Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா, சமூகம், கல்லூரி மாணவர்கள், கோலிவுட்

பட மூலாதாரம்,AGS ENTERTAINMENT

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சிராஜ்

  • பதவி, பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த வாரம் வெளியான 'டிராகன்' திரைப்படத்தின் டிரெய்லர் சமூக ஊடகங்களில் சில விவாதங்களை எழுப்பியுள்ளது.

"கல்லூரி செல்லும் நாயகன் என்றாலே அவர் பல அரியர்கள் வைத்திருக்க வேண்டும், குடிக்க வேண்டும், பேராசிரியர்களை மதிக்கக் கூடாது எனக் காட்டிவிட்டு, பிறகு படத்தின் இறுதியில் அந்த நாயகன் வெற்றி பெறுவது போலக் காட்டுவது என்ன நியாயம்?" என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதேபோல், "நிஜத்தில் 5 அரியர்களை ஒரே செமஸ்டரில் கிளியர் செய்வதே கடினம், அப்படியிருக்க 40 அரியர்களுக்கும் மேல் வைத்திருக்கும் ஒரு நாயகன், அதை பெருமையாகச் சொல்வது தவறான முன்னுதாரணம்" என்பது போன்ற பதிவுகளையும் காண முடிந்தது.

இதற்கிடையே இத்தகைய படங்களுக்கு ஆதரவாகவும் கருத்துகள் வந்துள்ளன. "தவறுகளில் இருந்து பாடம் கற்பதைத்தானே காட்டுகிறார்கள், திரைப்படம் வெளியாகாமல் டிரெய்லரை மட்டும் வைத்து முடிவு செய்ய வேண்டாம்" என்பது போன்ற கருத்துகளையும் காண முடிந்தது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் நாளை (பிப்ரவரி 21) வெளியாகவுள்ளது.

மாணவர்கள் மீதான உளவியல் தாக்கம்

மின்னலே, சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், டான், போன்ற தமிழ்ப் படங்கள் மற்றும் பிரேமம், வாழா, ஒரு வடக்கன் செல்ஃபி போன்ற மலையாளப் படங்கள் இடையே ஒரு ஒற்றுமை உண்டு. கதைகள் வெவ்வேறு என்றாலும், அதன் கதாநாயகர்கள் அல்லது முன்னணி கதாபாத்திரங்கள் பல அரியர்கள் வைத்திருப்பார்கள்.

ஆனால், அதைப் பற்றி ஒரு அலட்சிய மனோபாவம் அவர்களிடம் இருப்பது போலவும், ஏதேனும் ஒரு கட்டத்தில் அவர்கள் அதை மொத்தமாக எழுதி முடித்துவிடுவார்கள் அல்லது வேறு ஏதேனும் ஒரு துறையில்/பணியில் வெற்றி பெறுவது போலவும் காட்சிகள் இருக்கும்.

"திரைப்படம் வேறு, வாழ்க்கை வேறு என்று சொன்னாலும், இத்தகைய படங்கள் மாணவர்களிடையே உளவியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது" என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா. இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்பொரு கட்டத்தில் வில்லனாக காட்டப்பட்ட கதாபாத்திர வடிவமைப்புகள், இன்று கதாநாயகர்களாக வடிவமைக்கப்படுவதன் தொடர்ச்சியாக இந்த கதாபாத்திரங்களைப் பார்க்க முடிகிறது என்கிறார் அவர்.

சினிமா, சமூகம், கல்லூரி மாணவர்கள், கோலிவுட்

பட மூலாதாரம்,DEEPA/INSTAGRAM

படக்குறிப்பு,இத்தகைய திரைப்படங்கள் மாணவர்களிடையே உளவியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா

ஜா.தீபாவின் கூற்றுக்கு உதாரணமாக 1994இல், கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான 'நம்மவர்' திரைப்படத்தைக் கூறலாம். அதில் கல்லூரி மாணவராக வரும் ரமேஷ் (நடிகர் கரண்) கதாபாத்திரம்தான் வில்லன். தனது தந்தையின் கல்லூரி என்பதால், அவர் படிப்பில் கவனம் செலுத்தமாட்டார், வகுப்புகளைப் புறக்கணிப்பார், பேராசிரியர்களை அலட்சியமாகக் கையாள்வார், வன்முறையில் ஈடுபடுவார். அவரைப் பின்தொடரும் ஒரு மாணவர் குழுவும் இருக்கும்.

அதே கல்லூரிக்கு பேராசிரியராக வரும் வி.சி.செல்வம் (கமல்ஹாசன்) ரமேஷையும் அவரது நண்பர்களையும் பகைத்துக் கொண்டு, கல்லூரியில் பல மாற்றங்களைக் கொண்டு வருவார்.

"நாயகன் Rugged boy அல்லது எதையும் அலட்சியமாகக் கையாள்பவன் என்பதைக் காட்ட இத்தகைய கதாபாத்திரங்களை எழுதுகிறார்கள். அவன் நாயகன் என்பதால் எப்படியும் வாழ்க்கையில் வெற்றி பெறுவான் என்றும் காட்டுகிறார்கள். ஆனால் எதார்த்தம் அவ்வாறு இல்லையே.

இதைத் பார்க்கும் ஒரு மாணவன், கல்லூரியில் அரியர் வைத்தால், குடித்தால் அது சாதாரணமான ஒன்று அல்லது அதுதான் 'கெத்து' என நினைக்கலாம். அவ்வாறு இல்லாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த நினைக்கும் மாணவர்கள் கேலிக்கு ஆளாகவும் இத்தகைய 'நாயக பிம்பங்கள்' காரணமாகின்றன" என்கிறார் ஜா.தீபா.

'இயக்குநர்களின் சொந்த அனுபவங்கள்'

சினிமா, சமூகம், கல்லூரி மாணவர்கள், கோலிவுட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"தவறுகளில் இருந்து பாடம் கற்ற ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார் என்பதையே சொந்த அனுபவத்திலிருந்து இயக்குநர்கள் காட்ட விரும்புகிறார்கள்" என்கிறார் துணை இயக்குநர் பாலசுப்ரமணியம்.

ஆனால், 'இத்தகைய கதாபாத்திரங்களை தவறான நோக்கத்தில் எழுதுவதில்லை என்றும், கதைசொல்லி என்ற முறையில் தங்களது சொந்த அனுபவத்தையே இயக்குநர்கள் திரையில் கொண்டு வருவதாக' கூறுகிறார் துணை இயக்குநர் பாலசுப்ரமணியம்.

கோப்ரா, டிமான்டி காலனி 2 போன்ற படங்களில் பணியாற்றியுள்ள இவர், தற்போது நடிகர் அஜித்குமாரின் 'குட், பேட், அக்லி' படத்தில் பணியாற்றி வருகிறார்.

"தான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்ற ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார் என்பதையே சொந்த அனுபவத்திலிருந்து காட்ட விரும்புகிறார்கள். நாயகனுக்கு சில மோசமான குணங்கள் இருப்பதாகக் காட்டி, பின்னர் அவன் திருந்துவது என்பது திரைக்கதையை சுவாரஸ்யமாக மாற்ற இயக்குநர்கள் பயன்படுத்தும் உத்தி" என்கிறார் அவர்.

ஆனால், சொந்த அனுபவமோ அல்லது வாழ்க்கையில் பார்த்த நபர்களோ, அத்தகைய கதாபாத்திரங்கள் படங்களில் இடம்பெறுவது பிரச்னையல்ல, நாயகர்களாக முன்னிறுத்தப்படுவதுதான் பிரச்னை என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா.

"கல்விதான் முக்கியம் எனப் பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டதால்தான், ஒரு சமூகமாகப் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளோம். அதை எடுத்துக்கூறும் படங்கள் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அதிகம் வெளியாகின்றன. அப்படியிருக்க '30, 40 அரியர்கள் வைப்பதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை' என நாயகன் வசனம் பேசுவது ஆபத்தானது."

"வெறும் பொழுபோக்கிற்காக படம் எடுக்கிறேன் என ஒரு இயக்குநர் சொல்ல முடியாது. ஒரு படைப்பாளிக்கு சமகால அரசியல் குறித்த புரிதலும், சமூகப் பொறுப்புணர்வும் அவசியம்" என்கிறார் ஜா.தீபா.

'எது கெத்து என்ற குழப்பம்'

டிராகன்: அரியர் வைப்பது கெத்தா? திரைப்படங்கள் கல்லூரி மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"கல்லூரியில் இப்படி இருந்தால்தான் 'கெத்து' என்று எனக்கும் ஒரு எண்ணம் இருந்தது. இன்னும் சொல்லப்போனால், திரைப்படங்களைப் பார்த்தே பொறியியல் படிப்பைத் தேர்வு செய்தேன். ஆனால் கல்லூரிக்குச் சென்ற பிறகு, திரையில் பார்த்த எதுவும் அங்கு நடக்கவில்லை. எது கெத்து என்ற குழப்பமே ஏற்பட்டது" என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

தனக்கு 15 அரியர்கள் இருந்ததாகவும், அவற்றை எழுதி முடிக்கக் கூடுதலாக 2 ஆண்டுகளும், சிறப்பு வகுப்புகளும் தேவைப்பட்டது என்றும் கூறுகிறார் அவர்.

"அரியர் வைக்காவிட்டால், சில பழக்கங்கள் இல்லாவிட்டால் 'பழம்' என முத்திரை குத்தி விடுவார்கள். எனவே எனக்கு அரியர்கள் இருந்தது குறித்து நான் முதலில் கவலைப்படவில்லை. பின்னர், அந்த 15 அரியர்களை முடிக்க மிகவும் கஷ்டப்பட்டேன். அதைவிட கஷ்டம் வேலைக்காக அலைந்ததுதான்."

"ஏன் இத்தனை அரியர்கள் வைத்தீர்கள் என எல்லா நேர்காணல்களிலும் கேட்டார்கள். ஒருவழியாக துபையில் ஒரு நிறுவனத்தில், உறவினர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் எனக்கு வேலை கிடைத்தது. வெளிநாடு செல்ல விருப்பம் இல்லாவிட்டாலும்கூட, வேறு வழியின்றி ஒப்புக் கொண்டு 8 வருட காலமாக இங்கு வேலை செய்கிறேன்" என்கிறார் மகேஷ்.

சமூக ஊடகங்களில் எழுந்த விவாதங்கள்

சினிமா, சமூகம், கல்லூரி மாணவர்கள், கோலிவுட்

பட மூலாதாரம்,AGS ENTERTAINMENT

படக்குறிப்பு,கடந்த வாரம் வெளியான 'டிராகன்' படத்தின் முன்னோட்டம் சமூக ஊடகங்களில் சில விவாதங்களை எழுப்பியுள்ளது

"எந்த அரியர்களும் இல்லாத ஒருவருக்கே வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் குறைவான சம்பளமே கிடைக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், 'அரியர் வைப்பது பெருமை' எனப் பேசி படம் எடுக்கிறார்கள்" என்று 'டிராகன்' படத்தின் டிரெய்லரை குறிப்பிட்டு ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

"சமூகத்தைச் சீரழிக்கும் படம் எனச் சொல்வார்களே, உண்மையில் இதுதான் அப்படிப்பட்ட படம். இந்தப் படத்தில் வருவது போல 48 அரியர்கள் வைக்கும் ஒருவன் நிச்சயமாகப் பல சிக்கல்களை எதிர்கொள்வான். இதைப் பார்க்கும் ஒருவர் அந்த நாயகனை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டால், அவ்வளவுதான்" என்று பெண் ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.

"எங்கள் கல்லூரியில் குறிப்பிட்ட அரியர்களுக்கு மேல் வைத்தால் அல்லது இந்த நாயகனைப் போல பிரச்னை செய்தால், உடனடியாக டிஸ்மிஸ் செய்துவிடுவார்கள். இத்தகைய படங்கள் தவறான கருத்துகளைப் பரப்புகின்றன" என்று ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஈரோடு மாவட்டத்தில் தனியார் கல்லூரியின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் வெள்ளியங்கிரி பிபிசி தமிழிடம் பேசியபோது, "அரியர் வைப்பது ஒன்றும் மிகப்பெரிய தவறு கிடையாது. அரியர் வைப்பவர்கள் முட்டாள்களும் அல்ல. கல்லூரி மாணவர்களில் கணிசமானவர்கள் பெற்றோர் வற்புறுத்தலால், ஒரு படிப்பைத் தேர்வு செய்கிறார்கள். ஓரிரு செமஸ்டர்களுக்கு பிறகுதான் ஒரு நிலைக்கு வருகிறார்கள் அல்லது இந்தப் படிப்பு வேண்டாம் என முடிவு செய்கிறார்கள்" என்றார்.

ஆனால் பிரச்சினை "அரியர் வைப்பது அல்லது வகுப்புகளைப் புறக்கணிப்பது 'கெத்து' என்று மாணவர்கள் நினைக்கும்போதுதான் தொடங்குகிறது" என்கிறார் அவர்.

மறுபுறம், படைப்பாற்றல் இருப்பவர்களால் படிப்பில் சிறந்து விளங்க முடியாது என்ற எண்ணத்தையும் சில திரைப்படங்கள் விதைப்பதாகக் கூறுகிறார்.

"உதாரணமாக நன்றாகக் கதை எழுதுபவர், ஓவியம் வரைபவர் அல்லது நடிப்பவர், படிப்பில் கவனம் செலுத்தமாட்டார் என்ற எண்ணம் உள்ளது. அதுவும் தவறு. திரையில் நாயகன் 40 பேரை அடிப்பது நிஜத்தில் சாத்தியமில்லை என்பதைப் புரிந்துகொள்வது போல, இதையும் மாணவர்கள் உணர வேண்டும்" என்றார்.

'இயக்குநர்களுக்கு இருக்கும் பயம்'

சினிமா, சமூகம், கல்லூரி மாணவர்கள், கோலிவுட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, படங்களில் புத்திமதி கூறினால், கிரிஞ் என்று ரசிகர்கள் கூறிவிடுவார்களோ என்ற பயம் இயக்குநர்களிடையே உள்ளதாகக் கூறுகிறார் கௌதம் ராஜ்

"ஒரு கட்டத்தில் பல திரைப்படங்களில் 'ராகிங்' (Ragging) என்பது நகைச்சுவையாகக் காட்சிப்படுத்தப்பட்டது. அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட சமூக புரிதலுக்குப் பிறகு அத்தகைய காட்சிகள் குறைந்தன. அப்படி ஒரு சமூகப் பொறுப்புணர்வு மட்டுமே இதற்குத் தீர்வாக இருக்கும்" என்கிறார் இயக்குநர் கௌதம் ராஜ்.

ராட்சசி, கழுவேத்தி மூர்க்கன் போன்ற கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசும் திரைப்படங்களை இயக்கியவர் கௌதம் ராஜ்.

"இப்போதுள்ள தலைமுறையினருக்கு புத்திமதி கூறினால், கிரிஞ் (Cringe) அல்லது பூமர் என்று ரசிகர்கள் ஒதுக்கிவிடுவார்களோ என்ற பயம் இயக்குநர்களிடையே உள்ளது. எனவே டிரெண்டுக்கு ஏற்றாற்போல் எடுக்கிறேன் என சில விஷயங்களை ஹீரோயிசமாக காட்டுகிறார்கள். உதாரணத்திற்கு போதைப் பழக்கத்தை மிகவும் சாதாரணமான ஒன்றாகக் காட்டுவது. அதன் தொடர்ச்சிதான் இதுவும்" என்கிறார் அவர்.

ஒரு படைப்பு ஒரு தனிமனிதரைப் பாதித்தால், அதில் படைப்பாளிக்கும் பங்கு உள்ளது எனக் கூறும் இயக்குநர் கௌதம் ராஜ், "ஒரு திரைப்படம் முழுவதும் பெண்களைத் திட்டி அல்லது ஆபாசமாகச் சித்தரிப்பது போல பாடல்கள், காட்சிகளை வைத்துவிட்டு, இறுதியில் 'பெண்கள் நம் கண்கள்' என வசனம் பேசுவதால் பயனில்லை என்பதைப் போலவே இதுவும். எனவே கிளைமாக்ஸில் என்ன சொல்கிறோம் என்பதில் இருக்கும் பொறுப்பும், நேர்மையும் படம் முழுவதும் இருந்தால் நல்லது," என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

டிராகன்: அரியர் வைப்பது கெத்தா? திரைப்படங்கள் கல்லூரி மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

டிராகன் : விமர்சனம்!

22 Feb 2025, 10:56 AM

pradheep dragon movie review

இரண்டரை மணி நேரம் இடையறாத ‘எண்டர்டெயின்மெண்ட்’!

ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் என்ன செய்ய வேண்டும்? ‘ஜாலியான’ திரையனுபவத்தைத் தர வேண்டும். அதேநேரத்தில், சமூகத்திற்குத் தேவையற்ற விஷயங்களைக் கிஞ்சித்தும் சொல்லிவிடக் கூடாது. ‘என்ன பாஸ், பூமர் மாதிரி பேசுறீங்க’ என்றொலிக்கும் ‘மைண்ட்வாய்ஸ்கள்’ கேட்கிறது. மேற்சொன்ன இரண்டையும் ஒன்றிணைத்து, சிறப்பானதொரு ‘மெசேஜ்’ உடன் சீராக நகர்கிற ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தைத் தர முடியுமா? ‘முடியும்’ என்ற நம்பிக்கை மிகுதியுடன் ‘டிராகன்’ படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.

‘ஓ மை கடவுளே’ படத்தை இதற்கு முன் இவர் இயக்கியிருக்கிறார். அதுவே, இவரால் அப்படியொரு முயற்சியில் வெற்றியைப் பெற்றிட முடியும் என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது.

லவ் டுடே’ இயக்குனர் கம் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், காயாடு லோஹர், ஜார்ஜ் மரியான், இந்துமதி மணிகண்டன், விஜே சித்து, அர்ஷத்கான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

டிராகன்’ படம் ‘பீல்குட்’ அனுபவத்தைத் தருகிறதா?

pradheep dragon movie review

யார் இந்த ‘டிராகன்’?

தனபால் ராகவன் எனும் டி.ராகவன் பள்ளியில் நல்லபிள்ளையாகத் திகழ்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று, நல்லதொரு கல்லூரியில் பொறியியல் படிக்க இடமும் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார். அதே சூட்டோடு தனது மனதுக்குப் பிடித்த தோழியிடம் காதலைச் சொல்கிறார். அவரோ, ‘உன்னை மாதிரி நல்ல பையன்லாம் எனக்கு செட் ஆகாது; அவனைத்தான் பிடிக்கும்’ என்று அங்கிருக்கும் ‘ரக்டு பாய்’ ஒருவரைக் கை காண்பிக்கிறார். அவ்வளவுதான்.

அந்த நொடி முதல் ‘பேட் பாய்’ ஆகும் உத்தேசத்தோடு செயல்படத் தொடங்குகிறார் டி.ராகவன். ஆங்கிலத்தில் அவரது பெயரில் உள்ள ‘ஏ வி ஏ’ எழுத்துகளை எடுத்துவிட்டு ‘ஓ’ எனும் எழுத்தைச் சேர்த்து அவருக்கு ‘டிராகன்’ என்று புதிய பெயரைச் சூட்டுகிறார் நண்பன் அன்பு (விஜே சித்து).

ஏஜிஎஸ் பொறியியல் கல்லூரியில் (?!) படிக்கச் செல்லும் ராகவன், அங்கு ’டிராகன்’ ஆக உருவெடுக்கிறார். இல்லாத சேட்டைகளை எல்லாம் கற்றுக்கொண்டு, அவற்றைச் செயல்படுத்தி 48 அரியர்களுடன் வெளியேறுகிறார். காதலி கீர்த்தி (அனுபமா), உடனிருக்கும் நண்பர்கள் வற்புறுத்தியும் அவர் கேட்பதாக இல்லை.

இரண்டாண்டுகள் கழித்து, ஒருநாள் பொழுது விடுகிறது. வேலைக்குச் செல்வதாகப் பெற்றோரிடம் (ஜார்ஜ் மரியான், இந்துமதி) சொல்லிவிட்டு, நண்பர்களின் பிளாட்டுக்கு சென்று பகல் முழுக்க டிவி பார்க்கிறார். மாலை ஆனதும் நண்பர்கள் சிலரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வந்து, சம்பளம் வாங்கியதாகச் சொல்லி தந்தையிடம் கொடுக்கிறார். ‘அதற்கு இதற்கு’ என்று சொல்லி அந்தப் பணத்தைத் திரும்ப வாங்குவதோடு, தந்தையின் சம்பளத்தில் இருந்து கொஞ்சம் பணத்தைச் செலவுக்குப் பெற்றுக்கொள்கிறார்.

இப்பேர்ப்பட்ட டிராகன் தனது ’பேட்பாய்’தனத்தை மூட்டை கட்டி வைக்கிற சூழ்நிலை ஒன்று உருவாகிறது. ‘நீயெல்லாம் கல்யாணத்துக்கு சரிப்பட்டு வரமாட்டே’ என்று சொல்லிவிட்டு ‘பை’ சொல்லிவிடுகிறார் காதலி கீர்த்தி.

கோபாவேசம் உச்சத்திற்கு ஏற, அவருக்கு கணவராக வரப்போகிறவரை விட ஒரு ரூபாய் அதிகம் சம்பாதிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டுகிறார். கீர்த்தியைக் கல்யாணம் செய்பவரின் சம்பளம் ஒரு லட்சத்து இருபதாயிரம்.

இந்த தகவலைக் கேட்டதுமே நண்பர்கள் பதைபதைத்துப் போகின்றனர். அப்போது, கிரிக்கெட் விளையாட்டின்போது அறிமுகமாகும் ஒரு நபர் (அஸ்வத் மாரிமுத்து) மூலமாக ஒரு கன்சல்டன்ஸி பற்றி அறிகிறார் ராகவன். பெற்றோரிடம் பொய் சொல்லி பத்து லட்சம் ரூபாய் வாங்கி வந்து அவர்களிடம் கொடுக்கிறார்.

கல்லூரி முடித்தது போன்று பொய்யாகச் சான்றிதழ்களை தயார் செய்து, வேறொரு நபரின் உதவியுடன் நேர்காணலில் பங்கேற்று, ஒரு அமெரிக்க ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். ஆனால், அதில் சேர்ந்ததும் வேலைகளைக் கற்றுக்கொண்டு திறம்பட உழைக்கிறார்.

மூன்றாண்டுகள் கழித்து அவரது சம்பளம் மாதத்திற்கு மூன்று லட்சம் ரூபாயைத் தொடுகிறது.

இஎம்ஐ மூலமாக புதிய வீடு, கார் என்றிருக்கும் ராகவனுக்கு ஒரு பெரிய தொழிலதிபர் (கே.எஸ்.ரவிக்குமார்) தனது பெண் பல்லவியை (காயாடு லோஹர்) கல்யாணம் செய்து தர முன்வருகிறார்.

இந்த நிலையில், ராகவன் பொய் சொல்லி ஏமாற்றி வேலைக்குச் சேர்ந்தது ஒருவருக்குத் தெரிய வருகிறது. அவர் வேறு யாருமல்ல. ராகவன் படித்த கல்லூரியின் பிரின்சிபல் மயில்வாகனன் (மிஷ்கின்). கடைசி செமஸ்டரில் அவர் முகத்தில் தனது ஐடி கார்டை விசிறியெறிந்துவிட்டு வந்தவர் ராகவன்.

அவ்வளவுதான். எந்த ரகசியத்தைத் தன்னைச் சார்ந்தவர்கள் அறியக்கூடாது என்று ராகவன் நினைத்தாரோ, அது உடையப் போகிறது.

அதன்பிறகு என்னவானது? மயில்வாகனன் என்ன செய்தார்? அதனை ராகவன் எப்படி எதிர்கொண்டார் என்று சொல்கிறது ‘டிராகன்’ படத்தின் மீதி.

உண்மையைச் சொன்னால், இதுவும் ‘சதுரங்க வேட்டை’ வகையறா கதைதான். ஆனால், ‘அறம் இல்லாததைச் செய்தால் வாழ்க்கை என்னவாகும்’ என்ற கருத்தைச் சொன்ன வகையில் கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.

’சூது கவ்வும்’ திசை நோக்கிய திரைக்கதையின் முடிவில் ‘தர்மம் மறுபடி வெல்லும்’ என்று அவர் சொல்லியிருக்கிறாரா? அதனை அறிய விரும்புபவர்கள் இந்தப் படத்தைத் தாராளமாகக் காணலாம்.

போலவே, சுமார் இரண்டரை மணி நேரம் இடையறாது, இமைக்க மறந்து தியேட்டரில் உயிர்ப்போடு ஒரு திரைப்படத்தைக் காண வேண்டுமே என்பவர்களுக்கும் ஏற்றதாக இருக்கிறது இப்படம். அந்த அளவுக்கு இதில் ‘எண்டர்டெயின்மெண்ட்’ அம்சங்கள் எல்லா தரப்புக்கும் ஏற்ற வகையில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கின்றன.

pradheep dragon movie review

‘பீல்குட்’ அனுபவம்!

இந்த படத்தில் நடித்த அனைவருமே மிகச்சிறப்பான நடிப்பைத் தந்திருக்கின்றனர். குறிப்பாக பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், ஜார்ஜ் மரியான், இந்துமதி மணிகண்டன், மிஷ்கின் மற்றும் அர்ஷத்கான் நடிப்பு அபாரம். ‘ஜென்ஸீ’ தலைமுறை பாஷையில் சொல்ல வேண்டுமானால் ‘வேற லெவல்’.

காயாடு லோஹர் கவர்ச்சிப்பதுமையாக வந்து போயிருக்கிறார். கொஞ்சமாக நடிக்கவும் செய்திருக்கிறார். அது, அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்றுத் தரக்கூடும்.

இவர்கள் தவிர்த்து கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், விஜே சித்து, ரவீந்தர், பி.எல்.தேனப்பன், சுஜாதா பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘டிராகன்’ படத்தின் மிகப்பெரிய சிறப்பு, தொழில்நுட்பக் கலைஞர்களை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தந்திருக்கும் செறிவு மிகுந்த உள்ளடக்கம். அது, இப்படத்தை அடுத்தடுத்து பல முறை காண வேண்டும் என்ற உத்வேகத்தைத் தூண்டிவிடுகிறது. ‘ரிப்பீட் ஆடியன்ஸ்’ வரவழைக்கும் அளவுக்குச் சிறப்பான உள்ளடக்கத்தைத் தருவது சாதாரண விஷயமல்ல.

அந்த வகையில் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி, படத்தொகுப்பாளர் லியோன் ஜேம்ஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் வி.செல்வா, சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் விக்கி மற்றும் திலீப் சுப்பராயன், நடன இயக்குனர் ஜேடி, ஒலிக்கலவையைக் கையாண்டிருக்கும் எம்.ஆர்.ராஜகிருஷ்ணன், டிஐ, விஎஃப்எக்ஸ், ஆடை வடிவமைப்பில் பங்கேற்றவர்கள் என்று பலரது உழைப்பைச் சிறப்பாகத் திரையில் மிளிரச் செய்திருக்கிறார் இயக்குனர்.

குறிப்பாக, லியோன் ஜேம்ஸ் தந்திருக்கும் பின்னணி இசை இப்படத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது.

கல்லூரி மாணவ மாணவியர் கரகோஷம் எழுப்பும்போது ‘பனைமரத்துல வவ்வாலா.. ..க்கே சவாலா..’ என்று குறிப்பிட்ட கல்லூரியை, அதில் பயில்பவரைச் சொல்வது வழக்கம். அது போன்ற முழக்கங்களை வெவ்வேறு சூழல்களைக் கொண்ட காட்சிகளில் புகுத்தி ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’ தந்திருக்கிறார் லியோன். ஆரவாரமிக்க காட்சிகளில் மட்டுமல்லாமல் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிற இடங்களில் மயிலிறகால் வருடுவது போன்ற இசையைத் தந்திருக்கிறார்.

இனி அவரை தெலுங்கு, இந்தி, மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் முழுதாகக் கொத்திக்கொண்டு போனால் ஆச்சர்யப்படத் தேவையில்லை.

‘டிராகன்’னில் லியோன் தந்திருக்கும் பாடல்களில் ’வழித்துணையே’ சட்டென்று மனதோடு ஒட்டிக்கொள்ளும் ரகம். அது போக ‘ஏண்டி விட்டுப்போன’, ’இட்ஸ் ரைஸ் ஆப் எ டிராகன்’, ’மாட்டிக்கினாரு ஒர்த்தரு’ உள்ளிட்ட பாடல்களும் நம்மைத் திரைப்படத்திற்குள் இழுத்துக் கொள்கின்றன.

சுமார் இரண்டே கால் மணி நேரம் இளசுகளின் ஆட்டம் என்றால், கடைசி இருபது நிமிடங்கள் மட்டும் பெரியவர்கள் ‘இது எங்களுக்கான பகுதி’ என்று காலரை தூக்கிவிட்டுக் கொள்ளும் அளவுக்கு நெகிழ வைக்கிறது ‘டிராகன்’. முக்கியமாக, அறத்தின் வழி நடப்பவர்கள் உண்மையில் தோற்றவர்களா, வெற்றி பெற்றவர்களா என்று சொல்லியிருக்கிறது. அதனைப் பாடமாகச் சொல்லித்தராமல் ‘படமாக’ உணர வைப்பதுதான் ‘டிராகன்’னின் வெற்றி.

இதில் பிரதீப் ரங்கநாதன், அவருடன் வருபவர்கள், அர்ஷத் கான் உள்ளிட்ட சிலர் ஏற்று நடித்த பாத்திரங்கள் ஆபாசமாக, கொச்சையாகப் பேசுகிற அல்லது அப்படியான அர்த்தம் தொனிக்கிற வார்த்தைகளைப் பாதியில் முழுங்குகிற இடங்கள் வசனங்களில் இடம்பெற்றுள்ளன. அது போக காயாடு லோஹரின் கவர்ச்சியும் கொஞ்சம் ‘ஏ’ ரகம்.

இது போக, ’பள்ளி யூனிபார்மில் இருக்கும்போதே தங்கப்பதக்கமும் வாங்கிக்கொண்டு ஒரு கல்லூரியில் பிளேஸ்மெண்டும் கிடைக்க வழி இருக்கிறதா’ என்று லாஜிக் சார்ந்த சில கேள்விகளையும் எழுப்புகின்றன இதில் வரும் சில காட்சிகள்.

மேற்சொன்ன விஷயங்களைத் தவிர்த்திருந்தால், ‘டிராகன்’ ஒரு முழுமையான, சிறப்பான ‘பீல்குட்’ திரைப்படமாக, குடும்பச் சித்திரமாக இருந்திருக்கும். ‘பூமர் மாதிரி பேசாதீங்க, புஷ்பா மாதிரி படங்களையே குடும்பத்தோடு பார்க்கறப்போ இதெல்லாம் ஜுஜுபி மேட்டர்’ என்று சிலர் சொல்லக்கூடும். அவ்வாறு சொல்லத் தயாராக இருந்தால், ‘டிராகன்’ குழந்தைகளையும் பெரியவர்களையும் அழைத்துச் சென்று குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படம் தான்.

இப்படிப்பட்ட திரையனுபவத்தைப் பெறத்தான் எத்தனை காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது..!

https://minnambalam.com/cinema/pradheep-dragon-movie-review/

  • 2 weeks later...

நேற்று இத் திரைப்படத்தை பார்த்தேன். வார இறுதியில் பார்த்து ரசிக்க கூடிய சிறந்த பொழுதுபோக்கு படம். சிரித்து, ரசித்து பார்க்க கூடியதாக இருந்த்து.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்த்து, சிரித்து மகிழ்ந்தேன். கையில் தாலியை. வைத்துக் கொண்டு கடைசி நேர கிளைமாக்ஸ் காட்சி பழைய படங்களில் பார்த்து சலித்துப் போனதொன்று.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.