்னை அறியாமலே மீண்டும் மயங்கினாள். அவனது குரல் பார்வையாளர்களை வசீகரிக்கும் விதத்தைக் கொண்டிருந்தது, மேலும் அவள் இதயத்தில் ஒரு படபடப்புடன் தனது வாழ்க்கையில் முதல்முறையாக, சாந்தினி தன்னால் விவரிக்க முடியாத ஒன்றை, அவள் உள்ளத்தே தோன்றி, வெளியே புலப்படுத்த முடியாத ஒரு உணர்வை,  இன்பத்தைக் உணர்ந்தாள்.

நிகழ்ச்சிக்குப் பிறகு, நிகழ்ச்சியை மேடைக்குப் பின்னால் நிர்வகிப்பதற்குப் பொறுப்பான சாந்தினி, அருளுடன் அவனது அடுத்த நிகழ்ச்சி நிரலின் நேரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. அவர்களின் கண்கள் மீண்டும் மிக அருகில் சந்தித்தபோது, மறுக்க முடியாத ஒரு தீப்பொறி அதில், அந்த பார்வைகளில் இருந்தது. அருளின் எளிதான புன்னகை அவளை நிராயுதபாணியாக்கியது, அந்தச் கணப்பொழுதில், ஒரு இணைப்பு இருவருக்கும் இடையில் மீண்டும் உருவானது. இது நுட்பமானது, ஆனால் அது அவர்களின் வாழ்க்கையின் போக்கை இனி மாற்ற போதுமானதாக இருந்தது.

இருண்ட கூந்தலையும் மையுண்ட கண்களையும் உடையைவளுமான  சாந்தினியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அருளும், சாந்தினியும் அடுத்த சில வாரங்களில், பல்கலைக்கழக வளாகத்தில் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினர். தொடக்கத்தில் தயக்கத்துடன் ஆரம்பித்த சந்திப்பு, விரைவில் நீண்ட சந்திப்பாக மாறியது. கவிதை, மருத்துவம், யாழ்ப்பாணத்தின் வரலாறு, அவர்களது குடும்பங்கள் மற்றும் எதிர்காலத்திற்கான அவர்களின் கனவுகள் போன்ற அனைத்தையும் பற்றி வெளிப்படையாகப் பேசினர். சாந்தினியின் புத்திசாலித்தனம் மற்றும் காதலால் அருள் ஈர்க்கப்பட்டார், அதே நேரத்தில் சாந்தினி அருளின் வாழ்க்கை ஆர்வத்தையும் அவளை மகிழ்வாக்கும் அவனின்  திறனையும் பாராட்டினார்.

அவர்களின் ஒருவர் மேல் ஒருவரின் நம்பிக்கை, புரிந்துணர்வு, அன்பு பெருகினாலும், அவர்களின் உறவு, பல தடைகளை அல்லது படிகளை தாண்டுவது  சிரமம் நிறைந்தது என்பதை இருவரும் அறிந்திருந்தனர். யாழ்ப்பாணத்தின் பழமைவாத சமூகத்தில், ஒரு காதல் உறவு, குறிப்பாக வெவ்வேறு சமூக மட்டங்களைச் சேர்ந்த இரண்டு பேர்களுக்கு  இடையிலான உறவு கடினமாகவே இருந்தது. மேலும், சாந்தினியின் குடும்பத்தினர் ஏற்கனவே அவளது எதிர்காலத்தைப் பற்றி, திருமணத்தைப் பற்றி பேசத் தொடங்கி விட்டனர், அருளையும்  தனது படிப்பிலும் தொழிலிலும் மட்டுமே கவனம் செலுத்தும்படி , அவனின் குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்தனர்.

என்றாலும் அவர்களின் காதல் பெற்றோர்களின் கட்டுப்பாட்டை தெரிந்தோ தெரியாமலோ அங்கொன்றும் இங்கொன்றுமாக மீறிக்கொண்டு இருந்தது. பல்கலைக்கழக நூலகத்தின் அமைதியான மூலைகளிலும், பண்ணைக் கடல் காற்று அவர்களுடன் முட்டி மோதி அவர்களின் ரகசியங்களை கிசுகிசுக்கும் பாறைக்கற்களிலும், ஒரு சிறிய ஓடையைக் கடக்கும் வளாகப் பாலத்திற்கு அருகிலுள்ள பழைய ஆலமரத்தடியிலும் அவர்கள் ரகசியமாக தன்னந்தனியாக சந்திக்கத் தொடங்கினர். இங்கே, அவர்களின் காதல், நட்பு நெருக்கமாக மேலும் மேலும் உண்மையிலேயே மலர்ந்தது.

ஒரு அமைதியான மாலை நேரத்தில், ஆலமரத்தடியில், சூரியன் மறையத் தொடங்கியதும், சாந்தினியும் அருளும் ஒருவருக்கொருவர் நெருங்கி அருகில் அமர்ந்தனர், இலைகளின் மெல்லிய சலசலப்பு மட்டுமே காற்றில் ஒலித்தது. உரையாடல் மெதுவாக அவர்கள் இருவரது மனதையும் பெரிதும் எடைபோடும் விடயத்திற்கு மாறியது - உள்நாட்டுப் உரிமைப் போர் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் அதன் நீடித்த தாக்கம் அவர்களின் உரையாடலின் கருவாக இருந்தது.

சாந்தினி: "போர் நடக்காமல் இருந்திருந்தால் எங்கள் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?"


அருள்: பெருமூச்சுடன்  "ஒவ்வொரு நாளும், இப்போது நினைத்தால் உண்மையில் வினோதமாக இருக்கிறது - எங்கள் குழந்தைப் பருவம் எப்படி சோதனைச் சாவடிகள், பயம் மற்றும் தலைக்கு மேலான ஹெலிகாப்டர்களின் சத்தம் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. என் பெற்றோர்கள் பலவற்றை இழந்தார்கள், ஆனால் அவர்கள் அதைப்பற்றி அந்த நேரம் ஒன்றும் பேசவில்லை, அவர்களின் எண்ணம் முழுவதும் தங்கள் பிள்ளைகளும், எப்படி பாதுகாப்பாக நாளைய நாளை கழிப்பதும் என்பதே. வலியை எங்கோ ஆழத்தில் புதைத்து வைத்தது போல, முகத்தில் எந்த பயத்தையும் எமக்கு காட்டிட மாட்டார்கள் "

சாந்தினி: "எனக்குத் தெரியும்... எங்க குடும்பத்தை காப்பாறுவதற்காக என் அப்பா ரொம்ப பாடுபட்டார். அதனால்  சில சமயம் அவங்க கடினமாகவும் இருந்தார்கள். எப்படி இதுக்குள்ளால் தப்பி பிழைப்பது மட்டுமே அவர்களின் எண்ணமும் கனவுமாக இருந்தது. அம்மாவும் கூட ..  என்மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருப்பதாக அடிக்கடி சொல்லுவார், ஆனால் இப்போது ... பாரம்பரியங்களைப் பின்பற்றுவது, குடும்ப பெருமையை  பேணுவது, அயலில், அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மரியாதைக்கும் உடன்பட்டு இருப்பது ... என்பதிலே கூடிய கவனமாக இருக்கிறார். 

அருள்: "நானும் அப்படித்தான் உணர்கிறேன். நம் பெற்றோர்கள் நம்மைப் தீங்கு அல்லது ஆபத்திலிருந்து பாதுகாப்பாகப் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் நமக்கென்ன கிடைத்தது ? நம் கண்ணியம், கனவுகள் பற்றி மாற்றம் வந்ததா ? போர் முடிந்திருக்கலாம், ஆனால் உண்மையில் எங்களுக்கு ஏதாவது மாறியதா?  நமது உரிமைகள், சுதந்திரமாக வாழும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எதையும் சாதித்துவிட்டோம் என்று நினைக்கிறீர்களா?"

சாந்தினி: மேலே மேகத்தை உற்றுப் பார்த்து "உண்மையில் இல்லை.  நாங்கள் நேரடி மோதலில் இருந்து சற்று விடுபட்டுள்ளோம், ஆனால் ... நாங்கள் இன்னும் உரிமை பெறாமல் கட்டுண்டு இருக்கிறோம். அதே பழைய எதிர்பார்ப்புகளும் தீர்வும் இல்லாமல் அப்படியே இருக்கிறது . அது போகட்டும், இத்தனை அடிபாடுகளுக்குப் பிறகும், தமிழரான எமக்குள் ஒற்றுமை இல்லை. அதுமட்டும் இல்லை, இன்னும் பழைமைவாதம் அப்படியே இருக்கிறது. அதிலும் குறிப்பாக  என்னைப் போன்ற பெண்களுக்கு - நாங்கள் இன்னும் பெற்றோர்  யாரைத் தேர்ந்தெடுப்பார்களோ அவர்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும், அப்படி இப்படி என்று இன்னும் பெற்றோரின் எதிர்பார்ப்பில் மாற்றம் இல்லை 

அருள்: "என்னைப் போன்ற ஆண்களுக்கு எல்லாமே பொறுப்புதான். உழைப்பது, சம்பாதிப்பது, குடும்பத்தை காப்பாற்றுவது, தலைமைவகிப்பது என நீண்டுகொண்டு போகிறது. எனக்கு ஆறுதலுக்கும் அன்புக்கும் - சாந்தினி, நீ தான் வேண்டும்  நான் ஒரு மருத்துவராக மட்டுமே இருக்க விரும்பவில்லை. மாற்றங்களை விரும்புபவனாகவும் இருக்க விரும்புகிறேன். பழைமைவாதம் எங்கள் காலத்துக்கு ஏற்றவாறு மாற்றப்படவேண்டும் அப்பத்தான் நாம் மனிதர்களாக வாழ முடியும். ஆனால் போர்… இருந்ததையும் பறித்துவிட்டது 

சாந்தினி அருளின் மார்பின் மீது தன் தலையை சாய்த்து அவன் கைகளை அழுத்தமாக பிடித்தாள், அவர்களுக்கிடையேயான காதல் உணர்வு குளிர்ந்த காற்றையும் சூடாகியது. தங்கள் தலைமுறை கடந்த காலத்தின் வடுக்களை இன்னும் மறக்கவில்லை என்பதை அவர்கள் இருவரும் அறிந்திருந்தனர், மேலும் உடல்ரீதியான வன்முறைகள் இன்று முடிவுக்கு வந்தாலும், சமூக வேறுபாடும் மற்றும் சம உரிமைப் போர்களும் அப்படியே இருந்தன.

சாந்தினி: "நம்முடைய காதல் எம் நாட்டைப் போன்றது என்று நினைக்கிறன். நாம் விரும்புவதற்கும் பெற்றோர் எதிர்பார்ப்பதற்கும் இடையில் கிழிந்துவிட்டது. நாம் எப்போதாவது, இந்த பழமைவாதத்தில் இருந்து சுதந்திரமாக இருப்போம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? - நாம் சுதந்திரமாக விரும்பியபடி வாழ, விரும்பியவரை நேசிக்க??  

அருள்: "எனக்குத் தெரியாது. நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று நான் நினைக்க விரும்புகிறேன். ஆனால் அது மெதுவாகத்தான் இருக்கிறது. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது, ஆனால் சமத்துவமும் கண்ணியமும்... நம்மில் பலருக்கு இன்னும் தொலைதூரக் கனவுகள்.  இங்கே, யாழ்ப்பாணத்தில், சம உரிமைக்கான போராட்டம் இன்னும் தொடர்கிறது, ஆனால் ... 

சாந்தினி: "இது வருத்தமாக இருக்கிறது, இல்லையா? எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் இன்னும் போராடுகிறோம். அங்கீகாரத்திற்காகவும், அமைதிக்காகவும், அடிப்படை மனித உரிமைகளுக்காகவும். இங்கே நாங்கள் ... காதலிக்கும் உரிமைக்காகவும் போராடுகிறோம்."

அருள்: "அதனால்தான் நாம் ஒருவருக்கொருவர் வலுவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் நம்மிடமிருந்து எல்லாவற்றையும் பறிக்க அனுமதிக்க முடியாது. நம் கண்ணியம், நம் கனவுகள், இப்போது நம் அன்பு... ஒருவேளை நம்மால் உலகத்தை உடனடியாக மாற்ற முடியாது, ஆனால் நம்மிடம் இருப்பதைப் இழக்காமல்  பற்றிக்கொள்ளலாம்?"

யுத்தம் அவர்கள் இருவருக்கும் கண்ணுக்குத் தெரியாத வடுக்களை ஏற்படுத்தியது, உலகில் இன்று அவர்களின் இடத்தை மட்டுமல்ல, அவர்களின் எதிர்காலத்தையும் ஒன்றாகக் கேள்விக் குள்ளாக்கியது.

ஒரு நாள் மாலை, வகுப்பு முடிந்து சாந்தினியும் அருளும் யாழ்ப்பாண கோட்டைக்கு அருகே நடந்து கொண்டிருந்தபோது, குடும்பத்தின் பெண் உறவினர் ஒருவர் அவர்களைக் கண்டார். வார்த்தை விரைவாக பரவியது. 

"சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுபோல் வலந்தனள்"

சாந்தினி உயர்ந்த குடியில் பிறந்தவள். ஆகையால் நேரடியாகப் பழிக்க அச்சமுற்ற அயல் பெண்கள், கடைக்கண் சார்த்தியும், மூக்கு நுனியில் விரலைச் சேர்த்தியும் தமக்குள் மறைவாகப் பேசியபடி அலர் உரைத்தனர். அது எப்படியோ அவளின் பெற்றோருக்கு எட்டிவிட்டது. தாயும் தன் மகள் மீது ஐயம் கொண்டு அவளை கட்டுப்படுத்தினாள் என்பதை விட, பிறர் சுட்டிக்கூறும் அளவிற்கு நடந்து, பிறந்த குடிக்கு இழிவைத் தந்துவிட்டாளே என்ற எண்ணத்திலேயே அப்படி செய்ததுடன் தந்தைக்கும் தெரியப் படுத்தினாள்.  
 


அவளுடைய தந்தை, ஒரு கண்டிப்பான மனிதர், பாரம்பரிய விழுமியங்களை கடைப்பிடிப்பவர், கோபமடைந்தார். மீண்டும் அருளைப் பார்க்கக் கூடாது என்று தடை விதித்து, அவள் படிப்பில் கவனம் செலுத்தி, பெற்றோர் பார்க்கும் பொருத்தமான திருமணத்திற்குத் தயார் ஆக வேண்டும் என்று கட்டளையிட்டார்.   

சாந்தினி அந்தக் கணமே மனம் உடைந்து போனாள், ஆனால் எதிர்த்து ஒன்றும் பேசவில்லை. மௌனமாக தன் அறைக்குள் போய் கதவைப் பூட்டினாள். கட்டிலில் கிடந்தபடி, தன் தொலைபேசியில் அருளின் படத்தைப் பார்த்தபடி ஏதேதோ தனக்குள் முணுமுணுத்தாள். தன் குடும்பத்திற்க்கும் அருள் மீதான காதலுக்கும் இடையில், கண்ணீருடன் மனதில் போராடினாள். சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் பெற்றோரின் பாசமும் அவள் மனதின் மீது அதிக எடையைக் கொடுத்தன. மேலும் அவளுடைய குடும்பத்தின் விருப்பத்திற்கு எதிராகச் செல்வது அவமானத்தைத் தரும் என்பதை அவள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. அதேநேரம் அருளும் சாந்தினியின் முடியாத சூழ்நிலையின் கனத்தை உணர்ந்தான். அவன் சாந்தினியை ஆழமாக நேசித்தாலும் அவன், தன்னால் சாந்தினி தனது குடும்பத்திலிருந்து விலகுவதற்கு  காரணமாக இருக்க விரும்பவில்லை.

நாட்கள் வாரங்களாக மாறியது, அவர்களுக்கிடையான தூரம், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதை நிறுத்தியதால் அதிகரித்தது. ஒரு காலத்தில் துடிப்பான இணைப்பு இப்போது வறண்டு, கோடைக்காலம் போல தோன்றியது. சாந்தினியின் பெற்றோர்கள் இதனால் நிம்மதியடைந்தாலும் மற்றும் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதாக அவர்கள் நினைத்தாலும், உண்மையில் சாந்தினி மற்றும் அருள் இருவரும் மௌனமாகவே தவித்துக் கொண்டிருந்தனர் என்பதே உண்மை.

மாதங்கள் கடந்தன, அருளின் இறுதி ஆண்டு படிப்பை நெருங்கியது. ஒரு நாள், அருளுக்கு மதிப்புமிக்க இன்டர்ன்ஷிப்பிற்காக [ஒரு தொழில்முறை கற்றல் அனுபவத்துக்கு ] கொழும்பு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவன் யாழ்ப்பாணத்தின் கட்டுப்பாடுகளிலிருந்தும், அனுபவித்த மனவேதனைகளிலிருந்தும் விலகி, ஒரு அமைதியை, சாந்தினியை இழந்த வேதனையில் இருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பாக, இதைக் கருதினான். 

கொழும்பிற்குப் புறப்படுவதற்கு முந்தைய நாள் இரவு, அருள் பாலத்தின் அருகே உள்ள பழைய ஆலமரத்தைக்  கடைசியாகப் பார்க்க முடிவு செய்தான். அவன் அங்கே நின்று, தனது மனது திருடப்பட்ட தருணங்களை நினைவு கூர்ந்தபோது, அவனுக்குப் பின்னால் ஒரு பழக்கப்பட்ட  குரல் கேட்டது. அது சாந்தினி.

அவள் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது. அவன் புறப்பட்டதைக் கேள்விப்பட்டு விடைபெற வந்திருந்தாள். அவர்கள் ஒரு கணம் மௌனமாக நின்றார்கள், அவர்களுக்கிடையில் தொங்கிக் கொண்டிருந்த எல்லா வேதனையும் பாரமும் கண்களில் தெரிந்தன. சாந்தினி இறுதியாகப் பேசினாள்: “உண்மையைச் சொல்லாமல் உன்னை அம்மோ என்று விட்டுவிட முடியாது. நான் உன்னை முழுதாக நேசிக்கிறேன், அருள். என்னிடம் எப்போதும் உன்மேல் காதல் இருக்கிறது, நான் என்றும் உன்னை மறக்க மாட்டேன்.

அருள் திடுக்கிட்டான். அவள் தன்னை மறந்துவிட்டாள், குடும்பத்தின் முடிவை ஏற்றுக்கொண்டாள், என்று நினைத்தவன், இப்ப இதோ அவள் அவன் முன் நின்று, தன் இதயத்தை முழுமையாக கொட்டிக்கொண்டு இருந்தாள்.

சிறிது நேரம், எல்லாம் சரியாகிவிடும் என்று தோன்றியது. ஆனால் யதார்த்தம் தலைகீழாக மாறியது. காதல் இருந்தபோதிலும், அவர்கள் ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது என்று அருளுக்குத் தெரியும். அவன், சாந்தினியின் இரு கையையும் பிடித்து, தனது கனத்த இதயத்துடன், இருவரையும் உடைத்து பிரிக்கும் வார்த்தைகளை அவளிடம் சொன்னான்: “நானும் உன்னை நேசிக்கிறேன், சாந்தினி. ஆனால் நம்மால் இணைய முடியாது. இங்கே இல்லை, எப்போதும் இல்லை."

அவர்கள் ஒன்றாக இருக்கும் கடைசித் தருணம் என்பதை அறிந்து ஆலமரத்தடியில் இருவரும் கட்டித்தழுவினர். அருள் பாலத்தைக் கடந்து, நடந்து செல்வதை,  இரவில் மறைவதை சாந்தினி பார்த்துக்கொண்டே இருந்தாள். 

அவ்வளவுதான் - அவர்களின் காதல் காலப்போக்கில் மனதில் இருந்து கரைந்து கரைந்து போனாலும் ஒரு மூலையில் ஒழிந்து இருந்தது, உண்மையில் ஒருபோதும் சந்திக்க முடியாத இரண்டு நிலங்களை இணைக்கும் ஓடையின் மேல் பாலம் போல, அவர்களின் இதயங்களை இன்னும் இணைத்துக் கொண்டே இருக்கிறது 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

463594479_10226571738022447_8048086620468118097_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=8HuCQkPT0o4Q7kNvgHcKsjR&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=A8FnjNtLYmlDqHnHsTNbA9D&oh=00_AYCZw9XHSJfUQlAA-p_xAkiAegkl_JqtijRjxugMed27Xg&oe=6715501F  May be an image of 2 people and text

 

  • கருத்துக்கள உறவுகள்

 பள்ளிக் காலங்களில்  எத்தனையோ இளசுகளின் மனத்தில் ஆயிரம் காதல்  பூத்திருக்கும் . போராடி வென்றதென்னவோ ஒரு சில தான். யாழ்ப்பாண கட்டுப்பாடான சமுதாய அமைப்பு , அந்தஸ்த்து வேற்றுமை என்பன மிக இறுக்கமாக இருந்த காலம் சுய ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க படடது  .   

  • கருத்துக்கள உறவுகள்

எமது வாழ்வும் பதின்ம வயது காதலாகி திருமணத்தில் முடிந்தது.

பதின்ம வயதில் இருந்தது போலவே இப்போதும் உணர்கிறேன் வாழ்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.