Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!

10 Jan, 2026 | 02:05 PM

image

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு  எதிராக தற்போது அவருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேமுடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

பிரதமர் என்கிற ரீதியிலும் அவரது கட்சியின் ஒரு முக்கியஸ்தர் என்ற வகையிலும் கல்வி அமைச்சர் என்கிற ரீதியிலும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் எமது அமைப்புக்கும் எனக்கும் மிக முக்கியமான தீர்க்கமான கொள்கை முரண்கள் இருக்கின்றபோதிலும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேமுடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.  

https://web.facebook.com/profile.php?id=61567246753629

https://www.virakesari.lk/article/235661

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹரிணியை மையமாகக் கொண்டு எழுந்திருக்கும் 'ஸம-லிங்கிக' சர்ச்சை: விளக்கமில்லாத குழப்பம்!

🖊️எழுத்து: M.L.M. மன்சூர் (கண்டி)

இன்று சிங்கள சமூக ஊடகங்களை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சொல் 'ஸம - லிங்கிக' என்பது. தன்பாலீர்ப்பை (Homosexuality) குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் சிங்களச் சொல் அது.

ஆண்கள் பெண்களை மோகிப்பதும், பெண்கள் ஆண்களை மோகிப்பதும் (எதிர்ப்பாலீர்ப்பு - Hetero sexual) இயல்பானது என்பதும், ஆண் - ஆண் மற்றும் பெண் - பெண் என்ற விதத்தில் ஏற்படும் பாலியல் ஈர்ப்பு இயற்கைக்கு மாறானது என்பதும் பொதுச் சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கும் விதி.

ஆனால், எதிர்ப்பால் ஈர்ப்புக்கு அப்பால் பல்வேறு வினோதமான பாலியல் நாட்டங்களுடன் கூடிய ஒரு பிரிவினர் சமூகத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உயிரியல் ரீதியான யதார்த்தத்தை எவரும் மறுக்க முடியாது. சமயக் கிரந்தங்கள் கூட வரலாற்றில் அத்தகைய கூட்டத்தினரின் இருப்பு குறித்து (எதிர்மறையாக) குறிப்பிட்டிருக்கின்றன. இந்து சமயத்தில் மாற்றுப் பாலீர்ப்பாளர்களுக்கான பிரத்தியேகமான சடங்குகளும், திருவிழாக்களும் உள்ளன (உதாரணம்: தமிழ் நாட்டில் வருடாந்தம் இடம்பெறும் கூவாகத் திருவிழா).

அந்த மாற்றுப் பாலீர்ப்பாளர்களை நாங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்பதும், அவர்கள் தொடர்பாக சகிப்புத் தன்மையுடன் கூடிய ஒரு அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்பதும் ஹரிணி அமரசூரிய போன்றவர்களின் கருத்து. அவர் மட்டுமல்ல இலங்கையின் பெரும்போக்கு அரசியல் கட்சிகள் பலவற்றின் முக்கியமான தலைவர்கள், முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் அத்தகைய நிலைப்பாட்டிலேயே இருந்து வருகிறார்கள். பழங்குடிகள், மாற்றுத்திறனாளிகள், மொழிச் சிறுபான்மையினர் மற்றும் மதச் சிறுபான்மையினர் போன்ற விளிம்பு நிலைச் சமூகங்கள் தேசிய பெருவாழ்வுக்குள் உள்வாங்கப்பட வேண்டும் (Inclusion) என்ற கருத்தாக்கத்தின் ஒரு நீட்சியாகவே பாலியல் சிறுபான்மையினருக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், அதற்கும் ஆண்டு ஆறு ஆங்கில பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய மொடியூளுக்குமிடையில் எந்தத் தொடர்பும் இல்லை.

'ஹரிணி ஒரு லெஸ்பியனாக' இருந்து வருவதனால் LGBTQA கலாச்சாரத்தை இலங்கையில் போஷித்து வளர்க்கும் உள்நோக்கத்துடன் இந்தக் காரியத்தை செய்திருக்கிறார்' என்பது அவர் மீது முன்வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு.

தான் ஒரு லெஸ்பியன் என ஹரிணி எந்த இடத்திலும் பகிரங்கமாக கூறியிருக்கவில்லை (அவரை நெருக்கமாக அறிந்து வைத்திருப்பவர்கள் பலரும் 'அவர் அப்படியானவர் அல்ல' என்று தான் சொல்கிறார்கள்). அவருடைய அந்தரங்க வாழ்க்கையில் அவர் அப்படி நடந்து கொண்டாலும் கூட - பிரதம மந்திரிக்கு இருந்து வரக்கடிய அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து, மக்கள் வரிப் பணத்தை பயன்படுத்தி தனது பாலியல் இச்சைகளை அவர் நிறைவேற்றிக் கொள்ளாத வரையில் - அது நாட்டு மக்களுக்கு ஒரு பிரச்சினையாக இருந்து வர முடியாது.

சம்பந்தப்பட்ட பாடநூல் தொடர்பாக 'அந்தத் தவறுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறு செய்தவர்கள் உரிய விதத்தில் தண்டிக்கப்படுவார்கள்' என ஹரிணி திட்டவட்டமாக கூறிய பின்னரும் கூட, எதிர்க்கட்சி தரப்பும், ராஜபக்ச முகாமைச் சேர்ந்த ஒரு சில முன்னணி பிக்குகளும், சில அரச எதிர்ப்பு யூடிபர்களும் அதை மேலும் மேலும் கிளறிக் கொண்டிருக்கிறார்கள். எளிதில் மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய ஒரு தலைப்பு (Sensitive Topic) தொடர்பான விவாதமும், உரையாடலும் பிழையான நபர்களின் கைகளுக்கு போனால் என்ன நடக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்தச் சம்பவம்.

"உங்களுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை ஏற்பாடு செய்து தருகிறேன். கல்யாணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்று வாழுங்கள்" என்று பிரதமருக்கு புத்திமதி சொல்கிறார் அரசியல் கோமாளியான பத்தரமுல்லே சீலரத்ன தேரர். ‘பெண்கள் திருமணம் செய்யாமல் வாழக் கூடாது‘ என்பது அவருடைய வாதம்.

"ஹரிணி நோநா, நீங்கள் ஏன் இந்த ஆபாச இணையதளத்தை ஆரம்பித்தீர்கள்" என்று அவர் கேட்பது அடுத்த அபத்தம்.

ஹரிணி மீது கல்லெறிந்திருக்கும் (ராஜபக்ச முகாமைச் சேர்ந்த) மற்றைய இரு பிக்குகள் பலங்கொட கஸப்ப தேரர் மற்றும் 'மிகிந்தலே ஹாமிதுருவோ' என பிரபல்யமடைந்திருக்கும் வளவாஹெங்குனவெவே தர்மரதன தேரர். மிகிந்தலே தேரரின் கருத்துக்கள் முகம் சுளிக்க வைப்பவை. ஒரு துறவி கட்டாயமாக தவிர்த்திருக்க வேண்டிய சொற்பிரயோகங்கள்.

தன்பால் புணர்ச்சி ஆர்வலர்களான ஆண்களையும், பெண்களையும் குறிப்பதற்கென சிங்கள பேச்சு வழக்கில் பயன்படுத்தப்பட்டு வரும் சொற்களை அவர் நன்கு ரசித்து, பொருத்தமான உடல் மொழியுடன் விளக்கிக் கூறுகிறார் (எஸ் பொ வின் சிறுகதை ஒன்றில் 'Gay' ஆட்களைக் குறிக்கும் வடக்கு கிழக்கு தமிழ் பேச்சு வழக்குச் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது).

மறுபுறம், எதனை இயற்கைக்கு மாறானதென கூறி அவர்கள் தீவிரமாக எதிர்க்கிறார்களோ அந்த வழக்கம் நீண்ட காலமாக இலங்கை சமூகத்தில் நிலவி வருகிறது என்பதற்கான அத்தாட்சி இந்த ஹாமிதுரு பயன்படுத்தியிருக்கும் 'சொல்லகராதி'!

'கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம்' என இத்தேரர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கும் சுதத்த திலகசிரி போன்ற ஒரு சில (அரச சார்பு) யூடிபர்கள் சமய ஸ்தாபனங்களுக்குள் - குறிப்பாக பன்சல வளாகங்களுக்குள் - இளம் பிக்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வரும் அதே நபர்கள் இன்று Homosexuality க்கு எதிராக உரத்துக் குரலெழுப்புவது பெரும் நகைமுரண் என்கிறார்கள்.

'ஹரிணி போன்றவர்களின் கொடிய கரங்களிலிருந்து' இலங்கை சிறுவர் சமுதாயத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்' என்று தொண்டை கிழியக் கத்துபவர்கள், 'பாடசாலைகளில் பாலியல் கல்வி கூடாது' என்ற கோரிக்கையை முன்வைப்பவர்கள் ஆகிய தரப்புக்கள் எளிதில் மறந்துவிடும் ஒரு விடயம் இருந்து வருகிறது.

'பாடசாலைகளில் பாலியல் கல்வி என்பது சிறுபிள்ளைகளுக்கு உடலுறவில் ஈடுபடும் விதத்தை சொல்லிக் கொடுக்கும் அசிங்கமான காரியம்' என இந்தப் பிக்குகளையும் உள்ளிட்ட பலர் நினைக்கிறார்கள். இலங்கையில் அண்மைக் காலத்தில் துரித வேகத்தில் அதிகரித்து வரும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை / சுரண்டலை தடுப்பதற்கான ஒரு வழியாக பிள்ளைகளுக்கு குறைபட்சம் Good Touch, Bad Touch போன்றவை குறித்து அறிவூட்டி, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான பிள்ளைப் பருவத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இங்கு உதாசீனம் செய்யப்படுகிறது.

அரசாங்கத்தின் மீதான வன்மத்தை கொட்டித் தீர்ப்பதற்கான ஒரு அரிய சந்தர்ப்பமாக இது வாய்த்திருப்பதுடன், எதிர்க்கட்சிகள் மிகவும் தந்திரமான விதத்தில் தமது பினாமிகளை களமிறக்கி, இந்த எதிர்ப்பை முன்னெடுத்து வருகின்றன. சமூக ஊடகங்களில் ஹரிணிக்கு எதிராக பல பெண் புத்திஜீவிகளும் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.

(பேராசிரியர் ஜயதேவ உயன்கொட ராதிகா குமாரசுவாமி, எம் ஏ சுமந்திரன் ஆகியோரையும் உள்ளிட்ட) பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் தொழில்வாண்மையாளர்கள் 58 பேரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு அறிக்கை "பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அவதூறுப் பிரச்சாரம் ஒரு ஜனநாயக சமூகம் அனுமதிக்கும் எதிர்ப்பு மற்றும் ஆட்சேபணை செயற்பாடுகள் தொடர்பான தார்மீக வரம்புகளை" மீறிச் சென்றிருக்கும் விடயத்தை சுட்டிக் காட்டுவதுடன், "அந்த வன்மப் பிரச்சாரம்" உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

சி பி டி சில்வாவையும் உள்ளிட்ட 10 பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி யுஎன்பி நிகழ்த்திய ஒரு அரசியல் சூழ்ச்சியின் விளைவாக 1964 டிசம்பர் மாதத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான SLFP/LSSP/CP கூட்டணி அரசாங்கம் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

அதனையடுத்து 1965 மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில் யுஎன்பி முன்வைத்த முதன்மை பிரச்சார சுலோகம் - கம்யூனிஸ எதிர்ப்பு. என் எம் பெரேரா, பீட்டர் கெனமன் போன்ற நாத்திக மார்க்சிஸ்ட்களிடமிருந்து பௌத்த மதத்தையும், சிங்கள பௌத்த கலாசாரத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது அதற்கு அவர்கள் பயன்படுத்திய ஒரு பிரச்சார உத்தி. இதற்கென நாடெங்கிலும் 'ஸங்க ஸபாக்கள்' ஏற்பாடு செய்யப்பட்டன. அதாவது புத்த பிக்குகள் மட்டும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் பிரச்சாரக் கூட்டங்கள்.

அப்போதைய நட்சத்திர பேச்சாளர்களான பல முன்னணி தேரர்கள் அக்கூட்டங்களில் உரை நிகழ்த்தினார்கள். அவர்களில் ஒருவர் தல்பாவில சீலவங்ச தேரர்.

அவருடைய பேசுபொருள் ஐந்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகம் தொடர்பானது. மேடைகள் தோறும் அந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்று முதல் பக்கத்தை விரித்து பார்வையாளர்களுக்கு விளக்கமளிப்பது அவருடைய வழக்கம். அந்தப் பாடப் புத்தகத்தில் முதல் பக்கத்தில் ஒரு குடும்பத்தைக் காட்டும் மூன்று படங்கள் இருந்தன. முதல் படம் மகன் - Nimal; இரண்டாவது படம் மகள் - Manel மூன்றாவது படம் அப்பா - Perera.

இந்தப் படங்களை எடுத்துக்காட்டி, அந்தத் தேரர் நிரூபிக்க முயன்ற விடயம் N M Perera தனது பெயரை பிரபல்யப்படுத்துவதற்கான ஒரு தந்திரமாக இந்தக் காரியத்தை செய்திருக்கிறார் என்பது (இலங்கை இடதுசாரி இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான அந்தப் பெருமகனார் யு என் பி முன்னெடுத்த அந்த மலினமான பிரச்சார உத்தியை பார்த்து உடலின் எந்தப் பாகத்தால் சிரித்திருப்பார் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை).

இப்பொழுது திரும்பிப் பார்க்கும் பொழுது இலங்கை வாக்காளர்கள் எந்த அளவுக்கு சிறுபிள்ளைத் தனமான பிரச்சாரங்களை சகித்துக் கொண்டிருந்தார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு விதத்தில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் தோன்றுகிறது. 'வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது' என்று சொல்கிறார்கள். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னர் ஐந்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தை வைத்து தல்பாவில சீலவங்ச தேரர் செய்த அதே அபத்தமான பிரச்சாரத்தை இப்பொழுது ஆறாம் ஆண்டு ஆங்கிலப் பாடப் புத்தகத்தை வைத்து பத்தரமுல்லே சீலரத்ன தேரர் செய்து கொண்டிருக்கிறார்.

'பௌத்த மதத்தையும், பௌத்த கலாச்சாரத்தையும் மத வெறுப்பு (நிராகமிக்க) பேர்வழிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்' என்ற அதே பழைய துருப்புச் சீட்டு. கூட்டு எதிர்கட்சி என்ற வெட்கம் கெட்ட லேபளில் முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் இப்பொழுது தமது புதிய கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டிருக்கும் நாமல் ராஜபக்ச, சாகர காரியவசம், சரத் வீரசேகர, பலங்கொட கசப்ப, ஞானசார, இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ கும்பல் முன்வைக்கும் புளித்துப் போன துருப்புச் சீட்டு.

2022 அறகலய மக்கள் எழுச்சியுடன் இணைந்த விதத்தில் இலங்கை சமூகத்துக்குள்- - குறிப்பாக சிங்கள சமூகத்திற்குள் படிப்படியாக நிகழ்ந்து வரும் வலி மிகுந்த ஒரு நிலைமாற்றமே இப்பொழுது ஒரு அரசியல் நெருக்கடியாக வெடித்திருக்கிறது. அந்தச் சமூக பரிமாணத்தை உதாசீனம் செய்து விட்டு, வெறுமனே அரசாங்க கட்சி - எதிர்க் கட்சி என்ற அரசியல் அணுகுமுறைக்கூடாக மட்டும் இதனைப் புரிந்து கொள்ள முடியாது.

"தாழ்ந்த சாதிக்காரன் ராஜாவாக வந்தால் அந்த நாடு ஒருபோதும் உருப்பட முடியாது" என்று தீவிர ராஜபக்ச ஆதரவாளரான சிரி சமந்தபத்த தேரர் கூறியிருப்பதும், தலதா கண்காட்சியின் போது 'இது வரையில் மன்னர்களின் அனுசரணையின் கீழ் இடம்பெற்ற புனித தந்த தாதுக்களின் கண்காட்சி இப்பொழுது முதல் தடவையாக அரசவை கோமாளியின் (அந்தரேயின்) அனுசரணையின் கீழ் இடமபெறுகிறது' என ஞானசார தேரர் கூறியதும் வெறும் உளறல்கள் அல்ல. விளங்கிக் கொள்ளக் கூடியவர்களுக்கு ஒரு பூடகமான செய்தியை முன்வைக்கும் வன்மம் கலந்த கூற்றுக்கள் அவை.


அரச எதிர்ப்பு சிங்கள யூடிபர்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வரும் சொல் 'மாளிமா டோபிகள்' என்பது. என்பிபி அரசாங்கத்தின் அழுக்குகளை கழுவி, அதனை தூய்மைப்படுத்துபவர்கள் என்ற கருத்தில் அப்படிச் சொன்னாலும் 'Dhobies' என்ற சொல் ஒவ்வொரு தடவையும் மிகவும் அழுத்தமாக உச்சரிக்கப்பட்டு வருகிறது.


அநுரகுமாரவைப் போல ஹரிணியை அவருடைய குடும்பப் பின்னணியின் அடிப்படையில் இழிவுபடுத்த முடியாது. காலி அத்மீமன அமரசூரிய வளவ்வ என்ற பெரிய வீட்டின் உயர் குடி செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். பள்ளிப் படிப்பை கொழும்பிலும், பல்கலைக்கழக படிப்பை வெளிநாடுகளிலும் மேற்கொண்டவர். அதனால் அவர் மீது அவதூறு பொழிவதற்கு வேறு ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும்.

பார்வையாளர்களின் ஆர்வத்தை பெருமளவுக்குத் தூண்டக் கூடிய ஒரு ஆயுதம் அவருடைய பாலியல் வாழ்க்கை தொடர்பான புனைவுகள். 'அவருடைய காதலி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்' என்ற மேலதிக தகவலை வழங்குவதன் மூலம் மேலும் பார்வையாளர்களை ஈர்த்துக் கொள்ள முடியும். சிங்கள சமூக ஊடகங்களில் அந்தப் புனைவுகள் தான் இப்பொழுது மிகவும் அசிங்/கமான விதத்தில் அரங்கேறி வருகின்றன.

1960 ஜூலை மாதம் சிறிமாவோ பண்டாரநாயக்க இலங்கை பிரதமராக (உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையுடன்) பதவியேற்ற சந்தர்ப்பத்தில் " பாராளுமன்றத்தில் பிரதம மந்திரி அமரும் கதிரையை ஒவ்வொரு மாதமும் கழுவி, துப்புரவு செய்ய வேண்டி நேரிடும்" என்ற விதத்தில் பிரேமதாச போன்றவர்கள் தெரிவித்த அதே விதத்திலான அநாகரிகமான கருத்துக்களே இப்பொழுது ஹரிணியை இலக்கு வைத்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் அநுர - ஹரிணி தலைமையிலான அரசாங்கம் குறைகள் எதுவும் அற்ற, சர்வ சம்பூர்ணமான ஒரு அரசாங்கமாக இருந்து வருகிறது என்று எவரும் சொல்ல முடியாது. அது கடந்த 15 மாத காலத்தில் பல சந்தர்ப்பங்களில் கடும் தடுமாற்ற நிலைளை எதிர்கொண்டிருந்தது. ஒரு சில இடங்களில் சறுக்கியிருக்கிறது. பல தடவைகள் முக்கியமான அமைச்சர்கள் சிலர் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு துளியும் பொருத்தமற்ற விதத்தில் ஆணவமாக பேசியிருக்கிறார்கள். அவை அனைத்தும் திருத்திக் கொள்ள வேண்டிய தவறுகள்; குற்றங்கள் அல்ல.

எனவே, இப்பொழுது முதலில் இலங்கை மக்கள் தோற்கடிக்க வேண்டிய சக்தி NPP அரசாங்கம் அல்ல. அதற்குரிய தருணம் இன்னமும் வரவில்லை (It is too early). அதற்குப் பதிலாக ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்ட மத வெறியர்களின் ஆசீர்வாதத்துடன் நாமல் ராஜபக்ச தலைமையில் புதிதாக தலைதூக்கி வரும் வலதுசாரி மதவாத சக்திகள் உடனடியாக தோற்க்கடிக்கப்பட வேண்டும்.

தன்னை மதச்சார்பற்ற ஒரு கட்சியாக காட்டிக் கொள்ள முயற்சிக்கும் SJB போன்ற கட்சிகள் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக, எதிர்கால இலங்கைக்கு பெரும் ஆபத்தாக அமையக் கூடிய மேற்படி சக்திகளை எதிர்கொண்டு, அவற்றை வலுவிழக்கச் செய்ய வேண்டும். அதனை வெளிப்படையாக கூறவும் வேண்டும். சந்தர்ப்பவாத அரசியலை கைவிடுவதற்கான தருணம் இப்பொழுது வந்திருக்கிறது. அவ்வாறு செய்தால் மட்டுமே என் பி பி க்கு எதிரான வலுவான ஒரு மாற்று அணியாக களமிறங்குவதற்கான தார்மீக உரிமை SJB க்குக் கிடைக்கும்.

📌அதிகம் பகிருங்கள்!

https://www.facebook.com/share/p/1AF66tytrG/?mibextid=wwXIfr

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது

  1. தம்பி உம்மள பாலிமேர்ண்ட் அனுப்பினது தமிழ் மக்களின் உரிமையை பேச. ஹரினிக்கு வால் பிடிக்க இல்லை.

  2. ராஜபக்சகள் தோற்கடிப்பதே முதல் இலக்காம், என் பி பி இல்லையாம்? ஏன் என் பி பி எங்களு எல்லாம் தந்துட்டினமோ?

  3. இவர் ஒரு மறைமுக அனுரகாவடி என நினைக்கிறேன்.

  4. இலங்கைக்குள் சமஸ்டியே வேண்டாம் இரு தேசம் என அழுங்கு பிடியா நிண்டு அத்தனை ராஜதந்தரிகளையும் புறக்கணித்த தம்பி, இப்ப ஒரு மூண்டு மாசமா, இலங்கை சம்பந்தபட்ட அரசியலை முன்னெடுக்கிறார்? இந்த நிலைப்பாடு மாற்றத்துகு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஏன் இந்த மாற்றம்? குடுமி ஏதும் அனுர கையில் மாட்டி கொண்டதோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.