Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"அன்புடன் தேன்மொழி"

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கையிலுள்ள 13 பல்கலைக்கழகங்களுள் ஒன்று. இது சேர். பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியை மையமாக வைத்து, 1974 ஆம் ஆண்டிலேயே நிறுவப்பட்டது. இன்று [2024] இலங்கையில் தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளது. 

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் என்றும் சலசலப்பாக , அதன் சிவப்பு செங்கல் சுவர்கள் கல்வி அபிலாஷைகள் மற்றும் இளமைக் கனவுகளின் நறுமணத்தில் மூழ்கி இருந்தது. 2024 இல், மாணவர்களின் கடலில், ஒரு பெயர் அடிக்கடி பாராட்டுக்களுடன் பலர் இதயங்களில் கிசுகிசுத்தது: அழகும் அன்பும் தன்னகத்தே கொண்ட, முதலாம்  ஆண்டு அறிவியல் பீட  மாணவி, 'தேன்மொழி' தான் அவள். சிகப்பு நிறமும், ஒல்லியும், சராசரி உயரமும் கொண்ட அவள், தன்னம்பிக்கையான தோரணையுடன், சிரமமின்றி எல்லோர் கவனத்தையும் தன்பால் ஈர்த்தாள். ஒரு பெண்ணின் அழகு இலக்கணத்தில் நீண்ட கால்கள், ஒரு மெல்லிய இடுப்பு மற்றும் அழகான மார்பு ஆகிய, மூன்று அடிப்படைக் கருத்துக்களைக் கொண்டது. அவள் இந்த இலக்கணத்துக்கே பொருள் சொல்லுபவளாக இருந்தாள். 

அழகிய தோற்றத்தையும், முகப்பொலிவையும் தரும் பிரகாசமான கண்களையும், சிரிக்கும் போது பார்ப்பதற்கு கவர்ச்சியையும் அழகையும் கொடுக்கும் கொழு கொழு கன்னங்களையும், கவர்ச்சியான முழு உதடுகளையும், மற்றும் சுருண்ட  நீண்ட கருங் கூந்தலையும் கொண்ட  அவள், தனது  கனிவான புன்னகையாலும் கடுமையான இதயங்களைக் கூட உருக்கும் குரலாலும் ஒவ்வொருவரையும், குறிப்பாக ஆண்களை தனக்குத் தெரியாமலே கவர்ந்தாள். அவளுடைய அழகு சங்க இலக்கியங்களில் காணப்படும் விளக்கங்களை எதிரொலிப்பது போல் தோன்றினாலும் - உமாதேவியின் நேர்த்தியையும் கவர்ச்சியையும் அழகையும் சுட்டிக்காட்டும் முதலாம் திருமுறை தேவாரத்துடன் அவள் ஒப்பிடக் கூடியவள்.

"மாதர்ம டப்பிடியும் மட வன்னமு மன்னதோர் நடை யுடைம் ......  தேமரு வார்குழலன் னந டைப்பெடை மான்விழித் திருந் திழை பொருந் துமே னி ...... வார்மலி மென்முலை ....... வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து மழையில் தோன்றும் விண் நின்ற மதியின் மென் பூஞ் சிகழிகைக் கோதை வேய்ந்தார் ...... " 

அதாவது, விரும்பத்தக்க இளம்பிடியையும் [அழகிய பெண்ணையும்], இள அன்னத்தையும் போன்ற நடையினை உடையவளாகிய .......  இனிமையும், மணமும் பொருந்திய நீண்ட கூந்தல், அன்னம் போன்ற நடை, பெண்மான் போன்ற விழி இவற்றை உடையவளும் திருத்தம் பெற்ற அணிகலன்கள் பூண்டவளும் .......... கச்சணிந்த மென்மையான தனங்களை [பெண்ணின் மார்பகம்] உடைய .........  கரிய வண்ணமும் கொண்ட கூந்தல் தொகுதியை வட்டமாகப் பின்னி,  கூந்தல் வட்டத்தில் மேகத்திலே தோன்றும் கிரணங்கள் விரிய, சந்திரனைப் போல, மெல்லிய பூக்களால் ஆன ’சிகழிகை’ [தலையைச் சூழ அணியும் மாலைவகை] என்னும் தலைமாலையைச் சூடிய ...... ' என்கிறது இந்த தேவார வரிகள். ஆனால் அவள் உண்மையில் இதைவிட அழகு! 

தேன்மொழி ஒரு செல்வந்த பிராமண குடும்பத்திலிருந்து வந்தவள், பாரம்பரியம் மற்றும் மதிப்புகளில் அவளுடைய குடும்பம் வாழ்ந்து வந்தது. அவளுடைய சிறப்புப் பின்னணி மிகவும் நன்றாக பெருமையாக இருந்த போதிலும், அவள் அடக்கமாகவும், கனிவாகவும், கூர்வமான புத்திசாலியாகவும் இருந்தாள். அவளுடைய அரவணைப்பு மற்றும் வசீகரத்திற்காக அவளுடன் கூடப்படிக்கும் சகாக்கள் மற்றும் மூத்த மாணவர்கள், விரிவுரையாளர்கள் என்றும் காத்திருந்தனர், ஆனால் அவளுடைய இதயம் எனோ அமைதியாக ஒரு துணையை, நண்பனை தானே ஒருதலையாகத் தேர்ந்தெடுத்தது, அவன் தான் கலாநிதி [டாக்டர்] ஆய்வகன்.

கலாநிதி ஆய்வகன் புதிதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு நியமிக்கப்பட்ட இயற்பியல் [பௌதிகவியல்] விரிவுரையாளர், வயது ஒன்றும் பெரிதாக இல்லை, ஒரு இருபத்தி ஆறு அல்லது இருபத்தி ஏழு இருக்கும். இவனின் வருகை குறிப்பாக பெண்களை திரும்பி பார்க்கவைக்கும். ஒரு கிரேக்க கடவுளின் அல்லது மன்மதனின் கவர்ச்சியுடன், அவன் கம்பீரமான உடல் அமைப்பையும், உடல் வலிமை மற்றும் ஒழுக்கத்தை சுட்டிக்காட்டும் ஒரு தடகள உடலமைப்பையும் கொண்டிருந்தான். ஒரு  கவிஞன் அவனைப் பார்த்திருந்தால், வீரத்தின் தமிழ் கடவுளான முருகனுடன் கூட ஒப்பிட்டிருக்கலாம்? அவனது ஒளிரும் அழகு மற்றும் வசீகரம் வர்ணிக்க முடியாது. அவனின் அழகை சுருக்கமாக சொலவதென்றால், கம்பனைத்தான் கூப்பிடவேண்டும். 

"தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான்
உருவுகண் டாரை ஒத்தார்."

ஆய்வகனின் தோள்கள், தாமரை மலரையொத்த பாதங்கள், திடமான கைகள் என ஒவ்வொரு அங்கத்தையும் பார்த்த பெண்கள் அவ்வங்கத்தை விட்டுப் பார்வையை நீக்க விரும்பாத அளவு அதன் வனப்பால் ஈர்க்கப் பட்டதால் வேறோர் அங்கத்தைப் பார்க்காமல் இருந்துவிட்டார்கள். அப்படி ஒரு கம்பீரம்! கலாநிதி ஆய்வகனின் அறிவுத்திறனும் அமைதியான கவர்ச்சியும் அவனைச் சந்தித்த அனைவரையும் கவர்ந்தன. அவன் தனது தொழில்முறை எல்லைகளில் உறுதியான நம்பிக்கை கொண்டு இருந்ததுடன், தனது வேலையிலும் முறைப்படி ஆழ்ந்த கவனம் செலுத்தினான். 

தேன்மொழியின் பின்னணியும் ஆய்வகனின் பின்னணியும் முற்றிலும் மாறுபட்டது. ஒரு கிறித்தவ கூலித்தொழிலாளியின் மகன் தான் இவன். என்றாலும் வறுமையின் பிடியிலிருந்தும், வசதிகளற்ற சூழலில் இருந்தும் தன் விடாமுயற்சியினூடாக எல்லா முரண்பாடுகளையும் உடைத்தெறிந்து, கடினமான உறுதியாலும், அறிவுக்கான தீராத தாகத்தாலும் உந்தப்பட்டு, இந்த நிலைக்கு உயர்ந்தவன் தான் அவன். அவன் அதை என்றும் மறக்ககவும் இல்லை, மறைக்கவும் இல்லை. தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஒரு பிறநாட்டு கலாநிதி பட்டத்துக்கான அவனது பயணம் பெருமைக்குரியது. 

"சாதிகள் இல்லையடிபாப்பா - குலத்
தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி - இவை
நிறைய வுடையவர்கள் மேலோர்"

இன்று சாதியம் பற்றிய அண்மைக்காலக் கலந்துரையாடல்களில் ஈடுபடுவோரில் ஒரு பகுதியினர், சாதியம் என்பது யாழ்ப்பாண தமிழ்ச் சமூகத்தில் இல்லவே இல்லை, அல்லது பெரிதளவில் இல்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர். “இப்பெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்?” என்பது தான், அவர்களது மகுட வாக்கியமாக இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை, சாதாரண நகர்ப்புறச் சூழலில், வெளிப்படையான சாதியப் பாகுபாடுகள் இல்லாத நிலைமை, அங்கு முற்றிலும் சாதியமே இல்லையென ஒரு முடிவை எடுக்கத் தூண்டியிருக்கலாம்.  

ஒரு வகையில், அந்த எண்ணத்தில் சிறிதளவில் உண்மை இருக்கிறது.  தாழ்த்தப்பட்ட சாதியினர் சந்தித்த நேரடியான ஒடுக்குமுறைகள் தற்போது குறைந்திருக்கின்றன. ஆனால் அதற்காக, சாதியே இல்லையென்று கூறிவிட முடியுமா? இது தான் ஆய்வகனின் அனுபவம் கூட . 

அவனது ஒரு விரிவுரையின் போதுதான் தேன்மொழி முதன்முதலில் தன் இதயம் அவனை நோக்கி அசைவதைக்  உணர்ந்தாள். பூதேவியான தனக்கு அருகில் சந்திரனைப் போல ஆண்கள் சுற்றி இருந்தாலும், அந்த பூமி [தேன்மொழி], தள்ளி நடுவில் நின்று ஈர்ப்பு விசைகள் பற்றி ஆழமாக விளங்கப்படுத்திக் கொண்டு இருக்கும் சூரியனான, ஆய்வகனின் கவர்ச்சியில் தன்னை இழந்து, சூரியனை சுற்றுவது போல, அவள் அவனைச் சுற்றி சுற்றி தன் எண்ணங்களை கற்பனை செய்து கொண்டே இருந்தாள்.  சிக்கலான கோட்பாடுகளை அவன்  தெளிவுடன் விளக்கிய விதம், ஆழ்ந்த சிந்தனையில் இருந்தபோது அவனது புருவங்கள் ஏறி இறங்குவதிலும் சுருங்குவதிலும் அவள் கண்ட அழகு, இயற்பியல் பற்றி விவாதிக்கும் போது அவனது குரலில் இருந்த ஆர்வம் - இவை அனைத்தும் அவளைக் கவர்ந்தன. முதலில், அவள் அவனின் புத்திசாலித்தனமான மனதைப் போற்றுவதாக இருந்தாலும், நாட்கள் வாரங்களாக மாறியபோது, அது அதைவிட அதிகம் என்பதை அவள் உணர்ந்தாள். காதல் சொல்லிக்கொண்டு வராது என்பதை அப்பத்தான் அவள் உணர்ந்தாள்.

‘கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ!
திருப்பவளச் செவ்வாய்தான் தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!’

கண்ணனுடன் எப்போதும் கூடவே இருக்கும் பேறுபெற்ற சங்கு, அவனது கையில் எப்போதும் இருக்கும் பாக்யம் பெற்றது. அத்தோடு அவனது வாயமிர்தத்தை நுகரும் பேறும் பெற்றது. இவ்வெண்சங்கைப் பார்க்கும் போதெல்லாம் அதனிடத்தே தன் ஆற்றாமையை காட்டி பாடினாள்  ஆண்டாள், அப்படித்தான் தேன்மொழி இருந்தாள்.

ஆய்வனுடன் நெருங்கிப் பழகுவதற்கு தேன்மொழியின் முயற்சிகள் முதலில் ஒரு சாதாரணமான பல பெண்களின் அணுகுமுறையாக இருந்தது. வகுப்பிற்குப் பிறகு, கொஞ்சம் விளக்கம் தேவை என்ற  கேள்விகளுடன் நீடித்தது, முடிந்த அளவு அவனது திசையில் குறுக்கிட்டு அவனது பிரகாசமான புன்னகைக்கு காத்திருந்தாள். ஆய்வகன் அவளிடம் மற்றவர்களை விட கூடுதலான அன்பைக் காட்டினாலும், அவன் எப்பவும் ஒரு  இடைவெளியைப் பேணினான். என்றாலும் அவன் ஒரு இளைஞன் தானே, அவளது அழகும் வசீகரமும் அவனது கவனத்தில் இருந்து தப்பவில்லை.  ஆனால்  அவன் இன்றைய சமூக பார்வையில் தன் பங்கையும் இருவருக்கும் இடையே சமூகம் ஏற்படுத்திய வேறுபாடுகளையும் தடைகளையும் என்றும் மறக்கவில்லை.

"காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை?
நியூட்ரான் எலெக்ட்ரான் – உன்
நீலக்கண்ணில் எத்தனை?"

2011 –ஆம் ஆண்டு வெளிவந்த ‘எந்திரன்’ என்ற அமரர் சுஜாதாவின் கதை திரைப்படமாக வெளிவந்தபோது, அதில் வைரமுத்துவின் பாடல் வரிகள் இது. ஆனால் இது ஒரு பழைய பௌதிகம். புதிய குவாண்டம் இயற்பியலில் உள்ள சிக்கலைப் பற்றிய கருத்தை ஒரு உருவகமாகப் பயன்படுத்தி, காதலில் அனுபவிக்கும் ஆழமான தொடர்பையும் தீவிர உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியும் என்று தன் மனதில் 'காதல் பாசக் கோட்பாடு' ஒன்றை  நிறுத்தினாள். குவாண்டம் இயற்பியலின் அடிப்படைகள், பொருளா ஆற்றலா என்று இனம் பிரிக்க இயலா தன்மை உடையவை. அப்படித்தான் அவள் மனதும் இரட்டை மனநிலைகளில், ஏன் எல்லாம் நாம் காண்பதுபோல் இருக்கின்றன? இல்லை, காண்பதுதான் இருக்கிறதா என்று மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் இரண்டிற்குமிடையில் தவித்தாள். 

ஒரு மாலையில், குவாண்டம் இயற்பியல் பற்றிய விரிவுரைக்குப் பிறகு,  தேன்மொழி தன் உணர்வுகளை ஒப்புக்கொள்ள தைரியத்தைத் திரட்டினாள். மற்ற மாணவர்கள் வெளியேறும் வரை காத்திருந்த அவள் உறுதியும் பதட்டமும் கலந்து, ஆய்வகனை அணுகினாள்.

“டாக்டர் ஆய்வகன்,” என்று அவள் ஆரம்பித்தாள், அவளுக்குள் புயல் வீசினாலும் அவள் குரல் உறுதியாக சீராக இருந்தது, “எனக்கு ஒரு தனிப்பட்ட விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். தயவு செய்து என்னைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள், நான் ... உங்களை ஆழமாக நேசிக்கிறேன். இது சாதாரண அன்பை  விட அதிகம். நான் உங்களை காதலிக்கிறேன் என்று என் மனம் உறுதியாகச் சொல்கிறது" என்றாள். 

ஆய்வகனின் இதயமும் துடித்தது. அவளுடைய பாசத்தை அவன் சிலதடவை முன்பும் அவளின் செயல்களில், அணுகும் முறைகளில் உணர்ந்தான் ஆனால் அவள் இவ்வளவு தைரியமாக குரல் கொடுப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம், அவளின் கனிவான  பார்வையில் அவன் தொலைந்து போனான், ஆனால் அவனின் உள் உணர்வு,  அவனை அதில் இருந்து வெளியே இழுத்தது.

"தேன்மொழி," அவன் மெதுவாக ஆனால் உறுதியாக அழைத்தான், "நீங்கள் ஒரு விதிவிலக்கான மாணவி, நான் உன்னை மிகவும் மதிக்கிறேன். ஆனால் இது... உங்கள் ஆசை ... இது நடக்காது. நமது உலகங்கள் மிகவும் வேறுபட்டவை. உங்கள் குடும்பத்தின் எதிர்பார்ப்புகள், சமூகத்தின் நெறிமுறைகள் - இவைகள் எல்லாம் கட்டாயம் பல தடைகளை ஏற்படுத்தும்." என்றான்.  

அவனுடைய வார்த்தைகளில் அவளின் இதயம் உடைந்தது, ஆனால் அவள் கைவிட மறுத்தாள். அடுத்த வாரங்களில், அவள் அவனுக்கு ஈ - மெயில் கடிதங்களை எழுதினாள். அவளுடைய இதயத்தை காகிதத்தில் ஊற்றினாள். ஒவ்வொன்றும் “அன்புடன், தேன்மொழி” என்ற வார்த்தைகளுடன் முடிவடைந்தது. இந்த கடிதங்களில், அவள் அடிக்கடி பழங்கால தமிழ் இலக்கியத்தின் கூற்றுக்களை, பாடல்களை, அன்பு மற்றும் அறம் பற்றிய திருக்குறளில் இருந்து வரிகளை மேற்கோள் காட்டினாள். அதில், ஒரு குறிப்பிட்ட வசனம் ஆழமாக எதிரொலித்தது: 

"அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது." 

நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவனுடைய நெஞ்சு அவனுக்குத் துணையாக இருக்கும்போது நீ எனக்குத் துணையாக இல்லாமல் அவனை நினைத்து உருகுவது ஏன்?. அவள் தன் உள்ளத்தையே கேட்டுக் கொண்டாள். அவளுக்கு வேறுவழி தெரியவில்லை. என்றாலும் அவளின் உணர்ச்சிகளின் உண்மைத்  தன்மையை அவன் புரிந்துகொள்வான் என்று அவள் நம்பினாள்.

அவள் ஒரு சில மாதங்கள் காத்திருந்தாள், ஆனால் ஆய்வகனிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அவள் இறுதியாக ஒரு தனிப்பட்ட கடிதம் எழுதி, அதுவே தனது இறுதிக் கடிதமாக, நேராகவே அவனின் கையில் "தயவுசெய்து இதைப் படியுங்கள், சார் ," என்று சொல்லிக் கண்ணீருடன் ஒரு நாள் கொடுத்தாள். அவள் குரலில் நம்பிக்கை மற்றும் உறுதி ஆகிய இரண்டும் இருந்தது. “இது தான் கடைசி. இனி உங்களைத்   தொந்தரவு செய்ய மாட்டேன்." என்றாள். 

அன்று மாலை, ஆய்வகன் தனது ஆடம்பரமற்ற சாதாரண அறையில் அமர்ந்து, கடிதத்தை கையில் எடுத்து திருப்ப திருப்பப் பார்த்தான். அவளுடைய வார்த்தைகள் எளிமையாக, ஆனால் ஆழமாக, அவனுடைய ஆன்மாவைத் தொட்ட வார்த்தைகளால் நிரப்பப்பட்டு இருந்தன. 

அன்புக்குரிய டாக்டர் ஆய்வகன்,


உங்கள் காரணங்களை நான் புரிந்துகொள்கிறேன், உங்களின் எந்த முடிவையும்  நான் மதிக்கிறேன். ஆனால் உங்கள் மீதான எனது அன்பு சமூக எதிர்பார்ப்புகளுக்கோ அல்லது குடும்ப அழுத்தங்களுக்கோ கட்டுப்பட்டதல்ல என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று  விரும்புகிறேன். இது தூய்மையானது மற்றும் தன்னலமற்றது, நீங்கள் அதை ஏற்றுக்கொண்டாலும் அல்லது ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது அப்படியே இருக்கும். என்றும் மாறாது! நீங்கள் எனக்கு இயற்பியலைக் காட்டிலும் அதிகம் கற்றுக் கொடுத்துள்ளீர்கள்; ஒருவரின் வலிமை, குணம் மற்றும் இதயத்திற்காக அவரைப் போற்றுவதன் அர்த்தம் என்ன என்பதை நீங்கள் எனக்குக் காட்டியுள்ளீர்கள். அதை நான் எப்போதும் போற்றுவேன், கடைப்பிடிப்பேன்.


உங்கள் விடைக்காக என்றும், எவ்வளவு காலம் சென்றாலும் காத்திருப்பேன்.   


'அன்புடன் தேன்மொழி'

ஆய்வகன் தன் கொள்கைகளுக்கும் அவளை நோக்கி, ஒரு விளங்க முடியாத உணர்வு ஒன்று இழுக்கும் வலிமைக்கும் இடையே போராடி போராடி மணிக்கணக்கில் அந்தக் கடிதத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவளது தைரியம், அவளது அசைக்க முடியாத அன்பு மற்றும் அவன் மீதான அவளுடைய நம்பிக்கை அவன் இதயத்தைச் சுற்றி சுற்றி அவன் கட்டியிருந்த ஒவ்வொரு சுவருக்கும் சவாலாக இருந்தது.

தமிழ் வரலாறு, இலக்கியம் பற்றிய நினைவுகள் அவன் மனதில் தோன்றின. சமூகக் கட்டுப்பாடுகளைத் தாண்டிய காதலைப் பற்றியும், புறப் பிரிவினைகளுக்கு மேல் உள்ளத் தூய்மையைக் கொண்டாடும் பண்டைய தமிழர் மதமான, தமிழ்ச் சைவத்தின் மரபு பற்றியும் நினைத்தான். காதலுக்காக அவன் தன் சமுதாயத்தை மறுக்க முடியுமா?  இரவு செல்லச் செல்ல, வாழ்க்கை, அன்பு மற்றும் தனது சொந்த மதிப்பு பற்றி தனக்குத் தெரியும் என்று நினைத்த அனைத்தையும் அவன் கேள்விக்குள்ளாக்கினான்.

ஆனால் பதில் எளிதில் அவனுக்கு வரவில்லை, ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக இருந்தது - தேன்மொழியின் காதல் அவனது  இதயத்தில் ஒரு அழியாத அடையாளத்தை வைத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. அவன் இன்னும் பதில் கொடுக்காமலே, அந்தக்கடிதம் அப்படியே இருந்தது. அதேவேளை, பதிலை எதிர்பார்த்து எதிர்பார்த்து தேன்மொழியும்; 
 


"சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே!
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே!
எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ,
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி,    5
அனைய அன்பினையோ, பெரு மறவியையோ
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே!"

குருகே! எம் ஊர்மக்கள் நீருண்ணும் துறைக்கு வந்து கெளிற்றுமீனை உண்டுவிட்டு அவர் ஊருக்குப் பறந்து செல்கிறாய். இங்கு நான் அவரை எண்ணி மெலிந்ததால் என் அணிகலன்கள் கழன்று விழுவதை அருக்குச் சொல்லுவாயோ சொல்ல மறந்துவிடுவாயோ தெரியவில்லையே! என்று ஏதேதோ பிதற்றிக் கொண்டே காலத்தைக் கழித்தாள். அவள் அறையில் ஆண்டாள் படமும், அவளின் ஒரு சில பாடல் வரிகளும் தொங்கிக்கொண்டு இருந்தன. ‘ஆசை வெட்கமறியாது’ என்ற பழமொழி இங்கும் சரியாய் போய்விட்டது. மிகுந்த காதல் கொண்டதால் இனிமேல் தன் காதலை மறைக்க முடியாது என்பது தெரிந்து எல்லோர் முன்னிலையிலும் தன் காதலை ஒத்துக் கொண்டு தன்னை எப்படியாகிலும் அவனுடன் கொண்டு சேர்க்குமாறு வேண்டுகோள் விடும் ஆண்டாளின் பாடல் அது!

‘நாணி இனியோர் கருமமில்லை
நாலயலாரும் அறிந்தொழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து
பண்டுபண்டாக்க உறுதிராகில்
மானியுருவாய் உலகளந்த
மாயனைக் காணில் தலைமை றியும்
ஆணையால் நீரென்னைக் காக்க வேண்டில்
ஆயர்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்’  
‘நாணி இனியோர் கருமமில்லை
நாலயலாரும் அறிந்தொழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து
பண்டுபண்டாக்க உறுதிராகில்
மானியுருவாய் உலகளந்த
மாயனைக் காணில் தலைமை றியும்
ஆணையால் நீரென்னைக் காக்க வேண்டில்
ஆயர்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்’ 


நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

476346854_10227928740546662_5222649160533580430_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=vwTubGxN5_QQ7kNvgFONZ_5&_nc_oc=AdhAc0XmSSp5m1S1JkyX2FgT41r3P9ATBoIGe_75baVIlNVDKOREtNvy-JA3ebf0YhQ&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=A6ikktAi4X_2fAYVY5oQyhN&oh=00_AYCabsw6gtNhZBsP7lFSryyZbMvxBa9f8PJ85yVMKf50RQ&oe=67AE58C9


 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2025 at 17:39, kandiah Thillaivinayagalingam said:

 

 

தேன்மொழி ஒரு செல்வந்த பிராமண குடும்பத்திலிருந்து வந்தவள், பாரம்பரியம் மற்றும் மதிப்புகளில் அவளுடைய குடும்பம் வாழ்ந்து வந்தது. அவளுடைய சிறப்புப் பின்னணி மிகவும் நன்றாக பெருமையாக இருந்த போதிலும், அவள் அடக்கமாகவும், கனிவாகவும், கூர்வமான புத்திசாலியாகவும் இருந்தாள். அவளுடைய அரவணைப்பு மற்றும் வசீகரத்திற்காக அவளுடன் கூடப்படிக்கும் சகாக்கள் மற்றும் மூத்த மாணவர்கள், விரிவுரையாளர்கள் என்றும் காத்திருந்தனர், ஆனால் அவளுடைய இதயம் எனோ அமைதியாக ஒரு துணையை, நண்பனை தானே ஒருதலையாகத் தேர்ந்தெடுத்தது, அவன் தான் கலாநிதி [டாக்டர்] ஆய்வகன்.

 

எனக்கும் ஒரு அழகிய தேவதை கிடைத்தால், சிலரின் சதியால் பிரித்துவிட்டார்கள்😪

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

எனக்கும் ஒரு அழகிய தேவதை கிடைத்தால், சிலரின் சதியால் பிரித்துவிட்டார்கள்😪

எல்லாருக்கும் இப்படி ஒரு அனுபவம் வந்து தான் போகும் போல, உடையார்?

நீங்களும் கன்னி ராசிக்காரன் போல…!😔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

  • 1 month later...

வானத்தையும் பூமியையும் ஒரே நேரத்தில் தொடுவதுபோல் பண்டைய நவீன இலக்கியங்களைத் தொட்டு எழுதியுள்ளீர்கள். சமூகப் பிரச்சனையைக் கருவாகக் கொண்ட கதை தீர்வின்றி சோகமாக முடிவடைந்தது உறுத்தலாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.