Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Offensive ? So What ?

- சோம.அழகு

நீங்கள் எந்த வயதினராகவும் இருக்கலாம். ஏற்கெனவே உங்களுள் ஊறிப் போன கற்பிதங்களையும் நம்பிக்கைகளையும் தாண்டி ஏரணம் மிகுந்த நியாயமான கேள்விகளுக்கு உங்கள் மனதில் இடமளிக்கும் அளவிற்குப் பக்குவம் பெற்றவராயின் தொடரலாம். அறிவைத் தக்கனூண்டு அளவில் பயன்படுத்தினாலே உள்ளம் துக்கப்பட்டு துயரப்பட்டு காயப்பட்டு புண்பட்டு உழல்வோராயின் இப்புள்ளியிலேயே விடை பெற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

உணவு, உறைவிடம் ஆகியவற்றைத் தேடிக் கொள்வதும் நமது பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்வதும் உள்ளுணர்வாக இருக்கையில் இறை என்பது இயற்கையான உள்ளுணர்வாக ஏன் இல்லை? அல்லது இறைவன் ஏன் அதை உள்ளுணர்வாக இயற்றவில்லை? இறை போதிக்கப்படாவிட்டால் திணிக்கப்படாவிட்டால் முற்றிலும் மறைந்து விடும் தன்மையானதாக ஏன் இருக்கிறது? ஒரு குழந்தை ஐரோப்பா/இந்தியா/இஸ்ரேல்/ சவுதி அரேபியாவில் பிறக்குமாயின் அது பெரும்பாலும் கிறித்தவ/இந்து/யூத/இசுலாம் மதத்தைச் சார்ந்ததாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். எனில் மதம் என்பது முற்றிலும் புவியியல் சார்ந்தது. எனவே இறை நம்பிக்கை என்பது தானாகக் கிட்டும் தெய்வீக அனுபவமோ ஒரு நிலையான உண்மையோ அல்ல. எனவே ஒரு குறிப்பிட்ட தலைமுறையில், அனைத்து குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களான பின் சுமாராக இருபது வயதிற்குப் பின்னர் தான் அவர்களுக்கு மதமும் கடவுள் நம்பிக்கையும் சொல்லித்தரப் பட வேண்டும் என உலகம் முழுக்க ஒரு தீர்மானம் கொண்டு வரப் பட்டால் அத்தலைமுறையோடு அனைத்து மதங்களும் அழிந்துவிடும்.

‘ஓர் ஆசுவாசத்தைத் தருகிறது’, ‘மன அமைதியைக் கொடுக்கிறது’… என பிறருக்குத் தொல்லை தராத வரை ஒரு தனிநபரது கடவுள் நம்பிக்கையில் எப்பிரச்சனையும் இல்லை. ஆனால் உடன்பாடு இல்லாத பிறர்மீதும் அர்த்தமற்ற சடங்குகளைத் திணிக்கும் போதும் பெரும்பாலான பக்திப் பரவச உரையாடல்களில் “அப்டிங்களா… ரொம்ப சந்தோசம்… நன்றி” என்று வெறுமனே கடந்து செல்ல முனையும் என்னைக் கிட்டத்தட்ட ‘சண்டைக்கு வா’ என அழைப்பு விடுக்கும் போதும் அவர்களின் மடமையை நான் பரிகசிப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். அதிலும் சிலர் வம்படியாக வந்து என்னுள் கடவுள் நம்பிக்கையை விதைக்கும் நற்பொறுப்பை ஏற்று அதை ஏதோ தாம் இறைவனுக்கு ஆற்றும் தொண்டாகக் கருதி அதில் முழு முயற்சியுடன் ஈடுபட்டு, பின்னர் மலங்க மலங்க முழித்தவாறே திரும்பிச் சென்ற சுவாரஸ்யமான தருணங்கள் சில உண்டு. அவ்வப்போது வாசிக்கக் கிடைத்த பெரும் ஆளுமைகள் பதிலுரைக்கும் போது மிகச் சரியாக வந்து கை கொடுத்திருக்கிறார்கள்!

“நம்மை மீறிய அற்புத சக்தி ஒன்று நிச்சயம் இருக்கிறது. நம்பு, நம்பிக்கைதானே எல்லாம்”

“சரி. நிரூபியுங்கள்”

“உனக்குத்தானே சந்தேகம்? நீ இல்லைன்னு நிரூபி, பார்ப்போம்”

“ஓ! நீங்க அப்பிடி வர்றீங்களா? அப்ப சரி. நான்தான் அந்த அற்புத சக்தி”

“அது எப்படி?”

“உங்கள் தர்க்க படி, உங்களுக்கு சந்தேகம்னா இப்போ நீங்கதான் நிரூபிக்கணும், நான் அற்புத சக்தி இல்லனு!”

“கடவுள் சர்வ வல்லமை படைத்தவர்”

“நானும்தான்”

“உன்னால கடவுள் செய்யுறத எல்லாம் செய்ய முடியுமா?”

“நடக்குறதெல்லாம் பாத்துட்டு கம்முன்னு கல்லாட்டம் இருக்கணும்தான? கொஞ்சம் கஷ்டம்தான்”

“பகுத்தறிவாளர்கள் ஏன் கடவுளைப் பற்றிப் பேசுகிறீர்கள்?”

“மருத்துவர்கள் ஏன் நோய்களைப் பற்றிப் பேசுகிறார்கள்?”

“இறையின் இடத்தை எதைக் கொண்டு சமன் செய்வாய்?”

“புற்றுநோய்க் கட்டியை அகற்றிய பின் அவ்விடத்தை எதைக் கொண்டும் நிரப்ப வேண்டியதில்லை”

“கடவுள் நம்பிக்கையே இல்லாவிட்டால் வாழ்வின் அர்த்தம்தான் என்ன?”

“ ‘எஜமானர்களே இல்லாவிட்டால் நான் யாருக்கு அடிமையாக இருப்பது?’ என கவலைப்படுகிறீர்களா?” (உபயம் : Dan Barker)

“பொதுவுடைமை, பகுத்தறிவாதம்லாம் கேட்க நல்லாருக்கும்; நடைமுறைக்கு சரி வராது”

“முதலாளித்துவம், மதம்லாம் கேட்கவே நல்லா இல்லையே”

“ ‘ஒரு’ கடவுளின் மீது கூடவா நம்பிக்கை இல்லை?”

“மடமை எவ்வுருவில் எப்பெயரில் வந்தால் என்ன?”

“என்ன நடந்தால் நம்புவாய்?”

“பெரியார் சொன்னதைப் போல் நேரில் வந்தால் நம்பி விடுவேன்”

“நம்பிக்கையற்ற உனக்கு ஏன் தரிசனம் தர வேண்டும்?”

“என்னை நம்ப வைக்க!”

“அதீத பக்தியுடன் இருக்கும் எங்களுக்கே தரிசனம் கிட்டியதில்லை”

“Exactly. அப்புறம் எதுக்கு நம்பிகிட்டு?”

“புனித நூல்களைக் கொஞ்சம் வாசி. அப்போதாவது உன்னில் மனமாற்றம் வருகிறதா, பார்க்கலாம்”

“பேசும் பாம்புகள், ஏழு தலை உயிரினங்கள், சூரியனை விழுங்கும் குட்டி குரங்கு, எலியின் மீது அமர்ந்து வலம் வரும் யானை, மலையைச் சுமக்கும் பறக்கும் குரங்கு…. – இவை இடம் பெற்றிருப்பவற்றை புனித நூல்கள் என்பதை விட ‘புனைவுகள்’ என்று கூறினால் சாலப் பொருத்தமாயிருக்கும். அவற்றைக் கொஞ்சம் வாசித்த பிறகுதான் கடவுள் இருப்பு குறித்த சந்தேகங்கள் முற்றிலும் அகன்று, ‘கருப்பு’ மனதிற்கு நெருக்கமாகிப் போனது”

“ப்ச்… எவ்வளவு நன்னெறி ஒழுக்கங்கள் மதிப்பீடுகள் கற்றுக்கொள்ளலாம் தெரியுமா?”

“அதற்கெல்லாம் உங்களுக்கு ஒரு புத்தகம் தேவைப்படுகிறதா? சரி எது தவறு எது என்று பிரித்தறியக் கூடவா தெரியாது?”

“இவ்வளவு பெரிய அண்டம் இத்தனை அற்புதங்களுடன் தானாக உருவாகியிருக்கவே இயலாது. அனைத்து உயிரினங்களும் தாமாக உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை”

“ஹ்ம்ம்… பூமியை உருவாக்கி பரிணாம வளர்ச்சிக்கான ஆதாரத்தையும் அதிலேயே விட்டு அதை கண்டறியும் அறிவையும் நமக்குத் தருவானேன்? நாம் சந்தேகம் கொண்டு இறையின் இருப்பைக் கேள்வி கேட்டு நரகத்திற்குச் செல்ல வேண்டியா? நமக்குச் சிந்திக்கும் ஆற்றலைத் தந்து அதைப் பயன்படுத்துவதற்குத் தடையும் விதித்து வினோதமான வழிமுறைகளுடன் இயங்குகிறார் கடவுள்”

“கடவுள் அன்பே உருவானவர். நீ ஏன் அவரை வெறுக்கிறாய்?”

“முதலாவதாக நீங்கள் இந்த உருவகத்தின் மூலம் அன்பைக் கொச்சைப்படுத்துகிறீர்கள். இரண்டாவதாக, இல்லாத ஒன்றை எப்படி நான் வெறுக்க இயலும்? கடவுள் என்னும் பெயரில் உலவும் கருத்தாக்கத்தைத்தான்(concept) வெறுக்கிறேன்”

“நீ அவரது அன்பை உணர மறுக்கிறாய்”

“ஆமாமா! இஸ்ரேலியர்கள் மனிதத் தன்மையுள்ளவர்கள்; இந்திய ஒன்றிய அரசு இஸ்லாமியர்களை நேசிக்கிறது; பார்ப்பனர்கள் சனாதனத்தை அடியோடு வெறுப்பவர்கள்;…. கடவுளும் அன்பானவர்தான். உணர்ந்துட்டேன்”

“சரி! உன்னைப் பொறுத்த வரை கடவுள்னா என்ன?”

“பசியில் வாடும் குழந்தைகளின் முனகல்கள், புற்றுநோயுடன் போராடும் குழந்தைகளின் வலி மிகுந்த அழுகைகள், வன்புணர்வு செய்யப்படும் குழந்தைகளின் ஓலங்கள், காஸாவில் தனது ஏழு வயது மகனின் தலை மட்டும் தனியாகக் கிடைக்க அதைக் கையில் ஏந்தியபடி வெளிப்பட்ட ஒரு தந்தையின் கேவல்கள், பிரசவித்த மறுநொடியே தன் குட்டியைச் சிங்கக் கூட்டத்திடம் இருந்து காப்பாற்ற முயன்று போராடி இறுதியில் இயலாமல், தாயும் (நிற்கப் பழகுவதற்குக் கூட நேரம் கிட்டாத) மான்குட்டியும் இரையாகிப் போகும் போது காடு அதிர கேட்கும் வெற்றி கர்ஜனை - இவை அனைத்தும் விண்ணை முட்டி வெளியை (space) அடையும் போது இவற்றிற்குப் பதிலாகக் கிடைக்கும் காதைக் கிழிக்கும் குரூரமான அமைதியின் பெயர்தான் ‘கடவுள்’!”

இவற்றுக்கெல்லாம் உச்சகட்டமாக எரிச்சலூட்டும் ஒரு வாதம் உண்டு.

“நானும் ஒரு காலத்தில் உன்னை மாதிரிதான் இருந்தேன்” - “மொதல்ல தெளிவாதான் இருந்தேன்; அப்புறம்தான் மண்ட கோளாறு வந்துச்சு” என்பதில் என்ன பெருமை? இப்படிச் சொல்வதன் மூலம் தமது மடமையை இன்னும் அதிகப்படுத்திக் கொள்கிறார்களே அன்றி வேறென்ன? ஏதோ இப்போது உலகம் புரிந்துவிட்டதாகவும் தான் ஞானி ஆகி விட்டதாகவும் நம்மை நம்ப வைக்கும் பரிதாப முயற்சிகள் எதற்கு? கொள்கை பிடிப்புள்ள பகுத்தறிவாளர் யாரும் எந்தக் கட்டத்திலும் மனமாற்றம் அடைந்து இறையைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். எனவே இவ்வாறு பேசுபவர்களுள் துவக்கத்திலிருந்தே ஆத்திகமும் ஒருபிடி அடிப்படைவாதமும் உறைந்தே இருந்திருக்கிறது என்றுதான் பொருள்.

“நானும் (சிறுவயதில்) உங்களைப் போல்தான் இருந்தேன். நீங்கள் பொய்களை நம்பத் தொடங்கிய காலத்தில் நான் அதைக் கைவிடத் துவங்கியிருந்தேன்” என பதிலுக்குச் சொல்லச் சொல்லி அரித்தெடுக்கும் மனதைப் பல முறை அமைதிபடுத்தியிருக்கிறேன்.

எல்லாரும் நாத்திகர்களாகத்தான் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள் - பயமும் மதமும் விதைக்கப்படும் வரை. “வளர வளர புரியும்” என்கிறார்கள். வளர வளர என்னிடம் கேள்விகள்தாம் பெருகிக் கொண்டே இருக்கின்றன. அடுத்ததாக இன்னும் ஒரு படி மேலே சென்று சிலர் “கடைசி காலத்தில் இறையை உணருவாய்” என்று சாபம் விடும் தொனியில் கூறும் போதுதான் சிரிப்பை அடக்க இயலாது எனக்கு. என் மரணப் படுக்கையில் இல்லாத கடவுளைப் பற்றி ஏன் எண்ணிக் கொண்டிருக்கப் போகிறேன்? அப்பாவிடம் இன்னும் ஒரு ரசனையான சங்கப் பாடலைச் சொல்லச் சொல்லிக் கேட்டிருக்கலாம்; அம்மாவின் கையால் இன்னும் ஒரு நெய் தோசை சாப்பிட்டிருக்கலாம்; என் மகளை இன்னும் ஒரு முறை இறுக அணைத்து அன்பைப் பொழிந்திருக்கலாம்; என்னவனுடன் இன்னும் ஒரு பயணம் சென்றிருக்கலாம்; இன்னும் ஒரு புத்தகம், ஒரு நல்ல சினிமா, இசைக்கோர்வை என ரசித்திருக்கலாம்… இப்படித்தான் நீளும் என் சிந்தனைகள். மேலும், ஒருவேளை உண்மையாக இருந்தாலும் கூட (வாய்ப்பில்லை! சும்மா ஒரு பேச்சுக்கு) அத்தருணத்தில் இறையை உணார்ந்துதான் என்ன ஆகப் போகிறது?

You have the right to believe in what you want; I have the right to believe it’s ridiculous – Ricky Gervais

ஒரு முறை வீட்டில் நான் தலை சீவிக் கொண்டிருக்கையில் சாமி கும்பிட வரச் சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே என்ன தோன்றியதோ? விளையாட்டாக இவ்வாறாக பதில் கூறினேன் – “இச்சீப்பின் வழியாக ஆண்டவனாகிய கடவுளிடம் எல்லாம் வல்ல இறைவனிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்”. “பைத்தியம்! சீக்கிரம் வா” என்று சிரித்தவாறே சென்றுவிட்டார் அழைக்க வந்தவர். அவ்வாக்கியத்தில் ‘சீப்பு’ என்ற சொல் ஒன்றுதான் பிரச்சனையாகப் பட்டிருக்கிறது, பாருங்களேன்! மற்றபடி அடுத்த அறைக்கு சென்று சில வண்ண வண்ணப் படங்களைப் பார்த்துப் பேசுவது, கல்லைப் பார்த்துப் பேசுவது, உத்திரத்தை நோக்கிப் பேசுவது, சுவற்றுடன் பேசுவது, நெடுஞ்சாண் கிடையாகவோ மண்டியிட்டோ விழுந்து தரையுடன் பேசுவது – இவையெல்லாம் நல்ல மனநிலையில் உள்ளவர் செய்வதற்கு ஏற்றவைதானாம். “நீங்கள் மனமுருகி பிரார்த்தனை செய்து வேண்டிக்கொள்ளுங்கள்; நான் அவ்வாறு செய்வதாக நடிக்கிறேன்” – இரண்டிற்குமான பலன்களில் என்ன வித்தியாசம் என்று காண விருப்பம். கோவில் வாசலில் இரப்பவனின் தட்டில், உள்ளே செல்லும் சாமானியன் இடும் அதே அலட்சியமும் மௌனமும் கருவறையில் வீற்றிருக்கும் கல்லிடம் இருந்து அச்சு பிசகாமல் அப்படியே சாமானியனுக்கும் கிட்டுவதுதான் இயற்கையின் சமநிலை!

“எனது நம்பிக்கையால் நான் இதைச் செய்கிறேன்/செய்ய மாட்டேன்” என்ற அளவில் இருப்பது “எனது நம்பிக்கையால் நீ இதையெல்லாம் செய்/செய்யாதே” என்றாகும் போதுதான் பிரச்சனையே! ஒரு கட்டத்தில் ‘சரி! செய்துவிட்டுத்தான் போவோமே! இச்செய்கைகள் என்னில் என்ன பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து விடப் போகின்றன?’ என பிறரது நம்பிக்கைகளை மதிக்கும் பொருட்டு விளக்கேற்றி பூஜை செய்தாலும் ‘கடமைக்குன்னு செய்றதுக்கு எதுக்கு செய்யணும்?’ என்ற அஸ்திரம் வரும். பகுத்தறிவாத நங்கைகளிடம் “உன் நம்பிக்கையில் நான் தலையிட மாட்டேன்” என்று கூறும் ஆத்திகர்களை ஓரளவு முற்போக்குவாதிகளாக நான் அனுமானித்து வைத்திருந்த காலம் மலையேறிவிட்டது. அதாகப்பட்டது ஓர் இறை மறுப்பாளரின் நம்பிக்கையைத் தவறென்று நேரடியாகப் பழித்துரைக்காது இச்சமூகம். சடங்குகள், வழிபாட்டு முறைகள் என எல்லாவற்றையும் அவர் ஒழுங்காகப் பின்பற்றிவிட வேண்டும் என்று மட்டுமே எதிர்ப்பார்க்கப்படும். (என்னே உங்கள் சனநாயகம்!) அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் எனது பிம்பம் கண்ணாடியில் எதிரொளிக்கும் போது எனக்கு ஊன்றுகோலாயிருக்கும் பகுத்தறிவுப் பகலவனின் கைத்தடியும் என் பார்வையை விசாலமாக்கித் தெளிவுபடுத்தித் தரும் அன்னாரது கண்ணாடியும் கொஞ்சம் கொஞ்சமாக என்னில் இருந்து தூரமாக விலக ஆரம்பித்தது போல் இருந்தது. மீண்டும் மீண்டும் அவற்றை இறுகப் பற்றிக் கொள்வதில்தான் புதைந்திருக்கிறது என் ஆளுமை!

ஒரு தனிமனிதனின் மதிப்பீடுகள் வாழ்வியல் நெறிமுறைகள் ஒழுக்கங்கள் ஆகியவற்றை இறை நம்பிக்கையோடு சிக்கலான முடிச்சு போட்டே பார்த்துப் பழகிய சமூகத்திற்குப் புரியாத புதிராக விளங்கும் ஒன்று – இறை மறுப்பாளர்களால் எவ்வித கண்காணிப்பு சாதனமும் இன்றி தாமாகவே நல்லவர்களாகவும் கற்பனையான உந்துதலின்றி தன்னம்பிக்கையாளர்களாகவும் இயங்க இயலும் என்பதே!

எவ்வித ஆதாரங்களும் இன்றி நம்பப்படுவது எனில் மதத்திற்கும் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட பொய்களால் ஆன ஒரு ஸ்தாபனத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என்ன? மதம் என்பது மனிதத்திற்கும் மனித குலத்தின் மதிநுட்பத்திற்கும் இழைக்கப்பட்ட துரோகம், மாபெரும் அவமதிப்பு. அறிவுக்கு நேர்மையாக நடந்து கொள்வதன் இயற்கை விளைவாகிய பகுத்தறிவாதம் என்பது உண்மையும் நம்பிக்கையும் ஒரே புள்ளியாகி ஒன்றாக சங்கமிக்கும் இடம்.

நாம் முன்வைக்கும் ஒரு வாதத்திற்கு ஏரணத்திற்குட்பட்ட ஒரு சரியான எதிர்வாதம் இல்லாதவர்களின் கடைசி புகலிடம் - ‘It’s offensive’. இதன் பின்னால் ஒளிந்து கொண்டால் தாம்தான் சரியென்றும் ஒரு படி மேலே சென்றுவிட்டதாகவும் இவர்களுக்கு யார் சொல்லித் தந்தது? ‘That’s offensive’ is not an argument – Christopher Hitchens

இனி ‘offensive’ஐ தூக்கிக் கொண்டு வருபவர்களுக்கு எனது பதில், “So What?”

"One day Atheism will disappear as a concept. Instead there will be normal people and some weirdo believers" – Frank Zappa

நன்றி - 'கீற்று' இணைய இதழ்.

https://www.facebook.com/share/r/1AaTbmWWi1/

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, சுப.சோமசுந்தரம் said:

Offensive ? So What ?

- சோம.அழகு

ஒரு தனிமனிதனின் மதிப்பீடுகள் வாழ்வியல் நெறிமுறைகள் ஒழுக்கங்கள் ஆகியவற்றை இறை நம்பிக்கையோடு சிக்கலான முடிச்சு போட்டே பார்த்துப் பழகிய சமூகத்திற்குப் புரியாத புதிராக விளங்கும் ஒன்று – இறை மறுப்பாளர்களால் எவ்வித கண்காணிப்பு சாதனமும் இன்றி தாமாகவே நல்லவர்களாகவும் கற்பனையான உந்துதலின்றி தன்னம்பிக்கையாளர்களாகவும் இயங்க இயலும் என்பதே!

நன்றி - 'கீற்று' இணைய இதழ்.

https://www.facebook.com/share/r/1AaTbmWWi1/

எல்லாக் கருத்துக்களும் நன்றாக இருக்கின்றன, ஆனால் இது அடிக்கடி எனக்கும் எழும் ஒரு கருத்து: "சாமி கண்ணைக் குத்தும்" என்ற பயம் காரணமாக அறத்துடன் நடப்பது கடிவாளம் போட்ட குதிரை போன்ற நிலை. அறத்திற்காக அறம் என்ற நிலை இருந்தால், "சாமி இருந்தாலும்" எங்கள் கண்ணைக் குத்தாது!

ஆனால்...அறம் செய்தால் நமக்கு நன்மையே பதிலாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பொய்யானது. நல்ல விடயங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கே பல்லும் நகமுமாய் தொடர்ந்து போராட வேண்டிய உலகச் சூழலில், கடவுள் நம்பிக்கை எனக்கும் இப்போது ஈடாடி வருகிறது. குறிப்பாக காசாவின் குழந்தைகளைக் காக்காத தெய்வம், எந்த கிளைமாக்ஸை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது இன்னும்😂?

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2025 at 12:40, Justin said:

கடவுள் நம்பிக்கை எனக்கும் இப்போது ஈடாடி வருகிறது. குறிப்பாக காசாவின் குழந்தைகளைக் காக்காத தெய்வம், எந்த கிளைமாக்ஸை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது இன்னும்

❤️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.