Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"கரை கடந்த புயல்"

 

நவம்பர் 27, 2024 அன்று காலை கடற்கரை நகரமான திருகோணமலை அபாய எச்சரிக்கையுடன் விழ்த்தெழுந்தது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் புயலாக வலுப்பெற்ற, பெஞ்சல் புயலாக [Fengal Cyclone] வலுவடைந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. செல்வராஜா குடும்பத்தினருக்கு இந்தப் புயல் இயற்கைப் பேரிடரை விட அதிகம்; இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளை சீர்குலைக்கும் அச்சுறுத்தலாக இருந்தது.

மீன்பிடி தொழிலாளியான செல்வராஜாவுக்கும், மீனா என்ற அவரின் மனைவிக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூத்தவரான 18 வயது கவிதா, தனது குழந்தைப் பருவ காதலியான அரவிந்துடன் நவம்பர் 29ஆம் தேதி திருமணத்தை பதிவு செய்யவிருந்தார். அரவிந்த் அடுத்த வாரம் உயர் படிப்பைத் தொடர லண்டனுக்குப் புறப்பட இருப்பதால், அவன் புறப்படுவதற்கு முன்பு அவர்கள் தங்கள் காதலை, திருமணப் பதிவாக, அதை இரு குடும்பத்தார்களின் மத்தியில் உறுதிப்படுத்த முடிவு செய்தனர். ஆனால், அவன் திரும்பி வந்த பின்புதான், குடும்ப மரபின்படி [சம்பிரதாய முறைப்படி]  திருமணம் செய்வதென்றும் முடிவெடுத்தனர்.  

இலங்கையில், நவம்பர் 27 2024 புதன்­கி­ழமை மாலை வரை, நிலவும் சீரற்ற கால­நி­லையால் பாதிக்­கப்­பட்டோர் எண்­ணிக்கை இரண்டு இலட்­சத்தைத் தாண்­டி­யுள்­ளதுடன் நால்வர் உயி­ரி­ழந்­துள்ளதோடு, 8 பேர் காணாமல் போயுள்­ளனர். இது தவிர 9 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். அத்துடன் 8 வீடுகள் முழு­மை­யா­கவும், 620 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன என அரசு அறிவித்தது. இவைகளில், திரு­கோ­ண­ம­லையில் 1537 குடும்­பங்­களைச் சேர்ந்த 4385 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதே­வேளை இது கிழக்கு கடலின் ஊடாக நகர்­வதால் அப்­ப­கு­தி­களில் காற்றின் வேகம் மணித்­தி­யா­லத்­துக்கு 40 – 50 கிலோ மீற்­ற­ராகக் காணப்­படும் எனவும்  ஆழ்­கடல் பகு­தி­களில் 80 – 90 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதி­க­ரிக்கும் என்­பதால் கடற்­றொ­ழி­லா­ளர்கள் கட­லுக்கு செல்­வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசு தெரி­வித்தது.

செல்வராஜாவும் மீனாவும் தங்கள் வீட்டில் இருந்து கடலை நோக்கினார்கள். அங்கே, அவசர அவசரமாக கரைக்கு திரும்பிக்கொண்டு இருக்கும் மீன்பிடி படகு ஒன்று, புயல் காற்றினால்  கவிழ்வதைக் கண்டனர்.  


"கால் ஏமுற்ற பைதரு காலைக்
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு"


'கடிய புயற்காற்று வீசிச் சுழற்றுதலாலே துன்புற்று கடலிலே தாம் ஏறியிருக்கும் மரக்கலங் கவிழ்ந்து விட, கலக்கமுற்றுத் தாமும் ஒருசேர வீழ்ந்து' என நற்றிணை (30: 7-8) கூறுவதை செல்வராஜா ஒப்பிட்டுப் பார்த்தான். அவன் கண்களில் கண்ணீர் சிந்தியது.

 
இந்த பெஞ்சல் புயல் மேகங்கள் மெல்ல மெல்ல பெரிதாக திரண்டதால், செல்வராஜா குடும்பத்தின் கவலைகளும் அதிகரித்தன. அவர்களின் சாதாரண வீட்டிற்கு மேலும் பலமான காற்றுடன் மழை பெய்தது, அந்தக் கடலோரக் காற்று அச்சுறுத்தலாக வளர்ந்தது. எனவே திருமண பதிவை ஒத்திவைக்கலாமா என்று செல்வராஜாவும் மீனாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிவாளர் அலுவலகம் கூட அருகில் இல்லை, சில கிலோமீட்டர் தொலைவில் தான் இருந்தது.

அதேவேளை இலங்கை வானொலி, எச்சரிக்கை அறிவித்தல்களை தொடர்ந்து அவசரம் அவசரமாக அறிவித்துக்கொண்டு இருந்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன .கூரைகள் பறந்தன. ஆடு மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பெரியோரும் குழந்தைகளும் உணவின்றி தவித்தனர் என ஒரு பட்டியலையே கொடுத்துக் கொண்டு இருந்தது. 

"கடற்கரை ஊருகள், நகரங்கள் அழிந்திடுமாம்    
வெள்ளம், ஊதி வந்த காற்றுடனே போட்டியிடுமாம் 
சீருந்துகள் [மகிழுந்து], படகுகள் அழிந்திடுமாம்     
வீடுகள், பாடசாலைகள் வெள்ளம் நுழைந்துடுமாம்  
சோலைகளும் மரங்களும் வேர்கள் பிடுங்கிடுமாம்" 

"புயல் தீவிரமடைந்தால் என்ன செய்வது?" மீனா கேட்டாள், அவள் குரல் கவலையில் கனத்தது. "இது மிகவும் ஆபத்தானது." ஆனால் கவிதா, அரவிந்தின் கையைப் பிடித்துக் கொண்டு உறுதியாக இருந்தாள். 

“அம்மா, இது எங்களுக்கு முக்கியம். புயல் நம்மைத் தடுத்து நிறுத்த அனுமதிக்க முடியாது. அரவிந்தும் தலையசைத்தான், அமைதியான உறுதியால் அவர்கள் இருவரினதும் கண்கள் நிரம்பி ஒளிர்ந்தன. "இதை ஒன்றாகச் சந்திப்போம்," என்று அவன் உறுதியளித்தான்.

"உரு கெழு யானை உடை கோடு அன்ன,
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ,
தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்
காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்:         
நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ
வில் எறி பஞ்சி போல, மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே"

'அச்சம் தரும் யானையின் உடைந்த தந்தம் போல மலர்ந்திருக்கும் தாழம்பூவின் மடல், வாடைக்காற்று வீச்சில், மகளிர் வண்டல் விளையாடும் களத்தில் வந்து விழும் ஊர் நம் [கடற்கரை] ஊர். இந்த ஊரே என்னைக் கைவிட்டுத் தனிமைப்படுத்தினாலும், அவர் தான் எனக்குத் துணை. அவரும், நான் இல்லாமல், தான் இல்லை என்று வாழ்பவர். வில்லால் அடித்த பஞ்சு போல அலைநுரை பொங்கும் குளிர்ந்த கடல்நிலத் தலைவனாகிய சேர்ப்பன் [நெய்தல் நிலத்து மகன் ] அவன். அவனோடு சிரித்துக்கொண்டு விளையாடாவிட்டால் நான் இருக்கமாட்டேன்.' என்கிறது நற்றிணை 299 கூறுகிறது. அப்படித்தான்  கவிதா  இருந்தாள். 

நவம்பர் 29 காலை இடைவிடாத மழை மற்றும் பலத்த காற்றுடன் விடிந்தது. வெளியே குழப்பம் இருந்தாலும், செல்வராஜா குடும்பத்தினர் அன்றைய தினத்திற்கு தங்களை தயாராக்கினர். அக்கம்பக்கத்தினர் எல்லோரும் எல்லாவித உதவிக்கும் விருப்பத்துடன் உள்ளே வந்தனர். கையில் குடைகள் மற்றும் மழையங்கிகளும் கொண்டுவந்தனர். மற்றும் பதிவாளர் அலுவலகத்திற்கு பயணம் செய்ய ஒரு வேனையும் [கூண்டுந்து] கொண்டு வந்தனர். கவிதாவின் சகோதரர்கள், 15 வயது ரமேஷ் மற்றும் 12 வயது சஞ்சய், மழையில் இருந்து அக்காவை பாதுகாக்க, குடைகளைப் பிடித்துக் கொள்ளும் பணியில் ஈடுபட்டனர்.

செல்வராஜா குடும்பம் வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் செல்லும்போது, மரங்கள் மற்றும் மின்கம்பிகள் அங்கும் இங்கும் விழுந்து கிடந்தது . வேன், அங்கு வீதியில் ஓடாமல் தேங்கி இருக்கும் வெள்ளத்தில் பல முறை சறுக்கியது, ஆனால் ஓட்டுநர், அனுபவம் வாய்ந்த உள்ளூர்வாசி,  திறமையாக அந்த வீதியில் சமாளித்து ஓட்டினான். "நாங்கள் சரியான நேரத்துக்கு முன் அங்கு போவோம்," என்று அவன் அவர்களுக்கு உறுதியளித்தான், “பொதுவில் தூங்கு விசியுறு தண்ணுமை வளி பொரு தெண் கண் கேட்பின்” எனப் புறநானூறு 89 இல் கூறும் 'மன்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போர்த்தண்ணுமையில் (போர்முரசு) காற்று மோதுவதால் உண்டாகும் சிறிய ஒலியான' ஊளையிடும் காற்றையும் மீறி அந்த அவனது குரல் அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது.
 


பதிவாளர் அலுவலகத்தில், ஒரு சில தம்பதிகள் மட்டும், புயலையும் தைரியமாக எதிர்கொண்டு, தங்கள் குடும்பத்துடன் பதிவு திருமணம் செய்ய அங்கு வந்திருந்தனர். வளிமண்டலம் பதட்டமாக இருந்தாலும், தங்கள் நல்ல நாளை பின்போடாமல், நிறைவேற்றுவதில் அவர்கள் மகிழ்வாகவும் உறுதியாகவும் இருந்தார்கள். கவிதா மற்றும் அரவிந்தின் முறை வந்ததும், பதிவாளர் விழாவை விரைவாக, சுருக்கமாக ஆனால் ஆடம்பரமாக நடத்தினார். இளம் தம்பதிகள் ஒருவருக்குஒருவர் சபதம் பரிமாறிக் கொண்டார்கள்.  அவர்களின் காதல், வெளியில் வீசும் புயலை விட பலமாக இருந்தது.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய சுமேரியாவில் ஆண் பெண் இருவருக்கும் இடையிலான உறவுகள், ஒரு திருமணக் கோரிக்கை  அல்லது முன்மொழிதல்  உடன் ஆரம்பமாகி, அதை தொடர்ந்து, திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப் பட்டு , இறுதியாக ஒரு கல்யாணத்தில் முடிவுக்கு வருகிறது. அங்கு பொதுவாக எல்லா பெண்களும் தமது சம்பிரதாய பங்கான, மனைவி, தாய், வீட்டுக் காப்பாளர் ஆகிய நிலைகளுக்கு சிறு வயதில் இருந்தே நன்கு பயிற்றுவிக்கப் பட்டுள்ளனர். பெண் தெய்வம் குலாவிற்கான [goddess Gula] துதிப்பாடல், பெண்களின் வெவ்வேறு  நிலைகளை "நான் ஒரு மகள், நான் ஒரு மணமகள், நான் ஒரு  மனைவி, நான் ஒரு இல்லத் தரசி" ["I am a daughter, I am a bride, I am a spouse, I am a house keeper"].என கூறுகிறது. அப்படித்தான் இன்று கவிதா மகள் நிலையில் இருந்து மணமகள் நிலைக்கு வந்துள்ளார்.  

"புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி,
''கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என,
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி    
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல் மணம் கழிந்த பின்றை"

திருமண பதிவு நிலையத்தில் கூடியிருந்த சிறுகூட்டத்தில் இருந்த திருமணமான மகளிரும் தம் தம் கணவருடன் சேர்ந்து கூடிநின்று ஈரமான பூக்களையும், நெல்லையும் தலையில் போட்டு, நீர் தெளித்து வாழ்த்திச் சடங்குத் திருமணத்தை நடத்திவைத்தனர். “கற்புநெறி வழுவாமல் வாழ்க, நல்ல பல பிள்ளைகளை உலகுக்கு உதவி வாழ்க, தன்னைப் பெற்ற பெற்றோரையும், கணவனைப் பெற்ற பெற்றோரையும் விரும்பிப் பேணும் பிணைப்புடையவளாக வாழ்க” என்றல்லாம் வாழ்த்தினர். கவிதாவின் தலையில் போட்ட பூவும், நெல்லும், சீவி முடித்த கூந்தலில் (கதுப்பு) கிடந்தன. அவள் மகிழ்ச்சியின் ஒரு எல்லைக்கே போய்விட்டாள்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “பெங்கல்” சூறாவளியானது திருகோணமலைக்கு வடக்கே 360 கிமீ தொலைவிலும் காங்கேசன்துறைக்கு வடகிழக்கே 280 கிமீ தொலைவிலும் நவம்பர் 29, 2024 இரவு 11.30 மணிக்கு நிலை கொள்ளுமென வானிலை ஆய்வு மையம் அன்று தெரிவித்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அறிவித்தது. எனவே வீட்டிற்கு திரும்பிய குடும்பம், அவசரம் அவசரமாக ஒரு சிறிய கொண்டாட்டத்திற்கு கூடியது. அக்கம் பக்கத்தினர் கலந்து கொண்டு, வீட்டில் இருந்து இனிப்புகளை எடுத்து வந்து வாழ்த்துக்கள் [ஆசிர்வாதம்] கூறினர். அரவிந்தும் கவிதாவும் எதிர்கால கனவுகளைப் பகிர்ந்து கொண்டு, மாலைப் பொழுதை தங்கள் வீட்டின் சுற்றாடலில் கழித்தனர். 

"புயல்கள் கரையைத் தாக்கினாலும், கடல் கிசுகிசுக்கிறது: எங்கள் காதல் நிலைத்திருக்கும்." என்ற உணர்வுதான் அவர்கள் இருவரிடமும் இருந்தது. புயல் ஓயாமல் தொடர்ந்தாலும், அவர்களின் இதயம் அமைதியாக இருந்தது, அவர்களின் அன்பாலும், குடும்பத்தினரின் ஆதரவாலும் அது நங்கூரமிட்டது. மறுநாள் காலை, வானம் தெளிவாகத் தொடங்கியது. என்றாலும் இருவர் குடும்பமும் மற்றொரு சவாலை எதிர்கொண்டது: அரவிந்தை கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லவேண்டி இருந்தது. பொது போக்குவரத்து தடைப்பட்டதால், செல்வராஜா ஒரு நம்பகமான வேனை ஏற்பாடு செய்தார். ஆனால் மரங்கள் முறிந்து விழுந்த மற்றும் உடைந்த பாலங்கள் நிறைந்த சாலைகளும் இடைவிடாத மழையும் பயணத்தை அவர்களுக்கு  கடினமாக்கியது. எது எப்படியாயினும் அவர்கள் சரியான நேரத்தில் விமான நிலையத்தை அடைந்தனர்.

புறப்படும் வாயிலில் கவிதாவும் அரவிந்தும் கண்ணீர் மல்க விடைபெற்றனர். அரவிந்த் அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டான். “தினமும் உன்னுடன் பேசுவேன், எழுதுவேன், இந்த ஆண்டுகள் விரைவில் கடந்துவிடும்" என்று ஆறுதல் கூறினான். அவன் சென்றதும், கவிதா தன் கண்ணீரைத் துடைத்தாள், அவளுடைய இதயம் கனமாக இருந்தாலும் நம்பிக்கையுடன் இருந்தது. அவர்களின் காதல் தூரத்தையும் நேரத்தையும் தாங்கும் என்று அவளுக்குத் தெரியும்.

செல்வராஜா குடும்பத்தினர் அன்று மாலையே திருகோணமலைக்குத் திரும்பினர். புயல் அவர்களின் நெகிழ்ச்சியை சோதித்தது, ஆனால் அவர்கள் அதை ஒன்றாக எதிர்கொண்டனர். கவிதா மற்றும் அரவிந்துக்கு, புயல் இயற்கையின் சக்தி மட்டுமல்ல, அவர்களின் அன்பின் வலிமைக்கு ஒரு சான்றாக இருந்தது, கடுமையான காற்று கூட அவர்களைப் பிரிக்க முடியாது என்பதை நினைவூட்டியது. காதலும் கரையைப் போலவே ஒவ்வொரு புயலையும் தாங்கும் என்பதை உணர்ந்தாள்.

"புளகாங் கிதமே புறவேலி யாக. 
கன்னந் தனில் நீ சின்ன மாகள். 
அடைக்கலப் பொருள்போல் அமையப்  பேணும்" [காதா சப்த சதி 1 - 69]


[காதா சப்த சதி' என்பது கி. மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பாடல்கள்]

ஒரு பொருளை ஒருவரிடம் அடைக்கலமாகக் கொடுத்தால், அதை பாதுகாப்பது அவரின் அறத்தின் கடமை. அதைப்போலத்தான் அரவிந், விமான நிலையத்தில் பிரியும் முன் கவிதாவை காதலுடன் முத்தமிட்ட பற்குறியை கவிதா கண்ணாடியில் காணும் போதெல்லாம் புளகிதம் அடைந்து, அதை அரவிந்தின் நினைவாக விரும்பி பாதுகாத்தாள்!


நன்றி   


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

May be an image of 4 people and text that says 'தலைப்ப: கரைகடந்த புயல்'


 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கரை கடந்த புயல்" கதை அமர்க்களம் 👍 

  • கருத்துக்கள உறவுகள்

கதைகளுக்கிடையே கவிதைகளும் அவற்றின் விளக்கங்களும் வாசிக்க சுவையாக இருக்கின்றன ...........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

தில்லை யாழில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் என்று சொல்லக் கூடிய ஓரிருவரில் நீங்களும் ஒருவர்.

ஆரம்பத்தில் ஏதோ சுனாமியைப் பற்றியே எழுதுகிறீர்கள் என்று எண்ணினேன்.

ஒரேஒரு கேள்வி ஐயா.

நீங்கள் தட்டச்சு செய்கிறீர்களா?அல்லது குரலால் பதிவு செய்கிறீர்களா?

ஒரே குழப்பமாகவே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கதை மிகவும் நன்றாக இருக்கின்றது, தில்லை ஐயா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

தில்லை யாழில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் என்று சொல்லக் கூடிய ஓரிருவரில் நீங்களும் ஒருவர்.

ஆரம்பத்தில் ஏதோ சுனாமியைப் பற்றியே எழுதுகிறீர்கள் என்று எண்ணினேன்.

ஒரேஒரு கேள்வி ஐயா.

நீங்கள் தட்டச்சு செய்கிறீர்களா?அல்லது குரலால் பதிவு செய்கிறீர்களா?

ஒரே குழப்பமாகவே இருக்கிறது.

தட்டச்சு தான், எனக்கு குரல் பதிவு பெரிதாக வராது, என் உச்சரிப்பு ஆங்கிலமோ, தமிழோ கொஞ்சம் பிழை 

உதாரணமாக ல, ழ, ள , அப்படியே ர, ற வித்தியாசமே இல்லை. சின்ன வயதில் அதைத் திருத்தக்கூடிய வசதி இருக்கவில்லை, என் அப்ப ஒரு சுருட்டுத் சுத்தும் கூலித் தொழிலாளி, எட்டு பிள்ளைகள், நான் ஏழாவது. என்றாலும் எல்லா ஐந்து ஆண்களும் சிறந்த பணிக்கு உயர்ந்தார்கள். நானே என் பாட்டில் மனதில் வாசித்து, விளங்கி ஒரு எல்லையைத் தாண்டினேன்.   

ஓய்வின் பின்புதான் எழுதத் தொடங்கினேன்.  நன்றி 

464976930_10226788985373495_7342554609821795825_n.jpg?stp=dst-jpg_p403x403_tt6&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=9BlB1e4LWxoQ7kNvgFa_oVn&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=Aab-xbrePyVxjrRa2mimspF&oh=00_AYDqi1doSrN-CR3b3xtPZSmVgKz1enVQpuFTn4rs3qCBPg&oe=67AA5F69

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, kandiah Thillaivinayagalingam said:

தட்டச்சு தான், எனக்கு குரல் பதிவு பெரிதாக வராது, என் உச்சரிப்பு ஆங்கிலமோ, தமிழோ கொஞ்சம் பிழை 

உதாரணமாக ல, ழ, ள , அப்படியே ர, ற வித்தியாசமே இல்லை. சின்ன வயதில் அதைத் திருத்தக்கூடிய வசதி இருக்கவில்லை, என் அப்ப ஒரு சுருட்டுத் சுத்தும் கூலித் தொழிலாளி, எட்டு பிள்ளைகள், நான் ஏழாவது. என்றாலும் எல்லா ஐந்து ஆண்களும் சிறந்த பணிக்கு உயர்ந்தார்கள். நானே என் பாட்டில் மனதில் வாசித்து, விளங்கி ஒரு எல்லையைத் தாண்டினேன்.   

ஓய்வின் பின்புதான் எழுதத் தொடங்கினேன்.  நன்றி 

ரொம்பவும் பெருமையாக இருக்கிறது தில்லை.

தொடர்ந்தும் நல்ல நல்ல படைப்புகளைத் தாருங்கள்.

  • 3 weeks later...

சிறு வயதில் கேட்ட இசையும் கதையும் நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியது. உங்கள் பாணியில் சரித்திரத்தையும் இலக்கியத்தையும் இடையிடையே தொட்டு வித்தியாசமான முறையில் எழுதியுள்ளீர்கள். நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.