Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கற்க கசறும்
------------------

large.ASmallGirlWithFlute.jpg

எல்லா மனிதர்களிடமும் ஏதோ ஒரு திறமையாவது இருக்கும் என்கின்றார்கள். ஆனாலும் அது என்ன திறமை எங்களிடம் வந்து இருக்கின்றது என்று பலராலும் கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமலேயே போய் விடுகின்றது. நாங்கள் சரியான திசையில் தேடுவதில்லை போல. ஒருவேளை இந்த அடிப்படையே பிழையாகவும் இருக்கலாம். திறமை என்று ஒன்று கட்டாயம் அமைவதும் இல்லை போலும்.  ஒரு வயதுக்குப் பின் ஒழுங்காக நித்திரை கொண்டு எழும்பினாலே, அதுவே பெரிய திறமை என்றாகி விடுகின்றது. ஆகவே இந்த திறமையை துப்பறியும் வேலையை இளமைக் காலத்தில் செய்தால் தான் அதைக் கண்டறியும் சாத்தியம் அதிகம் உண்டு.

மேற்கத்தைய நாடுகளில் பாடசாலைகள், கல்லூரிகள், சூழல் என்பன ஒவ்வொருவரிடமும் இருக்கும் தனித்திறமைகளை கண்டறிய கொஞ்சம் அதிகமாகவே பிரயத்தனம் செய்கின்றார்கள். கீழைத்தேய நாடுகளில் சமூகங்களால் அங்கீகரிக்கப்பட்ட திறமைகளே ஒரு ஐந்து அல்லது ஆறு தான் இருக்கும். மற்றவை எல்லாமே உருப்படாத விசயங்கள். ஆகவே அங்கே யாராவது தன்னிடம் என்ன இருக்கின்றது என்று கண்டறிந்தாலும், அது அநேகமாக உருப்படாத ஒரு விசயமாகவே அங்கே கருதப்படவும் கூடும்.

மேற்கத்தைய நாடுகளுக்கு குடிபுகுந்த நாங்கள் எங்களின் வளரும் காலத்தில் தவறவிட்டவற்றை பிள்ளைகளின் மூலமாக இன்று இங்கே பிடித்து விடலாம் என்று நினைப்பதும் உண்டு போல. ஒரு எண்ணை ஒரு தாளில் எழுதி, அதை ஒருவரின் தலைக்கு பின்னால் பிடித்தால், அவர் கண்ணை மூடிக் கொண்டே அந்த எண்ணை சரியாக சொல்லும் ஒரு திறமை இருக்கின்றது என்கின்றார்கள். முதலில் இந்த விடயத்தை, திறமையை ஒரு கோர்வையாக புரிந்து கொள்ளவே எனக்கு நேரம் எடுத்தது. ஆனால் இதற்கு ஒரு ஆசிரியரும், குரு என்பதே சரியான பதம், மாணவர்களும் இருக்கின்றனர். இந்த திறமையில் அடுத்த அடுத்த படிகள் கூட இருக்கின்றன என்று ஒருவர் சொன்னார்.  இதனால் உருப்படியில்லாத விசயங்கள் என்று அன்று அங்கே சமூகம் பல திறமைகளை வகைப்படுத்திய விதத்தை முற்று முழுதாக தவறு என்றும் சொல்ல முடியவில்லை.

இங்கு ஆரம்ப பள்ளிக்கூடத்திலேயே குழந்தைகளிடம் இருக்கும் இசைத் திறமையையும் கண்டுபிடித்து விட முயல்கின்றார்கள். இது அன்று அங்கே இருந்த சங்கீதப் பாடம் போல அல்ல. சித்திர ஆசிரியர் அடிக்கின்றாரே என்று சங்கீத ஆசிரியையிடம் ஓடிப் போகும் நிலை அல்ல இது. ஒரு தடவை ஒரு பாடசாலையில் சித்திரத்திற்கும் போகாமல், சங்கீதத்திற்கும் போகாமல் வகுப்பில் பதுங்கியிருந்த சிலரை சித்திர ஆசிரியர் அடித்து பிக்காசோவின் கிறுக்கு சித்திரங்கள் போல ஆக்கினார். பின்னர் அதே ஆசிரியர்  கலப்பையை கீறு என்று ஒரு நாள் சொல்லும் போது, எம்ஜிஆரை மட்டும் பார்த்துக் கொண்டிருந்ததில், எம்ஜிஆர் படங்களில் தூக்கிக் கொண்டு திரிந்த கலப்பையை சரியாக பார்க்கவில்லை என்ற உண்மை புரிந்தது.

புல்லாங்குழல் தான் வாசிக்கப் போகின்றேன் என்றார் மகள். 'புல்லாங்குழல் கொஞ்சம் கஷ்டம் என்கின்றார்களே, புல்லாங்குழல் போல இருக்கும் வேறு ஏதாவது ஒன்றில் ஆரம்பிக்கலாமே.....................' என்று பணிவாக கேட்டுப் பார்த்தோம். ம்ஹூம்........... புல்லாங்குழல் தான் என்று ஒற்றைக் காலில் நின்றார். அவர் ஒற்றைக் காலில் நிற்கும் போதே அவரிடம் என்ன திறமை இருக்கின்றது எனறு நாங்கள் ஊகித்திருக்கவேண்டும். புல்லாங்குழல் விற்கும் கடைக்கு போனோம். அங்கு எல்லா கருவிகளும், வாத்தியங்களும் விற்பார்கள்.

'நீங்கள் உடனடியாக வாங்க வேண்டும் என்றில்லை. ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டு போங்கள்.......... சரியாக வராவிட்டால் திருப்பிக் கொடுத்து விடுங்கள்................' என்றார் கடைக்காரர். பலத்த அனுபவசாலி என்று தெரிந்தது. எழுவாய்கள் இல்லாமலேயே, எவரையும் எதையும் குறிப்பிடாமலேயே, சில வசனங்களை மென்மையாகச் சொன்னார்.  ஒருவரை ஒருவர் பார்த்தோம். ஒன்றை வாங்குவது என்று முடிவெடுத்தோம். பலதை எடுத்து ஒவ்வொன்றாக விளக்கினார் கடைக்காரர். நீண்டு பெரிதாக, பளபளவென்று இருந்த ஒன்றை வாங்கினோம். இது தலைமுறை தாண்டியும் உழைக்கும் என்றார் கடைக்காரர். சில தீர்க்கதரிசனங்களை அவை சொல்லப்படும் போது நாங்கள், அதாவது உலகம், சரியாகக் காது கொடுத்துக் கேட்பதில்லை.

புல்லாங்குழல் பாடசாலை போய் வர ஆரம்பித்தது. சில இரவுகளில் அதை வீட்டில் கழட்டி, பொருத்துவதும் தெரிந்தது. எங்கள் வீட்டில் இசை அருவியோ அல்லது வெள்ளமோ இன்னும் பாய ஆரம்பித்திருக்கவில்லை. திடீரென்று ஒரு நாள் மாலை நேரம் பக்கத்து வீட்டில் இருந்து 'கடார்.........படார்..............' என்று தகரக் கூரையில் தடியால் விடாமல் அடிப்பது போல சத்தம் வந்தது. பக்கத்து வீட்டின் பின் வளவுப் பக்கத்தில் இருந்தே சத்தம் வந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கம் சுவருக்கு மேலால்  எட்டிப் பார்க்கவும் முடியாத அதி உயர் நாகரிகம் கொண்ட நாடுகள் இவை. ஒரு தடவை அயலவர் ஒருவர் இறந்து போய் ஆறு மாதங்களின் பின்னேயே அவர் இறந்து போனார் என்ற தகவல் தெரிய வந்தது. அந்த வீட்டில் சத்தமே வராமல் அழுதிருப்பார்கள் போல.

சில நாட்கள் தொடர்ந்து மாலை வேளைகளில் அடிக்கும் சத்தம் வந்து கொண்டேயிருந்தது. பின்னர் ஒரு நாள் அந்த வீட்டுக்காரர் வந்து கதவைத் தட்டினார். தங்களின் பிள்ளை பாடசாலையில் ட்ரம்ப் பழகுவதாகச் சொன்னார். சில நாட்கள் சமாளித்துக் கொள்ளும்படி கேட்டார். வாத்தியக் கருவியை ஒரு மாதம் வாடகைக்கு எடுத்தார்களா, அல்லது சொந்தமாகவே வாங்கினார்களா என்று நான் கேட்கவில்லை . ஆனால் அவர் சில நாட்கள் என்று சொன்னதால் அவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள் என்று ஓரளவுக்கு புரிந்தது.  

பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்கள், கேடயங்களை பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு கொஞ்சமும் தயங்காத நாடுகள் மேற்கு நாடுகள். இங்கு ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய பாடசாலைப் பருவத்தில் நூற்றுக் கணக்கான பதக்கங்கள் கூட பெற்றுவிடுவார்கள். ஒரு போட்டி என்று சொல்லுவார்கள், ஆனால் அதில் பங்குபற்றும் எல்லோருக்கும் இங்கு பதக்கங்கள் கொடுப்பார்கள். இந்த நடைமுறைக்கு பின்னால் சில உளவியல் ஆராய்ச்சி முடிவுகள் இருக்கக்கூடும். பிள்ளைகளுக்கு முதல் ஒன்று இரண்டு பதக்கங்கள் கிடைக்கும் போது பெரும் பெருமைப்படும் பெற்றோர்கள், பின்னர் சில வருடங்களிலேயே ஒரு பெட்டியில் எல்லாவற்றையும் போட்டு மூடி, வீட்டின் கண்காணாத ஒரு இடத்தில் தள்ளி விடுவார்கள். புல்லாங்குழலுக்கும் கொடுத்தார்கள். பக்கத்து வீட்டு ட்ரம்பிற்கும் கொடுத்திருப்பார்கள்.

எதற்கும் தயங்கி நில்லாமல் சூரியனை சுற்றிக் கொண்டே விடாமல் சுழலுகின்றது பூமி. அதனால் அடுத்த வகுப்பும் வந்தது. ஒரு நூல் பிடித்தது போல வாழ்க்கை ஒரு கோட்டில் அசையாமல் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் வேலைக்கு போகும் பெருந்தெருவில், அங்கே காலை நேரங்களில் அசைய முடியாத வாகன நெரிசல் இருக்கும், எதேச்சையாக பக்கத்து வாகனத்தைப் பார்த்தேன். அங்கே ஒருவர் சாப்பிட்டுக் கொண்டே வாகனத்தை நெரிசலில் செலுத்த முயன்று கொண்டிருந்தார். பின்னர் ஒவ்வொரு நாளும் பார்க்க ஆரம்பித்தேன். அதே பெருந்தெருவில், அதே மனிதர்கள், அதே வேலைகளையே ஒவ்வொரு காலையிலும் செய்து கொண்டிருந்தார்கள். நானும் தான்.

அடுத்த வருட வகுப்புகள் ஆரம்பித்ததில் இருந்து பக்கத்து வீட்டில் இருந்து சத்தம் வருவதில்லையே என்ற எண்ணம் ஒரு நாள் வந்தது. புல்லாங்குழலையும் அந்த வருடம் காணவில்லை என்றும் தோன்றியது. அடுத்த நாள் விடிந்தது. புல்லாங்குழல் பள்ளிக்கூடம் போகவில்லை. 'ஏன்........ புல்லாங்குழல் தேவையில்லையா..........' என்றேன். 'இல்லை........... இந்த வருடம் வேறு வகுப்புகள்........ புல்லாங்குழல் இல்லை.........' என்றார். சங்கீதம் வராவிட்டால் சித்திரம் போல.

அடுத்த தலைமுறைக்காக காத்துக் கொண்டிருக்கின்றது ஒரு புல்லாங்குழல்.   

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

இக்காலத்தில் திரையில், கணணித்திரையில் விளையாட்டும் , சேர்ந்து சத்தமிட்டு , பொழுது போக்கும் காலத்திலும் ,அதற்கே அடிமையாகும் சிறார்கள் மத்தியில் இசையில் கவனம்செலுத்தி (ஏதோஒன்றைக் கற்று இருப்பார் ) மிகவும் பாராடட படத் தக்கது . அது இன்னொரு இசைக் கருவியை இயக்க சார்ந்ததாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வடதுருவ நாடுகளில் தற்போது கோடைகாலம் என கருதுகிறேன், பல உறவுகளை யாழில் காணமுடிவதில்லை, திடீரென உங்களது பதிவுகளும் குறைந்து விட்டது.

குழந்தைகளின் திறமை அதன் சூழலில் மட்டுமல்ல அவர்களின் விருப்புகளிலும் தங்கியுள்ளது, அதனை திறமை என கூறமுடியாது எனகருதுகிறேன், ஆர்வம் என கூறலாம் அது தொடர்ந்து ஒரு கலை வடிவம் பெறாமலும் போகலாம் (கலை என்பது கலா எனும் சொற்பதத்திலிருந்து உருவாகியதாகவும் கலா என்றால் தொடர்ந்து வளர்ச்சியடையும் எனும் பொருளாம்).

எனது முதலாவது குழந்தை பேச ஆரம்பிக்கும் போது ஒரு மொழியில் பேசினார், அது தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை.

எனது மனைவிக்கு ஒரு சந்தேகம் அது முற்பிறவி பற்றியதாக இருந்தது, ஆனால் எனக்கு அந்த மொழி எங்கோ கேட்ட மொழி போன்ற உணர்வு இருந்தது ஆனால் அது என்ன மொழி என புரியவில்லை.

அது ஒரு எண்ணிக்கை போல இருந்தது, இணையத்தில் 1, 2, 3 ஸ்பானிஸ் மொழியில் கூறுவது எப்படி என தேடிய போதுதான் புரிந்தது அவர் பேசிய மொழி ஸ்பானிஸ், அவர் ஸ்பானிஸ் பேசுவதற்கு சூத்திரதாரி டோரா எனும் கார்டூன் என கண்டுபிடித்து அந்த வழக்கை வெற்றிகரமாக முடித்துவைத்தேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

ஆரம்பத்திலயே கண்டறிந்து அதற்கு ஏற்ப செயல் பட்ட நல்ல பெற்றோர். நன்றி..ஏன் ஏனில் இவ்வாறு புரியாதவற்றை பேசும் பிள்ளைகளை வைத்தியரிடம் கொண்டு போய் காட்டும் பட்சத்தில் அவர்கள் வேறு ஓரு கோணத்தில் தான் சிந்திப்பார்கள்.சில வேகைளில் பிள்ளைகளை வாழ் நாள் வருத்தக்காரர்களாக்கியும் விடும்.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

அவர் பேசிய மொழி ஸ்பானிஸ், அவர் ஸ்பானிஸ் பேசுவதற்கு சூத்திரதாரி டோரா எனும் கார்டூன் என கண்டுபிடித்து அந்த வழக்கை வெற்றிகரமாக முடித்துவைத்தேன்🤣.

🤣....................

டோராவும், போக்கிமோன் பிகச்சுவும், இன்னுமொரு சிறுவர் பாத்திரமும் இங்கு உள்ளூர் தொலைக்காட்சியில் வருவார், பிள்ளைகளுக்கு நிறையவே சொல்லிக் கொடுத்தார்கள்......

இங்கு வட கோளத்தில் கோடை காலம் முடிந்து கொண்டு வருகின்றது. எல்லோரும் விடுமுறைகளை முடித்து வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பாடசாலைகள் இந்த மாதம் ஆரம்பித்துவிட்டன. கல்லூரிகள் இந்த மாதமும், அடுத்த மாதமும் ஆரம்பிக்கின்றன. இந்த கோடை காலம் முழுவதும் இங்கு வந்து எழுதுவதற்கு எனக்கு நேரம் அதிகம் கிடைக்கவில்லை. இன்னும் ஒரு பயணம் இருக்கின்றது............. உங்களின் நாட்டிற்கு...............

ஆர்வம் அல்லது விருப்பம் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கின்றது. சில பல நேரங்களில் கூட்டத்துடன் சேர்ந்து ஓடிப் போய், பின்னர் உணர்ந்து கொண்டு வெளியேயும் வந்து விடுகின்றார்கள். இங்கு பல்கலைப் படிப்பே அப்படித்தான் இருக்கின்றது. ஒரு வருடம், இரண்டு வருடங்களில் ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு போகின்றார்கள். அவர்களுக்கு பொருந்தும் ஒன்றை தேடும் வசதிகள் இருப்பது மிகவும் நல்ல ஒரு விடயம் என்றே நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை விளங்கி கொள்ள பெற்றோருக்கு புரிந்துணர்வு வேண்டும் . ஒரு வருடம் வீணா போச்சு என்று பிள்ளையை மனம் நோகாமல் பிள்ளை அதற்குள் கிடந்தது அழுந்தாமல் . வெளிய வா பிடிக்கவிட்டால் வேறு துறையை தெரிந்து எடு ....என ஊக்க படுத்த வேண்டும். இங்கும் கனடாவிலும் நடக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
On 23/8/2025 at 01:50, யாயினி said:

ஆரம்பத்திலயே கண்டறிந்து அதற்கு ஏற்ப செயல் பட்ட நல்ல பெற்றோர். நன்றி..ஏன் ஏனில் இவ்வாறு புரியாதவற்றை பேசும் பிள்ளைகளை வைத்தியரிடம் கொண்டு போய் காட்டும் பட்சத்தில் அவர்கள் வேறு ஓரு கோணத்தில் தான் சிந்திப்பார்கள்.சில வேகைளில் பிள்ளைகளை வாழ் நாள் வருத்தக்காரர்களாக்கியும் விடும்.

நன்றி! என்றும் பெற்றோரால் தமது குழந்தைகளை சரியாக புரிந்து கொள்ளமுடிவதில்லை, ஒரு முறை இதே போல ஒரு சம்பவம் 3 வயது குழந்தையிடம் அதன் பெற்றோர் இது கூடவா விளங்கவில்லை என கடிந்து கொண்டார்! குழந்தையின் பெற்றோருக்கு 30 வயது அவர் 3 வயதில் அந்த குழந்தையின் புரிதல் கூட இல்லாமல் இருந்திருக்ககூடும்.

இதே மாதிரியான நிலை வேலைகளிலும் காணப்படும், புதிதாக வேலைக்கு வருபவருக்கு பயிற்றுவிப்பர் வெறுப்பாக இது கூடவா விளங்கவில்லை என கூறுவார் (குறிப்பாக ஆசிய பின்புலத்தவர்கள்), அதே நபர் வேலையினை ஆரம்பிக்கும் போது அதனை விட மோசமாக இருந்திருப்பார், ஒரு புதிய விடயங்களை முதன் முதலில் அணுகும் போது உள்ள நிலைக்கும் அதே ஒரு கைவந்த கலையாக வந்தபின்னராக இருக்கும் போது மன நிலை வேறுபடும்.

இதனை சம்பந்தப்பட்டவர்களிடம் அவர்கள் அதனை தப்பாக எடுக்காதவாறு கூறுவது மிகவும் கடினமாக இருக்கும், அவர்கள் ஆலோசனைகளை தமது கருத்து தவறானது என நிறுவ முனைவதாக நினைத்து, தனிப்பட்ட தாக்குதலில் இறங்குவார்கள் இதற்கு காரணம் கல்வியாக இருக்குமோ என நினைப்பதுண்டு, அதிக பட்ச புள்ளிகளை பெறுவது ஒரு சரியான விடயமாக நீண்டகாலமாக உருவகித்து அதில் ஏற்படும் ஒவ்வொரு புள்ளி இழப்பு தவறும் ஒரு கொலைக்குற்றமாக உருவகித்து கொண்டிருப்பவர்களிடம் அவர்கள் பார்க்காத பக்கத்தினை பற்றி பேசும் போது தம்மை தவறானவர்களாக சித்தரிப்பதாக நினைத்து அதற்கெதிராக போராடுவார்கள்.

Perception எனும் புரிதல் எமது சூழலும் அதனூடான அனுபவவுமாக இருக்கிறது, பெரும்பாலான வாழ்க்கையில் இறுதிவரை எம்மை பற்றிய சரியான புரிதலே எமக்கு கிடைப்பதில்லை, இதில் மற்றவர்களை புரிந்து கொள்வதென்பது மிகவும் சவாலாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/8/2025 at 02:08, ரசோதரன் said:

🤣....................

டோராவும், போக்கிமோன் பிகச்சுவும், இன்னுமொரு சிறுவர் பாத்திரமும் இங்கு உள்ளூர் தொலைக்காட்சியில் வருவார், பிள்ளைகளுக்கு நிறையவே சொல்லிக் கொடுத்தார்கள்......

இங்கு வட கோளத்தில் கோடை காலம் முடிந்து கொண்டு வருகின்றது. எல்லோரும் விடுமுறைகளை முடித்து வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பாடசாலைகள் இந்த மாதம் ஆரம்பித்துவிட்டன. கல்லூரிகள் இந்த மாதமும், அடுத்த மாதமும் ஆரம்பிக்கின்றன. இந்த கோடை காலம் முழுவதும் இங்கு வந்து எழுதுவதற்கு எனக்கு நேரம் அதிகம் கிடைக்கவில்லை. இன்னும் ஒரு பயணம் இருக்கின்றது............. உங்களின் நாட்டிற்கு...............

ஆர்வம் அல்லது விருப்பம் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கின்றது. சில பல நேரங்களில் கூட்டத்துடன் சேர்ந்து ஓடிப் போய், பின்னர் உணர்ந்து கொண்டு வெளியேயும் வந்து விடுகின்றார்கள். இங்கு பல்கலைப் படிப்பே அப்படித்தான் இருக்கின்றது. ஒரு வருடம், இரண்டு வருடங்களில் ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு போகின்றார்கள். அவர்களுக்கு பொருந்தும் ஒன்றை தேடும் வசதிகள் இருப்பது மிகவும் நல்ல ஒரு விடயம் என்றே நினைக்கின்றேன்.

முன்னெச்சரிக்கை!

அவுஸ்ரேலியர்கள் மட்டுமல்ல இங்குள்ள எம்மவர்களும் கிட்டதட்ட அவுஸ்ரேலியர்கள் போலவே நடந்து கொள்வார்கள், ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருக்கும், சிலருக்கு பழகிவிடும், சிலருக்கு சரிப்பட்டு வராது அப்படியானவர்கள் கொஞ்சம் அவர்களுடன் இடைவெளியுடன் இருந்தால் சேதம் இருக்காது🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

முன்னெச்சரிக்கை!

அவுஸ்ரேலியர்கள் மட்டுமல்ல இங்குள்ள எம்மவர்களும் கிட்டதட்ட அவுஸ்ரேலியர்கள் போலவே நடந்து கொள்வார்கள், ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருக்கும், சிலருக்கு பழகிவிடும், சிலருக்கு சரிப்பட்டு வராது அப்படியானவர்கள் கொஞ்சம் அவர்களுடன் இடைவெளியுடன் இருந்தால் சேதம் இருக்காது🤣.

🤣...............

15 அல்லது 20 வருடங்களிற்கு முன் ஆஸ்திரேலியாவிற்கு அடிக்கடி வந்து போயிருக்கின்றோம். அப்பொழுது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தார்கள். என் மனைவியின் குடும்பத்தவர்கள் அதிகமானோர் அங்கேயே இருக்கின்றார்கள். பிள்ளைகள் வளர்ந்த பின் ஆஸ்திரேலியா போய் வருவது குறைந்துவிட்டது.

ஆஸ்திரேலியாவில் பல வகையான அனுபவங்கள் ஏற்பட்டன என்று தான் சொல்லவேண்டும்.

இந்திய மாணவர்களுக்கும், ஆஸ்திரேலியர்களுக்கும் ஏதோ தகராறாகி, பின்னர் அதுவே சில தாக்குதல்கள் ஆகவும் ஆகியிருந்த ஒரு காலம். தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பன் ஒருவனின் மைத்துனன் ஒருவர் தாக்கப்பட்டும் இருந்தார். ஒரே குத்து, ஆள் மயங்கிப் போனார் என்று நண்பன் சொல்லியிருந்தான். அந்த நாட்களில் நாங்கள் அங்கே தனியே நடந்து போகக் கூடாது என்று சொல்வார்கள். அங்கே வீட்டின் அருகே இருந்த வாசிகசாலை ஒன்றுக்கும், அதன் அருகே இருந்த நகரக் கடைகளுக்கும் நடந்தே போய் வந்து கொண்டிருந்தேன். கொஞ்சம் எச்சரிக்கையுடனேயே இருந்தேன். குறைந்தது இரண்டு குத்துகளுக்காவது தாக்குப் பிடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்...................🤣.

அந்த வாசிகசாலை பற்றி எழுதவேண்டும். நான் அப்படி ஒரு வாசிகசாலையை அந்த சிறிய ஊரில் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அதே போலவே அந்த ஊரில் இருந்த ஒரு பேக்கரி. அது இப்பொழுதும் அங்கே இருக்கும் என்று நம்புகின்றேன். அதை நடத்தியவர்கள் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதிகள். பாண் என்ற சொல்லே பிரெஞ்ச் மொழி என்று அவர்கள் சொல்லியே தெரிந்து கொண்டேன். அவர்கள் சொன்ன வரலாறும் புதியதே.

தலைக்கு மேலே பறந்து திரியும் விதம் விதமான பறவைகள் ஆஸ்திரேலியாவின் சிறப்பும், வியப்பும். அப்படியே பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

தலைக்கு மேலே பறந்து திரியும் விதம் விதமான பறவைகள் ஆஸ்திரேலியாவின் சிறப்பும், வியப்பும். அப்படியே பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

இங்கு வந்த பின்புதான் இந்தனை விதம் விதமான கிளிகள் பல வர்ணங்களில் இருக்கும் என அறிந்து கொண்டேன், வீட்டில் இந்த கிளிகள் பாண், பிஸ்கட் என்பன உண்பதற்காக வருகின்றன, மழைகாலங்களில் அவை அதிகமாக வரும்.

வீட்டில் இருக்கும் பாதுகாப்பு இரும்புக்கதவை மனிதர்கள் தட்டுவது போல பலமாக தட்டும், இரவு வேலை முடித்துவிட்டு உறங்கும் நேரத்தில் அவற்றின் தொல்லை இருக்கும், ஆனால் கண்டு கொள்வதில்லை, குழந்தைகளின் கைகளில் இருந்து பிஸ்கட்டினை வாங்கி உண்ணும் அதனால் எனக்கு பிஸ்கட் கிடைப்பதில்லை.🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.