Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தின் மிகஉயரமான கட்டிடத்தின் பெயரை ஏன் மாற்றினார்கள்? நிலாந்தன்.

யாழ்ப்பாணத்தின் மிகஉயரமான கட்டிடத்தின் பெயரை ஏன் மாற்றினார்கள்? நிலாந்தன்.

தமிழ்ப் பகுதிகளில் கடலட்டை ஒரு ராஜதந்திரப் பொருளாகிவிட்டது. காற்றாலை ஒரு ராஜதந்திரப் பொருளாகிவிட்டது. ஒரு கலாச்சார மண்டபமும் அதன் பெயரும் ராஜதந்திரப் பொருட்களாகிவிட்டன.

தமிழர்களுக்கான குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கான இந்திய அரசாங்கத்தின் பரிசு என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தமிழர்கள் சார்ந்த பலப் பிரயோகத்தின் குறியீடா?

ஒரு பெரிய நாடு அயலில் உள்ள ஒரு சிறிய நாட்டின் சிறிய மக்கள் கூட்டத்துக்கு பரிசாகக் கட்டிய கலாச்சார மண்டபம் என்று பார்த்தால்,உலகிலேயே மிகப்பெரியது இந்த கலாச்சார மண்டபம்தான். உலகின் வெவ்வேறு பகுதிகளில் இதுபோன்ற வெவ்வேறு கட்டுமானங்களை வெளிநாடுகள் கட்டிக் கொடுத்திருக்கின்றன.ஆனால் அவ்வாறு ஒரு மக்கள் கூட்டத்துக்கு பரிசாக என்று கூறிக் கட்டப்பட்ட கலாச்சார மண்டபங்களில் ஆகப்பெரியது யாழ். கலாச்சார மண்டபம்தான்.அந்த மண்டபம் 10 மாடிகளைக கொண்டது. யாழ்ப்பாணத்தின் சுண்ணக்கல் தரையமைப்பைப் பொறுத்தவரை ஆறு மாடிகளுக்கு மேல் கட்டுவதற்கு விசேஷ அனுமதிகள் தேவை. யாழ்.கலாச்சார மண்டபம் அவ்வாறான விசேஷ அனுமதிகளோடு,விசேஷ கட்டுமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது.அதனால் தான் வடக்கு கிழக்கில் உள்ள ஆக உயரமான-10 மாடிக்கட்டடமாக-அது கட்டி எழுப்பப்பட்டது.

தமிழ்ப் பகுதிகளில் உள்ள மிக உயரமான கட்டிடமும் அதுவே.தமிழ்ப் பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பின் முழுமையாகத் திறக்கப்படாத, முழுமையாகப் பயன்படுத்தப்படாத ஆகப்பெரிய பொதுக் கட்டடமும் அதுவே.

கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் குறிப்பிட்ட எண்ணிக்கையான சிலரை கலாச்சார மண்டபத்துக்கு வருமாறு அழைத்தது.வழமையாக அங்கே நடக்கும் சந்திப்புகள் கலாச்சார நிகழ்வுகளைப் போன்று எதோ ஒரு நிகழ்வுக்காகத்தான் அழைக்கப்படுவதாகக் கருதி அழைக்கப்பட்டவர்கள் சென்றார்கள். கலாச்சார மண்டபத்தின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் சிறிய கைக்கடக்கமான மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது. அதில் ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், அரச அதிகாரிகள், ஊடக முதலாளிகள் உள்ளடங்கலாக மிகச்சிறிய தொகையினர் காணப்பட்டார்கள். நிகழ்வில் முதலில் பேசியவர் இலங்கையின் புத்தசாசன அமைச்சர்.அவர் பேச வரும்போது கையில் ஒரு புத்தகத்தை வைத்திருந்தார். பேச்சின் போது அது சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் என்று கூறினார்.அது முதலாவது மொழிபெயர்ப்பு என்றும் 1961ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது என்றும்,அதன்பின் பல்வேறு மொழிபெயர்ப்புகள் வந்துவிட்டதாகவும் அவர் அங்கு சொன்னார்.திருக்குறளைப் புகழ்ந்து பேசினார்.

அதன்பின் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் பேசினார்.அவரும் திருக்குறளைப் புகழ்ந்து பேசினார்.அந்த கலாச்சார மண்டபம் லோக்கலான அதாவது உள்ளூர் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று பேசினார்.மேலும் அதை முழுமையாக உபயோகத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் பேசினார்.முடிவில் டிஜிட்டலாக அந்த மண்டபத்தின் பெயர் திருவள்ளுவர் கலாச்சார மண்டபம் என்று மாற்றப்பட்டது.

ஒரு மக்கள் கூட்டத்துக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒரு கட்டடத்தின் பெயரை, அந்த மக்கள் கூட்டத்தைச் சேர்ந்த சமூகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், கலைஞர்கள் போன்றோரைக் கலந்தாலோசிக்காமல் ரகசியமாக மாற்றியமை என்பது பரவலாக விவாதிக்கப்படும், விமர்சிக்கப்படும் ஒரு விடயமாக மாறியது.பெயர் மாற்ற நிகழ்வில் பேசிய கொழும்புக்கான இந்திய தூதர் லோக்கல் கட்டமைப்பின் மூலம் அதை நிர்வகிக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தார்.ஆனால் பெயர்மாற்ற விடயத்தில் உள்ளூர் உணர்வுகள் கவனத்தில் எடுக்கப்படவில்லை.

ஏன் அவ்வாறு பெயர் மாற்றப்பட்டது என்று விசாரித்த பொழுது, உலகப் பொது மறையை எழுதிய வள்ளுவரின் பெயரைச் சூட்டுவதன்மூலம் அந்த மண்டபத்துக்கு உலகளாவிய ஒரு பரிமாணத்தை கொடுக்க முடியும் என்று கருதியதாகவும், அது பிரதேசம் கடந்த,மதம் கடந்த ஒரு குறியீடாக நிற்கும் என்று எதிர்பார்த்ததாகவும் இந்திய தூதரக வட்டாரங்கள் கருத்து தெரிவித்தன.இந்தியப் பிரதமர், இந்திய வெளியுறவு அமைச்சர் போன்றவர்கள் தெரிவித்த கருத்துக்களும் அவ்வாறுதான் காணப்படுகின்றன. அதேசமயம் உள்ளூர் உணர்வுகளைக் கவனத்தில் எடுக்காமல் அவ்வாறு பெயர் மாற்றியதன் விளைவுகளைத் தாம் உணர்ந்திருப்பதாகவும், அது தொடர்பாக டெல்லிக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த அடிப்படையில் மண்டபத்தின் பெயரில் யாழ்ப்பாணம் என்ற சொல் மீண்டும் சேர்க்கப்பட்டதாகவும் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் என்பது ஒரு புவியியல் பதம் மட்டும் அல்ல.அதைவிட ஆழமான பொருளில், அது ஒரு பண்பாட்டுப் பதம்.ஓர் அரசியல் பதம். ஈழத் தமிழர்களின் கலாச்சார தலைநகரங்களில் ஒன்று என்ற அடிப்படையில் அது ஈழத் தமிழ் அடையாளங்களில் முக்கியமானது.எனவே அந்தப் அரசியல்,பண்பாட்டுப் பெயரை மாற்றியமை ஈழத் தமிழர்களின் அரசியல் மற்றும் பண்பாட்டு உணர்வுகளைப் புண்படுத்துவதாக அமைந்திருப்பதைத் நாம் உணர்ந்திருப்பதாக இந்தியத் துணைத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. அப்பெயர் மாற்றத்திற்கு உத்தியோக பூர்வமாக கூறப்படும் காரணம் எதுவாகும் இருக்கலாம். ஆனால் அதற்குப் பின்னால் வேறு ஒரு ராஜதந்திர இலக்கு உண்டா என்ற கேள்வியுண்டு.

கட்டி முடிக்கப்பட்ட பின் இன்றுவரை முழுமையாகக் கையளிக்கப்படாத, முழுமையாகத் திறக்கப்படாத ஒரு பொதுக் கட்டிடம் அது.ஏன் அவ்வாறு முழுமையாக கையளிக்கவோ அல்லது திறக்கவோ முடியவில்லை? ஏனென்றால் அதில் இரண்டு விடயங்கள் சம்பந்தப்படுகின்றன.முதலாவது, தமிழ் மக்களுக்கு உரிய தன்னாட்சி அதிகாரத்தின் அளவை அளக்கும் ஒரு கட்டடம் அது. இரண்டாவது தமிழ் மக்களுக்கான தன்னாட்சி அதிகாரம் தொடர்பில் கொழும்பில் உள்ள மத்திய அரசாங்கத்தின் மீது இந்தியா பிரயோகிக்கக்கூடிய அழுத்தங்களின் அளவைக் குறிக்கும் ஒரு கட்டடம் அது.

பிரதமர் மோடி அதனை சில ஆண்டுகளுக்கு முன்பு மென் திறப்பு என்று கூறி அரைவாசி திறந்து வைத்தார்.அதற்குப் பின்னர் இரண்டு அரசாங்கங்கள் வந்துவிட்டன.ஆனால் இப்பொழுதும் அதனை முழுமையாகத் திறக்க முடியவில்லை. ஏன் ?

அந்த மண்டபத்தை இந்தியா தமிழர்களுக்கான பரிசு என்று கூறுகிறது. அதை தமிழர்களையும் உள்ளடக்கிய குறிப்பாக யாழ்.மாநகர சபை நிர்வாகத்தையும் உள்ளடக்கிய, ஒரு கட்டமைப்புத்தான் பரிபாலிக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கின்றது. ஆனால் இதுவரையிலும் இருந்த இலங்கை அரசாங்கங்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை. அது கூடுதலான பட்சம் கொழும்பில் உள்ள மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று கொழும்பில் இதுவரையிலும் இருந்த அரசாங்கங்கள் சிந்தித்தன.

மணிவண்ணன் யாழ்.மாநகர சபை முதல்வராக இருந்த காலத்தில் ஒரு சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.அதில் இந்திய துணைத் தூதுவரும் பங்குபற்றினார். உரையாடலின்போது அந்தப் பெரிய மண்டபத்தை பரிபாலிப்பதற்கு வேண்டிய நிதிக் கொள்ளளவு மாநகர சபையிடம் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது. எனினும் தனக்கு நிதி உதவி வழங்கப்பட்டால் தான் அதனை நிர்வாகிக்கத் தயார் என்று மணிவண்ணன் தெரிவித்திருக்கிறார். அந்த நிதியை குறிப்பிட்ட காலத்துக்கு இந்தியா வழங்கும் என்று இந்திய துணைத் தூதுவர் தெரிவித்துள்ளார். அப்பொழுது சந்திப்பில் பங்குபற்றிய கலாச்சார அமைச்சின் செயலாளர்- அவர் ஒரு மருத்துவர்- மணிவண்ணனைப் பார்த்துப் பின்வருமாறு கூறியுள்ளார்..”நீங்கள் இந்தியாவை நம்பக் கூடாது ; எங்களைத்தான் நம்ப வேண்டும்” என்று.

மேலும் அந்த மண்டபத்தில் உள்ள ஒரு மாடியைத் தனது அமைச்சுக்குத் தருமாறு நாமல் ராஜபக்ச முன்பு அமைச்சராக இருந்த பொழுது கோரிக்கை விடுத்ததாகச் செய்திகள் வெளிவந்தன. அதுபோலவே யாழ்ப்பாணத்தில் உள்ள சிறீலங்கா படைத்தரப்பும் அதில் இரு மாடிகளை தமது பிரயோகத்துக்குத் தருமாறு கேட்டதாக ஒரு தகவல் உண்டு.ஆனால் இந்தியத் துணைத் தூதரகம் அந்த வேண்டுகோள்களை சாதகமாகப் பரிசீலிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதான் இந்த மண்டபத்தை சூழ்ந்திருக்கும் அரசியல் யதார்த்தம்.

அதனால்தான் அந்தக் கட்டடத்தை மென் திறப்பு என்று அரைவாசி திறக்க வேண்டியிந்தது.அதைத் திறந்து இத்தனை ஆண்டுகளின் பின்னரும் முழுமையாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை விட வேண்டியிருக்கிறது. இப்பொழுது கொழும்பில் புதிய அரசாங்கம் வந்திருக்கிறது.அந்த அரசாங்கத்தை இந்த விடயத்தில் சம்மதிக்கச் செய்யலாமா என்று இந்தியா சிந்திக்கக்கூடும். குறிப்பாக அரசுத் தலைவர் சீனாவுக்குச் சென்று வந்த சில நாட்களில் இந்த விடயத்தை ஒரு பேசுபொருளாக்க இந்தியா விரும்பியிருக்கலாம். மண்டபத்தின் பெயரில் யாழ்ப்பாணம் என்ற அரசியல் பதத்தை அகற்றினால் கொழும்பை நம்பச் செய்யலாம் என்று இந்தியா சிந்தித்ததா?

ஆனால் பெயர் மாற்ற விவகாரம் ஒரு சர்ச்சையாக மாறிய பின்னணியில், அந்நிகழ்வில் பங்குபற்றிய அமைச்சர் சந்திரசேகரன் இந்த விடயத்தில் தமிழ் வாக்காளர்களின் உணர்வுகளைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு பதில் கூறியிருக்கிறார். பெயர் மாற்ற விவகாரம் தனக்கு முன்கூட்டியே தெரியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால் அவரோடு வருகை தந்த புத்தசாசன அமைச்சருக்கு ஏற்கனவே அது தெரியும். ஏனெனில் அவர் சிங்களத் திருக்குறளையும் கையில் எடுத்துக் கொண்டே பேச வந்தார். ஆயின் அமைச்சர் சந்திரசேகரனுக்கு தமிழ் மக்கள் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் அறிவிக்கப்படுவதில்லையா?

எதுவாயினும் யாழ் கலாச்சார மண்டபம் இதுவரை முழுமையாகத் திறக்கப்படவில்லை என்பதுதான் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலுமான அரசியல் யதார்த்தம் ஆகும். அப்பெருமண்டபம் இந்தியா ஈழத் தமிழர்களுக்கு வழங்கிய பரிசு மட்டுமல்ல, அது தமிழ் மக்களுக்கான தன்னாட்சி அதிகாரத்தின் அளவைக் குறிக்கும் ஒரு குறியீடு.தமிழ் மக்கள் தொடர்பாக இந்தியா,கொழும்பின்மீது பிரயோகிக்கக்கூடிய அழுத்தத்தின் அளவைக் குறிக்கும் ஒரு குறியீடு என்பதுதான் கடந்த பல ஆண்டு கால அரசியல் யதார்த்தம்.

https://athavannews.com/2025/1418239

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

“”நீங்கள்இந்தியாவை நம்பக் கூடாது ; எங்களைத்தான் நம்ப வேண்டும்“” அமைச்சர் சரியாகத்தான் கூறியுள்ளார்.

ஒரு 10 மாடிக்  கட்டடத்தையே  முழுமையாக இயங்க வைக்க இந்தியாவால் முடியவில்லை. இவர்களா தமிழருக்கு ஒரு தீர்வைப் பெற உதவுவார்கள்? 

😏

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

முடிவில் டிஜிட்டலாக அந்த மண்டபத்தின் பெயர் திருவள்ளுவர் கலாச்சார மண்டபம் என்று மாற்றப்பட்டது.

இன்றுவரை இந்த பெயர் மாற்றத்துக்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்று மர்மமாகவே இருக்கிறது.

இதுவரை சகல அரசியல்வாதிகளும் பெயர் சொல்லக் கூடியவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மண்டபத்தை இந்தியாவின் நேரடி உதவி மற்றும் வழிகாட்டலில் நிர்வகிப்பதை விட இலங்கை அரசின் நேரடி உதவியுடன் நிர்வகிப்பதே பொருத்தமானது. 

இந்தியா இதைக் கட்டச் செய்த உதவிக்காக அதைப் பயன்படுத்தி தனது அரசியலை இங்கே செய்ய நாம் இந்தியாவுக்கு அனுமதிக்க முடியாது.

ஒரு பெரிய நன்றியோடு முடித்துக்கொள்ளவேண்டும்.

ஏற்கனவே யாழ் இந்துக கல்லூரிக்குள் ஊடுருவி இருக்கும் இந்தியா இந்த மண்டபத்தை இங்கே திறந்ததுக்கான நோக்கம் யாழ்ப்பாணத் தமிழர்களை கலை கலாசாரம் என்ற போர்வையில் மெதுவாக ஹிந்துத்துவ அடையாளத்துக்குள் அமிழ்த்தி விடுவது தான். அதை நற்றமிழர் எவரும் அனுமதிக்கக் கூடாது 

விட்டால் நாளைக்கு இங்கே இலங்கையில் புலிகளால் கொல்லப்பட்ட இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு நினைவு மண்டபமும் அமைக்கப்படலாம். 

 

பண்டாரநாயக்கா நினைவு மண்டபதை( BMICH )சீனா கட்டிக் கொடுத்தது என்பதற்காக இங்கே இந்தியா கட்டிக் கொடுத்தது தான் இந்த கட்டிடம். 

கல்வி அமைச்சை, பல்கலைக்கழக கல்வியை இலங்கை அரசு நடத்துவத்தை ஆட்சேபிக்காத நாம் எதற்க்காக இதை இலங்கை அரசு ஏற்று நடத்துவதை மட்டும் எதிர்க்க வேண்டும்? 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.