Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"தொடங்கியது தேர்தல் பிரசாரம்" - திமுக, அதிமுக, தவெக கட்சிகளின் திட்டம் என்ன?

தமிழ்நாடு, சட்டமன்றத் தேர்தல், பிரசாரம், தேர்தல் உத்தி, திமுக, அதிமுக, தவெக, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய்

படக்குறிப்பு, சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் கட்சிகள் சந்திக்கப் போகும் சவால்கள் என்ன?

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தைத் தி.மு.க தொடங்கியுள்ளது. 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் இன்று (ஜூலை 7) முதல் அ.தி.மு.க பிரசாரம் தொடங்கியுள்ளது.

செப்டம்பர் முதல் தமிழ்நாடு முழுவதும் த.வெ.க தலைவர் விஜய் பயணம் மேற்கொள்ள உள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இந்தப் பயணங்கள் கைகொடுக்குமா? கட்சிகள் சந்திக்கப் போகும் சவால்கள் என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பத்து மாதங்கள் உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் பலவும் இப்போதிலிருந்தே தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த 1 ஆம் தேதி 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்கவும் தி.மு.க உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வதற்கும் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளதாக திமுக கூறுகிறது.

தி.மு.க பிரசாரத்தில் என்ன நடக்கிறது?

தமிழ்நாடு, சட்டமன்றத் தேர்தல், பிரசாரம், தேர்தல் உத்தி, திமுக, அதிமுக, தவெக, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய்

படக்குறிப்பு, சுமார் 45 நாட்களுக்கு தி.மு.க அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஈடுபட உள்ளனர்.

ஜூலை 3 அன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்தப் பணியில் சுமார் 45 நாட்களுக்கு தி.மு.க அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஈடுபட உள்ளனர்.

பிரசாரத்தில் வீடு, வீடாகச் செல்லும் தி.மு.க-வினர், 'மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம் போன்றவற்றால் அவர்களுக்குப் பலன் கிடைத்துள்ளதா?' எனக் கேட்கின்றனர்.

அவர்கள் தெரிவிக்கும் பதிலை விண்ணப்ப படிவம் ஒன்றில் பூர்த்தி செய்கின்றனர். அடுத்து, 'தி.மு.க ஆட்சியைப் பிடித்துள்ளதா? கட்சியில் உறுப்பினராக சேர விருப்பம் உள்ளதா?' எனக் கேட்கின்றனர். 'ஆம்' எனப் பதில் அளித்தால் அதற்கான காரணம் குறித்து ஆறு கேள்விகள் கேட்கப்படுகின்றன.

"உறுப்பினராக சம்மதம் தெரிவித்தால் மட்டுமே இந்தக் கேள்விகள் கேட்கப்படுகின்றன" எனக் கூறுகிறார், விருகம்பாக்கம் தெற்குப் பகுதி தி.மு.க செயலாளர் கண்ணன்.

'ஓடிபி வந்தால் தான் உறுப்பினர்'

தமிழ்நாடு, சட்டமன்றத் தேர்தல், பிரசாரம், தேர்தல் உத்தி, திமுக, அதிமுக, தவெக, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய்

படக்குறிப்பு, பிரசாரத்தில் விருகம்பாக்கம் தெற்குப் பகுதி தி.மு.க செயலாளர் கண்ணன் மற்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன்

இதன்பிறகு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட செயலியில் (App) உறுப்பினராக சேர விரும்பும் நபரின் வட்டம், பாகம் ஆகியவற்றைக் குறிப்பிடும்போது, வாக்காளர் பட்டியலில் உள்ள அவரது பெயரை செயலியில் காட்டுகிறது.

"வாக்காளர் பட்டியலில் பெயரைத் தேர்வு செய்யும்போது தொடர்புடைய நபரின் எண்ணுக்கு ஓடிபி வரும். அதைக் குறிப்பிட்டால் மட்டுமே அவர் உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார். இதனால் போலி உறுப்பினரைச் சேர்ப்பதற்கு வாய்ப்புகள் இல்லை" எனக் கூறுகிறார் கண்ணன்.

இதுதவிர, 'நீட் தேர்வு ரத்து, மாநிலத்துக்கான நிதி ஆதாரம் ஆகியவற்றுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் போராடுவதை ஏற்கிறீர்களா?' என்ற தொனியிலும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பகுதியிலும் அமைச்சர்கள், நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து பணியாற்றுவதால் கட்சியின் தொண்டர்கள் ஆர்வத்துடன் வேலை பார்ப்பதாகவும் கூறுகிறார் கண்ணன்.

'அதிருப்தியை சரிசெய்யவே பிரசாரம்'

தமிழ்நாடு, சட்டமன்றத் தேர்தல், பிரசாரம், தேர்தல் உத்தி, திமுக, அதிமுக, தவெக, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய்

பட மூலாதாரம்,SHYAM

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

"பல மாவட்டங்களில் அமைச்சர்களைச் சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. அதை சரிசெய்வதற்கும் தொண்டர்களின் தேவையை சரிசெய்வதற்கும் தி.மு.கவுக்கு இந்தப் பிரசாரப் பயணம் உதவி செய்யலாம்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "எந்தக் காலத்திலும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியை ஒரு கட்சியால் சரிசெய்ய முடியாது. ஆனால், அந்த அதிருப்தியை மென்மைப்படுத்த முடியும்" எனவும் குறிப்பிட்டார்.

"மக்களிடம் சில வருத்தங்கள் இருந்தால் அதைக் குறுகிய காலத்தில் சரிசெய்வதும் பிரசாரப் பயணத்தின் நோக்கமாக உள்ளது" எனக் கூறுகிறார் தி.மு.க செய்தித் தொடர்புத் துறை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்,

"பெரும்பான்மையான மக்களிடம் இந்த அரசுக்கு ஆதரவான மனநிலை தான் உள்ளது" என பிபிசி தமிழிடம் கூறிய கான்ஸ்டன்டைன், "தேர்தலுக்கு முன்பு எந்தவொரு ஆளும்கட்சியும் மக்களைச் சந்தித்ததாக வரலாறு இல்லை. அது தி.மு.கவுக்கும் பொருந்தும். தற்போது சந்திப்பதன் மூலம் ஆட்சியின் திறத்தை அளவிடலாம்" என்கிறார்.

"தவிர, எந்தவோர் அரசிலும் 100 சதவீத அளவு மக்களைத் திருப்திப்படுத்த முடியாது. அப்படி இருந்தால் ஒரே அரசு தான் தொடர முடியும். மக்கள் அதிகமாக எதிர்பார்ப்பதால் தான் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது" எனவும் அவர் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் பிரசார பயணம்

பிரசாரத்தை மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம்,AIADMKOFFICIAL/X PAGE

படக்குறிப்பு, பிரசாரத்தை மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி

தி.மு.க-வைத் தொடர்ந்து, 'மக்களைக் காப்போம் தமிழகம் மீட்போம்' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பழனிசாமி சுற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று (ஜூலை 7) தொடங்கும் தனது சுற்றுப்பயணத்தை வரும் 23 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் அவர் நிறைவு செய்ய உள்ளார்.

இதற்காக பிரத்யேக பேருந்து ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ரோடு ஷோ ஒன்றை நடத்தி மக்களின் குறைகளைக் கேட்கவும் இந்தப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திக் கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளார்.

தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு வழங்கப்பட்டு வந்த 'ஒய் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு, தற்போது 'இசட் பிளஸ்' என மாற்றப்பட்டுள்ளது. இந்த உயர்ரக பாதுகாப்பில் 12 கமாண்டோ வீரர்களும் 52 காவலர்களும் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.

"தி.மு.க ஆட்சியை அகற்றுவதற்காக இந்த சுற்றுப்பயணம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய எடப்பாடி பழனிசாமி, "எனது பயணம் மூலம் மிகப் பெரிய அளவில் மக்கள் ஆதரவைப் பெற்று அ.தி.மு.க ஆட்சியமைக்கும்" எனக் கூறினார்.

"பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு?"

மேட்டுப்பாளையம் பிரசார பயணத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'காங்கிரஸ் கட்சி எமர்ஜென்சி கொண்டுவந்தது. மிசா சட்டத்தில் தன்னை சிறையில் அடைத்ததாக ஸ்டாலின் சொல்கிறார். நீங்கள் மிசாவில் கைதுசெய்த கட்சியோடு கூட்டணி வைத்துள்ளீர்கள். நாங்கள் தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு." என கேள்வி எழுப்பினார்.

அதிமுக எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள் என்ன?

தமிழ்நாடு, சட்டமன்றத் தேர்தல், பிரசாரம், தேர்தல் உத்தி, திமுக, அதிமுக, தவெக, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய்

படக்குறிப்பு, அ.தி.முக கூட்டணியில் பா.ஜ.க இடம்பெற்றுள்ள சூழலில், அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூட்டணிக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

அ.தி.முக கூட்டணியில் பா.ஜ.க இடம்பெற்றுள்ள சூழலில், அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூட்டணிக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், "தமிழ்நாட்டில் பா.ஜ.க கால் ஊன்ற முடியாது" எனக் கூறியுள்ளார்.

கூட்டணி என்பது தற்காலிக ஏற்பாடு எனவும் கூட்டணி ஆட்சிக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை எனவும் அன்வர்ராஜா பேசியுள்ளார்.

இதனைக் குறிப்பிட்டு பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "கூட்டணி தொடர்பான பல்வேறு கேள்விகளை இந்தப் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி எதிர்கொள்ள வேண்டியது வரும்" எனக் கூறுகிறார்.

"ஒவ்வொரு கூட்டத்திலும் பா.ஜ.க தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும்" எனக் கூறும் ஷ்யாம், "முதலமைச்சரிடம் கேள்வி கேட்பதில் சில சிரமங்கள் உள்ளன. ஆனால், எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்பதில் பிரச்னை இருக்காது" என்கிறார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இடம்பெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் நான்கு தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றது.

"தற்போதும் அ.தி.மு.க அணியில் பா.ஜ.க உள்ளதால் கூட்டணியில் பெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை. அப்போது எடப்பாடியுடன் ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்தார். தற்போது அவர் அ.தி.மு.க-வில் இல்லாமல் இருப்பதை மைனஸாகப் பார்க்கலாம்" என்கிறார் ஷ்யாம்.

தொடர்ந்து பேசிய அவர், "சிறையில் இருந்து வந்த பிறகு அரசியலில் இருந்து சசிகலா ஒதுங்கியிருந்தார். ஆனால், இந்த தேர்தலில் அவர் என்ன நிலைப்பாட்டை எடுப்பார் எனத் தெரியவில்லை" என்கிறார்.

ஆட்சி மீதான அதிருப்தி ஓட்டாக மாறுமா?

தமிழ்நாடு, சட்டமன்றத் தேர்தல், பிரசாரம், தேர்தல் உத்தி, திமுக, அதிமுக, தவெக, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய்

படக்குறிப்பு, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான காசிநாத பாரதி

"தி.மு.க ஆட்சி மீதான மக்களின் அதிருப்தி தனக்கு ஓட்டாக மாறும் என எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். ஆனால், அது முழுமையாக கிடைப்பதற்கு வாய்ப்பில்லை" எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார்.

இதனை மறுத்துப் பேசும் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான காசிநாத பாரதி, "சட்டம் ஒழுங்கை சரிவர இந்த ஆட்சியால் கையாள முடியவில்லை. அதற்கு ஆம்ஸ்ட்ராங் படுகொலை, திருப்புவனம் காவல் மரணம் என அன்றாட நிகழ்வுகளே சாட்சியாக உள்ளன. அ.தி.மு.கவின் வெற்றிக்கு இது போதுமானதாக இருக்கும்" எனக் கூறுகிறார்.

அதையொட்டியே எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயணமும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையும் பிரதானமாகப் பேசப்படுகிறது. "தி.மு.க மற்றும் பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை" என, அக்கட்சியின் செயற்குழுவில் நடிகர் விஜய் அறிவித்தது பேசுபொருளாக மாறியது.

"தங்கள் கூட்டணிக்கு த.வெ.க வருவதற்கான வாய்ப்புள்ளதாக அ.தி.மு.கவில் உள்ள ஒரு சாரார் எதிர்பார்த்தனர். செலவு செய்தால் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற கனவில் இருந்தனர். கூட்டணி இல்லை என விஜய் கூறிவிட்டதால், அவர்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டுள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

"விஜய்க்கு வரவேற்பு இருக்கும்"

தமிழ்நாடு, சட்டமன்றத் தேர்தல், பிரசாரம், தேர்தல் உத்தி, திமுக, அதிமுக, தவெக, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய்

பட மூலாதாரம்,TVK

படக்குறிப்பு, தமிழ்நாடு முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் முதல் த.வெ.க தலைவர் விஜய், சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.ஆனந்த் அறிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் முதல் த.வெ.க தலைவர் விஜய், சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.ஆனந்த் அறிவித்தார்.

சென்னை பனையூரில் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க செயற்குழு கூட்டத்தில் பேசிய எஸ்.ஆனந்த், செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இந்தப் பயணம் நடைபெற்ற உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

"தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 12,500 கிராமங்களில் கட்சியின் கொள்கைக் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன" எனவும் எஸ்.ஆனந்த் தெரிவித்தார்.

த.வெ.க-வுக்கு இந்தப் பயணம் பலன் கொடுக்கும் எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "திரை நட்சத்திரமாக இருப்பதால் விஜய்க்கு வரவேற்பு இருக்கும். தி.மு.க-வை பொறுத்தவரை எந்தக் கூட்டமாக இருந்தாலும் அது ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றாகத்தான் இருக்க முடியும்" என்கிறார்.

தமிழ்நாடு அரசியல் களத்தில் வரும் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மூன்று மாதங்கள் முக்கியமாக உள்ளதாகக் கூறும் ஷ்யாம், "அதன்பிறகு மழைக்காலம் தொடங்கிவிடும். ஜனவரியில் தேர்தல் பேச்சுகள் தொடங்கிவிடும்" எனக் கூறுகிறார்.

தனது சுற்றுப்பயணத்தை நடிகர் விஜய் தாமதமாக தொடங்கினால் மழையில் சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிருப்தி வாக்குகள் யாருக்கு?

"திரைப் பிரபலம் என்ற கவர்ச்சி உள்ளதால் த.வெ.க குறித்து அ.தி.மு.க தான் கவலைப்பட வேண்டும்" எனக் கூறும் ஷ்யாம், "தி.மு.க எதிர்ப்பு வாக்கு வங்கியை த.வெ.க பிளவுபடுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அது அ.தி.மு.க-வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்தார்.

கடந்தகால தேர்தல்களில் தி.மு.க எதிர்ப்பு வாக்குகள் அ.தி.மு.க மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு மடைமாறிய நிலையில், தற்போது இந்த வாக்குகள் தமிழக வெற்றிக் கழகத்தைச் நோக்கிச் செல்லலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் காசிநாத பாரதி, "புதிய வாக்காளர்களின் வாக்குகளை மட்டுமே த.வெ.க பிரிக்கலாம். அதனால் எந்த பாதிப்பும் அ.தி.மு.க-வுக்கும் வரப் போவதில்லை" என்கிறார்.

"அ.தி.மு.க-வில் இருந்து பெருவாரியான இளைஞர்கள் த.வெ.க பக்கம் சென்றிருந்தால் மட்டும் இதைப் பற்றிப் பேசலாம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0m8xjkv4lyo

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஏராளன் said:

'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தைத் தி.மு.க தொடங்கியுள்ளது. 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் இன்று (ஜூலை 7) முதல் அ.தி.மு.க பிரசாரம் தொடங்கியுள்ளது.

இதெற்கெல்லாம் முன்பே,

“திரள்நிதியில் கொழுப்பேன், டெபாசிட்டை கொடுப்பேன்”

என்ற மகுடவாக்கியத்தோடு அண்ணன் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்.

ஈரோடு கிழக்கு இடத்தேர்தலின் பின் தமிழ்நாட்டின் 2வது பெரிய கட்சியாகிவிட்ட நாதகவை, பிபிசி வேணும் என்றே இந்த கட்டுரையில் புறக்கணித்துள்ளது.

புலம்பெயர் தமிழர் ஆதரவுடன் பிரிதானியாவில் நாதக ஆட்சியை கைபற்றி விடல்கூடாது எனும் பயமே இதற்கு காரணம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

ஈரோடு கிழக்கு இடத்தேர்தலின் பின் தமிழ்நாட்டின் 2வது பெரிய கட்சியாகிவிட்ட நாதகவை, பிபிசி வேணும் என்றே இந்த கட்டுரையில் புறக்கணித்துள்ளது.

புலம்பெயர் தமிழர் ஆதரவுடன் பிரிதானியாவில் நாதக ஆட்சியை கைபற்றி விடல்கூடாது எனும் பயமே இதற்கு காரணம்.

தொழிலாளர் கட்சியும் பழமைவாத கட்சியும் வெறும் டுபுக்கு

நாம் தமிழர் கட்சியை பிரிதானியா மக்கள் உறுதியாக தேடுவார்கள்

- 💪 🔥 NTK political force of மேற்குலகம் 💪 🔥

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.