Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சென்னை - இறந்த ஆமைகள்

சென்னை - இறந்த ஆமைகள்

 
 
 
 

சென்னையின் கடற்கரைப் பகுதிகளான காசிமேடு, திருவொற்றியூர் தொடங்கி நெம்மிலி குப்பம், ஈச்சம்பாக்கம் எனத் தொடர்ந்து ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியிருக்கின்றன. கடந்த 15 நாள்களில் மட்டும் சுமார் 350-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக TREE அறக்கட்டளையின் நிறுவனர் சுப்ரஜா தாரணியைத் தொடர்புகொண்டு பேசினோம். ``ஆமைகள் கடலுக்கு மிக முக்கியமான உற்பத்திக்காரணி. கடலில் இருக்கும் பாசைகளை உண்டு, அது அந்த இடத்தை சுத்தம் செய்துவிடும். அதனால், மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். மீன் குஞ்சுகளை உண்ணும் ஜெல்லி மீன்களை ஆமைகள் உண்ணும். அதனால் மீன் வளர்ச்சியும், உற்பத்தி அதிகரிக்கும். மண்ணில் இருக்கும் ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும்.

 
  • 10/10
    vikatan%2F2025-01-16%2Fjutpv6em%2FWhatsA
  • 1/10
    vikatan%2F2025-01-16%2Ffpp8ma3h%2FWhatsA
  •  
     
  •  
  • vikatan%2F2025-01-16%2Fgj1f0n3g%2FWhatsA
  • 6/10
    vikatan%2F2025-01-16%2Fyysb2ar4%2FWhatsA
  • 7/10
    vikatan%2F2025-01-16%2F0unm3boc%2FWhatsA
  • 8/10
    vikatan%2F2025-01-16%2F78qlc82u%2FWhatsA
  • 9/10
    vikatan%2F2025-01-16%2Fr18u0jli%2FWhatsA
  • 10/10
    vikatan%2F2025-01-16%2Fjutpv6em%2FWhatsA
  • 1/10
    vikatan%2F2025-01-16%2Ffpp8ma3h%2FWhatsA
 

1000 ஆமைகளில்...

 

ஆனால், ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறப்பது தொடர்கதையாகதான் இருக்கிறது. இந்த வருடம் எண்ணிக்கை சற்றுக் கூடுதலாக இருக்கிறது. அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலின் முதல் அட்டவணையில், கடல் ஆமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் பட்டியலில் இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் ஆமைகள் கடலில் வாழ்ந்தாலும், கடலில் எத்தனையாயிரம் தொலைவுக்கு நீந்தித் திரிந்தாலும், எந்த இடத்தில் பிறந்து தவழ்ந்ததோ, முட்டையிடும்போது அந்த இடத்துக்கு வந்துவிடும். டிசம்பர் முதல் ஜூன் வரை சென்னை, ஆந்திரா, ஒடிசா கடற்கரைகளில் பல ஆயிரம் ஆமைகள் வந்து முட்டையிட்டுச் செல்லும். ஆயிரம் குஞ்சுகள் பிறந்தால் அதில் முட்டையிடும் பருவத்துக்கு ஒரே ஒரு ஆமைதான் வரும். மீதமுள்ள 999 ஆமைகள், வலைகளில் சிக்கியோ, சுறாவுக்கு இரையாகியோ இறந்துவிடும்.

 
 

முட்டையிடும் பருவம்

 

முட்டையிடும் பருவம் வந்ததும் அது முட்டையிடும் கடற்கரைப் பகுதியிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் வந்து தங்கிவிடும். இரவு நேரத்தில் கரைக்கு வந்து, 65 முதல் 160 முட்டைகள் வரை இடும். 15 நாள் இடைவெளியில ரெண்டுமுறை வந்து இந்த முட்டைகளை இட்டு கடலுக்குள் சென்றுவிடும். ஆமைகள் 40 - 45 மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீருக்கு மேல்பகுதிக்கு வந்து சுவாசிக்கும். அந்த நேரங்களில் மீன்பிடி விசைப்படகுகள் மோதியோ, வலையில் சிக்கியோ ஆமைகள் இறந்துபோகின்றன. அதன்காரணமாகவே, ஆமைகள் மேலே வந்து சுவாசிக்க முடியாமலும் இறக்கின்றன.

 
சுப்ரஜா தாரணி
 
சுப்ரஜா தாரணி
 

ஆமைகளுக்கு மிக முக்கியமான வழித்தடம்

 

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி 8 கடல் மைல்களுக்குப் பிறகுதான் விசைப்படகுகள் கில்நெட்களைப் பயன்படுத்தி மீன் பிடிக்க வேண்டும். ஆனால், மழைக்காலம் முடிந்தவுடன் கடலின் சில மைல்களிலேயே இறால் போன்றவைகள் அதிகம் கிடைக்கும் என கில்நெட்களைப் பயன்படுத்துகிறார்கள். அதனால் ஆமைகள் இதில் சிக்கி இறக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. உலகிலேயே மூன்று இடங்களில்தான் லட்சக்கணக்கான ஆமைகள் வந்து முட்டையிட்டுச் செல்லும். அதில் ஒடிஷாவில் இருக்கும் ரிஷிகுல்யா, கஹிர்மதா எனும் இரண்டு கடற்கரைகள் மிக முக்கியமானவை. இந்த இடங்களில் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் முட்டியிடும் ஆமைகள், உணவுத்தேடி நம்முடைய மன்னார்வளைகுடா பகுதிக்கு வரும். இங்கிருந்து அக்டோபர் - நவம்பர் மாதங்களில் வட தமிழகம் வழியாக ஒடிசாவுக்கு நீந்திச் செல்லும். இதுதான் அந்த ஆமைகளுக்கு மிக முக்கியமான வழித்தடம்.

 
 

இந்த சமயங்களில்தான் அதிகமான ஆமைகள் படகுகளிலும், வலைகளிலும் சிக்கி இறக்கின்றன. காசிமேடு தொடங்கி, மெரினா, பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்க எனக் கோவளம் வரை இறந்து கரை ஒதுங்குகின்றன. தற்போது எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி நீலாங்கரைக் முதல் கோவளம் வரை 168 ஆமைகள் இறந்திருக்கின்றன. செம்மஞ்சேரி முதல் ஆலம்பரை வரை இருக்கும் பகுதிகளில் 123 ஆமைகள் இறந்தநிலையில் மீட்கப்பட்டிருக்கிறது. இதைத் தடுக்கும் விதமாக கடந்த 8-ம் தேதியே அரசுத் துறைகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். மீனவர்கள், கடலோரக் காவல்படை, வனக்காவலர்கள், கடலோரக் காவல் குழுமம் ஆகியோரை அழைத்து, சீசன் தொடங்குகிறது என்பதைக் குறிப்பிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி கூட நடத்தினோம். ஆனாலும், ஆமைகளின் இறப்பு நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. அரசு இதில் தலையிட்டாலே தவிர, தீர்வு கிடைக்காது. ஒடிசாவில் இந்த சீசனில் கில்நெட் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருக்கிறது குறிப்பிடதக்கது." எனத் தெரிவித்திருக்கிறார்..

Chennai : தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்... காரணம் என்ன? | Hundreds of turtles are washing up dead on the coast of Tamil Nadu - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

ஆலிவ் ரிட்லி: மீனவர்கள் தெய்வமாக வழிபடும் இந்த ஆமைகள் சென்னை கடற்கரைகளில் இறந்து கரை ஒதுங்குவது ஏன்?

ஆலிவ் ரிட்லி ஆமைகள், பங்குனி ஆமைகள், சென்னை கடற்கரை

பட மூலாதாரம்,NISHANTH RAVI

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நித்யா பாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை

பங்குனி ஆமைகள் அல்லது ஆலிவ் ரிட்லி என்ற ஆமை இனங்கள், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி வருகின்றன.

கடற்கரையை ஒட்டியுள்ள நீரில் இனப்பெருக்கம் செய்யும் இந்த ஆமைகள், முட்டைகளை இடுவதற்காக கடற்கரைக்கு வருகின்றன.

இந்நிலையில், இந்தாண்டு சென்னை மாநகராட்சி எல்லைக்குள் கிட்டத்தட்ட 350 ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவு இந்த ஆமைகள், கடற்கரையை நோக்கி வரும்போது மரணங்கள் நிகழ்வது உண்டு. ஆனால், இந்தாண்டு இறப்பின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது சூழலியல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் தான் (trawl boats) இந்த இறப்புக்குக் காரணம் என்று கூறுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

விசைப்படகுகளில் உள்ள மோட்டர்களில் சிக்கி இந்த ஆமைகள் உயிரிழக்கும் வாய்ப்புகள் உண்டு என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

உள்ளூரில், நாட்டுப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள், "இந்த ஆமைகள் எங்கோ இறந்திருக்கலாம். சென்னையை ஒட்டியுள்ள கடற்கரையில் கரை ஒதுங்குவதால் மீனவ சமுதாயம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறக்கூடாது" என்கின்றனர்.

வனத்துறையினர், இழுவை வகை படகுகள் பயன்படுத்துவது குறித்து மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என்று கூறுகின்றனர். ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறக்கக் காரணம் என்ன? வனத்துறை அளிக்கும் பதில் என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

 

இந்தாண்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆமைகள், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரைகளில் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. எவ்வளவு ஆமைகள் உயிரிழந்துள்ளது என்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வனத்துறை தெரிவிக்கவில்லை.

இருப்பினும், தமிழக வனத்துறையோடு இணைந்து ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தில் செயல்பட்டு வரும் வன ஆர்வலர் மற்றும் ஆராய்ச்சியாளர் நிஷாந்த் ரவி, இதன் எண்ணிக்கை முந்நூற்றுக்கும் அதிகம் என்று குறிப்பிடுகிறார்.

"சென்னையில், மெரினா முதல் நீலாங்கரை வரையிலான பகுதிகளில் குறைந்தது 350 ஆமைகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவை தவிர்த்து கோவளம் உள்ளிட்ட பகுதிகளை கணக்கிடும்போது அதன் எண்ணிக்கை மேலும் அதிகமாக உள்ளது. 800 ஆமைகள் இறந்திருக்கலாம்" என்று குறிப்பிடுகிறார்.

எனினும், அவருடைய இந்த கூற்றை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க இயலவில்லை.

ஆமைகளின் இறப்புக்கான காரணம் என்ன என்று சென்னை வனத்துறை கண்காணிப்பாளர் மணீஷ் மீனாவிடம் கேட்டபோது, "இறந்த உடல்களை உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவுகள் வந்த பிறகே இறப்புக்கான காரணம் என்ன என்பதை கூற இயலும்," என்று தெரிவித்தார்.

அளவுக்கு அதிகமாக ஆமைகள் கரை ஒதுங்கியதால், ஜனவரி 17 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டலம், இது தொடர்பாக தானாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டது.

மீண்டும் ஜன. 22 அன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகானந்தன், ஆமைகளுக்கு உடற்கூராய்வு நடத்தப்பட்டது என்றும் ஆமைகளின் இறப்புக்குக் காரணம் ஆமைகளின் உடலின் முன்பாகத்தில் ஏற்பட்ட காயங்களும், அதிர்ச்சியும் தான் என்று குறிப்பிட்டதாக, 'டிடி நெக்ஸ்ட்' (DT Next) நாளிதழ் செய்தி கூறுகிறது.

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை கண்காணிக்கத் தவறினால், ஆலிவ் ரிட்லி ஆமைகளின் இனப்பெருக்கக் காலத்தில் ட்ராலர் வகை படகுகளுக்குத் தடை விதிக்க உத்தரவிடப்படும் என்று எச்சரித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தெற்கு மண்டலம்.

நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் மற்றும் நிபுணர் சத்யகோபால் கொர்லாபட்டி அடங்கிய அமர்வு இந்த வழக்கை 22-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்தது. அப்போது, ஆமைகள் கொல்லப்படுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தீர்ப்பாயத்தில் சமர்ப்க்க உத்தரவு பிறப்பித்தது அந்த அமர்வு.

மேலும் டி.இ.டி. (turtle excluder devices) என்று அழைக்கப்படும் கருவிகள் இந்த படகுகளில் பொருத்தப்படுள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

350க்கும் மேற்பட்ட ஆமைகள் உயிரிழப்பு

சென்னையில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது ஏன்?

பட மூலாதாரம்,NISHANTH RAVI

படக்குறிப்பு, சென்னையில், மெரினா முதல் நீலாங்கரை வரையிலான பகுதிகளில் குறைந்தது 350 ஆமைகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன

இழுவை படகுகள் தான் காரணமா?

தமிழகத்தில், ஆலிவ் ரிட்லி ஆமைகளை பாதுகாக்க மாணவர்களை கொண்டு உருவாக்கப்பட்ட தன்னார்வல அமைப்பில் தன்னுடைய பங்களிப்பை அளித்து வருகிறார் நிஷாந்த்.

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக எஸ்.எஸ்.டி.சி.என் என்ற தன்னார்வல அமைப்பு, மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் இந்த ஆமைகளை பாதுகாப்பதன் நோக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

"கடந்த 2008-ஆம் ஆண்டில் இருந்து இந்த அமைப்புடன் சேர்ந்து பணியாற்றுகிறேன். வனத்துறை சார்பில் நான் மீனவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்தி வருகிறேன். ட்ரோலர் வகை படகுகளை பயன்படுத்துவது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றாமல் மீன் பிடிப்பதே இத்தகைய பிரச்னைகளுக்குக் காரணம்," என்று குறிப்பிடுகிறார்.

ஆலிவ் ரிட்லி ஆமைகளின் இறப்பை குறைக்க ஆமைகளின் இனப்பெருக்கக் காலமான ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலகட்டத்தில், ஐந்து நாட்டிக்கல் மைலுக்குள் இயந்திரப் படகுகள் செயல்பட தடை விதித்து, நிலையான இயக்க முறைமை (SOP), 2017-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

"பொதுவாக ஆலிவ் ரிட்லி ஆமைகள், சுவாசிப்பதற்காக ஒவ்வொரு 25 நிமிடங்களுக்கும் ஒரு முறை கடலின் மேற்பரப்புக்கு வரும். ஆனால், ட்ரோலர் கப்பல்களில் இருந்து வீசப்படும் வலைகளில் இது சிக்கிக் கொள்ளும்போது, அதனால் சுவாசிக்க இயலாது. மூச்சடைப்பு ஏற்பட்டு அந்த வலைக்குள்ளேயே ஆமைகள் இறந்து விடுகின்றன. அந்த வலையை மேலே எடுத்து பார்க்கும்போது தான் அந்த வலைக்குள் ஆமைகள் இறந்து கிடப்பதே தெரியும். அதனை எடுத்து அவர்கள் கடலில் போட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். ஐந்தாறு நாட்களில் அவை கரை ஒதுங்குகின்றன,"என்று விளக்குகிறார் அவர்.

"ஆலிவ் ரிட்லி ஆமைகள் தங்களின் இனப்பெருக்க நடவடிக்கைகளை முதல் ஐந்து நாட்டிக்கல் மைல்களில் மேற்கொள்கின்றன. ட்ரோலர் படகுகளை ஐந்து நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் இயக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், இதனை பல ட்ரோலர் படகு உரிமையாளர்கள் பின்பற்றுவதில்லை," என்று கூறுகிறார் நிஷாந்த்.

"ஐந்து மைல்களுக்கு அப்பால் செல்ல வேண்டும் என்றால் அதற்கான எரிபொருள் அதிகம். அங்கு சென்று அவர்களுக்கு வருவாயை ஈட்டும் வகையில் மீன்கள் கிடைக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படும் என்பதால் அவர்கள் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இருக்கும் பகுதிகளில் மீன்பிடிக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர்," என்று கூறுகிறார் நிஷாந்த்.

சென்னையில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ட்ரோலர் படகுகளை ஐந்து நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் இயக்க வேண்டும் என்ற விதி உள்ளது

ட்ரால் படகு உரிமையாளரும், சென்னை இயந்திர படகு உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ரகுபதி இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசினார். "இழுவை வலைகளில் விழும் கடல் உயிரினங்கள் பற்றி யாருக்குமே தெரியாது. ஒருமுறை வலையை கப்பலில் ஏற்றினால் தான் அதில் என்ன மீன்கள் சிக்கியிருக்கும் என்பதே தெரியும். யாரும் வேண்டுமென்றே ஆமைகளை பிடிப்பதில்லை," என்று தெரிவித்தார்.

மேற்கொண்டு பேசிய அவர், இது வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கப்பல்கள் என்றும், ஆமைகளை மட்டுமே கருத்தில் கொண்டால் இங்கு பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற தகவல்களையும் பகிர்ந்தார்.

"நான் 70-களில் இருந்து மீன் பிடிக்க செல்கிறேன். அன்று 6 மணிநேரத்தில் மீன்களைப் பிடித்துக்கொண்டு வந்துவிடுவோம். இன்று காலநிலை மாற்றம், கடல் நீர் அசுத்தம், மீன்களின் எண்ணிக்கை குறைவு போன்றவை காரணமாக 20 நாட்களுக்கு நாங்கள் கடலில் இருக்கும் நிலை ஏற்படுகிறது," என்று கூறினார்.

ஆலிவ் ரிட்லி ஆமைகள்
படக்குறிப்பு, மீனவர்கள், ஒவ்வொரு காலத்திலும் எந்தெந்த இடங்களில் எந்தெந்த வகை மீன்கள் வரும் என்ற அனுபவ அறிவுடன் தான் மீன்பிடிக்க செல்வதாக கூறுகிறார் ரகுபதி

ரகுபதி மேற்கொண்டு பேசுகையில், "அரசாங்கம் நினைத்தால் இந்த ஆமைகளின் ஓட்டம் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிந்து அந்த பகுதிகளுக்கு மட்டும் சிறப்பு பாதுகாப்பு அளிக்க இயலும். ஆனால் அதனை செய்யவில்லை. அதற்கு மாறாக அனைத்து மீனவர்களையும் ஐந்து நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் மீன் பிடிக்க கூறுவது சரியான தீர்வாகாது," என்றார்.

மீனவர்கள், ஒவ்வொரு காலத்திலும் எந்தெந்த இடங்களில் எந்தெந்த வகை மீன்கள் வரும் என்ற அனுபவ அறிவுடன் தான் மீன்பிடிக்க செல்வதாக அவர் கூறுகிறார்.

"அரசு இந்த ஆமைகளை பாதுகாப்பதற்கு முன்பில் இருந்தே இந்த ஆமைகளை நாங்கள் பார்த்து வருகின்றோம். பாதுகாத்தும் வருகின்றோம். ஆமைகள் வலையில் ஏறினால், அதற்கு தேவையான முதலுதவிகளை அளித்து கடலுக்குள் விடுகிறோம். ஆமையை இங்கே தெய்வமாக வணங்கும் போக்கும் இருக்கிறது. மீனவர்களை மட்டுமே குற்றவாளிகள் போல் சித்தகரிக்க வேண்டாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

மீனவர்கள் கூறுவது என்ன?

ஆமைகளின் இறப்பு குறித்து பெசண்ட் நகரில் உள்ள மீனவ சமுதாயத்தை சேர்ந்த பாளையத்திடம் பேசியது பிபிசி தமிழ். "இங்கு காலநிலை மாறி வருகிறது என்பதையும், போதுமான மீன்கள் கிடைக்காமல் மீனவர்கள் அவதியுறுவதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

பொதுவாக நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பயன்படுத்தும் கைவலையில் ஆமைகள் சிக்கினால் நாங்கள் வலையை அறுத்து அந்த உயிரை பிழைக்கவிட்டுவிடுவோம். அன்று எங்களுக்கு வருமானமே கிடைக்கவில்லை என்றாலும் நாங்கள் இதனைத் தான் செய்கிறோம்.

நாங்கள் இங்கு ஆமைகளை 'குட்டியம்மா' என்ற தெய்வமாக வழிபடுகிறோம். எங்கோ இறந்து போய் சென்னை கடற்கரையில் ஆமைகள் கரை ஒதுங்கினால் அதற்கு சென்னையில் வாழும் மீனவர்கள் தான் காரணம் என்று பொதுப்படையாக கூறுவது, அந்த சமூகம் ஆமைகள் மீது வைத்திருக்கும் மரியாதையை அவமதிக்கும் செயலாகும்," என்று கூறுகிறார்.

ஆமைகள் அசுத்தமான இடங்களில் முட்டையிடுவதில்லை, பாதுகாப்பான சூழல் இல்லை என்று தெரிந்துவிட்டால் முட்டைபோட வரும் ஆமைகள் திரும்பி நீருக்குள் சென்றுவிடுகின்றன என்று அவர் கூறினார்.

"சென்னையில் உள்ள பெரும்பாலான கடற்கரைகள் அசுத்தமாக, குப்பைகள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. இதனை யார் சரி செய்வது? இதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து யாரும் பேசுவதில்லை," என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, "எங்கோ இறந்து போய் சென்னையில் ஆமைகள் கரை ஒதுங்கினால் அதற்கு சென்னை மீனவர்கள் தான் காரணம் என்று பொதுவாக குற்றம்சாட்ட வேண்டாம்" என மீனவர் பாளையம் கூறுகிறார்

தடுக்க என்ன வழி?

"ட்ரோலர் வகை படகுகளை இயக்கும் மீனவர்களுக்கு தேவையான விழிப்புணர்வை கொடுத்து வருகின்றோம். அவர்களுக்கு மட்டுமின்றி விசைப்படகு மீனவர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோ" என்று கூறினார் வனத்துறை கண்காணிப்பாளர் மணீஷ் மீனா.

இதுதொடர்பாக மேற்கொண்டு பேசிய நிஷாந்த், இங்கே போதுமான கண்காணிப்பு அம்சங்கள் இல்லாமல் இருப்பதாக குறிப்பிடுகிறார்.

"ஆமைகளுக்கான பாதுகாப்பு என்று வரும்போது வனத்துறை, மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல்படை என்ற மூன்று துறைகள் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும்.

ஏன் என்றால், இந்த ஐந்து நாட்டிக்கல் மைல்களுக்கு உள்ளே மீன்பிடிக்கும் படகுகளை அடையாளம் காண ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். அதனை வனத்துறையோ, மீன்வளத்துறையோ மேற்கொள்ள இயலாது. இது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஆமைகளின் பாதுகாப்புக்காக ரோந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது," என்று கூறினார்.

சென்னையில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது ஏன்?

பட மூலாதாரம்,TNFORESTDEPT/X

படக்குறிப்பு, கடற்கரையில் ஆமைகள் இடும் முட்டையை, நாய்கள் மற்றும் மனிதர்களிடம் இருந்து பாதுகாத்து காப்பகங்களில் வைக்கிறது தமிழ் நாடு வனத்துறை

வலசை வரும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் பற்றி ஒரு பார்வை

எஸ்.எஸ்.டி.சி.என். என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு வனத்துறை, கடற்கரையில் ஆமைகள் இடும் முட்டையை சேகரிக்க ஒவ்வொரு நாளும் இரவு, 'டர்ட்டில் வாக்' நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம்.

கடற்கரையில் ஆமைகள் இடும் முட்டையை, நாய்கள் மற்றும் மனிதர்களிடம் இருந்து பாதுகாத்து காப்பகங்களில் வைக்கிறது தமிழ்நாடு வனத்துறை. 40 முதல் 45 நாட்களில் ஆமைகள் குஞ்சு பொரித்து வெளி வரும்போது, விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி அதனை கடலில் விடும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக தமிழக கடற்கரைகளில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு மட்டும், தமிழக கடற்கரைகளில் இருந்து 2 லட்சம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்திய பெருங்கடலில் சூடான நீரோட்டம் உள்ள பகுதிகளில் வாழ்கின்றன இந்த ஆமைகள். கடல் ஆமைகளில் மிகவும் சிறிய, ஆனால் அதிக அளவில் காணப்படும் ஆமைகளாக இவை இருக்கின்றன. இரண்டு அடி நீளம் கொண்ட இந்த ஆமைகள் 50 கிலோ வரை எடை கொண்டவை. தங்களின் வாழ்நாள் முழுவதும் கடல் நீரிலே வாழும் இந்த ஆமைகள், இனப்பெருக்கம் செய்யவும், முட்டைகளிடவும் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் வலசை வருகின்றன.

இதில் பெண் ஆமைகள் மட்டுமே கடற்கரைக்கு வருகின்றன. இந்த பெண் ஆமைகள் பொதுவாக, அவைகள் எங்கு பிறந்தனவோ அதே கடற்கரையை நோக்கி முட்டையிட வருகின்றன. இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஒடிசாவில் அதிகளவில் இந்த ஆமைகள் முட்டையிடுகின்றன.

ஆந்திரா, தமிழ்நாடு கடற்கரைகளிலும் இந்த ஆமைகள் அதிகமாக முட்டையிடுகின்றன. இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்சிகோ மற்றும் கோஸ்டரிகா நாடுகளில் உள்ள கடற்கரைகளில் இவை முட்டையிடுகின்றன. ஒவ்வொரு பெண் ஆமையும் 80 முதல் 120 முட்டைகளை இடுகின்றன.

இந்தியாவில் இந்த ஆமைகள், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ், அட்டவணை 1-ல் இணைக்கப்பட்டுள்ளது. இறைச்சி, தோல் மற்றும் ஓடுகளுக்காக இந்த ஆமைகளை வேட்டையாடுவதோ அல்லது உணவுக்காக இதன் முட்டைகளை எடுத்துச் செல்வதோ சட்டப்படி குற்றமாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் தான் (trawl boats) இந்த இறப்புக்குக் காரணம் என்று கூறுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

இயற்கையின் அருமை புரியாதவர்கள் தடை செய்யப்பட்ட trawl boats னால் வரும் இயற்க்கை அழிவை தெரிந்து கொண்டும் செயற்படுகிறார்கள் .

16 hours ago, ஏராளன் said:

"பொதுவாக ஆலிவ் ரிட்லி ஆமைகள், சுவாசிப்பதற்காக ஒவ்வொரு 25 நிமிடங்களுக்கும் ஒரு முறை கடலின் மேற்பரப்புக்கு வரும். ஆனால், ட்ரோலர் கப்பல்களில் இருந்து வீசப்படும் வலைகளில் இது சிக்கிக் கொள்ளும்போது, அதனால் சுவாசிக்க இயலாது. மூச்சடைப்பு ஏற்பட்டு அந்த வலைக்குள்ளேயே ஆமைகள் இறந்து விடுகின்றன. அந்த வலையை மேலே எடுத்து பார்க்கும்போது தான் அந்த வலைக்குள் ஆமைகள் இறந்து கிடப்பதே தெரியும். அதனை எடுத்து அவர்கள் கடலில் போட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். ஐந்தாறு நாட்களில் அவை கரை ஒதுங்குகின்றன,"என்று விளக்குகிறார் அவர்.

ஒரு நாள் மீன் வளம் அற்ற கடலை அந்த கடல் காண்பித்து கையை விரிக்கும் அப்ப தெரியும் ஏண்டாtrawl boats பயன்படுத்திய விளைவு .

16 hours ago, ஏராளன் said:

"ட்ரோலர் வகை படகுகளை இயக்கும் மீனவர்களுக்கு தேவையான விழிப்புணர்வை கொடுத்து வருகின்றோம். அவர்களுக்கு மட்டுமின்றி விசைப்படகு மீனவர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோ" என்று கூறினார் வனத்துறை கண்காணிப்பாளர் மணீஷ் மீனா.

ஒ அந்த விழிப்பு உணர்வில் தான் இலங்கையின் வடகிழக்கு கடற்கரையோரம்உங்கள் மீனவர்களால் சூறையாடபடுகிறதா?

ஆமை இறப்பை சாதரணமாக எடுத்து கொள்ள முடியாது ஆர்வமுள்ளவர்களுக்கு https://www.independent.co.uk/asia/india/sea-turtles-olive-ridley-dead-tamil-nadu-chennai-b2682604.html

Edited by பெருமாள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.