Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Am an atheist

                      - சோம.அழகு

        தமிழ் வகுப்புகள் செம்மையாக நடந்து கொண்டிருந்தன. என் வகுப்பைச் சற்று சுவாரஸ்யமாக்கும் பொருட்டு பாடதிட்டத்தைத் தாண்டி சில விஷயங்களைப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரத் தொடங்கினேன். தமிழின் தொன்மையைப் பற்றி, அத்தொன்மையைப் பறைசாற்றும் விதமாகக் கிடைத்திருக்கும் கீழடி, ஆதிச்சநல்லூர் சான்றுகள் பற்றி, பழமையானதாகக் கருதப்படும் லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகள் மற்றும் கொரியன், ஆங்கிலம் போன்ற இன்ன பிற மொழிகளிலும் காணப்படும் தமிழ்ச்சொற்கள் பற்றி, பாவாணரின் சொல்லாராய்ச்சி மற்றும் வேர்ச்சொல் ஆராய்ச்சி பற்றி, தமிழர் நாகரிகம் பற்றி, பழைய சங்கப்பாடல்களில் மிக இயல்பாகத் தென்படும் அறிவியல் உண்மைகள் பற்றி…. என நீண்டது எங்கள் உரையாடல்.

சமீபமாக ஒவ்வொரு வகுப்பின் போதும் பாடப்புத்தகத்தில் ஒரு பாடம் நடத்தி முடிக்கும் வரை ‘எப்போதடா முடியும்?’ என வேறு வழியின்றி ரொம்ப கஷ்டப்பட்டுப் பொறுத்துக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர், பாடம் முடிந்த உடன் மீதமிருக்கும் நேரத்தில் மேற்கூறிய தலைப்புகள் குறித்து இன்னும் இன்னும் என்னைப் பேசச் சொல்லிக் கேட்பார்கள். பத்து பன்னிரெண்டு வயதிற்கே உரிய அவர்களது ஆர்வமும் ஆவலும் எனக்கான உந்துதலாக அமைந்தன. அவர்களிடம் ஒவ்வொரு விஷயம் குறித்தும் ஏராளமான கேள்விகள் இருந்தன. அதிர்ஷ்டவசமாக பெரும்பாலானவற்றிக்கு என்னிடம் பதிலும் இருந்தன. அல்லாதவற்றிற்கு மறு வாரம் விடை தேடிச் சொல்வேன். தமிழின் சிறப்புகள் குறித்துப் புதிய தகவல்களைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரது கண்களும் ஆச்சரியத்தில் விரியும்.

ஒரு முறை தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்ற சொற்கள் ஐந்தேனும் கண்டுபிடித்து வரும்படி வீட்டுப்பாடம் தந்திருந்தேன். கூகுள் யுகத்தில் இது ஒன்றும் கடினமான பணி அல்ல என்பதால் எல்லோரும் எழுதிக் கொண்டு வந்தார்கள். அதில் ஒருவள் ‘அவ்வை 🡪 Eve’ என எழுதியிருந்ததைப் பார்த்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தாங்கவில்லை எனக்கு. இது பொதுவாக கூகுள் காட்டும் பட்டியல்களில் வராது. தான் எழுதியது தவறோ என தயங்கிக் கொண்டிருந்தவளை வெகுவாகப் பாராட்டி ஆதனும் அவ்வையும் தாம் Adam Eve என்று கூறவும் அது குறித்து மேலும் தெரிந்து கொள்ள ஆயத்தமாகும் பொருட்டு வேக வேகமாக புத்தகத்தை மூடினார்கள். சிரித்தவாறே சொல்லத் துவங்கினேன்.

            சில வருடங்களுக்கு முன்பு கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய கட்டுரைகளை விரும்பிப் படித்தது மிகச் சரியாக அன்று நினைவிற்கு வந்து கைகொடுத்தது. Edward Seuss என்னும் ஆஸ்திரிய புவியியல் வல்லுநர், அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன் தெற்கில் இருந்த மிகப் பெரிய நிலப்பரப்பிற்கு (இன்றைய தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, அண்டார்டிகா ஆகியவற்றை உள்ளடக்கியது), ‘கோண்டுவானா’ எனப் பெயரிட்டது; அங்கு ‘லெமூர்’(தேவாங்கு) என்ற உயிரினம் இருந்ததால் உயிர் நூலார் அப்பகுதியை ‘லெமூரியா’ என அழைக்கத் துவங்கியது; மனித இனம் லெமூரியாவில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானி Ernst Haeckel கூறியது; இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்த லெமூரியா ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு கடற்கோளால்(சுனாமி) அழிந்ததில் தப்பிய பகுதிதான் குமரிக் கண்டம் என்று தமிழ் மொழி வல்லுநரும் வரலாற்று ஆய்வாளருமான கா. அப்பாதுரையார் கூறியது; மனித இனம் மொத்தமும் ஒரே பெற்றோரிலிருந்துதான் தோன்றியது என்றும் அந்த ஆதிப் பெற்றோர் அறுபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையோரத்தில் வாழ்ந்திருந்தார்கள் என்றும் நிறுவிய பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் முனைவர் ஸ்பென்ஸர் வெல்ஸ், தமிழ்நாட்டிற்கும் வந்து மரபணு ஆராய்ச்சி செய்து இந்திய நிலப்பரப்பில் முதலில் வந்தது திராவிடர்கள் என்று கண்டுபிடித்தது; பைபிளிலும் திருக்குரானிலும் வரும் ஆதாம் ஏவாள் பூமியில் இருந்தததாகக் கூறப்படும் இடமான ‘செரந்தீப்’ என்பது இந்தியாவுடன் அப்போது இணைந்திருந்த இலங்கை என அறிஞர்கள் சுட்டுவது; இன்றும் குமரி மாவட்டத்தில் குறத்தியறை, தாழக்குடி மற்றும் முப்பந்தல் ஆகிய மூன்று இடங்களில் தாய் வழிபாட்டின் தொடர்ச்சியாக இருக்கும் அவ்வையாரம்மன் கோவில்கள்; அவை புலவர் ஔவையாருக்காகக் கட்டப்பட்டிருப்பதாகத் தவறாகக் கருதப்படுவது; சங்க கால ஔவை, ‘ஆத்திசூடி’ பாடிய ஔவை, ‘ஞானக் குறள்’ பாடிய ஔவை ஆகிய இம்மூவருக்கும் குமரிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாதது…. என ஞாபகமிருந்தவரை எல்லாவற்றையும் அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் கூறினேன்.

மிகுந்த ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள். தாம் மிகப் பெரிய நாகரிக்கத்திற்குச் சொந்தக்காரர்கள் என்ற பெருமிதத்தை ஓரளவு அவர்களிடம் விதைத்து விட்ட திருப்தி! அவர்களின் அறிவுத் தேடலை விரிவுபடுத்தவும் வாசிப்பை அதிகரிக்கவும் என்னால் இயன்ற சிறு முயற்சி. அவ்வளவே!  

“இப்போது உங்கள் முறை. நீங்கள் வாசித்ததில் உங்களுக்குப் பிடித்தவை பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று அவர்களைத் தமிழில் உரையாட வைக்கும் முனைப்பில் கூறினேன். வரிசையாக ஒவ்வொருவராகக் கூறிக் கொண்டு வர ஒருவள், “விஷ்ணுவின் அவதாரங்கள் குறித்த புத்தகம் ஒன்றை வாசித்தேன். மிகவும் பிடித்திருந்தது” என்றாள். “விஷ்ணுவின் முதல் அவதாரம்?” என்ற என் கேள்விக்கு, “மத்ஸ்ய அவதார்… that fish one” என்றாள்.

             “இவ்விடத்தில் ஒரு ஒப்புமை உண்டு. மீன் உருவில் வந்த விஷ்ணு மனுவிடம் பிரளயம் ஒன்று வரப்போவதைக் குறித்து எச்சரிக்கவும் மனு பெரிய படகு ஒன்றைத் தயார் செய்து அதில் தனது குடும்பத்தினர், ரிஷிகளின் குடும்பத்தினர், ஒன்பது வகையான விதைகள், விலங்குகள் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு தப்பித்தார். பைபிளின் ‘நோவாவின் பேழை’ கதையும் கிட்டத்தட்ட இதுதான். நோவாவிற்கும் கடவுள் தான் ஏற்படுத்தப் போகும் பேரழிவைப் பற்றிக் கூறி கப்பல் ஒன்றில் நோவாவின் குடும்பம், அனைத்து உயிரினத்திலும் ஆண் ஒன்று பெண் ஒன்று, அனைவருக்கும் தேவையான உணவு எனத் தயார் செய்து கொண்டு தப்பிக்கும் வழிமுறையைச் சொல்வார். மனுவிற்கும் நோவாவிற்கும் அக்கட்டளைகள் மிகச் சரியாக ஏழு நாட்களுக்கு முன்பு தரப்படும். Noah, Navy போன்ற சொற்கள் ‘நாவாய்’ என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்தவையே. இந்தப் பெருவெள்ளக் கதைகள் சுமேரிய மற்றும் பாபிலோனிய நாகரிகம், அமெரிக்காவின் மயன் இனத்தவர், ஆப்பிரிக்காவின் யொரூபா இனத்தவர் என அனைவரிடத்தும் உண்டு. ஆனால் கடல் கொண்ட இடம் என்பதற்கான சான்று ‘குமரிக் கண்டம்’ என நம்மிடம் ஆணித்தரமாக உண்டு” என்று சொல்லி முடிக்கவும்…..

“Aunty! How do you know so much?” என்று கேட்டாள் அச்சிறுமி.

“நிறைய எல்லாம் இல்லடா… ஏதோ கொஞ்சம் வாசிச்சதிலிருந்து சொன்னேன். நீங்களும் நிறைய வாசிங்க” என்று ஊக்கப்படுத்தினேன்.

“Aunty! Have you read the whole Bible?” என்று இன்னொரு சிறுவன் கேட்டான்.

“இல்லை” என்றேன் சிரித்தவாறே.

“Then which holy book have you read completely?” – கேள்விகள் தொடர்ந்தன

“எதையும் அல்ல. ஆனால் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்கப் பிடிக்கும். அதன் பொருட்டு எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். வெவ்வேறு கலாச்சாரங்களில் தென்படும் ஒற்றுமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முயற்சியில் கிடைத்த சில தகவல்கள் இவை. எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு துளி கடல்” என்று மறுமொழிந்தேன்.

“வேறென்ன ஒற்றுமைகள் இருக்கின்றன?”

“கிருஷ்ண அவதாரத்திற்கும் மோசஸ்க்கும் நிறைய ஒற்றுமை உண்டு. இருவருமே கால்நடை மேய்ப்பாளர்களாக இருந்தனர். கம்சனைப் போன்ற அரசன்தான் பார்வோன். இரண்டு பேருமே தத்தமது ராஜ்யத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கொல்ல ஆணையிட்டிருந்தனர். கிருஷ்ணன் மற்றும் மோசஸின் தாயார்கள் தத்தமது குழந்தைகளை ஆற்றில் விட்டனர்.

குந்திதேவி – மேரி மாதா, சிறுதொண்ட நாயனார் – ஆபிரகாம், சீதை – கிரேக்க புராணத்தில் வரும் Persephone…. என எனக்குத் தெரிந்த சில இவை”

“Aunty! You talk about everything. Which religion do you belong to?”

“Am an atheistடா”

“Wow!” – ஒரே குரலில் சிலரது வியப்பு வெளிப்பட்டது.

“சரி! அடுத்து யாரு பிடிச்ச புத்தகத்தைப் பற்றி சொல்லப் போறீங்க?”

அடுத்ததாக ஒரு சிறுமி ஹாரி பாட்டரை களத்தில் இறக்க அதன் பிறகு முழுமையாக அவர்களின் பேச்சைக் கவனிக்கலானேன்.

வகுப்பு முடிந்து கலைந்து செல்கையில் “Aunty! Could you share more stories next week too? Both historical and mythological ones. Also we would like to know a bit more about etymology.”

“கண்டிப்பா டா. நான் இன்னும் நிறைய வாசிக்கணும் அப்போ. அடுத்த வாரம் பார்ப்போம்” என்று கலைந்து சென்றோம்.

**************************

இப்ப என்னாச்சுன்னா மக்களே…..

மறுநாள் மாலை எனக்கு ஒருங்கிணைப்பாளரிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. முந்தைய நாள் வகுப்பைப் பற்றி எதார்த்தமாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் மெல்ல விஷயத்தைப் போட்டு உடைத்தார்.

“அது…. ஒண்ணுமில்ல… ஒரு complaint வந்துருக்கு”

மனதினுள் வேகமாக ஒரு முறை ஓட்டிப் பார்த்தேன். சர்ச்சைக்குரிய கருத்துகள் எதுவுமே இடம் பெறவில்லையே!

“என்னாச்சு சார்?”

“நீங்க ஏதோ கடவுள் இல்லனு சொன்னதா…. ஒரு parent கொஞ்சம் hurt ஆகிட்டாங்க”

ங்கே…. எதே?!

“கடவுள் இருப்பைப் பற்றியோ மறுப்பைப் பற்றியோ பேசவே இல்லையே” என்றபடி வகுப்பில் நடந்தவற்றை ஒன்று விடாமல் ஒப்பித்தேன்.

சட்டென விஷயம் முழுவதும் புரிந்து கொண்டவராக “ஓ! ஓகே! ஓகே! விடுங்க பாத்துக்கலாம்” என்றபடி நடந்ததை விளக்கினார்.

வகுப்பில் உள்ள ஒரு குழந்தை வீட்டினரிடம் “கடவுள்ன்னு ஒண்ணு உண்டா?” என்று கேட்டிருக்கிறது. அநேகமாக ‘atheist’ஐ கூகுள் செய்திருக்க வேண்டும். அல்லது தானாக யோசித்திருக்க வேண்டும். அந்தப் பெற்றோர் அந்த ஒற்றைக் கேள்வியின் காரணத்தை அறிய முயன்று ஆராய்ச்சியின் முடிவாக அவர்கள் கண்டுகொண்டது – நான் ‘கடவுள் மறுப்பு’ பிரசங்கம் செய்திருக்கிறேன்.

எனக்குச் சிரிப்புதான் வந்தது. அக்குழந்தையைக் குறை சொல்லவே முடியாது. யோசிக்கும் திறன் பெற்ற எந்த உயிரினத்திற்கும் இயல்பாக எழும் கேள்வியைத்தான் கேட்டிருக்கிறான்/ள்.

“ஒரு குழந்தை கேட்ட கேள்விக்கு என் தனிப்பட்ட தெரிவைக் கூறினேன். இதுக்கெல்லாமா offend ஆவாங்க? வகுப்பில் வரலாறு மற்றும் நாகரிகம் சார்ந்த எவ்வளவோ கருத்துகள் தகவல்கள் பரிமாறப்பட்டன. அந்த ஒரு வார்த்தைக்கு இந்தப் பாடா?”

“குழந்தைகளின் சிந்தனைத் திறன் சரியாகத்தான் இருக்கிறது. அதைச் சரியாகக் கையாளுபவர்களால் ஆன சூழல் பெரும்பாலும் அவர்களுக்கு அமைவதில்லை. இனிமேல் நான் பாத்துக்குறேன். உங்களைப் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் என்ன நடந்தது என்று ஒரு வார்த்தை சம்பிரதாயமாகக் கேட்டேன்” – நிதானமாகப் பேசிய அவர் தீவிரமான கடவுள் நம்பிக்கையுள்ளவர். ஆனால் பகுத்தறிவாதிகளையும் மதிக்கும் பக்குவம் வாய்க்கப் பெற்றவர் – “வக்கீலு… ஆனா நல்லவரு” என்ற பாபநாசம் பட வசனத்தோடு நோக்கற்பாலது.

                 ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார் ஒருங்கிணைப்பாளர். ஒரு வகுப்பில் முதல் திருக்குறளைச் சொல்லி அதற்குப் பொருள் விளக்கம் அளிக்கையில் ‘ஆதி பகவன்’ என்பது சிவபெருமானைக் குறிப்பதாக ஆசிரியர் ஒருவர் கூறியிருக்கிறார். கிறிஸ்தவ குடும்பத்தைச் சார்ந்த அவ்வகுப்புக் குழந்தை ஒன்றின் பெற்றோருக்கு மனம் புண்பட்டு, சொல்லாமல் கொள்ளாமல் வகுப்பை விட்டு நிறுத்திவிட்டார்களாம். சில பல மாதங்களுக்குப் பிறகுதான் வேறொருவர் மூலம் தெரிய வந்ததாம். பரிமேலழகரின் வழித் தோன்றலான அந்த ஆசிரியர் பரிமேலழகரையே ஒரு எட்டு முந்திச் சென்று கொடுத்த விளக்கம் ஒரு பறக்கோடி என்றால் பிள்ளையைப் பள்ளியிலிருந்து நிறுத்தியது இன்னொரு பறக்கோடி.

போகிற போக்கைப் பார்த்தால் தேம்பாவனி, சீறாப்புராணம், தேவாரம் போன்றவற்றையும் சமயம் சார்ந்தவை என்ற ஒரே காரணத்திற்காகப்  புறக்கணித்துவிடுவார்கள் போலும்.

ஜெய் அல்லா! கந்தனுக்கு ஸ்தோத்திரம்!

பொசுக் பொசுக்கென்று புண்பட்டுவிடுகிறார்கள் மனிதர்கள். மாற்றுக் கருத்துக்கு இடமே அளித்துவிடத் துணியாத ஒரு அற்புதமான தலைமுறையை வளர்த்தெடுக்கிறார்கள். நல்லவேளை! ஜியார்டானோ புருனோ, கலீலியோ போன்றோரின் காலங்களில் நான் பிறக்கவில்லை!

*********************

இதை அப்பாவிடம் பகிர்ந்த போது, “It happens. இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே” என்றார்கள்.  

“ஆனாலும் அமெரிக்காவில் இதை நான் எதிர்பார்க்கல” என்றதற்கு,

“அமெரிக்காவில் இருப்பவர்களுக்கெல்லாம் அந்த உலகம் மனதை விசாலமாக்கிப் பக்குவப்படுத்தி….” என்ற எனது பொதுப்புத்தியை “வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்” என்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லிச் சிரித்தார்கள் அப்பா.

தாம் இத்தாலியில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் உடன் பணிபுரிந்த எலெயனோரா அவர்களின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார். அர்ஜெண்டினாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் ஆய்வுப் படிப்பை முடித்து இத்தாலியில் வசிக்கும் அவர், “அமெரிக்காவைப் பொறுத்த வரை, உலகெங்கிலும் என்று கூட வைத்துக் கொள்ளலாம்… நீங்கள் வேறு மதத்தைச் சார்ந்தவர் என்பதைக் கூட ஏற்றுக் கொள்வார்கள். நாத்திகவாதி என்பதைத்தான் மிகப்பெரிய குற்றமாகப் பார்ப்பார்கள்” என்றார்களாம் அப்போதே.

            அதாவது தனது மூட நம்பிக்கைகள் இல்லாவிட்டாலும் அதற்கு ஒப்பான வேறு ஏதோவொரு கட்டமைப்பில் சக மனிதன் இயங்குவது வரை எம்மனிதனுக்கும் பிரச்சனை இல்லை. அவ்வாறாக எதுவுமே இன்றி ஒருவர் அடிப்படை அறிவுடன் வலம் வந்தால் பிறருக்கு மனம் புண்பட்டு சீழ் வைத்து நமநமத்துவிடும். அதானே? அமெரிக்கர்களே இப்படி என்றால் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் பரந்துபட்டதொரு பார்வையை எதிர்ப்பார்த்த என் மடமையைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன்.

பிறகு நிதானமாக அத்தருணத்தை மீண்டும் மனதில் ஓட்டிப் பார்த்தேன்.

“Aunty! Which religion do you belong to?”

ஏதாவதொரு மதத்தைச் சொல்லியிருக்கலாமோ? எப்படி முடியும்? உதாரணமாக, ஒரு கற்பனையான சூழல் – அரசியல் கலந்துரையாடல் நிகழ்கிறது. எதேச்சதிக்காரத்தையும் சர்வாதிகாரத்தையும் ஆதரித்து பேச வந்தவர்கள் பெரும்பாலானோர் அதைத் தூக்கிப் பிடிக்கும் கட்சியின் பெயரை வெளிப்படையாகப் போட்டுக் கொள்ள நாணி ‘விமர்சகர்’, ‘ஆய்வாளர்’, ‘செயற்பாட்டாளர்’ என வித விதமான முகமூடிகளை அணிந்து கொள்வர். இப்போது நான் பசப்பியவாறே கழுவுற நீரில் நழுவுற மீனாகப் பேசிக் கொண்டிருந்தால், ஃபாசிசத்தையே கொள்கையாகக் கொண்ட கட்சியின் சாயத்தையோ பாயாசம் கிண்டும் தற்குறி கட்சியின் சாயத்தையோ (இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பது ஒரு புறம் இருக்கட்டும்!) யாரேனும் என் மீது பூச எத்தனிப்பார்கள். அவசர அவசரமாக பதற்றத்தோடு அதை மறுதலிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதற்குப் பதில் முதலிலேயே ஒழுங்கு மரியாதையாக கருப்புச் சாயத்தைப் பெருமிதத்துடன் பூசி எனது அடையாளத்தை வெளிப்படுத்துவது உசிதம் அல்லவோ? இதே சூழல்தானே அதுவும்.

பொதுவாக பகுத்தறிவாளர்கள் யாரிடமும் போய்த் தாமாக அறிவித்துக் கொண்டு திரிவதில்லை. நானும் முடிந்த வரை வெகுசனத்தில் கரைந்து போகவே முயல்வேன். ஆனால் இப்படி நேருக்கு நேர் ஒரு கேள்வியை எதிர்கொள்ளும் போது சும்மானாங்காட்டி ஏதோ ஒன்றைச் சொல்லி வைக்க மனம் ஒப்பவில்லை.

“நீங்கள் வலதுசாரியா?”, “முதலாளித்துவத்தை ஆதரிப்பீர்களா?”, “அடிமைத்தனம் சரிதானே?”, “மூடத்தனங்களை ஏற்றுக் கொள்வீர்களா?”, “சாமி கும்பிடுவீர்களா?” – இவற்றுக்கு எப்படி “எப்போதாவது” என்று பதில் கூற முடியும்? வளைந்து நெளிந்து குழைந்து என் ஆளுமையை விட்டுக்கொடுத்து என்னை இழக்க வேண்டிய அவசியம்தான் என்ன? NO, THANK YOU!

மனம் சங்கெடுத்து முழங்கியது   – “Am an atheist”.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுப.சோமசுந்தரம் said:

தமிழ் வகுப்புகள் செம்மையாக நடந்து கொண்டிருந்தன. என் வகுப்பைச் சற்று சுவாரஸ்யமாக்கும் பொருட்டு பாடதிட்டத்தைத் தாண்டி சில விஷயங்களைப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரத் தொடங்கினேன். தமிழின் தொன்மையைப் பற்றி, அத்தொன்மையைப் பறைசாற்றும் விதமாகக் கிடைத்திருக்கும் கீழடி, ஆதிச்சநல்லூர் சான்றுகள் பற்றி, பழமையானதாகக் கருதப்படும் லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகள் மற்றும் கொரியன், ஆங்கிலம் போன்ற இன்ன பிற மொழிகளிலும் காணப்படும் தமிழ்ச்சொற்கள் பற்றி, பாவாணரின் சொல்லாராய்ச்சி மற்றும் வேர்ச்சொல் ஆராய்ச்சி பற்றி, தமிழர் நாகரிகம் பற்றி, பழைய சங்கப்பாடல்களில் மிக இயல்பாகத் தென்படும் அறிவியல் உண்மைகள் பற்றி…. என நீண்டது எங்கள் உரையாடல்.

தமிழில் பேசினால் தண்டம் அறவிடும் தமிழ்நாட்டு பள்ளியில் இப்படியும் ஆசிரியர்கள் மாணவர்களா?

பாராட்டுக்கள் பேராசிரியரே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழில் பேசினால் தண்டம் அறவிடும் தமிழ்நாட்டு பள்ளியில் இப்படியும் ஆசிரியர்கள் மாணவர்களா?

பாராட்டுக்கள் பேராசிரியரே.

இது நடந்தது தமிழ்நாட்டில் அல்ல; அமெரிக்காவில் வாரத்தில் சுமார் ஒரு மணி நேரம் இயங்கும் ஒரு தமிழ்ப் பள்ளியில். ஆசிரியர் நான் அல்லன்; என் மகள் சோம.அழகு.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

இது நடந்தது தமிழ்நாட்டில் அல்ல; அமெரிக்காவில் வாரத்தில் சுமார் ஒரு மணி நேரம் இயங்கும் ஒரு தமிழ்ப் பள்ளியில். ஆசிரியர் நான் அல்லன்; என் மகள் சோம.அழகு.

எனது பேரப்பிள்ளைகளும் வடகரோலினா,கலிபோர்ணியாவில் உள்ள இரு பள்ளிகளிலும் தமிழ் படிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சுப.சோமசுந்தரம் said:

இது நடந்தது தமிழ்நாட்டில் அல்ல; அமெரிக்காவில் வாரத்தில் சுமார் ஒரு மணி நேரம் இயங்கும் ஒரு தமிழ்ப் பள்ளியில். ஆசிரியர் நான் அல்லன்; என் மகள் சோம.அழகு.

சோம அழகு அவர்களின் தமிழ் சேவை பாராட்டுதலுக்குரியது!

ஆனால், சிறார்களின் தமிழின் மீதான ஆர்வத்தை போலி விஞ்ஞானத்தை முன்வைத்து உருவாக்குவது நல்ல விடயமாகத் தெரியவில்லை. எபிரேயத்தில் இருக்கும் "ஆதாம், ஈவ்" போன்ற சொற்கள் தமிழில் இருந்து தான் அங்கே சென்றன என்பதும், ஆதாமும் ஏவாளும் வாழ்ந்த இடம் "செரண்டிப்" என பைபிளில் இருக்கிறது (பைபிளில் செராபிம்- Seraphim என்ற தேவதைப் பெயர் தான் இருக்கிறதேயொழிய செரண்டிப் என்ற பெயர் எங்கேயும் இல்லை) அது இலங்கை/இந்தியாவின் தென்முனை என்பதும் கோராவில் எந்த ஆதாரங்களுமில்லாமல் பரப்பப் பட்டுக் கொண்டிருக்கும் போலி விஞ்ஞானக் கருத்துக்கள். குமரிக் கண்டமும் அப்படியானது தான். இதை பற்றி இங்கே பல ஆண்டுகள் முன்பே விவாதித்திருக்கிறோம்.

இப்படியான போலி விஞ்ஞானத்தின் பால் அடுத்த தலைமுறையை ஈர்க்க எந்த தமிழ் ஆசிரியரும் உதவக் கூடாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இப்படியான போலி விஞ்ஞானத்தின் பால் அடுத்த தலைமுறையை ஈர்க்க எந்த தமிழ் ஆசிரியரும் உதவக் கூடாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்!

உங்கள் பின்னூட்டத்தை முழுவதுமாகப் படியெடுத்து சோம.அழகுவிற்கு அனுப்பி விட்டேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுப.சோமசுந்தரம் said:

உங்கள் பின்னூட்டத்தை முழுவதுமாகப் படியெடுத்து சோம.அழகுவிற்கு அனுப்பி விட்டேன். நன்றி.

நன்றி!

"எல்லாத்திலையும் பிழை பிடிக்கிறான்" என்று யாழ் களத்தில் திட்டு வாங்கித் தான் எனக்குப் பழக்கம்😂. இப்படியான துலங்கலை எதிர்பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, சுப.சோமசுந்தரம் said:

மனம் சங்கெடுத்து முழங்கியது   – “Am an atheist”.

சிறப்பு 👍

17 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழில் பேசினால் தண்டம் அறவிடும் தமிழ்நாட்டு பள்ளியில் இப்படியும் ஆசிரியர்கள் மாணவர்களா?

அது உங்களது நாட்டிலாம் 😄

அடிப்டை கல்வியையே ஆங்கில மூலம் கற்பிக்கும் தமிழ அரசியல் கட்சி தலைவர்களை கொண்ட து தமிழ்நாடு

5 hours ago, Justin said:

இப்படியான போலி விஞ்ஞானத்தின் பால் அடுத்த தலைமுறையை ஈர்க்க எந்த தமிழ் ஆசிரியரும் உதவக் கூடாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்!

அவசியமான நோக்கம் அண்ணா

அப்படியானவற்றை செய்யாவிட்டால் தீவிர சிவபக்தன் எங்கள் ஈழதமிழ் மன்னன் இராவணன், சிவனிடம் தியானம் செய்து பலம் பெற்றவன் என்று புராண புலுடாக்களை எழுதி புல்லு அரிப்பது போன்ற நிலை தான் ஏற்படும்

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழில் பேசினால் தண்டம் அறவிடும் தமிழ்நாட்டு பள்ளியில் இப்படியும் ஆசிரியர்கள் மாணவர்களா?

அது உங்களது நாட்டிலாம் 😄

அடிப்டை கல்வியையே ஆங்கில மூலம் கற்பிக்கும் தமிழ அரசியல் கட்சி தலைவர்களை கொண்ட து தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நடந்ததையே எழுதியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழ்நாட்டில் நடந்ததையே எழுதியுள்ளேன்.

www.ndtv.com
No image preview

School 'Fines' Student For Speaking In Tamil

A girl student today petitioned the district collector alleging that she was fined Rs 300 by her school for speaking in Tamil.

"பெரியார் சொன்னார்..." என்ற "போலிச் செய்தி" போலவே இதுவும் 8 ஆண்டுகள் பழைய செய்தியொன்றை தோண்டியெடுத்து திமுக "லவ்வர்ஸ்" இப்போது பரப்பி வரும் வட்சப் போலிச் செய்தி தான். ஆங்கிலம் மூலம் கற்பிக்கும் ஒரு தனியார் பள்ளியில், தமிழில் பேசினால் தண்டம் அறவிடும் முறை இருந்ததாக 2017 இல் ஒரு முறைப்பாடு கலெக்ரர் வரை போயிருந்தது. தனியார் பள்ளிகளின் இந்த விதியை தமிழ் நாடு அரசு தடுக்க இயலாது என்பது தெரிந்தும் திமுக லவ்வர்ஸ் "திமுக அரசின் கீழ் தமிழ் நாட்டுப் பள்ளிகளில் தமிழ் பேசினால் தண்டம்" என்று காதில் பூச்சுற்றுகிறார்கள்.

கேட்பவர்களுக்கு "விசாலமான செவி" என்ற நம்பிக்கை தான்😂!

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பற்றி அங்கே வாழுகின்ற பேராசிரியரே சுருக்கமாக எழுதலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு கோட்பாட்டுக்குப் பின்னாலும் படுதீவிரமாகப் பின் திரள்வது தான் பொதுவாக உலகம் முழுக்கவுள்ள சிக்கல். அவர்கள் தமக்கென்று எதிரிகளைக் கட்டமைப்பது தாம் செய்வதே சரியென்பதைத் தம் மனதுக்கு சமாதானப் படுத்தத் தான். அப்படி எந்தத் தீவிரக் கொள்கையாளர்களும் தம் எதிரிகளோடு நடுநிலையாளர்களையும் சேர்க்கத் தவறுவதில்லை. அவர்களுக்குத் தான் எல்லாப் பக்கமும் நெருப்பு.

இதில் சிரிப்பு என்னவென்றால், பலருக்கும் தாங்கள் ஏதோ ஒன்றில் பக்கச் சார்பாக, அதுவும் தீவிரமாக இருப்பதே தெரிவதில்லை. அது ஆழ்மனதின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம், அதனாலோ என்னவோ. வரலாறு என்பது கொஞ்சம் உண்மை, நிறையப் பொய் சேர்த்து எழுதப்படும் புனைவு என்பதையும் உலகம் முழுக்க உள்ள கதைகள் மனிதரில் உள்ள இயற்கை உணர்வுகளை மையமாக வைத்து எழுந்தவை என்பதையும் மறுக்கவியலாது. மனித மேம்பாட்டை வலியுறுத்துபவற்றை எடுத்துக்கொண்டு மற்றவற்றை விட்டுவிட வேண்டியது தான்.

large.1067596699_.jpg

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

இதைப்பற்றி அங்கே வாழுகின்ற பேராசிரியரே சுருக்கமாக எழுதலாமே?

"தமிழ் நாட்டு அரசுப் பள்ளிகளில் தமிழ் பேசினால் அல்லது ஆங்கிலம் பேசா விட்டால் தண்டம்" எனக் கூறும் செய்தியை எங்கே நீங்கள் அறிந்து கொண்டீர்கள் என்று இங்கே மூலத்தை இணைத்தாலே வாசகர்கள் உண்மை பொய் பிரித்தறிய முடியும் என நினைக்கிறேன்.

எனக்கு எந்தத் தரப்பு, எந்த வழி முறைகளால் இந்தப் பொய்த்தகவலைப் பரப்புகிறது எனத் தெரியும். ஆனால், நீங்கள் செய்தி மூலத்தை இணையுங்கள், மேற்கொண்டு பேசலாம்!

(திராவிட "லவ்வர்ஸ்" வெளியிடும் மீம்கள், யூ ரியூப் அலட்டல்களை நான் "செய்தி" மூலங்களாகக் கருதுவதில்லை😎!)

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Justin said:

தமிழ் நாட்டு அரசுப் பள்ளிகளில் தமிழ் பேசினால் அல்லது ஆங்கிலம் பேசா விட்டால் தண்டம்"

அரசுப் பாடசாலைகளில் இல்லை.

தனியார் பாடசாலைகளில்த் தான் இந்த சம்பவம் நடந்தாக ஏதோ ஓர் பத்திரிகையில் வாசித்த ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஈழப்பிரியன் said:

அரசுப் பாடசாலைகளில் இல்லை.

தனியார் பாடசாலைகளில்த் தான் இந்த சம்பவம் நடந்தாக ஏதோ ஓர் பத்திரிகையில் வாசித்த ஞாபகம்.

சரி. அப்படியானால் எப்படி தமிழ் நாடு அரசு இதற்குப் பொறுப்பு என்கிறார்கள்? தனியார் பாடசாலைகளின் போதனா மொழி, சீருடை, இது போன்ற விதி முறைகளை எப்படி அரசு கட்டுப் படுத்த முடியும்?

இந்தப் போலிச் செய்திகளைப் பரப்பும் தரப்பின் தலைவர்களின் பிள்ளைகளே இப்படியான ஆங்கில மூலப் பாடசாலைகளில் கற்கும் போது, இது போன்ற குற்றச் சாட்டுகளுக்கு என்ன வலு இருக்கிறதென நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Justin said:

இதனாலேயே திமுக வந்த புதிதில் நடிகர் சிவகுமார் மற்றைய மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாரோ என்னமோ?

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

இதனாலேயே திமுக வந்த புதிதில் நடிகர் சிவகுமார் மற்றைய மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாரோ என்னமோ?

இந்தக் கருத்து ஏன் உங்கள் தண்டம் பற்றிய போலித் தகவலோடு தொடர்பு என விளங்கவில்லை.

திமுக 2004 இல் ஆட்சிக்கு வந்தது. 2006 இல், Tamil Nadu Learning Act 2006 என்ற சட்டம் மூலம் ஆண்டு 1 முதல் 10 வரை தமிழைப் பாடமாகக் கற்பிக்க வேண்டுமென்ற சட்டம் இயற்றப் பட்டது. சில வகைப் பள்ளிகளுக்கு மட்டும் விதி விலக்கு இருக்கிறது, ஆனால் எல்லா அரசுப் பள்ளிகளும், பெரும்பான்மையான தனியார் பள்ளிகளும் இந்தச் சட்டத்திற்கு உட்பட்டவை.

இணைப்பு: https://cms.tn.gov.in/cms_migrated/document/GO/sedu_e_145_2014.pdf

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2025 at 10:22, சுப.சோமசுந்தரம் said:

வணக்கம் பேராசிரியரே

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் தமிழ் எந்த நிலையில் உள்ளது என்பதை உங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் பேராசிரியரே

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் தமிழ் எந்த நிலையில் உள்ளது என்பதை உங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.

தனியார் பள்ளிகளில் (மாநில) அரசு உதவி பெறும் பள்ளிகள் உண்டு. சுயநிதிப் பள்ளிகளும் உண்டு (அதாவது, உயரிய கல்விக் கட்டணம் வசூலித்து நடைபெறுவன. எனவே சுயநிதி என்பது மாணவர் தம் சுயநிதி எனக் கொள்க; பள்ளியை நடத்துவோரின் நிதி அல்ல).

அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழிகள் மட்டுமே. இந்த இரண்டு மொழிப் பாடங்கள் தவிர ஏனைய பாடங்கள் தமிழிலோ ஆங்கிலத்திலோ நடைபெறும். சுயநிதிப் பள்ளிகளை நடத்தும் தனியார் பெரும்பாலும் CBSE (ஒன்றிய அரசின் Central Board for Secondary Education) பாடத்திட்டத்திலேயே நடத்துகின்றனர். அங்கே மும்மொழி என்ற பெயரில் தமிழ், ஆங்கிலம், இந்தி சொல்லித் தரப் படுகின்றன. சில இடங்களில் சமஸ்கிருதமும் (!!!), ஃபிரெஞ்சும் இருக்கலாம். ஏனைய பாடங்கள் ஆங்கிலத்தில் நடைபெறும். வேடிக்கை என்னவென்றால், எங்கெல்லாம் மூன்றுக்கு மேற்பட்ட மொழிகள் உள்ளனவோ, அங்கே பெரும்பாலான பெற்றோர் தமிழை விடுத்து மூன்று மொழிகள் தேர்ந்தெடுப்பர். கேட்டால், "தமிழ்தான் வீட்டில் பேசுகிறார்களே !" என்ற அறிவார்ந்த பதில் வரும். எந்த மக்கள் திரளிலும் பெரும்பாலானோர்க்குத் தாய்மொழி கூட ஒரு தகவல் பரிமாற்ற ஊடகமே ! சமீப காலத்தில் அரசுப் பணிக்கு - குறிப்பாக அரசு மருத்துவர் பணிக்கு - தமிழ்த் தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்பதால், போனால் போகிறது என்று தனியார் பள்ளிகளிலும் தமிழ் மொழி கற்போர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாகக் கேள்வி.

இந்த லட்சணத்தில் ஒன்றிய அரசுப் பள்ளிகளும் சிலவுண்டு. அவற்றில் தமிழ் ஆசிரியர்களே இல்லை என்பது கூடுதல் தகவல். இதற்கு அந்த அரசை மட்டும் குறை சொல்வானேன் ? பெரும்பாலான பெற்றோர் தமிழை விரும்பத் தயாரில்லையே !

சுருக்கமாகச் சொல்வதானால், மாநில அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால் மட்டுமே தமிழ்நாட்டில் தமிழ் உயிர்ப்புடன் இருக்கும் (மற்றபடி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் தமிழ் வாழும். எதையோ இழந்தவன்தான் அந்தப் பொருளுக்காக ஏங்குவானோ !)

மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தொழில் சார்ந்து அடுத்து வரும் படிப்புகளுக்கான தயாரிப்பிலேயே கவனம் செலுத்துவதால், பெரும்பாலானோர் எந்த மொழியையும் உருப்படியாகப் படிப்பதில்லை. எனவே அந்த வேற்று மொழிகளின் தாக்கத்தினால் தமிழ் தேய்ந்து விடப் போவதில்லை என்ற அற்ப மகிழ்ச்சியுண்டு.

தாய்மொழி குறித்த சாமானியரின் மனநிலையை வைத்து முன்னர் ஒரு கட்டுரை எழுதியதுண்டு. இங்கு அது ஓரளவு பொருந்தி வரலாம் :

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, சுப.சோமசுந்தரம் said:

தாய்மொழி குறித்த சாமானியரின் மனநிலையை வைத்து முன்னர் ஒரு கட்டுரை எழுதியதுண்டு. இங்கு அது ஓரளவு பொருந்தி வரலாம் :

தகவல்களுக்கு நன்றி ஐயா...

உங்கள் விரிவான பதிலுக்கு மிக்க நன்றி.

பத்திரிகை காணொளிகளில் வரும் செய்திகளையே பார்ப்பது.

உங்களைப் போன்றோர் எழுதும் போதே முழுவிபரமும் தெரிகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.