Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள்

நேபாளத்தில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டதற்கு எதிராக இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்கள்.

கட்டுரை தகவல்

  • சந்தன் குமார் ஜஜ்வாரே

  • பிபிசி செய்தியாளர்

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.

கடந்த வாரம் நேபாள அரசு 26 சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்தது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பிரபலமான சமூக ஊடக மற்றும் மெசேஜிங் தளங்களும் இதில் அடங்கும்.

சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

நேபாளத்தில் திங்கள்கிழமை நடந்த போராட்டத்தின் காட்சிகள், கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தை நினைவூட்டின.

இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டில் இலங்கையிலும் மக்கள் அரசுக்கு எதிராக பெரிய போராட்டங்களை நடத்தினர்.

டயர்களுக்கு தீவைத்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்

BBC/Madhuri Mahato பீர்கஞ்சில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவின் அண்டை நாடுகளில் உள்ள இளைஞர்கள் போராட்டங்கள் மூலம் பல வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

தெற்காசியப் புவிசார் அரசியல் நிபுணரும், தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியருமான தனஞ்சய் திரிபாதி, "இந்த தெற்காசியப் பகுதி இளைஞர்கள் நிறைந்த பகுதி, ஆனால் அரசுகளால் இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியவில்லை. இந்த மூன்று நாடுகளின் போராட்டங்களிலும் இதுதான் பொதுவான ஒற்றுமை" என்கிறார்.

தனஞ்சய் திரிபாதியின் கூற்றுப்படி, நேபாளத்தில் 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம், ஆனால் இவர்களுக்கு வேலைவாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளன.

"நேபாளத்தில் மற்றொரு நெருக்கடி என்னவென்றால், முடியாட்சி முடிந்த பிறகு எந்த ஒரு அரசாங்கமும் ஐந்து ஆண்டுகள் முழுமையாகப் பதவியில் இல்லை. இதன் காரணமாக நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை நிலவுகிறது, மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுகின்றன. இப்போது, அரசு இளைஞர்களிடையே பிரபலமான செயலிகளையும் தடை செய்துவிட்டது," என்று அவர் கூறுகிறார்.

நேபாளத்தில் இருந்து பெருமளவிலான மக்கள் இந்தியா உட்படப் பல நாடுகளுக்கு வேலை தேடிச் செல்கின்றனர்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லாதது ஒருபுறம் இருக்க, சமீபத்திய தடைகளுக்குப் பிறகு அவர்களால் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளக்கூட முடியவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இளைஞர்களின் பங்கு

நேபாளதில் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தாக்குதல்

நேபாளத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் மீது போலீசார் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர்.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. அதேசமயம், இலங்கையின் போராட்டத்தில் பொருளாதாரப் பிரச்னைகள் ஆதிக்கம் செலுத்தின.

டெல்லியில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் அமைப்பின் ஆய்வு மற்றும் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஹர்ஷ் பந்த் கூறுகையில், "இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய மூன்று நாடுகளின் போராட்டங்களுக்கான காரணங்கள் வேறுபட்டிருந்தாலும், மக்கள் எதிர்பார்ப்புகளுக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளிதான் இந்த போராட்டங்களுக்குப் பொதுவான காரணம்."

அவரது கூற்றுப்படி, "இந்த மூன்று போராட்டங்களிலும் 'இளைஞர்கள்' தான் மிகப் பெரிய காரணி. ஆட்சி மாற்றத்தின் மிகப் பெரிய தாக்கம் இளைஞர்கள் மீதே விழுகிறது. இந்த இளைஞர் பிரிவினர்தான் அரசின் மீது கோபமாக உள்ளனர்."

அரசு இளைஞர்களின் கோபத்தைத் தணிக்க முயற்சி செய்யாவிட்டால், இந்த போராட்டம் இன்னும் பெரிதாக வளரக்கூடும் என்று ஹர்ஷ் பந்த் நம்புகிறார்.

இருப்பினும், நேபாளப் போராட்டத்தில் தலைவரோ அல்லது அமைப்போ இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

தனஞ்சய் திரிபாதியும் இந்த கருத்தை ஒப்புக்கொள்வதாகத் தெரிகிறது.

"அரசு புரிதலுடனும் நெகிழ்வுத்தன்மையுடனும் நடந்து கொண்டால், இந்தப் போராட்டத்தை அமைதிப்படுத்த முடியும். இதில் இறந்தவர்களின் மரணம் குறித்து விசாரிக்க ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட வேண்டும். அரசு இளைஞர்களிடம் உணர்வுபூர்வமாக நடந்து கொள்ள வேண்டும், அது தற்போது காணப்படவில்லை," என்று அவர் கூறுகிறார்.

இதற்கு முன்னதாக, வங்கதேசத்தில் அரசு போராட்டக்காரர்களை கடுமையாகக் கையாள முயற்சித்தது, ஆனால் அது இளைஞர்களின் கோபத்தை இன்னும் அதிகரித்தது.

வங்கதேச மாணவர் போராட்டம்

வங்கதேசத்தில் பிரதமர் இல்லத்தின் மீது ஏறி போராடிய மக்கள்

Getty Images வங்கதேசத்தில் பிரதமரின் இல்லத்தில் இருந்த போராட்டக்காரர்கள் (கோப்புப் படம்)

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டம், வன்முறை மற்றும் நூற்றுக்கணக்கானோர் இறப்பு ஆகியவற்றிற்கு மத்தியில், வங்கதேசத்தின் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியையும் நாட்டையும் விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய இந்த மாணவர் போராட்டம், நாடு தழுவிய போராட்டமாக மாறியது. இறுதியில் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்வதற்கு காரணமாக இருந்தது.

இதன் மூலம் அவரது 15 ஆண்டுகால தொடர் ஆட்சி மற்றும் ஐந்தாவது பதவிக்காலம் திடீரென முடிவுக்கு வந்தது.

கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய மாணவர் போராட்டத்திற்குப் பிறகு, ஜூலை 21ஆம் தேதி வங்கதேச உச்ச நீதிமன்றம் அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டை கிட்டத்தட்ட ரத்து செய்தது.

ஆனால், இந்தத் தீர்ப்பு வந்தபிறகும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கோபம் தீரவில்லை. ஷேக் ஹசீனாவின் ராஜினாமா கோரிக்கை மேலும் வலுப்பெற்றது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தொடங்கிய போராட்டம், நாட்டின் மூலை முடுக்குகளை அடைந்தது. எதிர்க்கட்சிகளும் வீதியில் இறங்கின.

மாணவர் அமைப்புகள் ஆகஸ்ட் 4 முதல் முழு ஒத்துழையாமைப் போராட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்திருந்தன.

அரசு இந்தப் போராட்டங்களை கடுமையாக ஒடுக்க முயன்றது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, ராணுவம் வீதியில் இறங்கியது, ஆனால் மக்கள் பின்வாங்கவில்லை.

ஆகஸ்ட் 4ஆம் தேதி நடந்த வன்முறையில் குறைந்தது 94 பேர் கொல்லப்பட்டனர்.

மாணவர் போராட்டம் தொடங்கியதில் இருந்து உயிரிழப்புகள் எண்ணிக்கை 300ஐத் தாண்டியது. ஆகஸ்ட் 5ஆம் தேதி ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

2022ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த போராட்டம்

இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்ட கோப்புக் காட்சி

EPA/CHAMILA KARUNARATHNE 2022ஆம் ஆண்டில் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசும் இலங்கை போலீஸ் (கோப்புப் படம்).

2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் பணவீக்கம் வேகமாக அதிகரித்தது.

அந்நிய செலாவணி கையிருப்பு காலியானது. நாட்டில் எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.

சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட இந்த மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில், மக்கள் ஒரு நாளைக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டை எதிர்கொண்டனர்.

இந்த நிலைக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்சேவையும் அவரது குடும்பத்தினரையும் பலர் குற்றம் சாட்டினர். அவரது மோசமான கொள்கைகள்தான் அந்நிய செலாவணி கையிருப்பு காலியானதற்குக் காரணம் என்று நம்பப்பட்டது.

ராஜபக்சே குடும்பத்தினர் மீது ஊழல் மற்றும் பொதுமக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்தனர். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு சுற்றுலா வருவாய் குறைந்தது மற்றும் யுக்ரேன் போரால் எண்ணெய் விலைகள் உயர்ந்ததால் இந்த நெருக்கடி ஏற்பட்டதாக அவர்கள் வாதிட்டனர்.

அப்போது, போராட்டங்கள் இரவும் பகலும் தொடர்ந்து நடந்தன. மாலையில் கூட்டம் அதிகரித்தது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் முதல் பாதிரியார்கள் மற்றும் புத்த பிக்குகள் வரை அனைவரும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் "கோட்டா கோ ஹோம்" (கோட்டா வீட்டுக்கு போ) என்ற கோஷம் எதிரொலித்தது.

இந்தப் போராட்டங்கள் சிங்களர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய மூன்று முக்கிய சமூகங்களை ஒன்றிணைத்தன.

சில வாரங்களுக்குப் பிறகு, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தபோது, இந்தப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.

சில நாட்களுக்குப் பிறகு, கோட்டாபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி, சிங்கப்பூரிலிருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.

இந்த நிகழ்வு "அரகலய" அல்லது மக்கள் போராட்டத்தின் வெற்றியாகப் பார்க்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cnvr3rl84n1o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தில் கொந்தளிப்பு இந்தியாவின் நெருக்கடியை அதிகரிப்பது ஏன்?

எல்லையைத் தாண்டி நடக்கும் நிகழ்வுகளை இந்தியா மிக நெருக்கமாகக் கவனித்து வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, வேகமாக எதிர்வினையாற்றுகிறார்.

Getty Images இந்தியாவும் நேபாளமும் வரலாற்று ரீதியாகப் பகிரப்பட்ட வலுவான உறவுகளைக் கொண்டுள்ளன .

கட்டுரை தகவல்

  • அன்பரசன் எத்திராஜன்

  • உலக விவகார செய்தியாளர்

  • 11 செப்டெம்பர் 2025, 13:48 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சமீபத்திய ஆண்டுகளில் எழுச்சியால் தனது அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட இந்தியாவின் மூன்றாவது நெருங்கிய அண்டை நாடாக நேபாளம் மாறியுள்ளது.

சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில், காவல்துறையினருடனான மோதல்களில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததுடன், பல அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்ததை அடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் முயற்சிக்கிறது.

நேபாளத்தில் நடந்த சம்பவங்கள், கடந்த ஆண்டு வங்கதேசத்தையும், 2022 இல் இலங்கையையும் ஆட்டிப்படைத்த கொந்தளிப்பை பலருக்கும் நினைவூட்டின.

தெற்காசியாவில் வங்கதேசமும் இலங்கையும் இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளாக இருந்தாலும், வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் தொடர்புகள், பொருளாதார மற்றும் உத்தி சார்ந்த உறவுகளின் காரணமாக நேபாளத்துடனான இந்தியாவின் உறவு தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், சிக்கிம், பிகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து இந்திய மாநிலங்களுடன் 1,750 கிலோமீட்டர் (466 மைல்) க்கும் அதிகமான எல்லையை, நேபாளம் பகிர்ந்து கொள்கிறது.

எல்லையைத் தாண்டி நடக்கும் நிகழ்வுகளை இந்தியா மிக நெருக்கமாகக் கவனித்து வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, வேகமாக எதிர்வினையாற்றுகிறார்.

"நேபாளத்தில் நடக்கும் வன்முறை மனதைப் பிளக்கிறது. பல இளைஞர்கள் உயிரிழந்தது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது," என்று மோதி செவ்வாயன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

நேபாளம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், சிக்கிம், பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து இந்திய மாநிலங்களுடன் 1,750 கிலோமீட்டர் (466 மைல்) க்கும் அதிகமான திறந்த எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

Getty Images நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

"நேபாளத்தின் நிலைத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு மிக முக்கியமானவை" என்று வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோதி, "நேபாளத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகள் அனைவரும் அமைதியை ஆதரிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

செவ்வாயன்று, சூழலை மதிப்பீடு செய்வதற்காக தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் நடைபெற்ற அவசர பாதுகாப்பு கூட்டத்திற்கும் மோதி தலைமையேற்றார்.

2022-ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கிளர்ச்சியால் அப்போதைய அதிபர் கோட்டபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதைப் போலவே, நேபாளத்தில் ஏற்பட்ட இச்சம்பவமும் இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக, டெல்லிக்குப் பயணம் செய்ய நேபாள பிரதமர் ஒலி திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர் ராஜினாமா செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

நேபாளம் உத்தி ரீதியாக இந்தியாவுக்கு மிக முக்கியமான இடத்தில் இருப்பதால், ஏற்படும் எந்தவொரு பதற்றமும் இந்தியாவை கவலையில் ஆழ்த்துகிறது.

"சீனாவின் பெரிய ராணுவ தளமான Western Theatre Command நேபாளத்தின் மறுபக்கத்தில்தான் உள்ளது. இந்தோ - கங்கை சமவெளிகளுக்கான (வட இந்தியாவின் சமவெளி) நேரடி வழி நேபாளம்தான்," என்று நேபாளம் தொடர்பான நிபுணரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா பிபிசி-க்கு தெரிவித்தார்.

நேபாளம் உத்தி ரீதியாக இந்தியாவுக்கு மிக முக்கியமான  இடத்தில் இருப்பதால், அங்குள்ள எந்தவொரு நிலையின்மையும் இந்தியாவை கவலையில் ஆழ்த்துகிறது.

Getty Images நேபாள கூர்க்காக்கள் ஒரு சிறப்பு ஏற்பாட்டின் கீழ் இந்திய ராணுவத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்.

இந்தியாவில் நேபாளத்தில் இருந்து புலம் பெயர்ந்தோர் அதிகளவில் உள்ளனர். அவர்களையும் இந்த அமைதியின்மை பாதிக்கிறது.

இந்தியாவில் சுமார் 3.5 மில்லியன் நேபாளிகள் வேலை செய்கிறார்கள் அல்லது வாழ்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நேபாளம் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. எல்லையைத் தாண்டிய சமூகங்கள் நெருங்கிய குடும்ப உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

இரு நாடுகளுக்குமிடையே மக்கள் விசா அல்லது பாஸ்போர்ட் இல்லாமல் சுதந்திரமாகப் பயணம் செய்கிறார்கள். 1950 ஒப்பந்தத்தின் கீழ் நேபாளிகள் இந்தியாவில் எந்தத் தடையும் இன்றி வேலை செய்யலாம். இந்த ஏற்பாடு பூட்டானுடன் சேர்த்து இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் மட்டுமே உள்ளது.

மேலும், நேபாளத்தைச் சேர்ந்த 32,000 புகழ்பெற்ற கூர்க்கா வீரர்கள், பல ஆண்டுகளாக அமலில் உள்ள சிறப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.

"எல்லை திறந்திருப்பதால், சமூகங்கள் ஒருங்கிணைந்த வாழ்க்கையை அனுபவிக்கின்றன. இரு தரப்பிலும் உள்ள குடும்பங்கள் தினமும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கின்றன" என்கிறார் டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சங்கீதா தப்லியால்.

இமயமலைக்கு அப்பால் அமைந்துள்ள முக்திநாத் கோயில் உட்பட பல முக்கிய இந்து புனிதத் தலங்களும் நேபாளத்தில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான இந்து யாத்திரிகர்கள் இந்தக் கோவிலுக்குச் செல்கின்றனர்.

இதற்கிடையில், நேபாளம் இந்திய ஏற்றுமதிகளை குறிப்பாக எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களை பெரிதும் சார்ந்துள்ளது.

இந்தியா– நேபாளத்தின் ஆண்டு இருதரப்பு வர்த்தகம் சுமார் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நேபாளம் முக்திநாத் கோயில்

Getty Images நேபாளம் முக்திநாத் கோயில் உட்பட பல முக்கியமான இந்து புனிதத் தலங்களைக் கொண்டுள்ளது.

புதன்கிழமை காத்மாண்டுவில் ஓரளவு அமைதி திரும்பியிருந்தாலும், நாட்டை ஆண்ட மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் மீதும் போராட்டக்காரர்களிடையே கோபம் நிலவி வருவதால், இந்தியா மிக எச்சரிக்கையுடன் ஒரு ராஜ்ஜிய சமநிலையைப் பேண வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவுக்கு, ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (CPN–UML), ஷேர் பகதூர் தியூபாவின் நேபாள காங்கிரஸ், பிரசந்தா (புஷ்ப கமல் தஹால்) தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) ஆகிய மூன்று கட்சிகளுடனும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன.

இமயமலையால் பெரிதும் சூழப்பட்ட நாடான நேபாளத்தின் உத்தி சார்ந்த முக்கியத்துவத்தை முன்னிட்டு, இந்தியாவும் சீனாவும் அங்குள்ள செல்வாக்குக்காக போட்டியிடுகின்றன.

இதனால், வலிமையான இந்த இரண்டு ஆசிய நாடுகளும் நேபாளத்தின் உள்நாட்டுக் விவகாரங்களில் தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஒலிக்குப் பதிலாக எந்த விதமான நிர்வாகம் உருவாகப்போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது போராட்டக்காரர்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

புதிய அரசாங்கத்தின் வடிவம் நிச்சயமற்றதாக இருப்பதால், "இந்தியா எச்சரிக்கையாக இருக்கும்" என்றும் "நேபாளத்தில் வங்கதேசம் போன்ற இன்னொரு சூழ்நிலை அவர்கள் விரும்பவில்லை"என்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கீதா தப்லியால் கூறுகிறார்.

வங்கதேசத்தின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இந்தியாவுக்கு நல்லுறவு இருந்தது.

ஆனால், ஹசீனாவுக்கு இந்தியா புகலிடம் வழங்கிய முடிவால், தற்போதைய வங்கதேச இடைக்கால நிர்வாகத்துடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் முன்பே சில வேறுபாடுகள் இருந்துள்ளன. அவற்றையும் இப்போது மிகுந்த கவனத்துடன் நிர்வகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், சீன எல்லைக்கு அருகிலுள்ள மேற்குப் பகுதியில் நேபாளம் உரிமை கோரிய பகுதிகளை தனது வரைபடத்தில் இந்தியா இணைத்தது. இதனால் நேபாளம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

பின்னர், அந்த சர்ச்சைக்குரிய பகுதிகளை கொண்ட தனது சொந்த வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதனால் இரு நாடுகளுக்குமிடையே ராஜ்ஜிய மோதல்கள் மேலும் தீவிரமடைந்தன.

சமீபத்தில், நேபாளம் உரிமை கோரும் எல்லைப் பகுதிகளில் ஒன்றான லிபுலேக் கணவாயில் இந்தியா – சீனா வர்த்தகத்தை மீண்டும் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளன. கடந்த மாதம் சீனாவுக்கு சென்றிருந்தபோது, இந்தக் கணவாயை வர்த்தகப் பாதையாக பயன்படுத்துவதை எதிர்த்து, சீனத் தலைமையிடம் ஓலி இந்த பிரச்னையை எழுப்பியிருந்தார்.

எந்தவொரு முரண்பாடுகளையும் சரி செய்ய இந்தியா புதிய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம். மேலும், தங்கள் அரசியல் அமைப்பின் மீது கோபமாக இருக்கும் நேபாள இளைஞர்களுடன் இந்தியா இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

"நேபாளத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. நேபாள மாணவர்களுக்கு உதவித் திட்டங்களை அதிகரிப்பது, வேலை வாய்ப்புகளை வழங்குவது குறித்து இந்தியா தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்," என்று பேராசிரியர் சங்கீதா தப்லியால் கூறுகிறார்.

இந்நிலையில், பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பான சார்க் (SAARC) பல ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருப்பது, அண்டை நாடுகளில் உருவாகும் அரசியல் மாற்றங்கள் மற்றும் உறுதியின்மையை கையாள்வதில் இந்தியாவுக்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, இந்தியா ஏற்கனவே அண்டை நாடுகளுடன் சந்தித்து வரும் சிக்கல்களின் நடுவே வெடித்துள்ளது. பாகிஸ்தானுடனான உறவுகள் மோசமடைந்துள்ளன நிலையில், ஒருபுறம் வங்கதேசத்துடனான உறவுகள் பதற்றத்தில் உள்ளன, மறுபுறம் மியான்மர் உள்நாட்டுப் போரில் சிக்கியிருக்கிறது.

"இந்தியா தனது பெரும் அதிகாரக் கனவுகளில் கவனம் செலுத்தி, அண்டை நாடுகளை புறக்கணித்துவிட்டது. ஆனால் அந்த இலக்கை அடைய விரும்பினால், முதலில் ஒரு பாதுகாப்பான, நிலையான அண்டை நாட்டைக் கொண்டிருக்க வேண்டும்" என்கிறார் அசோக் மேத்தா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2lx0rjkpk9o

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அண்டைநாடுகளில் மக்கள் புரட்சியின் மூலம் ஊழல்ஆட்சியாளர்கள் அகற்றப்பட்டுள்ளனர். அதற்கான முதல்விதையை சிறிலங்கா துவக்கியிருக்கிறது. பெரும் ஊழல் பெருச்சாளிகள் அரசியிலில் கோலோச்சும் இந்திய அரசியலில் எப்போது மக்கள் புரட்சி வெடிக்கும். மன்னராட்சி நடத்திவரும்குடும்ப ஆட்சியாளர்கள் எப்போது துரத்தப்படுவார்கள். குறிப்பாக தமிழகத்தில் குடும்ப ஆட்சியாளர்களுக்கு எப்போது முடிவுக்கு வரும். தமிழகம் அமைதிப் பூங்கா என்று சொல்லியே குடும்ப ஆட்சிநடத்திவருபவர்களை ஆட்சியலிருந்து அகற்றுவதுமட்டுமல்ல அவர்களால் நிர்வகிக்கப்படும் முறையற்ற சொத்துக்களைப் பறிமுதல்செய்யும் காலம் எப்போது வரும்? தமிழகம் இதற்கு பிள்ளையார் சுழி போடுமா?

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

ஒலிக்குப் பதிலாக எந்த விதமான நிர்வாகம் உருவாகப்போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது போராட்டக்காரர்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

நேபாளத்தில் பல்பொருள் அங்காடி கடைகளுக்குள் புகுந்து வாஷிங்மெஷின்கள், குளிர்சாதன பெட்டிகள், தொலைகாட்சிகள் , AC மெசின்களை கொள்ளையடித்தவர்கள் பொதுச் சொத்துகள் ,பாராளுமன்றம், உச்ச நீதிமன்றம், முன்னாள் பிரதமர் வீட்டுக்கு தீ வைத்தவர்கள் அவர் மனைவியை எரித்தவர்கள் அடங்கிய Gen-Z Protests குழு நேபாளத்தை இனி சிறப்புற ஆட்சி செய்யும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, புலவர் said:

இந்தியாவின் அண்டைநாடுகளில் மக்கள் புரட்சியின் மூலம் ஊழல்ஆட்சியாளர்கள் அகற்றப்பட்டுள்ளனர். அதற்கான முதல்விதையை சிறிலங்கா துவக்கியிருக்கிறது. பெரும் ஊழல் பெருச்சாளிகள் அரசியிலில் கோலோச்சும் இந்திய அரசியலில் எப்போது மக்கள் புரட்சி வெடிக்கும். மன்னராட்சி நடத்திவரும்குடும்ப ஆட்சியாளர்கள் எப்போது துரத்தப்படுவார்கள். குறிப்பாக தமிழகத்தில் குடும்ப ஆட்சியாளர்களுக்கு எப்போது முடிவுக்கு வரும். தமிழகம் அமைதிப் பூங்கா என்று சொல்லியே குடும்ப ஆட்சிநடத்திவருபவர்களை ஆட்சியலிருந்து அகற்றுவதுமட்டுமல்ல அவர்களால் நிர்வகிக்கப்படும் முறையற்ற சொத்துக்களைப் பறிமுதல்செய்யும் காலம் எப்போது வரும்? தமிழகம் இதற்கு பிள்ளையார் சுழி போடுமா?

சீனாவை தவிர இந்தியாவை சுற்றியுள்ள எந்த நாடுகள் நிம்மதியாக இருக்கின்றன என நான் யோசிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புலவர் said:

தமிழகத்தில் குடும்ப ஆட்சியாளர்களுக்கு எப்போது முடிவுக்கு வரும். தமிழகம் அமைதிப் பூங்கா என்று சொல்லியே குடும்ப ஆட்சிநடத்திவருபவர்களை ஆட்சியலிருந்து அகற்றுவதுமட்டுமல்ல அவர்களால் நிர்வகிக்கப்படும் முறையற்ற சொத்துக்களைப் பறிமுதல்செய்யும் காலம் எப்போது வரும்? தமிழகம் இதற்கு பிள்ளையார் சுழி போடுமா?

இந்தியாவில் 'இந்துத்வா' வும் தமிழகத்தில் 'சாதி' அரசியலும் உள்ளவரை நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நிகழா? மாற்றத்திற்காகவேணும் வாக்குப் புரட்சியைக்கூடத் துணிந்து செய்யமுடியாத மனநிலைகொண்டோராகத் தமிழக மக்களும், தமிழகத் தமிழ் மக்களும் உள்ளனர் என்பதை வாக்கு வீதங்கள் காட்டி நிற்கின்றன. நா.த.கவின் முதலாவது சட்டமன்றத் தேர்தலில் 1.10வீதத்தையும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.72வீதத்தையும், நாடாளுமன்றத் தேர்தலில் 8.19வீதத்தையுமே மக்கள் வழங்கியுள்ளனர். மக்களின் மனநிலை நுகர்வு மனநிலையாகிவிட்ட காலத்தில் யாராண்டால் என்ன என்ற எண்ணப்போக்கு, வாக்களித்த மக்கள் தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றாமையால் ஏற்படும் ஏமாற்றம், சிறிய கட்சிகளால் என்னத்தை செய்துவிடமுடியும் என்ற பார்வை எல்லாம் தாக்கம் செலுத்துகின்றன.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

11 hours ago, குமாரசாமி said:

சீனாவை தவிர இந்தியாவை சுற்றியுள்ள எந்த நாடுகள் நிம்மதியாக இருக்கின்றன என நான் யோசிக்கின்றேன்.

சீனா சுயபொருண்மியத்தில் முன்னேறிய நாடு. ஆனால் சுற்றியிருக்கும் மற்ற நாடுகள் இந்த இருநாடுகளிடமும் கையேந்தும் நிலையானபடியால் நிம்மதி வராது.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

[ தமிழக மக்களும், தமிழகத் தமிழ் மக்களும் உள்ளனர் என்பதை வாக்கு வீதங்கள் காட்டி நிற்கின்றன. நா.த.கவின் முதலாவது சட்டமன்றத் தேர்தலில் 1.10வீதத்தையும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.72வீதத்தையும், நாடாளுமன்றத் தேர்தலில் 8.19வீதத்தையுமே மக்கள் வழங்கியுள்ளனர்.]

நொச்சி அய்யா இப்படி சொல்வதை பார்த்தால் சீமான் தமிழ்நாட்டில் ஊழல் மோசடிகள் இல்லாத நல்லாட்சி ஒன்றை அமைக்க தான் அரசியல் கட்சி ஒன்று நடத்தி வருகின்றார் என்று அவர் உண்மையாக நம்பிவிட்டார் என்றே தோன்றுகின்றது .

என்னத்தை சொல்வது 😭

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2025 at 23:40, விளங்க நினைப்பவன் said:

சீமான் தமிழ்நாட்டில் ஊழல் மோசடிகள் இல்லாத நல்லாட்சி ஒன்றை அமைக்க தான் அரசியல் கட்சி ஒன்று நடத்தி வருகின்றார் என்று அவர் உண்மையாக நம்பிவிட்டார் என்றே தோன்றுகின்றது .

அவரின் நடவடிக்கைகள் இதுவரை அவர் ஊழல் சம்பந்தமாக தொடர்பு பட்டதாக ஏதானும் ஆதாரங்கள் இருக்கின்றனவா. மேலும் ஊழல்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதையே தவிர்த்து வருகிறார். அவர்நினைத்தால் ஏதாவது ஒரு ஊழல்கட்சியுடன் கூட்டணியை அமைத்து பெருந்தொகைப்பணத்தையும் பெற்று குறிப்பிடத்தக்க அளவு உறுப்பினர்களை சட்டமன்றத்தில் பெற்றிருக்கலாம். எதிர்காலத்தில் ஊழல் செய்யக்கூடியவராக உங்களால் நம்பப்படும் அவர் ஏன் இப்போது கூட்டணி அதை;து பெருந்தொகைப்பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.