Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_9292.jpeg.7e0b88e1e212b15d712c

அழைப்பு மணியின் சத்தம் கேட்டு அவசரமாகக் கதவைத் திறந்தாள், றீட்டா காபென்பிறாண்ட்ல். கதவைத் திறந்தவள் முன்னால் எட்டுப் பேர்கள் நின்றிருந்தனர். நிறத்தால் வேறுபட்ட அந்நிய நாட்டவர்கள். அந்த எண்மரில் ஒருவர் பெண்ணாக இருந்தார். அந்தப் பெண்ணின் முகத்தில் ஒட்டியிருந்த சோகம், குளமாயிருந்த அவளது கண்கள், றீட்டாவின் மனதை கலங்க வைத்தது.

"நாங்கள்….."அவர்களில் ஒரு ஆண் அங்கு நிலவிய நிசப்தத்தை நீக்க முயற்சித்தான். றீட்டா அந்த சத்தம் வந்த திசையை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினாள். வந்திருந்த பெண் மட்டுமல்ல, ஆண்களும் சோகத்தில்தான் இருந்தார்கள்.

இலங்கைத் தமிழர்கள். பாரிசிலிருந்து வருகின்றோம். பூரணநாயகியின் விசயம் கேள்விப்பட்டு….”  பேச்சை அவர்கள் முடிக்கவில்லை. இல்லை, அவர்களால் மேற்கொண்டு பேச முடியவில்லை என்பதே சரியாக இருக்கும். இதயத்தின் அடியில் இருந்து எழுந்த அந்தச் சோகம், தொடர்ந்து சொற்களை வரவிடாமல், விழுங்கிக் கொண்டிருந்தது.

றீட்டா புரிந்து கொண்டாள், இவர்கள் ஏன் வந்திருக்கிறார்கள் என்று. “உள்ளே வாருங்கள்அன்பாக அவர்களை அழைத்தாள். மேற்கொண்டு றீட்டா எதுவும் பேசவில்லை. பேசக்கூடிய நிலையில் அவளும் இப்போதில்லை. அவர்களது சோகம் அவளிடமும் சேர்ந்து கொண்டது.

சூடான உணவுகளையும், தேநீரையும் அவர்கள் முன் கொண்டு வந்து வைத்தாள் றீட்டா. "நீண்ட தூரப் பயணத்துக்கும், குளிரான இந்த நேரத்துக்கும், இச்சூடான உணவும், தேநீரும் உங்களுக்கு  இதமாக இருக்கும். தயவு செய்து உணவருந்துங்கள். “நீங்கள் உணவருந்தி முடிவதற்குள் நான் 'போன்'

செய்து பாதர் அம்ரொஸ் றூமரை இங்கு வரவழைக்கிறேன். அவர் உங்களுக்கு முழு விபரமும் தருவார். நான் அவரது வீட்டுச்சமையல் வேலை செய்பவள். எனது பெயர் ரீட்டா காபென்பிறான்ட்ல்."

டிசம்பர் 7ம் திகதி செக் நாட்டில் இருந்து ஜேர்மனியில் உள்ள பயர்ன்  மாநில எல்லையை நோக்கி முழங்கால் வரை புதையும் உறைபனியூடாக நால்வர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அதில் பூரணநாயகியும் இருந்தாள். அவளுடன் இன்னும் ஒரு தமிழ் இளைஞனும், இரண்டு ஏஜென்சிகளும் நடந்து வந்தனர். இரண்டு ஈழத் தமிழர்களதும் அணிந்திருந்த  உடைகள் குளிர்காலத்திற்கு ஏற்றவை அல்ல. .

பனிக்குளிர், பூரணநாயகி அணிந்திருந்த மெல்லிய  உடுப்புகளுக்கூடாகவும், அவளது சாதாரண சப்பாத்துக்கூடாகவும் உட்புகுந்து, அவளது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் உறையச் செய்து கொண்டிருந்தது. இவர்களது திசை ஓசர் மலையை நோக்கிய குறுகிய ஒரு பாதையாக இருந்தது. ஒரு கிலோமீற்றர் உயர மலையை ஒரு விதமாகச் சென்றடைந்தார்கள். அந்த மலையின் முடிவில் ஆரம்பமாகியது ஜேர்மனிய எல்லை.

முழங்கால் வரை உள்ள பனியில் காலை வைத்து திரும்ப எடுத்து நடப்பதே பெரும் சிரமமாக இருந்தது. இப்படி ஒரு தடவை காலை பனியில் வைத்து எடுக்கும் போது காலில் போட்டிருந்த இளைஞனின் சப்பாத்து பனிக்குள் புதைந்து போனது அதைத்தேடி எடுக்க அந்த இளைஞனுக்கு அவகாசமில்லை. முன்னால் சென்று கொண்டிருக்கும் அந்த ஏஜென்சிகள் தங்கள் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். பின்னால் வரும் இவ் இருவரைப் பற்றிய கவலைகள், அவர்கள் படும் வேதனைகள் அவர்களுக்குத் தேவையில்லாதிருந்தது. அவர்களுக்குத் தேவையான 'தரகு'ப் பணம் அவர்களுக்குக் கிடைத்து விட்டது. ஜெர்மனிய எல்லைக்குள் இருவரையும் விட்டுவிட்டால் ஏஜென்சிகளின் வேலை முடிந்து விடும். இருட்டுநேரம் பார்வையைத் தவறவிட்டால் ஏஜென்சிகள் மறைந்து விடுவார்கள். இளைஞன் சப்பாத்தைப் பனிக்குள் விட்டுவிட்டு காலில் போட்டிருந்த காலுறையுடன் தனது பயணத்தைத் தொடர்ந்தான் பூரண நாயகியால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. ஜேர்மனிய எல்லைக்குள், 500 மீட்டர் தூரத்தில் இருந்த ஹோட்டல் ஒன்றின் வெளிச்சம் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. பூரணநாயகியால் மேற்கொண்டு நடக்க முடியாத நிலையில் அந்த பனிக்குள் தள்ளாடியபடி இருந்து விட்டார்.

மறுநாள் பொழுது வழமைபோல் விடிந்தது. ஹோட்டல் உரிமையாளர் யூர்கன் கோல்ஸ், தனது ஹோட்டலின் முன்பாக நின்ற இளைஞனை உற்று நோக்கினார். ஒரு காலில் Cowboy Stiefelம், மறுகாலில் வெறும் காலுறையும் அணிந்து கொண்டு, பயத்துடன் என்ன செய்வது? என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனை அநுதாபத்துடன் அணுகினார். "ஏதாவது உதவி வேண்டுமா?" என்று அந்தத் தமிழ் இளைஞனை பார்த்து அவர் ஜேர்மனிய மொழியில் கேட்டதை, அந்த தமிழ் இளைஞன் விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.ஆனாலும் தான் ஒரு தடவை தொலைபேசியில் கதைக்கவேண்டுமென்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அந்த இளைஞன் கேட்டான். அதைப் புரிந்து கொண்ட யூர்கன் கோல்ஸ், அவனைத் தனது தொலைபேசியைப் பாவிக்க அநுமதித்தாரர். தொலைபேசியில் அந்த இளைஞன் கதைத்து முடித்தபின் யூர்கன் கோல்ஸிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்து விட்டு வெளியில் நடக்கத் தொடங்கினான்.

காட்டுப் பாதையொன்றில் திடீரென வந்த ஜேர்மனியப் பொலிஸாரின் கண்களில் அந்த இளைஞன் பட்டு விடுகிறான். கேள்விகளுக்கு மேல் அவர்கள் அந்தத் தமிழ் இளைஞனை கேட்கத் தொடங்கினார்கள். அவனும் எதையும் மறைக்க விரும்பவில்லை  நடந்தவற்றை அப்படியே. ஒப்புவித்தான். பூரணநாயகியைத் தனது சகோதரியெனச் சொல்லி வைத்தான். ஆனால் உண்மையிலேயே பூரணநாயகி அவன் சொந்தச் சகோதரியல்ல. நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட பொலிஸார்அந்த இளைஞனையும் கூட்டிக் கொண்டு பூரணநாயகியைத் தேடிச் சென்றார்கள். அவர்கள் கண்டது, பனிகளுடன் உறைந்து போயிருந்த பூரணநாயகியின் உடலைத்தான்.

ஜேர்மனியப் பத்திரிகைகள், இத்தகவலை பத்திரிகைகளில் பிரசுரித்த போதும், யாருமே பூரணநாயகியைப் பற்றி உரிமை கோராத பட்சத்தில், அவரது பூதவுடல் கிறிஸ்தவ தேவாலயத்தின் பின்புறமாக இருந்த சேமக் காலையில் டிசம்பர் 14ந் திகதி கத்தோலிக்க முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. அவளின் கல்லறையில் "அமைதியாக உறங்கு" என்ற வாசகங்கள் பொருந்திய மரத்தினால் செய்த சிலுவையை வைத்து, அந்த நகரத்து மக்கள் பூக்களினால் அஞ்சலி செய்தனர்.

"நான் கத்தோலிக்க பாதிரியார்  அம்புரோஸ் ரூமர்" பாதிரியார் தன்னை அந்த எட்டுப் பேருக்கும்" அறிமுகம் செய்து கொண்டார். தன்னுடன் கூடவந்த அந்த நகரத்து மேயர் ஜோகன் முல்பவுரையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் எல்லோருமாக பூரண நாயகியை அடக்கம் செய்த இடத்துக்குச் சென்றனர். நன்றாக இருண்டு விட்ட நேரத்திலும், பயங்கரமான குளிருக்கு மத்தியிலும் எல்லோரும் பூரணநாயகியின் கல்லறை முன் நின்றனர். எண்மரில் ஒருவரான ஒரு பெண், இவர் பூரண நாயகியின் மூத்த சகோதரி, கல்லறை மேல் விழுந்து கதறியழுத காட்சி மேஐரை கரைத்துவிட்டது. "ஒரு பெண்ணின் சடலம். இறந்தது டிசம்பர் 7ந் திகதி காலை 9.45 மணிக்கு, என்ற தகவலே எனக்குத் தெரியும். ஆனால்...... இப்படி ....இதன் பின்னால் ஒரு மனித சோகத்தை நான் எதிர்பர்க்க வில்லை." என்று மேஜர் கண்கள் கலங்க அந்த இடத்தில் கூறினார்.

"பூரண நாயகி ஒரு இந்துவாக இருந்த போதிலும், அவரை அடக்கம் செய்து அஞ்சலி செய்வது எங்களது கடமை. நான் அரசியல்வாதியாகவோ, காவல் துறையிலோ இருக்க விரும்பவில்லை. அகதிகளாக அல்லல் பட்டு, உயிர் வாழ நம்பிக்கையுடன் ஓடி வரும் மக்களை அரவணைத்து ஆதரவு தரவே விரும்புகிறேன" எனப் பாதிரியார் அம்புரோஸ் ரூமர் தனது உரையில் தெரிவித்தார்.

ஏஜென்சிகளை நம்பி, ஜேர்மன் எல்லையில் ஆற்றைக் கடக்கும் போதும், குளிரினாலும் பல அகதிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள் லொறிகளில் அடைத்து வரப்பட்டு மூச்சுத்திணறியும் பலர் இறந்திருக்கிறார்கள்.

1995ம் ஆண்டு ரூமேனியாவில் இருந்து ஹங்கேரி ஊடாக ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்ட 18 அகதிகள் லொறிக்குள் மூச்சுத் திணறி இறந்திருக்கிறார்கள். கண்மூடித்தனமாக ஏஜென்சிகளை நம்பி, பெரும் பணத்தைக் கொடுத்து, உயிரைப் பணயம் வைக்கும் செயல் இதுவென ஜேர்மனிய காவல்துறை தெரிவித்திருந்தது.

ஐரோப்பிய நாடுகள்அகதிகளாக வரும் வெளி நாட்டவர்கள், தங்கள் நாடுகளுக்குள் நுளைய முயலும் ஒவ்வொரு வழிகளையும்  கண்டறிந்து மூடி வருகிறார்கள். ஆனாலும் அகதிகளாக வருபவர்கள்  ஏதாவது வழியில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

கிருபன் இணைத்திருந்த ஷோபா சக்தியின் “பொப்பி என்பது புனை பெயர்” கதையை வாசித்த போது, எனக்கு நினைவுக்கு வந்தது பூரணநாயகியின் சம்பவம்தான். 1995ம் ஆண்டு  நடந்த உண்மைச் சம்பவம். நான் நினைக்கிறேன்,  ஐரோப்பிய நாட்டுக்குள் நுளையும் ஈழத் தமிழர்களின் முதல் மரணம் பூரணநாயகியினுடையதாகவே இருக்க வேண்டும். 07.12.1995இல் நிகழ்ந்த அந்த மரணத்தைப் பற்றி அப்பொழுது நான் எழுதியது இது. சரியாக முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு (07.12.2025) கிருபன் பூரணநாயகியை நினைவூட்டியிருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மகளை ...உணர்வு பூர்வமாக ...இலகுநடையில் சொல்கின்றீர்கள்.... அந்த உணர்வுகள் ..இதயத்தை ஆழ்மாக துளைக்கின்றது...இதற்கு நீங்கள் தரும் ஓவியங்கள்...கதையை...நிஜமாக்குகின்றன...

தற்கால எழுத்தோட்டத்தில் நிமிர்ந்து நின்று...அனைவரையும் ...கதையை நோக்கி இழுக்கின்றீர்கள்..

எழுத்துப் பிழையை நான் கவனமாகப் பார்த்தபின்பே ..இந்த கருத்தை பதிவு செய்கின்றேன் ...உங்கள் எழுத்துக்களுடன் ..ஒப்பிடும்போது ...நான் கால்தூசிக்கும் சமனாகமாட்டேன் ...தொடருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kavi arunasalam said:

1995ம் ஆண்டு  நடந்த உண்மைச் சம்பவம். நான் நினைக்கிறேன்,  ஐரோப்பிய நாட்டுக்குள் நுளையும் ஈழத் தமிழர்களின் முதல் மரணம் பூரணநாயகியினுடையதாகவே இருக்க வேண்டும். 07.12.1995இல் நிகழ்ந்த அந்த மரணத்தைப் பற்றி அப்பொழுது நான் எழுதியது இது. சரியாக முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு (07.12.2025) கிருபன் பூரணநாயகியை நினைவூட்டியிருக்கின்றார்.

எம் மக்களின் இப்படியான சொல்லொணா துன்பங்களையும், இழப்புகளையும் உறவினர்களும், நண்பர்களும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். வாழ்வா சாவா என்றே புலம் பெயர்தல், நிலத்திலும் நீரிலும், எப்போதும் இருக்கின்றது.

சில வருடங்களின் முன் கனடாவிலிருந்து அமெரிக்கா நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த ஒரு குஜராத்தி இந்தியக் குடும்பம், தாய் - தந்தை - இரண்டு சிறு பிள்ளைகள், ஒரு பனிப்புயலில் சிக்கி இறந்து போனார்கள். 'கடவுளே.............' என்று அரற்றுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை..............

  • கருத்துக்கள உறவுகள்
On 7/12/2025 at 19:08, Kavi arunasalam said:

ஐரோப்பிய நாடுகள்அகதிகளாக வரும் வெளி நாட்டவர்கள், தங்கள் நாடுகளுக்குள் நுளைய முயலும் ஒவ்வொரு வழிகளையும்  கண்டறிந்து மூடி வருகிறார்கள். ஆனாலும் அகதிகளாக வருபவர்கள்  ஏதாவது வழியில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அகதிகளாக வருவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. உயிர் தப்பிப் பிழைக்கவேண்டும் என்பதுதான் முக்கியமானது. மத்திய தரைக் கடலிலும், ஆங்கிலக் கால்வாயிலும் பலர் கடலில் மூழ்கி இறக்கும்போது அம்மரணங்கள் வெறும் இலக்கங்களாகவே செய்திகளில் வருகின்றன. அவர்களின் கதைகள் அறியப்படாமலேயே போகும்.

தமிழர்கள் அதிகளவு புலம்பெயர்ந்த காலத்தில் ஆபத்தான வழிகள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மேற்கு ஐரோப்பாவுக்குள் நுழைவதுதான். சிலர் உறைபனிக்குள் சிக்கி உயிர்துறந்தனர். அண்மைக் காலங்களில் ரஷ்யா ஊடாக வரமுயன்றவர்களை உக்கிரேன் யுத்தமுனைக்கு அனுப்பியதும் செய்திகளாக வந்தது. ஆனாலும் தமது இலக்கை அடையவேண்டும் என்று வரும் அகதிகள் எவ்வகை ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள். மனிதக் கடத்தல்காரர்கள், முகவர்களுக்கு அவர்கள் பணம் சம்பாதிக்கும் முதலீடு.

நானும் பதின்ம வயதில் அகதியாக வந்தேன். ஆனால் ஒப்பீட்டளவில் ஆபத்துக்கள் இல்லாத வழி. பல அனுபவங்களைத் தந்து என்னை நானே கண்டுகொள்ள உதவியது!

Edited by கிருபன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.